யெகோவாவில் நம்பிக்கையை வெளிப்படுத்துங்கள்—கற்றுக்கொண்ட காரியங்களைச் செய்வதன் மூலம்
“யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து நன்மை செய்; தேசத்தில் குடியிருந்து உண்மையைக் கடைப்பிடி.”—சங்கீதம் 37:3.
கடவுளுடைய வார்த்தையை ஒருவர் வாசிப்பது வெறுமென தனிப்பட்ட சந்தோஷத்துக்காக மட்டும் அல்ல. படிப்பு யெகோவாவில் நம்பிக்கையை வளர்ப்பதற்கு ஒரு வழியாக இருக்க வேண்டும். (நீதிமொழிகள் 3:1–5) மேல் குறிப்பிடப்பட்ட சங்கீதக்காரனின் வார்த்தைகள் தேவ நம்பிக்கை ஒருவருடைய ‘நன்மையான செயலிலிருந்து’ வெளிப்படுகிறது என்பதைக் காண்பிக்கிறது.
2 யாக்கோபு சொன்னதாவது: “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான். அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.” (யாக்கோபு 1:22–24) எனவே பார்க்கும் இந்தக் காரியம் வெறுமெனக் கடந்துசெல்லும்போது பார்க்கும் காரியம் அல்ல. இந்த இடத்தில் பயன்படுத்தப்படும் “பார்ப்பது” என்ற வார்த்தைக்குரிய கிரேக்க பதம் அடிப்படையில் “ஒரு காரியத்தைப் பற்றிய குறிப்பிட்ட உண்மைகளை உணர்ந்துகொள்ளுவதில் மனதின் செயலைக் குறிப்பிடுகிறது.”—W. E. வைன் எழுதிய புதிய ஏற்பாட்டு வார்த்தைகளின் ஒரு விளக்க அகராதி (An Expository Dictionary of New Testament Words); அப்போஸ்தலர் 7:31-ஐ ஒப்பிடவும், Kingdom Interlinear.
3 ஒருவன் தன்னுடைய முகத்தைக் கண்ணாடியின் முன் நின்று உற்றுப் பார்ப்பதை சற்று கற்பனை செய்துகொள்ளுங்கள், ஒருவேளை அவனுடைய முகத்தின் பிரதிபலிப்பு அதிக மேன்மைப்படுத்தப்பட்டுக் காண்பிக்கப்படாததை அவன் காணக்கூடும். பெருந்திண்டியினாலும் குடிவெறியினாலும் முகவாய்க்கட்டையில் இரட்டிப்பையும், நல்ல தூக்கம் இல்லாததால் விழிகளின்கீழ் பைகளையும், நச்சரிக்கும் கவலைகளால் நெற்றியில் மடிப்புகளையும் காணக்கூடும். தன்னையே முகமுகமாய்ப் பார்க்கும் அவன் தன் பழக்கங்களிலும் வாழ்க்கைப் பாணியிலும் வெகு காலத்துக்கு முன்பாகவே செய்ய நினைத்த மாற்றங்களைச் செய்வதற்குத் தன் மனதில் தீர்மானம் செய்கிறான். பின்பு அவன் “அவ்விடம்விட்டுப் போய்”விடுகிறான். தனக்கு வசதியாக தன்னை அலைக்கழிக்கும் அந்தத் தோற்றம் முன்னால் இல்லாததால் தான் எப்படிக் காணப்படுகிறான் என்பதை, “தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.” மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற அவனுடைய தீர்மானமும் கடந்துபோய்விடுகிறது.
4 அதுபோல, நீங்கள் ஒரு திறமைவாய்ந்த பைபிள் மாணாக்கனாக இருக்கக்கூடும். என்றபோதிலும், கடவுளுடைய வார்த்தையாகிய கண்ணாடியில் நீங்கள் பார்ப்பவற்றிற்கு எவ்விதம் பிரதிபலிக்கிறீர்கள்? ஆவிக்குரிய குறைபாடுகளும் கறைகளும் அதில் பிரதிபலிக்கப்படும்போது, இது உங்களுக்குத் தற்காலிக கவலையை மட்டும் ஏற்படுத்துகின்றதா, அல்லது குறைபாடுகளைத் திருத்திக்கொள்வதற்காக நீங்கள் உறுதியான தீர்மானம் எடுக்கிறீர்களா? யாக்கோபு மேலும் கூறினான்: “சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.” (யாக்கோபு 1:25) சங்கீதக்காரன் இப்படியாக ஜெபித்தான்: “யெகோவா, உமது நியமங்களின் வழியை எனக்குப் போதித்தருளும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.”—சங்கீதம் 119:33.
