உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lv அதி. 10 பக். 119-137
  • திருமணம்​—⁠அன்புக் கடவுளின் பரிசு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • திருமணம்​—⁠அன்புக் கடவுளின் பரிசு
  • ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • திருமணம் எதற்காக?
  • பொருத்தமான துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
  • மண வாழ்வில் அடியெடுத்து வைக்குமுன் என்ன செய்ய வேண்டும்?
  • திருமணம் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
  • திருமணம்—கடவுளின் பரிசு
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • துணையை தேர்ந்தெடுப்பதில் கடவுளுடைய வழிநடத்துதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • திருமண நாளுக்குப் பின்
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • உங்கள் விவாகத்திற்கு நல்ல அஸ்திபாரத்தைப் போடுதல்
    குடும்ப வாழ்க்கை
மேலும் பார்க்க
‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
lv அதி. 10 பக். 119-137
சந்தோஷமான ஒரு ஜோடி

அதிகாரம் 10

திருமணம் —அன்புக் கடவுளின் பரிசு

“மூன்று இழைகள் சேர்ந்த கயிற்றைச் சீக்கிரத்தில் அறுக்க முடியாது.”—பிரசங்கி 4:12.

1, 2. (அ) மணமக்களைப் பார்க்கும்போது சில சமயங்களில் நம் மனதில் என்ன கேள்விகள் வரலாம், ஏன்? (ஆ) இந்த அதிகாரத்தில் நாம் எந்தெந்த கேள்விகளுக்குப் பதில் காண்போம்?

கல்யாணத்திற்குப் போக உங்களுக்கு இஷ்டமா? நிறைய பேருக்கு இஷ்டம்தான்; ஏனென்றால், அங்கே சந்தோஷம் களைகட்டியிருக்கும். மணமகனும் மணமகளும் புத்தாடையில் புதுப்பொலிவுடன் காட்சியளிப்பார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுடைய முகமும் மகிழ்ச்சியில் பிரகாசிக்கும்! அந்த நாளில் அவர்கள் சந்தோஷத்தில் மிதப்பார்கள். ஒளிமயமான எதிர்காலம் அவர்கள் கண்ணில் தெரியும்!

2 ஆனால், இன்று திருமணங்கள் சின்னாபின்னமாகி வருவதை நாம் கண்ணாரக் காண்கிறோம். புதுமணத் தம்பதியர் சந்தோஷமாய் குடும்பம் நடத்த வேண்டுமென்பதே நம் அனைவரின் ஆசையாக இருந்தாலும், ‘இவர்கள் என்றைக்கும் இதேபோல் சந்தோஷமாய் இருப்பார்களா? கடைசிவரை இணைபிரியாமல் வாழ்வார்களா?’ என்று சில சமயங்களில் நாம் யோசிக்கலாம். ஆனால், கடவுள் கொடுத்திருக்கும் அறிவுரைகளைக் கணவனும் மனைவியும் ஏற்று நடந்தால் என்றைக்கும் மண வாழ்வில் மகிழ்ச்சி காண்பார்கள், காலமெல்லாம் இணைபிரியாமல் வாழ்வார்கள். (நீதிமொழிகள் 3:5, 6-ஐ வாசியுங்கள்.) கடவுளது அன்பிலும் நிலைத்திருப்பார்கள். இப்போது, பின்வரும் நான்கு கேள்விகளையும் பைபிள் தரும் பதில்களையும் சிந்திப்போம்: திருமணம் செய்துகொள்ள உங்களுக்குத் தகுந்த காரணங்கள் இருக்கின்றனவா? நீங்கள் திருமணம் செய்துகொள்ள நினைத்தால், எப்படிப்பட்ட நபரை துணையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? மண வாழ்வில் அடியெடுத்து வைக்குமுன் நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும்? மணவாழ்வில் என்றும் மகிழ்ச்சி காண தம்பதிகளுக்கு எது உதவும்?

திருமணம் எதற்காக?

3. அற்ப காரணங்களுக்காக திருமணம் செய்வது ஏன் ஞானமான செயல் அல்ல?

