பகுத்துணர்வு உங்களைப் பாதுகாப்பதாக
“நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி [“பகுத்துணர்வு,” NW] உன்னைப் பாதுகாக்கும்.”—நீதிமொழிகள் 2:11.
1. பகுத்துணர்வு நம்மை எதிலிருந்து பாதுகாக்கும்?
நீங்கள் பகுத்துணர்வைப் பயன்படுத்தும்படி யெகோவா விரும்புகிறார். ஏன்? ஏனென்றால் பல்வேறு ஆபத்துக்களிலிருந்து அது உங்களைப் பாதுகாக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நீதிமொழிகள் 2:10-19 இவ்வாறு சொல்வதன் மூலம் ஆரம்பிக்கிறது: “ஞானம் உன் இருதயத்திலே பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி [“பகுத்துணர்வு,” NW] உன்னைப் பாதுகாக்கும்.” எதிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்? ‘துன்மார்க்கனுடைய வழியிலிருந்தும்,’ நீதியான பாதைகளைவிட்டு விலகிச்செல்கிறவர்களிடமிருந்தும், தங்களுடைய பொதுவான நடத்தைப் போக்கில் வழிவிலகிச்செல்கிற மக்களிடமிருந்தும் உங்களைப் பாதுகாக்கும்.
2. பகுத்துணர்வு என்றால் என்ன, எந்தவிதமான பகுத்துணர்வை கிறிஸ்தவர்கள் விசேஷமாக விரும்புகின்றனர்?
2 பகுத்துணர்வு என்பது ஒரு காரியத்தை மற்றொரு காரியத்திலிருந்து வேறுபடுத்திக் காணும் மனதின் திறமை என்று ஒருவேளை உங்கள் நினைவுக்கு வரலாம். பகுத்துணர்வுள்ள ஒரு நபர், கருத்துக்களின் அல்லது காரியங்களின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்கிறவராகவும் நல்நிதானிப்பை உடையவராகவும் இருக்கிறார். கிறிஸ்தவர்களாக, நாம் முக்கியமாய் கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவின் அடிப்படையில் அமைந்த ஆவிக்குரிய பகுத்துணர்வை விரும்புகிறோம். நாம் பைபிளை படிக்கையில், ஆவிக்குரிய பகுத்துணர்வு என்ற கட்டிடப் பாளங்களை கற்சுரங்கத்திலிருந்து வெட்டியெடுப்பதைப் போல அது இருக்கிறது. நாம் கற்றுக்கொள்கிற விஷயங்கள், யெகோவாவைப் பிரியப்படுத்தும் தீர்மானங்களைச் செய்வதற்கு நமக்கு உதவிசெய்யக்கூடும்.
3. ஆவிக்குரிய பகுத்துணர்வை நாம் எவ்வாறு பெறலாம்?
3 இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோனிடம், அவர் என்ன ஆசீர்வாதம் பெற விரும்புகிறார் என்று கடவுள் கேட்டபோது, அந்த இளம் ஆட்சியாளர் சொன்னார்: “உமது ஜனங்களை நியாயந்தீர்க்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும் [“பகுத்துணரவும்,” NW], அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்.” சாலொமோன் பகுத்துணர்வை தரும்படி கேட்டார், யெகோவா அதை அவருக்கு அபரிமிதமாக வழங்கினார். (1 இராஜாக்கள் 3:9; 4:30) பகுத்துணர்வைப் பெறுவதற்காக, நாம் ஜெபிப்பது அவசியம்; மேலும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் மூலம் கொடுக்கப்படுகிற அறிவொளியூட்டும் பிரசுரங்களின் உதவியுடன் கடவுளுடைய வார்த்தையைப் படிக்க வேண்டும். (மத்தேயு 24:45-47, NW) ‘புரிந்துகொள்ளும் திறனில் முழு வளர்ச்சியடைந்தவர்களாய்,’ ‘நன்மை தீமையின்னதென்று பிரித்தறிய [அல்லது, இரண்டுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை பகுத்துணர]’ முடிகிறவர்களாய் ஆகுமளவுக்கு ஆவிக்குரிய பகுத்துணர்வை வளர்த்துக்கொள்ள இது நமக்கு உதவிசெய்யும்.—1 கொரிந்தியர் 14:20, NW; எபிரெயர் 5:14.
பகுத்துணர்வுக்கான விசேஷ தேவை
4. ‘தெளிவான’ கண்ணை உடையவர்களாயிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது, அது எவ்வாறு நமக்கு நன்மை பயக்கக்கூடும்?
