யெகோவாவின் மகத்துவம் ஆராய்ந்து முடியாதது
“கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.”—சங்கீதம் 145:3.
1, 2. தாவீது எப்படிப்பட்டவராக இருந்தார், கடவுளோடு ஒப்பிட தன்னை எப்படிப்பட்டவராக கருதினார்?
சங்கீதம் 145-ஐ இயற்றியவர் சரித்திரப் புகழ்பெற்ற ஒரு மனிதர். அவர் இளைஞராக இருந்தபோது ஆயுதந்தரித்த ஓர் அரக்கனுடன் நேருக்கு நேர் மோதி அவனை கொன்று வீழ்த்தினார். அந்த சங்கீதக்காரன் மாவீரம் படைத்த அரசராக ஆனபோது அநேக எதிரிகளைத் தோற்கடித்தார். அவரது பெயர் தாவீது; அவர் பூர்வ இஸ்ரவேலின் இரண்டாவது அரசர். அவர் மரித்த பிறகும் அவரது புகழ் மணம் வீசிக்கொண்டிருந்தது; ஏன், இன்றும்கூட அநேகருக்கு அவரைப் பற்றி ஓரளவு தெரிந்திருக்கிறதே!
2 தாவீது சாதனைகள் பல புரிந்தாலும் தாழ்மையுள்ளவராகவே விளங்கினார். யெகோவாவைக் குறித்து அவர் இவ்வாறு பாடினார்: “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்.” (சங்கீதம் 8:3, 4) எல்லா சத்துருக்களின் கைகளிலிருந்தும் தாவீது தப்பியபோது அவர் தன்னைப் பற்றி பெருமையாக நினைப்பதற்கு பதிலாக அதற்கு காரணராகிய யெகோவா தேவனைப் புகழ்ந்து பாடினார்: “உமது ரட்சிப்பின் கேடகத்தை எனக்குத் தருவீர்; உமது மனத்தாழ்மை என்னைப் பெரியவனாக்குகிறது.” (2 சாமுவேல் 22:1, 2, 36, NW) பாவிகளுக்கு இரங்குகையில் யெகோவா மனத்தாழ்மையைக் காட்டுகிறார்; யெகோவா காட்டிய தகுதியற்ற தயவுக்கு தாவீது மிகுந்த நன்றியுள்ளவராக இருந்தார்.
‘ராஜாவாகிய தேவனை உயர்வாக போற்றுவேன்’
3. (அ) யாரை இஸ்ரவேலின் ராஜாவாக தாவீது கருதினார்? (ஆ) யெகோவாவை துதிப்பதற்கு தாவீது எந்தளவு ஆவலாய் இருந்தார்?
3 கடவுளால் அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜாவாக இருந்தபோதிலும் யெகோவாவே இஸ்ரவேலின் உண்மையான ராஜா என தாவீது கருதினார். “கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்” என அவர் கூறினார். (1 நாளாகமம் 29:11) கடவுளை ராஜாவாக உயர்வாய் போற்றிப் புகழ்ந்தார்! “ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி [“உயர்வாக போற்றி,” NW], உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்” என அவர் பாடினார். (சங்கீதம் 145:1, 2) யெகோவா தேவனை நாடோறும் என்றென்றைக்கும் புகழ்ந்து துதிப்பதே தாவீதின் ஆவலாக இருந்தது.
4. என்ன பொய்க் குற்றச்சாட்டுகளை 145-ஆம் சங்கீதம் அம்பலப்படுத்துகிறது?
4 சாத்தானுடைய குற்றச்சாட்டுக்கு—கடவுள் சுயநலம் பிடித்த ஆட்சியாளர், தமது படைப்புகளுக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு—145-ஆம் சங்கீதம் சரியான பதிலடி கொடுக்கிறது. (ஆதியாகமம் 3:1-5) ஜனங்கள் கடவுளை நேசிப்பதால் அல்ல, ஆனால் தங்களுடைய சொந்த ஆதாயத்திற்காகவே அவருக்குக் கீழ்ப்படிகிறார்கள் என சாத்தான் சொன்ன பொய்யையும் இந்த சங்கீதம் அம்பலப்படுத்துகிறது. (யோபு 1:9-11; 2:4, 5) தாவீதைப் போலவே இன்று மெய்க் கிறிஸ்தவர்களும் பிசாசின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜ்ய ஆட்சியில் நித்திய காலமாய் வாழும் நம்பிக்கையை அவர்கள் பொக்கிஷமாக கருதுகிறார்கள், ஏனென்றால் சதா காலத்துக்கும் யெகோவாவை துதிக்க ஆவலுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏற்கெனவே லட்சோப லட்சம் பேர் இயேசுவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைத்து, அன்பின் நிமித்தம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்று கீழ்ப்படிதலோடு சேவை செய்வதன் மூலம் அவரை துதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.—ரோமர் 5:8; 1 யோவான் 5:3.
