உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • jy அதி. 132 பக். 300-பக். 301 பாரா. 3
  • “நிச்சயமாகவே இந்த மனுஷர் கடவுளுடைய மகன்தான்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நிச்சயமாகவே இந்த மனுஷர் கடவுளுடைய மகன்தான்”
  • இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • இதே தகவல்
  • “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்”
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • மனிதவாழ்வில் இயேசுவின் இறுதிநாள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • வேதனையின் வாளை வெற்றிகரமாகச் சமாளித்தார்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • சித்திரவதைக் கம்பம்
    சொல் பட்டியல்
மேலும் பார்க்க
இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
jy அதி. 132 பக். 300-பக். 301 பாரா. 3
இரண்டு குற்றவாளிகளுக்குப் பக்கத்தில் மரக் கம்பத்தில் அறையப்பட்ட இயேசு இறந்தபோது, “நிச்சயமாகவே இந்த மனுஷர் கடவுளுடைய மகன்தான்” என்று ஒரு படை அதிகாரி சொல்கிறார்

அதிகாரம் 132

“நிச்சயமாகவே இந்த மனுஷர் கடவுளுடைய மகன்தான்”

மத்தேயு 27:45-56 மாற்கு 15:33-41 லூக்கா 23:44-49 யோவான் 19:25-30

  • மரக் கம்பத்தில் இயேசு இறந்துபோகிறார்

  • இயேசு சாகும்போது அசாதாரணமான சம்பவங்கள் நடக்கின்றன

இப்போது ‘ஆறாம் மணிநேரம்,’ அதாவது மத்தியானம் 12 மணி. திடீரென்று, “பூமி முழுவதும்” அசாதாரணமான இருள் சூழ்கிறது. “ஒன்பதாம் மணிநேரம்வரை,” அதாவது, மத்தியானம் மூன்று மணிவரை இந்த இருள் தொடர்கிறது. (மாற்கு 15:33) அசாதாரணமான இந்த இருள், சூரிய கிரகணத்தால் ஏற்படவில்லை. ஏனென்றால், அமாவாசை நேரத்தில்தான் சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால், இது முழு நிலா வருகிற பஸ்கா சமயம். அதுமட்டுமல்ல, சூரிய கிரகணம் ஒரு சில நிமிஷங்கள்தான் இருக்கும். ஆனால், இந்த இருள் ரொம்ப நேரத்துக்கு நீடிக்கிறது. இதிலிருந்து, கடவுள்தான் இந்த இருளுக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இயேசுவைக் கேலி செய்தவர்களுக்கு இந்தத் திடீர் இருளைப் பார்த்தபோது எப்படி இருந்திருக்கும்! இந்த நேரத்தில், இயேசுவின் அம்மா, சலோமே, மகதலேனா மரியாள், அப்போஸ்தலனான சின்ன யாக்கோபின் அம்மாவான மரியாள் ஆகியோர் சித்திரவதைக் கம்பத்துக்குப் பக்கத்தில் வருகிறார்கள்.

இயேசுவின் அம்மா “சித்திரவதைக் கம்பத்துக்கு பக்கத்தில்” துக்கத்தோடு நின்றுகொண்டிருக்கிறாள். அப்போஸ்தலன் யோவான் அவளோடு நிற்கிறார். தான் பாலூட்டி, சீராட்டி வளர்த்த மகன், மரண வேதனையோடு மரக் கம்பத்தில் தொங்குவதை மரியாள் பார்க்கிறாள். “நீண்ட வாள்” ஒன்று தன்னை ஊடுருவிப்போவது போல அவளுக்கு இருக்கிறது. (யோவான் 19:25; லூக்கா 2:35) வலியில் துடித்துக்கொண்டிருந்தாலும், தன் அம்மாவின் நலனைப் பற்றி இயேசு யோசிக்கிறார். அவர் ரொம்பச் சிரமத்தோடு யோவானின் பக்கமாகத் தலையசைத்து, தன் அம்மாவிடம், “பெண்மணியே, இதோ! உங்கள் மகன்!” என்று சொல்கிறார். பிறகு, மரியாளின் பக்கமாகத் தலையசைத்து, யோவானிடம், “இதோ! உன் அம்மா!” என்று சொல்கிறார்.—யோவான் 19:26, 27.

