கடவுளிடம் உங்கள் முழு கடமையையும் நிறைவேற்றுகிறீர்களா?
“ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.”—பிரசங்கி 12:14.
1. என்ன ஏற்பாடுகளை யெகோவா தம்முடைய ஜனங்களுக்குச் செய்திருக்கிறார்?
மகத்தான சிருஷ்டிகராக தொடர்ந்து தம்மை நினைப்போரை யெகோவா ஆதரிக்கிறார். அவருக்கு முழு பிரியமாக நடப்பதற்குத் தேவையான அறிவை ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தை தருகிறது. தெய்வீக சித்தத்தைச் செய்வதிலும், “சகலவித நற்கிரியைகளுமாகிய கனியைத்” தருவதிலும், கடவுளுடைய பரிசுத்த ஆவி அவர்களை வழிநடத்துகிறது. (கொலோசெயர் 1:9, 10) மேலும், “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” மூலம் ஆவிக்குரிய உணவையும் தேவாட்சிக்குரிய வழிநடத்துதலையும் யெகோவா தருகிறார். (மத்தேயு 24:45-47) ஆகையால், யெகோவாவை சேவித்து ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் மிக முக்கியமான ஊழியத்தை செய்து வருகையில், கடவுளுடைய ஜனங்கள் பல வழிகளில் பரம ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்.—மாற்கு 13:10.
2. யெகோவாவுக்கு செய்யும் சேவையைக் குறித்ததில், என்ன கேள்விகள் எழும்பலாம்?
2 யெகோவாவுக்கு செய்யும் பரிசுத்த சேவையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதில் மெய் கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி காண்கின்றனர். ஆனால் சிலர் உற்சாகமிழந்து தங்களுடைய முயற்சிகள் அர்த்தமற்றவை என நினைக்கலாம். உதாரணமாக, ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் தாங்கள் எடுக்கும் உள்ளப்பூர்வமான முயற்சிகள் உண்மையில் பயனுள்ளவைதானா என சிலசமயங்களில் சந்தேகிக்கலாம். குடும்ப படிப்பை பற்றியும் மற்ற நடவடிக்கைகளைப் பற்றியும் சிந்திக்கையில், குடும்பத் தலைவரின் மனதில் இது போன்ற கேள்விகள் எழும்பலாம்: ‘நாங்கள் செய்யும் சேவையில் உண்மையிலேயே யெகோவா பிரியப்படுகிறாரா? கடவுளுக்கு எங்கள் முழு கடமையையும் நிறைவேற்றுகிறோமா?’ பிரசங்கியின் ஞானமான வார்த்தைகள் இத்தகைய கேள்விகளுக்குப் பதிலளிக்க உதவும்.
எல்லாமே மாயையா?
3. பிரசங்கி 12:8-ன்படி, மாயையின் உச்சக்கட்டம் என்ன?
3 இளைஞராய் இருந்தாலும்சரி முதியோராய் இருந்தாலும்சரி, ஞானியின் வார்த்தைகள் அவ்வளவு ஊக்கமூட்டுவதாக இல்லை என சிலர் நினைக்கலாம். “மாயை, மாயை, எல்லாம் மாயை [“பயனற்றதே,” NW]” என்று பிரசங்கி சொன்னார். (பிரசங்கி 12:8) சொல்லப்போனால், இளமையில் மகத்தான சிருஷ்டிகரை நினையாமலும் அவரை சேவிக்காமலும் வளர்ந்து, முதுமை எய்தியதைத் தவிர சாதனை என குறிப்பிட வேறேதும் இல்லாதபோது அது மகா மகா மாயையே. பொல்லாங்கன் பிசாசாகிய சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த உலகில், பெரும் செல்வந்தராக பெயரோடும் புகழோடும் அவர் இறந்தாலும், அப்படிப்பட்டவருக்கு எல்லாம் மாயையே அல்லது வீணே.—1 யோவான் 5:19.
4. எல்லாம் மாயை அல்ல என்று ஏன் சொல்லலாம்?
