மறைந்திருக்கும் பொக்கிஷங்களைத் தேடுவதுபோல் தேடிக்கொண்டிருங்கள்
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படும் ஞானமாகிய இரத்தினக்கற்கள் எவ்வளவு மதிப்பிடற்கரியதாக இருக்கிறது! இந்த ஆபரணங்கள் தெய்வீக நோக்கத்தை வெளிப்படுத்துகிறது, நமக்கு முன்பாக உணர்ச்சியைத் தூண்டும் எதிர்பார்த்தலை வைத்திருக்கிறது. அது ஆறுதலை அளித்து எப்படிக் கடவுளைத் திருப்தி செய்யலாம் என்று நமக்குக் காட்டுகிறது. (ரோமர் 15:4) மற்றவர்களோடு நம்முடைய விவகாரங்களில் ஞானமாக நடக்கவும் இந்த இரத்தினக் கற்கள் நமக்கு உதவி செய்கிறது. நிச்சயமாகவே “ஜீவ பாதையில்” திருப்திகரமாகவும், சந்தோஷத்துடனும் நடக்க கடவுளிடமிருந்து வரும் ஞானம் நமக்கு உதவிபுரிகிறது.—சங்கீதம் 16:11; 119:105.
ஞானத்தின் அனுகூலங்கள் அநேகமாக இருப்பதால் அதை நாம் வெகுவாக மதிக்கவேண்டும். “என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்” என்று ஆளுருவம் கொடுத்து பேசப்படும் ஞானம் சொல்லுகிறது. “அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை. அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும். வெள்ளியைப் பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். முத்துக்களைப் பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல.”—நீதிமொழிகள் 8:8-11.
ஏன் தேடிக்கொண்டிருக்க வேண்டும்?
வழக்கமாகவே, புதைக்கப்பட்டிருக்கும் ஆபரணங்கள், தங்கம் அல்லது வெள்ளிக்காகத் தேடுவது பலனளிப்பதாக இல்லை. தெய்வீக ஞானத்திற்காகத் தேடுவதில் இது உண்மையாக இருக்கத் தேவையில்லை. ஆனால் நாம் எப்படி இந்தப் பொக்கிஷத்தை எவ்வளவு ஆர்வத்தோடு விரும்புகிறோமோ, அதைக் கண்டுபிடிக்க எவ்வளவு கடுமையாக நாம் உழைக்கிறோமோ அதைச் சார்ந்து இருக்கிறது வெற்றி. அதன் உண்மையான மதிப்பை நாம் கண்டுகொள்வோமேயாகில் மற்றெல்லா விலையேறப்பெற்றவைகளைக் காட்டிலும் மேலாக நாம் அதை மனதில் வைத்துப் போற்றுவோம். “பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை”யாக இருக்கிறது.—நீதிமொழிகள் 16:16.
நீதிமொழிகள் 2:1-6 தூண்டுவதாவது: “என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும் பொருட்டு நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறது போல் தேடுவாயாகில், அப்பொழுது யெகோவாவுக்குப் (NW) பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். யெகோவா ஞானத்தைத் தருகிறார். அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.”
புதைத்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்கள் மறைக்கப்பட்டிருப்பதால், அவைகளைத் தேடுவது அவசியமாக இருக்கிறது. தோண்டும்போது சிலர் பொழுதுபோக்கு நேரத்தை, உணவை, தூக்கத்தைத் தியாகம் செய்கிறார்கள். ஆனால் பொக்கிஷம் கண்டுபிடிக்கப்படும்பொழுது அப்படிப்பட்ட முயற்சிகள் மேன்மையானதாகக் கருதப்படுகிறது. தெய்வீக ஞானத்தைத் தேடும்போது நாம் அதேமாதிரியானத் தியாகங்களைச் செய்ய வேண்டியதாக இருக்கிறது. புதைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களைத் தேடுவது ஆர்வமுள்ளத் தோண்டுதலைத் தேவைப்படுத்துகிறது. ஆகையால் ஞானத்திற்காகத் தேடுவது விடாமுயற்சியை அவசியப்படுத்துகிறது. பைபிளையும், கிறிஸ்தவ வெளியீடுகளையும் கிரகிப்பது போதுமானதாக இல்லை. ஆவிக்குரிய இரத்தினக் கற்களைக் கண்டடைவதற்கு நேரம், ஆராய்ச்சி மற்றும் தியாகம் தேவையாக இருக்கிறது. ஆனால் நாம் வேதாகமங்களின் உட்கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும்போது என்னே மகிழ்ச்சியாக இருக்கிறது!—நெகேமியா 8:13.
