உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 11/15 பக். 13-18
  • உன் மகத்தான சிருஷ்டிகரை நினை!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உன் மகத்தான சிருஷ்டிகரை நினை!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடந்தகால சிறந்த முன்மாதிரிகள்
  • இப்போதே யெகோவாவை நினையுங்கள்!
  • முதிர்வயதின் பாதிப்புகள்
  • நினைப்போருக்கு எதிர்காலம் என்ன?
  • “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • பைபிள் புத்தக எண் 21—பிரசங்கி
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • கடவுளிடம் உங்கள் முழு கடமையையும் நிறைவேற்றுகிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 11/15 பக். 13-18

உன் மகத்தான சிருஷ்டிகரை நினை!

‘தீங்குநாட்கள் வராததற்கு முன் இப்பொழுதே உன் மகத்தான சிருஷ்டிகரை நினை!’—பிரசங்கி 12:1, Nw.

1. கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிற இளைஞர்கள் தங்கள் இளமையையும் பலத்தையும் எவ்வாறு பயன்படுத்த விரும்ப வேண்டும்?

யெகோவா தம்முடைய சித்தத்தை செய்வதற்கு தேவையான பலத்தை தம் ஊழியருக்கு வழங்குகிறார். (ஏசாயா 40:28-​31) எந்த வயதினராக இருந்தாலும்சரி, இது உண்மையே. ஆனால் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த இளைஞர் தங்கள் இளமையையும் பலத்தையும் ஞானமாக பயன்படுத்த விரும்ப வேண்டும். ஆகையால், “பிரசங்கியின்” அதாவது, பூர்வ இஸ்ரவேல் அரசனாகிய சாலொமோனின் அறிவுரைக்கு செவிசாய்க்க வேண்டும்: “நீ உன் வாலிப பிராயத்திலே உன் [“மகத்தான,” NW] சிருஷ்டிகரை நினை, தீங்குநாட்கள் வராததற்கு முன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும்” என அவர் ஊக்குவித்தார்.​—பிரசங்கி 1:1; 12:1.

2. ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களின் பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும்?

2 வாலிப வயதிலே மகத்தான சிருஷ்டிகரை நினைக்கும்படி சாலொமோன் கொடுத்த இந்த அறிவுரை, இஸ்ரவேல் இளைஞர்களுக்கு முதலாவதாக கொடுக்கப்பட்டது. அவர்கள் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்த ஜனத்தில் பிறந்தவர்கள். ஒப்புக்கொடுத்த இன்றைய கிறிஸ்தவ பிள்ளைகளைப் பற்றியென்ன? நிச்சயமாகவே, அவர்கள் தங்கள் மகத்தான சிருஷ்டிகரை மனதில் வைக்க வேண்டும். அப்படி செய்தால், அவர்கள் அவரை கௌரவிப்பார்கள், தங்களுக்கும் நன்மை தேடிக்கொள்வார்கள்.​—ஏசாயா 48:17, 18.

கடந்தகால சிறந்த முன்மாதிரிகள்

3. யோசேப்பு, சாமுவேல், தாவீது ஆகியோர் என்ன முன்மாதிரி வைத்தனர்?

