பைபிளின் கருத்து
பைபிளின் தீர்க்கதரிசனங்கள் ஏன் உங்களுக்கு மதிப்புள்ளவையாக இருக்கின்றன
“பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதற்கு நிச்சயமான நிரூபணத்தைக் கொண்டிருந்தால் மட்டுமே அதை நாங்கள் நம்புவோம்” என்று அநேகர் சொல்கிறார்கள். இருப்பினும், அடிக்கடி, அவர்களை நம்பச் செய்ய எத்தகைய “நிச்சயமான நிரூபணம்” தேவைப்படும் என்பதைச் சொல்ல முடியாதவர்களாக அத்தகைய ஆட்கள் இருக்கிறார்கள். அது ஓர் அற்புதமாக இருக்கக்கூடுமா?
இந்தப் பூமியிலிருக்கையில் இயேசு அநேக அற்புதங்களைச் செய்தார். இருப்பினும், அவர் கடவுள் சார்பாக பேசுபவர் என்பதற்கான அத்தாட்சியாக அவற்றை ஏற்க சந்தேக மனப்பான்மையுடையவர்கள் மறுத்தனர். ஏன், “பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக் கொண்டு” இயேசு சில அற்புதங்களை நடத்தினார் என்று சிலர் விவாதித்தார்கள்! மற்றவர்களால் நடத்தப்பட்ட சில “அற்புதங்கள்” உண்மையில் சாத்தானின் கிரியைகள் என்று இயேசு ஒப்புக்கொண்டார். (லூக்கா 11:14-19; மத்தேயு 7:22, 23) ஆகவே, பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதற்கு நிச்சயமான நிரூபணமாக வேறொரு காரியம் தேவைப்படும்—பைபிள் வார்த்தைகளும் அது கொண்டுள்ள செய்திகளும் கடவுளிடமிருந்தானவை என்பதைக் காட்டும் ஒரு காரியம்.
பைபிள் பக்கங்களில், நாம் அத்தகைய அத்தாட்சியைக் காண்கிறோம்—தீர்க்கதரிசனங்கள். நிச்சயமாகவே, சத்தியத்தின் தேவனும் எல்லா ஞானத்தின் ஊற்றுமூலமுமான யெகோவா தேவன், ஆதியிலிருந்து முடிவையும் அறிந்தவர், நம்முடைய காலங்கள் உட்பட, எதிர்காலத்தில் என்ன சம்பவிக்கும் என்பதை முன்கணிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். (சங்கீதம் 31:5; நீதிமொழிகள் 2:6; ஏசாயா 46:9, 10) இதை விவரமாக தன்னுடைய எழுதப்பட்ட வார்த்தையில் அவர் செய்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சில தீர்க்கதரிசனங்களை நாம் கவனிப்போம்.
இயேசு மேசியாவாக இருப்பதாக நிரூபிக்கும் தீர்க்கதரிசனங்கள்
நூற்றுக்கணக்கான பைபிள் தீர்க்கதரிசனங்கள் இயேசு கிறிஸ்துவில் அவற்றின் நிறைவேற்றத்தைக் கண்டன.a இந்த நிறைவேற்றத்திற்காக இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் காரியங்களைச் சரிசெய்து கொண்டார்கள் என்று சிலர் விவாதிக்கலாம். ஆனால் அது உண்மையில் அவ்விதமாக இருக்க முடியுமா? சில உண்மைகளைக் கவனியுங்கள்.
இயேசுவினுடைய பிறப்பின் சமயத்தில் கணக்கெடுப்பு மற்றும் வரி பதிவு செய்தல் நோக்கங்களுக்காக யோசேப்பும் மரியாளும் தங்களுடைய சொந்த ஊராகிய பெத்லகேமிற்குச் செல்வதைத் தேவைப்படுத்தும் ஒரு கட்டளையை வெளியிட ரோம ராயனை இயேசுவோ அல்லது அவருடைய பெற்றோரோ தூண்டியிருக்க முடியாது. ஆகவே பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் எவ்விதத்திலும் அக்கறைக்கொண்டிராத ரோமர்களுங்கூட, பெத்லகேமில் இயேசுவினுடைய பிறப்பில் மீகா 5:2-லுள்ள தீர்க்கதரினத்தின் நிறைவேற்றத்தில் ஒரு பாகத்தை வகித்தனர்.
