அதிகாரம் 28
“நீங்கள் ஒருவர்தான் பற்றுமாறாதவர்”
1, 2. உண்மைப் பற்றுறுதியின்மை என்பது தாவீது ராஜா எதிர்ப்படாத ஒன்றல்ல என்று ஏன் சொல்லலாம்?
உண்மைப் பற்றுறுதிக்கு அல்லது பற்றுமாறாமல் இருப்பதற்கு நேர்மாறான துரோகத்தை தாவீது ராஜா எதிர்ப்படாமல் இல்லை. அவருடைய ஆட்சியின்போது கொந்தளிப்புமிக்க ஒரு காலக்கட்டத்தில், அவருடைய சொந்த தேசத்தாரே அவருக்கு விரோதமாக சதி செய்தார்கள். மேலும், அவருடைய உயிருக்குயிரான சில தோழர்களே அவருக்கு துரோகம் இழைத்தார்கள். தாவீதின் முதல் மனைவி மீகாளை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்பத்தில், அவள் “தாவீதைக் காதலித்தாள்,” ராஜாவாக அவருடைய கடமைகளை செய்வதில் அவரை ஆதரித்தாள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பிற்பாடு, அவள் தன் “மனதுக்குள் அவரைக் கேவலமாக நினைத்தாள்,” ‘பைத்தியக்காரனை’ போல கருதினாள்.—1 சாமுவேல் 18:20; 2 சாமுவேல் 6:16, 20.
2 அடுத்து, தாவீதின் தனிப்பட்ட ஆலோசகராகிய அகித்தோப்பேலை எடுத்துக்கொள்ளுங்கள். அவருடைய வாக்கு யெகோவாவின் வாக்கைப் போல உயர்வாக மதிக்கப்பட்டது. (2 சாமுவேல் 16:23) ஆனால், நம்பிக்கைக்குரிய இந்த நண்பரே காலப்போக்கில் துரோகியாக மாறிவிட்டார், தாவீதிற்கு எதிரான கலகத்தில் சேர்ந்துகொண்டார். இந்த சதியை தூண்டிவிட்டவர் யார்? தாவீதின் சொந்த மகன் அப்சலோம்! சதித்திட்டத்தில் இறங்கிய இந்தச் சந்தர்ப்பவாதி, தன்னை போட்டி ராஜாவாக உரிமை பாராட்டிக்கொண்டு “இஸ்ரவேல் ஆண்களைத் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டான்.” தாவீது தன் உயிருக்குப் பயந்து ஓடி ஒளியும் அளவுக்கு அப்சலோமின் கலகம் தீவிரமடைந்தது.—2 சாமுவேல் 15:1-6, 12-17.
3. தாவீதிற்கு என்ன நம்பிக்கை இருந்தது?
3 உண்மைப் பற்றுறுதியுடன் தாவீதோடு நிலைத்திருந்தவர்கள் ஒருவருமில்லையா? துன்ப காலங்கள் முழுவதும் ஒருவர் தன்னோடு நிலைத்திருந்ததை தாவீது அறிந்திருந்தார். அவர் யார்? அவர் யெகோவா தேவனே அன்றி வேறு யாருமில்லை. “பற்றுமாறாதவரிடம் நீங்கள் பற்றுமாறாதவராக நடந்துகொள்கிறீர்கள்” என யெகோவாவைப் பற்றி தாவீது சொன்னார். (2 சாமுவேல் 22:26, அடிக்குறிப்பு) உண்மைப் பற்றுறுதி, அல்லது பற்றுமாறாமல் இருப்பது, என்றால் என்ன, இந்தக் குணத்திற்கு எவ்வாறு யெகோவா தலைசிறந்த முன்மாதிரியாய் திகழ்கிறார்?
உண்மைப் பற்றுறுதி என்றால் என்ன?
4, 5. (அ) “உண்மைப் பற்றுறுதி,” அல்லது “பற்றுமாறாமல் இருப்பது,” என்றால் என்ன? (ஆ) உண்மைப் பற்றுறுதி எவ்வாறு உண்மைத் தன்மையிலிருந்து வேறுபடுகிறது?
