மணிக்கற்கள் யோவான் சுவிசேஷத்திலிருந்து
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய ஓர் உருக்கமான பதிவை எழுதும்படியாக யெகோவாவின் ஆவி வயதுசென்ற யோவானை ஏவியது. இந்தச் சுவிசேஷம் எபேசுவில் அல்லது எபேசுக்கு அண்மையில் ஏறக்குறைய பொ.ச. 98-ல் எழுதப்பட்டது. ஆனால் இந்தப் பதிவு எத்தகைய தன்மை வாய்ந்தது? அதிலிருக்கும் சில மணிக்கற்கள் யாவை?
பெரும்பாலும் நிறைவு செய்யும் பதிவு
யோவான் தகவல்களைத் தெரிந்தளிப்பவனாக இருந்தான். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியவர்கள் குறிப்பிட்டிருந்ததை திரும்பிக் கூறுகிறவனாக இருந்ததோ அரிது. ஆம், அவன் பார்த்த காரியங்களைப் பதிவு செய்திருப்பது பெரும்பாலும் நிறைவு செய்யும் பதிவாக இருக்கிறது, ஏனென்றால் அதில் 90 சதவீதத்துக்கும் அதிகமான தகவல்கள் மற்ற சுவிசேஷங்களில் குறிப்பிடப்பட்டில்லை. உதாரணமாக, அவன் மட்டுமே இயேசு பூமியில் மனிதனாக வாழ்ந்ததற்கு முன்னான வாழ்க்கை குறித்தும் “அந்த வார்த்தை மாம்சமானது” என்றும் கூறுகிறான். (1:1-14) இயேசு ஆலயத்தைச் சுத்திகரித்தது ஊழியத்தின் முடிவிலே என்று மற்ற சுவிசேஷ எழுத்தாளர்கள் கூறிட, கிறிஸ்து தம்முடைய ஊழியத்தின் ஆரம்பத்திலும் அப்படிச் செய்தார் என்று யோவான் கூறுகிறான். (2:13-17) அப்போஸ்தலனாகிய யோவான் மட்டுமே இயேசு செய்த சில அற்புதங்களைக் குறிப்பிடுகிறான், உதாரணமாக தண்ணீரைத் திராட்ச ரசமாக மாற்றியது, மரித்த லாசருவை உயிர்த்தெழுப்பியது, அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு நடந்த அற்புதமான மீன்பிடிப்பு போன்றவை.—2:1-11; 11:38-44; 21:4-14.
தம்முடைய மரண ஞாபகார்த்த ஆசரிப்பை இயேசு எப்படி ஏற்படுத்தினார் என்று எல்லாச் சுவிசேஷ எழுத்தாளர்களும் குறிப்பிடுகிறார்கள், ஆனால் அந்த இரவன்று தம்முடைய அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவினதன் மூலம் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தார் என்று யோவான் மட்டுமே குறிப்பிடுகிறான். மேலும் அந்தச் சமயத்தில் இயேசு மனம்விட்டு பேசிய காரியங்களையும் அவர்களுடைய சார்பில் ஏறெடுத்த ஜெபத்தையும் யோவான் மட்டுமே பதிவு செய்கிறான்.—13:1–17:26.
இந்தச் சுவிசேஷத்தில் யோவான் என்ற பெயர் முழுக்காட்டுபவனாகிய யோவானைக் குறிப்பிடுகிறது, எழுத்தாளனோ தன்னை ‘இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த சீஷன்’ என்று அழைக்கிறான். (13:23) இந்த அப்போஸ்தலன் நிச்சயமாகவே இயேசுவிடம் அன்பாயிருந்தான். யோவான் அவரை வார்த்தை, ஜீவ அப்பம், உலகத்தின் வெளிச்சம், நல்ல மேய்ப்பன், வழி, சத்தியம், ஜீவன் என்று விவரிப்பதுதானே கிறிஸ்துவின்பேரில் நம்முடைய அன்பைக் கூட்டுகிறது. (1:1-3, 14; 6:35; 8:12; 10:11; 14:6) யோவான் குறிப்பிட்ட நோக்கத்தை இது நிறைவேற்றுகிறது: “இயேசு தேவனுடைய குமாரன் என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.”—20:31.
