இளைஞர் கேட்கின்றனர் . . .
எப்பொழுதும் குற்றம்சாட்டப்படுவதை நான் எப்படி நிறுத்துவது?
“என்ன விஷயமானாலும் எப்பவுமே எனக்கு தான் திட்டுகிடைக்கும். வீடு திறந்துகிடந்தாலோ, ஸ்டவ் ஆஃப் ஆகாம இருந்தாலோ, எந்தப் பொருளாவது இடம்மாறியிருந்தாலோ, ஏதாவது செய்யப்படாம இருந்தாலோ, எல்லாத்துக்குமே இந்த ராமன் தான் காரணம்னு சொல்லுவாங்க!”—ராமன்.
நீங்கள் ஒரு பருவவயதினராக இருக்கும்போது, எதற்கெடுத்தாலும், எது தவறாக ஆனாலும், நீங்கள் தான் குற்றம்சாட்டப்படுவதாக சில சமயங்களில் உங்களுக்கு தோன்றக்கூடும். முன்பு வந்த ஒரு கட்டுரையில், பெற்றோர் சில சமயங்களில் மிகவும் அவசரப்பட்டு தங்கள் பிள்ளைகளை குற்றம்சாட்டுகின்றனர் என்பதை நாங்கள் ஒத்துக் கொண்டோம். a இதற்கான காரணங்கள் பெற்றோருக்கு பொதுவாக இருக்கும் அக்கறை என்பதிலிருந்து ஆழமான உணர்ச்சிப்பூர்வ துயரம் என்பது வரையாக வேறுபடக்கூடும். காரணம் எதுவானாலும்சரி, நீங்கள் செய்யாத தவறுக்காக உங்களைப் பொறுப்பாளியாக்குவது, உங்களைப் புண்படுத்துவதாகவும் இழிவுபடுத்துவதாகவும் இருக்கக்கூடும்.
அபூரண மனிதராக இருப்பதால், அவ்வப்போது நீங்கள் தவறு செய்வீர்கள் என்பது உண்மைதான். (ரோமர் 3:23) கூடுதலாக, நீங்கள் இளைஞராயிருப்பதால் உங்களுக்கு அந்தளவுக்கு அனுபவமும் கிடையாது. (நீதிமொழிகள் 1:4) தீர்மானம் எடுப்பதிலும்கூட நிச்சயமாகவே நீங்கள் எப்போதாவது தவறுசெய்வீர்கள். எனவே, நீங்கள் தவறுசெய்யும் போது, அதற்காக பொறுப்பாளியாக கருதப்படுவது சரியாகவும் நியாயமாகவும் உள்ளது.—பிரசங்கி 11:9.
அப்படியானால், நீங்கள் உண்மையில் செய்திருக்கும் ஏதோ ஒன்றிற்காக குற்றம்சாட்டப்பட்டால், அப்போது நீங்கள் எப்படி பிரதிபலிக்க வேண்டும்? சில இளைஞர்கள், தாங்கள் ஏதோ பெருத்த அநியாயத்துக்கு ஆளாக்கப்பட்டதைப் போல நடந்துகொள்ள முயலுகிறார்கள். பெற்றோர் எதற்கெடுத்தாலும் தங்களைத்தான் குற்றம்சாட்டுகிறார்கள் என்று அவர்கள் கத்தி கூச்சலிடுகின்றனர். இதன் விளைவு? நிலைகுலைந்த பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குப் புரியவைப்பதற்கு இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுக்கின்றனர். பைபிள் இந்த அறிவுரையைக் கொடுக்கிறது: “மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.” (நீதிமொழிகள் 1:7, 8) உங்களுடைய குற்றங்களை ஒத்துக்கொண்டு தேவைப்படும் மாற்றங்களைச் செய்வீர்களானால், உங்களுடைய தவறுகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.—எபிரெயர் 12:11.
