உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 7/15 பக். 4-7
  • அழியாத ஆவி ஒன்றுண்டா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அழியாத ஆவி ஒன்றுண்டா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆவி என்பது என்ன?
  • “மண்ணுக்குத் திரும்புவாய்”
  • ஆவி ‘தேவனிடத்திற்கு திரும்புகிறது’
  • ஓர் உறுதியான நம்பிக்கை
  • அழியாத ஆவி ஒன்றுண்டா?
    அழியாத ஆவி ஒன்றுண்டா?
  • இறந்துபோன நம் அன்பானவர்களுக்கு என்ன நேரிடுகிறது?
    நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
  • “ஆத்துமா,” “ஆவி”—உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்துகின்றன?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • மரணத்தில் என்ன நேரிடுகிறது?
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 7/15 பக். 4-7

அழியாத ஆவி ஒன்றுண்டா?

“வே தவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 3:16, 17) ஆம், பைபிள் மெய்க் கடவுளாகிய யெகோவா தந்துள்ள சத்திய புத்தகம்.​—⁠சங்கீதம் 83:⁠18.

மனிதர் உட்பட எல்லாவற்றையும் படைத்தவர் யெகோவா; எனவே நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது என்று அவருக்கு நன்றாக தெரியும். (எபிரெயர் 3:4; வெளிப்படுத்துதல் 4:11) அவரால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிளில், இறப்புக்குப்பின் என்ன நடக்கும் என்பதைப் பற்றிய கேள்விகளுக்கு உண்மையான, திருப்தியளிக்கும் பதில்களை அளித்திருக்கிறார்.

ஆவி என்பது என்ன?

“ஆவி” என பைபிளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் அடிப்படையில் ‘சுவாசத்தை’ அர்த்தப்படுத்துகின்றன. ஆனால் சுவாசித்தல் என்ற செயலைவிட இதில் அதிக அர்த்தம் பொதிந்திருக்கிறது. உதாரணமாக, யாக்கோபு என்ற பைபிள் எழுத்தாளர் இவ்வாறு கூறுகிறார்: “ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறது.” (யாக்கோபு 2:26) ஆகவே, சரீரத்தை உயிருடன் இயங்க வைக்கும் ஒன்றே ஆவி.

இந்த உயிர்ப்பு சக்தி வெறும் சுவாசமாகவோ நுரையீரலுக்குள் சென்று வரும் காற்றாகவோ இருக்க முடியாது. ஏன்? ஏனென்றால் சுவாசம் நின்றுவிட்ட பிறகும் உடலிலுள்ள செல்களில் சிறிது காலத்திற்கு​—⁠த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறபடி, “பல நிமிடங்களுக்கு”​—⁠உயிர் தங்கியிருக்கிறது. இதனால் மறு உயிர்விப்பு சிகிச்சைமுறை (resuscitation) பலன் தருகிறது, ஆனால் உடல் செல்களில் இருக்கும் இந்த உயிர்ப்பும் அடங்கிவிட்டால் மீண்டும் உயிருக்குக் கொண்டுவர எடுக்கும் எந்த முயற்சியும் வீணே. உலகமே திரண்டுவந்து சுவாசத்தைக் கொடுத்தாலும் ஒரு செல்லைக்கூட உயிர்ப்பிக்க முடியாது. ஆகவே, ஆவி என்பது செல்களையும் அந்த நபரையும் உயிருடன் வைத்துக்கொள்ளும் காண முடியாத உயிர்சக்தி அல்லது உயிர்ப்பு. சுவாசிப்பதன் மூலம் இந்த உயிர்சக்தி காக்கப்படுகிறது.​—⁠யோபு 34:14, 15.

இந்த ஆவி, மனிதரிடம் மட்டும்தான் செயல்படுகிறதா? இந்த விஷயத்தை சரியாக புரிந்துகொள்வதற்கு பைபிள் நமக்கு உதவுகிறது. “ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் [“ஆவி,” NW] ஒன்றே” என்று ஞானியாகிய சாலொமோன் ராஜா ஒப்புக்கொண்டதுடன் இவ்வாறு கேட்டார்: “மனுஷனுடைய ஆவி உயர ஏறுகிறதோ என்றும் மிருகங்களின் ஆவி கீழே பூமியில் இறங்குகிறதோ என்றும் அறிகிறவன் யார்?” (பிரசங்கி 3:19-21; திருத்திய மொழிபெயர்ப்பு) ஆகவே, மனிதருக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் ஆவி இருப்பதாக சொல்லப்படுகிறது. அது எப்படி?