நம்முடைய பழக்கமான செயல்கள் நம்மைப்பற்றி என்ன தெரிவிக்கின்றன
5 உண்மையில் நாம் என்ன செய்கிறோம் அல்லது பழக்கமாகச் செய்கிறோம் என்பது நாம் உள்ளத்தில் என்னவாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது. சீக்கிரத்திலேயோ அல்லது பின்னாலோ ஒருவன் தன்னுடைய “உள்ளத்தை” நல்ல அல்லது கெட்ட செயல் பழக்கத்தின் மூலம் வெளிப்படுத்துகிறவனாயிருக்கிறான். (சங்கீதம் 51:6) சாலொமோன் சொன்னான்: “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.” (நீதிமொழிகள் 20:11) இது இளைஞர்களாக இருந்த போது ஏசா, யாக்கோபு ஆகியவர்களுடைய காரியத்தில் உண்மையாக இருந்தது. காலம் கடந்தபோது, ஏசாவின் பழக்கமான செயல்கள் ஆவிக்குரிய போற்றுதல் இல்லாததை வெளிப்படையாகக் காண்பித்தது. (ஆதியாகமம் 25:27–34; எபிரெயர் 12:16) இது யெகோவாவில் நம்பிக்கையாயிருப்பதாக உரிமைபாராட்டியும், ஆனால் பைபிள் குறிப்பிடும் “அக்கிரமக்காரராக” நிரூபித்த ஆயிரக்கணக்கானோருடைய விஷயத்தில் உண்மையாயிருந்தது. (யோபு 34:8) சங்கீதக்காரன் எழுதினான்: “துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.”—சங்கீதம் 92:7.
6 துன்மார்க்கரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது, அவர்களின் அழிவு விரைவில் வரும்; தவறிழைப்பவர்களைக் கடவுள் என்றென்றும் பொருத்துக்கொண்டிருக்க மாட்டார். (நீதிமொழிகள் 10:29) எனவே நாம் கற்றுக்கொள்ளும் காரியங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் யெகோவாவில் நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்துவது அவசியம். “நீங்கள் [தேசங்களுக்குள்ளே] நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்,” என்று பேதுரு புத்திமதி கூறுகிறான். (1 பேதுரு 2:12) எனவே, நாம் முன்னேறக்கூடிய சில பகுதிகள் யாவை?
மற்றவர்களுடன் நம்முடைய தொடர்புகள்
7 ஒரு பகுதி, நாம் மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் விதம். நீதிமொழிகள் 13:20 எச்சரிப்பதாவது: “மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டிருக்கும் இந்தப் புத்திமதிக்குச் செவிகொடுக்கத் தவறி, சிலர் வேலை செய்யும் இடங்களிலும் பள்ளிகளிலும் உலகப்பிரகாரமான ஆட்களோடு அளவுக்கதிகமாகப் பழக்கம் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். இப்படியாக விவாகமான ஒரு சகோதரர் தான் வேலைபார்க்கும் இடத்தில் ஒரு பெண்ணுடன் அசுத்தமான நடத்தையில் ஈடுபட்டார். மேலும் அவர் உடன் வேலை செய்பவர்களுடன் மதுபானம் அருந்தும் இடங்களுக்குச் செல்லும் பயணங்களிலும் சேர்ந்துகொண்டது இவரைக் குடிவெறியில் ஆழ்த்தியது. நிச்சயமாகவே, நாம் “புறம்பே இருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து . . . கொள்ள”வேண்டும்.”—கொலோசெயர் 4:5.
