‘உன் விலைமதிப்புள்ள பொருட்களால் யெகோவாவை கனம்பண்ணு’—எவ்வாறு?
“உன் விலைமதிப்புள்ள பொருட்களினாலும் உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் யெகோவாவைக் கனம்பண்ணு.” சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்த ஞானமுள்ள வார்த்தைகளில் யெகோவாவின் ஆசீர்வாதங்களை அபரிமிதமாக அனுபவிப்பதற்குரிய திறவுகோல் உள்ளது. ஏனென்றால் எழுத்தாளர் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.”—நீதிமொழிகள் 3:9, 10, NW.
ஆனால் கடவுளைக் கனம்பண்ணுவது எதை அர்த்தப்படுத்துகிறது? யெகோவாவைக் கனம்பண்ணுவதற்கு நாம் பயன்படுத்தவேண்டிய அந்த விலைமதிப்புள்ள பொருட்கள் யாவை? மேலும் நாம் இதை எவ்வாறு செய்யலாம்?
“யெகோவாவைக் கனம்பண்ணு”
வேதாகமத்தில், கனம் என்பதற்குரிய எபிரெய வார்த்தையான காவோத்தின் நேர்பொருள் “கனமாயிருத்தல்” என்பதாகும். ஆகவே ஒரு நபரைக் கனம்பண்ணுவது அவரை அல்லது அவளை முக்கியமானவராக, மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறவராக, மதிப்புள்ளவராக கருதுவதை அர்த்தப்படுத்துகிறது. கனம் என்பதற்குரிய எகார் என்ற மற்றொரு எபிரெய வார்த்தையும்கூட “விலைமதிப்புள்ள” என்றும் “விலைமதிப்புள்ள பொருட்கள்” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதேவிதமாகவே, பைபிளில் “கனம்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள டைமி என்ற கிரேக்க வார்த்தை உயர்வாகக் கருது, மரியாதை, மதிப்பு, விலையுயர்ந்தது என்ற கருத்தையே தெரிவிக்கிறது. இவ்விதமாக ஒருவர் மற்றொருவருக்கு ஆழ்ந்த மரியாதையை காண்பிப்பதன் மூலமும் உயர்வாகக் கருதுவதன் மூலமும் அந்த நபரை கனம்பண்ணுகிறார்.
கனத்தைக் கொடுப்பதில் மற்றொரு அம்சமும்கூட இருக்கிறது. ஒரு சமயம் பண்டைய பெர்சிய ராஜாவாகிய அகாஸ்வேருவை கொல்வதற்காக செய்யப்பட்ட சதியை அம்பலப்படுத்தின உண்மையுள்ள யூதனாகிய மொர்தெகாயைப் பற்றிய பதிவை சிந்தித்துப்பாருங்கள். மொர்தெகாயின் அந்தச் செயலுக்காக அவரை கனப்படுத்த எதுவும் செய்யப்படவில்லை என்பதை பின்னால் ராஜா அறியவந்தபோது, ராஜாவுக்கு மிகவும் பிரியமாயிருக்கும் ஒருவரை எந்தளவுக்கு சிறப்பாக கனம்பண்ணலாம் என்பதாக அவர் தன்னுடைய பிரதான மந்திரியான ஆமானிடம் கேட்டார். இப்படிப்பட்ட கனம் தனக்கே செய்யப்படும் என்பதாக ஆமான் நினைத்துக்கொண்டான்; ஆனால் அது எந்தளவுக்கு தவறாக இருந்தது! எப்படியிருந்தாலும், இந்த மனிதன் “ராஜ வஸ்திரம்” உடுத்திவிக்கப்பட்டவராய் “ராஜா ஏறுகிற குதிரை”யில் உலா வரும்படிச் செய்யப்படவேண்டும் என்பதாக ஆமான் சொன்னான். அவன் இவ்விதமாய் சொல்லி முடித்தான்: “அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும்.” (எஸ்தர் 6:1-9) இந்தச் சந்தர்ப்பத்தில், கனம்பண்ணுவது என்பது எல்லா மக்களும் அவரை மிக உயர்வாக மதிக்கும்பொருட்டு எல்லாருக்கும் முன்பாக அவரை உயர்த்துவதை உட்படுத்தியது.