3 பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் பலர், மகத்தான சிருஷ்டிகரை நினைப்பதில் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள். யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு இளம் வயதிலிருந்தே சிருஷ்டிகரை நினைத்தார். யோசேப்பை பாலின ஒழுக்கக்கேட்டில் ஈடுபட போத்திபாரின் மனைவி பலவந்தப்படுத்தியபோது, அவர் உறுதியாய் மறுத்து இவ்வாறு கூறினார்: “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?” (ஆதியாகமம் 39:9) லேவியனாகிய சாமுவேல் சிறுபிள்ளையாக இருந்தபோது மட்டுமல்ல, தன் ஆயுசு முழுவதும் சிருஷ்டிகரை நினைத்தார். (1 சாமுவேல்1:​22-​28; 2:​18; 3:​1-5) இளமை துடிப்புமிக்க பெத்லகேம் ஊரானாகிய தாவீது சிருஷ்டிகரை நினைவில் வைத்திருந்தார். பெலிஸ்த இராட்சதனான கோலியாத்திடம், “நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், எரிவல்லயத்தோடும் என்னிடம் வருகிறாய்; நானோ நீ அவமானமாய்ப் பேசின இஸ்ரவேலருடைய அணிகளின் கடவுளாகிய சேனைகளின் யெகோவாவினுடைய திருநாமத்திலே உன்னிடம் வருகிறேன். இன்றைய தினமே யெகோவா உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னைவிட்டு வாங்[குவேன்], . . . கடவுள் இஸ்ரவேலரோடே இருக்கிறார் என்று பூலோகத்தார் யாவரும் இதினால் அறிந்துகொள்வார்கள். யெகோவா இரட்சிப்பது பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் யெகோவாவினுடையது; அவர் உங்களை எங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்” என்று சொன்னபோது, கடவுளில் அவர் நம்பிக்கை வைத்திருந்தது தெளிவாக தெரிந்தது. விரைவில், கோலியாத் கொல்லப்பட்டான், பெலிஸ்தர் ஓட்டம்பிடித்தார்கள்.​—1 சாமுவேல் 17:45-51, தி.மொ.

4. (அ) சிறைபிடித்துச் செல்லப்பட்டு சீரியாவில் இருந்த இஸ்ரவேல சிறுமியும் இளம் ராஜாவாகிய யோசியாவும், நம் சிருஷ்டிகரை நினைத்தனர் என்பதை எது காட்டுகிறது? (ஆ) 12 வயது இயேசு, சிருஷ்டிகரை நினைத்ததை எவ்வாறு காட்டினார்?

4 மகத்தான சிருஷ்டிகரை நினைத்த மற்றொருத்தி சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேல சிறுமி. சீரியாவின் படைத்தலைவராகிய நாகமானின் மனைவிக்கு அவள் கொடுத்த சிறந்த சாட்சியால் நாகமான் கடவுளுடைய தீர்க்கதரிசியிடம் சென்றார். குஷ்டரோகம் சுகமாக்கப்பட்டு, யெகோவாவின் வணக்கத்தாரானார். (2 இராஜாக்கள் 5:​1-​19) இளம் அரசனாகிய யோசியா, யெகோவாவின் மெய் வணக்கத்தை தைரியமாய் ஆதரித்தார். (2 இராஜாக்கள் 22:1–23:25) ஆனால், சின்னஞ்சிறு வயதிலேயே மகத்தான சிருஷ்டிகரை நினைத்தவரில் மிகச் சிறந்த முன்மாதிரி வகிப்பவர் நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு. அவர் 12 வயதாக இருந்தபோது நடந்ததை சற்று கவனியுங்கள். பஸ்கா பண்டிகைக்காக அவருடைய பெற்றோர் அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்றார்கள். திரும்பி வருகையில் அவர் காணவில்லை என்பதை கவனித்தார்கள். ஆகையால் அவரைத் தேடி திரும்பவும் சென்றார்கள். மூன்றாவது நாளில் இயேசு, ஆலயத்தில் போதகர்களோடு வேதப்பூர்வ கேள்விகளைக் குறித்து ஆலோசித்துக் கொண்டிருப்பதை கண்டார்கள். கவலை தோய்ந்த முகத்தோடு தன் தாய் கேட்ட கேள்விக்கு இயேசு பதிலளிக்கையில் இவ்வாறு கேட்டார்: “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவின் வீட்டில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களோ”? (லூக்கா 2:​49, தி.மொ.) ‘அவருடைய பிதாவின் வீடாகிய’ ஆலயத்தில், ஆவிக்குரிய மதிப்புவாய்ந்த தகவலை பெறுவது இயேசுவுக்கு நன்மையாக இருந்தது. இன்று, யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம், நம் சிருஷ்டிகரைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெறுவதற்கு மிகச் சிறந்த இடம்.