4 எபிரெய வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளபடி, “உண்மைப் பற்றுறுதி,” அல்லது “பற்றுமாறாமல் இருப்பது,” என்பது ஒரு பொருளோடு தன்னை அன்புடன் இணைத்துக்கொண்டு, அந்தப் பொருளோடு தொடர்புடைய அதன் நோக்கம் நிறைவேறும்வரை அதைவிட்டு விலகாதிருக்கும் தயவு ஆகும். உண்மைத் தன்மையைவிட அதிகம் இதில் உட்பட்டுள்ளது. ஏனென்றால் வெறுமனே கடமைக்காக ஒருவர் உண்மைத் தன்மையுடன் இருக்கலாம். மாறாக, உண்மைப் பற்றுறுதி என்பது அன்பில் வேரூன்றப்பட்டது. மேலும், “உண்மைத் தன்மை” என்ற வார்த்தையை ஜடப்பொருட்களுக்கும் பயன்படுத்த முடியும். உதாரணமாக, இரவில் சந்திரன் தவறாமல் காட்சியளிப்பதால், ‘வானத்திலுள்ள உண்மையுள்ள சாட்சி’ என அதை சங்கீதக்காரன் அழைத்தார். (சங்கீதம் 89:37) ஆனால் சந்திரன் உண்மைப் பற்றுறுதியுடன் இருப்பதாக வர்ணிக்க முடியாது. ஏன்? ஏனென்றால் உண்மைப் பற்றுறுதி என்பது அன்பின் வெளிக்காட்டு—ஜடப்பொருட்களால் காண்பிக்க முடியாத ஒன்று.
சந்திரன் ஓர் உண்மையுள்ள சாட்சி என அழைக்கப்படுகிறது, ஆனால் உயிருள்ள புத்திக்கூர்மைவாய்ந்த படைப்புகளால் மாத்திரமே யெகோவாவின் உண்மைப் பற்றுறுதியை உண்மையிலேயே பிரதிபலிக்க முடியும்
5 வேதப்பூர்வ கருத்தில், உண்மைப் பற்றுறுதி என்பது கனிவானது. இந்தப் பண்பை வெளிக்காட்டுவது, அதைக் காட்டுகிறவருக்கும் அது காட்டப்படுகிறவருக்கும் இடையே ஓர் உறவு நிலவுவதை சுட்டிக் காண்பிக்கிறது. இத்தகைய உண்மைப் பற்றுறுதி மாறாதது. இது காற்றின் போக்கிற்கு ஏற்ப நிலையில்லாமல் திசை மாறிச் செல்லும் அலைகளைப் போன்றதல்ல. மாறாக, உண்மைப் பற்றுறுதிக்கு, அல்லது உண்மைப் பற்றுறுதிமிக்க அன்புக்கு இமாலய தடைகளைக்கூட சமாளிக்கும் ஸ்திரத்தன்மையும் பலமும் இருக்கிறது.
6. (அ) மனிதர் மத்தியில் உண்மைப் பற்றுறுதி எந்தளவு அபூர்வமானது, இதை பைபிள் எவ்வாறு சுட்டிக்காட்டுகிறது? (ஆ) உண்மைப் பற்றுறுதி எதை உட்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ள மிகச் சிறந்த வழி எது, ஏன்?
6 இன்று இத்தகைய உண்மைப் பற்றுறுதியைக் காண்பது அபூர்வம்தான். பொதுவாக, நெருங்கிய நண்பர்களும் ‘கூட இருந்தே குழிபறிக்க நினைக்கிறார்கள்.’ மேலும், மணமானவர்கள் தங்களுடைய துணைவர்களை கைவிட்டுவிடுவதை இன்று அதிகமாக கேள்விப்படுகிறோம். (நீதிமொழிகள் 18:24; மல்கியா 2:14-16) துரோகச் செயல்கள் இன்று மலிந்து கிடக்கின்றன; ஆகவே, “பற்றுமாறாமல் நடக்கிறவன் உலகத்தில் இல்லாமல் போய்விட்டான்” என்று மீகா தீர்க்கதரிசியைப் போலவே சொல்ல நாம் தூண்டப்படுகிறோம். (மீகா 7:2, அடிக்குறிப்பு) பற்றுமாறாமல் இருக்கும் விஷயத்தில் மனிதர் அடிக்கடி தவறிவிடுகிறார்கள். ஆனால் இந்த அற்புதமான குணம் யெகோவாவின் தனிச்சிறப்புமிக்க பண்பாகும். சொல்லப்போனால், உண்மைப் பற்றுறுதி எதை உட்படுத்துகிறது என்பதை சரிவர அறிந்துகொள்ள மிகச் சிறந்த வழி, யெகோவா தமது அன்பின் இந்த உன்னத அம்சத்தை எப்படி வெளிக்காட்டுகிறார் என்பதை ஆராய்வதே.