இயேசுவின் அம்மா இப்போது ஒரு விதவையாக இருக்கலாம். அதனால், தன் அம்மாவைக் கவனித்துக்கொள்கிற பொறுப்பைத் தன் அன்புக்குரிய அப்போஸ்தலரான யோவானிடம் இயேசு ஒப்படைக்கிறார். இயேசுவின் சகோதரர்கள், அதாவது மரியாளின் மற்ற ஆண் பிள்ளைகள், இன்னமும் இயேசுமேல் விசுவாசம் வைக்கவில்லை. அதனால், தன்னுடைய அம்மாவை உடல் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் கவனித்துக்கொள்ள இயேசு ஏற்பாடு செய்கிறார். நாம் பின்பற்றுவதற்கு எவ்வளவு அருமையான முன்மாதிரி!

இருள் முடியப்போகிற நேரத்தில், “எனக்குத் தாகமாக இருக்கிறது” என்று இயேசு சொல்கிறார். இப்படிச் சொல்லி அவர் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார். (யோவான் 19:28; சங்கீதம் 22:15) தன்னுடைய உத்தமத்தை முழுவதுமாகச் சோதிப்பதற்காக, பரலோகத் தகப்பன் தனக்கு இதுவரை கொடுத்துவந்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டது போல இயேசு உணருகிறார். அதனால், “ஏலி, ஏலி, லாமா சபக்தானி?” என்று சத்தமாகச் சொல்கிறார்; இது ஒருவேளை கலிலேயாவில் பேசப்பட்ட அரமேயிக் மொழியாக இருந்திருக்கலாம். “என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?” என்பதுதான் இதன் அர்த்தம். பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிற சிலர் அவர் சொல்வதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், “இதோ! இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்று சொல்கிறார்கள். அப்போது ஒருவன் ஓடிப்போய், புளிப்பான திராட்சமதுவில் ஒரு கடற்பஞ்சை நனைத்து, அதை ஒரு கோலில் மாட்டி, குடிப்பதற்காக இயேசுவிடம் நீட்டுகிறான். ஆனால் மற்றவர்கள், “பொறுங்கள்! எலியா இவனைக் கீழே இறக்கிவிட வருகிறாரா பார்ப்போம்” என்று சொல்கிறார்கள்.—மாற்கு 15:34-36.

பிறகு இயேசு, “முடித்துவிட்டேன்!” என்று சத்தமாகச் சொல்கிறார். (யோவான் 19:30) அவருடைய அப்பா எதற்காக இந்தப் பூமிக்கு அவரை அனுப்பினாரோ அந்த வேலைகள் எல்லாவற்றையும் இயேசு முடித்துவிட்டார். கடைசியாக, “தகப்பனே, என் உயிரை உங்களுடைய கைகளில் ஒப்படைக்கிறேன்” என்று சொல்கிறார். (லூக்கா 23:46) யெகோவா மறுபடியும் தன்னை உயிரோடு எழுப்புவார் என்ற நம்பிக்கையோடு, தன் உயிரை அவர் கையில் ஒப்படைக்கிறார். கடவுள்மீது அசைக்க முடியாத நம்பிக்கையோடு, கிறிஸ்து தலைசாய்த்து இறந்துபோகிறார்.