8 ஆனால் உடன் கிறிஸ்தவர்களுடன் நம்முடைய தொடர்புகளைப் பற்றியது என்ன? உதாரணமாக, நீங்கள் ஒரு சகோதரரிடமிருந்து பணம் கடன்வாங்கியிருக்கலாம். அந்த சகோதரர் வசதியாக இருக்கிறார், அவரைவிட உங்களுக்குத்தான் அதிக தேவை இருக்கிறது என்று நீங்கள் நியாயம் கூறி அதை அவருக்குத் திருப்பிக்கொடுப்பதை அனாவசியமாக தாமதிக்கக்கூடுமா? “துன்மார்க்கர் கடன்வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; நீதிமானோ இரங்கிக் கொடுக்கிறான்,” என்று சங்கீதம் 37:21 கூறுகிறது. அல்லது நீங்கள் ஒரு முதலாளியாக இருந்தால், சாட்சிகளாக இருக்கும் தொழிலாளிகளுக்கு ஊதியம் கொடுக்கும் காரியத்தில் “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்” என்ற நியமத்தை நீங்கள் பொருத்துகிறீர்களா? (1 தீமோத்தேயு 5:18) பவுலால் தன்னுடைய சொந்த தொடர்புகள் குறித்து பின்வருமாறு சொல்ல முடிந்தது: “நாங்கள் உலகத்திலேயும் உங்களிடத்திலேயும் கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோம்.”—2 கொரிந்தியர் 1:12.
அடக்கமான உடையும் சிகையலங்காரமும்
9 ஜெர்மனியிலுள்ள பயணக் கண்காணி ஒருவர் அங்குள்ள சில கிறிஸ்தவர்களை “டென்னிஸ் காலணித் தலைமுறை” என்று அழைத்தார், ஏனென்றால் அவர்கள் அதிக தற்போக்கான முறையில் கூட்டங்களுக்கு வருகின்றனர். “பெரும்பான்மையான சகோதரர்கள் அடக்கமாக உடுத்துகிறார்கள்” என்றாலும் கூட்டங்களுக்கு வரும் சிலர் “கவலீனத்தின் வரம்பில்” காணப்படுகின்றனர் என்று கிளைக் காரியாலயம் மேலும் கூறியது. மற்றொரு நாடு, “இவ்விடத்தில் தனிப்பட்ட சுத்தம் குறைவுபடுகிறது . . . சில சகோதரர்கள் சுத்தமான ஆடை அணிவதில்லை. அவர்கள் கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்திற்கும் செல்லும்போது தலைசீவாமலும் அழுக்காகவும் காணப்படுகிறார்கள்” என்று தெளிவாக கூறுகிறது. யெகோவாவின் ஊழியர்கள் எல்லா அம்சத்திலும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம்!—2 கொரிந்தியர் 7:1.
10 விசேஷமாக ஆவிக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது நாம் “அடக்கமாகவும், மதிப்புள்ள விதத்திலும், நன்னடத்தையை வெளிப்படுத்தும் விதத்திலும் உடை உடுத்த” வேண்டும். (1 தீமோத்தேயு 2:9, New International Version) பிரச்னை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட பாணி தீவிரமான விதத்தில் புதுப்பாணி கொண்டது என்பது அல்ல, ஆனால் கடவுளுடைய ஊழியர் என்று உரிமைப்பாராட்டும் ஒருவருக்குத் தகுதியானதா என்பதே. (ரோமர் 12:2; 2 கொரிந்தியர் 6:3) அளவுக்கு மிஞ்சி கவலீனமாக உடுத்துதல், மற்றும் இறுக்கமான உடைகள் மற்றவர்களை நம்முடைய செய்தியிலிருந்து திசைத்திருப்பிவிடும். வேண்டுமென்றே ஆண்களைப் பெண்களாகக் காண்பிப்பது, அல்லது பெண்களை ஆண்களாகக் காண்பிப்பது சார்ந்த உடைப் பாணிகள் நிச்சயமாகவே சரி அல்ல. (உபாகமம் 22:5 ஒப்பிடவும்.) உண்மைதான், உள்ளூர் பிராந்திய பழக்க முறைகள் வித்தியாசப்படலாம், இவை சீதோஷணம், வேலை அல்லது தொழில் போன்றவற்றிற்கு ஏற்றதாக அமையலாம். எனவே கிறிஸ்தவ சபை தங்களுடைய உலக சகோதரத்துவத்தை உட்படுத்தும் வகையில் எந்த ஒரு கடினமான விதியையும் ஏற்படுத்துவதில்லை. அதே சமயத்தில் மூப்பர்களும் தங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மந்தையின் மீது திணிக்கக்கூடாது. என்றபோதிலும், ராஜ்ய பிரஸ்தாபியின் தலைசீவும் பாணி பொதுவாக சபையின் கவலைக்கடுத்த காரியமாக இருந்தால் அல்லது ஊழியத்திற்கு ஊறு விளைவிக்குமென்றால், தயவான ஆலோசனை கொடுப்பது சரியானது. அப்படிப்பட்ட ஆலோசனையைப் பெறும்போது யெகோவாவில் நம்பிக்கையுடையவர்களாய் மனதாழ்மையுடன் நீங்கள் பிரதிபலிப்பீர்களா?—எபிரெயர் 12:7.
