உங்கள் இருதயத்தை பகுத்துணர்வினிடம் சாயப்பண்ணுங்கள்
“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் [“பகுத்துணர்வும்,” NW] வரும்.—நீதிமொழிகள் 2:6.
1. நம் இருதயத்தை எவ்வாறு பகுத்துணர்வினிடம் சாயப்பண்ணலாம்?
யெகோவா நம்முடைய மகத்தான போதகர். (ஏசாயா 30:20, 21, NW) ஆனால், அவருடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ‘கடவுளைப் பற்றிய அறிவிலிருந்து’ பயனடைய நாம் என்ன செய்ய வேண்டும்? செய்ய வேண்டியவற்றுள் ஒன்று ‘நம்முடைய இருதயத்தைப் பகுத்துணர்வினிடம் சாயப்பண்ண’ வேண்டும்—இந்தப் பண்பைப் பெறுவதற்கும் வெளிப்படுத்திக் காண்பிப்பதற்கும் இருதப்பூர்வமான ஆசை வேண்டும். இதற்காக, நாம் கடவுளை நோக்கியிருக்க வேண்டும், ஏனென்றால் ஞானமுள்ள மனிதன் சொன்னார்: “கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் [“பகுத்துணர்வும்,” NW] வரும்.” (நீதிமொழிகள் 2:1-6) அறிவு, ஞானம், மற்றும் பகுத்துணர்வு என்றால் என்ன?
2. (அ) அறிவு என்றால் என்ன? (ஆ) ஞானத்தை நீங்கள் எவ்வாறு வரையறுப்பீர்கள்? (இ) பகுத்துணர்வு என்றால் என்ன?
2 அறிவு என்பது அனுபவத்தின் மூலமாகவோ, உன்னிப்பாக பார்த்தறிந்தவற்றின் மூலமாகவோ, அல்லது படிப்பின் மூலமாகவோ பெற்ற உண்மைகளை நன்கு அறிந்திருப்பதாகும். ஞானம் என்பது அறிவைப் பயன்படுத்தும் திறமையாகும். (மத்தேயு 11:19, NW) இரண்டு பெண்கள் ஒரே குழந்தைக்காக சொந்தம் கொண்டாடியபோது சாலொமோன் ராஜா ஞானத்தைக் காண்பித்தார்; அந்த வழக்கைத் தீர்ப்பதற்கு, தன்னுடைய பிள்ளையின்மீது ஒரு தாய்க்கு இருந்த பாசத்தைப் பற்றிய தம்முடைய அறிவை பயன்படுத்தினார். (1 இராஜாக்கள் 3:16-28) பகுத்துணர்வு என்பது “தீர்ப்பளிக்கும் சாமர்த்தியம்.” அது, “ஒரு காரியத்தை மற்றொரு காரியத்திலிருந்து வேறுபடுத்திக் காணும் மனதின் சக்தி அல்லது திறமை.” (உவெப்ஸ்டர்ஸ் யூனிவர்ஸல் டிக்ஷ்னரி) நம்முடைய இருதயத்தை பகுத்துணர்வினிடம் சாயப்பண்ணுவோமானால், யெகோவா தம்முடைய குமாரனின்மூலம் அதை நமக்குத் தருவார். (2 தீமோத்தேயு 2:1, 7, NW) ஆனால் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பகுத்துணர்வு எவ்வாறு பாதிக்கக்கூடும்?
பகுத்துணர்வும் நம்முடைய பேச்சும்
3. நீதிமொழிகள் 11:12, 13-ஐ நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள், ‘நல்லிருதயம் இல்லாமலிருப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது?