யூத மதத்தலைவர்களின் மாய்மாலத்தை இயேசு எவ்வளவு அதிகமாக வெளிப்படுத்தினாரோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அவரைக் கொல்ல வகைதேடினார்கள். ஆனால் அவருடைய மரணம் அவருடைய உடன் தேசத்தாருடைய கைகளிலிருந்து நேராக வரவில்லை. யூதர்கள் இயேசுவைக் கொலை செய்ய நேர்ந்திருந்தால், அவர்கள் அவர் மரிப்பதற்கு அநேகமாக கல்லெறிந்து கொன்றிருப்பார்கள். ஏனென்றால் இதுவே மோசேயின் பிரமாணத்தில் எழுதப்பட்டிருந்த மரண தண்டனையை நிறைவேற்றும் வழியாக இருந்தது. (யோவான் 8:59; 10:31) இருப்பினும், தீர்க்கதரிசனங்களின் பிரகாரம், “நியாயப்பிரமாணத்தின் சாபத்தை” நீக்கிப்போட மேசியா ஒரு கழுமரத்தில் அறையப்படவேண்டும். (உபாகமம் 21:22, 23-ஐ கலாத்தியர் 3:13-உடன் ஒப்பிடுக.) “எல்லாரையும் இழுத்துக்கொள்ளும்” வகையில் அவர் “உயர்த்தப்பட” வேண்டும். (எண்ணாகமம் 21:4, 9-ஐ யோவான் 3:14 மற்றும் 12:32, 33-உடன் ஒப்பிடுக.) ரோமர் உபயோகித்த விதமாக, கழுமரத்தில் அறைதலினால் இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைக் குறித்து எந்தவொரு சந்தேகமும் இருந்திருக்க முடியாது. ஆகவே பைபிள், தீர்க்கதரிசனங்கள் நிறைவேற உதவுவதில் அக்கறைக்கொண்டிராத ரோமர், யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தை உண்மையாக நிரூபிக்கப்படுவதில் அவர்கள் மறுபடியும் ஒரு பாகத்தை வகித்தனர்.
மேலுமாக, மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கையில், தன்னுடைய உடைகளுக்கு என்ன செய்யப்படப்போகிறது என்பதைத் தீர்மானிக்க இயேசு ஒன்றும் செய்ய முடியாது. அவற்றைச் சீட்டுப்போட்டு பகிர்ந்து கொள்வதற்கு ரோம சேவகர்களை அவர் வழிநடத்தியிருக்க முடியாது. ஆனால் அவர்கள் இப்படித்தான் செய்தார்கள். இப்படித்தான் செய்வார்கள் என்று பைபிள் தீர்க்கதரிசனம் முன்னறிவித்தவிதமாகவே இது இருந்தது! (சங்கீதம் 22:18; யோவான் 19:24) மறுபடியுமாக, இயேசுவோ அல்லது அவருடைய சீஷர்களோ அல்ல, ரோமர்தானே தீர்க்கதரிசனம் மெய்யென ஒலிக்கச்செய்வதில் உட்பட்டிருந்தார்கள்.
அவருடைய சந்ததியில் எருசலேம் நகரத்தின் திடீர் முடிவை அர்த்தப்படுத்தும் வகையில் அங்கே சம்பவங்கள் நடைபெறும் என்று இயேசு முன்னறிவித்தார். (லூக்கா 21:5-24) இயேசுவின் காலத்திற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு, தானியேல் இதை முன்னறிவித்திருந்தார். (தானியேல் 9:26, 27) பொ.ச. 70-ம் ஆண்டில் எருசலேம் அழிக்கப்பட்டது. இயேசு மற்றும் தானியேலின் வார்த்தைகள் நிறைவேற்றமடைந்தன. மறுபடியுமாக, பைபிள் தீர்க்கதரிசனம் நம்பத்தகுந்தது என்று முத்திரையிடப்பட்டது.
தீர்க்கதரிசனத்திலிருந்து நீங்கள் பலனடைவீர்களா?