4 யெகோவாவின் உண்மையுள்ள ஊழியராக பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்போருக்கு எல்லாமே மாயை அல்ல. (மத்தேயு 6:19, 20) பயன்தரும் கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு அவர்களுக்கு நிறைய இருக்கிறது. இத்தகைய உழைப்புகள் நிச்சயமாகவே மாயை அல்ல. (1 கொரிந்தியர் 15:58) ஆனால் நாம் ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாக இருந்தால், இந்தக் கடைசி நாட்களில் கடவுள் நமக்கு நியமித்திருக்கிற வேலையில் சுறுசுறுப்பாய் ஈடுபடுகிறோமா? (2 தீமோத்தேயு 3:1) அல்லது, பொதுவில் நம் அயலாரிலிருந்து அதிகம் வேறுபடாத ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றுகிறோமா? அவர்கள் பல்வேறு மதங்களோடு ஈடுபாடு கொள்ளலாம், வழிபாட்டு ஸ்தலங்களுக்குத் தவறாமல் சென்று வணக்க சம்பந்தமான அனைத்தையும் செய்யலாம், பக்திமான்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் ராஜ்ய செய்தியின் அறிவிப்பாளர்கள் அல்ல. இதுவே ‘முடிவுகாலம்’ என்ற திருத்தமான அறிவும், நாம் வாழும் நாட்களின் அவசரத் தன்மையைப் பற்றிய உணர்வும் அவர்களுக்கு கொஞ்சம்கூட கிடையாது.—தானியேல் 12:4.
5. வாழ்க்கைக்குரிய இயல்பான காரியங்களே நம் முக்கிய அக்கறைக்குரியவையாக ஆகிவிட்டால், நாம் என்ன செய்ய வேண்டும்?
5 நாம் வாழும் கொடிய காலங்களைப் பற்றி இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.” (மத்தேயு 24:37-39) மிதமாக புசிப்பதிலும் குடிப்பதிலும் தவறேதும் இல்லை. திருமணம் என்பது கடவுள்தாமே ஆரம்பித்து வைத்த ஓர் ஏற்பாடு. (ஆதியாகமம் 2:20-24) ஆனால் இதுதான் வாழ்க்கை என மூழ்கிவிட்டதை உணர ஆரம்பித்தால், ஏன் அதற்காக ஜெபம் செய்யக்கூடாது? ராஜ்ய அக்கறைகளை முதலில் வைக்கவும், சரியானதை செய்யவும், அவரிடம் நம் கடமையை நிறைவேற்றவும் யெகோவா நமக்கு உதவ முடியும்.—மத்தேயு 6:33; ரோமர் 12:12; 2 கொரிந்தியர் 13:7.
ஒப்புக்கொடுத்தலும் கடவுளிடமாக நமது கடமையும்
6. முழுக்காட்டப்பட்ட சிலர், என்ன முக்கியமான வகையில் கடவுளிடம் தங்கள் கடமையை நிறைவேற்ற தவறுகிறார்கள்?
6 முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்கள் சிலர் ஊக்கமாய் ஜெபிப்பது அவசியம். ஏனெனில், அவர்கள் தங்களை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தபோது ஏற்றுக்கொண்ட ஊழியக் கடமைகளின்படி வாழ்வதில்லை. இப்போது பல வருடங்களாக ஆண்டுதோறும் 3,00,000-க்கும் அதிகமானோர் முழுக்காட்டப்படுகின்றனர். ஆனால், சுறுசுறுப்பாக செயல்படும் யெகோவாவின் சாட்சிகளுடைய மொத்த எண்ணிக்கை அதற்கேற்ப அதிகரிப்பதில்லை. ஏற்கெனவே ராஜ்ய பிரஸ்தாபிகளாக இருப்பவர்களில் சிலர், நற்செய்தியை பிரசங்கிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவரும் முழுக்காட்டுதலுக்கு முன்பு கிறிஸ்தவ ஊழியத்தில் அர்த்தமுள்ள விதத்தில் பங்கு கொண்டிருந்திருக்க வேண்டும். எனவே, தம்மை பின்பற்றுவோர் எல்லாருக்கும் இயேசு கொடுத்த பொறுப்பைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள்: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) உடல்நிலை சம்பந்தப்பட்ட அசாதாரண பலவீனங்களோ அல்லது அவர்களுடைய சக்திக்கு மிஞ்சிய மற்ற காரணங்களோ இருந்தால் தவிர, கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் சுறுசுறுப்பான சாட்சிகளாக இல்லாத முழுக்காட்டப்பட்டவர்கள் நம்முடைய மகத்தான சிருஷ்டிகருக்கு முன்பாக தங்கள் முழு கடமையின்படி வாழாதவர்களே.—ஏசாயா 43:10-12.