அதேவிதமாகவே யெகோவாவைக் கனம்பண்ணுவதில் இரண்டு அம்சங்கள் உள்ளன: தனிப்பட்ட விதமாக உயர்ந்த மரியாதையை அவருக்குக் காண்பிப்பதும், அவருடைய பெயரை யாவரறிய அறிவிக்கும் வேலையில் பங்குகொண்டு ஆதரிப்பதன் மூலம் அனைவர் முன்னிலையிலும் அவரை உயர்த்துவதும்.
‘உங்கள் விலைமதிப்புள்ள பொருட்கள்’—அவை யாவை?
நம்முடைய விலைமதிப்புள்ள பொருட்களில் நம்முடைய வாழ்க்கையும், நம்முடைய நேரமும், நம்முடைய திறமைகளும், நம்முடைய பலமும் அடங்கியுள்ளன. நம்முடைய பொருளாதார உடைமைகளைப் பற்றி என்ன? ஏழ்மையிலிருந்த ஒரு விதவை மிகவும் குறைந்த மதிப்புள்ள இரண்டு காசுகளை ஆலயத்தில் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைப் பார்த்தபோது இயேசு சொன்ன வார்த்தைகளைச் சிந்தித்துப் பாருங்கள். அவர் சொன்னார்: “இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் [காணிக்கை போட்ட மற்றவர்கள்] தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.” (லூக்கா 21:1-4) யெகோவாவின் வணக்கத்தை முன்னேற்றுவிக்க தன்னுடைய பொருளாதார சொத்துக்களைப் பயன்படுத்தியதற்காக இயேசு இந்த விதவையைப் புகழ்ந்து பேசினார்.
அப்படியென்றால் சாலொமோன் குறிப்பிடும் விலைமதிப்புள்ள பொருட்களில் நம்மிடமுள்ள எந்தவொரு பொருளாதார உடைமைகளும் அடங்கும் என்பது தெளிவாக இருக்கிறது. “உன் எல்லா விளைவின் முதற்பலனாலும்” என்ற சொற்றொடர் யெகோவாவுக்கு நம்முடைய விலைமதிப்புள்ள பொருட்களில் மிகச் சிறந்ததை அளிக்கும் கருத்தினை கொடுக்கிறது.
ஆனால் பொருளாதார ரீதியில் கொடுப்பது எவ்வாறு கடவுளைக் கனம்பண்ணக்கூடும்? எல்லா பொருட்களும் ஏற்கெனவே அவருடையதாக இல்லையா? (சங்கீதம் 50:10; 95:3-5) யெகோவாவுக்குச் செய்த ஒரு இருதயப்பூர்வமான ஜெபத்தில், “எல்லாம் உம்மால் உண்டானது” என்று தாவீது ராஜா ஒப்புக்கொண்டார். ஆலயத்தைக் கட்டுவதற்காக அவரும் அவருடைய ஜனங்களும் கொடுத்த அதிகமான நன்கொடைகளைக் குறித்து தாவீது இவ்வாறு சொன்னார்: “உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.” (1 நாளாகமம் 29:14) ஆகவே யெகோவாவுக்கு காணிக்கைகளைச் செலுத்தும்போது, யெகோவா தம்முடைய இருதயத்தின் நற்குணத்தின் காரணமாக நமக்கு கொடுத்திருப்பவற்றிலிருந்தே வெறுமனே நாம் அவருக்குத் திரும்ப கொடுக்கிறோம். (1 கொரிந்தியர் 4:7) ஆனால் முன்னர் கவனித்த விதமாகவே, யெகோவாவைக் கனம்பண்ணுவது மற்றவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவரை உயர்த்துவதையும் உட்படுத்துகிறது. மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருள் சம்பந்தமான காணிக்கைகள் கடவுளைக் கனப்படுத்துகின்றன. இவ்வகையில் யெகோவாவை கனம்பண்ணுவதில் பைபிள் மிகச் சிறந்த உதாரணங்களைக் கொண்டிருக்கிறது.