வெற்றிகரமாகப் பொக்கிஷத்தைத் தேடுவது
ஆம், கடவுளுடைய வசனத்தைத் தோண்டுவதிலிருந்தும், ஞானமான இரத்தினக் கற்களைக் கண்டுபிடிப்பதிலிருந்தும் மகிழ்ச்சி விளைகிறது. (நீதிமொழிகள் 3:13-18) நாம் சொந்தமாக அல்லது குடும்பமாக ஒரு நல்ல நூல் நிலையத்தைக் கட்டுவோமாகில், நாம் ஞானமுள்ளோராக இருக்கிறோம். ஆனால் அதில் என்ன அடங்கி இருக்கவேண்டும்? ஒரு நல்ல அகராதியுடன், வேதாகமங்களின் பலவகையான மொழிபெயர்ப்புகள், அதோடுகூட காவற்கோபுரமும் அதன் சக இதழ் விழித்தெழு!-வின் ஒவ்வொரு ஆண்டு நகல்கள் உட்பட, கிறிஸ்தவ பைபிள் பிரசுரங்களை வைத்திருப்பது பிரயோஜனமுள்ளது என்று யெகோவாவின் சாட்சிகள் காண்பார்கள். பொக்கிஷங்களைத் தேடுபவர்களாக அது நமக்கு உதவி புரிவதாக இருக்க வேண்டுமென்றால் நிச்சயமாகவே ஒரு நூல்நிலையம் சரியானபடி உபயோகிக்கப்பட வேண்டும்.
ஞானத்தைத் தேடவேண்டும் என்கிற நம் ஆவலில், நாம் காவற்கோபுர பிரசுரங்களின் இன்டெக்ஸ் அல்லது காவற்கோபுர சங்கத்தின் புத்தகங்கள் அல்லது பத்திரிகைகளின் ஆண்டு தொகுப்பு புத்தகங்களின் கடைசி பக்கத்திலுள்ள பொருளடக்க அகரவரிசை அட்டவணையையும் உபயோகிக்கலாம். இவைகளெல்லாம் தெய்வீக ஞானத்தைத் தேடுவதற்கான அடிப்படை கருவிகளாக இருக்கின்றன. உண்மையிலே, அவை ஒரு தேசப்படத்தைப் போல தெய்வீக ஞானமாகிய “மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்க”ளுக்கு நம்மை வழிநடத்திச் செல்லக்கூடும். (நீதிமொழிகள் 2:4) ஆராய்ச்சிக்குத் தேவையான சில வெளியீடுகள் நம்மிடம் இல்லாவிடில் யெகோவாவின் சாட்சிகளின் உள்ளூர் ராஜ்யமன்றத்தில் அவை கிடைக்கலாம்.