யெகோவாவின் ஒப்பற்ற உண்மைப் பற்றுறுதி
7, 8. யெகோவா ஒருவரே உண்மைப் பற்றுறுதிமிக்கவர் என எப்படி சொல்லலாம்?
7 “நீங்கள் ஒருவர்தான் பற்றுமாறாதவர்” என யெகோவாவைப் பற்றி பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 15:4, அடிக்குறிப்பு) எப்படி அவ்வாறு சொல்ல முடியும்? மனிதர்களும் தேவதூதர்களும் சிலசமயங்களில் உண்மைப் பற்றுறுதியை குறிப்பிடத்தக்க விதத்தில் காண்பித்திருக்கிறார்கள் அல்லவா? (யோபு 1:1; வெளிப்படுத்துதல் 4:8) இயேசு கிறிஸ்துவைப் பற்றியென்ன? கடவுளுக்கு “பற்றுமாறாமல்” இருந்தவர்களில் அவர் பிரதானமானவர் அல்லவா? (சங்கீதம் 16:10, அடிக்குறிப்பு) அப்படியானால், யெகோவா ஒருவரே பற்றுமாறாதவர் என எப்படி சொல்ல முடியும்?
8 முதலாவதாக, உண்மைப் பற்றுறுதி என்பது அன்பின் ஓர் அம்சம் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். ‘கடவுள் அன்பாகவே இருப்பதால்,’ அதாவது அன்பின் உருவாகவே இருப்பதால் அவரைவிட வேறு யார் உண்மைப் பற்றுறுதியை முழுமையாக வெளிக்காட்ட முடியும்? (1 யோவான் 4:8) உண்மையில், தேவதூதர்களும் மனிதர்களும் கடவுளுடைய பண்புகளைப் பிரதிபலிக்கலாம், ஆனால் யெகோவா ஒருவரே உண்மைப் பற்றுறுதி என்ற பண்பின் சிகரமாக விளங்குபவர். “யுகம் யுகமாக வாழ்கிறவர்” அவரே, பூமியிலும் பரலோகத்திலும் உள்ள வேறெந்த சிருஷ்டிகளைக் காட்டிலும் வெகு காலமாக மாறாத அன்பை காண்பித்து வந்திருக்கிறார். (தானியேல் 7:9) ஆகையால், யெகோவாவே உண்மைப் பற்றுறுதியின் உருவாக திகழ்கிறார். இந்தப் பண்பை அவர் வெளிக்காட்டும் அளவுக்கு வேறெந்த சிருஷ்டியாலும் வெளிக்காட்ட முடியாது. சில உதாரணங்களை கவனியுங்கள்.
9. எவ்வாறு யெகோவா “எப்போதும் பற்றுமாறாமல் நடந்துகொள்கிறார்”?
9 யெகோவா “எப்போதும் பற்றுமாறாமல் நடந்துகொள்கிறார்.” (சங்கீதம் 145:17, அடிக்குறிப்பு) எந்த விதத்தில்? 136-ம் சங்கீதம் பதிலளிக்கிறது. யெகோவாவின் எண்ணற்ற காக்கும் செயல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இஸ்ரவேலரை செங்கடலின் வழியாக அற்புதகரமாக மீட்டு வந்தது அதில் ஒன்று. இந்த சங்கீதத்தின் ஒவ்வொரு வசனமும் “அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர் [அல்லது, பற்றுமாறாமல் நடப்பவர்]” என்ற சொற்றொடரால் வலியுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 289-ம் பக்கத்தில், “தியானிக்க சில கேள்விகள்” என்ற பகுதியில் இந்த சங்கீதமும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வசனங்களை நீங்கள் வாசிக்கையில், யெகோவா தமது ஜனங்களிடம் மாறாத அன்பை காண்பித்த பல வழிகள் உங்களுடைய மனதை கொள்ளை கொள்ளும். ஆம், யெகோவா தமது உண்மை ஊழியர்களுடைய அபயக் குரலைக் கேட்பதன் மூலமும் ஏற்ற சமயத்தில் செயல்படுவதன் மூலமும் அவர்களிடம் உண்மைப் பற்றுறுதியை காண்பித்திருக்கிறார். (சங்கீதம் 34:6) யெகோவாவின் ஊழியர்கள் அவரிடம் உண்மைப் பற்றுறுதியுடன் இருக்கும்வரை அவர்களிடம் யெகோவா காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதி மாறவே மாறாது.