3 “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” என்பதை உணர்ந்துகொள்ள பகுத்துணர்வு நமக்கு உதவுகிறது. (பிரசங்கி 3:7) இந்தப் பண்பு, நாம் என்ன சொல்கிறோமோ அதைக் குறித்து கவனமாயிருக்கும்படியும் செய்விக்கிறது. நீதிமொழிகள் 11:12, 13 சொல்கிறது: “மதிகெட்டவன் [“நல்லிருதயம் இல்லாதவன்,” NW] பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ [“பரந்த பகுத்துணர்வுள்ளவனோ,” NW] தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.” ஆம், மற்றொரு நபரை அவமதிக்கிற ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ “நல்லிருதயம் இல்லாதவன்(ள்).” வில்ஹெல்ம் ஜெஸேனியஸ் சொற்களஞ்சிய ஆசிரியர் சொல்லுகிறபடி, இப்படிப்பட்ட ஓர் ஆள், “புரிந்துகொள்ளும் தன்மை இல்லாதவராக” இருக்கிறார். அவனோ அல்லது அவளோ நல்ல தீர்மானம் எடுக்க முடியாமல் இருக்கிறான்(ள்). ‘இருதயம்’ (NW) என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பது, உள்ளான அந்த நபரின் நல்ல பண்புகள் குறைவுபடுவதை காண்பிக்கின்றன. ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர் ஒருவர் அவருடைய அல்லது அவளுடைய மனம்போன போக்கில் பேச்சைத் தொடர்ந்து அதை, புறங்கூறுமளவுக்கு அல்லது பழிதூற்றுமளவுக்கு தொடருவாராகில், சபையில் இந்த ஆரோக்கியமற்ற சூழ்நிலைமைக்கு ஒரு முடிவுகட்ட நியமிக்கப்பட்ட மூப்பர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.—லேவியராகமம் 19:16, NW; சங்கீதம் 101:5; 1 கொரிந்தியர் 5:11, NW.
4. பகுத்துணர்வும் உண்மையுமுள்ள கிறிஸ்தவர்கள் இரகசிய விஷயங்களைக் குறித்ததில் எவ்வாறு செயல்படுகிறார்கள்?
4 ‘நல்லிருதயம் இல்லாதவனைப்’ போல் செயல்படாமல், ‘அதிக பகுத்துணர்வுள்ள’ ஆட்கள் அமைதியாய் இருக்கவேண்டிய சமயத்தில் அமைதியாய் இருக்கின்றனர். அவர்கள் இரகசியத்தை வெளிப்படுத்துவதில்லை. (நீதிமொழிகள் 20:19) யோசனையற்ற பேச்சு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்தவர்களாய், பகுத்துணர்வுள்ளவர்கள் ‘ஆவியில் உண்மையுள்ளவர்களாய்’ இருக்கின்றனர். உடன் விசுவாசிகளிடம் உண்மைப்பற்றுறுதியுடன் இருக்கின்றனர்; அவர்களுக்கு ஆபத்துண்டாக்கும் இரகசியமான விஷயங்களை அம்பலப்படுத்துவதில்லை. பகுத்துணர்வுள்ள கிறிஸ்தவர்கள் சபை சம்பந்தமாக ஏதேனும் இரகசிய தகவலைப் பெறுவார்களாகில், யெகோவாவின் அமைப்பு அதன் சொந்த வழிமுறையில் வெளியிடுவதன் மூலம் தெரியப்படுத்துவதை தகுந்ததாக காணும்வரை அவர்கள் அதை வெளிப்படுத்தாமல் கட்டிக் காக்கிறார்கள்.
பகுத்துணர்வும் நம்முடைய நடத்தையும்
5. ஒழுக்கக் கட்டுப்பாடற்ற நடத்தையை ‘மூடன்’ எவ்வாறு நோக்குகிறான், ஏன்?
5 பகுத்துணர்வைப் பயன்படுத்தி முறையற்ற நடத்தையைத் தவிர்ப்பதற்கு பைபிள் நீதிமொழிகள் நமக்கு உதவிசெய்கின்றன. உதாரணமாக, நீதிமொழிகள் 10:23 சொல்லுகிறது: “தீவினைசெய்வது [“ஒழுக்கக் கட்டுப்பாடற்ற நடத்தை,” NW] மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ [“பகுத்துணர்வுள்ளவனுக்கோ,” NW] ஞானம் உண்டு.” ஒழுக்கக் கட்டுப்பாடற்ற நடத்தையை ‘விளையாட்டாக’ எடுத்துக்கொள்பவர்கள், தங்களுடைய தவறான நடத்தையைக் குறித்ததில் குருடராயிருக்கிறார்கள், அனைவரும், கணக்குக் கொடுக்கப்பட வேண்டியவராகிய கடவுளை அவமதிக்கிறார்கள். (ரோமர் 14:12) இப்படிப்பட்ட ‘மூடர்கள்,’ தங்களுடைய தவற்றை கடவுள் பார்ப்பதில்லை என்று நினைத்துக்கொள்ளுமளவுக்கு நியாயமற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் தங்களுடைய செயல்களின்மூலம், சுருங்கச்சொன்னால், “தேவன் இல்லை” என்று சொல்கிறார்கள். (சங்கீதம் 14:1-3; ஏசாயா 29:15, 16) தேவபக்திக்குரிய நியமங்களால் வழிநடத்தப்படுவதில்லை, அதனால் அவர்கள் பகுத்துணர்வற்றவர்களாய் இருக்கிறார்கள், காரியங்களை சரியாக நிதானிக்க முடிவதில்லை.—நீதிமொழிகள் 28:5.