5, 6. யெகோவாவை போற்றிப் புகழ்வதற்கு என்னென்ன சந்தர்ப்பங்கள் உள்ளன?
5 யெகோவாவை ஸ்தோத்திரிப்பதற்கும் புகழ்வதற்கும் அவருடைய ஊழியர்களாகிய நமக்கு இருக்கும் அநேக சந்தர்ப்பங்களை சிந்தித்துப் பாருங்கள். அவருடைய வார்த்தையாகிய பைபிளை வாசிக்கையில் ஏதாவதொரு விஷயம் நம் மனதை ஆழமாக தொட்டால் அதற்காக ஜெபத்தில் அவரை புகழலாம். கடவுள் தம் மக்களோடு நடந்து கொண்ட விதம் நம்மை நெகிழ வைக்கையில் அல்லது அவரது அற்புதமான படைப்பின் ஓர் அம்சத்தைப் பார்த்து பூரித்துப் போகையில் நாம் நெஞ்சார அவரை துதிக்கலாம், நன்றியும் செலுத்தலாம். யெகோவா தேவனின் நோக்கங்களைப் பற்றி கிறிஸ்தவ கூட்டங்களில் சக விசுவாசிகளிடம் பேசுகையிலோ மற்ற சந்தர்ப்பங்களில் ஒருவரோடொருவர் உரையாடுகையிலோ நாம் அவரை ஸ்தோத்திரிக்கிறோம். சொல்லப்போனால், கடவுளுடைய ராஜ்ய அக்கறைகளுக்காக செய்யப்படும் எல்லா ‘நற்கிரியைகளும்’ யெகோவாவுக்கு புகழ் சேர்க்கின்றன.—மத்தேயு 5:16.
6 அத்தகைய நற்கிரியைகளுக்கு தற்கால எடுத்துக்காட்டுகளில் ஒன்று, வறுமையால் பீடிக்கப்பட்ட நாடுகளில் யெகோவாவின் ஜனங்கள் அநேக வணக்க தலங்களை கட்டியிருப்பதாகும். பிற நாடுகளைச் சேர்ந்த சக விசுவாசிகள் அளித்த பண உதவி அதற்கு மிகவும் கைகொடுத்திருக்கிறது. கிறிஸ்தவர்கள் சிலர் ராஜ்ய மன்ற கட்டுமான பணியில் ஈடுபட அந்த இடங்களுக்கு செல்வதன் மூலம் உதவியிருக்கிறார்கள். யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கிப்பதன் மூலம் அவரைப் புகழ்வதே எல்லா நற்கிரியைகளிலும் அதிமுக்கியமானது. (மத்தேயு 24:14) 145-ஆம் சங்கீதத்தின் பிற்பகுதியிலுள்ள வசனங்கள் காட்டுகிறபடி, கடவுளுடைய ராஜரீகத்தை தாவீது உயர்வாக போற்றிப் புகழ்ந்தார். (சங்கீதம் 145:11, 12) கடவுளுடைய அன்பான ஆட்சிமுறையை நீங்களும் அதேபோல் போற்றுகிறீர்களா? அவருடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களிடம் தவறாமல் பேசுகிறீர்களா?
கடவுளுடைய மகத்துவத்திற்கு உதாரணங்கள்
7. யெகோவாவைப் புகழுவதற்கு மிக முக்கிய காரணத்தை சொல்லுங்கள்.