7. வணக்கத்திற்காக நாம் ஏன் தவறாமல் ஒன்றுகூடி வரவேண்டும்?
7 பூர்வ இஸ்ரவேல் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த ஒரு ஜனம். நியாயப்பிரமாணத்தின்கீழ் இருந்த அந்த ஜனங்கள் யெகோவாவுக்கு முன்பு நிறைவேற்ற வேண்டிய கடமை இருந்தது. உதாரணமாக, மூன்று வருடாந்தர பண்டிகைகளுக்கு ஆண்கள் எல்லாரும் ஒன்றுகூடிவர வேண்டும். வேண்டுமென்றே பஸ்காவை ஆசரிக்கத் தவறியவன் மரணத்தில் ‘அறுப்புண்டு போனான்.’ (எண்ணாகமம் 9:13; லேவியராகமம் 23:1-43; உபாகமம் 16:16) கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த ஜனமாக தங்களுடைய கடமையை நிறைவேற்ற வணக்கத்திற்காக இஸ்ரவேலர் ஒன்றுகூடி வர வேண்டியிருந்தது. (உபாகமம் 31:10-13) ‘உங்களுக்கு வசதிப்பட்டால் இதைச் செய்யுங்கள்’ என்று நியாயப்பிரமாணத்தில் எதுவும் சொல்லப்படவில்லை. இப்போது யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தவர்களாக இருப்போர் ஒன்றுகூடி வருவதற்கு கொடுக்கப்பட்ட இந்தக் கட்டளை பவுலின் வார்த்தைகளை நிச்சயமாகவே ஆதரிக்கின்றன: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்.” (எபிரெயர் 10:24, 25) ஆம், உடன் விசுவாசிகளுடன் தவறாமல் ஒன்றுகூடி வருவது ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவருக்கு கடவுளிடம் இருக்கும் கடமையின் ஒரு பாகம்.
உங்கள் தீர்மானங்களை கவனமாய் சீர்தூக்கிப் பாருங்கள்
8. ஒப்புக்கொடுத்த இளைஞன் தன்னுடைய பரிசுத்த சேவைக்கு ஏன் ஜெபசிந்தையோடு கவனம் செலுத்த வேண்டும்?