6. ஒழுக்கக் கட்டுப்பாடற்ற நடத்தை ஏன் முட்டாள்தனமானது, நமக்குப் பகுத்துணர்வு இருக்குமானால் நாம் எவ்வாறு நோக்குவோம்?
6 ‘பகுத்துணர்வுள்ளவர்’ ஒழுக்கக் கட்டுப்பாடற்ற நடத்தை என்பது ஒரு ‘விளையாட்டோ’ கேளிக்கையோ அல்ல என உணர்ந்துகொள்கிறார். அது கடவுளுக்குப் பிரியமில்லாதது, அவருடனுள்ள நம்முடைய உறவை தகர்த்துவிடும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். இப்படிப்பட்ட நடத்தை முட்டாள்தனமானது, ஏனெனில் அது ஆட்களின் சுயமரியாதையை பறித்துப் போடுகிறது, திருமணங்களை நாசப்படுத்துகிறது, மனதுக்கும் உடலுக்கும் தீங்குவிளைவிக்கிறது, ஆவிக்குரியத்தன்மையை இழப்பதற்கு வழிநடத்துகிறது. ஆகவே நம்முடைய இருதயத்தை பகுத்துணர்வினிடம் சாயப்பண்ணி, ஒழுக்கக் கட்டுப்பாடற்ற நடத்தையை அல்லது எந்தவித ஒழுக்கயீனத்தையும் தவிர்ப்போமாக.—நீதிமொழிகள் 5:1-23.
பகுத்துணர்வும் நம்முடைய மனநிலையும்
7. கோபத்தினால் வரும் சரீரசம்பந்தமான பாதிப்புகள் சில யாவை?
7 நம்முடைய இருதயத்தை பகுத்துணர்வினிடமாக சாயப்பண்ணுவது நம்முடைய மனநிலையையும் கட்டுப்படுத்த நமக்கு உதவிசெய்கிறது. “கோபிக்க தாமதிக்கிறவன் பகுத்துணர்வு நிறைந்தவன்; பொறுமையற்றவனோ மதியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்,” என்பதாக நீதிமொழிகள் 14:29 (NW) சொல்லுகிறது. பகுத்துணர்வுள்ள ஒரு நபர் கடும் கோபத்தை தவிர்ப்பதற்கு ஒரு காரணம், அது சரீரப்பிரகாரமாக நம்மையே திரும்பத் தாக்கும் தீங்கான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து சுவாச பிரச்சினையை ஏற்படுத்துகிறது. ஆஸ்துமா, தோல் வியாதிகள், அஜீரண கோளாறுகள், வயிற்றுப்புண்கள் போன்ற வியாதிகளை கோபமும் மூர்க்க வெறியும் அதிகப்படுத்துவதாகவோ அல்லது ஏற்படுத்துவதாகவோ டாக்டர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
8. பொறுமையற்றிருப்பது எதற்கு வழிநடத்தும், ஆனால் இதன் சம்பந்தமாக பகுத்துணர்வு எவ்வாறு உதவிசெய்யும்?
8 நாம் பகுத்துணர்வைப் பயன்படுத்தி ‘கோபிக்க தாமதிக்கிறவர்களாக’ இருக்க வேண்டும் என்பது வெறுமனே நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக அல்ல. பொறுமையற்றவர்களாய் இருப்பது, நம்மை மனம் வருந்தச்செய்யும் முட்டாள்தனமான செயல்களுக்கு வழிநடத்தக்கூடும். பகுத்துணர்வு, நாவடக்கமற்ற பேச்சினால் அல்லது அவசரக்குடுக்கான நடத்தையினால் விளைவடையும் காரியங்களை நாம் சிந்திக்கும்படி செய்கிறது; இவ்விதமாய் ஞானமற்ற ஏதோவொன்றை செய்வதனால் ‘மதியீனத்தை விளங்கப்பண்ணுவதிலிருந்து’ நம்மைப் பாதுகாக்கிறது. மூர்க்கவெறி நம்முடைய சிந்திக்கும் விதங்களை நிலைகுலையச் செய்கிறது, இதனால் நாம் நல்நிதானிப்பை பயன்படுத்த முடியாது என்பதை உணர்ந்துகொள்வதற்கு விசேஷமாக பகுத்துணர்வு நமக்கு உதவுகிறது. இது, தெய்வீக சித்தத்தைச் செய்து கடவுளுடைய நீதியான நியமங்களுக்கு இசைவாக வாழ்வதற்கான நம்முடைய திறமையைப் பாதிக்கும். ஆம், கட்டுப்பாடற்ற கோபத்திற்கு ஆளாவது ஆவிக்குரிய விதமாக பாதிக்கிறது. உண்மையில் சொல்லப்போனால், கடவுளுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதிலிருந்து நம்மை விலக்கி வைக்கும் ‘மாம்சத்தின் கிரியைகளில்,’ “கோபங்கள்” வகைப்படுத்தப்படுகின்றன. (கலாத்தியர் 5:19-21) அப்படியானால், பகுத்துணர்வுள்ள கிறிஸ்தவர்களாக, நாம் “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும்” இருப்போமாக.—யாக்கோபு 1:19.
9. கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்கு பகுத்துணர்வும் சகோதர அன்பும் எவ்வாறு உதவிசெய்யக்கூடும்?
9 நாம் கோபமடைந்தால், ஒரு சண்டையைத் தவிர்ப்பதற்காக நாம் அமைதியாய் இருக்க வேண்டுமென்பதை பகுத்துணர்வு சுட்டிக்காட்டலாம். நீதிமொழிகள் 17:27 சொல்லுகிறது: “அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.” பகுத்துணர்வும் சகோதர அன்பும், புண்படுத்துகிற ஏதாவதொன்றை வெடுக்கென்று பேசிவிடும் தூண்டுதலை அடக்க வேண்டியதன் அவசியத்தைக் காண நமக்கு உதவிசெய்யும். ஏற்கெனவே கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டதென்றால், மனம்வருந்தி மன்னிப்புக் கேட்பதற்கும் திருத்திக்கொள்வதற்கும், அன்பும் மனத்தாழ்மையும் நம்மை உந்துவிக்கும். யாராவது ஒருவர் நமக்குத் தீங்கிழைத்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். அப்படியானால் நாம் அவரிடம் தனிமையில் சாந்தத்துடனும் மனத்தாழ்மையுடனும் சமாதானத்தை முன்னேற்றுவிக்கும் முக்கிய நோக்குடன் பேசுவோமாக.—மத்தேயு 5:23, 24; 18:15-17.
பகுத்துணர்வும் நம்முடைய குடும்பமும்
10. குடும்ப வாழ்க்கையில் ஞானமும் பகுத்துணர்வும் என்ன பாகத்தை வகிக்கின்றன?
10 குடும்ப அங்கத்தினர்கள் ஞானத்தையும் பகுத்துணர்வையும் காண்பிப்பது அவசியம், ஏனென்றால் இத்தகைய பண்புகள் ஒரு குடும்பத்தைக் கட்டியமைக்கும். நீதிமொழிகள் 24:3, 4 சொல்லுகிறது: “வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.” ஞானமும் பகுத்துணர்வும் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கைக்கு சிறந்த கட்டிடப் பாளங்களைப் போல இருக்கின்றன. கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடைய உணர்ச்சிகளையும் விருப்பங்களையும் வெளிக்கொணருவதற்கு பகுத்துணர்வு அவர்களுக்கு உதவிசெய்கிறது. பகுத்துணர்வுள்ள ஒரு நபர் பேச்சுத்தொடர்பு கொள்வதற்கும், செவிகொடுத்துக் கேட்பதற்கும், அவன் அல்லது அவளுடைய திருமண துணையின் உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்கள் பேரில் உட்பார்வையைப் பெறுவதற்கும் முடிகிறவராக இருக்கிறார்.—நீதிமொழிகள் 20:5.
11. பகுத்துணர்வுள்ள திருமணமான ஒரு பெண் எவ்வாறு ‘தன் வீட்டைக் கட்டுகிறாள்’?