கடந்த கால உதாரணங்கள்
சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக, வனாந்தரத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வணக்கத்துக்குரிய இடமாக வாசஸ்தலத்தை ஏற்படுத்துவதற்கான யெகோவாவின் காலம் வந்தபோது கடவுள் கொடுத்த மாதிரியின்படி அதை கட்டுவதற்கு பல்வேறு விலைமதிப்புள்ள பொருட்களுக்கான தேவை எழுந்தது. ‘விருப்பமுள்ள இருதயங்கொண்ட ஒவ்வொருவரும் யெகோவாவுக்கு காணிக்கையைக் கொண்டுவரட்டும்’ என்பதாக யெகோவா மோசேக்கு கட்டளையிட்டார். (யாத்திராகமம் 35:5) பதிவு தொடர்ந்து சொல்வதாவது: “பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும் அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.” (யாத்திராகமம் 35:21) உண்மையில் அவர்கள் மனமுவந்து கொடுத்த காணிக்கையானது வேலைக்கு தேவையாக இருந்ததைவிட அதிகமாக இருந்ததால் ஜனங்கள் கொண்டுவருகிறதை ‘நிறுத்தும்படியாக’ சொல்ல வேண்டியதாயிற்று.—யாத்திராகம் 36:5, 6.
மற்றொரு உதாரணத்தை சிந்தித்துப் பாருங்கள். வாசஸ்தலம் அதன் நோக்கத்தை சேவித்து முடித்தப் பின்னர் ஆலயக் கட்டுமான பணிக்கான தயாரிப்புகள் செய்யப்பட்டு வந்தபோது தாவீது தன்னுடைய மகன் சாலொமோன் கட்டவிருந்த ஆலயத்துக்காக தனிப்பட்ட விதமாக மிகுதியான காணிக்கைகளைக் கொடுத்தார். மற்றவர்களையும்கூட சேர்ந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்தார்: அதற்கிசைவாக ஜனங்களும் யெகோவாவுக்கு விலைமதிப்புள்ள பொருட்களைக் காணிக்கையாக கொண்டுவந்தார்கள். தற்கால மதிப்பின்படி வெள்ளி மற்றும் பொன்னின் மதிப்பு மாத்திரமே 5,000 கோடியாக இருக்கும். “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்.”—1 நாளாகமம் 29:3-9; 2 நாளாகமம் 5:1.
நம்முடைய நாளில் ‘மனப்பூர்வமாய்க் கொடுத்தல்’
நம்முடைய நாளில் மனப்பூர்வமாய்க் கொடுப்பதால் வரும் சந்தோஷத்தில் நாம் எவ்வாறு பங்குகொள்ளலாம்? இந்தச் சமயத்தில் உலகில் நடைபெற்றுவரும் மிக முக்கியமான வேலையானது ராஜ்ய பிரசங்கிப்பும் சீஷராக்கும் வேலையுமாகும். (மத்தேயு 24:14; 28:19, 20; அப்போஸ்தலர் 1:8) ராஜ்யத்தின் பூமிக்குரிய அக்கறைகளைத் தம்முடைய சாட்சிகளிடம் ஒப்படைப்பதை யெகோவா தகுதியானதாக கண்டிருக்கிறார்.—ஏசாயா 43:10.
யெகோவாவின் சாட்சிகள் இன்று செய்துவரும் வேலைக்கு பண உதவி தேவை என்பது தெளிவாக இருக்கிறது. ராஜ்ய மன்றங்கள், மாநாட்டு மன்றங்கள், கிளைக்காரியாலயங்கள், தொழிற்சாலைகள், பெத்தேல் இல்லங்கள் ஆகியவற்றைக் கட்டுவதிலும் பராமரிப்பதிலும் பணம் உட்படுகிறது. பைபிள்களையும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களையும் பல்வேறு மொழிகளில் பிரசுரிப்பதும் விநியோகிப்பதும்கூட செலவுகளை உட்படுத்துகின்றன. இப்படிப்பட்ட அமைப்பு சம்பந்தப்பட்ட செலவுகள் எப்படி சமாளிக்கப்படுகின்றன? முற்றிலும் மனப்பூர்வமாய் கொடுக்கப்படும் நன்கொடைகளினாலேயே!
பெரும்பாலான நன்கொடைகள்—இயேசு கவனித்த அந்த விதவையைப்போல—நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்தே வருகின்றன. இவ்விதமாக யெகோவாவைக் கனம்பண்ணுவதற்கிருக்கும் இந்த அம்சத்தில் இருக்கும் நல்ல வாய்ப்பினை இழந்துவிட மனமில்லாதவர்களாய் அவர்கள் மிதமான தொகையை, “தங்கள் திராணிக்குத் தக்கதாகவும்” சில சமயங்களில் “தங்கள் திராணிக்கு மிஞ்சியும்”கூட கொடுக்கிறார்கள்.—2 கொரிந்தியர் 8:3, 4.
“அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” என்பதாக பவுல் அப்போஸ்தலன் கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களிடம் சொன்னார். (2 கொரிந்தியர் 9:7) உற்சாகமாய் கொடுப்பது நல்ல திட்டமிடுதலைத் தேவைப்படுத்துகிறது. பவுல் கொரிந்தியர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 16:2) அதே விதமாகவே, தனிப்பட்டவிதமாகவும் மனப்பூர்வமாகவும் இன்று ராஜ்ய வேலையை முன்னேற்றுவிப்பதற்காக நன்கொடைகளைக் கொடுக்க விரும்புகிறவர்கள் அந்த நோக்கத்துக்காக தங்கள் வருமானத்தில் கொஞ்சத்தை ஒதுக்கிவைக்கலாம்.
யெகோவா தம்மைக் கனப்படுத்துகிறவர்களை ஆசீர்வதிக்கிறார்
பொருளாதார செழுமைதானே ஆவிக்குரிய செழுமைக்கு வழிநடத்தாவிட்டாலும் யெகோவாவைக் கனம்பண்ணுவதற்கு நம்முடைய விலைமதிப்புள்ள பொருட்களை—நம்முடைய நேரம், நம்முடைய பலம், நம்முடைய பொருளாதார வளங்களைத் தாராளமாகப் பயன்படுத்துவது—மிகுதியான ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. இது ஏனென்றால் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரராகிய கடவுள் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறார்: “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.”—நீதிமொழிகள் 11:25.
தாவீது ராஜா மரித்தப்பின்பு, அவருடைய மகன் சாலொமோன் தன்னுடைய தகப்பன் சேகரித்திருந்த மனப்பூர்வமான காணிக்கைகளை யெகோவாவின் கட்டளைப்படி ஒரு மகிமையான ஆலயத்தைக் கட்டுவதற்காக பயன்படுத்தினார். மேலும் சாலொமோன் தன்னுடைய கடவுளின் வணக்கத்தில் உண்மையுள்ளவராய் இருந்த வரையில், “சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் . . . சுகமாய்க் குடியிருந்தார்கள்.” (1 இராஜாக்கள் 4:25) இஸ்ரவேலர் ‘தங்கள் விலைமதிப்புள்ள பொருட்களால் யெகோவாவைக் கனம்பண்ணிய’ வரையில் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பின, ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடின.
பின்னால் மல்கியா தீர்க்கதரிசியின் மூலமாக யெகோவா இவ்வாறு சொன்னார்: “நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப்பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (மல்கியா 3:10) யெகோவாவின் ஊழியர்கள் இன்று அனுபவித்து மகிழும் ஆவிக்குரிய செழுமை, கடவுள் தம்முடைய வாக்குறுதியைக் காத்துவந்திருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது.
ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதில் நாம் நம்முடைய பங்கைச் செய்யும்போது யெகோவா நிச்சயமாகவே அதில் பிரியப்படுகிறார். (எபிரெயர் 13:15, 16) ‘முதலாவதாக ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தால்’ அவர் நம்மைக் காத்துவருவதாக வாக்களிக்கிறார். (மத்தேயு 6:33) இருதயத்தில் மிகுதியான சந்தோஷத்தோடுகூட நாம் ‘யெகோவாவை நம்முடைய விலைமதிப்புள்ள பொருட்களினால் கனம்பண்ணுவோமாக.’
[பக்கம் 28, 29-ன் பெட்டி]
உலகளாவிய வேலைக்காக சிலர் மனப்பூர்வமாய் நன்கொடைகள் கொடுக்கும் வழிகள்
அநேகர் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி அல்லது திட்டமிட்டு அதை “சங்கத்தின் உலகளாவிய வேலைக்காக நன்கொடைகள்—மத்தேயு 24:14” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளில் போட்டுவிடுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் சபைகள் இந்தத் தொகையை நியூ யார்க் புரூக்ளினில் இருக்கும் உலக தலைமை அலுவலகத்துக்கோ அல்லது உள்ளூர் கிளை அலுவலகத்துக்கோ அனுப்பிவைக்கின்றன.
பணமாக அளிக்கப்படும் மனப்பூர்வமான நன்கொடைகள் நேரடியாக பொருளாளர் அலுவலகம், Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410401, Mah., India, அல்லது உங்கள் நாட்டில் சேவைபுரியும் சங்கத்தின் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படலாம். ஆபரணங்கள் அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களும் நன்கொடையாக அளிக்கப்படலாம். இவையனைத்தும் இனாமாக இருப்பதை குறிப்பிடும் சுருக்கமான கடிதமொன்றும் இவற்றோடு சேர்ந்து வரவேண்டும்.