இப்போதே யெகோவாவை நினையுங்கள்!

5. பிரசங்கி 12:1-ல் சாலொமோன் சொன்னதை உங்கள் சொந்த வார்த்தைகளில் எவ்வாறு சொல்வீர்கள்?

5 யெகோவாவை முழு இருதயத்தோடு வணங்குபவர், அவருடைய சேவையை எவ்வளவு சீக்கிரத்தில் ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பித்து மீதமுள்ள தன் வாழ்நாள் முழுவதும் கடவுளை சேவிக்க விரும்புகிறார். ஆனால் சிருஷ்டிகரை நினையாமல் தன் இளமையை வீணாக்கியவருக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள்தான் என்ன? தேவாவியால் ஏவப்பட்டு, பிரசங்கி சொல்கிறார்: ‘தீங்குநாட்கள் வராததற்கு முன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும் நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை.’​—பிரசங்கி 12:1.

6. முதிர்வயதான சிமியோனும் அன்னாளும் தங்கள் சிருஷ்டிகரை நினைத்தார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

6 முதிர்வயதில் வரும் ‘தீங்குநாட்களை’ ஒருவரும் விரும்புவதில்லை. ஆனால், கடவுளை மனதில் வைத்திருக்கும் முதியோரிடம் சந்தோஷம் குடியிருக்கும். உதாரணமாக, வயது முதிர்ந்த சிமியோன், ஆலயத்தில் குழந்தையாகிய இயேசுவை தன் கைகளில் ஏந்தி, “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” என மகிழ்ச்சி பொங்க சொன்னார். (லூக்கா 2:​25-​32) எண்பத்து நான்கு வயதான அன்னாளும் சிருஷ்டிகரை நினைத்தார். அவர் எப்போதும் ஆலயத்தில் இருந்தார், குழந்தையாகிய இயேசுவை அங்கு கொண்டு சென்றபோதும் அங்கிருந்தார். “அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக் குறித்துப் பேசினாள்.”​—லூக்கா 2:​36-​38.

7. கடவுளுடைய சேவையில் முதியோரின் நிலை என்ன?

7 வெகுகாலமாக கடவுளுக்கு சேவை செய்துவரும் யெகோவாவின் சாட்சிகளில் வயதானோர், முதுமையின் வேதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவிக்கலாம். என்றபோதிலும், அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள், அவர்களுடைய உண்மையான சேவையை நாம் எவ்வளவாக பாராட்டுகிறோம்! ‘யெகோவாவால் வரும் மகிழ்ச்சியை’ அவர்கள் அனுபவிக்கிறார்கள். ஏனெனில் எவராலும் வெல்ல முடியாத வல்லமையுடைய யெகோவா இந்தப் பூமியின்மீது தம் அதிகாரத்தை ஏற்றிருக்கிறார், இயேசு கிறிஸ்துவை வலிமைமிக்க பரலோக அரசராக அமர்த்தியிருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறார்கள். (நெகேமியா 8:​10, தி.மொ.) வாலிபரும் வயோதிபரும் இந்த அறிவுரைக்கு செவிகொடுப்பதற்கு இதுவே தருணம்: “வாலிபரே, கன்னிகைகளே, முதியோரே, இளையோரே, துதியுங்கள்; அவர்கள் யெகோவா திருநாமத்தைத் துதிப்பார்களாக; அவர் திருநாமமே உயர்ந்தது; அவர் மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.”​—சங்கீதம் 148:12, 13, தி.மொ.

8, 9. (அ) “தீங்குநாட்கள்” யாருக்கு வருத்தம் தருகின்றன, ஏன் அப்படி? (ஆ) பிரசங்கி 12:2-ஐ எவ்வாறு விளக்குவீர்கள்?