3 கல்யாணம் செய்துகொண்டால் மட்டுமே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், வாழ்க்கைத் துணை இல்லையென்றால் வாழ்வில் சந்தோஷமோ திருப்தியோ இருக்காது என்று சிலர் நினைக்கிறார்கள். இது அப்பட்டமான பொய்! கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த இயேசு, அப்படி வாழ்வது ஒரு வரம் என்றார். அதோடு, திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க முடிந்தவர்களை அப்படியே இருக்கும்படி உந்துவித்தார். (மத்தேயு 19:11, 12) மணமாகாமல் இருப்பதால் வரும் நன்மைகளை அப்போஸ்தலன் பவுலும் குறிப்பிட்டார். (1 கொரிந்தியர் 7:32-38) கல்யாணம் செய்யவே கூடாது என்று இயேசுவோ பவுலோ கட்டளையிடவில்லை. சொல்லப்போனால், ‘திருமணம் செய்யக் கூடாது’ என்பது ‘பேய்களிடமிருந்து வருகிற போதனைகளில்’ ஒன்று. (1 தீமோத்தேயு 4:1-3) என்றாலும், எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் யெகோவாவுக்குச் சேவை செய்ய விரும்புகிறவர்களுக்குத் தனிமை ஒரு வரமே. எனவே, மற்றவர்களின் வற்புறுத்தலுக்காகவோ அற்பமான வேறு காரணங்களுக்காகவோ திருமணம் செய்வது ஞானமான செயல் அல்ல.

4. பிள்ளைகளை வளர்ப்பதற்கு வெற்றிகரமான மணவாழ்வே சிறந்த அஸ்திவாரம் என எப்படிச் சொல்லலாம்?

4 மறுபட்சத்தில், திருமணம் செய்துகொள்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா? ஆம். திருமணமும் நம்முடைய அன்புக் கடவுள் தந்த பரிசுதான். (ஆதியாகமம் 2:18-ஐ வாசியுங்கள்.) எனவே, திருமணம் செய்துகொள்வதில் சில அனுகூலங்களும் ஆசீர்வாதங்களும் உண்டு. உதாரணமாக, வெற்றிகரமான மணவாழ்வே சிறப்பான குடும்ப வாழ்க்கைக்கு அஸ்திவாரம். பிள்ளைகளுக்கு அன்பு காட்டி, அவர்களைக் கண்டித்து வழிநடத்த ஆரோக்கியமான குடும்பச் சூழல் தேவை. (சங்கீதம் 127:4; எபேசியர் 6:1-4) அதேசமயம், திருமணம் செய்துகொள்வது பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்காக மட்டுமே அல்ல.

5, 6. (அ) ஒருவருடன் நெருங்கிய நட்புகொள்வதால் வரும் பயன்களைப் பற்றி பிரசங்கி 4:9-12 என்ன சொல்கிறது? (ஆ) திருமணம் எப்படி மூன்று இழைகள் சேர்ந்த கயிற்றைப் போல் இருக்கிறது?

5 இந்த அதிகாரத்தின் முக்கிய வசனத்தையும் அதன் சூழமைவையும் கவனியுங்கள்: “தனியாக இருப்பதைவிட இரண்டு பேராகச் சேர்ந்திருப்பது நல்லது. அப்போது, அவர்களுடைய கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். ஒருவன் விழுந்தால் இன்னொருவன் தூக்கிவிட முடியும். ஆனால், தனியாக இருப்பவன் கீழே விழுந்தால் அவனை யார் தூக்கிவிடுவது? இரண்டு பேர் சேர்ந்து படுத்துக்கொண்டால் கதகதப்பாக இருக்கும். தனியாக இருப்பவனால் எப்படிக் கதகதப்பாக இருக்க முடியும்? தனியாக இருப்பவனை ஒருவன் சுலபமாக வீழ்த்திவிடலாம். ஆனால், இரண்டு பேராக இருந்தால் அவனை எதிர்த்து நிற்க முடியும். மூன்று இழைகள் சேர்ந்த கயிற்றைச் சீக்கிரத்தில் அறுக்க முடியாது.”—பிரசங்கி 4:9-12.

6 முக்கியமாக, இந்த வசனம் நட்பின் மதிப்பை எடுத்துக்காட்டுகிறது. சொல்லப்போனால், இல்லற வாழ்வில் இணையும் இருவர் மிக நெருங்கிய நண்பர்களாக ஆகமுடியும். தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் ஆறுதலாகவும் அடைக்கலமாகவும் இருக்க முடியும் என்று இந்த வசனம் காட்டுகிறது. திருமண பந்தம் உறுதியாக இருக்க கணவன் மனைவி மட்டுமல்ல, கடவுளும் அந்தப் பந்தத்தில் இணைந்திருக்க வேண்டும். ஏனென்றால், இரண்டு இழைகள் சேர்ந்த கயிற்றைச் சுலபமாக அறுத்துவிட முடியும் என இந்த வசனத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மூன்று இழைகள் சேர்ந்த கயிற்றை அறுப்பது மிகவும் கடினம். யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு கணவனும் மனைவியும் வாழ்ந்தால், அவர்களுடைய பந்தம் மூன்று இழைகள் சேர்ந்த கயிற்றைப் போல் பலமாக இருக்கும். ஆம், அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையில் யெகோவாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் திருமண பந்தம் மிக உறுதியாக இருக்கும்.