7 யெகோவாவைப் புகழ்வதற்கான மிக முக்கிய காரணத்தை சங்கீதம் 145:3 அளிக்கிறது. “கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது” என தாவீது பாடுகிறார். யெகோவாவின் மகத்துவம் எல்லையற்றது. அதை மனிதரால் முழுமையாக ஆராய முடியாது, புரிந்துகொள்ள முடியாது, அளவிடவும் முடியாது. ஆனால் ஆராய முடியாத யெகோவாவின் மகத்துவத்தைப் பற்றிய உதாரணங்களை இப்போது சிந்திப்பது நமக்கு நிச்சயமாகவே நன்மை பயக்கும்.
8. யெகோவாவின் மகத்துவத்தையும் வல்லமையையும் பற்றி இந்தப் பிரபஞ்சம் எதை வெளிப்படுத்துகிறது?
8 பிரகாசமாக ஜொலிக்கும் நகர்ப்பகுதியை விட்டு தொலைவில் சென்று நிர்மலமான இரவு வானை பார்த்து ரசித்த ஒரு சந்தர்ப்பத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். இருள் கவிந்த விண்வெளியில் கூட்டம் கூட்டமாக விண்மீன்கள் மின்னுவதைப் பார்த்து நீங்கள் பிரமித்துப் போகவில்லையா? அந்த விண்மீன்கள் அனைத்தையும் படைத்த யெகோவாவின் மகத்துவத்துக்காக அவரைப் புகழ உங்களுக்கு மனம் வரவில்லையா? ஆனால் நீங்கள் பார்த்தது, பூமி இடம் பெற்றுள்ள நட்சத்திர மண்டலத்தின் எண்ணற்ற விண்மீன் கூட்டங்களில் ஒரு சின்னஞ்சிறு பகுதி மட்டுமே. அதுபோக, 10,000 கோடிக்கும் அதிகமான நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது; அவற்றில் மூன்றை மட்டுமே தொலைநோக்கியின் உதவியின்றி பார்க்க முடியும். உண்மையில், இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் அமைந்துள்ள எண்ணிறந்த விண்மீன்களும் நட்சத்திர மண்டலங்களும் யெகோவாவின் படைக்கும் வல்லமைக்கும் அறிவுக்கெட்டாத மகத்துவத்துக்கும் ஓர் அத்தாட்சியாகும்.—ஏசாயா 40:26.
9, 10. (அ) இயேசு கிறிஸ்து சம்பந்தப்பட்டதில் யெகோவாவுடைய மகத்துவத்தின் என்ன அம்சங்கள் வெளிக்காட்டப்பட்டன? (ஆ) இயேசுவின் உயிர்த்தெழுதல் நம்முடைய விசுவாசத்தை எப்படி பலப்படுத்த வேண்டும்?
9 யெகோவாவுடைய மகத்துவத்தின் பிற அம்சங்களை, அதாவது இயேசு கிறிஸ்துவை உட்படுத்திய அம்சங்களை கவனியுங்கள். தமது குமாரனை படைத்ததிலும், யுகா யுகங்களாக “கைதேர்ந்த வேலையாளாக” (NW) அவரை பயன்படுத்தியதிலும் கடவுளுடைய மகத்துவம் வெளிக்காட்டப்பட்டது. (நீதிமொழிகள் 8:22-31) தம் ஒரேபேறான குமாரனை மீட்கும் பலியாக மனிதகுலத்திற்கு அளித்தபோது யெகோவாவுடைய அன்பின் மகத்துவம் வெளிப்படுத்தப்பட்டது. (மத்தேயு 20:28; யோவான் 3:16; 1 யோவான் 2:1, 2) மனித அறிவுக்கு எட்டாத மற்றொரு விஷயம், இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டபோது யெகோவா அவருக்கு கொடுத்த மகிமையான, அழியாத ஆவிக்குரிய சரீரமாகும்.—1 பேதுரு 3:18.
