பைபிளின் கருத்து
விஞ்ஞானமும் பைபிளும் ஒத்திருக்கின்றனவா?
ஆகாயவிமானம், அணுகுண்டுகள் ஆகியவை முதல், மரபியல் மாற்றப்பட்ட செல்கள், செம்மறியாட்டை க்ளோனிங் (cloning) மூலம் இனவிருத்தி செய்தல் ஆகியவை வரை, நம் 20-வது நூற்றாண்டு, விஞ்ஞானம் செல்வாக்கு செலுத்தும் ஒரு யுகமாய் இருந்திருக்கிறது. விஞ்ஞானிகள், சந்திரனில் ஆட்கள் காலெடுத்து வைக்கும்படி செய்திருக்கின்றனர்; பெரியம்மையை ஒழித்துக்கட்டியிருக்கின்றனர்; வேளாண்மை துறையில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றனர்; மேலும், உடனுக்குடனான உலகளாவிய தொலைத்தொடர்பு இணைப்புகளை கோடிக்கணக்கானோருக்கு வழங்கியுள்ளனர். ஆகவே, விஞ்ஞானிகள் என்ன சொன்னாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர் என்பது ஆச்சரியப்படுத்துவதாய் இல்லை. ஆனால், பைபிளைப் பற்றி விஞ்ஞானிகள் எதையாவது சொன்னால், அதைப் பற்றியென்ன? மேலும், பைபிள், விஞ்ஞானத்தைப் பற்றி நமக்கு எதையாவது சொல்கிறதா?
அற்புதங்கள் விஞ்ஞானப்பூர்வமற்றவையா?
“விஞ்ஞான மனச்சாய்வுடைய மக்கள், ‘காரணமும் விளைவும்’ என்ற உறவில் நம்பிக்கை வைக்கின்றனர். எல்லாவற்றுக்குமே ஒரு பூரணமான இயற்கை சம்பந்தப்பட்ட விளக்கம் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்” என்று காம்ப்டன்ஸ் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. பைபிளைப் படிப்பவர்களும், நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான தத்துவங்களை ஏற்றுக்கொள்கின்றனர். என்றாலும், விஞ்ஞானத்தின் வாயிலாக பெற்றிருக்கும் தற்போதைய அறிவால் விளக்க முடியாத அற்புத சம்பவங்களை பைபிள் பெரும்பாலும் கூறுகிறதென்பதை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். யோசுவாவின் நாளில் சூரியன் அசையாமல் நின்றதும், இயேசு தண்ணீர் மேல் நடந்ததும் இதற்கு உதாரணங்கள். (யோசுவா 10:12, 13; மத்தேயு 14:23-34) என்றபோதிலும், கடவுளுடைய சக்தி, இயல்புக்கு அப்பாற்பட்ட ஒரு விதத்தில் செயல்பட்டதன் மூலமாக விளைந்தவையாய் இந்த அற்புதங்கள் காட்டப்படுகின்றன.
இந்த விஷயம் சிக்கலானது. தெய்வீக உதவியின்றி மக்கள் தண்ணீரின் மேல் நடக்க முடியும் என்றோ, வானில் சுற்றிச் செல்வதாய்த் தோன்றும் சூரியனின் அசைவு, காரணமின்றி தடைசெய்யப்பட முடியும் என்றோ பைபிள் உறுதியுடன் கூறினால், அது ஒருவேளை பைபிள் விஞ்ஞானப்பூர்வ உண்மைகளுக்கு முரணாய் இருப்பதாகத் தோன்றலாம். என்றபோதிலும், அப்படிப்பட்ட சம்பவங்கள் கடவுளுடைய சக்தியினால்தான் சம்பவித்தன என்று பைபிள் சொல்லும்போது, விஞ்ஞானத்துக்கு முரணாய் இருப்பதைக் காட்டிலும், விஞ்ஞான ரீதியில் இன்னும் புரிந்துகொள்ளப்படாத பெருமூளையின் ஒரு பகுதிக்குள் அப்படிப்பட்ட சம்பவங்கள் வழிநடத்துகின்றன.
பைபிள் விஞ்ஞானத்துக்கு முரண்படுகிறதா?