7, 8. (அ) பாலியல் ஆசைகளுடன் போராடுகிற மணமாகாத கிறிஸ்தவர்களுக்கு பவுல் என்ன அறிவுரை கொடுத்தார்? (ஆ) திருமணத்தைப் பற்றி பைபிள் சொல்லும் எதார்த்தமான கருத்து என்ன?

7 திருமண உறவில் மட்டுமே ஒருவர் தனது பாலியல் ஆசைகளைத் திருப்தி செய்துகொள்ள முடியும். இத்தகைய பந்தத்தில் இணைந்த இருவருக்கு உடலுறவு இன்பத்தின் ஊற்றாக இருக்கிறது. (நீதிமொழிகள் 5:18) திருமணமாகாத ஒருவர் “இளமை மலரும் பருவத்தை,” அதாவது பாலியல் ஆசைகள் பலமாக இருக்கும் பருவத்தை, கடந்திருந்தாலும்கூட அப்படிப்பட்ட ஆசைகள் அவருக்குள் பொங்கி வரலாம். அந்த ஆசைகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், அசுத்தமான அல்லது முறைகேடான நடத்தையில் அவர் ஈடுபட்டுவிடலாம். அதனால்தான், திருமணமாகாதவர்களுக்கு பவுல் இந்த அறிவுரை கொடுத்தார்: “அவர்களுக்குச் சுயக்கட்டுப்பாடு இல்லையென்றால் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனென்றால், காமத் தீயில் பற்றியெரிவதைவிட திருமணம் செய்துகொள்வதே மேல்.”—1 கொரிந்தியர் 7:9, 36; யாக்கோபு 1:15.

8 ஒருவர் எந்தக் காரணத்திற்காகத் திருமணம் செய்ய நினைத்தாலும் சரி, மண வாழ்வைக் குறித்து அவர் எதார்த்தமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். “திருமணம் செய்துகொள்கிறவர்களுக்கு வாழ்க்கையில் உபத்திரவங்கள் வரும்” என்று பவுல் குறிப்பிட்டார். (1 கொரிந்தியர் 7:28) ஆம், திருமணமானவர்களுக்குச் சில பிரத்தியேகச் சவால்கள் இருக்கின்றன. என்றாலும், நீங்கள் திருமணம் செய்துகொள்ள நினைத்தால், சவால்களைக் குறைத்து, சந்தோஷத்தை எப்படிக் கூட்டலாம்? நன்கு யோசித்து துணையைத் தேர்ந்தெடுப்பது அதற்கு ஒரு வழி.

பொருத்தமான துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

9, 10. (அ) விசுவாசத்தில் இல்லாதவருடன் திருமணத்தில் இணைவதால் வரும் அபாயத்தை பவுல் எப்படி உதாரணத்துடன் காட்டினார்? (ஆ) விசுவாசத்தில் இல்லாதவரை மணம் செய்யக்கூடாது என்ற பைபிள் அறிவுரையை அலட்சியம் செய்வதால் வரும் விளைவுகள் என்ன?

9 வாழ்க்கைத் துணையைத் தேடும் ஒருவர் மனதில் வைக்க வேண்டிய ஒரு முக்கியமான நியமத்தை பவுல் குறிப்பிட்டார்: “விசுவாசிகளாக இல்லாதவர்களோடு பொருத்தமற்ற நுகத்தடியில் பிணைக்கப்படாதீர்கள்.” (2 கொரிந்தியர் 6:14, அடிக்குறிப்பு) விவசாயத்தை மனதில் வைத்தே பவுல் இந்த உதாரணத்தை எழுதினார். உருவத்திலும் பலத்திலும் மிகவும் வேறுபட்டிருக்கும் இரண்டு மிருகங்களை நுகத்தடியில் பிணைத்து உழுதால், இரண்டுமே கஷ்டப்படும். அதுபோல, விசுவாசி ஒருவர் விசுவாசத்தில் இல்லாத ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைந்தால், அவர்கள் வாழ்வில் துன்பமும் துயரமுமே மிஞ்சும். அவர்களில் ஒருவர் யெகோவாவின் அன்பில் நிலைத்திருக்க வேண்டுமென விரும்புகையில் மற்றவருக்கோ அதில் துளியும் ஆர்வம் இல்லாவிட்டால், எதற்கு முதலிடம் கொடுப்பது என்பதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் உண்டாகும். எனவேதான், “நம் எஜமானைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்ய வேண்டுமென கிறிஸ்தவர்களுக்கு பவுல் அறிவுரை கூறினார்.—1 கொரிந்தியர் 7:39.