10 யெகோவாவுடைய ஆராய முடியாத மகத்துவத்தின் குறிப்பிடத்தக்க பல அம்சங்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலில் உட்பட்டிருந்தன. காண முடியாதவற்றையும், காண முடிகிறவற்றையும் சிருஷ்டிக்கும் வேலையில் முன்பு இயேசு ஈடுபட்டிருந்ததைப் பற்றி கடவுள் அப்போது அவருடைய நினைவுக்கு திரும்பக் கொண்டு வந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. (கொலோசெயர் 1:15, 16) உதாரணமாக, ஆவி சிருஷ்டிகளையும், இந்தப் பிரபஞ்சத்தையும், வளமிக்க பூமியையும், பூமியிலுள்ள எல்லா வகையான உயிர்களையும் படைத்த சமயத்தை அவரது நினைவுக்கு கொண்டு வந்திருப்பார். தம்முடைய குமாரன் மனிதனாக பூமிக்கு வருவதற்கு முன்பு பரலோகத்திலும் பூமியிலும் கண்ணார பார்த்திருந்த படைப்புகளைப் பற்றிய முழு சரித்திரத்தையும் அவருடைய நினைவுக்கு கொண்டு வந்ததோடுகூட பரிபூரண மனிதனாக அவர் பூமியில் அனுபவித்த காரியங்களையும் அவருடைய ஞாபகத்துக்கு கொண்டுவந்தார். ஆம், இயேசுவை உயிர்த்தெழுப்பிய விஷயத்தில் யெகோவாவின் ஆராய முடியாத மகத்துவம் தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, அந்த மிகப் பெரிய செயல் மற்றவர்களுக்கும் உயிர்த்தெழுதல் சாத்தியம் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. கடவுள் தம்முடைய பரிபூரண நினைவில் வைத்திருக்கும் கோடிக்கணக்கான மரித்தோரை மீண்டும் உயிர் பெறச் செய்வார் என்ற நம் நம்பிக்கையை இது பலப்படுத்த வேண்டும்.—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 17:31.
அதிசயமான கிரியைகள், வல்லமையான செயல்கள்
11. பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று யெகோவா என்ன மகத்துவமான வேலையை ஆரம்பித்தார்?
11 இயேசுவின் உயிர்த்தெழுதல் முதற்கொண்டு மகத்துவமும் அதிசயமுமான அநேக காரியங்களை யெகோவா செய்திருக்கிறார். (சங்கீதம் 40:5) பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று யெகோவா ஒரு புதிய தேசத்தை, ‘தேவனுடைய இஸ்ரவேலை’ உருவாக்கினார்; அது பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவின் சீஷர்களால் ஆனது. (கலாத்தியர் 6:16) அந்த ஆவிக்குரிய புதிய தேசம் நம்ப முடியாத அளவுக்கு அன்று உலகளவில் விரிவடைந்தது. இயேசுவின் அப்போஸ்தலர்களுடைய இறப்புக்கு பிறகு கிறிஸ்தவமண்டலம் தலைதூக்குவதற்கு விசுவாச துரோகம் வழிவகுத்த போதிலும், தமது நோக்கம் நிறைவேறுவதை உறுதிப்படுத்த யெகோவா அதிசயமான காரியங்களை தொடர்ந்து செய்து வந்தார்.
12. பூமியிலுள்ள முக்கியமான எல்லா மொழிகளிலும் பைபிள் இருப்பது எதற்கு அத்தாட்சி அளிக்கிறது?
12 உதாரணமாக, முழு பைபிளும் பாதுகாக்கப்பட்டு, இன்று பூமியில் பேசப்படும் முக்கியமான எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. சிக்கலான சூழ்நிலையிலும் சாத்தானுடைய ஏஜன்டுகளின் மரண அச்சுறுத்தலின் மத்தியிலுமே பைபிள் பெரும்பாலும் மொழிபெயர்க்கப்பட்டது. ஆராய முடியாதளவுக்கு மகத்துவமுள்ள கடவுளாக திகழும் யெகோவாவின் சித்தமாக இது இல்லாதிருந்தால், நிச்சயமாகவே 2,000-க்கும் அதிகமான மொழிகளில் பைபிளை மொழிபெயர்த்திருக்க முடியாது!
13. ராஜ்ய நோக்கங்கள் சம்பந்தமாக, 1914 முதற்கொண்டு யெகோவாவின் மகத்துவம் எவ்வாறு தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளது?