8 நீங்கள் ஒருவேளை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த இளைஞனாக இருக்கலாம். ராஜ்ய அக்கறைகளுக்கு உங்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தால், நிறைவான ஆசீர்வாதங்கள் உங்களுக்கே. (நீதிமொழிகள் 10:22) ஜெபமும் கவனமாக திட்டமிடுவதும் உங்கள் இளமை காலத்தை ஏதோவொரு வகை முழுநேர ஊழியத்தில் செலவிட உதவும். உங்கள் மகத்தான சிருஷ்டிகரை நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை காட்டுவதற்கு இது ஒரு சிறந்த வழி. இல்லாவிட்டால், பொருளாசை உங்கள் நேரத்தையும் கவனத்தையும் பேரளவு வாரிக்கொள்ளலாம். பொதுவாக எல்லாரையும் போல, இளமையிலேயே மணமுடித்து பொருளுடைமைகளை சம்பாதிக்க நாடுகையில் கடன் தொல்லையில் மூழ்கிவிடலாம். மிகுந்த வருமானத்தை அள்ளித்தரும் தொழில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் பெருமளவு உறிஞ்சிக்கொள்ளலாம். உங்களுக்குப் பிள்ளைகள் பிறந்தால் குடும்ப பாரத்தை பல ஆண்டுகள் சுமக்க வேண்டியதாகலாம். (1 தீமோத்தேயு 5:8) உங்கள் மகத்தான சிருஷ்டிகரை நீங்கள் மறக்காமலிருக்கலாம், ஆனால் முன்கூட்டியே திட்டமிடுவது அல்லது திட்டமிடாதிருப்பது, உங்கள் பிற்கால வாழ்க்கையைப் பாதிக்கலாம் என்பதை தெரிந்து வைத்திருப்பது ஞானமானது. பிற்காலத்தில் கடந்தகால வாழ்வைப் பற்றி சிந்திக்கையில், சிருஷ்டிகரைச் சேவிப்பதற்கு இளமை காலத்தை அதிக முழுமையாக செலவிடாமல் போனதை நினைத்து ஏங்குவீர்கள். உங்களுடைய இளமையில் யெகோவாவுக்குப் பரிசுத்த சேவை செய்வதில் மனதிருப்தியை கண்டடைய ஏன் இப்போதே உங்கள் எதிர்கால திட்டங்களை ஜெபத்தோடு சிந்தித்துப் பார்க்கக்கூடாது?
9. ஒரு காலத்தில் சபையில் முக்கிய பொறுப்பை சுமந்து, ஆனால் இப்போது முதியோராக இருக்கும் ஒருவருக்கு எது ஒருவேளை சாத்தியமாகலாம்?
9 மற்றொரு வகை சூழ்நிலைமையை கவனியுங்கள். இது, ஒரு காலத்தில் ‘தேவனுடைய மந்தைக்கு’ மேய்ப்பனாக சேவித்த ஒருவரை பற்றியது. (1 பேதுரு 5:2, 3) ஏதோ காரணத்தால் அத்தகைய சிலாக்கியங்களில் இருந்து தானாகவே விலகிக்கொண்டார். இப்போதோ அவர் முதியவர், கடவுளுடைய சேவையில் தொடர்ந்து சேவிப்பது அவருக்கு அதிக கடினமாயிருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் தேவராஜ்ய சிலாக்கியங்களுக்காக அவர் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டுமா? சபையில் அதிக பொறுப்பை ஏற்க முடிந்தால், அப்படிப்பட்டவர் மற்றவர்களுக்கு என்னே ஓர் ஆசீர்வாதமாக இருப்பார்! எந்த மனிதனும் தனக்காக மாத்திரமே வாழ்வதில்லை, கடவுளுக்கு மகிமையுண்டாக அவர் தன் சேவையை அதிகரிக்க முடிந்தால், நண்பர்களும் அன்பானவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். (ரோமர் 14:7, 8) எல்லாவற்றிக்கும் மேல், தமக்காக எவர் செய்யும் சேவையையும் யெகோவா மறப்பதில்லை. (எபிரெயர் 6:10-12) ஆகையால், நம் மகத்தான சிருஷ்டிகரை நினைப்பதற்கு எது நமக்கு உதவ முடியும்?
நம் சிருஷ்டிகரை நினைப்பதற்கு உதவும் வழிகள்
10. நம் மகத்தான சிருஷ்டிகரை நினைப்பதற்கான வழிகாட்டுதல்களை அளிக்கும் சிறந்த நிலையில் பிரசங்கி ஏன் இருந்தார்?