ராஜ்யத்தைத் தேடுகிறவர்களின் பராமரிப்புக்குக் கடவுளை நம்பியிருத்தல்
11 “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33) இந்த வார்த்தைகளைச் சிலர் கேட்கத் தவறும்போது எவ்வளவு வருத்தமாயிருக்கிறது! பொருளாதார பாதுகாப்பு என்ற கற்பனைக்கதையை விழுங்கிவிட்டு, “தங்கள் செல்வத்தை நம்பி,” ஐசுவரியத்தையும், உலகப்பிரகாரமான கல்வியையும், உலகப்பிரகாரமான வாழ்க்கைப் பணிகளையும் அவர்கள் முழுமூச்சாக நாடித்தேடுகின்றனர். (சங்கீதம் 49:6) சாலொமோன் பின்வருமாறு எச்சரிக்கிறான்: “ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே. . . . இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்; அது கழுகைப்போலச் சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.”—நீதிமொழிகள் 23:4, 5.
12 பவுல் அப்போஸ்தலன் மேலும் எச்சரிப்பதாவது: “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” (1 தீமோத்தேயு 6:10) யு.எஸ். நியூஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் (U.S. News & World Report). பத்திரிகைக்குப் பேட்டியளித்தபோது, டாக்டர் டக்லஸ் லாபையன் கூறினதாவது, ஐசுவரியத்தைத் தொடரும் இளம் ஆண்களும் பெண்களும் “அதிருப்தி, கவலை, மனச்சோர்வு, வெறுமையுணர்வு, அறிவு பிறழ்ச்சி, போன்ற உணர்வுக் கோளாறுகளும் தலைவலி, முதுகுவலி, வயிறு கோளாறுகள், தூக்கமின்மை, உணவருந்துவதில் பிரச்னைகள் போன்ற சரீர குறைபாடுகளும் குறித்து அறிக்கைசெய்துள்ளனர்.”
13 யெகோவா தங்களைப் பராமரிப்பார் என்பதில் நம்பிக்கையுடையவர்கள் அதிக வேதனையையும் கவலையையும் தவிர்க்கின்றனர். “உண்ணவும் உடுக்கவும்” இருப்பதில் திருப்தியாக இருப்பது அதிக அடக்கமான வாழ்க்கைத் தரத்தைக் குறிக்கக்கூடும். (1 தீமோத்தேயு 6:8) ஆனால் “கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது.” (நீதிமொழிகள் 11:4) மேலும், யெகோவாவுக்கு நம்முடைய சேவையை அதிகரிக்கும்போது, பின்வரும் காரியத்துக்குப் பாத்திரமான நிலையில் நம்மை வைத்துக்கொள்கிறோம்: “யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியம்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.”—நீதிமொழிகள் 10:22.
“சமாதானத்தைத் தேடி அதைப் பின்தொடரக்கடவன்”
14 யெகோவாவில் நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கு இன்னொரு வழி நம்முடைய சகோதரர்களிடையே “சமாதானத்தைத் தேடி அதைப் பின்தொடரு”வதாகும். (1 பேதுரு 3:10–12) சில சமயங்களில் அற்ப விஷயங்கள் சகோதரர்கள் மத்தியில் மனக்கசப்போடுகூடிய விரோதத்தின் ஊற்றுமூலமாகிவிட அனுமதிக்கப்பட்டிருக்கிறது: ராஜ்ய மன்றத்தின் அமைப்பு, சபை பிராந்தியங்களை மாற்றியமைத்தல், புத்தக படிப்பு நியமனங்கள், சபையிலிருந்து வரும் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் கவனித்துக்கொள்ளும் முறை. அல்லது சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட அல்லது வியாபார சச்சரவுகளை மத்தேயு 18:15–17-ன் ஆவியில் தீர்த்துக்கொள்வதற்குப் பதிலாக சகோதரர்கள் ஒருவரோடொருவர் பேசுவதை நிறுத்திக் கொண்டிருக்கின்றனர் அல்லது, தங்களுடைய சச்சரவுகளால் சபையின் அமைதியைக் கலைத்திருக்கின்றனர்.