10 சில சமயங்களில், தனிமையில் வாடுவதைவிட விசுவாசத்தில் இல்லாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதே மேல் என்கிற முடிவுக்கு சிலர் வந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் பைபிள் தரும் அறிவுரையை அலட்சியம் செய்துவிட்டு, யெகோவாவை வணங்காத ஒருவரை கரம்பிடித்திருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தங்களுக்குத் துக்கத்தையே தேடிக்கொள்கிறார்கள். வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்களைத் துணையிடம் இவர்களால் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. அதனால், திருமணத்துக்கு முன்பைவிட இப்போதுதான் அதிகமாய் தனிமையில் வாடுகிறார்கள். என்றாலும், திருமணமாகாத ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தில் பைபிள் தரும் அறிவுரையின் மதிப்பை உணர்ந்து அதைக் கடைப்பிடிப்பது சந்தோஷத்திற்குரிய விஷயம். (சங்கீதம் 32:8-ஐ வாசியுங்கள்.) யெகோவாவை வணங்குகிற ஒரு துணையை என்றாவது ஒருநாள் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் மணம் செய்துகொள்ளாமல் வாழ்கிறார்கள்.

11. திருமணத் துணையை ஞானமாய்த் தேர்ந்தெடுக்க எது உங்களுக்கு உதவும்? (பக்கம் 130-ல் உள்ள பெட்டியையும் காண்க.)

11 உண்மைதான், ஒருவர் யெகோவாவை வணங்குகிறார் என்பதால் உங்களுக்குப் பொருத்தமான துணையாக இருப்பார் என்று சொல்லிவிட முடியாது. நீங்கள் திருமணம் செய்ய நினைத்தால், உங்களைப் போல் சுபாவம் உள்ளவரை, ஆன்மீக லட்சியங்கள் உள்ளவரை, கடவுள் பயம் உள்ளவரைத் தேடுங்கள். இந்த விஷயத்தில் உண்மையும் விவேகமும் உள்ள அடிமை ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. அந்த அடிமை தரும் பைபிள் அறிவுரைகளைக் கவனமாகப் படியுங்கள், கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள். அந்த அறிவுரைகளை வழிகாட்டியாக வைத்து திருமணத் துணையைத் தேர்ந்தெடுங்கள்.a—சங்கீதம் 119:105-ஐ வாசியுங்கள்.

12. திருமணத்தைப் பொறுத்தவரை, அநேக நாடுகளில் என்ன வழக்கம் உள்ளது, பைபிளில் உள்ள எந்த உதாரணம் உங்களுக்கு உதவலாம்?

12 அநேக நாடுகளில், வழக்கமாக பெற்றோர்தான் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில் பெற்றோருக்குத்தான் அதிக ஞானமும் அனுபவமும் இருக்கிறது என அந்தக் கலாச்சாரங்களில் உள்ளவர்கள் பொதுவாகக் கருதுகிறார்கள். பைபிள் காலங்களைப் போல், இன்றும் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்கள் பெரும்பாலும் வெற்றி பெறுகின்றன. இப்படிப்பட்ட கலாச்சாரத்தில் வாழும் பெற்றோர் ஆபிரகாமின் உதாரணத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். ஈசாக்குக்குப் பெண் தேட ஆபிரகாம் தன் ஊழியக்காரனை அனுப்பியபோது பெண் வீட்டாரின் ஆஸ்தியையோ அந்தஸ்தையோ பற்றி கவலைப்படவில்லை. மாறாக, யெகோவாவை வணங்கும் ஒரு பெண்ணே ஈசாக்குக்கு மனைவியாக வரவேண்டும் என்று எண்ணினார். அதற்காக பெரும் முயற்சியும் எடுத்தார்.b—ஆதியாகமம் 24:3, 67.

எப்படிப்பட்ட துணையைத் தேடுகிறேன்?

நியமம்: “அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக இருப்பார்கள்.” —மத்தேயு 19:5.

இதோ சில கேள்விகள்

  • ‘இளமை மலரும் பருவத்தைக் கடப்பதற்கு’ முன்பு திருமணம் செய்யாதிருப்பது ஏன் நல்லது?—1 கொரிந்தியர் 7:36; 13:11; மத்தேயு 19:4, 5.