11 சந்தேகத்திற்கிடமின்றி ஞானமும் பகுத்துணர்வும் குடும்ப வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. உதாரணமாக, நீதிமொழிகள் 14:1 சொல்லுகிறது: “புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.” தன் கணவனுக்கு தகுந்த கீழ்ப்படிதலைக் காண்பிக்கிற ஞானமும் பகுத்துணர்வுமுள்ள திருமணமான ஒரு பெண், தன் வீட்டாருடைய நன்மைக்காக கடினமாக வேலைசெய்து, இதன்மூலம் தன்னுடைய குடும்பத்தைக் கட்டியமைப்பாள். ‘அவளுடைய வீட்டைக் கட்டுவிக்கும்’ ஒரு விஷயம், தன்னுடைய கணவனைப் பற்றி எப்பொழுதும் புகழ்ந்து பேசுவதும், இதன்மூலம் அவரிடமாக மற்றவர்களுடைய மரியாதையை அதிகரிப்பதுமாகும். யெகோவாவுக்கு பயபக்தியோடுள்ள திறமையான, பகுத்துணர்வுடைய ஒரு மனைவி, தனக்கான பாராட்டை பெற்றுக்கொள்கிறாள்.—நீதிமொழிகள் 12:4; 31:28, 30.
பகுத்துணர்வும் நம் வாழ்க்கை போக்கும்
12. முட்டாள்தனத்தை ‘நல்லிருதயம் இல்லாதவர்கள்’ எவ்வாறு நோக்குகிறார்கள், ஏன்?
12 நம்முடைய செயல்கள் அனைத்தையும் சரியாக செய்ய பகுத்துணர்வு நமக்கு உதவிசெய்கிறது. நீதிமொழிகள் 15:21-ல் இது சுட்டிக்காட்டப்படுகிறது, அது சொல்லுகிறது: “மூடத்தனம் புத்தியீனனுக்குச் [“நல்லிருதயம் இல்லாதவன்,” NW] சந்தோஷம்; புத்திமானோ [“பகுத்துணர்வுள்ள ஒரு மனிதன்,” NW] தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.” இந்த நீதிமொழியை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்? முட்டாள்தனமான, அல்லது மடத்தனமான ஒரு போக்கு, புத்திகெட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் இளைஞருக்கும் களிகூருவதற்கு ஏதுவாயிருக்கிறது. அவர்கள் ’நல்லிருதயம் இல்லாதவர்களாக’ நல்ல உள்ளெண்ணம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள், அதனால் மூடத்தனத்தில் சந்தோஷப்படுமளவுக்கு ஞானமற்றவர்களாக இருக்கிறார்கள்.
13. நகைப்பையும் அற்பப்பொழுதுபோக்கையும் பற்றி சாலொமோன் எதை பகுத்துணர்ந்தார்?
13 அற்பப்பொழுதுபோக்கு அதிகத்தை சாதிப்பதில்லை என்பதை பகுத்துணர்வுள்ள இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் கற்றிருந்தார். அவர் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாயிருந்தது. நகைப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.” (பிரசங்கி 2:1, 2) பகுத்துணர்வுள்ள ஒரு மனிதனாக, சந்தோஷமும் நகைப்பும் மட்டுமே திருப்தியளிப்பதில்லை, ஏனென்றால் அவை உண்மையான மற்றும் நிரந்தரமான மகிழ்ச்சியை பிறப்பிப்பதில்லை என்பதை சாலொமோன் கண்டார். நம்முடைய பிரச்சினைகளை தற்காலிகமாக மறப்பதற்கு நகைப்பு நமக்கு உதவலாம், ஆனால் அதற்குப் பிறகு அந்தப் பிரச்சினைகள் மெல்ல தலைதூக்க ஆரம்பிக்கலாம், இன்னும் மோசமான அளவில்கூட தலைதூக்கலாம். நகைப்பை “பைத்தியம்” என்று சாலொமோனால் சரியாகவே சொல்ல முடிந்தது. ஏன்? ஏனென்றால் சிந்திக்காமல் சிரிப்பது நல்நிதானிப்பை மேகம்போல மூடிவிடுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ளும்படி செய்துவிடலாம். விகடகவியின் வார்த்தைகளோடும் செயல்களோடும் தொடர்புடைய வகையான சந்தோஷம், பிரயோஜனமான ஒன்றை பிறப்பிப்பதாக குறிப்பிட முடியாது. சந்தோஷத்தையும் நகைப்பையும் ஆராய்ந்த சாலொமோனுடைய உட்பொருளை பகுத்துணர்வது, ‘தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராய்’ இருப்பதை தவிர்க்க நமக்கு உதவுகிறது.—2 தீமோத்தேயு 3:1, 4.
14. எவ்வாறு பகுத்துணர்வுள்ள மனிதன் தன் “நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்”?