10 நம் மகத்தான சிருஷ்டிகரை நினைப்பதற்கு உதவும் வழிகளை அளிக்கும் மிகச் சிறந்த நிலையில் பிரசங்கி இருந்தார். அவருக்கு அளவற்ற ஞானத்தை அருளுவதன் மூலம் யெகோவா அவருடைய இருதயப்பூர்வமான ஜெபங்களுக்கு பதிலளித்தார். (1 இராஜாக்கள் 3:6-12) மனித விவகாரங்களின் முழு செயற்பாங்கையும் சாலொமோன் முற்றும் முழுமையாக ஆராய்ந்திருந்தார். மேலும், மற்றவர்கள் பயன்பெற தான் கண்டறிந்தவற்றை எழுதிவைக்கும்படி அவர் கடவுளால் ஏவப்பட்டார். அவர் எழுதினார்: “மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப் போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான். இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.”—பிரசங்கி 12:9, 10.
11. சாலொமோனின் ஞானமான அறிவுரையை நாம் ஏன் ஏற்க வேண்டும்?
11 இந்த வார்த்தைகளின் கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு இவ்வாறு வாசிக்கிறது: “மேலும், பிரசங்கி ஞானவானாக இருந்ததாலும், மனிதருக்கு ஞானத்தை போதித்ததாலும்; உவமைகளிலிருந்து இதமான வார்த்தைகளால் செவி மகிழும்படி, இன்பமளிக்கும் வார்த்தைகளையும் நேர்மையான எழுத்தையும்—சத்திய வார்த்தைகளையும்—கண்டடைய ஊக்கமான ஆராய்ச்சி செய்தார்.” (த செப்டுவஜின்ட் பைபிள், சார்ல்ஸ் தாம்ஸ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது) இன்பந்தரும் வார்த்தைகளாலும், உண்மையில் ஆர்வத்தைத் தூண்டுகிறதும் பயனுள்ளதுமான விஷயங்களாலும் தன் வாசகரின் இதயங்களை எட்டுவதற்கு சாலொமோன் முயன்றார். வேத வசனங்களில் காணப்படுகிற அவருடைய வார்த்தைகள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டவை. ஆதலால், அவர் கண்டறிந்தவற்றையும் ஞானமான அறிவுரையையும் நாம் தயங்காமல் ஏற்கலாம்.—2 தீமோத்தேயு 3:16, 17.
12. பிரசங்கி 12:11, 12-ல் சாலொமோன் சொன்னதை உங்கள் சொந்த வார்த்தைகளில் எவ்வாறு சொல்வீர்கள்?
12 நவீன அச்சடிப்பு முறைகள் இல்லாதபோதிலும், சாலொமோனின் காலத்தில் ஏராளமான புத்தகங்கள் கிடைத்தன. இத்தகைய இலக்கியங்களை எவ்வாறு கருத வேண்டும்? அவர் சொன்னார்: ‘ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள் போலவும் தொகுத்து வைத்த வாக்கியங்கள் அறையுண்ட ஆணிகள் போலவும் இருக்கின்றன. அவை ஒரே மேய்ப்பரால் அளிக்கப்பட்டன. இவற்றை தவிர, என் மகனே, எச்சரிக்கைக்கு செவிகொடு: அநேக நூல்களை எழுதுவதற்கு முடிவில்லை, அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.”—பிரசங்கி 12:11, 12, தி.மொ.
13. தேவபக்திக்குரிய ஞானமுடையோரின் வார்த்தைகள் எவ்வாறு தாற்றுக்கோல்களைப் போல் நிரூபிக்க முடியும், ‘அறையுண்ட ஆணிகளைப்போல்’ யார் இருக்கிறார்கள்?