8 மகத்தான சிருஷ்டிகரை நினையாமலும் அவருடைய மகிமையான நோக்கங்களைப் பற்றி அறியாமலும் இருப்போருக்கு முதிர்வயதின் “தீங்குநாட்கள்” பயனற்றவையாக, ஒருவேளை மிக வருத்தம் தருபவையாக இருக்கலாம். தள்ளாடும் வயதில் உண்டாகும் தவிப்புகளையும் பரலோகத்திலிருந்து பூமிக்கு சாத்தான் தள்ளப்பட்டது முதல் மனிதவர்க்கம் அனுபவிக்கும் கஷ்டங்களையும் தாங்கிக்கொள்ள உதவுகிற ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதல் அவர்களுக்கு இல்லை. (வெளிப்படுத்துதல் 12:​7-​12) ஆகையால், “சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், அந்தகாரப்படாததற்கு முன்னும், மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத்திரும்ப வராததற்கு முன்னும்” நம்முடைய சிருஷ்டிகரை நினைக்கும்படி பிரசங்கி நம்மை தூண்டி ஊக்குவிக்கிறார். (பிரசங்கி 12:2, 3) இந்த வார்த்தைகளின் உட்கருத்து என்ன?

9 நிர்மலமான வானிலிருந்து சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளி வீசுகிற பாலஸ்தீனிய கோடை காலத்திற்கு இளமை பருவத்தை சாலொமோன் ஒப்பிடுகிறார். பொருள்கள் அப்போது பிரகாசமாக காட்சியளிக்கின்றன. ஆனால் முதிர்வயதிலோ, இடியுடன்கூடிய மழையென தொல்லைக்கு மேல் தொல்லையாக ஒருவருடைய நாட்கள் குளிர்கால பருவ மழையைப் போல் இருக்கின்றன. (யோபு 14:1) சிருஷ்டிகரைப் பற்றி அறிந்திருந்தும் வாழ்க்கையின் கோடை காலத்தில் அவரை சேவிக்கத் தவறுவது எவ்வளவு விசனகரமானது! குளிர்காலமாகிய வாழ்க்கையின் முதிர்வயதில், எல்லாம் இருண்டவையாக காட்சியளிக்கின்றன. முக்கியமாக, இளமையில் வீணான காரியங்களில் ஈடுபட்டதால், யெகோவாவை சேவிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டவர்களுக்கு அவ்வாறு இருக்கிறது. ஆனால் நம்முடைய வயது எதுவாக இருந்தாலும், தீர்க்கதரிசியாகிய மோசேயின் உண்மைத்தவறாத தோழரான காலேப் செய்ததைப்போல் ‘யெகோவாவை உத்தமமாய்ப் பின்பற்றுவோமாக.’​—யோசுவா 14:​6-9, தி.மொ.

முதிர்வயதின் பாதிப்புகள்

10. பின்வருபவை எவற்றிற்கு அடையாளமாக இருக்கின்றன: (அ) ‘வீட்டுக்காவலாளிகள்’? (ஆ) ‘பெலசாலிகள்’?

10 அடுத்தபடியாக, “வீட்டுக்காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து, பலகணி வழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிற” நாளின் இக்கட்டுகளை சாலொமோன் குறிப்பிடுகிறார். (பிரசங்கி 12:3) ‘வீடு’ மனித உடலைக் குறிக்கிறது. (மத்தேயு 12:43-​45; 2 கொரிந்தியர் 5:​1-8) புயங்களும் கைகளுமே அதன் “காவலாளிகள்.” இவை உடலை பாதுகாத்து அதன் தேவைகளை கவனிக்கின்றன. முதிர்வயதில் பலவீனத்தாலும் நரம்புத் தளர்ச்சியாலும் வாதத்தாலும் அடிக்கடி நடுங்குகின்றன. “பெலசாலிகள்,” அதாவது கால்கள் இனிமேலும் உறுதியான தூண்களைப்போல் இராமல் பலவீனப்பட்டு மடங்குவதால், பாதங்கள் வெறுமனே தரையை தேய்த்தவாறு வழுவிச் செல்கின்றன. இருப்பினும், முதியோரான உடன்விசுவாசிகளை கிறிஸ்தவக் கூட்டங்களில் காண்பது உங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது அல்லவா?