  • திருமண வயதை நான் எட்டியிருந்தாலும், சில காலம் திருமணம் செய்யாமல் இருப்பதால் எப்படிப் பயன் பெறுவேன்?—1 கொரிந்தியர் 7:32-34, 37, 38.

  • யெகோவாவுக்கு உண்மையாய் சேவை செய்து வந்திருக்கிறவரையே கரம் பிடிப்பது ஏன் முக்கியம்?—1 கொரிந்தியர் 7:39.

  • தனக்குக் கணவராக வரப்போகிறவரிடம் எப்படிப்பட்ட குணங்கள் இருக்க வேண்டுமென்பதைத் தெரிந்துகொள்ள பின்வரும் வசனங்கள் ஒரு சகோதரிக்கு எப்படி உதவும்?—சங்கீதம் 119:97; 1 தீமோத்தேயு 3:1-7.

  • தன் வருங்கால மனைவியை ஞானமாகத் தேர்ந்தெடுக்க நீதிமொழிகள் 31:10-31 ஒரு சகோதரருக்கு எப்படி உதவும்?

மண வாழ்வில் அடியெடுத்து வைக்குமுன் என்ன செய்ய வேண்டும்?

13-15. (அ) திருமணம் செய்ய விரும்பும் இளைஞனுக்கு நீதிமொழிகள் 24:27-ல் உள்ள நியமம் எப்படி உதவும்? (ஆ) இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் முன்பு ஓர் இளம் பெண் என்ன செய்ய வேண்டும்?

13 திருமணம் செய்வதைப் பற்றி நீங்கள் தீவிரமாக யோசிக்கிறீர்களா? அப்படியென்றால், ‘நான் கல்யாணம் செய்ய தயாராக இருக்கிறேனா?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். அன்புக்காக, பாலியல் ஆசைக்காக, தோழமைக்காக, அல்லது பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்காக நீங்கள் ஏங்குகிறீர்கள் என்பதால் மட்டுமே திருமணம் செய்யத் தயாராய் இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட முடியாது. எனவே, வருங்கால கணவர்களும் மனைவிகளும் குடும்பத்தில் தாங்கள் ஏற்க வேண்டிய பிரத்தியேக பொறுப்புகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

14 மணமுடிக்க விரும்பும் ஓர் இளைஞன் இந்த வசனத்திலுள்ள நியமத்தை ஆழ்ந்து யோசித்துப் பார்க்க வேண்டும்: “உன் வெளிவேலையைத் திட்டமிடு, வயலில் செய்ய வேண்டியதைச் செய்துவிடு, அதன் பிறகு உன் வீட்டை கட்டு.” (நீதிமொழிகள் 24:27) இந்த வசனத்திலுள்ள குறிப்பு என்ன? பூர்வ காலங்களில், ஒருவர் திருமணம் செய்து குடும்பத்தை உருவாக்க விரும்பினால், ‘மனைவி மக்களை வைத்துக் காப்பாற்ற என்னால் முடியுமா?’ என்று கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. முதலாவதாக, அவர் பாடுபட்டு உழைக்க வேண்டியிருந்தது, வயலைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த வசனத்தின் நியமம் இன்றும் பொருந்துகிறது. திருமணம் செய்ய விரும்பும் ஒருவர் குடும்பப் பொறுப்புகளை ஏற்கத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். உடலில் தெம்பிருக்கும்வரை, அவர் வேலை செய்ய வேண்டும். உடல் ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும் தனது குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்; அப்படிச் செய்யாதவர், விசுவாசத்தில் இல்லாதவரைவிட மோசமானவர் என்று பைபிள் சொல்கிறது!—1 தீமோத்தேயு 5:8-ஐ வாசியுங்கள்.

15 அதேபோல், திருமணம் செய்துகொள்ளத் தீர்மானிக்கும் ஒரு பெண்ணும் குடும்பத்திலுள்ள முக்கிய பொறுப்புகளை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். கணவனுக்கு ஒத்தாசையாக இருந்து குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள சில திறமைகளையும் குணங்களையும் அவள் வளர்க்க வேண்டும். அப்படிப்பட்ட திறமைகளையும் குணங்களையும் உடைய பெண்ணை பைபிள் மெச்சிப் பேசுகிறது. (நீதிமொழிகள் 31:10-31) குடும்பப் பொறுப்புகளை ஏற்கத் தயாராகாமல் அவசரப்பட்டு கல்யாணம் முடிக்கும் ஆண்களும் சரி பெண்களும் சரி, உண்மையில் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்; ஏனென்றால், தாங்கள் நல்ல கணவராகவோ/மனைவியாகவோ இருக்க முடியுமா என்பதை முன்னரே சிந்தித்துப் பார்க்கத் தவறுகிறார்கள். என்றாலும், மிக முக்கியமாக, திருமணம் செய்ய விரும்புகிறவர்கள் ஆன்மீக ரீதியில் முதிர்ச்சியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

16, 17. திருமணம் செய்யத் தயாராகும் நபர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய பைபிள் நியமங்கள் யாவை?