13 ராஜ்ய நோக்கங்கள் சம்பந்தமாகவும் யெகோவாவின் மகத்துவம் தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, 1914-ம் ஆண்டில் யெகோவா தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பரலோக ராஜாவாக முடிசூட்டினார். அதற்கு பிறகு விரைவிலேயே சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் எதிராக இயேசு நடவடிக்கை எடுத்தார். அவர்கள் பரலோகத்திலிருந்து பூமிக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்; சீக்கிரத்தில் அவர்கள் அபிஸுக்குள் தள்ளப்படுவார்கள். (வெளிப்படுத்துதல் 12:9-12; 20:1-3) பரலோகத்திலிருந்து அவர்கள் தள்ளப்பட்டது முதற்கொண்டு, இயேசுவைப் பின்பற்றும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் அதிகமதிகமான துன்புறுத்துதலை அனுபவித்திருக்கிறார்கள். என்றாலும், காணக்கூடாத விதத்தில் கிறிஸ்து பிரசன்னமாகியிருக்கும் இந்தக் காலத்தில் அவர்களை யெகோவா தாங்கி ஆதரித்திருக்கிறார்.—மத்தேயு 24:3, NW; வெளிப்படுத்துதல் 12:17.
14. என்ன அற்புதமான காரியத்தை 1919-ல் யெகோவா செய்தார், இது எதற்கு வழிவகுத்தது?
14 தம்முடைய மகத்துவத்தை மெய்ப்பித்துக் காட்டும் மற்றொரு அற்புதமான காரியத்தை 1919-ல் யெகோவா செய்தார். அதாவது, ஆவிக்குரிய விதத்தில் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்த இயேசுவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்களை மீண்டும் செயல்பட வைத்தார். (வெளிப்படுத்துதல் 11:3-11) அதற்குப் பின்வந்த ஆண்டுகளில், பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அபிஷேகம் பண்ணப்பட்டோர் வைராக்கியத்தோடு பிரசங்கித்திருக்கிறார்கள். 1,44,000 என்ற எண்ணிக்கையை பூர்த்தி செய்வதற்கு மற்ற அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் கூட்டிச் சேர்க்கப்பட்டு வந்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:1-3) கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் மூலம் யெகோவா ஒரு ‘புதிய பூமிக்கு,’ அதாவது நீதியுள்ள ஒரு மனித சமுதாயத்திற்கு அடித்தளம் போட்டார். (வெளிப்படுத்துதல் 21:1) ஆனால், உண்மையுள்ள அபிஷேகம் பண்ணப்பட்டோர் அனைவரும் பரலோகத்திற்குப் போன பிறகு இந்தப் ‘புதிய பூமிக்கு’ என்ன ஆகும்?
15. அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ன வேலையை முன்னின்று செய்திருக்கிறார்கள், அதன் பலன்கள் என்ன?
15 இந்தப் பத்திரிகையின் 1935-ம் வருட ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 15 ஆங்கில இதழ்களில் வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘திரள் கூட்டத்தை’ பற்றிய முக்கிய கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் தங்கள் சக வணக்கத்தாரான இந்தத் திரள் கூட்டத்தாரை எல்லா தேசங்களிலிருந்தும், இனங்களிலிருந்தும், ஜனங்களிலிருந்தும், பாஷைக்காரரிலிருந்தும் தேடிக் கண்டுபிடித்து தங்களோடு கூட்டிச் சேர்ப்பதற்காக ஊழியத்தில் வைராக்கியத்துடன் ஈடுபட்டார்கள். இந்தத் ‘திரள் கூட்டத்தார்’ ‘புதிய பூமியின்’ நிரந்தர அங்கத்தினர்களாக பரதீஸில் நித்திய ஜீவனை பெறும் எதிர்பார்ப்போடு, “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிப்பிழைப்பார்கள். (வெளிப்படுத்துதல் 7:9-14) ராஜ்ய பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் முன்னின்று ஈடுபட்டதால்தான் இன்று 60 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பூமிக்குரிய பரதீஸில் என்றும் வாழும் நம்பிக்கை கிடைத்திருக்கிறது. சாத்தானிடமிருந்தும் அவனுடைய சீர்கெட்ட இந்த உலகிலிருந்தும் எதிர்ப்பு வந்தபோதிலும் இந்தளவு அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதற்கு யாருக்கு புகழ் சேர வேண்டும்? (1 யோவான் 5:19) யெகோவாவால் மட்டுமே தமது பரிசுத்த ஆவியைக் கொண்டு இவை அனைத்தையும் சாதிக்க முடியும்.—ஏசாயா 60:22; சகரியா 4:6.