மனத்தாழ்மையும் மனமகிழ்ச்சியும்
யோவானின் சுவிசேஷம் இயேசுவை வார்த்தையாகவும் பாவத்தைத் தீர்க்கும் தேவாட்டுக்குட்டியாகவும் அறிமுகப்படுத்துவதுடன் அவரை “கடவுளின் பரிசுத்தர்” என்று நிரூபிக்கும் அற்புதங்களையும் எடுத்துரைக்கிறான். (1:1–9:41, தி.மொ.) மற்ற காரியங்களோடுகூட இந்த விவரப்பதிவு முழுக்காட்டுபவனாகிய யோவானின் மனத்தாழ்மையையும் மனமகிழ்ச்சியையும் சிறப்பித்துக் காட்டுகிறது. அவன் கிறிஸ்துவின் முன்னோடியாயிருந்தாலும் அவன் சொன்னான்: “அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல.” (1:27) பாதரட்சைகள் தோல் வாரினால் கட்டப்பட்டன. ஓர் அடிமை மற்றொருவனின் பாதரட்சைகளின் வாரை அவிழ்த்து அவற்றை அவனுக்காக தூக்கிச் செல்லக்கூடும், இது ஒரு தாழ்வான வேலையாக அல்லது கடமையாக இருந்தது. முழுக்காட்டுபவனாகிய யோவான் இப்படியாக மனத்தாழ்மையையும், தன்னுடைய எஜமானுக்கு முன்னால் தான் ஒன்றுமில்லாதவன் என்ற உணர்வையும் வெளிப்படுத்தினான். ஓர் அருமையான பாடம், ஏனென்றால் மனத்தாழ்மையுள்ளவர்கள் மட்டுமே யெகோவாவுக்குக்கும் அவருடைய மேசியானிய அரசருக்கும் சேவை செய்யத் தகுதியுள்ளவர்கள்!—சங்கீதம் 138:6; நீதிமொழிகள் 21:4.
பெருமையுடன் இயேசுவினிடம் வன்மம் கொண்டிருப்பதற்கு மாறாக, முழுக்காட்டுபவனாகிய யோவான் சொன்னான்: “மணவாளனுடைய தோழனோ அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான். இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.” (3:29) மணவாளனின் பிரதிநிதியாக, மணவாளனுடைய தோழன் விவாக சம்பந்தமான ஒப்பந்தப் பேச்சுகளை நடத்தினான், சில சமயங்களில் திருமணத்துக்கு உடன்படச் செய்தல், மணவாளனுக்கு வெகுமதிகளைக் கொண்டு செல்லுதல் மற்றும் அவளுடைய தகப்பனிடம் மணவாட்டிக்குரிய தொகையைக் கொண்டு சேர்ப்பதில் பங்குடையவனாயிருந்தான். இந்த உதவியாளர் தன்னுடைய பொறுப்பை நிறைவேற்றியதில் மகிழ்ந்திட தகுந்த காரணத்தைக் கொண்டிருக்கிறான். அதுபோல இயேசுவை அவருடைய மணவாட்டியின் முதல் உறுப்பினருடன் சந்திக்கச் செய்வதில் யோவான் களிகூர்ந்தான். (வெளிப்படுத்துதல் 21:2, 9) மணவாளனுடைய தோழனின் சேவைகள் ஒரு குறுகிய காலத்துக்கு மட்டுமே உரியதாயிருப்பதுபோல, யோவானின் வேலையும் விரைவில் முடிந்தது. இயேசு பெருகிக் கொண்டிருக்க, தான் குறைந்தது கொண்டிருந்தான்.—யோவான் 3:30.
இயேசு மக்களை மதிக்கிறார்
சீகார் என்னப்பட்ட நகரத்துக்கு அண்மையிலிருந்து ஒரு கிணற்றருகே இயேசு ஒரு சமாரிய பெண்ணிடம் நித்திய ஜீவனளிக்கும் அடையாளப்பூர்வமான தண்ணீரைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய சீஷர்கள் அங்கே வந்தபோது “அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப் பற்றி ஆச்சரியப்பட்டார்கள்.” (4:27) ஏன் அப்படிப்பட்ட ஒரு பிரதிபலிப்பு? யூதர்கள் சமாரியரை வெறுத்தார்கள். இவர்களுக்கு அவர்களோடு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. (4:9; 8:48) ஒரு யூத மத போதகன் பொது இடத்தில் ஒரு பெண்ணோடு பேசுவது அசாதரணமான செயல். ஆனால் இயேசு மக்களை தயவுள்ள விதத்தில் மதித்தார், இது சாட்சி கொடுக்கும்படியாக அவரைத் தூண்டியது. இதனால் அந்நகரத்து மக்கள் “அவரிடத்தில் வந்தார்கள்.”—4:28-30.