16 திருமணத்திற்குத் தயாராகிறவர்கள் கணவருக்கும் மனைவிக்கும் கடவுள் நியமித்திருக்கும் கடமைகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கிறிஸ்தவ குடும்பத்தின் தலைவனாக இருப்பது என்றால் என்ன என்பதை ஓர் ஆண் அறிந்திருப்பது அவசியம். குடும்பத் தலைவன் என்பதற்காக அவர் கொடுங்கோலனாக நடந்துகொள்ளக்கூடாது. மாறாக, தலைமை வகிப்பதில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். (எபேசியர் 5:23) அதுபோல, மனைவியின் கௌரவமான ஸ்தானத்தைப் பற்றி ஒரு கிறிஸ்தவ பெண் அறிந்திருக்க வேண்டும். தனது ‘கணவனுடைய சட்டத்திற்கு’ கீழ்ப்படிய அவள் மனமுள்ளவளாக இருப்பாளா? (ரோமர் 7:2) ஏற்கெனவே யெகோவாவின் சட்டத்திற்கும் கிறிஸ்துவின் சட்டத்திற்கும் அவள் உட்பட்டிருக்கிறாள். (கலாத்தியர் 6:2) குடும்பத்தில் கணவனின் அதிகாரம் என்பது மற்றொரு சட்டத்தைக் குறிக்கிறது. பாவ இயல்புள்ள ஒரு மனிதரின் அதிகாரத்தின்கீழ் வரும்போது அவருக்கு அவள் அடங்கியிருப்பாளா, அவருக்கு ஆதரவளிப்பாளா? முடியாது என்று நினைத்தால், அவள் திருமணம் செய்யாமல் இருந்துவிடுவதே நல்லது.

17 அதுமட்டுமல்ல, கணவனும் மனைவியும் ஒவ்வொருவருடைய விசேஷத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராய் இருக்க வேண்டும். (பிலிப்பியர் 2:4-ஐ வாசியுங்கள்.) “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள்மீது அன்பு காட்டுவதுபோல், உங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்; மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்” என்று பவுல் எழுதினார். மனைவி தனக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுகிறாள் என்பதைக் கணவர் உணர வேண்டும்; இது கணவருக்குரிய விசேஷத் தேவை. அதேபோல் கணவர் தன்னை நேசிக்கிறார் என்பதை மனைவி உணர வேண்டும்; இது மனைவிக்குரிய விசேஷத் தேவை; இதைக் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பவுல் புரிந்துகொண்டார்.—எபேசியர் 5:21-33.

காதலிக்கும் காலத்தில், ஜோடிகள் தனியாக இருப்பதற்குப் பதிலாக யாரையாவது துணைக்கு வைத்துக்கொள்கிறார்கள்

18. காதலிக்கும் காலத்தில் ஏன் சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்?

18 திருமணம் செய்ய விரும்பும் இருவர் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்கலாம், ஆனால், காதலிக்கும் காலம் ஜாலியாக பொழுதுபோக்குவதற்கான காலம் மட்டுமே அல்ல. ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் எப்படி நடத்த வேண்டும் என்று அறிந்துகொள்வதற்கான காலம்; திருமணம் செய்துகொண்டால் அவர்கள் இருவருக்கும் சரிப்பட்டு வருமா என்று சிந்தித்துத் பார்ப்பதற்கான காலம். அதோடு, தன்னடக்கத்தைக் காட்டுவதற்கான காலமும்கூட. உடலளவில் நெருங்க வேண்டுமென்ற ஆசை அப்போது பலமாக இருக்கலாம்; அப்படிப்பட்ட ஆசை இயற்கைதான்! என்றாலும், அவர்கள் ஒருவரையொருவர் உண்மையிலேயே நேசித்தால், ஆன்மீக ரீதியில் மற்றவரைப் பாதிக்கும் எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டார்கள். (1 தெசலோனிக்கேயர் 4:6) எனவே, நீங்கள் காதலித்து வந்தால், சுயக்கட்டுப்பாட்டுடன் இருங்கள்; நீங்கள் திருமணம் செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி, இந்தக் குணம் வாழ்நாள் முழுவதும் உங்களுக்குப் பயனளிக்கும்.