மறுபட்சத்தில், பைபிள், மக்களின் வாழ்க்கையில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளைப் பற்றியும், தாவரங்கள், விலங்குகள், அல்லது இயற்கை நிகழ்வுகளைப் பற்றியும் பேசும் சந்தர்ப்பங்களைப் பற்றியதென்ன? ஆர்வத்தைத் தூண்டும் வகையில், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், கூறப்பட்டிருக்கும் குறிப்புகளின் சூழமைவைக் கருத்தில் கொள்கையில், பைபிள், நன்கறிந்த விஞ்ஞான உண்மைகளுக்கு முரண்படுவதாக காட்டும் நிரூபிக்கப்பட்ட உதாரணம் எதுவும் இல்லை.
உதாரணமாக, அடிக்கடி பைபிள் செய்யுள் நடையைப் பயன்படுத்துகிறது; இது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துவந்த மக்களின் புரிந்துகொள்ளும் திறனை எடுத்துக்காட்டுகிறது. “வார்க்கப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான” ஆகாய மண்டலங்களை யெகோவா விரித்தது அல்லது, உருக்கி வார்த்தது போன்றவற்றைப் பற்றி யோபு புத்தகம் பேசுகையில், ஆகாய மண்டலங்கள் பளபளப்பாக பிரதிபலிக்கும் ஓர் உலோக கண்ணாடியைப்போல் இருப்பதாக அது பொருத்தமாக விளக்கிக் கூறுகிறது. (யோபு 37:18) பூமிக்கு “ஆதாரங்கள்,” “கோடிக்கல்” போன்றவை இருப்பது பற்றிய உவமையை சொல்லர்த்தமாக நீங்கள் எவ்வாறு எடுத்துக்கொள்ள மாட்டீர்களோ, அவ்வாறே, அந்த உவமையையும் சொல்லர்த்தமாய் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.—யோபு 38:4-7.
எண்ணற்ற விளக்கவுரையாளர்கள் அப்படிப்பட்ட உவமைகளை சொல்லர்த்தமாய் எடுத்துக்கொண்டிருப்பதால், இதைக் கருத்தில் கொள்வது முக்கியமானது. (காண்க: 2 சாமுவேல் 22:8; சங்கீதம் 78:23, 24.) தி ஆங்க்கர் பைபிள் டிக்ஷனரியிலிருந்து எடுக்கப்பட்டபடி, பின்வருமாறு பைபிள் கற்பிக்கிறது என்பதாக அவர்கள் முடிவாக கூறியிருக்கின்றனர்.
“மனித சமுதாயம் வசிக்கும் இந்தப் பூமி, ஒரு வட்டமான, திடப்பொருளாய், ஒருவேளை ஒரு வட்டத்தட்டு போன்றதாய், எல்லையற்ற நீர் மண்டலத்தின்மேல் மிதப்பதாய் எண்ணப்படுகிறது. கீழேயிருக்கும் இந்த நீர்த்திரளுக்கு இணையாக, எல்லையற்ற மற்றொரு நீர்த்திரள் மேலே இருக்கிறது; அதிலிருந்து ஆகாய நீர்த்தேக்கத்தைத் துளைத்துக்கொண்டு, துவாரங்கள், கால்வாய்கள் வழியாக மழை வடிவத்தில் நீர் கீழே இறங்குகிறது. சந்திரன், சூரியன், மற்ற சுடர்கள் ஆகியவையெல்லாம் பூமிக்கு மேலேயிருக்கும் ஒரு குவியமைப்பில் நிலையாய் இருக்கின்றன. இந்த அமைப்பே, பாதிரிகள் விவரிக்கும், வழக்கமான ‘ஆகாய வில்’ (ரேக்கியா) ஆகும்.”
இந்த விவரிப்பு நவீன விஞ்ஞானத்துடன் ஒத்ததாய் இல்லை என்பது தெளிவாய் இருக்கிறது. ஆனால், ஆகாயங்களைப் பற்றிய பைபிள் போதனையைப் பற்றிய பாரபட்சமற்ற ஒரு மதிப்பீடாய் இது இருக்கிறதா? இல்லவே இல்லை. அண்டத்தைப் பற்றிய எபிரெயர்களின் அப்படிப்பட்ட விளக்கங்கள் “உண்மையில், ப[ழைய] ஏ[ற்பாட்டில்] இருக்கும் கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காட்டிலும் இருண்ட காலங்களின்போது ஐரோப்பாவில் வியாபித்திருந்த கருத்துக்களையே பெரிதும் அடிப்படையாய்க் கொண்டிருந்தன” என்பதாக தி இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. அந்த இடைக்காலக் கருத்துக்கள் எங்கிருந்து வந்தன? மேற்கத்திய விஞ்ஞானத்தின் தொடக்கங்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் டேவிட் சி லிண்ட்பர்க் விவரிப்பதன்படி, அவை பண்டைய கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டிலின் வானசாஸ்திரத்தைப் பெரிதும் அடிப்படையாய்க் கொண்டிருந்தன. அவருடைய தத்துவங்களே பெரும்பாலான இடைக்காலக் கல்விக்கு அடிப்படையாய் இருந்தன.
