எதற்குமே அலட்டிக்கொள்ளாமல் இருக்கலாமா?
அலட்டிக்காதவர்—நிதானமானவர், அமைதியானவர், பொறுமையானவர்—என பெயரெடுப்பது நல்லது என்பதாக பெரும்பாலோர் நினைக்கலாம். ஆனால் அலட்டிக்கொள்ளாத பண்புக்கு மறுபக்கமும் உள்ளது. பைபிள் இவ்வாறு சொல்கிறது: “எதற்குமே அலட்டிக்கொள்ளாத மூடன் அழிந்து போவான்.” (நீதிமொழிகள் 1:32, NW) இது எதை அர்த்தப்படுத்துகிறது?
இதற்கான எபிரெய மூல வார்த்தையை, “உதாசீனம்” (அமெரிக்கன் ஸ்டான்டர்ட் வர்ஷன்), “சுயதிருப்தி” (த நியூ அமெரிக்கன் பைபிள்), “மெத்தனம்” (த நியூ இங்லிஷ் பைபிள்) என்றெல்லாம் பிற பைபிள்கள் மொழிபெயர்க்கின்றன. இந்த அர்த்தத்தில், எதற்குமே அலட்டிக்கொள்ளாமல் இருப்பது சோம்பேறித்தனத்துடனும் அசட்டை மனப்பான்மையுடனும் இணைத்துப் பேசப்படுவதால் மூடத்தனமான அல்லது முட்டாள்தனமான போக்காக சித்தரிக்கப்படுகிறது.
முதல் நூற்றாண்டில், லவோதிக்கேயா சபையில் இருந்த கிறிஸ்தவர்கள் தங்களது ஆவிக்குரிய குறைபாடுகளை சிறிதும் பொருட்படுத்தாமல் மெத்தனமாக இருந்தனர். சுயதிருப்தி அடைந்தவர்களாய், தங்களுக்கு “ஒரு குறைவுமில்லை” என்றே பெருமைப்பட்டுக் கொண்டனர். அவர்கள் எண்ணத்தை இயேசு கிறிஸ்து சரிப்படுத்தினார், கிறிஸ்தவ ஆர்வக்கனலை தங்களில் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள அவர்களுக்கு ஆலோசனை கூறினார்.—வெளிப்படுத்துதல் 3:14-19.
எதற்கும் அலட்டிக்காத, மெத்தனப் போக்கே நோவாவின் காலத்தில் வாழ்ந்தவர்களிடம் மேலோங்கியிருந்தது. அவர்கள் வாழ்க்கையில் நிலையற்ற காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, “புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்.” “அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” என்றும் இயேசு கூறினார்.—மத்தேயு 24:37-39.
இயேசு கிறிஸ்துவாகிய ‘மனுஷகுமாரன் வருங்காலத்தில்’ நாம் வாழ்கிறோம் என நிறைவேறிய பைபிள் தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன. நாம் எதற்குமே அலட்டிக்கொள்ளாமல், மெத்தனமாக, அசட்டையாக ஒருபோதும் நடந்துகொள்ளாதிருப்போமாக.—லூக்கா 21:29-36.