உங்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுங்கள்!
“துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாம[லிருக்கிற] . . . மனுஷன் பாக்கியவான். . . . அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் [“வெற்றிபெறும்,” NW].”—சங்கீதம் 1:1-3.
1. (அ) உலகப்பிரகாரமான இளைஞர்கள் வெற்றி என எதை கருதுகின்றனர்? (ஆ) வெற்றி காணும் மனிதனை பைபிள் எப்படி விவரிக்கிறது?
வெற்றி—அந்த வார்த்தை எதை உங்களுக்கு அர்த்தப்படுத்துகிறது? “பெரிய பிஸினஸ் மேனாக வேண்டும் என்பதே என் ஒரே லட்சியம்” என்றான் ஓர் இளைஞன். “மனம்போல் மாங்கல்யம் அமைய வேண்டும் என்பதுதான் என் நீண்ட கால ஆசை” என்றாள் ஒரு பருவ மங்கை. “எனக்கென்று சொந்தமாக கண்ணுக்கு அழகான வீடு, சொகுசான கார் வேண்டும் . . . நான் ஆசைப்படுவதெல்லாம் எனக்கு வேண்டும்” இது இன்னொரு பெண்ணின் கனவு. உண்மை என்னவென்றால், பணமோ, குடும்பமோ, செல்வம்கொழிக்கும் தொழிலோ ஒருவனுடைய உண்மையான வெற்றியை அளவிடும் அளவுகோல் அல்ல. “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், . . . கர்த்தருடைய வேதத்தில் [“யெகோவாவுடைய சட்டங்களில்,” NW] பிரியமாயிரு[க்கிற] . . . மனுஷன் பாக்கியவான். . . . அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் [“வெற்றிபெறும்,” NW]” என சங்கீதம் 1:1-3 சொல்கிறது.
2. உண்மையான வெற்றியை எங்கே கண்டடைய முடியும், அதை அடைவதற்கான ஒரே வழி எது?
2 எந்த மனிதனாலும் தரமுடியாத ஒன்றிற்கு, உண்மையான வெற்றிக்கு பைபிள் உறுதியளிக்கிறது! ஆனால் அது பண லாபத்தைப்பற்றி பேசுவதில்லை. “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” என பைபிள்தானே எச்சரிக்கிறது. (1 தீமோத்தேயு 6:10) யெகோவாவின் சட்டதிட்டங்களைப் பின்பற்றுவது உட்பட கடவுளைப் பிரியப்படுத்துவதில்தான் உண்மையான வெற்றியின் இரகசியம் அடங்கியிருக்கிறது. இதுமட்டுமே பரம திருப்தியையும் உண்மையான சந்தோஷத்தையும் தரமுடியும்! யெகோவாவின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருப்பது, அது சொல்கிறபடி நடப்பது என்ற கருத்தே விரும்பத்தக்கதாக இருக்காதுதான். எனினும், “தங்கள் ஆவிக்குரிய தேவைக் குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்” என இயேசு சொன்னார். (மத்தேயு 5:3, NW) நீங்கள் அறிந்திருக்கிறீர்களோ இல்லையோ ஆவிக்குரிய தேவையுள்ளவர்களாகவே நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள்; கடவுளை அறிந்துகொள்ளவும் அவருடைய நோக்கங்களைப் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்ற உள்ளூர தேவையோடே படைக்கப்பட்டிருக்கிறீர்கள். எனவே, அந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்து ‘யெகோவாவுடைய சட்டங்களைப்’ பின்பற்றுகிறபோது மட்டுமே உண்மையான சந்தோஷத்தை நீங்கள் பெற முடியும்.
கடவுளுடைய சட்டங்கள் ஏன் நமக்குத் தேவை
3. யெகோவா ‘நம் நடைகளை நடத்த’ நாம் ஏன் சந்தோஷமாக அனுமதிக்க வேண்டும்?