15 யாக்கோபு சொல்லுகிறான்: “நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.” (யாக்கோபு 3:18) எனவே, சமாதானத்தை முன்னிட்டு, தனிப்பட்ட உரிமைகளையும் விட்டுக்கொடுத்து மற்றவர்களுடைய அக்கறைகளுக்கு அல்லது விருப்பங்களுக்கு இடங்கொடுக்கும் மனச்சாய்வுள்ளவர்களாக இருங்கள். (ஆதியாகமம் 13:5–12 ஒப்பிடவும்.) உதாரணமாக, இரண்டு சபைகள் ஒரு ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்துவார்களானால், அதில் ஒரு சபை மன்றம் தனக்குத்தான் “சொந்தம்”, என்பதாக கூட்ட நேரங்கள் அல்லது மற்ற காரியங்களை அந்த மற்ற சபைக்கு ஏவுகிற நிலையை எடுத்துக்கொள்ளக் கூடாது. பரஸ்பர மரியாதையும் ஒத்துழைப்பும் நிலவ வேண்டும்.
16 நாம் வெறுமென தேவராஜ்ய ஒழுங்கை மதித்துணர்ந்து நம்முடைய சரியான ஸ்தானத்தை அறிந்து காத்துக்கொள்வோமானால் அநேக சச்சரவுகள் தவிர்க்கப்படலாம். (1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 5:22–27) மனைவிமார்கள் தங்களுடைய கணவர்களின் விருப்பங்களையும், பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரின் ஆணைகளையும், உதவி ஊழியர்கள் மூப்பர்களுடைய வழிநடத்துதலையும் மதிக்கும்போது அவர்கள் செய்யும் காரியங்கள் “அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தியுண்டாக்குகிறதற்கேதுவாகச் [சபையின்] சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது.” (எபேசியர் 4:16) சிலசமயங்களில் கணவர்களும், பெற்றோர்களும், மூப்பர்களும் குறைபடக்கூடும் என்பது ஒப்புக்கொள்ளவேண்டியதுதான். (ரோமர் 3:23) ஆனால் நல்நோக்கமுடைய வழிநடத்துதலுக்கு எதிராகக் கலகத்தனம், குறைகூறுதல் அல்லது எதிர்த்தல் நிலைமையை சீர்படுத்துமா? கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் நம்முடைய ஸ்தானத்தை அறிந்து காத்துக்கொண்டு சமாதானத்தை நாடித்தேடுதல் எவ்வளவு மேன்மையானது!
வெளி ஊழியத்தில் நம்மை மும்முரமாக ஈடுபடுத்துதல்
17 அநேகருக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் உத்தரவாதத்தை நிறைவேற்றுதலாகும். (மத்தேயு 24:14; 28:19, 20) சிலரோ வெளி ஊழியத்தில் மிகக் குறைவாகவே பங்குகொள்கிறார்கள்; வாழ்க்கையை நடத்த சம்பாதிப்பதிலும் குடும்பத்தைக் கொண்டிருப்பதிலும் இருக்கும் அழுத்தம் தாங்கள் அதிகமாகச் செய்வதைக் கடினமாக்குகிறது என்று ஒருவேளை வாதிடலாம். “கடைசி நாட்களின்” அழுத்தங்கள் அதிகமே என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். (2 தீமோத்தேயு 3:1) என்றபோதிலும் இயேசு ‘லவுகீக கவலைகளினாலும் பாரமடைவது’ குறித்து எச்சரித்தார். நிலைமைகள் மோசமாகும்போது, கிறிஸ்தவர்கள் ‘நிமிர்ந்து பார்த்து தங்கள் தலைகளை உயர்த்த வேண்டும்.’ (லூக்கா 21:28, 34) சாத்தானின் தாக்குதல்களுக்கு எதிராக “உறுதியாக நிற்பதற்கு” ஒரு வழி, “சுவிசேஷத்திற்குரிய . . . பாதரட்சையைக் கால்களில் தொடுத்தவர்களாய்” இருப்பது—பிரசங்க ஊழியத்தில் தவறாமல் ஒழுங்காகப் பங்குகொள்வது!—எபேசியர் 6:14, 15.