4 சரியான பகுத்துணர்வுடன், இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு இசைவாக நாம் செயல்பட முடியும்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது [பொருள்சம்பந்தமான] இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33) இயேசு மேலும் சொன்னதாவது: “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்.” (லூக்கா 11:34) கண் என்பது அடையாளப்பூர்வமான ஒரு விளக்கு. ‘தெளிவான’ கண் என்பது உள்ளப்பூர்வமானது, ஒருமுகப்படுத்தப்பட்டது. இப்படிப்பட்ட கண்ணின் உதவியால், நாம் பகுத்துணர்வோடு செயல்படவும் ஆவிக்குரிய விதத்தில் இடறலடையாமல் நடந்துசெல்லவும் முடியும்.
5. வியாபார நடவடிக்கைகள் சம்பந்தமாக, கிறிஸ்தவ சபையின் நோக்கத்தைப் பற்றி நாம் எதை மனதில் வைத்திருக்க வேண்டும்?
5 சிலர் தங்களுடைய கண்ணை எளிமையாக வைத்துக்கொள்வதற்குப் பதிலாக, கவர்ந்திழுக்கும் வியாபார தொடர்புகளால் தங்களுடைய வாழ்க்கையையும் மற்றவர்களுடைய வாழ்க்கையையும் சிக்கலாக்கியிருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவ சபை ‘சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாய்’ உள்ளது என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். (1 தீமோத்தேயு 3:15) ஒரு கட்டிடத்தின் தூண்களைப் போல, சபையானது எவருடைய வியாபார நடவடிக்கையையும் அல்ல, கடவுளுடைய சத்தியத்தையே தாங்குகிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள், வியாபார சம்பந்தப்பட்ட அக்கறைகளை, பொருட்களை, அல்லது சேவைகளை முன்னேற்றுவிப்பதற்கான இடங்களாக நிறுவப்படவில்லை. ராஜ்ய மன்றத்தில் தனிப்பட்ட வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும். ராஜ்ய மன்றங்கள், சபை புத்தகப் படிப்புகள், யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகள் ஆகியவை கிறிஸ்தவ கூட்டுறவுக்கும் ஆவிக்குரிய கலந்தாலோசிப்புக்குமான இடங்கள் என்பதை உணர்ந்துகொள்வதற்குப் பகுத்துணர்வு நமக்கு உதவுகிறது. எந்தவொரு வியாபாரத்தையும் முன்னேற்றுவிப்பதற்கு நம்முடன் ஆவிக்குரிய உறவு வைத்திருப்பவர்களை நாம் பயன்படுத்துவோமாகில், ஆவிக்குரிய மதிப்பீடுகளுக்கான போற்றுதல் குறைவுபடுவதை அது கொஞ்சமாவது காண்பிக்காதா? சபையோடுள்ள தொடர்புகளை பணசம்பந்தமான ஆதாயத்தைப் பெறுவதற்காக ஒருக்காலும் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது.
6. ஏன் சபை கூட்டங்களில் வியாபார சம்பந்தப்பட்ட பொருட்களையும் சேவைகளையும் விற்கவோ முன்னேற்றுவிக்கவோ கூடாது?
6 மருந்துகள் அல்லது அழகு சாதனங்கள், வைட்டமின் தயாரிப்புகள், தொலைத்தொடர்பு சேவைகள், கட்டிடப் பொருட்கள், சுற்றுலா ஏற்பாடுகள், கம்ப்யூட்டர் புரோகிராம்கள் மற்றும் சாதனங்கள், இன்னும் இதுபோன்றவற்றை விற்பதற்கு தேவராஜ்ய தொடர்புகளை சிலர் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், சபை கூட்டங்கள் வியாபார சம்பந்தப்பட்ட பொருட்களை அல்லது சேவைகளை, விற்பதற்கோ முன்னேற்றுவிப்பதற்கோ உரிய இடமல்ல. இயேசு, ‘[ஆலயத்திலுள்ள] அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக்கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப் போட்டு, புறாவிற்கிறவர்களை நோக்கி: இவற்றை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதீர்கள்’ என்று சொன்னதை நாம் நினைவுகூருவோமானால், அதிலுள்ள அடிப்படை நியமத்தை நாம் பகுத்துணர முடியும்.—யோவான் 2:15, 16.
முதலீடுகளைப் பற்றியென்ன?
7. முதலீடுகள் சம்பந்தமாக பகுத்துணர்வும் எச்சரிக்கையும் ஏன் தேவை?