இன்னும் நிறைவேற்றமடைய வேண்டிய அநேக பைபிள் தீர்க்கதரிசனங்கள் இருக்கின்றன. உதாரணமாக, இந்தத் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறை முடிவிற்கு வர இருப்பதைக் குறித்தும், பிறகு அவருடைய பரலோக ராஜ்யத்தின்கீழ் நீதியான ஒரு புதிய உலகம் அதைப் பின்தொடர இருப்பதைக் குறித்தும் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து தீர்க்கதரிசனம் உரைக்கும்படி யெகோவா செய்தார். (மத்தேயு 24:3-14; வெளிப்படுத்துதல் 21:1-5; மேலுமாக 2 பேதுரு 3:7-13-ஐயும் பார்க்கவும்.) இவையெல்லாம் பைபிளில் எழுதப்பட்டிருக்கின்றன. யெகோவாவுடைய தீர்க்கதரிசனத்தின் வார்த்தை எப்பொழுதும் மெய்யென நிரூபித்திருக்கிறது. எனவே, அதற்கு முக்கிய கவனத்தை நாம் கொடுக்கக்கூடாதா?
கடந்த நாட்களில் தங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல காரியங்களை மட்டுமே செய்திருக்கின்றவர்களும் தங்களுடைய வார்த்தையை எப்பொழுதும் நிறைவேற்றியிருப்பவர்களுமான பெற்றோர்களின் வாக்குறுதிகளில் நம்பிக்கையற்றவர்களாக இருக்க பிள்ளைகள் என்ன காரணத்தைக் கொண்டிருக்கிறார்கள்? அதேபோன்று, தன்னுடைய குமாரனின் ராஜ்யத்தைக் கொண்டுவருவதைக் குறித்த யெகோவாவின் வாக்குறுதியில் நம்பிக்கையற்றவர்களாக இருக்க நாம் என்ன காரணத்தைக் கொண்டிருக்கிறோம்? கடந்த நாட்களில் தன்னுடைய சிருஷ்டிகளுக்கு அநேக நற்காரியங்களைச் செய்திருக்கிற யெகோவா தேவன், அவற்றின் சுக நலத்தில் திடீரென அக்கறைக்கொள்ளாதிருப்பார் என்று நம்புவதற்கு நாம் என்ன காரணத்தைக் கொண்டிருக்கிறோம்?
இதற்கு ஆதரவாக திருப்தியளிக்கும் தர்க்கங்கள் இல்லை. ஆகவே, யெகோவாவையும் அவருடைய வார்த்தையையும் நம்பவும், அவரில் நம்முடைய நம்பிக்கையை வைக்கவும் நாம் எல்லாக் காரணத்தையும் கொண்டிருக்கிறோம். அவருடைய நம்பத்தகுந்த தீர்க்கதரிசன வார்த்தை வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை நமக்குத் தருகிறது. பிரயோஜனமுள்ள ஓர் இலக்கினிடமாக அது நம்முடைய நடவடிக்கைகளை வழிநடத்துகிறது. உண்மையில் அது இன்று நமக்கு பேரளவு மதிப்புள்ளதாக இருக்கிறது. (g88 8⁄8)
[அடிக்குறிப்புகள்]
a உதாரணமாக உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டியால் வெளியிடப்பட்ட “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற புத்தகம், பக்கங்கள் 75, 76-ஐ தயவுசெய்து பார்க்கவும்.
[பக்கம் 24-ன் பெட்டி]
பைபிள் தீர்க்கதரிசனங்கள் முன்னுரைத்த சோதோம் கொமோரா (ஆதியாகமம் 18:20, 21; 19:12, 13), நினிவே (செப்பனியா 2:13), பாபிலோன் (எரேமியா 51:1, 2), ஏதோமில் போஸ்றா (எரேமியா 49:7-22), போன்ற நகரங்களின் அழிவு தீர்க்கதரிசன வார்த்தை துல்லியமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.
[பக்கம் 25-ன் பெட்டி]
இந்தத் தீர்க்கதரிசனங்களின் எதிர்கால நிறைவேற்றத்தை அனுபவிக்க நீங்கள் விரும்புவீர்களா?
“அவர் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.”—சங்கீதம் 46:9.
“‘வியாதிப்பட்டிருக்கிறேன்’ என்று நகரவாசிகள் சொல்வதில்லை.”—ஏசாயா 33:24.
“இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.”—வெளிப்படுத்துதல் 21:4.
“பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்.”—யோவான் 5:28, 29.
“நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றென்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:29.