18 பவுலின் நாட்களில் பல கிறிஸ்தவர்கள் (குறைந்தபட்சம் சில சபைகளிலாவது) “கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல் தங்களுக்குரியவைகளைத் தேடி”னார்கள். (பிலிப்பியர் 2:21) இது நம்முடைய மத்தியில் சிலருடைய விஷயத்தில் உண்மையாக இருக்கக்கூடுமா? ஒருவேளை அவர்கள் “விலையுயர்ந்த ஒரு முத்தை” கண்டுபிடித்த மனிதன் அதற்காக என்ன தியாகமும் செய்ய ஆயத்தமாயிருந்தது போன்று ராஜ்யத்தை நோக்கிட தவறக்கூடும். (மத்தேயு 13:45, 46) தன்னல அக்கறைகளுக்கு இடங்கொடுத்து, அதை எதிர்த்து மேற்கொள்ளும் பாதையில் செல்லாமல் வெறுமென அடையாள சேவை செய்கிறார்கள். என்றபோதிலும், யெகோவாவின் பேரிலும் அயலார் பேரிலும் இருக்கும் அன்புதானே கிறிஸ்தவர்களை பிரசங்கிக்கவும் நமக்கு அறிமுகமாகாதவரிடத்தில் பேச ஆரம்பிப்பது நம்முடைய இயல்பான மனச்சாய்வுக்கு எதிராகச் செல்வதாக இருந்தாலும் அவரிடம் பேசுவதற்கும் நம்மைத் தூண்டுகிறது.—மத்தேயு 22:37–39.
19 பிரசங்கிப்பதற்கு நாம் தூண்டப்படாவிட்டால், யெகோவாவின் பேரில் நமக்கு இருக்கும் அன்பும் நம்பிக்கையும் மனதில் அறிந்திருப்பவர்களாக இருப்பதிலும் சற்று அதிகம் மட்டுமே. தாவீது சாலொமோனுக்குக் கொடுத்த புத்திமதி: “நீ உன் பிதாவின் கடவுளை அறிந்து மனமுவந்து முழு இருதயத்தோடும் அவரைச் சேவி. யெகோவா சகல இருதயங்களையும் ஆராய்பவர், நினைவுகளையும் உத்தேசங்கள் எல்லாவற்றையும் அறிபவர்.” (1 நாளாகமம் 28:9, தி.மொ.) வெதுவெதுப்பான முயற்சிகளால் யெகோவா ஏமாற்றமடைந்துவிடுகிறவரல்ல. வெளி ஊழியத்தில் தவறாமல் ஒழுங்காகப் பங்குகொள்கிறவர்களாக இருந்தாலும், ‘நம்மைநாமே மும்முரமாக ஈடுபடுத்தும்போது’ நம்மால் செய்ய முடிந்தவற்றில் வெறுமென ஒரு சிறிய அளவை மட்டுமே அடையாள சேவையாக தருவோமானால் அது அவரைத் திருப்திப்படுத்தாது. (லூக்கா 13:24) எனவே ஒவ்வொரு கிறிஸ்தவனும் வெளி ஊழியத்தில் தன்னுடைய பங்கை நேர்மையோடு பரிசீலனை செய்து, தன்னை இப்படியாகக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் உண்மையிலேயே என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறேனா?’ ஒருவேளை நாம் முதன்மையாக வைக்கும் காரியங்களில் சில மாற்றங்கள் தேவையாக இருக்கலாம்.
மற்றவர்களுடைய மாதிரிகளால் “நன்மை செய்ய” தூண்டப்படுதல்
20 கடவுளுக்கு செய்யும் நம்முடைய சேவை “மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து” செய்யப்படுவதில்லை. (கலாத்தியர் 6:4, NW) என்றபோதிலும், மற்றவர்களுடைய நல்ல முன்மாதிரி நம்மை அதிகம் செய்ய தூண்டக்கூடும். அப்போஸ்தலனாகிய பவுல் தானே பின்வருமாறு சொன்னான்: “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்.” (1 கொரிந்தியர் 11:1) அப்படியென்றால், மாதந்தோறும் நம்முடைய சகோதரர்கள் வெளி ஊழியத்தில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். ஐக்கிய மாகாணங்களில் பிரஸ்தாபிகளின் சராசரி மணிநேரம் 1979-ல் 8.3 ஆக இருந்தது 1987-ல் 9.7 ஆக உயர்ந்திருக்கிறது! நம்முடைய சகோதரர்கள் வெளி ஊழியத்தில் செலவழிக்கும் நேரத்தை அதிகரித்திருக்கின்றனர். அது உங்களுடைய விஷயத்தில் உண்மையாக இருக்கிறதா?