10. யெகோவா தமது தராதரங்கள் சம்பந்தமாக எவ்வாறு உண்மைப் பற்றுறுதியைக் காண்பிக்கிறார்?
10 அதோடு, யெகோவா தமது தராதரங்களுக்கு உண்மையுடன் இருப்பதன் மூலம் தமது ஊழியர்களிடம் உண்மைப் பற்றுறுதியை காண்பிக்கிறார். உணர்ச்சிவசப்பட்டு திடீர் திடீரென மனம் மாறுகிற சில மனிதர்களைப் போல் யெகோவா இல்லை. எது சரி எது தவறு என்பதைப் பற்றிய தம்முடைய நோக்குநிலையை அவர் மாற்றிக்கொண்டே இருப்பதில்லை. ஆவியுலக தொடர்பு, சிலை வணக்கம், கொலை போன்ற விஷயங்களில் அவருடைய நோக்குநிலை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மாறாமல் நிலைத்திருக்கிறது. “உங்களுக்கு வயதானாலும் உங்களைத் தூக்கிச் சுமப்பேன்” என தமது தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் வாயிலாக அவர் குறிப்பிட்டார். (ஏசாயா 46:4) ஆகவே, கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் ஒழுக்கநெறி சம்பந்தப்பட்ட தெளிவான அறிவுரையைப் பின்பற்றுவதன் மூலம் நாம் பயனடைவோம் என நம்பிக்கையோடிருக்கலாம்.—ஏசாயா 48:17-19.
11. யெகோவா வாக்குத் தவற மாட்டார் என்பதை காண்பிக்க சில உதாரணங்கள் தருக.
11 யெகோவா வாக்குத் தவறாமல் நடப்பதன் மூலமும் உண்மைப் பற்றுறுதியைக் காண்பிக்கிறார், அதாவது பற்றுமாறாமல் நடக்கிறார். அவர் ஒன்றை முன்னறிவிக்கும்போது, அது நிறைவேறுகிறது. ஆகவேதான், “என் வாயிலிருந்து வருகிற வார்த்தை . . . பலன் தராமல் என்னிடம் திரும்பி வராது. நான் விரும்புவதை நிச்சயம் நிறைவேற்றும். எதற்காக அதைச் சொன்னேனோ அதைக் கண்டிப்பாகச் செய்து முடிக்கும்” என்று அவர் குறிப்பிட்டார். (ஏசாயா 55:11) கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதன் மூலம் யெகோவா தமது மக்களுக்கு உண்மைப் பற்றுறுதியைக் காட்டுகிறார். தாம் செய்யப் போகாத காரியத்திற்காக அவர்களை ஆவலோடு காத்திருக்க வைப்பதில்லை. இந்த விஷயத்தில் யெகோவா அப்பழுக்கற்ற பதிவை ஏற்படுத்தியிருப்பதால் அவருடைய ஊழியனாகிய யோசுவா இவ்வாறு சொல்ல முடிந்தது: “இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதிகூட நிறைவேறாமல் போகவில்லை. அவை எல்லாமே நிறைவேறின.” (யோசுவா 21:45) அப்படியானால், அவர் ஒருகாலும் வாக்குத் தவறி நம்மை ஏமாற்றமடைய செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம்.—ஏசாயா 49:23; ரோமர் 5:5.
12, 13. என்ன வழிகளில் யெகோவா என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறார்?
12 ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, யெகோவா “என்றென்றும்” மாறாத அன்பைக் காட்டுகிறார் என பைபிள் நமக்கு சொல்கிறது. (சங்கீதம் 136:1) எப்படி? முதலாவதாக, யெகோவா பாவங்களை மன்னிப்பது நிரந்தரமானது என்ற கருத்தில் அது என்றுமுள்ளது. 26-ம் அதிகாரத்தில் சிந்திக்கப்பட்டபடி, மன்னிக்கப்பட்ட கடந்தகால தவறுகளை யெகோவா மீண்டும் கவனத்திற்கு கொண்டுவருவதில்லை. ‘எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைக் காட்டத் தவறியிருப்பதால்,’ யெகோவா என்றென்றும் மாறாத அன்பு காட்டுவதை குறித்து நாம் ஒவ்வொருவரும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.—ரோமர் 3:23.