3 “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்” என தீர்க்கதரிசியாகிய எரேமியா எழுதினார். (எரேமியா 10:23) பெரியவர் சிறியவர் என எல்லாருடைய விஷயத்திலும் இது உண்மை. நம்முடைய நடைகளை நடத்துவதில், ஞானம், அனுபவம், அறிவு ஆகியவற்றில் நாம் குறைவுபடுகிறோம்; அத்தோடு நம் நடையை நடத்த நமக்கு உரிமையும் இல்லை. “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது” என பைபிள் வெளிப்படுத்துதல் 4:11-ல் குறிப்பிடுகிறது. நம்முடைய படைப்பாளராகிய யெகோவா “ஜீவஊற்”றாக இருக்கிறார். (சங்கீதம் 36:9) என்றபோதிலும், நம்முடைய வாழ்க்கையை நல்ல விதத்தில் நாம் எப்படிப் பயன்படுத்தலாம் என்பது வேறு எவரையும்விட அவருக்குத்தான் நன்கு தெரியும். ஆகவேதான் அவர் சட்டங்களை ஏற்படுத்தினார்; நம் சந்தோஷத்தைப் பறிப்பதற்கல்ல நாம் பலனடையவே அவர் உதவுகிறார். (ஏசாயா 48:17) கடவுளுடைய சட்டங்களைப் புறக்கணித்தால் தோல்வி எனும் படுகுழியில் கிடப்பீர்கள்.
4. அநேக இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை ஏன் கெடுத்துக் கொள்கிறார்கள்?
4 உதாரணமாக, போதைப் பொருட்கள், வரம்பற்ற பாலுறவு, இன்னும் மோசமான செயல்கள் மூலம் அநேக இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை ஏன் கெடுத்துக் கொள்கிறார்கள் என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? “துன்மார்க்கனுடைய துரோகப் பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை. அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்” என சங்கீதம் 36:1, 2 விவரிக்கிறது. சரியான “தெய்வபயம்” அவர்களிடம் இல்லாததால், அநேக இளைஞர்கள் தங்களுடைய மோசமான போக்கு ஒருபோதும் தங்களைப் பாதிக்காது என எண்ணி தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள். எனினும், “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்” என்ற மாறா நியமத்தின் விளைவை அவர்கள் சந்தித்தே தீரவேண்டும்.—கலாத்தியர் 6:7, 8.
‘நாட்களை எண்ணுதல்’
5, 6. (அ) ஏன் இளைஞர்கள் ‘தங்கள் நாட்களை எண்ண’ வேண்டும், அவ்வாறு எண்ணுவது எதைக் குறிக்கிறது? (ஆ) ‘நம்முடைய சிருஷ்டிகரை நினைப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது?
5 நீங்கள் எப்படி உங்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போட்டு ‘நித்திய ஜீவனை அறுக்க’ முடியும்? “எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், . . . அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்” என மோசே எழுதினார். (சங்கீதம் 90:10) சாவதைப் பற்றி நீங்கள் ஒருவேளை யோசிக்கவே மாட்டீர்கள். தங்களுக்கு அழிவே இல்லை என்பது போலத்தான் உண்மையில் அநேக இளைஞர்கள் நடந்துகொள்கிறார்கள். ஆனால், வாழ்க்கை எனும் தீபம் சீக்கிரத்தில் அணைந்துவிடும் என்ற கசப்பான உண்மையை நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறார் மோசே. எழுபது அல்லது எண்பது வயது வரை வாழ்வோம் என்பதற்குகூட எந்த உத்தரவாதமும் இல்லை. “சமயமும் எதிர்பாரா சம்பவங்களும்” இளைஞர்களாகவும் திடகாத்திரமாகவும் இருப்பவர்களைக்கூட விட்டுவைப்பதில்லை. (பிரசங்கி 9:11, NW) அப்படியென்றால், இப்போது நீங்கள் அனுபவித்து மகிழும் மதிப்புமிக்க வாழ்க்கையை எப்படி பயன்படுத்துவீர்கள்? “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” என மோசே ஜெபித்தார்.—சங்கீதம் 90:12.