13 தேவபக்திக்குரிய ஞானமுடையோரின் வார்த்தைகள் தாற்றுக்கோல்களைப் போல் இருக்கின்றன. எவ்வாறு? வாசித்த அல்லது கேட்ட ஞானமான வார்த்தைகளுக்கு இசைய முன்னேற்றம் செய்வதற்கு வாசகர்களை அல்லது செவிசாய்ப்போரை அவை தூண்டுவிக்கின்றன. மேலும், ‘தொகுத்த வாக்கியங்களில்’ அல்லது உண்மையில் ஞானமானவையும் பயனுள்ளவையுமான வார்த்தைகளில் மூழ்கியவர்களாய் இருப்போர், “அறையுண்ட ஆணிகள்” போல், அதாவது உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றனர். ஏனெனில் அத்தகையோரின் நல்வார்த்தைகள் யெகோவாவின் ஞானத்தை வெளிப்படுத்துகின்றன. எனவே வாசகருக்கு அல்லது செவிசாய்ப்போருக்கு அவை திடப்படுத்துவதாகவும் ஆதரவாகவும் இருக்கலாம். நீங்கள் தேவபயமுள்ள பெற்றோராக இருந்தால், அத்தகைய ஞானத்தை உங்கள் பிள்ளையின் மனதிலும் இதயத்திலும் ஆழமாய்ப் பதியவைக்க எல்லா முயற்சியையும் எடுக்க மாட்டீர்களா?—உபாகமம் 6:4-9.
14. (அ) என்ன வகையான புத்தகங்களை ‘அதிகம் படிப்பது’ நன்மை பயக்குவதில்லை? (ஆ) என்ன வகையான புத்தகங்களுக்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டும், ஏன்?
14 எனினும், புத்தகங்கள் சம்பந்தமாக தான் செய்தவற்றைக் குறித்து சாலொமோன் ஏன் சொன்னார்? யெகோவாவின் வார்த்தையோடு ஒப்பிடுகையில் உலகிலுள்ள எண்ணற்ற புத்தகங்களில் மனித பகுத்தறிவு வாதங்களே புதைந்து கிடக்கின்றன. இந்தச் சிந்தனையில் பெரும்பான்மை பிசாசாகிய சாத்தானின் மனதைப் பிரதிபலிக்கிறது. (2 கொரிந்தியர் 4:4) ஆகையால், உலகப்பிரகாரமான அத்தகைய புத்தகங்களை ‘அதிகம் படிப்பது,’ நிலையான பயனை சிறிதும் அளிப்பதில்லை. உண்மையில், அவற்றில் பெரும்பாலானவை ஆவிக்குரிய முறையில் தீங்குண்டாக்குபவையாக இருக்கலாம். சாலொமோனைப் போல வாழ்க்கையைப் பற்றி கடவுளுடைய வார்த்தை சொல்வதை ஆழ்ந்து சிந்திப்போமாக. இது, நம் விசுவாசத்தைப் பலப்படுத்தி நம்மை யெகோவாவிடம் நெருங்கிவரச் செய்யும். மற்ற புத்தகங்களுக்கு அல்லது போதனைகளுக்கு மிதமீறிய கவனம் செலுத்துவது நம்மை சோர்வடையச் செய்யலாம். முக்கியமாய் அத்தகைய புத்தகங்கள் தேவ ஞானத்துக்கு முரண்படுகிற உலகப்பிரகாரமான சிந்தனைக்குரியவையாக இருக்கையில், மோசமானவையாகவும் கடவுளிலும் அவருடைய நோக்கங்களிலும் விசுவாசத்தை அழிப்பவையாகவும் இருக்கும். ஆகையால், சாலொமோன் காலத்திலும் நம்முடைய நாளிலும் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் புத்தகங்கள், ‘மேய்ப்பராகிய’ யெகோவா தேவனின் ஞானத்தை வெளிப்படுத்துபவையே என்பதை நினைவில் கொள்வோமாக. அவர் பரிசுத்த வேதாகமத்தின் 66 புத்தகங்களை அளித்திருக்கிறார். இவற்றிற்கே நாம் பிரதான கவனம் செலுத்த வேண்டும். பைபிளும் ‘உண்மையுள்ள ஊழியக்காரனின்’ உதவியளிக்கும் பிரசுரங்களும், “தேவனை அறியும் அறிவைப்” பெற நமக்கு உதவுகின்றன.—நீதிமொழிகள் 2:1-6.