14 எவ்வாறு பகுத்துணர்வுள்ள ஒரு மனிதன் தன் “நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்”? ஆவிக்குரிய பகுத்துணர்வும் தெய்வீக நியமங்களைப் பொருத்திப் பிரயோகிப்பதும் நீதியான, நேர்மையான போக்கில் மக்களை வழிநடத்துகின்றன. பையிங்டன் மொழிபெயர்ப்பு இவ்வாறு நேரிடையாக சொல்லுகிறது: “முட்டாள்தனம் மூளைகெட்ட மனிதனுக்கு ஆசீர்வாதம், புத்தியுள்ள மனிதனோ நேர்மையாக நடப்பான்.” ‘பகுத்துணர்வுள்ளவன்’ தன்னுடைய பாதங்களுக்கு வழிகளை செவ்வைப்படுத்துகிறான்; மேலும், கடவுளுடைய வார்த்தையை வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிப்பதனால் சரியானதற்கும் தவறானதற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடிகிறவனாகவும் இருக்கிறான்.—எபிரெயர் 5:14; 12:12, 13.
பகுத்துணர்வுக்காக எப்பொழுதும் யெகோவாவை நோக்கியிருங்கள்
15. நீதிமொழிகள் 2:6-9-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
15 வாழ்க்கையில் நேர்மையான ஒரு போக்கைப் பின்பற்றுவதற்காக, நாமனைவரும் நம்முடைய அபூரணத்தன்மையை ஒத்துக்கொண்டு, ஆவிக்குரிய பகுத்துணர்வுக்காக யெகோவாவை நோக்கியிருப்பது அவசியம். நீதிமொழிகள் 2:6-9 சொல்லுகிறது: “கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.”—யாக்கோபு 4:6-ஐ ஒப்பிடுக.
16. ஏன் யெகோவாவுக்கு விரோதமான எந்தவித ஞானமோ, பகுத்துணர்வோ, ஆலோசனையோ இல்லை?
16 யெகோவாவின்மீது நாம் சார்ந்திருப்பதை ஏற்றுக்கொண்டு, அவருடைய வார்த்தையை ஆழமாக ஆராய்வதன் மூலம் அவருடைய சித்தத்தைப் பகுத்துணர நாம் தாழ்மையுடன் நாடுவோமாக. முழுமையான கருத்தில் அவரிடம் ஞானம் இருக்கிறது, அவருடைய ஆலோசனை எப்பொழுதும் பிரயோஜனமுள்ளது. (ஏசாயா 40:13; ரோமர் 11:34) உண்மையில், அவருடைய ஆலோசனைக்கு முரணாக இருக்கிற எந்த ஆலோசனையும் மதிப்பற்றது. நீதிமொழிகள் 21:30 சொல்லுகிறது: “கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, [“பகுத்துணர்வுமில்லை,” NW] ஆலோசனையுமில்லை.” (நீதிமொழிகள் 19:21-ஐ ஒப்பிடுக.) “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யிடமிருந்து வரும் பிரசுரங்களின் உதவியால் கடவுளுடைய வார்த்தையைப் படித்ததனால் அபிவிருத்தி செய்யப்படும் ஆவிக்குரிய பகுத்துணர்வு மாத்திரமே, வாழ்க்கையில் ஒரு சரியான போக்கைத் தொடருவதற்கு நமக்கு உதவிசெய்யும். (மத்தேயு 24:45-47, NW) ஆகவே, முரணான ஆலோசனையானது நம்புவதற்கு எவ்வளவுதான் ஏற்றதாக தோன்றினாலும்கூட, அது அவருடைய வார்த்தைக்கு ஈடாக முடியாது என்பதை அறிந்தவர்களாய், நம்முடைய வாழ்க்கை முறையை யெகோவாவுடைய ஆலோசனைக்கு இசைவாக நடத்துவோமாக.
17. தவறான ஆலோசனை கொடுக்கப்பட்டால் எதில் விளைவடையும்?
17 ஆலோசனை கொடுக்கிற பகுத்துணர்வுள்ள கிறிஸ்தவர்கள், அந்த ஆலோசனை கடவுளுடைய வார்த்தையிலிருந்தே என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதையும் ஒரு கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன்பு பைபிள் படிப்பும் தியானமும் அவசியம் என்பதையும் உணருகிறார்கள். (நீதிமொழிகள் 15:28) முக்கியத்துவமுள்ள கருத்தார்ந்த விஷயங்களைப் பற்றிய கேள்விகளுக்கு தவறாக பதிலளித்தால், பெருந்தீங்கு ஏற்படக்கூடும். ஆகவே, கிறிஸ்தவ மூப்பர்களுக்கு ஆவிக்குரிய பகுத்துணர்வு அவசியம், மேலும் உடன் விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய விதமாக உதவியளிப்பதற்கு முயலுகையில் யெகோவாவின் வழிநடத்துதலுக்காக ஜெபிக்கவும் வேண்டும்.