திருமணம் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

19, 20. திருமண பந்தத்தைப் பற்றிய ஒரு கிறிஸ்தவரின் கண்ணோட்டம் எப்படி இன்றைய உலகின் கண்ணோட்டத்திலிருந்து வேறுபடுகிறது? உதாரணத்துடன் விளக்கவும்.

19 தங்கள் திருமணம் நிலைத்திருக்க வேண்டுமென தம்பதியர் விரும்பினால், திருமண ஒப்பந்தத்தைக் குறித்து அவர்களுக்குச் சரியான கண்ணோட்டம் இருக்க வேண்டும். பொதுவாக நாவல்களிலும் சினிமாக்களிலும் திருமணத்தோடு கதை சுபமாக முடிந்துவிடுகிறது; அதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள். ஆனால், நிஜ வாழ்வில் திருமணம் என்பது முடிவல்ல, ஆரம்பமே; என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமென்பதற்காக யெகோவா செய்த குடும்ப ஏற்பாட்டின் ஆரம்பமே. (ஆதியாகமம் 2:24) என்றாலும், இந்த விஷயத்தில் உலகின் கண்ணோட்டம் மாறுபட்டிருப்பது வருத்தத்திற்குரிய விஷயம். சில கலாச்சாரத்தினர் திருமணம் செய்வதை “முடிச்சு போடுவதற்கு” ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். திருமணத்தைப் பற்றிய உலகின் கண்ணோட்டத்தை இந்த உதாரணம் நன்றாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. எப்படி? நன்றாக போடப்பட்ட முடிச்சை தேவையான சமயத்தில் இறுக்கவும் முடியும், தேவையில்லாத சமயத்தில் அவிழ்க்கவும் முடியும்.

20 இன்று அநேகர் திருமணத்தை தற்காலிக உறவாகவே கருதுகிறார்கள். தங்கள் ஆசைகளெல்லாம் நிறைவேறும் என்ற எண்ணத்தில் அவசரப்பட்டு அந்த உறவுக்குள் நுழைகிறார்கள். ஆனால், ஏதாவது பிரச்சினை முளைத்தால் அதே வேகத்தில் அந்த உறவை முறித்துக்கொள்ள நினைக்கிறார்கள். என்றாலும், திருமண பந்தத்தைக் கயிற்றுக்கு பைபிள் ஒப்பிட்டுப் பேசுகிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள். பாய்மரக் கப்பலுக்காக தயாரிக்கப்படும் கயிறு கடும் புயலே வீசினாலும் அறுந்து போகாத அளவுக்கு உறுதியாய் இருக்க வேண்டும். அதேபோல், திருமண பந்தமும் அறுந்துபோகாமல் என்றென்றும் நிலைத்திருக்கவே ஏற்படுத்தப்பட்டது. அதனால்தான், “கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 19:6) நீங்கள் திருமணம் செய்கிறீர்கள் என்றால், இதே கண்ணோட்டம் உங்களுக்கும் இருக்க வேண்டும். அதற்காக, திருமண ஒப்பந்தத்தை ஆயுள் தண்டனையாக நினைக்க வேண்டுமா? இல்லை.

21. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எப்படிப்பட்ட மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும், அதற்கு எது உதவும்?

21 கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் நல்ல அபிப்பிராயத்தை வளர்த்துக்கொள்வது அவசியம். ஒவ்வொருவரும் மற்றவருடைய நல்ல குணங்களையும் செயல்களையும் மட்டுமே பார்த்தால், அவர்களுடைய திருமண வாழ்வில் சந்தோஷமும் புத்துணர்ச்சியும் பொங்கிவழியும். பாவ இயல்புள்ளவராக இருக்கும் துணையிடம் எப்போதும் நல்லதையே பார்ப்பது எதார்த்தத்திற்கு ஒத்துவருமா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், யெகோவா எப்போதுமே எதார்த்தமானவர்தான்; என்றாலும் நம்மிடம் உள்ள நல்லதையே அவர் பார்க்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம், அல்லவா? “‘யா’வே, நீங்கள் குற்றங்களைக் கவனிக்க ஆரம்பித்தால், யெகோவாவே, யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்?” என்று சங்கீதக்காரன் கேட்டார். (சங்கீதம் 130:3) அதேபோல், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நல்லதையே பார்க்க வேண்டும், ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டும்.—கொலோசெயர் 3:13-ஐ வாசியுங்கள்.