இந்த ஆவியை அல்லது உயிர் சக்தியை, ஒரு இயந்திரத்தில் அல்லது கருவியில் பாயும் மின்சக்திக்கு ஒப்பிடலாம். காண முடியாத மின்சாரத்தைக் கொண்டு பல உபகரணங்களை பல விதங்களில் செயல்பட வைக்கலாம். உதாரணமாக, மின்சாரத்தால் ஓர் அடுப்பு வெப்பத்தை உண்டாக்குகிறது, கம்ப்யூட்டர் தகவல்களை அலசுகிறது, டிவியோ காட்சிகளையும் ஒலியையும் உருவாக்குகிறது. ஆனால் அந்த மின்சக்தி எந்த உபகரணங்களை இயக்குவிக்கிறதோ அவற்றிற்குரிய இயல்புகளை ஏற்பதில்லை. அது வெறுமனே சக்தியாகவே இருக்கிறது. அவ்வாறே உயிரை இயங்கவைக்கும் உயிர்சக்தியும் ஜீவராசிகளுக்குரிய எந்த இயல்பையும் ஏற்பதில்லை. அதற்கு எந்தவொரு பண்போ சிந்திக்கும் திறமையோ இல்லை. மனிதருக்கும் மிருகங்களுக்கும் “ஆவி ஒன்றே.” (பிரசங்கி 3:19, NW) ஆகவே, ஒருவர் மரிக்கையில் அவருடைய ஆவி மற்றொரு உலகிற்குச் சென்று தொடர்ந்து ஓர் ஆவி ஆளாக ஜீவிப்பதில்லை.

அப்படியானால், மரித்தவர்களின் நிலை என்ன? ஒருவர் மரிக்கையில் ஆவிக்கு என்ன சம்பவிக்கிறது?

“மண்ணுக்குத் திரும்புவாய்”

முதல் மனிதனாகிய ஆதாம் வேண்டுமென்றே கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனபோது, யெகோவா அவனிடம் சொன்னார்: “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” (ஆதியாகமம் 3:19) ஆதாமை யெகோவா மண்ணிலிருந்து உருவாக்குவதற்கு முன்பு அவன் எங்கிருந்தான்? எங்குமே இருக்கவில்லை! அவன் இல்லவே இல்லை. ஆகவே, நீ “மண்ணுக்குத் திரும்புவாய்” என்று ஆதாமிடம் யெகோவா தேவன் சொன்னபோது, அவன் இறந்துவிடுவான் என்றும், பூமியிலுள்ள தனிமங்களுடன் கலந்துவிடுவான் என்றும் அர்த்தப்படுத்தினார். ஆதாம், ஆவி உலகுக்கு மாற்றப்பட மாட்டான். அவன் மரிக்கும்போது, மறுபடியும் எங்குமே இல்லாதவனாக ஆகிவிடுவான். அவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை மரணம்​—⁠உயிரில்லாமை⁠—⁠மற்றொரு உலகிற்கு மாற்றப்படுவது அல்ல.​—⁠ரோமர் 6:23.

மரித்த மற்றவர்களுடைய நிலை என்ன? மரித்தவர்களின் நிலையைப் பற்றி பிரசங்கி 9:​5, 10-⁠ல் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அதில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இறந்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . கல்லறையில் எந்த வேலையோ திட்டமோ அறிவோ அல்லது புத்திக்கூர்மையோ இல்லை.” (மொஃபட்) ஆகவே மரணம் என்பது, எங்குமே இல்லாத ஒரு நிலை. ஒருவர் மரிக்கும்போது, “அவனுடைய ஆவி பிரியும், அவன்தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்” என சங்கீதக்காரன் எழுதினார்.​—⁠சங்கீதம் 146:4.