13 ஆனால் மற்றொரு கருத்திலும் யெகோவா என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறார். நீதிமான் “வாய்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் போலவும், அந்தந்த பருவத்தில் கனி தருகிற பசுமையான மரம் போலவும் இருப்பான். அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்” என அவருடைய வார்த்தை சொல்கிறது. (சங்கீதம் 1:3) இலையே உதிராத செழிப்பான ஒரு மரத்தை கற்பனை செய்து பாருங்கள்! அது போலவே, கடவுளுடைய வார்த்தையில் நாம் உள்ளப்பூர்வமான ஆனந்தம் அடைந்தால், நம்முடைய வாழ்க்கை சமாதானம் நிறைந்ததாக, செழிப்பானதாக நீடித்திருக்கும். யெகோவா தமது உண்மையுள்ள ஊழியர்களுக்கு உண்மைப் பற்றுறுதியுடன் பொழியும் ஆசீர்வாதங்கள் என்றென்றுமுள்ளன. யெகோவா கொண்டுவரும் நீதியுள்ள புதிய உலகில் கீழ்ப்படிதலுள்ள மனிதகுலம் அவருடைய மாறாத அன்பை என்றென்றும் அனுபவிக்கும்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
யெகோவா “பற்றுமாறாமல் இருப்பவர்களைக் கைவிட மாட்டார்”
14. உண்மைப் பற்றுறுதிமிக்க தமது ஊழியர்களுக்கு யெகோவா எவ்வாறு போற்றுதல் காண்பிக்கிறார்?
14 யெகோவா தமது உண்மைப் பற்றுறுதியை மீண்டும் மீண்டும் வெளிக்காட்டியிருக்கிறார். யெகோவா துளியும் மாறுவதில்லை என்பதால், உண்மை ஊழியர்களிடம் அவர் காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதி ஒருபோதும் குறைவதில்லை. சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “நான் வாலிபனாக இருந்தேன், இப்போது முதியவனாகவும் ஆகிவிட்டேன். ஆனால், நீதிமானைக் கடவுள் கைவிட்டதையோ, அவனுடைய பிள்ளைகள் உணவுக்காகக் கையேந்துவதையோ இதுவரை நான் பார்த்ததில்லை. ஏனென்றால், யெகோவா நியாயத்தை நேசிக்கிறார். அவரிடம் பற்றுமாறாமல் இருப்பவர்களைக் கைவிட மாட்டார்.” (சங்கீதம் 37:25, 28, அடிக்குறிப்பு) படைப்பாளராக யெகோவா நம்முடைய வணக்கத்தைப் பெற தகுதியானவர். (வெளிப்படுத்துதல் 4:11) என்றாலும், அவர் உண்மைப் பற்றுறுதிமிக்கவராக இருப்பதால், நம்முடைய உண்மையுள்ள செயல்களை பொக்கிஷமாக கருதுகிறார்.—மல்கியா 3:16, 17.
15. இஸ்ரவேலருடன் யெகோவாவின் செயல் தொடர்புகள் எவ்வாறு அவருடைய உண்மைப் பற்றுறுதியை சிறப்பித்துக் காட்டுகின்றன என்பதை விளக்குக.
15 தம்முடைய ஜனங்கள் துன்பப்படும்போது மாறாத அன்பினால் யெகோவா மீண்டும் மீண்டும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார். சங்கீதக்காரன் நமக்கு இவ்வாறு சொல்கிறார்: “தனக்கு பற்றுமாறாமல் இருக்கிறவர்களின் உயிரை அவர் காக்கிறார். பொல்லாதவர்களின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.” (சங்கீதம் 97:10, அடிக்குறிப்பு) இஸ்ரவேல் தேசத்தாரை அவர் நடத்திய விதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். செங்கடலின் வழியாக அவர்களை அற்புதமாக காப்பாற்றினார். அப்போது இஸ்ரவேலர் யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள்; “உங்களுடைய ஜனங்களை விடுவித்தீர்கள். மாறாத அன்பினால் அவர்களை வழிநடத்தினீர்கள்” என்று பாடினார்கள். (யாத்திராகமம் 15:13) செங்கடல் வழியாக அவர்களை காப்பாற்றியது யெகோவாவின் பங்கில் உண்மைப் பற்றுறுதிமிக்க அன்பின் செயலாக இருந்தது. ஆகவே இஸ்ரவேலரிடம் மோசே இவ்வாறு கூறினார்: “மற்ற எல்லா ஜனங்களையும்விட நீங்கள் ஏராளமாக இருந்தீர்கள் என்பதற்காக யெகோவா உங்கள்மேல் பாசம் காட்டவோ உங்களைத் தேர்ந்தெடுக்கவோ இல்லை. சொல்லப்போனால், மற்ற எல்லா ஜனங்களையும்விட நீங்கள் கொஞ்சம் பேராகத்தான் இருந்தீர்கள். யெகோவா உங்களை நேசித்ததாலும் உங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்ற நினைத்ததாலும், எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுவித்தார். யெகோவா தன்னுடைய கைபலத்தால் உங்களை எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் பிடியிலிருந்து காப்பாற்றினார்.”—உபாகமம் 7:7, 8.
