வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
யோப்பா—குறிப்பிடத்தக்க பண்டைய துறைமுகம்
பண்டைய இஸ்ரவேல் தேசத்துக்கு நீண்ட, மணல் கடலோர பகுதி இருந்தது. இருந்தபோதிலும், இஸ்ரவேலர் கடற்பயண வாழ்வில் ஈடுபட்டவர்கள் என்று குறிப்பாக அறியப்படவில்லை. இஸ்ரவேல் தேசத்து கடலோரத்தின் தன்மை இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
இடையே தடைபடுத்தப்படாத வரிசையான கடற்கரைகளும், நைல் நதியினால் கடலுக்கு எடுத்துச் செல்லப்படும் மணலினால் ஆன குன்றுகளும் தொடர்ச்சியாக காணப்படுகிறது.a எகிப்தின் எல்லையிலிருந்து கடற்பயணம் செய்தீர்களானால், உண்மையிலேயே மேலோங்கி நிற்கும் ஓர் இயற்கை துறைமுகத்தை கர்மேல் மலைக்கு கிழக்கே நீங்கள் கண்டுபிடித்திருக்க மாட்டீர்கள்.
இஸ்ரவேல் கடலோரத்தின் ஏறக்குறைய பாதிவழியில், ஒரு மலையின் மேல் யோப்பா பட்டணத்தை பார்த்திருப்பீர்கள். படம் காண்பிக்கிறபடி, கரையிலிருந்து சிறிது விலகிய வரிசையான பாறைகள் ஒரு சிறு வளைகுடாவை ஏற்படுத்தியது. அக்ரிக்கு வெகு தூர வடக்கில் (டாலிமேஸ்) உள்ளவற்றிற்கு தரங்குறைவாக இந்தத் துறைமுகம் இருந்தபோதிலும், இது யோப்பாவை குறிப்பிடத்தக்கதாக ஆக்கியது. (அப்போஸ்தலர் 21:7) மகா ஏரோது செசரியாவில் செயற்கை துறைமுகத்தை கட்டும் வரை, கடலோரத்தில் கப்பல்கள் நிற்க யோப்பா மிகச் சிறந்த இடமாக இருந்தது. யோப்பாவைப் பற்றி பைபிள் குறிப்பிடுபவற்றை விளங்கிக்கொள்ள இது உதவும்.
சாலொமோன் ஆலயத்தைக் கட்டுவதற்கு உதவி அளிக்கையில், தீரு ராஜாவாகிய ஈராம் சொன்னார்: “நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாய்க் கட்டி கடல்வழியாய் யோப்பா மட்டும் கொண்டு வருவோம்; பிற்பாடு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டு போகலாம்.” (2 நாளாகமம் 2:1, 11, 16) இந்த மரங்கள் தீரு அல்லது சீதோன் துறைமுகங்களிலிருந்து வந்திருக்கலாம். (ஏசாயா 23:1, 2; எசேக்கியேல் 27:8, 9) கர்மேலைக் கடந்து கேதுரு மரக்கட்டைகள் யோப்பாவில் வந்திறங்கின. அங்கிருந்து கேதுருக்கள் தென்கிழக்கு 34 மைல்கள் அப்பால் உள்ள எருசலேமுக்கு கொண்டு செல்லப்படலாம். நாடுகடத்தப்பட்ட பின்பு, யூதர்கள் ஆலயத்தைத் திரும்பக் கட்டினபோது, யோப்பா கேதுரு மரங்கள் வந்திறங்கும் துறைமுகமாகவும் இருந்தது.—எஸ்றா 3:7.
மரங்களோடு சென்ற வேலையாட்கள் இங்கே படத்தில் காணப்படுவதைப் போன்ற போனீஷிய கப்பல்களில் பயணம் செய்திருக்கலாம். அதைக் குறித்து படிக்கும்போது, யெகோவா யோனாவை நினிவேக்கு அனுப்பினபோது தீர்க்கதரிசி எதிர் திசையில் ஓடினார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். “அப்பொழுது யோனா யெகோவாவுடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்கு போகிற ஒரு கப்பலைக் கண்டு, கூலிகொடுத்து, தான் யெகோவாவுடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.”—யோனா 1:1-3.