மரித்தவர்கள் இல்லாமல் போய்விடுகின்றனர் என்பது தெளிவாக உள்ளது. அவர்களால் எதையுமே தெரிந்துகொள்ள முடியாது. அவர்களால் உங்களைப் பார்க்க முடியாது; நீங்கள் சொல்வதைக் கேட்க முடியாது; உங்களோடு பேசவும் முடியாது. உங்களுக்கு உதவியும் செய்ய முடியாது, தீங்கும் செய்ய முடியாது. அதனால் மரித்தவர்களைப் பற்றி துளிகூட பயப்பட வேண்டியதில்லை. ஆனால் ஒருவர் மரிக்கும் சமயத்தில், ஆவி எவ்வாறு அவரை விட்டு ‘பிரிகிறது’?

ஆவி ‘தேவனிடத்திற்கு திரும்புகிறது’

ஒருவர் மரிக்கும்போது, ‘ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு போகிறது [“திரும்புகிறது,” NW]’ என பைபிள் குறிப்பிடுகிறது. (பிரசங்கி 12:7) அப்படியானால், ஓர் ஆவி சொல்லர்த்தமாகவே, விண்வெளியில் பயணம் செய்து கடவுளிடம் போகிறது என்றா அர்த்தம்? இல்லவே இல்லை! “திரும்புகிறது” என்ற வார்த்தையை பைபிள் பயன்படுத்தும் விதம் உண்மையிலேயே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதைக் குறிக்க வேண்டியதில்லை. உதாரணமாக, உண்மையற்ற இஸ்ரவேலர்களிடம் கடவுள் இவ்வாறு சொன்னார்: “என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்.” (மல்கியா 3:7) இஸ்ரவேலர் யெகோவாவிடம் ‘திரும்புவது,’ அவர்கள் தங்களுடைய தவறான போக்கை விட்டுவிட்டு மறுபடியும் கடவுளுடைய நீதியான வழிகளைப் பின்பற்றுவதை அர்த்தப்படுத்தியது. யெகோவா இஸ்ரவேலரிடம் ‘திரும்புவது’ என்பது மறுபடியும் தம்முடைய மக்களை அன்புடன் கவனிக்கப் போவதை அர்த்தப்படுத்தியது. இந்த இரண்டு விஷயத்திலும் ‘திரும்புவது’ என்பது மனப்பான்மையை குறிக்கிறது, சொல்லர்த்தமாகவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதை அல்ல.

அவ்வாறே, மரணத்தின்போது கடவுளிடம் ஆவி ‘திரும்புகையில்’ அது உண்மையில் பூமியிலிருந்து பரலோகத்திற்குச் செல்வதில்லை. உயிர்சக்தி ஒருவரிடமிருந்து சென்றுவிட்டால், அதை மறுபடியும் அவனில் கொண்டுவரும் திறமை கடவுளுக்கு மட்டுமே உண்டு. ஆகவே ஆவி, ‘தேவனிடத்திற்கு திரும்புகிறது’ என்று சொல்லும்போது அந்த நபருடைய எதிர்கால வாழ்க்கையைக் குறித்த எதிர்பார்ப்பு முற்றிலும் இப்போது கடவுளையே சார்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

உதாரணமாக, இயேசு கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள். சுவிசேஷகனாகிய லூக்கா இதை இவ்வாறு விளக்குகிறார்: “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.” (லூக்கா 23:46) இயேசுவின் ஆவி அவரைவிட்டுச் சென்ற பின்பு அவர் சொல்லர்த்தமாகவே பரலோகத்திற்குச் செல்லவில்லை. மூன்றாம் நாள்வரை இயேசு உயிர்த்தெழுப்பப்படவில்லை; அதோடு, இன்னும் 40 நாட்களுக்குப் பிறகே பரலோகத்திற்குச் சென்றார். (அப்போஸ்தலர் 1:3, 9) ஆனால், இயேசு மரிக்கும் சமயத்தில் உறுதியான நம்பிக்கையுடன்​—⁠மறுபடியும் உயிருக்குக் கொண்டுவர யெகோவாவுக்கு திறமை இருக்கிறது என்ற முழு நம்பிக்கையுடன்​—⁠தம்முடைய ஆவியை பிதாவின் கரங்களில் ஒப்புவித்தார்.

ஆம், கடவுளால் ஒருவரை மீண்டும் உயிருக்குக் கொண்டுவர முடியும். (சங்கீதம் 104:30) எப்பேர்ப்பட்ட மகத்தான எதிர்பார்ப்பு!