பெற்றோருடன் ‘ஆலோசித்தல்’
இருப்பினும், உங்களுடைய தவறாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் குற்றம்சாட்டப்பட்டாலோ அல்லது குற்றச்சாட்டு தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலோ, அது முற்றிலும் வேறுபட்ட ஒரு காரியம். நீங்கள் கோபப்படலாம், மேலும் ஆத்திரமடையலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. எப்படியானாலும் எனக்கு திட்டுகிடைக்கத்தானே போகிறது என்று முடிவு செய்துகொண்டு தவறாக நடப்பதற்கும்கூட நீங்கள் தூண்டப்படுவீர்கள். (பிரசங்கி 7:7) ஆயினும், வன்மத்துடன் செயல்படுவது எல்லோருக்கும் தீங்கிழைக்கிறது. (ஒப்பிடுக: யோபு 36:18, NW.) நீதிமொழிகள் 15:22 இத்தகைய காரியங்களைக் கையாளுவதற்கான சிறந்த வழியைச் சுட்டிக்காட்டுகிறது. அது சொல்கிறது: “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்.” ஆம், உங்கள் பெற்றோரால் நீங்கள் நடத்தப்படும் விதத்தை மாற்றுவதற்கான ஒரு வழி, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதே.
முதலாவதாக, பைபிள் அழைக்கும் ‘ஏற்ற காலத்திற்காக’ நம்பிக்கையோடு காத்திருங்கள். (நீதிமொழிகள் 15:23) எழுத்தாளர் கிலேட்டன் பார்போ கருத்துரைக்கிறார்: “இரு சாராருமே அமைதியாக இருக்கக்கூடிய, மேலும் நீங்கள் எல்லாருமே நல்ல மனநிலையில் இருக்கும் நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுங்கள்.” கூடுதலாக பைபிள் இவ்விதம் எச்சரிக்கிறது: “கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.” (நீதிமொழிகள் 15:1) எனவே, உங்கள் அணுகுமுறையில், சண்டையிடும் தோரணையில் அல்ல, தயவுடனும் மரியாதையுடனும் இருப்பதற்கு முயற்சி எடுங்கள். கோபமடைவதைத் தவிருங்கள். (நீதிமொழிகள் 29:11) உங்கள் பெற்றோரைத் தாக்குவதற்கு மாறாக (‘எதுக்கெடுத்தாலும் எப்பவும் நீங்க என்னையே குற்றம்சாட்டுறீங்க!’), அவர்கள் உங்களை எதற்கெடுத்தாலும் குற்றம்சாட்டுவது உங்களை எப்படி உணரச்செய்கிறது என்பதை விளக்க முயலுங்கள். (‘நான் செய்யாத தவறுகளுக்காக என்னைக் குற்றம்சாட்டும்போது நான் ரொம்ப சங்கடமாக உணருகிறேன்.’)—ஆதியாகமம் 30:1, 2-ஐ ஒப்பிடுக.
சில தப்பபிப்பிராயங்களின் காரணமாக உங்கள் பெற்றோர் உங்கள்மீது கோபப்படுகிற சந்தர்ப்பங்களுக்கும்கூட இதுவே பொருந்துகிறது. ஒருசமயம் இளம் இயேசு எங்கேயிருக்கிறார் என்பதை அறியாதபோது அவருடைய பெற்றோர் நிலைகுலைந்துபோனார்கள். ஆனால் இயேசு சிணுங்கி அழவோ, அல்லது குறைசொல்லவோ தொடங்கவில்லை. அமைதியாக, அந்தச் சூழ்நிலைமையை அவர் விளக்கினார். (லூக்கா 2:49) உங்களுடைய தொந்தரவுகளை, உங்களுடைய பெற்றோரோடு சிறுபிள்ளைத்தனமற்ற முறையில் பேசி தீர்த்துக்கொள்ள ஏன் நீங்கள் முயலக்கூடாது? அவர்களுக்கு உங்கள்மீது அக்கறையிருப்பதால்தான் நிலைகுலைந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்! அவர்களுக்கு மரியாதையுடன் செவிகொடுங்கள். (நீதிமொழிகள் 4:1) நடந்த சம்பவத்தில், உங்களுடைய பாகத்தை விளக்குவதற்கு முன்பாக, அவர்களுடைய கோபம் தணிவதற்காக பொறுமையுடன் காத்திருங்கள்.