16, 17. (அ) இஸ்ரவேலர் எவ்வாறு அதிர்ச்சியூட்டும் விதத்தில் நன்றியில்லாதவர்களாக நடந்துகொண்டார்கள், ஆனாலும் அவர்களுக்கு எவ்வாறு யெகோவா இரக்கம் காண்பித்தார்? (ஆ) தாங்கள் “திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள்” என பெரும்பாலான இஸ்ரவேலர் எப்படி காட்டினர், இது நமக்கு எப்படி எச்சரிப்பூட்டும் உதாரணமாக இருக்கிறது?
16 ஆனால் ஒரு தேசமாக இஸ்ரவேலர் யெகோவாவின் மாறாத அன்புக்கு நன்றியைக் காட்ட தவறிவிட்டார்கள். ஏனென்றால் காப்பாற்றப்பட்ட பிறகும் “அவர்கள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்துகொண்டே இருந்தார்கள். . . . உன்னதமான கடவுளின் பேச்சை மீறிக்கொண்டே இருந்தார்கள்.” (சங்கீதம் 78:17) பின்வந்த நூற்றாண்டுகளில், அவர்கள் மீண்டும் மீண்டும் கலகம் செய்து, யெகோவாவை விட்டுவிட்டு பொய்க் கடவுட்களிடமும் புறமத பழக்க வழக்கங்களிடமும் திரும்பினார்கள்; அதனால் விளைந்ததெல்லாம் சீரழிவே. என்றாலும், யெகோவா தமது உடன்படிக்கையை மீறவில்லை. மாறாக, எரேமியா தீர்க்கதரிசியின் வாயிலாக தமது ஜனங்களிடம் யெகோவா இவ்வாறு மன்றாடினார்: “சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பி வா . . . நான் பற்றுமாறாமல் நடக்கிற கடவுள், அதனால் உன்மேல் கோபப்பட மாட்டேன்.” (எரேமியா 3:12) ஆனால் 25-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டபடி, பெரும்பாலான இஸ்ரவேலர் தங்களைத் திருத்திக்கொள்ள விரும்பவில்லை. சொல்லப்போனால், “உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள். அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள், அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.” விளைவு? அவர்கள் “திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.”—2 நாளாகமம் 36:15, 16.
17 இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? யெகோவாவின் உண்மைப் பற்றுறுதி குருட்டுத்தனமானதோ ஏமாறக்கூடியதோ அல்ல. யெகோவா “மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்” என்பதும், இரக்கம் காட்டுவதற்கு தகுந்த காரணம் இருக்கும்போது அதை காட்டுவதில் மகிழ்ச்சி காண்கிறார் என்பதும் உண்மைதான். ஆனால் தவறிழைத்தவர் திருத்தப்பட முடியாத அளவுக்கு பொல்லாதவராக ஆகும்போது கடவுள் எப்படி பிரதிபலிக்கிறார்? அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், யெகோவா தமது நீதியுள்ள தராதரங்களைப் பின்பற்றி கண்டனத் தீர்ப்பு வழங்குகிறார். மோசேக்கு சொல்லப்பட்டபடி, “குற்றவாளியை அவர் ஒருபோதும் தண்டிக்காமல் விடமாட்டார்.”—யாத்திராகமம் 34:6, 7.