உடனே, பயங்கர நிலநடுக்கம் ஏற்படுகிறது, பாறைகள் பிளக்கின்றன. அந்த நிலநடுக்கத்தில் எருசலேமுக்கு வெளியே இருந்த கல்லறைகள் திறந்துகொண்டு, சடலங்கள் வெளியே வீசப்படுகின்றன. சடலங்கள் வெளியே வந்து விழுந்து கிடப்பதைப் பார்க்கிற ஆட்கள், “பரிசுத்த நகரத்துக்குள்” போய் இந்த விஷயத்தைச் சொல்கிறார்கள்.—மத்தேயு 12:11; 27:51-53.

இயேசு இறந்தபோது, கடவுளுடைய ஆலயத்தில் இருக்கிற பரிசுத்த அறையையும் மகா பரிசுத்த அறையையும் பிரிக்கிற கனமான பெரிய திரைச்சீலை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிகிறது. அதிர வைக்கும் இந்தச் சம்பவம், தன் மகனைக் கொன்றவர்கள்மீது கடவுள் பயங்கர கோபமாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அதோடு, மகா பரிசுத்த அறையான பரலோகத்தில் நுழைய இப்போது வழி திறந்துவிட்டது என்பதையும் இந்தச் சம்பவம் காட்டுகிறது.—எபிரெயர் 9:2, 3; 10:19, 20.

நடக்கிற சம்பவங்களைப் பார்த்து மக்கள் ரொம்பப் பயந்துபோகிறார்கள். இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக வந்த படை அதிகாரி, “நிச்சயமாகவே இந்த மனுஷர் கடவுளுடைய மகன்தான்” என்று சொல்கிறார். (மாற்கு 15:39) அவர் கடவுளுடைய மகனா, இல்லையா என்பதைப் பற்றி பிலாத்து அவரிடம் விசாரணை செய்த சமயத்தில், இந்தப் படை அதிகாரி அங்கே இருந்திருக்கலாம். இப்போது, இயேசு ஒரு நீதிமான் என்பதையும் அவர் கடவுளுடைய மகன் என்பதையும் அவர் நம்புகிறார்.

இந்த அசாதாரணமான சம்பவங்களைப் பார்த்து அங்கிருக்கிற மக்கள் அதிர்ச்சியடைகிறார்கள். வெட்கத்தோடும் வேதனையோடும் தங்கள் “நெஞ்சில் அடித்துக்கொண்டு” வீடுகளுக்குத் திரும்பிப் போகிறார்கள். (லூக்கா 23:48) இயேசுவுடன் சில சமயம் பயணம் செய்த சிஷ்யைகளும் தூரத்தில் நின்று இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அற்புதமான சம்பவங்களைப் பார்த்து அவர்களும் மலைத்துப்போகிறார்கள்.

‘மரக் கம்பம்’

இவனை “மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று இயேசுவின் எதிரிகள் கூச்சல்போட்டார்கள். (யோவான் 19:15) ஸ்டவ்ரஸ் என்ற கிரேக்க வார்த்தைதான் சுவிசேஷங்களில் ‘மரக் கம்பம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி ஹிஸ்டரி ஆஃப் த க்ராஸ் என்ற ஆங்கில புத்தகம் இப்படிச் சொல்கிறது: “ஸ்டவ்ரஸ் என்றால் ‘செங்குத்தான கம்பம்’ என்று அர்த்தம். இது உறுதியான கம்பத்தைக் குறிக்கிறது. உதாரணமாக, விவசாயிகள் வேலி போடுவதற்காக தங்கள் நிலத்தில் நட்டு வைக்கிற கம்பங்களைக் குறிக்கிறது. வேறு எதையும் குறிப்பதில்லை.”

  • மூன்று மணிநேர இருள், சூரிய கிரகணத்தால் ஏற்படவில்லை என்று ஏன் சொல்கிறோம்?

  • வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்ளும் விஷயத்தில் இயேசு எப்படி நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்?

  • நிலநடுக்கத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன, ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது எதைச் சுட்டிக்காட்டுகிறது?

  • இயேசு இறந்ததையும் அப்போது நடந்த சம்பவங்களையும் பார்த்தவர்கள் எப்படி உணருகிறார்கள்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்