6 உங்கள் நாட்களை எண்ணுவது எதை அர்த்தப்படுத்துகிறது? நீங்கள் எவ்வளவு காலம் வாழ்வீர்கள் என்ற விஷயத்திலேயே மூழ்கிவிடுவதை அது அர்த்தப்படுத்துவதில்லை. மீதமுள்ள தங்கள் வாழ்நாள் காலத்தை யெகோவாவுக்குக் கனத்தைக் கொண்டுவரும் விதத்தில் எப்படி பயன்படுத்துவது என்பதை அவர் தம் மக்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என மோசே ஜெபித்தார். உங்கள் வாழ்நாட்களை நீங்கள் எண்ணுகிறீர்களா? அதாவது, ஒவ்வொரு நாளையும் மதிப்புவாய்ந்த பொக்கிஷமாக கருதி கடவுளுக்கு மகிமையைக் கொண்டுவரும் விதத்தில் செலவழிக்கிறீர்களா? “நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே. நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்ற உற்சாகமூட்டுதலை இளைஞர்களுக்கு பைபிள் கொடுக்கிறது. (பிரசங்கி 11:10-12:1) சிருஷ்டிகரை நினைப்பது என்பது அவர் இருக்கிறார் என வெறுமனே நினைப்பதை விடவும் அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. “நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என அந்தக் கள்வன் இயேசுவிடம் கெஞ்சுகையில் அவனுடைய பெயரை வெறுமனே நினைப்பதைவிடவும் அதிகத்தை செய்யும்படி அவன் எதிர்பார்த்தான். தன்னை உயிர்த்தெழுப்புவதன் மூலம் இயேசு அதை தம் செயலில் காண்பிக்கும்படி அவன் விரும்பினான். (லூக்கா 23:42; ஒப்பிடுக: ஆதியாகமம் 40:14, 23; யோபு 14:13.) அதேவிதமாக, யெகோவாவை நினைப்பதும் செயல்படுவதை, அவருக்குப் பிரியமானதைச் செய்வதைக் குறிக்கிறது. அப்படியென்றால், யெகோவாவை நீங்கள் நினைக்கிறீர்கள் என சொல்ல முடியுமா?
பொல்லாதவர்களைக் குறித்து பொறாமைப்படுவதைத் தவிருங்கள்
7. சில இளைஞர்கள் தங்கள் சிருஷ்டிகரைவிட்டு விலகுவதை ஏன் தெரிவு செய்கிறார்கள்? ஓர் உதாரணம் தருக.
7 யெகோவாவைவிட்டு விலகுவதை அநேக இளைஞர்கள் தெரிவு செய்கிறார்கள்; சாட்சியாக இருந்து கூண்டுக்கிளிபோல வாழ்வது மகா கஷ்டம் என்பது அவர்கள் கருத்து. ஸ்பெய்னைச் சேர்ந்த ஒரு சகோதரர் தன் வாலிப வயதில் எப்படி உணர்ந்தார் என்பதை ஞாபகப்படுத்திச் சொல்கிறார்: “உலக கவர்ச்சி என்னை அதனிடம் இழுத்தது; சத்தியத்திற்கு இசைய வாழ்வது கஷ்டமானதாகவும் கண்டிப்பானதாகவும் தோன்றியதே அதற்குக் காரணம். ஏனெனில் மணிக்கணக்காக உட்கார வேண்டும், படிக்க வேண்டும், கூட்டங்களுக்குச் செல்ல வேண்டும், கழுத்தில் டை கட்டிக்கொள்ள வேண்டும், அதெல்லாமே எனக்குப் பிடிக்காத விஷயங்களாய் இருந்தன.” கடவுளுக்குச் சேவை செய்வதால் சில சமயங்களில் எதையோ இழப்பதாய் நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களைப் போலவே ஒரு பைபிள் எழுத்தாளரும் உணர்ந்தார் என்பதை அறிகையில் ஒருவேளை உங்களுக்கே அது ஆச்சரியத்தை அளிக்கலாம். தயவுசெய்து உங்கள் பைபிளை சங்கீதம் 73-ம் அதிகாரத்திற்குத் திருப்பி வாசியுங்கள்.