7 துணிகரமான வியாபார நடவடிக்கையில் பணத்தை முதலீடு செய்வதைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கையில், பகுத்துணர்வு, எச்சரிக்கை ஆகிய இரண்டுமே தேவைப்படுகின்றன. ஒருவேளை யாராவது வந்து பணத்தை கடனாக வாங்க விரும்பி, இதுபோன்ற வாக்குறுதிகளை கொடுக்கலாம்: “உங்களுடைய பணத்திற்கு நான் கேரண்டி.” “உங்களுக்கு கொஞ்சங்கூட நஷ்டம் வராது. நிச்சயமாக லாபம் தான் கிடைக்கும்.” இப்படிப்பட்ட வாக்குறுதிகளை யாராவது கொடுக்கும்போது ஜாக்கிரதையாயிருங்கள். அவர் நடைமுறைக்கு ஒத்துவருபவராகவும் இல்லை, நேர்மையானவராகவும் இல்லை, ஏனென்றால் முதலீட்டில் லாபம் கிடைப்பது அரிதான காரியம். உண்மையில் சொல்லப்போனால், வாயினிக்க பேசுகிற, எதையும் துணிந்து செய்யும் ஆட்கள் சபையிலுள்ள அங்கத்தினர்களை ஏமாற்றியிருக்கிறார்கள். இது, நம் முதல் நூற்றாண்டு சபையினுள் நுழைந்த ‘தேவபக்தியற்ற மனிதர்களை’ நம்முடைய மனதுக்குக் கொண்டுவருகிறது; அவர்கள் ‘தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டினார்கள்.’ நீந்துபவர்களுடைய உடலை கீறிவிடவும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தவும்கூடிய தண்ணீருக்குள் மறைந்திருக்கும் கூர்மையான பாறைகளைப் போல் அவர்கள் இருந்தார்கள். (யூதா 4, 12) ஏமாற்றுபவர்களுடைய உள்ளெண்ணங்களெல்லாம் அந்த விசுவாச துரோகிகளுடையவை போல் இல்லை என்பது உண்மைதான், ஆனால் அவர்களும்கூட சபையிலுள்ள அங்கத்தினர்களைப் பட்சிக்கிறார்கள்.
8. லாபம் தருவதுபோல் தோன்றுகிற துணிகரமான வியாபார நடவடிக்கைகள் சம்பந்தமாக என்ன நடந்திருக்கின்றன?
8 நல்லெண்ணமுள்ள கிறிஸ்தவர்களும்கூட லாபம் தருவதுபோல் தோன்றுகிற வியாபார நடவடிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசியிருக்கிறார்கள்; அவர்களும் அவர்களைப் போன்ற மற்றவர்களும் முதலீடு செய்த பணத்தை இழந்துதான் மிச்சம். அதன் விளைவாக, கிறிஸ்தவர்கள் அநேகர் சபையில் சிலாக்கியங்களை இழந்திருக்கிறார்கள். திடீர் பணக்காரராகிவிட எடுக்கும் வியாபார நடவடிக்கைகள் மோசடி திட்டங்களாக மாறும்போது, லாபமடையும் ஒரேவொரு ஆள் ஏமாற்றுகிறவர்தான், கண்ணைமூடி திறப்பதற்குள் அவரும் தலைமறைவாகிவிடுகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளைத் தவிர்ப்பதற்கு பகுத்துணர்வு எவ்வாறு ஒருவருக்கு உதவிசெய்யக்கூடும்?
9. முதலீடுகள் சம்பந்தமாக கொடுக்கப்படும் வாக்குறுதிகளை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு ஏன் பகுத்துணர்வு அவசியம்?
9 தெளிவற்றதாக தோன்றுகிற காரியத்தைப் புரிந்துகொள்ள முடிவதை பகுத்துணர்வு அர்த்தப்படுத்துகிறது. முதலீடுகள் சம்பந்தமாக கொடுக்கப்படும் வாக்குறுதிகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு இத்திறமை தேவை. கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் நம்புகிறார்கள்; உடன் விசுவாசிகளுடைய செல்வத்தை ஆபத்திற்குள்ளாக்கும் ஒரு வியாபார நடவடிக்கையில் ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் ஈடுபட மாட்டார்கள் என்பதாக சிலர் நியாயமாக தோன்ற விவாதிக்கலாம். ஆனால், வியாபாரம் செய்கிறவர் கிறிஸ்தவராக இருக்கிறார் என்ற உண்மைதானே வியாபார விஷயத்தில் அவர் கெட்டிக்காரர் அல்லது அவருடைய வியாபாரம் வெற்றிபெறும் என்பதற்கான உத்தரவாதம் அளிப்பதில்லை.