மக்களை மதித்ததுதானே இயேசுவைப் பின்வருமாறு சொல்லத் தூண்டியது: “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.” (7:37) தெளிவாகவே எட்டுநாள் கூடாரப் பண்டிகையுடன் சம்பந்தப்பட்ட ஒரு பழக்கத்தைக் குறிப்பிடுகிறவராயிருந்தார். ஏழு நாட்களுக்கு ஒவ்வொரு நாள் காலையும் ஆசாரியன் ஸீலோவாம் குளத்திலிருந்து தண்ணீர்மொண்டு ஆலய பீடத்தில் ஊற்றுவான். மற்ற காரியங்களுள் இது ஆவியை ஊற்றும் காரியத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாகச் சொல்லப்பட்டது. பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே ஆரம்பத்தில் கடவுளுடைய ஆவி இயேசுவின் சீஷர்களை உந்துவித்து ஜீவத் தண்ணீரை பூமி முழுவதுமுள்ள மக்களுக்குக் கொண்டுசெல்லச் செய்தது. ஒருவர் நித்திய ஜீவனை கிறிஸ்துவின் மூலமாக “ஜீவத் தண்ணீர் ஊற்றாகிய” யெகோவாவிடமிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.—எரேமியா 2:13; ஏசாயா 12:3; யோவான் 17:3.
நல்ல மேய்ப்பன் அக்கறையாயிருக்கிறார்!
இயேசு மக்களை எந்தளவுக்கு மதிக்கிறார் என்பது தம்மைப் பின்பற்றிய செம்மறியாடு போன்ற மக்கள்பேரில் அக்கறையாயிருக்கும் நல்ல மேய்ப்பராகத் தாம் வகிக்கும் பாகத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. தம்முடைய மரணம் நெருங்கிட, இயேசு தம்முடைய சீஷர்களுக்கு அன்புள்ள ஆலோசனை கொடுத்தது மட்டுமின்றி அவர்களுக்காகவும் ஜெபித்தார். (10:1–17:26) ஒரு கள்வனைப்போல், அல்லது கொள்ளைக்காரனைப் போலில்லாமல், அவர் ஓர் ஆட்டுத் தொழுவத்துக்குள் வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறார். (10:1-5) ஆட்டுத் தொழுவம் என்பது இரவுநேரங்களில் ஆடுகளைக் கள்வர்களிடமிருந்தும் கொடிய விலங்குகளிடமிருந்தும் பாதுகாப்பதற்காக ஓர் அடைப்பாக இருந்தது. அதற்கு கற்சுவர்கள் இருந்தன. அநேகமாய்ச் சுவர்களின் மேற்பகுதியில் முட்கிளைகள் வைக்கப்பட்டிருந்தன. மற்றும் வாசலைக் காக்கிற ஒருவனுடைய கவனிப்பின் கீழிருந்த ஒரு வாசலும் இருந்தன.
அநேக மேய்ப்பர்களின் ஆட்டு மந்தைகள் ஒரே ஆட்டுத்தொழுவத்தில் வைக்கப்பட்டிருக்கக்கூடும், ஆனால் அந்த ஆடுகளோ தங்களுடைய மேய்ப்பனின் சத்தத்துக்குத்தான் செவிகொடுத்தன. பைபிள் தேசங்களின் நடத்தைப் பாணியும் பழக்கவழக்கங்களும் என்ற தன்னுடைய நூலில் ஃப்ரட் H. உவைட் கூறுகிறார்: “அநேக ஆட்டு மந்தைகளைப் பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகையில், ஆட்டுமேய்ப்பர்கள் ஒருவருக்குப் பின் ஒருவராக எழுந்துநின்று, ‘டாஹு! டாஹு!’ என்றோ அல்லது தன் விருப்பப்படியான ஓர் அழைப்பொலி விடுப்பார்கள். அந்த ஆடுகள் தங்கள் தலைகளை உயர்த்தி, முந்திகொண்டு செல்லும் வகையில் ஒரு சிறிய குழப்பநிலை காணப்படுகிறவண்ணம் அவை ஒவ்வொன்றும் தங்களுடைய சொந்த மேய்ப்பர்கள் பின் செல்லுகின்றன. அவை தங்களுடைய சொந்த மேய்ப்பர்களின் குரல் தொனியை நன்கு அறிந்திருக்கின்றன. அந்நியர் அதே குரலைக் கொடுத்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆடுகள் தங்களைப் பின்பற்றும்படியாகத் தாங்கள் எடுக்கும் முயற்சி எல்லாச் சமயத்திலும் தோல்வியைத்தான் சந்தித்தன.” அக்கறைத்தூண்டும் விதத்தில் இயேசு பின்வருமாறு சொன்னார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்கிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்.” (10:27, 28) அந்தச் “சிறு மந்தை”யும் “வேறே ஆடு”களும் இயேசுவின் குரலுக்குச் செவிகொடுக்கின்றனர், அவருடைய வழிநடத்தலைப் பின்பற்றுகின்றனர், அவருடைய மென்மையான கவனிப்பை அனுபவித்து மகிழ்கின்றனர்.—லூக்கா 12:32; யோவான் 10:16.