8. ஆசாப் ஏன் ‘பெருமை பேசுபவர்கள் மேல் பொறாமை கொண்டார்’?
8 இந்தச் சங்கீதத்தை நாம் இப்போது சற்று ஆராய்வோம். “ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று. துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய [“பெருமை பேசுபவர்களாகிய,” NW] அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்” என வசனங்கள் 2-ம் 3-ம் சொல்கின்றன. இந்தச் சங்கீதத்தின் மேல் முகவரிக்கு இசைய இதன் எழுத்தாளர் ஆசாப். அவர் லேவிய இசைக் கலைஞரும் தாவீது ராஜாவின் காலத்தவரும் ஆவார். (1 நாளாகமம் 25:1, 2; 2 நாளாகமம் 29:30) கடவுளுடைய ஆலயத்தில் சேவை செய்யும் அருமையான பாக்கியத்தைப் பெற்றிருந்த போதிலும் தங்கள் அநீதியான செயல்களைக் குறித்து பெருமை பேசியவர்களைக் கண்டு அவர் ‘பொறாமை கொண்டார்.’ அவர்களுக்கு எல்லாமே சுமுகமாக நடப்பதைப் போல் தோன்றியது; அவர்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்து மகிழ்ந்தனர். உண்மையில், அவர்கள் அடைந்த போலி வெற்றிகள் அவர்கள் ‘இருதயம் விரும்பியதிலும் அதிகமானவையாய்’ இருந்தன. (5, 7 வசனங்கள்) தாங்கள் அடித்த கொள்ளையைப் பற்றி ‘இறுமாப்பாய்,’ சொல்லப்போனால், வாய்கிழிய தற்பெருமை பேசினார்கள். (8-ம் வசனம்) வானத்திலோ பூமியிலோ உள்ள யாரையும் அவர்கள் மதிக்காததால் அவர்கள் ‘தங்கள் வாயால் வானமட்டும் எட்டப்பேசினார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவினது.’—9-ம் வசனம்.
9. இன்று கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர் எப்படி ஆசாப்பைப் போலவே உணருகின்றனர்?
9 உங்கள் பள்ளியிலுள்ள சகமாணவர்களைக் குறித்தும் இதே விதமாக சொல்ல முடியும். அவர்கள் தங்கள் பாலியல் சாதனைகள், வெறித்தனமான பார்ட்டிகள், மதுபானத்தையும் போதைப் பொருட்களையும் அனுபவித்து மகிழ்வது போன்றவற்றைப் பற்றி வெட்கங்கெட்ட விதத்தில் ஆகா ஓகோ என பெருமை பேசுவதை நீங்கள் கேட்கலாம். கிறிஸ்தவராக நீங்கள் நடக்க வேண்டிய குறுகலான பாதைக்கும் அவர்களுடைய அந்தப் போலி சந்தோஷ வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் கவனிக்கையில் சிலநேரங்களில் ‘பெருமை பேசுபவர்கள் மேல் பொறாமை’ ஏற்படலாம். (மத்தேயு 7:13, 14) “நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன். நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டு . . . இருக்கிறேன்” என சொல்லுமளவுக்கு ஆசாப் சோர்வடைந்தார். (13, 14 வசனங்கள்) யெகோவாவை சேவிப்பது மற்றும் நேர்மையான வாழ்க்கை வாழ்வதன் மதிப்பைக் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்.