10. உடன் விசுவாசிகளிடமிருந்து கிறிஸ்தவர்கள் சிலர் ஏன் வியாபார கடன்களைப் பெற வருகிறார்கள், இப்படிப்பட்ட முதலீடுகளுக்கு என்ன ஏற்படக்கூடும்?
10 கிறிஸ்தவர்கள் சிலர் சகோதர சகோதரிகளிடமிருந்து வியாபாரத்திற்காக கடன்வாங்க வருகிறார்கள்; ஏனென்றால் கடன்கொடுக்கும் பிரபலமான ஏஜென்ஸிகள் துணிகரமான வியாபார நடவடிக்கைகளுக்காக ஒருபோதும் பணத்தை கடன் கொடுக்காது. வெறுமனே தங்கள் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அதிக உழைப்பில்லாமல் அல்லது எந்த உழைப்புமே இல்லாமல் சீக்கிரத்தில் பணக்காரர் ஆகலாம் என்று நம்பி அநேகர் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். கவர்ச்சியான முதலீடு என்பதன் காரணமாக சிலர் அதற்கு மயங்கியிருக்கிறார்கள், தங்களுடைய ஆயுசு முழுவதும் சேர்த்துவைத்ததையெல்லாம் ஒரே நிமிடத்தில் இழக்கப்போவதுதான் மிச்சம்! இரண்டு வாரத்திலேயே 25 சதவீத லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, கிறிஸ்தவர் ஒருவர் ஒரு பெருந்தொகையை முதலீடு செய்தார். பணம் திவால் என்று அறிவிக்கப்பட்டபோது அந்தப் பணம் எல்லாவற்றையுமே அவர் இழந்துவிட்டார்! மற்றொரு வியாபார நடவடிக்கையில், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர் சபையிலுள்ள மற்றவர்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தை கடன் வாங்கினார். வழக்கத்திற்கு மாறான அளவுக்கு அதிகமான லாபம் தருவதாக வாக்குக்கொடுத்தார். ஆனால் அவர் திவாலாகி கடனாக வாங்கிய பணத்தையெல்லாம் இழந்துவிட்டார்.
துணிகரமான வியாபார நடவடிக்கைகள் தோல்வியுறுகையில்
11. பேராசை மற்றும் பண ஆசை சம்பந்தமாக பவுல் என்ன அறிவுரையைக் கொடுத்தார்?
11 நிலையற்ற வியாபார நடவடிக்கைகளுக்குள் நுழைந்த கிறிஸ்தவர்கள் சிலருடைய விஷயத்தில் வியாபார தோல்விகள், ஏமாற்றத்திற்கும் ஆவிக்குரிய தன்மையை இழப்பதற்கும்கூட வழிநடத்தியிருக்கின்றன. பகுத்துணர்வை ஒரு பாதுகாவலனாக செயல்பட அனுமதிக்கத் தவறியதால் மனவேதனையும் மனக்கசப்பும் ஏற்பட்டிருக்கிறது. பேராசை அநேகரை கண்ணியில் சிக்கவைத்திருக்கிறது. “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, . . . பேராசை உங்கள் மத்தியில் சொல்லப்படவும் கூடாது,” என்பதாக பவுல் எழுதினார். (எபேசியர் 5:3, NW) மேலும் அவர் எச்சரித்தார்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9, 10.
12. கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் வியாபாரம் செய்தால், விசேஷமாக எதை அவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்?
12 கிறிஸ்தவர் ஒருவர் பண ஆசையை வளர்த்துக்கொண்டாராகில், அவர் தனக்கு அதிகமான ஆவிக்குரிய தீங்கை ஏற்படுத்திக்கொள்வார். பரிசேயர்கள் பணப்பிரியர்களாக இருந்தார்கள், இந்தக் ‘கடைசி நாட்களில்’ வாழ்கிற மக்களுடைய ஒரு குணமாகவும் இது இருக்கிறது. (லூக்கா 16:14; 2 தீமோத்தேயு 3:1, 2) அதற்கு மாறாக, ஒரு கிறிஸ்தவருடைய வாழ்க்கை முறை “பண ஆசை இல்லா”மலிருக்க வேண்டும். (எபிரெயர் 13:5) நிச்சயமாகவே, கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் வியாபாரம் செய்யலாம் அல்லது சேர்ந்து வியாபாரம் தொடங்கலாம். என்றபோதிலும், அவர்கள் இவ்வாறு செய்வார்களானால், பேச்சுவார்த்தைகளையும் ஒப்பந்தங்களையும் சபைக்குரிய காரியங்களிலிருந்து தூர வைத்துக்கொள்ள வேண்டும். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: ஆவிக்குரிய சகோதரர்கள் மத்தியிலும்கூட, வியாபார ஒப்பந்தங்களை எப்பொழுதுமே எழுத்தில் எழுதிவிடுங்கள். பிப்ரவரி 8, 1983, விழித்தெழு! (ஆங்கிலம்) பத்திரிகையில் 13 முதல் 15 வரையுள்ள பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ள, “அதை எழுத்தில் எழுதிவிடுங்கள்!” என்ற கட்டுரை இதன் சம்பந்தமாக மிகவும் பயனுள்ளது.