என்றும் உண்மையுள்ள கடவுளுடைய குமாரன்
கிறிஸ்து கடவுளுக்கு என்றும் உண்மையுள்ளவரும் தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கை முழுவதுமே ஓர் அன்புள்ள மேய்ப்பராகச் சிறந்த முன்மாதிரியாகவும் இருந்தார். அவருடைய இரக்கம் தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின் காட்சிகொடுத்த சமயங்களிலும் வெளிப்பட்டன. மற்றவர்கள் பேரில் அவர் கொண்டிருந்த இரக்க குணம்தானே தம்முடைய ஆடுகளை மேய்க்கும்படி பேதுருவைத் துரிதப்படுத்த அவரைத் தூண்டியது.—18:1–21:25.
கழுமரத்தில் அறையப்பட்டவராக மரணபரியந்தம் நாம் உண்மையாயிருப்பதற்குப் பிரதான முன்மாதிரியை வைத்துப்போனார். தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக அவர் சந்தித்த ஓர் அவமானச் செயல், அந்தப் போர்ச் சேவகர் ‘அவருடைய வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டுக்’ கொண்டது. (சங்கீதம் 22:18) தையலில்லாமல் முழுவதும் நெய்யப்பட்டிருந்த அவருடைய அருமையான உள்ளங்கி (கிரேக்கு: கிட்டான்) தங்களில் யாருக்குக் கிடைக்கும் என்பதற்குச் சீட்டுப்போட்டார்கள். (19:23, 24) அப்படிப்பட்ட ஓர் அங்கி கம்பளியிழை அல்லது நாரிழையால் ஒரே அங்கியாக நெய்யப்பட்டதாக வெள்ளை அல்லது மற்ற பல நிறங்களில் இருந்திருக்கலாம். பெரும்பாலும் கையில்லாததும் உடலில் உள்ளங்கியாக அணியப்பட்டதும் முழுங்கால் அல்லது கணுக்கால் நீளமாக இருந்தன. ஆம், இயேசு பொருளாசைக் கொண்டவர் அல்ல, ஆனால் அவர் அப்படிப்பட்ட நல்ல தரமான ஆடையை, தையலில்லாமல் முழுதும் நெய்யப்பட்ட அங்கியை அணிந்திருந்தார்.
தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் தாம் அளித்த காட்சிகள் ஒன்றில், “உங்களுக்குச் சமாதானம்,” என்று கூறி தம்முடைய சீஷர்களை வாழ்த்தினார். (20:19) யூதர்கள் மத்தியில் இது பொதுவாகக் கையாளப்பட்ட ஒரு வாழ்த்தும் முறை. (மத்தேயு 10:12, 13) இப்படிப்பட்ட வார்த்தைகள் பலருக்கு அர்த்தமற்றதாயிருக்கக்கூடும். ஆனால் இயேசுவுக்கு அப்படியிருக்கவில்லை, ஏனென்றால் அதற்கு முன்பு அவர் தம்முடைய சீஷர்களிடம் சொல்லியிருந்ததாவது: “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்.” (யோவான் 14:27) இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்த சமாதானம், கடவுளுடைய குமாரனாகத் தம்மில் அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தின் அடிப்படையில் இருந்தது, மற்றும் அவர்களுடைய இருதயங்களையும் மனதுகளையும் அமைதிப்படுத்த உதவியது.
அதுபோல் நாமும் “தேவ சமாதானத்தை” அனுபவிக்க முடியும். தம்முடைய நேச குமாரன் மூலம் யெகோவாவிடம் கொள்ளும் ஒரு நெருங்கிய உறவின் பலனாகக் கிடைக்கும் இந்த ஒப்பிடப்பட முடியாத அமைதியை நாம் போற்றிக் காத்துக்கொள்வோமாக.—பிலிப்பியர் 4:6, 7. (w90 3⁄15)