‘உங்கள் நடக்கையினால் நிரூபித்தல்’
இருப்பினும், சில பெற்றோர்கள் ஏன் எடுத்தவுடனேயே தங்களுடைய பிள்ளைகளைப் பற்றி அவசரப்பட்டு தவறான முடிவுக்கு வந்துவிடும் மனச்சாய்வைக் கொண்டிருக்கிறார்கள்? வெளிப்படையாகச் சொல்லப்போனால், இளைஞர்கள் சில சமயங்களில் தங்கள் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடக்கிறார்கள். நீதிமொழிகள் 20:11 சொல்லுகிறது: “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.” உங்களுடைய பெற்றோரிடம் எப்படிப்பட்ட மதிப்பைக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களுடைய “செய்கை” உங்களை ‘செம்மையானவராகவும்’ ஜாக்கிரதையானவராகவும் காண்பித்திருக்கிறதா அல்லது கவலையற்றவராக, பொறுப்பில்லாதவராகக் காண்பித்திருக்கிறதா? இரண்டாவதாக சொல்லப்பட்டது உண்மையாக இருந்தால், உங்களுடைய பெற்றோர் உங்களைப் பற்றி அவசரப்பட்டு தவறான முடிவுக்கு வந்துவிடுவதைக் குறித்து ஆச்சரியப்படாதீர்கள். முதலில் குறிப்பிடப்பட்ட ராமன் தன்னுடைய பெற்றோர் தன்னை விமர்சிப்பதைக் குறித்து சொல்லும்போது, இவ்வாறு ஒப்புக்கொண்டான்: “இத நான் ஒத்துக்கிட்டுத்தான் ஆகனும், சில சமயங்களில் அவங்களுடைய சந்தேகங்கள் கொஞ்சம் உண்மையாத்தான் இருந்திச்சி.”
இது உங்களுடைய விஷயத்திலும் உண்மையாக இருக்குமானால், நீங்கள் செய்யவேண்டிய ஒரே காரியமானது நீங்கள் முன்பு செய்துவந்தச் செயல்கள் மறந்துபோகச் செய்யும்விதமாக வாழ்வதே. நம்பகரமான மற்றும் பொறுப்புள்ள நடத்தையை ஸ்தாபிப்பதன் மூலம் நீங்கள் மாற்றங்கள் செய்திருக்கிறீர்களென்றும், உங்களை நம்ப முடியும் என்றும் உங்கள் பெற்றோரை நீங்கள் படிப்படியாக நம்பவைக்கலாம்.
ராமனின் உதாரணம் இந்த குறிப்பைத் தெளிவாக்குகிறது. அவனுடைய நண்பர்களும், குடும்பத்தினரும் காரியங்களை மறந்துவிடும் அவனுடைய சுபாவத்தின் காரணமாக ஆப்சன்ட் மைன்டட் புரபெசர் என்று அவனை செல்லமாக பட்டப்பெயரிட்டனர். உங்களுடைய பெற்றோரும், “முதிர்ச்சியில்லாதவன்” என்றோ “பொறுப்பற்றவன்” என்றோ சாதகமற்ற பட்டப்பெயரில் உங்களை அழைத்திருக்கிறார்களா? “பருவவயதினர், அதைக் கண்டுகொண்டு தங்களை மாற்றிக்கொள்ளக்கூடும் என்பதற்காக, எது தவறு என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு” இத்தகைய முத்திரை பயன்படுவதாக பெற்றோர் உணரலாம் என்று எழுத்தாளர் காத்லீன் மக்காய் குறிப்பிடுகிறார். இருப்பினும், அநேக சமயங்களில் இத்தகைய முத்திரைகள் உண்மையில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும்கூட, அந்த முத்திரை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு குறிப்பை தெரிவித்தது என்று ராமன் உணர்ந்துகொண்டான். “நான் எப்பவும் ஏதாவது ஒரு காரியத்தைப் பத்தி சிந்திச்சிட்டிருப்பேன். அதனால சாவி, அல்லது என்னுடைய வீட்டுப்பாட நோட்டு போன்ற பொருள்களை தொலைச்சுடுவேன், இன்னும் வீட்டுவேலைகளைக்கூட மறந்துடுவேன்” என்று அவன் ஒத்துக்கொள்கிறான்.