11. அடையாள அர்த்தத்தில் பேசப்பட்டுள்ள “ஏந்திரம் அரைக்கிறவர்கள்” மற்றும் “பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள்” யார்?

11 “ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து” விடுகிறார்கள். எவ்வாறு? பற்கள் சொத்தையாகியிருக்கலாம் அல்லது பிடுங்கப்பட்டு சில மாத்திரமே மீந்திருக்கலாம். திடமான உணவை மெல்லுவது கடினமாக இருக்கலாம் அல்லது மெல்லவே முடியாமல் போகலாம். “பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள்,” அதாவது மனத் திறமைகளோடு நாம் காண முடிகிற கண்கள் முற்றிலும் இருளடையாவிட்டாலும் மங்கிவிடுகின்றன.

12. (அ) எவ்வாறு “தெருவாசலின் கதவுகள் அடைபட்டு” இருக்கின்றன? (ஆ) முதிர்வயதான ராஜ்ய அறிவிப்பாளரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

12 ‘ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்க வேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப் போகாததற்கு முன்னும்’ என பிரசங்கி தொடர்ந்து சொல்கிறார். (பிரசங்கி 12:4) கடவுளை சேவிக்காத முதியோருடைய வாயின் இரண்டு கதவுகள், அதாவது உதடுகள், ‘வீட்டை’ அல்லது உடலின் நிலையை அதிகம் வெளிப்படுத்துவதில்லை. அல்லது முற்றிலுமே இனிமேலும் திறப்பதில்லை. பொது வாழ்க்கைக்குரிய ‘தெருவில்’ எதுவும் அனுப்பப்படுகிறதில்லை. ஆனால் முதிர்வயதிலிருக்கும் ஆர்வமுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளைப் பற்றியென்ன? (யோபு 41:14) சிலருக்குப் பேசுவதுங்கூட கடினமாக இருக்கலாம். ஆனால் வீடுவீடாக மெல்ல நடந்துசென்று நிச்சயமாகவே யெகோவாவை துதிக்கிறார்கள்!​—சங்கீதம் 113:1.

13. முதியோரின் மற்ற பிரச்சினைகளை பிரசங்கி எவ்வாறு விவரிக்கிறார், ஆனால் முதியோராக இருக்கும் கிறிஸ்தவர்களைக் குறித்ததில் எது உண்மை?

13 வாயில் பற்கள் இல்லாமல் வெறும் ஈறுகளில் உணவை மெல்லுகையில், அரைக்கும் ஏந்திர சத்தம் குறைகிறது. முதியவர் இரவில் நன்றாக உறங்குவதில்லை. ஒரு பறவையின் சிறு கிறீச்சொலியும் அவருடைய உறக்கத்தை கலைத்துவிடுகிறது. அவர் பாடும் பாட்டுகள் சொற்பமானவை; அவருடைய ஸ்வரமும் மெதுவாகவே வெளிவருகிறது. “கீதவாக்கியக் கன்னிகைகள்” எனக் குறிப்பிடப்படும் இன்னிசைகள், ‘அடங்கிவிட்டவையாக’ தொனிக்கின்றன. மற்றவர்களின் இன்னிசையும் பாட்டும் முதிர்வயதினரின் செவியில் மந்தமாக ஒலிக்கின்றன. ஆனால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் முதியோரும், அவர்களுடைய தோழர்களில் முதியோர் சிலரும், கிறிஸ்தவக் கூட்டங்களில் கடவுளைத் துதிக்கும் பாடல்களை உச்சஸ்தாயில் பாடுகிறார்கள். சபையில் யெகோவாவை ஆர்வமாய் துதிப்போராக, அவர்கள் நம் மத்தியில் இருப்பது நாம் செய்த பாக்கியமே!​—சங்கீதம் 149:1.