21 மற்றவர்களுடைய வைராக்கியமான முன்மாதிரியினால் உந்தப்பட்டவர்களாக, அநேகர் ஒழுங்கான பயனியர் சேவையில் ஈடுபடுகின்றனர். கலிபோர்னியாவில் (U.S.A.) அஞ்சலா என்ற பெயர்கொண்ட ஓர் இளம் சகோதரி அதிக கவர்ச்சியான ஒரு வேலையையும் தன்னுடைய விருப்பத்துக்கேற்ற ஒரு கல்லூரி படிப்புக்கான உதவி தொகையையும் பெற்றாள். அதற்குப் பதிலாக அஞ்சலா முழு நேர ஊழியத்தைத் தெரிந்துகொண்டாள். காரணம்? “அநேக பயனியர்களுடன் கூட்டுறவு கொள்வதன் மூலம் நான் அவர்களில் உண்மையான ஆழ்ந்த சந்தோஷத்தையும் திருப்தியையும் பார்க்க முடிந்தது; அவர்களில் மட்டுமல்ல, ஆனால் யெகோவாவுடன் அவர்கள் கொண்டிருந்த உறவிலும் அதைக் காண முடிந்தது. இந்த ஆழ்ந்த சந்தோஷத்தையும் திருப்தியையும் நான் கொண்டிருக்க விரும்பினேன்.”
22 நீங்கள் அந்த “ஆழமான சந்தோஷத்தையும் திருப்தியையும்” வாஞ்சிக்கிறீர்களா? அப்படியென்றால் “யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து நன்மை செய்யுங்கள்”! நீங்கள் அறிந்திருக்கும் காரியம் யெகோவாவின் சேவையில் உங்களாலான எல்லாவற்றையும் செய்ய உங்களைத் தூண்டக்கடவது. கற்றுக்கொண்ட காரியங்களை செயல் பழக்கத்தில் கொண்டுவருவது உங்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றம் யாவருக்கும் விளங்கச்செய்வதோடு, மற்றவர்களுடைய உயிரைப் பாதுகாக்கும் வழியில் மற்றவர்களுக்கும் உதவும். (1 தீமோத்தேயு 4:15, 16) எனவே பிலிப்பியர் 4:9-லிலுள்ள பவுலின் வார்த்தைகளுக்கு நன்கு பிரதிபலிப்போமாக: “நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.” (w88 8⁄15)
விமர்சனக் குறிப்புகள்
◻கடவுளுடைய வார்த்தையாகிய கண்ணாடியில் நம்மை உற்றுபார்ப்பதன் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்?
◻ மற்றவர்களோடு நாம் வைத்துக்கொள்ளும் தொடர்பு முறையில் நாம் எவ்விதம் முன்னேறலாம்?
◻ பொருள் சம்பந்தப்பட்ட காரியங்களைத் தொடர்வது ஏன் ஞானமற்றது?
◻ நாம் சபையில் எவ்விதம் சமாதானத்தை நாடித்தேடலாம்?
◻ வெளி ஊழியத்தில் முழு பங்கைக் கொண்டிருக்க நம்மை எது தூண்டிட வேண்டும்?
[கேள்விகள்]
1, 2. (எ) தனிப்பட்ட படிப்பில் நாம் விரும்பும் பலன்கள் என்னவாக இருக்க வேண்டும்? (பி) யாக்கோபு என்ன உதாரணம் கொடுக்கிறான்? அவன் விளக்கிய பார்த்தல் மேலோட்டமான ஒன்றா?
3. கண்ணாடியில் பார்க்கும் ஒரு மனிதன் எப்படி “தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடக்”கூடும்?
4. நாம் வேதவசனங்களைப் படிக்கும் காரியத்திற்கு யாக்கோபுவின் உதாரணம் எப்படி பொருந்துகிறது?