13. துணிகரமான வியாபார நடவடிக்கைகளுக்கு நீதிமொழிகள் 22:7-ஐ நீங்கள் எவ்வாறு பொருத்துவீர்கள்?
13 நீதிமொழிகள் 22:7 நமக்கு இவ்வாறு சொல்லுகிறது: “கடன்வாங்கினவன் கடன்கொடுத்தவனுக்கு அடிமை.” நம்மையோ அல்லது நம்முடைய சகோதரர்களையோ அடிமை என்ற நிலையில் வைப்பது நமக்கு பெரும்பாலும் ஞானமற்றது. துணிகரமான வியாபார நடவடிக்கைக்காக யாராவது நம்மிடம் கடனாக பணம் கேட்கும்போது, அந்தத் தொகையை திருப்பிக்கொடுப்பதற்கு அவருக்குள்ள திறமையை சிந்தித்துப் பார்ப்பது உசிதமானது. அவர் நல்மதிப்புக்கும் நன்னம்பிக்கைக்கும் பாத்திரமானவராக அறியப்பட்டிருக்கிறாரா? நிச்சயமாகவே, இப்படி கடன் கொடுப்பது பண இழப்பில்தான் முடிவடையும் என்பதை நாம் உணர வேண்டும்; ஏனென்றால் துணிகரமான வியாபார நடவடிக்கைகள் பல தோல்வியடைகின்றன. ஒப்பந்தம் செய்திருப்பதுதானே ஒரு வெற்றிகரமான வியாபாரத்திற்கு உறுதியளிப்பதில்லை. இழப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்க முடியாமற்போகுமளவுக்கு ஒரு தொழிலில் அதிக பணத்தை முதலீடு செய்வது நிச்சயமாகவே எவருக்கும் விவேகமானதாக இல்லை.
14. உடன் கிறிஸ்தவருக்கு நாம் கடன் கொடுத்து, ஆனால் அவர் வியாபாரம் தோல்வியடைந்திருந்தால், நாம் பகுத்துணர்வைக் காட்டவேண்டியது ஏன் அவசியம்?
14 ஒரு கிறிஸ்தவருக்கு வியாபார நோக்கங்களுக்காக நிதியுதவி கொடுத்து பணத்தை இழந்திருந்தால், எந்தவொரு நேர்மையற்ற பழக்கங்களும் உட்பட்டில்லையென்றாலும்கூட, நாம் பகுத்துணர்வை காண்பிப்பது அவசியம். வியாபாரத் தோல்வி, பணத்தை கடனாக வாங்கிய நம் உடன் விசுவாசியுடைய தவறாக இல்லாதிருந்தால், அது நம் தவறு என்று சொல்ல முடியுமா? முடியாது, ஏனென்றால் அந்தக் கடனை நாம் மனமுவந்து கொடுத்தோம், அதற்கு ஒருவேளை நாம் வட்டியும் வாங்கியிருந்திருக்கலாம். எந்த நேர்மையற்ற செயலும் நடக்கவில்லை. ஆகவே, கடன் வாங்கியவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு நமக்கு எந்த ஆதாரமுமில்லை. நல்லெண்ணத்துடன் தொடங்கிய வியாபாரம் தோல்வியடைந்ததன் காரணமாக, திவாலானதற்காக மனுசெய்ய வேண்டியிருந்த நேர்மையான உடன் கிறிஸ்தவர் ஒருவர்மீது வழக்குத் தொடருவதால் என்ன பிரயோஜனம்?—1 கொரிந்தியர் 6:1.
15. பணம் திவாலாகிவிட்டது என்று அறிவிக்கப்பட்டால், என்ன அம்சங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதை தேவைப்படுத்துகின்றன?