14. என்ன பயங்கள் முதிர்வயதினருக்குத் தொல்லையாக இருக்கின்றன?

14 முதியோரின், முக்கியமாக சிருஷ்டிகரை நினையாத பல முதியோரின் நிலைமை எவ்வளவு விசனகரமானது! ‘மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமை மரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீபனமும் [“கேபர் பழம்,” NW] அற்றுப்போகாததற்கு முன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கம் கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்கு முன்னும்’ என்று பிரசங்கி சொல்கிறார். (பிரசங்கி 12:5) படிக்கட்டுகளின் உச்சியில் இருக்கையில், தாங்கள் விழுந்துவிடுவார்களோ என்று முதிர்வயதினர் பலர் பயப்படுகிறார்கள். உயரத்திலுள்ள ஒன்றை அண்ணாந்து பார்ப்பதே சிலருக்கு மயக்கம் உண்டாக்கலாம். ஜனநெருக்கமுள்ள வீதியில் செல்ல வேண்டியதாகையில், அடிபட்டுவிடுமோ அல்லது திருடர்கள் தாக்கிவிடுவார்களோ என்று திகிலடைகிறார்கள்.

15. ‘வாதுமை மரம் பூப்பூப்பது’ எவ்வாறு, ‘வெட்டுக்கிளி பாரமாவது’ எவ்வாறு?

15 முதியோரின் விஷயத்தில் ‘வாதுமை மரம் பூப்பூப்பது,’ அவருடைய தலைமயிர் நரைத்து சாம்பல் நிறமாகி, பின்பு பஞ்சுபோல் வெண்மையாவதை குறிப்பதாக தெரிகிறது. அந்த நரைமயிர்கள், வாதுமை மரத்தின் வெண்மையான பூக்களைப்போல் விழுகின்றன. அவர் தள்ளாடி செல்கையில், ஒருவேளை கூனி தன் புயங்கள் தளர்ந்து தொங்க அல்லது கைகள் இடுப்பை தாங்கியிருக்க, முழங்கைகள் கோணிப் போய் மேலே தூக்கியிருக்கையில் பார்ப்பதற்கு வெட்டுக்கிளியைப் போல தோன்றலாம். நம்மில் எவராவது பார்ப்பதற்கு கொஞ்சம் அப்படி தோன்றினாலும், நாம் யெகோவாவின் ஊக்கமுள்ள, விரைந்து செல்லும் வெட்டுக்கிளிகளின் சேனையில் இருப்பதை மற்றவர்கள் நினைவில் வைப்பார்களாக!​—காவற்கோபுரம், மே 1, 1998, பக்கங்கள் 8-13-ஐக் காண்க.

16. (அ) ‘கேபர் பழம் வெடிப்பது’ எதைக் குறிக்கிறது? (ஆ) மனிதனின் ‘நித்திய வீடு’ என்ன, மரணம் நெருங்குவது என்ன அடையாளங்களால் தெரிகின்றன?

16 தனக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் உணவு கேபர் பழத்தைப்போல் ருசியாக இருந்தாலும், ரசித்து ருசிக்கும் ஆவல் முதியோருக்கு இனிமேலும் இல்லை. பசியைத் தூண்டுவதற்கு இந்தப் பழங்கள் நீண்ட காலம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. ‘கேபர் பழம் வெடித்தல்’ என்பது முதியோர் ஒருவருக்கு சாப்பாட்டில் ஆர்வம் குறைகையில் இந்தப் பழமும்கூட அவருக்கு அந்த ஆவலை தூண்ட முடிகிறதில்லை என குறிப்பிடுகிறது. இத்தகைய காரியங்கள் அவர் ‘தன் நித்திய வீட்டை,’ அதாவது பிரேதக்குழியை அணுகுகிறார் என்று சொல்லாமல் சொல்கின்றன. தன் சிருஷ்டிகரை மனதில் வைக்கத் தவறி, உயிர்த்தெழுதலில் கடவுள் அவரை நினைவுகூராத அளவுக்கு பொல்லாத போக்கை தொடர்ந்திருந்தால், பிரேதக்குழியே அவருடைய நித்திய வீடாகிவிடும். முதியோருடைய வாயின் கதவுகளிலிருந்து வெளிப்படும் புலம்பலான தொனிகளும், முனகலான வேதனை குரல்களும், நெருங்கிவரும் மரணத்தைத் தெரிவிக்கும் அடையாளங்கள்.