20-வது நூற்றாண்டு விஞ்ஞானி ஒருவருக்குக் கவர்ச்சியூட்டும் வகையிலான மொழியில் கடவுள் பைபிளை எழுதும்படி செய்வது, அர்த்தமற்றதாயும் குழப்புவதாயும் இருந்திருக்கும். விஞ்ஞான வாய்பாடுகளுக்குப் பதிலாக, பைபிளை முதலில் எழுதினவர்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட மனதில் பதியத்தக்க தத்ரூபமான உதாரணங்கள் பல உள்ளன—இன்றும்கூட, கால வரைமுறையற்ற செல்வாக்கு செலுத்தும் தெளிவான விவரிப்புகள் அடங்கியுள்ளன.—யோபு 38:8-38; ஏசாயா 40:12-23.
மேலான ஊற்றுமூலத்திடமிருந்து பெறும் அறிவு
என்றாலும், அக்கறையூட்டும் வகையில், அக்காலத்தில் வாழ்ந்துவந்த மக்கள் அறிந்திராத விஞ்ஞான அறிவை வெளிப்படுத்துவதாய்த் தோன்றும் சில பைபிள் குறிப்புகள் இருக்கின்றன. கடவுள், “உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்” என்று யோபு விவரிக்கிறார். (யோபு 26:7) பூமி, “அந்தரத்திலே” தொங்கவைக்கப்பட்டிருக்கிறது என்ற கருத்து, பூமி, யானைகளின் மேலேயோ, கடல் ஆமைகளின் மேலேயோ வைக்கப்பட்டிருந்ததாகக் கூறிவந்த, பண்டைய மக்களில் பெரும்பாலோரின் கட்டுக்கதைகளிலிருந்து மிகவும் வேறுபட்டது. மோசேயின் நியாயப்பிரமாணத்தில், அப்போதைய மருத்துவ அறிவைக் காட்டிலும் மிகவும் மேம்பட்டவையாய் இருந்த சுகாதாரத் தேவைகள் அடங்கியிருந்தன. தொழுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு மக்கள் பிரித்துவைக்கப்பட்டிருத்தல், இறந்தவர்களைத் தொடுவதற்கு எதிரான தடைகள் ஆகியவற்றுக்கான ஒழுங்குகள் சந்தேகமின்றி இஸ்ரவேலர் பலரின் உயிரை பாதுகாத்தன. (லேவியராகமம் 13; எண்ணாகமம் 19:11-16) அதற்கு நேர் மாறாக, அசீரியர்களுடைய மருத்துவ பழக்கவழக்கங்கள், “மதம், குறிசொல்லுதல், தீய ஆவிகளைப் பற்றிய தத்துவம் ஆகியவற்றின் ஒரு கலவை” என்று விவரிக்கப்படுகின்றன; அவை நாயின் மலத்தையும் மனித சிறுநீரையும் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளையும் உட்படுத்தின.
படைப்பாளரால் ஏவப்பட்ட ஒரு புத்தகத்திலிருந்து ஒருவர் எதிர்பார்க்கும் விதமாகவே, எழுதப்பட்ட காலத்துக்கு முன்னதாகவே விஞ்ஞானப்பூர்வமாக திருத்தமானதாய் இருந்த தகவல் பைபிளில் அடங்கியுள்ளது; ஆனாலும் அது முற்றிலும் விஞ்ஞானப்பூர்வ விளக்கங்களிலேயே மூழ்கிவிடவில்லை; அப்படியிருந்தால் பண்டைய மக்களுக்கு அர்த்தமற்றதாயும் குழப்புவதாயும் இருந்திருக்கும். அறியப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான எதுவும் பைபிளில் இல்லை. மறுபட்சத்தில், பரிணாம கோட்பாடு போன்ற நிரூபிக்கப்படாத கோட்பாடுகளோடு ஒத்திராத பல கருத்துக்கள் பைபிளில் அடங்கியுள்ளன.
[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]
பூமி ‘அந்தரத்தில் தொங்குகிறது’ என்ற யோபுவின் குறிப்பு, அவருடைய காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இராத அறிவைச் சுட்டிக்காட்டுகிறது
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
NASA