10, 11. (அ) எது ஆசாப்பின் மனநிலையை மாற்றியது? (ஆ) தவறுசெய்பவர்கள் எப்படி ‘சறுக்கலான இடங்களில்’ நிற்கின்றனர்? உதாரணம் தருக.
10 ஆசாப் சோர்வில் ஒரேயடியாக விழுந்துவிடவில்லை என்பது சந்தோஷத்துக்குரியது. துன்மார்க்கரின் சமாதானம் வெறும் மாயையும் தற்காலிகமானதுமே என்பதை அவர் சீக்கிரத்தில் புரிந்துகொண்டார்! “நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர். அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்” என வியந்துபோனார் அவர். (18, 19 வசனங்கள்) அதைப் போலவே உங்கள் சகதோழர்களில் அநேகர் ‘சறுக்கலான இடங்களில்’ நிற்கிறார்கள். சீக்கிரத்திலோ பிற்பாடோ அவர்களுடைய தேவபக்தியற்ற நடத்தை அவர்களை உடும்புபிடியாய் பிடிக்கும்; விளைவோ, தேவையற்ற கர்ப்பந்தரித்தல், பாலியல் கடத்தும் நோய், ஒருவேளை சிறைதண்டனையோ மரணமோதான்! இதிலும் படுமோசமான நிலை, அவர்கள் கடவுளுக்குப் பகைவர்களாவார்கள்.—யாக்கோபு 4:4.
11 இந்த உண்மையை ஸ்பெய்னைச் சேர்ந்த ஓர் இளம் சாட்சி அனுபவத்தில் கண்டறிந்தாள். இளம் பெண்ணாய் இருக்கையில், கடவுள் பக்தியற்ற இளைஞர்களின் ஒரு கூட்டத்தாரோடு நெருங்கி பழகியதால் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தாள். சீக்கிரத்தில் போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட்டிருந்த அவர்களில் ஒருவனை காதலிக்க ஆரம்பித்தாள். அவள் போதைப் பொருட்களை உபயோகிக்காத போதிலும் தன் காதலனுக்காக அவற்றை வாங்கித் தந்தாள். “ஊசி குத்திக்கொள்ளக்கூட நான் அவனுக்கு உதவினேன்” என அவளே ஒத்துக்கொள்கிறாள். சந்தோஷத்திற்குரிய விதமாக சீக்கிரத்திலேயே இந்தச் சகோதரி சுதாரித்துக்கொண்டாள், ஆவிக்குரிய நலத்தைத் திரும்பப் பெற்றாள். ஆனால், போதைப் பொருட்களை உபயோகித்து வந்த அவள் ‘காதலன்’ எய்ட்ஸால் இறந்துபோனான் என்பதைக் கொஞ்ச நாட்கள் கழித்து அறிந்த போது அவள் ஸ்தம்பித்துப் போனாள். சங்கீதக்காரன் சொன்னதுபோல் தெய்வ பயமற்றவர்கள் ‘சறுக்கலான இடங்களில்’ நிற்கின்றனர். தங்கள் மனம்போனபோக்கு தரும் வாழ்க்கை ‘பரிசான’ அகால மரணத்தை சிலர் அடைகின்றனர். மற்றவர்களோ, தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், வெகு சீக்கிரத்தில், “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது” அழிக்கப்படுவர்.—2 தெசலோனிக்கேயர் 1:7, 8.
12. பொல்லாதவர்களைக் குறித்து பொறாமைப்படுவதன் அறிவீனத்தை ஒரு ஜப்பானிய இளைஞன் எவ்வாறு புரிந்துகொண்டான்?