17. “வெள்ளிக்கயிறு” எவ்வாறு கட்டவிழ்கிறது, “பொற்கிண்ணி” எதைக் குறிக்கலாம்?

17 ‘வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கிவிடுவதற்கு முன்னும்’ மகத்தான சிருஷ்டிகரை நினைக்கும்படி நாம் ஊக்குவிக்கப்படுகிறோம். (பிரசங்கி 12:6) “வெள்ளிக்கயிறு” முதுகுத்தண்டாக இருக்கலாம். மூளைக்கு உணர்ச்சித் தூண்டுதல்களை எடுத்துச்செல்லும் இந்த அதிசயமான பாதை சரிசெய்ய முடியாதளவு சேதப்படுகையில் மரணம் நிச்சயம். “பொற்கிண்ணி” என்பது கிண்ணத்தைப்போன்ற மண்டையோட்டில் அடங்கியுள்ள மூளையைக் குறிப்பிடலாம், அதனுடன் முதுகுத்தண்டு இணைக்கப்பட்டுள்ளது. பொன் என்பது மதிப்புமிகுந்த தன்மைக்கு அடையாளம். மூளை செயல்படுவது நின்று விடுகையில் மரணம் ஏற்படுகிறது.

18. “ஊற்றின் அருகே சால்” என்று அடையாளமாக குறிப்பிடப்படுவது என்ன, அது உடைந்து போகையில் என்ன ஏற்படுகிறது?

18 “ஊற்றின் அருகே சால்” என்பது இருதயம்; அது இரத்த ஓட்டத்தைப் பெற்று அதை உடல் முழுவதும் மறுபடியும் அனுப்புகிறது. மரணத்தின்போது இருதயம் ஊற்றினருகே நொறுங்கி சிதறிய சாலை போலாகிறது. ஏனெனில் அதற்குமேலும் அது உடலின் போஷாக்குக்கும் ஊக்குவிப்புக்கும் இன்றியமையாத இரத்தத்தைப் பெற்று, நிரப்பிவைத்து, வெளியேற்ற முடியாது. “துரவண்டையில்” இருக்கும் நொறுங்கிய “உருளை” சுற்றுவது நின்று, உயிரைக் காக்கும் இரத்த ஓட்டத்தை முடிவடையச் செய்கிறது. இவ்வாறு, இரத்த ஓட்டத்தைப் பற்றி 17-வது நூற்றாண்டு மருத்துவர் வில்லியம் ஹார்வி மெய்ப்பித்துக் காட்டுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பாகவே யெகோவா சாலொமோனுக்கு வெளிப்படுத்தினார்.

19. மரணத்தின்போது, பிரசங்கி 12:7-ன் வார்த்தைகள் எவ்வாறு பொருந்துகின்றன?

19 ‘இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்கு முன்னும்’ என்று பிரசங்கி சொன்னார். (பிரசங்கி 12:7) “உருளை” நொறுங்கி, தொடக்கத்தில் மண்ணினால் உருவாக்கப்பட்ட மனித உடல் மண்ணுக்குத் திரும்புகிறது. (ஆதியாகமம் 2:7; 3:19) கடவுள் கொடுத்த ஆவி அல்லது உயிர்சக்தி நம்முடைய சிருஷ்டிகரிடம் திரும்பி அவரிடமே தங்குகிறது. எனவே, ஆத்துமா சாகிறது.​—எசேக்கியேல் 18:​4, 20; யாக்கோபு 2:​26.