இப்போது வெற்றிகரமான பொக்கிஷத் தேடுதலுக்கு நாம் உதாரணங்கள் கொடுப்போமாக. நம்முடைய பைபிள் வாசிப்பில், இயேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்த பிறகு யூதாஸ் காரியோத் எப்படிச் செத்தான் என்பதைக் குறித்து நாம் ஆச்சரியப்படுபவர்களாக இருக்கலாம். மத்தேயு 27:5 சொல்லுவதாவது யூதாஸ் “புறப்பட்டுபோய் நான்று கொண்டு செத்தான்.” ஆனால் அப்போஸ்தலர் 1:18 சொல்லுகிறது: “தலைகீழாக விழுந்தான், அவன் வயிறு வெடித்தது, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.” ஆகையால் யூதாஸ் எப்படிச் செத்தான்? வேதாகமங்களின் பேரில் உட்பார்வை என்கிற ஆங்கில வெளியீட்டிலுள்ள “வேதவாக்கியங்களின் அகரவரிசை அட்டவணையில்” இந்த வேதவசனங்களின் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கும் பிரசுரங்களை கவனிக்கையில் ஒரு விடையைக் காணலாம். அது நமக்குக் கூறுவதாவது: “மத்தேயு தற்கொலை செய்துகொள்ளும் விதத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால் அப்போஸ்தலர் அதன் விளைவை விவரிக்கிறது. இந்த இரண்டு விவரங்களையும் ஒன்று சேர்த்தால், யூதாஸ் ஒரு செங்குத்தான பாறையில் தூக்குப்போட முயற்சித்திருப்பான். ஆனால் கயிறு அல்லது மரக்கிளை முறிந்ததால் அவன் விழும்போது கீழேயுள்ள பாறையில் மோதி வயிறு பிளந்து செத்திருப்பான் என்று தோன்றுகிறது. எருசலேமைச் சுற்றியிருக்கும் பிரதேசத்தின் ஸ்தல அமைப்பு அப்படிப்பட்ட நிகழ்ச்சியை மனதில் நினைக்கக்கூடியதாக ஆக்குகிறது.” (புத்தகம் 2, பக்கம் 130)
ஒத்துவாக்கியங்களை உபயோகிப்பது பைபிள் மூல வாக்கியங்களைக் காண நமக்கு உதவிபுரிகிறது. நிச்சயமாக ஒரு வேதவசனத்தை விவாதிக்கும்போது அதன் சந்தர்ப்ப சூழ்நிலையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதை விவரிக்க, சங்கீதம் 144:12-14 வசனங்களை நாம் கவனிப்போமாக. இந்த வசனங்கள் சிலர் பின்வருமாறு சொல்லுவதாக காட்டுகின்றன: “அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக் கன்றுகளைப் போலவும் எங்கள் குமாரத்திகள் சித்திரத்தீர்த்த அரமனை மூலைக் கற்களைப் போலவும் இருப்பார்கள். எங்கள் களங்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத் தக்கதாய் நிரம்பியிருக்கும், எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும். எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும்.” இந்த வசனங்கள் கடவுளுடைய ஜனங்களுக்குப் பொருந்துகிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அப்படியல்ல என்று காட்டுகிறது. வசனம் 11-ல் சங்கீதக்காரன் தாவீது மாயையைப் பேசுகிறவர்களிடமிருந்து விலகி தப்புவிக்க வேண்டிக் கொள்ளுகிறான். அவர்கள் தங்கள் குமாரர்கள், குமாரத்திகள், ஆடுகள், எருதுகள், இவைகளைப் பற்றி பெருமைப்பட்டுக் கொண்டார்கள். வசனம் 15-ன்படி அப்படிப்பட்ட தவறு செய்பவர்கள் சொல்வதாவது: “இவ்விதமான சீரைப்பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது.” இருப்பினும் இதற்கு நேர்மாறாக தாவீது கூறுவதாவது: “யெகோவாவைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.”
ஆவிக்குரிய இரத்தினக் கற்கள் மிகுதியாக இருக்கின்றன!
ஞானத்திற்காக வெற்றிகரமாக தேடுதலிலிருந்து சந்தோஷம் நிச்சயமாகவே விளைகிறது. ஆராய்ச்சியின் மூலம் காணக்கூடிய ஆவிக்குரிய இரத்தினக் கற்கள் பைபிள் கேள்விகளுக்குத் திருப்திகரமாக கொடுக்கப்படும் விடைகளையும் உட்படுத்தும். தேடிக்கொண்டே இருந்தால் எப்படிப்பட்ட விடைகளை நாம் காணலாம்! உதாரணமாக, காயீன் அவன் மனைவியை எங்கு பெற்றான்? காவற்கோபுரம் சொன்னதாவது (அக்டோபர் 1, 1981): “ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அநேக பிள்ளைகள் இருந்தார்கள். இரண்டு பேர் (காயீன், ஆபேல்) மட்டுமல்ல என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது: “சேத்தைப் பெற்றெடுத்தபோது (மற்றுமொரு குமாரன்) ஆதாமின் வயது எண்ணுறாக இருந்தது. இதற்கிடையில் அவன் குமாரர்களுக்கும், குமாரத்திகளுக்கும் தகப்பனானான்.” (ஆதியாகமம் 5:4) இந்தத் தகவலோடு, காயீன் அவன் மனைவியை எங்கிருந்து பெற்றிருப்பான் என்று நீங்கள் சொல்லுவீர்கள்? ஆம், அவன் தன்னுடைய சகோதரிகளில் ஒருத்தியை மணந்திருப்பான். இப்படி நெருங்கிய உறவிலுள்ள பெற்றோருக்குப் பிறக்கும் எந்தப் பிள்ளைகளுக்கும் இன்று இது அபாயகரமானதாக இருக்கும். ஆனால் மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில் மனிதவர்க்கம் பரிபூரணத்துக்கு மிகவும் நெருங்கி இருந்தபொழுது அது ஒரு பிரச்னையாக இருக்கவில்லை.
பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நீதிமொழிகள் 1:7-ல் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை கவனித்து நாம் ஆச்சரியப்படலாம்: “யெகோவாவுக்குப் பயப்படுதலே” [NW] என்பது என்ன? ஆராய்ச்சி நம்மை மே 15, 1987 காவற்கோபுரத்திற்கு வழிநடத்தும். அது கூறுவதாவது: “அது பணிவோடுகூடிய அச்சம், ஆழ்ந்த பயபக்தி, அவரைத் துக்கப்படுத்தாமலிருக்க வேண்டும் என்ற ஆரோக்கியமான பயம். ஏனெனில் நாம் அவருடைய அன்பான இரக்கத்தையும், நற்குணத்தையும் போற்றுகிறோம். “யெகோவாவுக்கு பயப்படுதல்” என்பது அவருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பவர்கள் மேல் தண்டனை அல்லது மரணத்தைக் கொண்டுவர உரிமையும் அதிகாரமும் உடைய பிரதான நியாயாதிபதியாகவும் சர்வ வல்லவராகவும் அவர் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அர்த்தங்கொள்ளுகிறது. அது கடவுளை விசுவாசத்தோடு சேவிக்கவும், அவரில் முழு நம்பிக்கையோடு இருக்கவும் அவர் பார்வையில் எது கெட்டதோ அதை வெறுக்க வேண்டும் என்றும் அர்த்தம் கொள்ளுகிறது.”
தேடிக்கொண்டே இருங்கள்!
காவற்கோபுரம் விலையேறப்பெற்ற ஆவிக்குரிய இரத்தினக் கற்களைக் கண்டுபிடிக்க ஆவலோடு தேடுபவர்களுக்கு உதவி புரிவதற்காக பிரசுரிக்கப்படுகிறது. நம் அனைவருக்கும் ஞானமும் கடவுளுடைய வசனத்தைப் புரிந்துகொள்ளும் அறிவும் தேவை. நீதிமொழிகள் 4:7, 8, சொல்லுவதாவது: “ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி, என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும். நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னை கனம்பண்ணும்.”
வேதாகமங்களின் பேரில் உட்பார்வையைச் சம்பாதிப்பதாலும் ஞானத்தை சரியானபடி உபயோகிப்பதாலும் தான் நாம் உண்மையான சந்தோஷத்தைக் காணமுடியும். ஆம், தெய்வீக ஞானத்தை அப்பியாசிப்பதால் மட்டும்தான் நாம் யெகோவாவை சந்தோஷிப்பிக்க முடியும். ஆகையால் மறைந்து கிடக்கும் பொக்கிஷங்களைப் பொறுத்தவரை ஞானத்தைத் தேடுவதிலிருந்து உங்களை எதுவும் தடை செய்யாதிருக்கக்கடவது. (w89 3/15)
[பக்கம் 4, 5-ன் படங்கள்]
புதைந்துகிடக்கும் பொக்கிஷங்களைத் தேட கடுமையாக முயற்சியெடுத்து தோண்ட வேண்டும். தெய்வீக ஞானத்திற்கான நம்முடைய தேடுதலில் நாம் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டாமா?