12 ‘தேவனை அறியாதவர்களைக்’ குறித்து பொறாமைப்படுவது எத்தனை அறிவீனமான காரியம்! யெகோவாவை அறிந்தவர்களையும் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ளவர்களையும் குறித்து பொறாமைப்படுவதே சரியானது. இதை ஜப்பானைச் சேர்ந்த இளம் சகோதரன் புரிந்துகொண்டான். இளைஞனாய் இருக்கையில் “சுதந்திரப் பறவையாக பறக்க” அவன் விரும்பினான். “நான் வாழ்க்கையை அனுபவிக்காததைப் போல் உணர்ந்தேன். பிற்பாடுதான், சத்தியம் இல்லாத வாழ்க்கை எப்படியிருக்கும் என்பது புரிந்தது. 70, 80 வயசுவரை வாழ்ந்துவிட்டு இறந்துவிடுவேன். ஆனால் யெகோவாவோ நித்திய வாழ்க்கை என்னும் நம்பிக்கையை அளிக்கிறார்! இதைப் புரிந்துகொண்டது திருப்தியோடிருக்க எனக்கு உதவியிருக்கிறது” என விளக்குகிறான். எனினும், கடவுளுடைய சட்டதிட்டங்களைப் பின்பற்றாதவர்களின் மத்தியில் விசுவாசத்தில் உறுதியாய் இருப்பது ஒன்றும் இலேசுப்பட்ட விஷயமல்ல. இத்தகைய அழுத்தங்களை எதிர்க்க நீங்கள் என்னென்ன செய்யலாம்?
நீங்கள் கூட்டுறவு கொள்பவர்களைக் குறித்து ஜாக்கிரதை!
13, 14. கூட்டுறவு கொள்பவர்களைத் தெரிந்தெடுப்பது ஏன் முக்கியம்?
13 வெற்றிப் பாதையில் நடக்கும் மனிதனைப் பற்றிய சங்கீதம் 1:1-3-ன் விவரிப்புக்கு மீண்டும் கவனம் செலுத்துவோம்: “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் [“நீரோடை,” NW] ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் [“வெற்றி பெறும்,” NW].”
14 முதலாவது, நீங்கள் கூட்டுறவு கொள்பவர்கள் முக்கியப் பங்கு வகிப்பதை கவனியுங்கள். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என நீதிமொழிகள் 13:20 சொல்கிறது. யெகோவாவின் சாட்சிகளாக இல்லாத இளைஞர்களிடம் இரக்கமற்ற விதத்திலோ, சிநேகப்பான்மையற்ற விதத்திலோ, முரட்டுத்தனமாகவோ நடந்துகொள்ள வேண்டும் என இது அர்த்தப்படுத்துவதில்லை. நம்முடைய அயலாரை நேசிக்கும்படியும், “எல்லா மனுஷரோடும் சமாதானமாயிரு”க்கும்படியும் பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (ரோமர் 12:18; மத்தேயு 22:39) எனினும், அவர்களோடு மட்டுக்குமீறி நெருங்கி பழகுவீர்கள் என்றால் பைபிள் தராதரங்களைப் பின்பற்றாதவர்களின் ‘ஆலோசனையில் நடக்கிறவர்களாக’ இருப்பீர்கள்.
பைபிள் வாசிப்பின் பலன்கள்
15. பைபிள் வாசிப்புக்கான ஆவலை இளைஞர்கள் எப்படி வளர்த்துக் கொள்ளலாம்?