யெகோவாவின் மகிமைப் பிரதாபமும் மேன்மையும்
16. யெகோவாவுடைய ‘மேன்மையின் மகிமைப் பிரதாபத்தை’ ஏன் மனித கண்களால் பார்க்க முடியாது?
16 யெகோவாவின் ‘அதிசயமான கிரியைகளும்’ ‘வல்லமையுள்ள செய்கைகளும்’ எப்படிப்பட்டவையாய் இருந்தாலும் அவற்றை ஒருகாலும் மறக்கவே முடியாது. ஆகவேதான் தாவீது இவ்வாறு எழுதினார்: “தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள். உம்முடைய சிறந்த [“மேன்மையின்,” NW] மகிமைப் பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவேன். ஜனங்கள் உம்முடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.” (சங்கீதம் 145:4-6) ‘தேவன் ஆவியாக’ இருப்பதால் மனித கண்களால் அவரைப் பார்க்க முடியாது; அப்படியிருக்கும்போது தாவீதால் யெகோவாவின் மகிமைப் பிரதாபத்தை எந்தளவுக்கு அறிந்திருக்க முடியும்?—யோவான் 1:18; 4:24.
17, 18. ‘யெகோவாவுடைய மேன்மையின் மகிமைப் பிரதாபத்தின்’ பேரில் தாவீது தன் போற்றுதலை எப்படி வளர்த்திருக்கலாம்?
17 யெகோவாவை தன்னால் பார்க்க முடியாவிட்டாலும், அவருடைய மேன்மையின் பேரில் போற்றுதலை வளர்ப்பதற்கு தாவீதுக்கு அநேக வழிகள் இருந்தன. உதாரணத்திற்கு, பூகோள ஜலப்பிரளயத்தின் மூலம் பொல்லாத உலகிற்கு வந்த அழிவு போன்ற கடவுளின் வல்லமையான செயல்களைப் பற்றிய வேத வசனங்களை அவரால் வாசித்து தெரிந்துகொள்ள முடிந்தது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை கடவுள் விடுவித்தபோது எகிப்தின் பொய்க் கடவுட்களுக்கு எப்பேர்ப்பட்ட அவமானம் ஏற்பட்டது என்பதையும் தாவீது பெரும்பாலும் படித்துத் தெரிந்திருப்பார். இத்தகைய சம்பவங்கள் யெகோவாவின் மேன்மையையும் மகத்துவத்தையும் பற்றி சாட்சி பகருகின்றன.
18 வேத வசனங்களை வாசிப்பதன் மூலமாக மட்டுமல்ல, அவற்றை தியானிப்பதன் மூலமாகவும் கடவுளுடைய மேன்மையின் பேரில் தாவீது தன்னுடைய போற்றுதலை வளர்த்தார். உதாரணமாக, இஸ்ரவேலருக்கு யெகோவா நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தபோது என்ன நடந்தது என்பதை அவர் தியானித்திருக்கலாம். அங்கே இடிமுழக்கங்களும், மின்னல்களும், கார்மேகமும், மகா பலத்த எக்காள சத்தமும் உண்டானது. சீனாய் மலை அதிர்ந்து, புகைக்காடாய் ஆனது. ஒரு தேவதூதர் மூலமாய் யெகோவா பேசிய போது அந்த மலையின் அடிவாரத்தில் கூடிவந்திருந்த இஸ்ரவேலர் அக்கினி மற்றும் மேகத்தின் நடுவிலிருந்து “பத்துக் கற்பனைகளையும்” கேட்டார்கள். (உபாகமம் 4:32-36; 5:22-24; 10:4; யாத்திராகமம் 19:16-20; அப்போஸ்தலர் 7:38, 53) யெகோவாவுடைய மகத்துவத்தின் எப்பேர்ப்பட்ட வெளிக்காட்டுகள்! கடவுளுடைய வார்த்தையை நேசிக்கிறவர்கள், இந்தப் பதிவுகளை தியானிக்கையில் ‘யெகோவாவுடைய மேன்மையின் மகிமைப் பிரதாபத்தாலும்’ நிச்சயம் மனம் தூண்டப்படுவார்கள். இன்று நம்மிடம் முழு பைபிளும் இருக்கிறது; அதில் யெகோவாவின் மகத்துவத்தை நம் மனதில் ஆழப் பதிய வைக்கும் மகத்தான பல்வேறு தரிசனங்கள் உள்ளன.—எசேக்கியேல் 1:26-28; தானியேல் 7:9, 10; வெளிப்படுத்துதல் 4-ம் அதிகாரம்.