நிபந்தனையோடுகூடிய நன்கொடை ஏற்பாடு: நன்கொடை அளித்தவருக்கு தேவைப்படும்போது அதை அவருக்குத் திருப்பிக் கொடுத்துவிடும்படியான ஏற்பாட்டுடன் உவாட்ச் டவர் சங்கத்திடம் பணம் கொடுக்கப்படலாம். மேலுமான தகவலுக்கு, பொருளாளர் அலுவலகத்துக்கு மேல் குறிப்பிடப்பட்ட விலாசத்தில் சொஸைட்டியுடன் தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள்.
திட்டமிட்ட நன்கொடை
நேரடியான பண நன்கொடைகளும் நிபந்தனையோடுகூடிய பண நன்கொடைகளும் அளிக்கும் முறைகள் மட்டுமல்லாமல், உலகளாவிய ராஜ்ய சேவைக்கு நன்மையுண்டாகக் கொடுப்பதற்கு மற்ற முறைகளும் இருக்கின்றன. பின்வருபவை இவற்றில் அடங்கியுள்ளன:
காப்புறுதி: ஆயுள் காப்புறுதி பத்திரம் அல்லது பணி ஓய்வு/ஓய்வூதிய திட்டத்தில், உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியம் உடையதாக குறிப்பிடலாம். அத்தகைய ஏதாவது ஏற்பாடு செய்தால் சங்கத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
வங்கி பண இருப்பு: வங்கி பண இருப்புகள், சேமிப்பு சான்றிதழ்கள், அல்லது தனிநபரின் ஓய்வுசேமிப்பு விவரங்கள் உவாட்ச் டவர் சொஸைட்டியின் பொறுப்புக்குரியவையாக அல்லது மரணம் ஏற்பட்டால் அதற்கு கொடுக்கும்படியாக அவ்விடத்து வங்கி ஏற்பாடுகளின்படி வைக்கப்படலாம். அத்தகைய ஏற்பாடுகள் ஏதாயினும் செய்தால் சங்கத்துக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
பங்கு இருப்புகளும் வாக்குறுதி பத்திரங்களும்: பங்கு இருப்புகளும் வாக்குறுதி பத்திரங்களும் நேரடியான நன்கொடையாக அல்லது அளிப்பவருக்கு வருவாய் தொடர்ந்து செலுத்தப்படும் ஓர் ஏற்பாடாக உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு அளிக்கப்படலாம்.
நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு போன்றவை நேரடியான நன்கொடையாக அல்லது அதை அளிப்பவர் உயிரோடிருக்கும் வரையில் அவற்றை அனுபவித்து, அவருடைய மரணத்துக்குப்பின் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு உரியதாகும்படி செய்யலாம். நிலம், வீடு எவற்றையாவது சட்ட முறைப்படி ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக ஒருவர் சங்கத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.
விருப்ப ஆவணங்களும் பொறுப்பாவணங்களும்: சொத்து அல்லது பணம், சட்டப்பூர்வ விருப்பாவணங்களின்மூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்குக் கொடுக்கப்படலாம் அல்லது ஒப்படைக்கப்படுவோர் பொறுப்பில் அனுபவப் பாத்தியம் உடையதாக சங்கம் பெயர் குறிப்பிடப்படலாம். ஒரு மத அமைப்பு நன்மையடையும்படியான ஒரு பொறுப்பாவணம் வரி சம்பந்தப்பட்ட சில சலுகைகளைப் பெறலாம். அந்த விருப்பாவணத்தின் அல்லது பொறுப்பாவணத்தின் ஒப்பந்தப் பிரதி ஒன்று சங்கத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.
இந்தத் திட்டமிட்ட நன்கொடை ஏற்பாடுகள் ஏதாவதொன்றில் அக்கறையுள்ளவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட விலாசத்தோடு அல்லது தங்கள் தேசத்தில் சேவைசெய்யும் சங்கத்தின் அலுவலகத்தோடு தொடர்புக் கொள்ளவேண்டும். இந்த ஏற்பாடுகள் சம்பந்தப்பட்ட எந்தவித ஆவணங்களின் நகலும் சங்கத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.