22, 23. இன்றுள்ள தம்பதிகளுக்கு ஆபிரகாமும் சாராளும் எப்படிச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்கள்?

22 திருமண பந்தம் நிலைத்திருக்கும்போது அதனால் பெரும் சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கிறது. ஆபிரகாமும் சாராளும் வயதான காலத்தில் எப்படி வாழ்க்கை நடத்தினார்கள் என பைபிள் நமக்குச் சொல்கிறது. அவர்களுடைய வாழ்க்கை, பிரச்சினை இல்லாத வாழ்க்கையாக இருக்கவில்லை. ஏறக்குறைய 60 வயது நிரம்பிய சாராள் செல்வச் செழிப்புமிக்க ஊர் பட்டணத்தில் வசதியான வீட்டை விட்டுவிட்டு, காலம் முழுக்க கூடாரத்தில் வசிப்பதற்கு எந்தளவு கஷ்டப்பட்டிருப்பாள் எனக் கற்பனை செய்து பாருங்கள். என்றாலும், தன் கணவனின் தலைமை ஸ்தானத்திற்கு அவள் அடிபணிந்தாள். ஆபிரகாமுக்கு நல்ல துணையாகவும் உதவியாளராகவும் இருந்து, அவருடைய தீர்மானங்கள் வெற்றிபெற உதவினாள். அவள் ஏதோ பேருக்குக் கீழ்ப்படியவில்லை. தன் மனதில்கூட தனது கணவனைத் தன் எஜமான் எனக் குறிப்பிட்டாள். (ஆதியாகமம் 18:12; 1 பேதுரு 3:6) ஆபிரகாமுக்கு அவள் உள்ளப்பூர்வமாக மரியாதை காட்டினாள்.

23 ஆனால், ஆபிரகாமும் சாராளும் எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போனார்கள் என்று சொல்ல முடியாது. ஒருசமயம் சாராள் சொன்ன ஆலோசனை ஆபிரகாமின் மனதுக்கு ‘மிகவும் வேதனையாக இருந்தது.’ என்றாலும், யெகோவாவின் வழிநடத்துதலை ஏற்று, ஆபிரகாம் தாழ்மையோடு தன் மனைவியின் பேச்சைக் கேட்டார்; இதனால், முழு குடும்பத்துக்கும் ஆசீர்வாதம் கிடைத்தது. (ஆதியாகமம் 21:9-13) இன்றுள்ள புதிய தம்பதிகளும் சரி பழைய தம்பதிகளும் சரி, தேவபக்திமிக்க இந்தத் தம்பதியிடமிருந்து அநேக பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

24. எப்படிப்பட்ட மணவாழ்வு யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும், ஏன்?

24 கிறிஸ்தவ சபையிலுள்ள ஆயிரக்கணக்கான தம்பதிகள் இனிமையான இல்லற வாழ்வை அனுபவிக்கிறார்கள். கணவனுக்கு மனைவி ஆழ்ந்த மரியாதை காட்டுவதாலும், மனைவியைக் கணவன் மதித்து அன்பு பாராட்டுவதாலும், யெகோவாவின் விருப்பத்திற்கே இருவரும் வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பதாலும் இவர்களுடைய மண வாழ்வில் மணம் வீசுகிறது. நீங்கள் திருமணம் செய்ய நினைத்தால், துணையை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள், மண வாழ்வில் அடியெடுத்து வைப்பதற்குமுன் அதற்காக நன்கு தயாராகுங்கள், யெகோவாவிற்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் சமாதானத்தோடும் அன்போடும் குடும்பம் நடத்துங்கள். அப்படிச் செய்தால், நீங்கள் கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க முடியும்.

a குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தில் 2-ஆம் அதிகாரத்தைக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

b கடவுளுக்குப் பிரியமாய் வாழ்ந்த முன்னோர்கள் சிலருக்கு ஒன்றுக்கும் அதிகமான மனைவிகள் இருந்தனர். இஸ்ரவேலரின் காலத்திலும் சரி அவர்களுடைய முன்னோர்களின் காலத்திலும் சரி, பலதார மணத்தை யெகோவா அனுமதித்திருந்தார். அதை அவர் ஏற்படுத்தவில்லை என்றாலும், சட்டங்களைத் தந்து அதை நெறிப்படுத்தினார். ஆனால், இன்று பலதார மணம் புரிவதை யெகோவா ஏற்றுக்கொள்வதில்லை எனக் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—மத்தேயு 19:9; 1 தீமோத்தேயு 3:2.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்