-
யெகோவா உங்கள் ‘தலையிலுள்ள மயிரையெல்லாம் எண்ணியிருக்கிறார்’காவற்கோபுரம்—2005 | ஆகஸ்ட் 1
-
-
“என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்”
12. தம்முடைய மக்கள் எதிர்ப்படுகிற துன்பங்களை யெகோவா நன்கு அறிந்திருக்கிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
12 யெகோவா தம்முடைய ஊழியர்கள் ஒவ்வொருவரையும் அறிந்திருப்பதோடு, அவர்கள் ஒவ்வொருவரும் எதிர்ப்படுகிற துன்பங்களையும் நன்கு அறிந்திருக்கிறார். உதாரணத்திற்கு, இஸ்ரவேலர் அடிமைகளாக ஒடுக்கப்பட்டு வந்தபோது, மோசேயிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.” (யாத்திராகமம் 3:7) நாம் ஒரு சோதனையைச் சகித்துக் கொண்டிருப்பதை யெகோவா பார்க்கிறார், நம்முடைய கதறல்களைக் கேட்கிறார் என்பதையெல்லாம் அறிவது எவ்வளவாய் ஆறுதலளிக்கிறது! நாம் துன்பப்படும்போது நிச்சயமாகவே அவர் பாராமுகமாய் இருப்பதில்லை.
13. தமது ஊழியர்கள்மீது யெகோவாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்பதை எது காட்டுகிறது?
13 யெகோவாவுடன் ஒரு பந்தத்திற்குள் இருப்பவர்கள்மீது அவருக்குள்ள அக்கறையை, இஸ்ரவேலரைக் குறித்து அவர் சொன்ன வார்த்தைகள் மேலும் தெளிவுபடுத்துகின்றன. இஸ்ரவேலர் பெரும்பாலும் தங்களுடைய சொந்த பிடிவாதத்தாலேயே துன்பங்களை அனுபவித்தார்கள்; இருந்தாலும், “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” என்று யெகோவாவைக் குறித்து ஏசாயா எழுதினார். (ஏசாயா 63:9) அப்படியானால், யெகோவாவின் உண்மை ஊழியரான நீங்கள் வேதனைப்படும்போது, அவரும் வேதனைப்படுகிறார் என்பதை உறுதியாக நம்பலாம். எந்தவொரு துன்பத்தையும் பயமில்லாமல் சந்திப்பதற்கும் மிகச் சிறந்த விதத்தில் அவருக்குத் தொடர்ந்து சேவை செய்வதற்கும் இது உங்களைத் தூண்டவில்லையா?—1 பேதுரு 5:6, 7.
14. சங்கீதம் 56 எத்தகைய சூழலில் எழுதப்பட்டது?
14 கொலை வெறியுடன் தன்னைத் துரத்தி வந்த அரசனாகிய சவுலிடமிருந்து தப்பியோடியபோது தாவீது சங்கீதம் 56-ஐ எழுதினார்; அதில், தன்மீது யெகோவாவுக்கு அக்கறை இருந்ததாகவும் தான் வேதனைப்பட்டபோது அவர் வேதனைப்பட்டதாகவும் அவர் நம்பிக்கையுடன் எழுதியிருந்தார். காத் என்ற இடத்திற்கு அவர் தப்பிப்போனார், ஆனால் அங்கு இவர் யாரென பெலிஸ்தருக்குத் தெரிந்துபோனபோது, எங்கே பிடிபட்டு விடுவோமோ என்று பயந்தார். ஆகவே, அவர் இவ்வாறு எழுதினார்: “என் சத்துருக்கள் நாள் தோறும் என்னை விழுங்கப் பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர்.” ஆபத்துமிக்க சூழ்நிலையில் இருந்ததால், யெகோவாவிடம் உதவிகேட்டு தாவீது ஜெபித்தார். “நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.”—சங்கீதம் 56:2, 5.
15. (அ) தன்னுடைய கண்ணீரை ஒரு துருத்தியில் சேகரிக்கும்படி அல்லது ஒரு புஸ்தகத்தில் எழுதி வைக்கும்படி தாவீது எந்த அர்த்தத்தில் யெகோவாவிடம் கேட்டுக்கொண்டார்? (ஆ) நம்முடைய விசுவாசத்தினிமித்தம் ஏதோவொரு சோதனையைச் சகித்துக் கொண்டிருக்கும்போது, எதைக் குறித்து நாம் நிச்சயமாய் இருக்கலாம்?
15 அதன்பின், தாவீது சொன்ன மிக அருமையான கூற்றுகள் சங்கீதம் 56:8-ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. “என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் [“புஸ்தகத்தில்,” NW] அல்லவோ இருக்கிறது?” யெகோவாவின் கனிவான அக்கறைக்கு நெஞ்சைத் தொடும் எப்பேர்ப்பட்ட ஒரு விளக்கம்! மனவேதனையில் துடியாய் துடிக்கும்போது, ஒருவேளை நாம் யெகோவாவிடம் கண்ணீர்விட்டுக் கதறி அழலாம். பரிபூரணராக இருந்த இயேசுவும்கூட அப்படிக் கண்ணீர்விட்டார். (எபிரெயர் 5:7) தன் கண்ணீரைத் துருத்தியில் சேகரித்து வைப்பது போல் அல்லது ஒரு புஸ்தகத்தில் எழுதி வைப்பது போல் தன்னுடைய கடுந்துயரத்தை ஞாபகம் வைத்திருக்கிறார் என்பதிலும், யெகோவா தன்னைக் கவனிக்கிறார் என்பதிலும் தாவீதுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.d அந்தத் துருத்தியில் உங்கள் கண்ணீர் பெரும் பாகத்தை நிரம்பியிருப்பது போல் அல்லது அத்தகைய புஸ்தகத்தில் உங்கள் சோகக் கதை பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருப்பது போல் ஒருவேளை நீங்களும்கூட உணரலாம். அப்படியானால், ஆறுதலடையுங்கள். ஏனெனில் பைபிள் இவ்வாறு நம்மைத் தேற்றுகிறது: “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.”—சங்கீதம் 34:18.
-
-
யெகோவா உங்கள் ‘தலையிலுள்ள மயிரையெல்லாம் எண்ணியிருக்கிறார்’காவற்கோபுரம்—2005 | ஆகஸ்ட் 1
-
-
d பண்டைய காலங்களில் செம்மறி ஆடு, வெள்ளாடு, மாடு ஆகியவற்றின் பதப்படுத்தப்பட்ட தோல்களினால் துருத்திகள் தயாரிக்கப்பட்டன. பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, அல்லது தண்ணீர் வைப்பதற்காக அவை பயன்படுத்தப்பட்டன. எண்ணெய்யை அல்லது திராட்சரசத்தை வைப்பதற்கு அந்தத் தோல்கள் இன்னும் நன்றாகப் பதப்படுத்தப்பட்டன.
-