எனவே, ராமன் மாற்றங்களைச் செய்யத் தொடங்கினான். அவன் நினைவுகூருகிறான்: “பொறுப்புகளையும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயங்களையும் நான் கத்துக்க ஆரம்பிச்சேன்; ஒரு அட்டவணைப் போட்டு தனிப்பட்ட பைபிள் படிப்பை ரொம்ப கவனமாக படிக்க ஆரம்பிச்சேன்; சிறிய காரியமானாலும்சரி, பெரிய காரியமானாலும்சரி, யெகோவா இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்னு நான் தெரிஞ்சுகிட்டேன்.” (லூக்கா 16:10) பைபிள் நியமங்களைப் பொருத்துவதன் மூலமாக, ஞாபகமறதிக்குப் பேர்போனவனாய் குறிப்பிடும் பெயரை ராமன் நீக்கிப் போட்டான். நீங்களும் இதைப் போலவே செய்ய ஏன் முயலக்கூடாது? ஒரு பட்டப்பெயரோ, முத்திரையோ உங்களுக்கு கவலையுண்டாக்கினால், அதைப் பற்றி உங்களுடைய பெற்றோருடன் கலந்துபேசுங்கள். ஒருவேளை அது உங்களை எவ்விதம் பாதிக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
பட்சபாதம் காட்டுவதைப் போல தோன்றினால்
சிலசமயங்களில் பட்சபாதம் காட்டுவது, குற்றச்சாட்டுக்கு பின்னுள்ள காரணமாக தோன்றலாம். ராமன் நினைவுகூருகிறான்: “என்னோட அண்ணன்களோ அக்காக்களோ வீட்டுக்கு நேரம் கழிச்சு வந்தாக்கூட அவங்களுக்கு திட்டெல்லாம் கிடைக்காது, ஆனா நான் லேட்டா வந்தாமாத்திரம் திட்டு கிடைக்கும்.” கயானா நாட்டைச் சேர்ந்த ஆல்பர்ட் தான் வளர்ந்துவரும்போது இதேபோன்ற உணர்ச்சியைக் கொண்டிருந்ததாக நினைவுகூருகிறான். அவனுடைய அம்மா அவனுடைய சகோதரனைவிட அவனை அதிக கடுமையாக சிட்சித்ததாக அவனுக்குத் தோன்றியது.
இருந்தபோதிலும், காரியங்கள் எப்போதும் அவை தோன்றுவதைப் போல இருக்கிறதில்லை. பெற்றோர் மூத்த பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் அளிப்பதற்கான காரணம் பட்சபாதம் அல்ல, ஆனால் வெறுமனே, அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள் என்று தாங்கள் உணரும் காரணத்தாலேயே. அல்லது விசேஷித்த சூழ்நிலைமைகள் ஒருவேளை உட்பட்டிருக்கலாம். தன்னுடைய சகோதரன் தண்டிக்கப்படாததற்கான காரணம் அவன் “நோஞ்சானாகவும், அடிக்கடி சுகமில்லாமலும் இருந்ததுதான்” என்று ஆல்பர்ட் ஒத்துக்கொள்கிறான். விசேஷித்த தேவைகளையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிள்ளை கொண்டிருக்கும் வரைமுறைகளையோ பெற்றோர் புரிந்துகொண்டிருப்பது அவர்களுடைய பட்சபாதத்தைக் காட்டுகிறதா?
உண்மைதான், சில சமயங்களில் பெற்றோர் தங்களுடைய தனிப்பாசத்துக்குரியவரைக் கொண்டிருப்பார்கள். (ஆதியாகமம் 37:3-ஐ ஒப்பிடுக.) “அம்மா அவன்மேலே ரொம்ப பாசம் வைச்சிருந்தாங்க” என்று தன்னுடைய பலவீனமான சகோதரனைக் குறித்து ஆல்பர்ட் சொல்லுகிறான். சந்தோஷகரமாக, கிறிஸ்தவ அன்பு விரிவானதாக உள்ளது. (2 கொரிந்தியர் 6:11-13) எனவே, உங்களுடைய பெற்றோர்கள் உங்களுடைய உடன்பிறந்தவர்கள்மீது “தனிப்பட்ட பாசத்தை” வைத்திருந்தாலும்கூட, உங்கள்மீது அன்பேயில்லை என்று அது அர்த்தப்படுத்துவதில்லை. உண்மையில் கேள்வி என்னவென்றால், உங்களுடைய உடன்பிறந்தவர்மீது கொண்டிருக்கும் கண்மூடித்தனமான அன்பின் காரணமாக, உங்களைக் குற்றம்சாட்டி, அநியாயமாக நடத்துகிறார்களா? விஷயம் அவ்விதமாக தோன்றினால், நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று எப்படியாவது அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அமைதியான, நியாயமான விதத்தில், அவர்கள் பட்சபாதத்தைக் காட்டியிருப்பதாக நீங்கள் உணரும் குறிப்பிட்ட உதாரணங்களை அவர்களுக்குச் சொல்லுங்கள். பெரும்பாலும் அவர்கள் உங்களுக்கு செவிகொடுப்பார்கள்.