15 வியாபாரத்தில் தோல்வி அடைகிறவர்கள், திவாலாகிவிட்டதை தெரிவிப்பதன் மூலம் சிலசமயங்களில் உதவிபெற நாடுகிறார்கள். கடன்பட்டிருப்பதைக் குறித்து கிறிஸ்தவர்கள் கவலையின்றி இருக்கக்கூடாது; இதன் காரணமாக, குறிப்பிட்ட சில கடன்களிலிருந்து சட்டப்படி விலக்களிக்கப்பட்டிருந்த பிறகும்கூட, முன்பு கடன் கொடுத்தவர்கள் ஏற்றுக்கொண்டால் ரத்துசெய்யப்பட்ட கடனை கொடுத்துத் தீர்க்க முயலுவதற்கான தார்மீக கடமையை சிலர் மனச்சாட்சிப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், கடன் வாங்கியவர் தன்னுடைய சகோதரனின் பணத்தை இழந்த போதிலும், சுகபோகமான முறையில் வாழ்ந்தால் அப்போது என்ன செய்வது? அல்லது கடன்வாங்கியவர், பெற்ற கடனை திருப்பிக் கொடுப்பதற்கான நிலையை அடைந்தும் தன்னுடைய சகோதரனுக்குப் பண சம்பந்தமாக கொடுக்கவேண்டிய தார்மீக கடமையைப் புறக்கணித்துவிட்டால் அப்போது என்ன செய்வது? அப்பொழுது சபையில் உத்தரவாதமுள்ள பொறுப்பை வகிக்க கடன்வாங்கியவருக்குள்ள தகுதியைக் குறித்து கேள்விகள் எழும்பும்.—1 தீமோத்தேயு 3:3, 8; காவற்கோபுரம், செப்டம்பர் 15, 1994, பக்கங்கள் 30-1-ஐக் காண்க.
மோசடி உட்பட்டிருந்தால் என்ன செய்வது?
16. நாம் வியாபார மோசடிக்கு பலியாகிறவர்களாக தோன்றினால், என்ன படிகள் எடுக்கப்படலாம்?
16 எல்லா முதலீடுகளிலிருந்தும் லாபம் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்துகொள்ள பகுத்துணர்வு நமக்கு உதவுகிறது. ஆனால், மோசடி உட்பட்டிருந்தால் அப்போது என்ன செய்வது? மோசடி என்பது, “ஏதாவது விலையேறப்பெற்ற பொருளை கொடுத்துவிடும்படி அல்லது ஒரு சட்டப்பூர்வ உரிமையை துறந்துவிடும்படி மற்றொருவரைத் தூண்டுகிற நோக்கத்திற்காக ஏமாற்றுத்தனத்தையோ தந்திரத்தையோ, அல்லது சட்டத்தைப் புரட்டுவதையோ வேண்டுமென்றே பயன்படுத்துவதாகும்.” உடன் வணக்கத்தார் ஒருவரால் ஏமாற்றப்பட்டிருப்பதாக ஒரு நபர் நினைக்கும்போது, அவர் படிப்படியாக செய்யவேண்டியவற்றை இயேசு கிறிஸ்து குறிப்பிட்டுக் காட்டினார். மத்தேயு 18:15-17-ன்படி, இயேசு சொன்னார்: “உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக் கொண்டாய். அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடன் கூட்டிக்கொண்டு போ. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபையாருக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.” அதைத் தொடர்ந்து இயேசு கொடுத்த உவமையானது, மோசடி உட்பட, பணசம்பந்தமான காரியங்களை உட்படுத்துகிற இப்படிப்பட்ட பாவங்களை அவர் மனதிற்கொண்டிருந்தார் என்பதை சுட்டிக் காண்பிக்கிறது.—மத்தேயு 18:23-35.
17, 18. கிறிஸ்தவன் என்று உரிமை கொண்டாடும் ஒருவர் நம்மை மோசம்போக்கினால், எவ்வாறு பகுத்துணர்வு நம்மை பாதுகாக்கும்?
17 நிச்சயமாகவே, மோசடி செய்ததற்கான எந்த ஓர் அத்தாட்சியோ அல்லது அப்படிப்பட்ட ஒரு பேச்சோகூட இல்லாதிருந்தால், மத்தேயு 18:15-17-ல் சொல்லப்பட்டுள்ள படிகளை எடுப்பதற்கான வேதப்பூர்வமான ஆதாரம் எதுவும் இருக்காது. என்றபோதிலும், கிறிஸ்தவன் என்று உரிமை கொண்டாடும் ஒருவர் உண்மையிலேயே நமக்கு மோசடி செய்திருந்தால் அப்போது என்ன செய்வது? சபையின் நற்பெயரை பாதிக்கிற சில நடவடிக்கையை எடுப்பதிலிருந்து பகுத்துணர்வு நம்மை பாதுகாக்கக்கூடும். ஒரு சகோதரரை கோர்ட்டுக்கு இழுப்பதற்குப் பதிலாக, தாங்கள்தாமே அநியாயத்தை சகித்துக்கொள்ளும்படியும் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளும்படியும் பவுல் உடன் கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கொடுத்தார்.—1 கொரிந்தியர் 6:7.