19. எவை யெகோவாவுடைய மேன்மையின் பேரில் நம் போற்றுதலை வளர்க்கும்?
19 இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த கட்டளைகளை படித்ததன் மூலமும் கடவுளுடைய மேன்மையால் தாவீது மனம் கவரப்பட்டிருக்கலாம். (உபாகமம் 17:18-20; சங்கீதம் 19:7-11) யெகோவாவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தது இஸ்ரவேல் தேசத்திற்கு கண்ணியம் சேர்த்தது. அதோடு பிற ஜனங்களிலிருந்து அவர்களை வேறுபடுத்தியும் காண்பித்தது. (உபாகமம் 4:6-8) தாவீது செய்ததுபோல, தவறாமல் வேத வசனங்களை வாசிப்பதும், அவற்றின் பேரில் ஆழமாக தியானிப்பதும், அவற்றை ஊக்கமாக படிப்பதும் யெகோவாவுடைய மேன்மையின் பேரில் நம் போற்றுதலை வளர்க்கும்.
கடவுளுடைய தார்மீக குணங்கள் எவ்வளவு மகத்துவமானவை!
20, 21. (அ) சங்கீதம் 145:7-9 (NW) வசனங்கள் யெகோவாவின் மகத்துவத்தோடு சம்பந்தப்பட்ட என்ன குணங்களை புகழ்ந்து பேசுகின்றன? (ஆ) இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கடவுளுடைய குணங்கள் அவரை நேசிப்போர் அனைவர் மீதும் என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றன?
20 நாம் இதுவரை சிந்தித்தபடி, 145-ம் சங்கீதத்தின் முதல் ஆறு வசனங்கள் யெகோவாவின் ஆராய்ந்தறிய முடியாத மகத்துவத்தோடு சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக அவரை புகழ நமக்கு சிறந்த காரணங்களை தருகின்றன. ஏழு முதல் ஒன்பது வசனங்கள் கடவுளுடைய தார்மீக குணங்களை குறிப்பிடுவதன் மூலம் அவரது மகத்துவத்தை புகழ்ந்து பேசுகின்றன, அந்த வசனங்களில் தாவீது இவ்வாறு பாடுகிறார்: “அவர்கள் உமது மிகுந்த நற்குணத்தை நினைத்து மகிழ்ந்து பேசுவார்கள், உமது நீதியின் நிமித்தம் கெம்பீரித்துப் பாடுவார்கள். யெகோவா இனிமையும், இரக்கமும், கோபிக்க தாமதிக்கிற குணமும், மிகுந்த அன்புள்ள தயவும் உள்ள கடவுள். யெகோவா எல்லாருக்கும் நன்மை செய்பவர், அவருடைய இரக்கங்கள் எல்லா கிரியைகளின் மேலுமுள்ளது.”—NW.
21 தாவீது இங்கு யெகோவாவின் நற்குணத்தையும் நீதியையும் முதலாவதாக சிறப்பித்துக் காட்டுகிறார்; இந்தக் குணங்களையே பிசாசாசிய சாத்தான் கேள்விக்கிடமாக்கினான். கடவுளை நேசித்து அவருடைய ஆட்சியுரிமைக்கு தங்களை கீழ்ப்படுத்தும் அனைவர் மீதும் இந்த குணங்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றன? ஏன், யெகோவாவின் நற்குணமும், நீதியாக ஆட்சி புரியும் விதமும் அவருடைய வணக்கத்தாருக்கு அந்தளவு மகிழ்ச்சி தருவதால் அவருடைய புகழை சொல்லாமல் அவர்களால் இருக்கவே முடிவதில்லை. அதுமட்டுமல்ல, யெகோவா “எல்லாருக்கும்” தம் நற்குணத்தைக் காட்டுகிறார். காலம் கடந்துவிடுவதற்குள் இன்னும் அநேகர் மனந்திரும்பி மெய்க் கடவுளின் வணக்கத்தாராக ஆவதற்கு இது உதவும் என நம்பலாம்.—அப்போஸ்தலர் 14:15-17.