பிரச்சினையிலுள்ள குடும்பங்கள்
எல்லா சூழ்நிலைமைகளும் எளிதாக மாறக்கூடியதாக இல்லை என்பது ஒப்புக்கொள்ளத்தக்கதே. சில பெற்றோர்களுக்கு, வெட்கப்படுத்துவதும் குற்றம்சாட்டுவதும் ஆழமாக ஊன்றிய குணங்களாக உள்ளன. உணர்ச்சிப்பூர்வமாக பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் அல்லது தான் அடிமையான கெட்ட பழக்கத்திலிருந்து மீண்டுவருவதற்கு போராடிக்கொண்டிருக்கும் பெற்றோரின் மத்தியில் இது விசேஷமாக உண்மையாக இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகளில் சிறிதளவு நன்மையே விளையக்கூடும். உங்களுடைய விஷயத்திலும் இது உண்மையாக இருப்பதாக தோன்றுமானால், உங்கள் பெற்றோருடைய பிரச்சினையைத் தீர்க்க உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் மற்றவர்களுடைய உதவியோடுதான் அதைத் தீர்க்க முடியுமென்றும் உணர்ந்து கொள்ளுங்கள். உங்களால் செய்ய முடிந்த சிறந்த காரியமானது, அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தகுதியான மதிப்பையும் மரியாதையையும் கொடுத்துவருவதும், அதோடு அனாவசியமான சச்சரவுகளைத் தவிர்த்துவிடவும் முயற்சி செய்வதே. (எபேசியர் 6:1, 2) நீதிமொழிகள் 22:3 சொல்லுகிறது: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்.” b
அதே சமயத்தில் உங்களுடைய குடும்பத்தாராயில்லாத மற்றவர்களுடைய உதவியைப் பெறுங்கள். முதிர்ச்சியான ஒரு நபரோடு, ஒருவேளை ஒரு கிறிஸ்தவ மூப்பரோடு பேசுங்கள். காரியங்கள் எப்போதும் உங்களுடைய தவறாகவே இருக்கிறது என்ற உணர்ச்சியை மேற்கொள்வதற்கு இத்தகைய நபரிடமிருந்து வரும் அன்பான கவனிப்பு அதிகத்தை செய்யக்கூடும். அதே சமயத்தில் “கடவுளிடம் நெருங்கி செல்லுங்கள்.” (யாக்கோபு 4:8, NW) மற்றவர்கள் உங்களை அநியாயமாக குற்றம்சாட்டினாலும்கூட, “[கடவுள்] எப்பொழுதும் கடிந்து கொள்ளார், என்றைக்கும் கோபங்கொண்டிரார். . . . நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” (சங்கீதம் 103:9, 14.) கடவுளுடைய பார்வையில் நீங்கள் விலையேறப்பெற்றவர்கள் என்பதை அறிந்திருப்பது அநியாயமான குற்றச்சாட்டுகளை சகித்துக் கொள்ள உங்களுக்கு உதவலாம்.
[அடிக்குறிப்புகள்]
a ஜூலை 22, 1997 இதழில் வெளிவந்துள்ள “இளைஞர் கேட்கின்றனர் . . . அது ஏன் எப்போதுமே என் குற்றமாக உள்ளது?” என்ற கட்டுரையைக் காண்க.
b ஆகஸ்ட் 8, 1990, இதழில் உள்ள “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் வசைமொழியை எவ்வாறு கையாளக்கூடும்?” என்ற கட்டுரையைக் காண்க. அதோடு அக்டோபர் 22, 1996, விழித்தெழு!-வில் உள்ள “புண்படுத்தும் வார்த்தைகளிலிருந்து குணப்படுத்தும் வார்த்தைகளுக்கு” என்ற தொடர் கட்டுரைகளையும் காண்க.
[பக்கம் 21-ன் படம்]
நம்முடைய குற்றங்களை ஒத்துக்கொள்வது நம்முடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள நமக்கு உதவும்