18 நம்முடைய உண்மையான சகோதர சகோதரிகளும் பர்யேசு என்னும் மாயவித்தைக்காரனைப் போல ‘எல்லா மோசடியும் எல்லாப் பொல்லாங்கும்’ நிறைந்தவர்களாக இல்லை. (அப்போஸ்தலர் 13:6-12) ஆகையால் உடன் விசுவாசிகளை உட்படுத்துகிற துணிகரமான வியாபார நடவடிக்கைகளில் பணத்தை இழந்துவிடும் சமயத்தில் நாம் பகுத்துணர்வை பயன்படுத்துவோமாக. சட்ட நடவடிக்கையெடுப்பதைக் குறித்து நாம் யோசித்துக்கொண்டிருந்தால், தனிப்பட்ட விதமாக நம்மீது, மற்ற நபர்மீது அல்லது நபர்களின்மீது, சபையின்மீது, வெளி ஆட்களின்மீது அது ஏற்படுத்துவதற்கு சாத்தியமுள்ள பாதிப்புகளையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். நஷ்ட ஈட்டை பெற முயலுவது, நம்முடைய பெரும்பாலான நேரத்தையும் சக்தியையும் மற்ற பொருளாதார வளங்களையும் விழுங்கிவிடக்கூடும். அது வக்கீல்களையும் மற்ற அலுவலர்களையும் செல்வந்தர்களாக்குவதில்தான் விளைவடையக்கூடும். வருத்தகரமாக, கிறிஸ்தவர்களில் சிலர் இந்தக் காரியங்களில் ஆழம் தெரியாமல் காலைவிட்டதன் காரணமாக தேவராஜ்ய சிலாக்கியங்களை தியாகம் செய்திருக்கிறார்கள். நாம் இந்த விதத்தில் திசை திருப்பப்படுவது சாத்தானைத்தான் மகிழ்ச்சியடையச் செய்யும், ஆனால் நாம் யெகோவாவின் இருதயத்தைக் களிகூரச் செய்ய விரும்புகிறோம். (நீதிமொழிகள் 27:11) மறுபட்சத்தில், இழப்பை ஏற்றுக்கொள்வதானது மனவேதனையைத் தவிர்க்க உதவிசெய்கிறது, மேலும் நம்முடைய மற்றும் மூப்பர்களுடைய பெரும்பாலான நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. அது சபையின் சமாதானத்தைப் பாதுகாக்க உதவிசெய்யும், அதோடு ராஜ்ய அக்கறைகளைத் தொடர்ந்து முதலாவதாக வைப்பதற்கும் நமக்கு உதவிசெய்யும்.
பகுத்துணர்வும் தீர்மானமெடுப்பதும்
19. அழுத்தமிக்க தீர்மானங்களைச் செய்யும்போது ஆவிக்குரிய பகுத்துணர்வும் ஜெபமும் நமக்கு என்ன செய்யக்கூடும்?
19 பணம் அல்லது வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களை குறித்ததில் தீர்மானங்கள் எடுப்பது அதிக அழுத்தம் கொடுப்பதாக இருக்கலாம். ஆனால் நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்ப்பதற்கும் ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கும் ஆவிக்குரிய பகுத்துணர்வு நமக்கு உதவிசெய்யக்கூடும். மேலும், யெகோவாவின்மீது ஜெபசிந்தையுடன் சார்ந்திருப்பது நமக்கு ‘தேவசமாதானத்தைக்’ கொண்டு வரக்கூடும். (பிலிப்பியர் 4:6, 7) அது யெகோவாவுடன் வைத்துக்கொள்ளும் மிக நெருங்கிய தனிப்பட்ட உறவிலிருந்து வரும் மன அமைதியும் சாந்தியுமாகும். நிச்சயமாகவே, நாம் அழுத்தமிக்க தீர்மானங்களை எடுக்கவேண்டிய சமயங்களை எதிர்ப்படும்போது நம்முடைய சமநிலையைக் காத்துக்கொள்ள இப்படிப்பட்ட சமாதானம் நமக்கு உதவிசெய்யக்கூடும்.