5. (எ) நம்முடைய செயல்கள் நம்மைக் குறித்து என்ன சொல்லுகின்றன? (பி) “அக்கிரமக்காரராக” இருப்பவர்களுக்கு என்ன முடிவு காத்துக்கொண்டிருக்கிறது?
6. யெகோவாவில் நம்முடைய நம்பிக்கையை நாம் இப்பொழுதே வெளிப்படுத்துவது ஏன் மிகவும் அவசியம்?
7. “புறம்பே இருக்கிறவர்களுடன்” தொடர்பில் நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?
8. நம்முடைய உடன் கிறிஸ்தவர்களுடன் தங்களுக்கு இருக்கும் தொடர்பில் சிலர் எவ்விதம் முன்னேறலாம்?
9. உடையிலும் சிகையலங்காரத்திலும் என்ன போக்கு சில மூப்பர்களால் கவனிக்கப்பட்டிருக்கிறது?
10. (எ) உடையிலும் சிகையலங்காரத்திலும் நாம் தெரிந்துகொள்ளும் காரியத்தில் என்ன நியமம் நம்மை வழிநடத்த வேண்டும்? (பி) எப்பொழுது புத்திமதி கொடுக்கப்படவேண்டியது பொருத்தமாக இருக்கும்? அதற்கு நாம் எவ்விதம் பிரதிபலிக்க வேண்டும்?
11. பொருள் சம்பந்தமான காரியங்களை நாடித் தொடருவதில் சிலர் எவ்விதம் சிக்கிக்கொள்ளக்கூடும்? இது ஏன் ஞானமற்றது?
12. ஐசுவரியத்தை நாடுகிறவர்கள் எவ்விதத்தில் ‘அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொள்கிறார்கள்’?
13. “உண்ணவும் உடுக்கவும்” இருப்பதில் திருப்தியாக இருப்பது ஏன் மிகச் சிறந்தது?
14, 15. (எ) சில சமயங்களில் எப்படிப்பட்ட பிரச்னைகள் சபையின் சமாதானத்தைக் கெடுத்திருக்கின்றன? (பி) கருத்துவேறுபாடுகள் ஏற்படுகையில் சமாதானம் எப்படி தொடரப்படலாம்?
16. வீட்டிலும் சபையிலும் தேவராஜ்ய ஒழுங்கை மதித்துணர்வதன் மதிப்பு என்ன?
17. (எ) பிரசங்கிக்கும் வேலையில் ஓர் அடையாள பங்கை மட்டுமே உடையவர்களாயிருப்பதற்கு சிலர் என்ன காரணம் தருகின்றனர்? (பி) இன்றைய அழுத்தங்களுக்கு எப்படி பிரதிபலிக்க வேண்டும் என்று இயேசு உற்சாகப்படுத்தினார்?
18. பிரசங்கிக்கும் வேலையில் முழு பங்கைக் கொண்டிருப்பதிலிருந்து சிலர் பின்வாங்குவதற்குக் காரணம் என்னவாக இருக்கக்கூடும்?
19. வெதுவெதுப்பான முயற்சிகளில் யெகோவா ஏன் பிரியப்படுகிறதில்லை? அவருக்கு செய்யும் நம்முடைய சொந்த சேவையை நாம்தாமே எப்படி பரிசீலனை செய்யலாம்?
20. உடன் கிறிஸ்தவர்களுடைய நல்ல முன்மாதிரியை நாம் ஆராய்ந்து பார்ப்பது ஏன் பொருத்தமானது?
21. பயனியர் சேவையைச் செய்ய பலரைத் தூண்டியிருப்பது எது? விளக்குங்கள்.
22. கற்றுக்கொண்ட காரியங்களைச் செய்வதிலிருக்கும் நன்மைகள் யாவை?
[பக்கம் 16-ன் படம்]
ஆவிக்குரிய குறைபாடுகளையும் கறைகளையும் கவனிப்பது போதாது. அவற்றைத் திருத்திட செயல்படவேண்டும்!
[பக்கம் 18-ன் படம்]
ஐசுவரியத்தை நாடித்தேடுகிறவர்கள் தங்களுக்கு ‘அநேக வேதனைகளைக்’ கூட்டிக்கொள்கின்றனர்