நினைப்போருக்கு எதிர்காலம் என்ன?

20. சங்கீதம் 90:12-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, மோசே ஜெபித்தபோது என்ன கேட்டார்?

20 நம்முடைய மகத்தான சிருஷ்டிகரை நினைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை சாலொமோன் தெள்ளத் தெளிவாக விளக்கிக் காட்டினார். நிச்சயமாகவே, யெகோவாவை மனதில் வைத்து, முழு இருதயத்தோடும் அவருடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கு இருப்பதெல்லாம் தொல்லை நிறைந்த இந்தக் குறுகிய வாழ்க்கைதானே அல்ல. அவர்கள் இளைஞராகவோ முதியோராகவோ எப்படி இருந்தாலும், பின்வருமாறு ஜெபித்த மோசேயின் அதே மனப்பான்மையை கொண்டிருக்கின்றனர்: “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.” தங்கள் ‘ஆண்டுகளின் நாட்களை’ மதிப்பிட்டு, கடவுள் அங்கீகரிக்கும் வகையில் அவற்றை பயன்படுத்துவதில் ஞானத்தைப் பிரயோகிக்க தனக்கும் இஸ்ரவேல் ஜனத்திற்கும் கற்பிக்கும்படி கடவுளுடைய மனத்தாழ்மையுள்ள தீர்க்கதரிசி ஆர்வத்துடன் விரும்பினார்.​—சங்கீதம் 90:10, 12.

21. யெகோவாவுக்கு மகிமையுண்டாகும் வகையில் நம் நாட்களை எண்ண வேண்டுமானால், நாம் என்ன செய்ய வேண்டும்?

21 முக்கியமாக கிறிஸ்தவ இளைஞர்கள், சிருஷ்டிகரை மனதில் வைக்கும்படி பிரசங்கி கொடுத்த அறிவுரைக்கு செவிகொடுக்க தீர்மானிக்க வேண்டும். கடவுளுக்குப் பரிசுத்த சேவைசெய்ய அவர்களுக்குத்தான் எத்தகைய சிறந்த வாய்ப்புகள்! என்றபோதிலும், நமது வயது என்னவாக இருந்தாலும், இந்த ‘முடிவுகாலத்தில்’ யெகோவாவுக்கு மகிமையுண்டாக நம் நாட்களை எண்ணுவதற்கு கற்றுக்கொண்டால் என்றென்றும் தொடர்ந்து அவற்றை எண்ணலாம். (தானியேல் 12:4; யோவான் 17:3) இவ்வாறு செய்வதற்கு நிச்சயமாகவே நம் மகத்தான சிருஷ்டிகரை நாம் நினைக்க வேண்டும். மேலும், கடவுளிடம் நமக்குள்ள முழு கடமையையும் நிறைவேற்ற வேண்டும்.

நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?

◻ சிருஷ்டிகரை நினைக்கும்படி இளைஞர்கள் ஏன் ஊக்குவிக்கப்படுகிறார்கள்?

◻ சிருஷ்டிகரை நினைத்தவர்களென வேதவசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில உதாரணங்கள் யாவை?

◻ சாலொமோன் விவரித்த முதிர்வயதின் சில பாதிப்புகள் யாவை?

◻ யெகோவாவை நினைப்போருக்கு என்ன எதிர்காலம்?

[பக்கம் 15-ன் படங்கள்]

தாவீதும் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேல சிறுமியும் அன்னாளும் சிமியோனும் யெகோவாவை நினைத்தார்கள்

[பக்கம் 16-ன் படங்கள்]

முதிர்வயதான யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியோடு நம் சிருஷ்டிகருக்கு பரிசுத்த சேவை செய்கிறார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்