15 வெற்றிப் பாதையில் நடப்பவன் கடவுளுடைய சட்டதிட்டங்களை வாசிப்பதில் பிரியமுள்ளவனாக, ‘இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிறவனாக [“குரல் தாழ்த்தி வாசிப்பவனாக,” NW]’ இருப்பதை சங்கீதக்காரன் கவனித்தார். (சங்கீதம் 1:1, 2) எளிதில் வாசிக்க முடிந்த புத்தகம் அல்ல பைபிள்; “புரிந்துகொள்வதற்குக் கடினமான” சில விஷயங்களும் அதனகத்தே இருக்கின்றன. (2 பேதுரு 3:16, பொது மொழிபெயர்ப்பு) ஆனால் பைபிள் வாசிப்பு சுவையற்றதாய் இருக்க தேவையில்லை. கடவுளுடைய வார்த்தையாகிய “களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிரு”ப்பது சாத்தியமானதே. (1 பேதுரு 2:3) தினந்தினம் கொஞ்சமாவது வாசியுங்கள். நீங்கள் புரிந்துகொள்ள முடியாத குறிப்புகள் இருந்தால், ஆராய்ந்து பாருங்கள். அதன்பின், நீங்கள் வாசித்தவற்றை யோசித்துப் பாருங்கள். (சங்கீதம் 77:11, 12) படிப்பில் கவனம் செலுத்துவது கஷ்டமாக இருந்தால் “குரல் தாழ்த்தி” வாய்விட்டுப் படியுங்கள். போகப் போக பைபிள் படிக்க வேண்டுமென்ற உங்கள் ஆசை கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிடும். “யெகோவா எப்போதுமே எனக்கு வெகுதூரம் இருப்பதாக தோன்றியது. ஆனால், இப்போது சில மாதங்களாக என் தனிப்பட்ட படிப்பிலும் பைபிள் வாசிப்பிலும் முன்னேறி வருகிறேன். இப்போதோ யெகோவாவுடனான என் நட்புறவு பலப்பட்டிருப்பதைப் போல் உணருகிறேன். எப்போதையும்விட இப்போது அவர் எனக்கு அதிக மெய்யானவராக இருக்கிறார்” என நினைவுபடுத்தி சொல்கிறாள் பிரேஸிலைச் சேர்ந்த ஓர் இளம் சகோதரி.
16. சபைக் கூட்டங்களிலிருந்து நாம் எவ்வாறு அதிக பயனடையலாம்?
16 சபைக் கூட்டங்களுக்குச் செல்வதும் உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு இன்றியமையாதது. ‘நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனமாயிருந்தால்’ அதிக உற்சாகமூட்டுதலைப் பெறுவீர்கள். (லூக்கா 8:18) கூட்டங்கள் அந்தளவுக்கு ஆர்வத்தைத் தூண்டுபவையாய் இல்லை என சிலசமயங்களில் நீங்கள் நினைப்பதுண்டா? ‘கூட்டங்கள் ஆர்வத்தைத் தூண்டுபவையாய் இருக்க நான் என்ன செய்யலாம்? ஒழுங்காக கவனிக்கிறேனா? தயாரிக்கிறேனா? பதில் சொல்கிறேனா?’ என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; . . . ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம் [“உற்சாகம் அளிப்போம்,” NW]” என பைபிள் நமக்குச் சொல்லுகிறது. (எபிரெயர் 10:24, 25) இதைச் செய்வதற்கு நீங்கள் பதில் சொல்வதன் மூலம் பங்கு கொள்ள வேண்டும்! இவ்வாறு பங்கு கொள்ள நீங்கள் முன்கூட்டியே படிக்க வேண்டும். “நீங்கள் தயாரிக்கிறீர்களென்றால் கூட்டங்களில் பதில் சொல்வது ரொம்ப சுலபம்” என்கிறாள் ஓர் இளம் சகோதரி.
கடவுளுடைய வழியைப் பின்பற்றுவது வெற்றிப் பாதைக்கு வழிநடத்தும்
17. பைபிளை ஊக்கந்தளராமல் படிப்பவர் எப்படி ‘நீரோடையின் ஓரமாய் நடப்பட்ட மரத்தைப்போல’ இருக்கிறார்?