ஆவிக்குரிய பகுத்துணர்வினால் நிறைந்திருங்கள்
18. சபையில் ஒரு பிரச்சினை எழும்புமானால், நம்முடைய ஆவிக்குரிய சமநிலையைக் காத்துக்கொள்ள பகுத்துணர்வு எவ்வாறு நமக்கு உதவக்கூடும்?
18 யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கு, ‘எல்லா காரியங்களிலும் நமக்குப் பகுத்துணர்வு’ தேவை. (2 தீமோத்தேயு 2:7, NW) பைபிளை பேராவலுடன் ஊக்கமாக படிப்பதும் கடவுளுடைய ஆவிக்கும் அமைப்புக்கும் இசைவாக நடப்பதும், நம்மை தவறாக வழிநடத்தக்கூடிய சூழ்நிலைமைகளை எதிர்ப்படுகையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பகுத்துணர்வதற்கு உதவிசெய்யும். உதாரணமாக, எப்படி கையாளப்பட வேண்டுமென்று நாம் நினைக்கிறோமோ அப்படி ஏதாவதொரு காரியம் சபையில் கையாளப்படவில்லை என்று வைத்துக்கொள்வோம். யெகோவாவின் மக்களுடன் கூட்டுறவுகொள்வதை நிறுத்திக்கொள்வதற்கும் கடவுளை சேவிப்பதை விட்டுவிடுவதற்கும் அதைக் காரணம் காட்டாமலிருக்க ஆவிக்குரிய பகுத்துணர்வு நமக்கு உதவிசெய்யும். யெகோவாவை சேவிக்கும் சிலாக்கியத்தை, நாம் அனுபவிக்கிற ஆவிக்குரிய விடுதலையை, ராஜ்ய அறிவிப்பாளர்களாக நம்முடைய சேவையிலிருந்து பெறும் மகிழ்ச்சியை யோசித்துப் பாருங்கள். மற்றவர்கள் என்ன செய்தாலும்சரி, ஆவிக்குரிய பகுத்துணர்வு, சரியான நோக்குநிலையைப் பெறுவதற்கும் நாம் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வதற்கும் அவருடன் கொண்டுள்ள நம்முடைய உறவை நெஞ்சார போற்றி மகிழ்வதற்கும் நமக்கு உதவிசெய்கிறது. ஒரு பிரச்சினையை தேவராஜ்ய முறைப்படி கையாளுவது நம் கையில் இல்லை என்றால், அந்தச் சூழ்நிலையை யெகோவா சரிப்படுத்துவதற்காக நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். கைவிட்டுவிடுவதற்கோ அல்லது நம்பிக்கையிழந்துவிடுவதற்கோ பதிலாக, “தேவனை நோக்கிக் காத்திரு”ப்போமாக.—சங்கீதம் 42:5, 11.
19. (அ) பிலிப்பியர்களுக்காக பவுல் செய்த ஜெபத்தின் சாராம்சம் என்ன? (ஆ) நாம் ஏதாவதொன்றை முழுமையாக புரிந்துகொள்ளாவிட்டால் பகுத்துணர்வு எவ்வாறு நமக்கு உதவக்கூடும்?