18, 19. (அ) யெகோவா துன்மார்க்கரை தண்டிப்பது எவ்வாறு உண்மைப் பற்றுறுதிமிக்க செயல்? (ஆ) மரணம் வரை துன்புறுத்தப்பட்ட தமது ஊழியர்களுக்கு யெகோவா எவ்விதத்தில் தமது உண்மைப் பற்றுறுதியை காண்பிப்பார்?
18 துன்மார்க்கரை கடவுள் தண்டிப்பது உண்மைப் பற்றுறுதிமிக்க ஒரு செயல். எப்படி? வெளிப்படுத்துதல் புத்தகத்தில் ஏழு தூதர்களுக்கு யெகோவா விடுத்த கட்டளைகளில் ஓர் அறிகுறி காணப்படுகிறது; “நீங்கள் போய், கடவுளுடைய ஏழு கோபக் கிண்ணங்களிலும் இருப்பதைப் பூமியில் ஊற்றுங்கள்” என்று அவர் அந்தத் தூதர்களுக்கு கட்டளையிட்டார். மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை “ஆறுகளிலும், நீரூற்றுகளிலும்” ஊற்றினார், உடனே அவை இரத்தமாயிற்று. அப்பொழுது அந்த தூதன், “இருக்கிறவரே, இருந்தவரே, பற்றுமாறாதவரே, நீங்கள் நீதியுள்ளவராக இருப்பதால் இந்தத் தீர்ப்புகளைக் கொடுத்திருக்கிறீர்கள். பரிசுத்தவான்களின் இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளின் இரத்தத்தையும் சிந்தியவர்களுக்கு நீங்கள் இரத்தத்தைக் குடிக்கக் கொடுத்திருக்கிறீர்கள். அது அவர்களுக்குத் தகுந்ததுதான்” என்று யெகோவாவிடம் சொன்னார்.—வெளிப்படுத்துதல் 16:1-6, அடிக்குறிப்பு.
19 நியாயத்தீர்ப்பின் செய்தியை அந்த தூதன் அறிவிக்கையில், யெகோவாவை ‘பற்றுமாறாதவர்’ என குறிப்பிடுவதை கவனியுங்கள். ஏன்? ஏனென்றால் துன்மார்க்கரை அழிப்பதன் மூலம் யெகோவா தமது ஊழியர்களிடம் உண்மைப் பற்றுறுதியைக் காண்பிக்கிறார், அவர்களில் அநேகர் மரணம் வரை துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். யெகோவா உண்மைப் பற்றுறுதியுள்ளவராக இருப்பதால், அல்லது பற்றுமாறாமல் இருப்பதால், இப்படிப்பட்டவர்களை தமது ஞாபகத்தில் உயிருள்ளவர்களாக வைத்திருக்கிறார். உண்மையுள்ள இந்த ஊழியர்களை மீண்டும் பார்ப்பதற்கு அவர் ஏங்குகிறார், உயிர்த்தெழுப்புவதன் மூலம் அவர்களுக்கு வெகுமதி அளிப்பதே அவருடைய நோக்கம் என்பதை பைபிள் உறுதிப்படுத்துகிறது. (யோபு 14:14, 15) அவர்கள் உயிருடன் இல்லை என்பதற்காக அவர்களை யெகோவா மறந்துவிடுவதில்லை. மாறாக, “கடவுளைப் பொறுத்தவரை, இவர்கள் எல்லாரும் உயிருள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.” (லூக்கா 20:37, 38) யெகோவா தமது ஞாபகத்தில் இருப்பவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க நோக்கமுள்ளவராக இருப்பது, அவருடைய உண்மைப் பற்றுறுதிக்கு வலிமைமிக்க சான்றாகும்.
மரணம் வரை உண்மைப் பற்றுறுதியோடு இருந்தவர்களை யெகோவா உண்மைப் பற்றுறுதியுடன் நினைவுகூர்ந்து அவர்களை உயிர்த்தெழுப்புவார்
பெர்னார்ட் லூயிம்ஸ் (இடது), உல்ஃப்கேங் குஸ்ரோவ் (நடுவில்) ஆகியோர் நாஸிக்களால் கொலை செய்யப்பட்டார்கள்
மோசஸ் நியமுசுவாவை (வலது), ஓர் அரசியல் கும்பல் ஈட்டியால் குத்திக் கொன்றது
யெகோவாவின் உண்மைப் பற்றுறுதிமிக்க அன்பு மீட்புக்கு வழி திறக்கிறது
20. “இரக்கத்துக்குரிய பாத்திரங்கள்” யார், எவ்வாறு அவர்களுக்கு யெகோவா உண்மைப் பற்றுறுதியைக் காட்டுகிறார்?