22. யெகோவா தம் ஊழியர்களை எப்படி நடத்துகிறார்?
22 யெகோவாதாமே மோசேக்கு “முன்பாகக் கடந்து போகிறபோது” சிறப்பித்துக் காட்டிய குணங்களையும் தாவீது உயர்வாக போற்றினார். “யெகோவா, யெகோவா, இரக்கமும், இனிமையும், கோபிக்க தாமதிக்கிற குணமும், மிகுந்த அன்புள்ள தயவும் சத்தியமுமுள்ள கடவுள்” என யெகோவா அறிவித்தார். (யாத்திராகமம் 34:6, NW) இதன் காரணமாகவே தாவீதால் இவ்வாறு அறிவிக்க முடிந்தது: “யெகோவா இனிமையும், இரக்கமும், கோபிக்க தாமதிக்கிற குணமும், மிகுந்த அன்புள்ள தயவும் உள்ள கடவுள்.” ஆராய முடியாதளவுக்கு யெகோவா மகத்துவமுள்ளவராக இருக்கிறபோதிலும், தம் மனித ஊழியர்களை இனிய விதத்தில் நடத்துவதன் மூலம் கௌரவிக்கிறார். அவர் இரக்கம் மிக்கவர்; ஆகவே மனந்திரும்பும் பாவிகளை இயேசுவின் மீட்கும் பலியின் மூலம் மன்னிக்க மனமுள்ளவராய் இருக்கிறார். யெகோவா கோபிக்க தாமதிக்கிறவரும்கூட; ஏனென்றால் தம்முடைய ஊழியர்கள் நீதியுள்ள புதிய உலகிற்கு அடியெடுத்து வைக்க தடையாக இருக்கும் பலவீனங்களை சமாளிப்பதற்கு அவர் வாய்ப்பளிக்கிறார்.—2 பேதுரு 3:9, 13, 14.
23. அடுத்த கட்டுரையில் என்ன அருமையான குணத்தைப் பற்றி சிந்திப்போம்?
23 கடவுளுடைய அன்புள்ள தயவை, அதாவது பற்றுமாறா அன்பை தாவீது புகழ்ந்து பேசுகிறார். சொல்லப்போனால், அன்புள்ள தயவை யெகோவா எப்படி வெளிக்காட்டுகிறார், விசுவாசமுள்ள தமது ஊழியர்கள் அதற்கு எப்படி பிரதிபலிக்கிறார்கள் என்பதையே 145-ம் சங்கீதத்தின் மீதமுள்ள வசனங்கள் காட்டுகின்றன. இந்த விஷயங்கள் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• “நாடோறும்” யெகோவாவை புகழ்வதற்கு என்னென்ன சந்தர்ப்பங்கள் இருக்கின்றன?
• யெகோவாவின் மகத்துவம் ஆராய முடியாதது என்பதை என்ன உதாரணங்கள் காட்டுகின்றன?
• யெகோவாவுடைய மகிமை பொருந்திய மேன்மையின் பேரில் நம் போற்றுதலை எப்படி வளர்க்கலாம்?
[பக்கம் 10-ன் படம்]
இப்பிரபஞ்சத்தின் நட்சத்திர மண்டலங்கள் யெகோவாவின் மகத்துவத்துக்கு சான்று பகருகின்றன
[படத்திற்கான நன்றி]
Courtesy of Anglo-Australian Observatory, photograph by David Malin
[பக்கம் 12-ன் படம்]
இயேசு கிறிஸ்துவின் விஷயத்தில் யெகோவாவின் மகத்துவம் எப்படி வெளிக்காட்டப்பட்டிருக்கிறது?
[பக்கம் 13-ன் படம்]
சீனாய் மலையில் இஸ்ரவேலர் நியாயப்பிரமாணத்தைப் பெற்றபோது யெகோவாவின் மகிமை பொருந்திய மேன்மையைக் கண்டார்கள்