19 கடவுளிடமும் அவருடைய மக்களிடமும் உண்மைப்பற்றுறுதியுடனிருக்க ஆவிக்குரிய பகுத்துணர்வு நமக்கு உதவிசெய்கிறது. பிலிப்பியிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு சொன்னார்: “அதிமுக்கியமான காரியங்களை நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது திருத்தமான அறிவிலும் முழு பகுத்துணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று கறையற்றவர்களாயும் பிறருக்கு இடறலற்றவர்களாயும் இருக்கவும் நான் இடைவிடமால் ஜெபம் செய்கிறேன்.” (பிலிப்பியர் 1:9, 10, NW) சரியாக நியாயங்காட்டிப் பேசுவதற்கு ‘திருத்தமான அறிவும் முழு பகுத்துணர்வும்’ நமக்குத் தேவை. ‘பகுத்துணர்வு’ என்று இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, “கூருணர்வுடைய ஒழுக்கவுணர்வு” என்பதாகும். நாம் ஒன்றை கற்றுக்கொள்ளும்போது, கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையேயுள்ள அதன் உறவைப் பற்றி நாம் உணர்ந்துகொள்ளவும் யெகோவாவின் ஆளுமையையும் அவருடைய ஏற்பாடுகளையும் அது எவ்வாறு மகிமைப்படுத்துகிறது என்பதை தியானிக்கவும் விரும்புகிறோம். இது நம்முடைய பகுத்துணர்வையும், யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் நமக்காக செய்திருக்கிறவற்றிற்கான நம்முடைய போற்றுதலையும் அதிகரிக்கச் செய்கிறது. நாம் ஏதாவதொன்றை முழுமையாக புரிந்துகொள்ளவில்லையென்றால், கடவுளைப் பற்றியும் கிறிஸ்துவைப் பற்றியும் தெய்வீக நோக்கங்களைப் பற்றியும் நாம் கற்றிருக்கிற முக்கியமான இந்த எல்லா காரியங்களிலும் நமக்குள்ள விசுவாசத்தை ஒதுக்கித் தள்ளிவிடக்கூடாது என்பதை உணர்ந்துகொள்ள பகுத்துணர்வு நமக்கு உதவிசெய்யும்.
20. நாம் எவ்வாறு ஆவிக்குரிய பகுத்துணர்வு நிறைந்தவர்களாகலாம்?
20 நம்முடைய சிந்தைகளையும் செயல்களையும் எப்பொழுதும் கடவுளுடைய வார்த்தையுடன் இணைந்து செல்லும்படி பார்த்துக் கொண்டால், நாம் ஆவிக்குரிய பகுத்துணர்வு நிறைந்தவர்களாவோம். (2 கொரிந்தியர் 13:5) இதை ஓர் ஆக்கப்பூர்வமான முறையில் செய்வது, பிடிவாதமுள்ளவர்களாகவும் மற்றவர்களைக் குறித்து விமர்சிப்பவர்களாகவும் இல்லாமல், மனத்தாழ்மையுள்ளவர்களாய் இருக்க நமக்கு உதவிசெய்யும். கொடுக்கப்படும் பத்திமதியிலிருந்து பயனடையவும் அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ளவும் பகுத்துணர்வு நமக்கு உதவிசெய்கிறது. (நீதிமொழிகள் 3:7) அப்படியானால், யெகோவாவை பிரியப்படுத்தும் ஆசையுடன், அவருடைய வார்த்தையைப் பற்றிய திருத்தமான அறிவை முழுமையாக பெற நாடுவோமாக. தவறானவற்றிலிருந்து சரியானதைப் பகுத்துணர்வதற்கும் உண்மையிலேயே முக்கியத்துவமுள்ள காரியத்தைத் தீர்மானிப்பதற்கும், யெகோவாவுடன் நம்முடைய மதிப்புமிக்க உறவை உண்மைப்பற்றுறுதியுடன் பற்றிக்கொண்டிருக்கவும் இது நமக்கு உதவும். நம்முடைய இருதயத்தை பகுத்துணர்வினிடம் சாயப்பண்ணுவோமானால் இதெல்லாம் சாத்தியமே. எனினும், வேறொன்றும் தேவை. பகுத்துணர்வு நம்மை பாதுகாக்க அனுமதிக்க வேண்டும்.
நீங்கள் எவ்வாறு பிரதிபலிப்பீர்கள்?
◻நாம் ஏன் நம்முடைய இருதயத்தைப் பகுத்துணர்வினிடம் சாயப்பண்ண வேண்டும்?
◻நம்முடைய பேச்சையும் நடத்தையையும் பகுத்துணர்வு எவ்வாறு பாதிக்கக்கூடும்?
◻நம்முடைய மனநிலையின்மீது பகுத்துணர்வு என்ன விளைவை ஏற்படுத்தக்கூடும்?
◻பகுத்துணர்வுக்காக நாம் ஏன் எப்பொழுதும் யெகோவாவை நோக்கியிருக்க வேண்டும்?
[பக்கம் 13ன் படம்]
பகுத்துணர்வு நம் மனநிலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது
[பக்கம் 15ன் படம்]
அற்பப்பொழுதுபோக்கு உண்மையிலேயே திருப்தியளிப்பதில்லை என்பதை பகுத்துணர்வுள்ள ராஜாவாகிய சாலொமோன் உணர்ந்தார்