20 சரித்திரம் முழுவதிலும், உண்மையுள்ளவர்களிடம் யெகோவா தமது உண்மைப் பற்றுறுதியை குறிப்பிடத்தக்க விதத்தில் காண்பித்திருக்கிறார். சொல்லப்போனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, “கடும் கோபத்துக்கும் அழிவுக்கும் உரிய பாத்திரங்களைப் பொறுமையோடு சகித்துக்கொண்டார்.” ஏன்? “மகிமை பெறும்படி தான் உண்டாக்கியிருந்த இரக்கத்துக்குரிய பாத்திரங்கள்மீது தன்னுடைய அளவில்லாத மகிமையைக் காட்டுவதற்காக.” (ரோமர் 9:22, 23) இந்த “இரக்கத்துக்குரிய பாத்திரங்கள்” நல் இதயம் படைத்தவர்கள், கிறிஸ்துவின் அரசாங்கத்தில் அவரோடு உடன் சுதந்தரவாளிகளாக இருப்பதற்கு பரலோக நம்பிக்கையைப் பெற்றவர்கள். (மத்தேயு 19:28) இந்த இரக்கத்துக்குரிய பாத்திரங்களுக்காக மீட்பின் வழியை திறப்பதன் மூலம், ஆபிரகாமிடம் யெகோவா உண்மைப் பற்றுறுதிமிக்கவராக இருந்தார்; ஏனெனில் அவரிடமே இந்த ஒப்பந்தத்துக்குரிய வாக்குறுதியைக் கொடுத்திருந்தார்: “நீ என் பேச்சைக் கேட்டதால், உன்னுடைய சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.”—ஆதியாகமம் 22:18.
யெகோவாவின் உண்மைப் பற்றுறுதியால் அவருடைய உண்மை ஊழியர்கள் அனைவருக்கும் உறுதியான எதிர்கால நம்பிக்கை உள்ளது
21. (அ) ‘மிகுந்த உபத்திரவத்தில்’ தப்பிக்கும் எதிர்பார்ப்புடைய ‘திரள் கூட்டமான மக்களிடம்’ யெகோவா எவ்வாறு உண்மைப் பற்றுறுதியைக் காண்பிக்கிறார்? (ஆ) யெகோவாவின் உண்மைப் பற்றுறுதி என்ன செய்வதற்கு உங்களைத் தூண்டுகிறது?
21 இதுபோன்ற உண்மைப் பற்றுறுதியை ‘திரள் கூட்டமான மக்களிடம்’ யெகோவா காட்டுகிறார், ‘மிகுந்த உபத்திரவத்தில்’ தப்பித்து, பூஞ்சோலை பூமியில் என்றும் வாழும் நம்பிக்கை இவர்களுக்கு இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14) தமது ஊழியர்கள் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும், பூஞ்சோலை பூமியில் என்றும் வாழும் வாய்ப்பை யெகோவா அவர்களுக்கு உண்மைப் பற்றுறுதியுடன் அளிக்கிறார். இதை அவர் எவ்வாறு செய்கிறார்? மீட்புப் பலியின் மூலமே; யெகோவாவின் உண்மைப் பற்றுறுதியின் மாபெரும் வெளிக்காட்டு இதுவே. (யோவான் 3:16; ரோமர் 5:8) யெகோவாவின் உண்மைப் பற்றுறுதி நீதிக்காக பசிதாகமுள்ளோரின் இதயங்களை கவருகிறது. (எரேமியா 31:3) யெகோவா காண்பித்திருக்கிற, இன்னும் காண்பிக்கப் போகிற ஆழ்ந்த உண்மைப் பற்றுறுதி அவரிடம் உங்களை சுண்டி இழுக்கிறது அல்லவா? கடவுளிடம் நெருங்கி வருவது நம்முடைய ஆசையாக இருப்பதால், அவருக்கு உண்மைப் பற்றுறுதியுடன், அதாவது பற்றுமாறாமல், சேவை செய்வதற்கான நம்முடைய தீர்மானத்தைப் பலப்படுத்துவதன் மூலம் அவருடைய அன்புக்குப் பிரதிபலிப்போமாக.