யோனா இந்த விதமான சரக்குக் கப்பலில் சென்றிருக்க வேண்டும். யோப்பாவிலிருந்து தர்ஷீசுக்கு (பண்டைய ஸ்பெய்னாக இருக்கலாம்) நீண்ட கடற்பயணம் செய்ய அதனால் முடிந்தது. அதற்கு ஒருவேளை உயர்ந்த செதுக்கப்பட்ட முன்பகுதி இருந்திருக்கலாம், அதன் அருகில் ஒரு கல் நங்கூரம் தொங்கியது. பயணிகள், கப்பல் ஓட்டுபவர்கள் மேலும் சில சரக்குகள் கப்பல் தளத்தில் அடங்கும், இது அந்த வரைபடத்தில் காட்டப்படவில்லை. கப்பல் தளத்திற்கு கீழே உள்ள பகுதிகளில் அதிகமான சரக்குகள் சேமித்து வைக்கலாம், மேலும் யோனா அங்கு தான் உறங்க சென்றார். அந்தக் கப்பல் உறுதியான ஜுனிபர் கட்டைகளால் செய்யப்பட்டது. மேலும் நாரால் செய்யப்பட்ட ஒரு பெரிய கப்பற் பாயை நிலைத்து நிற்க வைப்பதற்கு ஒரு கேதுரு மரக்கலக்கூம்பு இருந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் வரிசையாக நீண்ட துடுப்புகள் இருப்பதைக் கவனியுங்கள். (பாசானின் கர்வாலி மரங்களினால் அவை செய்யப்பட்டிருக்கலாம்.) கடலிலே கப்பல் இருப்பதையும், கடுங்காற்று பயமுறுத்துவதையும் கற்பனை செய்து பாருங்கள். கப்பற்காரர் அவரவர் தங்கள் தங்கள் தேவர்களை நோக்கி உதவிக்காக அழுது, தாங்கள் அழிந்து போகாதபடிக்கு இறுதியில் யோனாவை கடலிலே போட்டுவிடுவதை கற்பனை செய்யுங்கள்.—எசேக்கியேல் 27:5-9; யோனா 1:4-15.
முதல் நூற்றாண்டு யோப்பா ஒரு கிறிஸ்தவ சபைக்கு வீடாக இருந்தது, அதில் சிலர் துறைமுக வேலையாட்களாகவும் அல்லது கப்பலோட்டிகளாகவும் இருந்திருக்கலாம். இந்த இரைச்சல் மிகுந்த கப்பற்துறைமுக சபையில் யூத பெண்மணி தொற்காள் (தபீத்தாள்) ஓர் அங்கத்தினராக இருந்தாள். “அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்து கொண்டு வந்தாள்.” பொ.ச. 36-ம் வருடத்தில் தொற்காள் நோயுற்று இறந்தாள். இது அநேகரை கண்ணீர் வடிக்கச் செய்தது. அவளுடைய மிகுதியான நற்கிரியைகளை திரும்பவும் மனதிற்கு கொண்டுவந்து அநேகர் அழுதனர். உடன் கிறிஸ்தவர்கள் அப்போஸ்தலனாகிய பேதுருவை லித்தாவிலிருந்து (தெல் அவிவ் விமான தளத்திற்கு அருகில் உள்ள நவீன லாட்) யோப்பாவிற்கு வரவழைத்தார்கள். பேதுரு இந்த அருமையான சகோதரியை உயிர்த்தெழுப்பினார். இந்த அற்புதம் “யோப்பா பட்டணம் எங்கும் தெரிய வந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.”—அப்போஸ்தலர் 9:36-42.
பேதுரு யோப்பா பட்டணத்திலே தோல் பதினிடுகிறவனாகிய சீமோன் வீட்டிலே சில காலம் தங்கியிருந்தார். இங்கே அப்போஸ்தலனுக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அது யோப்பா சபையில் இருந்த சில சகோதரர்களைக் கூட்டிக் கொண்டு கடலோர சாலையின் வடக்கில் உள்ள புதிய துறைமுகமாகிய செசரியாவுக்கு போக அவரை வழிநடத்தியது. அங்கு பேதுரு ரோம இராணுவ அதிகாரியான கொர்நேலியுவுக்குப் பிரசங்கித்து அவரை முழுக்காட்டினார், அவன் ஆவியில் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவனாக ஆன விருத்தசேதனம் செய்யப்படாத முதல் புறஜாதியான். (அப்போஸ்தலர் 9:43–10:48) கிறிஸ்தவ சரித்திரத்தில் இந்த மிக முக்கியமான வளர்ச்சியைப் பற்றிய செய்தியை சகோதரரர்கள் கொண்டுவந்தபோது என்னே சந்தோஷமும் உற்சாகமும் யோப்பாவில் இருந்திருக்க வேண்டும்!
இன்று நவீன டெல் அவிவ்-ஜாஃபாவின் பாகமாகிய யோப்பாவுக்கு அநேகர் விஜயம் செய்கின்றனர், இந்தக் குறிப்பிடத்தக்க துறைமுகத்தில் நடந்த பைபிள் நிகழ்ச்சிகளை அவர்கள் எளிதாக மனதில் கற்பனை செய்துபார்க்க முடியும். (w89 9/1)
,[அடிக்குறிப்புகள்]
a 1989 யெகோவாவின் சாட்சிகளின் நாட்காட்டியின் அட்டைப் படத்தில் இந்த மணல் கடற்கரையை செயற்கை கோள் படத்தில் நீங்கள் எளிதில் காணலாம். மேலே உள்ள யோப்பாவின் காட்சி பெரிய படமாக இந்த நாட்காட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது.
[பக்கம் 10-ன் படங்களுக்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 11-ன் படங்களுக்கான நன்றி]