17 வெற்றிப் பாதையில் நடப்பவன், ‘நீரோடை ஓரமாய் நடப்பட்ட மரத்தைப்போல’ இருப்பதாய் சங்கீதக்காரன் மேலும் விவரிக்கிறார். நீரோடை, நீர்ப்பாசன வடிகாலை ஒருவேளை குறிக்கலாம்; இவை பழத்தோட்டங்களில் உள்ள மரங்களுக்கு நீர்ப்பாய்ச்ச உபயோகிக்கப்பட்டன. (ஏசாயா 44:4) தினந்தோறும் பைபிள் வாசிப்பது, தவறாமல் ஊட்டத்தையும் புதுத்தெம்பையும் பெறும் விதத்தில் அதுபோன்ற நீரோடையுடன் இணைக்கப்பட்டதைப் போலிருக்கும். (எரேமியா 17:8) கஷ்டங்களையும் சோதனைகளையும் சமாளிப்பதற்குத் தேவையான பலத்தை நீங்கள் தினந்தினம் பெற்றுக்கொள்வீர்கள். யெகோவாவின் நோக்குநிலையை அறிந்துகொண்டபின், விவேகத்தோடு தீர்மானங்களை எடுக்க தேவையான ஞானத்தை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.
18. யெகோவாவின் சேவையில் ஓர் இளைஞனின் வெற்றியை எது உறுதிப்படுத்தும்?
18 சிலசமயங்களில் யெகோவாவை சேவிப்பது கடினமாக தேன்றலாம். ஆனால் முடியவே முடியாது என ஒருபோதும் நினைக்காதீர்கள். (உபாகமம் 30:11, NW) யெகோவாவை பிரியப்படுத்த வேண்டும், அவருடைய இதயத்தை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பது உங்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கும் வரை ‘நீங்கள் செய்வதெல்லாம் வெற்றி பெறும்’ என பைபிள் வாக்குறுதியளிக்கிறது. (நீதிமொழிகள் 27:11) நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் வையுங்கள். யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் உங்கள் பக்கம். (மத்தேயு 28:20; எபிரெயர் 13:5) நீங்கள் படும் கஷ்டங்களை எல்லாம் அவர்கள் அறிந்திருக்கின்றனர்; உங்களை ஒருபோதும் அவர்கள் கைவிடமாட்டார்கள். (சங்கீதம் 55:22) ‘சகோதர கூட்டத்தார் அனைவருடைய’ ஆதரவும், தெய்வ பயமுள்ளவர்களாய் இருந்தால் உங்களுடைய பெற்றோருடைய ஆதரவும் உங்களுக்கிருக்கிறது. (1 பேதுரு 2:17, NW) இத்தகைய ஆதரவோடு, உங்கள் உறுதியும் முயற்சியும் ஒன்றுசேருகையில் இன்று மட்டுமல்ல என்றும் உங்கள் வாழ்க்கையில் வெற்றி காண முடியும்!
மறுபார்வைக்குக் கேள்விகள்
◻ உண்மையான வெற்றி எது?
◻ நம்முடைய நடைகளை நடத்த நமக்கு யெகோவா ஏன் தேவை?
◻ இளைஞர்கள் எப்படி தங்கள் ‘நாட்களை எண்ணலாம்’?
◻ பொல்லாதவர்களைக் குறித்து பொறாமைப்படுவது ஏன் அறிவீனமான செயல்?
◻ வாழ்க்கைப் பாதையில் வெற்றி காண தினந்தோறும் பைபிள் வாசிப்பதும், தவறாமல் கூட்டங்களுக்குச் செல்வதும் எப்படி இளைஞர்களுக்கு உதவலாம்?
[பக்கம் 20-ன் படம்]
சரியான ‘தெய்வபயம்’ இல்லாததால் அநேக இளைஞர்கள் அழிவுக்கு வழிநடத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர்
[பக்கம் 22-ன் படம்]
தாங்கள் விதைப்பதை அறுப்பார்கள் என்பதை இளைஞர்கள் அடிக்கடி மறந்துவிடுகின்றனர்
[பக்கம் 23-ன் படம்]
பைபிளை வாசிக்க ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
[பக்கம் 23-ன் படம்]
நீங்கள் எந்தளவுக்கு கூட்டங்களில் பங்கு கொள்கிறீர்களோ அந்தளவுக்கு அனுபவிப்பீர்கள்