ஓர் உறுதியான நம்பிக்கை

பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘காலம் வருகிறது; அப்போது [“ஞாபகார்த்த,” NW] கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் [இயேசுவின்] குரலைக் கேட்டு வெளியே வருவர்.’ (யோவான் 5:28, 29, பொது மொழிபெயர்ப்பு) ஆம், யெகோவாவின் நினைவில் உள்ளவர்கள் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் அல்லது மீண்டும் உயிரடைவார்கள் என இயேசு கிறிஸ்து வாக்குறுதி கொடுத்தார். அவ்வாறு உயிரடைபவர்களில் யெகோவாவின் ஊழியர்களாக நீதியான வாழ்க்கை வாழ்ந்தவர்களும் அடங்குவர். ஆனால் கடவுளுடைய நீதியான தராதரங்களுக்கு இசைவாக வாழ்வார்களா மாட்டார்களா என நிரூபிக்காமலே கோடிக்கணக்கான மற்றவர்கள் இறந்திருக்கின்றனர். யெகோவா எதிர்பார்ப்பவை எவை என்று அவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்; அல்லது தேவையான மாற்றங்கள் செய்வதற்கு அவர்களுக்கு போதிய சமயம் இருந்திருக்காது. இப்படிப்பட்டவர்களும் கடவுளுடைய ஞாபகத்தில் இருக்கின்றனர், இவர்களும் உயிர்த்தெழுப்பப்படுவர்; ஏனெனில் பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு.’​—⁠அப்போஸ்தலர் 24:15.

இன்று, பூமி முழுவதும் பகைமை, சண்டை சச்சரவு, வன்முறை, கொலை, தூய்மைக்கேடு, நோய் ஆகியவை நிறைந்துள்ளன. இப்படிப்பட்ட பூமியில் இறந்தவர்கள் மறுபடியும் உயிரடைந்தால், எவ்வளவுதான் சந்தோஷம் கிடைத்தாலும் அது தற்காலிகமாகவே இருக்கும். ஆகவேதான் பிசாசாகிய சாத்தானின் ஆதிக்கத்திலுள்ள தற்போதைய உலக சமுதாயத்திற்கு சீக்கிரமாக முடிவு கட்டப்போவதாக படைப்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார். (நீதிமொழிகள் 2:21, 22; தானியேல் 2:44; 1 யோவான் 5:19) “புதிய பூமி” எனப்படும் நீதியான மனித சமுதாயம் நிஜமாகவே உருவாகும்.​—⁠2 பேதுரு 3:⁠13.

அப்போது, “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24) மரண வேதனையும் இராது, ஏனெனில் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:4) ‘ஞாபகார்த்த கல்லறைகளில்’ உள்ளவர்களுக்கு எப்பேர்ப்பட்ட ஓர் எதிர்பார்ப்பு!

யெகோவா துன்மார்க்கத்தை பூமியிலிருந்து ஒழித்துக்கட்டும்போது, துன்மார்க்கரோடு சேர்த்து நீதிமான்களையும் அழித்துவிட மாட்டார். (சங்கீதம் 37:10, 11; 145:20) சொல்லப்போனால், “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” “திரளான கூட்டமாகிய” ஜனங்கள், தற்போதைய பொல்லாத உலகை அழிக்கவிருக்கும் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிப்பிழைப்பார்கள். (வெளிப்படுத்துதல் 7:9-14) ஆகவே, ஒரு திரள் கூட்டத்தினர் இறந்தவர்களை வரவேற்க தயாராய் இருப்பார்கள்.

இறந்துபோன உங்கள் பிரியமானவர்களை பார்க்க ஏங்குகிறீர்களா? பூமியில் பரதீஸில் என்றென்றும் வாழ விரும்புகிறீர்களா? அப்படியானால், கடவுளுடைய சித்தத்தையும் நோக்கங்களையும் பற்றிய திருத்தமான அறிவை நீங்கள் பெற வேண்டும். (யோவான் 17:3) “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” வேண்டும் என்பதே யெகோவாவின் சித்தம்.​—⁠1 தீமோத்தேயு 2:3, 4.

[பக்கம் 4-ன் படம்]

“நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்”

[பக்கம் 5-ன் படம்]

ஆவியை மின்சக்திக்கு ஒப்பிடலாம்

[பக்கம் 7-ன் படம்]

உயிர்த்தெழுதல் நித்திய சந்தோஷத்தை தரும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்