20. வியாபார விஷயங்களையும் சபையையும் பொறுத்தவரையில், நாம் எதைச் செய்வதைக் குறித்து தீர்மானமுள்ளவர்களாயிருக்க வேண்டும்?
20 வியாபார சம்பந்தமான தகராறுகள், நம்முடைய அல்லது சபையினுடைய சமாதானத்தைக் குலைப்பதற்கு அனுமதிக்காமலிருக்க நாம் உறுதியான தீர்மானமுள்ளவர்களாய் இருப்போமாக. கிறிஸ்தவ சபை செயல்படுவது வியாபார நாட்டங்களுக்கான ஒரு மையமாக சேவிப்பதற்கு அல்ல, மாறாக நமக்கு ஆவிக்குரிய விதமாக உதவிசெய்வதற்கேயாகும் என்பதை நாம் நினைவிற்கொள்வது அவசியம். எல்லா சமயங்களிலும் வியாபார விஷயங்களை சபை நடவடிக்கைகளிலிருந்து தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். துணிகரமான வியாபார நடவடிக்கைகளில் இறங்கும்போது நாம் பகுத்துணர்வையும் எச்சரிப்பையும் பயன்படுத்துவது அவசியம். முதலாவதாக ராஜ்ய அக்கறைகளை நாடுவதன்மூலம் இப்படிப்பட்ட விஷயங்களைக் குறித்ததில் ஒரு சமநிலையான நோக்குநிலையை நாம் எப்போதும் காத்துக்கொள்வோமாக. நம்முடைய உடன் வணக்கத்தாரை உட்படுத்துகிற துணிகரமான வியாபார நடவடிக்கை தோல்வியடைந்துவிட்டால், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிகச் சிறந்தது எதுவோ அதையே செய்ய நாடுவோமாக.
21. நாம் எவ்வாறு பகுத்துணர்வைப் பயன்படுத்தி பிலிப்பியர் 1:9-11-க்கு இசைவாக செயல்படலாம்?
21 பண சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும் அதிக முக்கியத்துவமில்லாத காரியங்களைப் பற்றியும் அளவுக்குமீறி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, நாமனைவரும் நம்முடைய இருதயத்தை பகுத்துணர்வினிடம் சாயப்பண்ணுவோமாக, கடவுளுடைய வழிநடத்துதலுக்காக ஜெபிப்போமாக, ராஜ்ய அக்கறைகளை முதலாவதாக வைப்போமாக. பவுலுடைய ஜெபத்திற்கு இசைவாக, ‘அதிமுக்கியமான காரியங்களை நாம் நிச்சயப்படுத்திக்கொள்ளவும் பிறர்க்கு [அல்லது நமக்கு] இடறலற்றவர்களாய் இருக்கவும் நம்முடைய அன்பானது திருத்தமான அறிவிலும் முழு பகுத்துணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகுவதாக.’ இப்பொழுது ராஜாவாகிய கிறிஸ்து தம்முடைய பரலோக சிங்காசனத்தில் வீற்றிருப்பதால் வாழ்க்கையின் எல்லா அம்சத்திலும் ஆவிக்குரிய பகுத்துணர்வை காண்பிப்போமாக. மேலும் உன்னத கர்த்தராகிய யெகோவா ‘தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி நாம் இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாவோமாக.’—பிலிப்பியர் 1:9-11, NW.
◻ பகுத்துணர்வு என்றால் என்ன?
◻ கிறிஸ்தவர்கள் மத்தியில் வியாபார நடவடிக்கைகள் சம்பந்தமாக பகுத்துணர்வைக் காண்பிப்பதற்கு ஏன் ஒரு விசேஷ தேவை உள்ளது?
◻ உடன் விசுவாசி ஒருவர் நம்மை ஏமாற்றிவிட்டதாக நாம் உணருவோமானால், பகுத்துணர்வு எவ்வாறு நமக்கு உதவக்கூடும்?
◻ தீர்மானம் செய்வதில் பகுத்துணர்வு என்ன பாகத்தை வகிக்க வேண்டும்?
[பக்கம் 18-ன் படம்]
ராஜ்யத்தை முதலாவதாக தொடர்ந்து தேடும்படி இயேசு கொடுத்த ஆலோசனையைப் பொருத்திப் பிரயோகிக்க பகுத்துணர்வு நமக்கு உதவிசெய்யும்
[பக்கம் 20-ன் படம்]
வியாபார ஒப்பந்தங்களை எப்பொழுதும் எழுத்தில் எழுதிவிடுங்கள்