கடவுளிடம் நமது முழு கடமை
15. (அ) “எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை” என்ற சாலொமோனின் வார்த்தைகளை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்? (ஆ) கடவுளிடமாக நமது கடமையை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும்?
15 பிரசங்கியாகிய சாலொமோன் தன் முழு ஆராய்ச்சியையும் இவ்வாறு சுருக்கமாய் தொகுத்துரைக்கிறார்: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.” (பிரசங்கி 12:13, 14) நம் மகத்தான சிருஷ்டிகருக்கு உகந்த மெய்யான பயம் அல்லது பயபக்தியுடன்கூடிய மரியாதை நம்மையும் ஒருவேளை நம் குடும்பங்களையும் மடத்தனமான வாழ்க்கைப் போக்கிலிருந்து பாதுகாக்கும். இவ்வாறு, சொல்லவொன்னா தொல்லையும் துயரமும் நம்மீதும் நமக்குப் பிரியமானோர்மீதும் வருவதிலிருந்து காக்கும். கடவுளிடமான அந்த உண்மையான பயம், தூய்மையாயும் ஞானம், அறிவு ஆகியவற்றின் பிறப்பிடமாயும் இருக்கிறது. (சங்கீதம் 19:9; நீதிமொழிகள் 1:7) நாம் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையின் அடிப்படையிலான உட்பார்வை உடையோராக இருந்து, அதன் அறிவுரையை எல்லா சமயங்களிலும் பொருத்திப் பயன்படுத்தினால் கடவுளிடம் நம் ‘முழு கடமையை’ நிறைவேற்றுவோராக இருப்போம். நம் கடமைகளைப் பற்றி ஒரு பட்டியல் தயாரிப்பதை அல்ல, மாறாக வாழ்க்கையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழிநடத்துதலுக்காக வேதவசனங்களை ஆராய்ந்து, எப்போதும் காரியங்களை கடவுளுடைய வழியில் செய்வதையே தேவைப்படுத்துகிறது.
16. நியாயத்தீர்ப்பைப் பற்றியதில் யெகோவா என்ன செய்வார்?
16 நம் மகத்தான சிருஷ்டிகரின் பார்வையிலிருந்து எதுவும் தப்பமுடியாது என்பதை நாம் உணர வேண்டும். (நீதிமொழிகள் 15:3) அவர் “ஒவ்வொரு கிரியையையும் . . . நியாயத்திலே கொண்டுவருவார்.” மனித கண்களுக்கு புலப்படாதவை உட்பட, எல்லாவற்றையும் மகா உன்னதமானவர் நியாயந்தீர்ப்பார். இத்தகைய உண்மைகளைத் தெரிந்திருப்பது, கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொள்வதற்கு செயல் தூண்டுதலாக அமையலாம். ஆனால் நம்முடைய பரலோகத் தகப்பன்மீதான அன்பே எல்லாவற்றிலும் மிகப் பெரிய செயல் தூண்டுதலாக இருக்க வேண்டும். அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.” (1 யோவான் 5:3) கடவுளுடைய கட்டளைகள் நம்முடைய நிரந்தர நன்மைக்காக இருப்பதால், அவற்றை கைக்கொள்வது சரியானதே. அது மட்டுமல்லாமல் உண்மையிலேயே ஞானமானதாயும் உள்ளது. மகத்தான சிருஷ்டிகரை நேசிப்போருக்கு இது பாரமானதாய் இல்லை. அவரிடம் தங்கள் கடமையை நிறைவேற்றவே அவர்கள் விரும்புகிறார்கள்.
உங்கள் முழு கடமையையும் நிறைவேற்றுங்கள்
17. கடவுளிடமாக நம் முழு கடமையையும் நிறைவேற்ற நாம் உண்மையில் விரும்பினால் என்ன செய்வோம்?
17 நாம் ஞானமுள்ளோராக இருந்து கடவுளிடம் நம் முழு கடமையையும் நிறைவேற்ற உண்மையில் விரும்பினால், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வோம். அதோடு அவருக்குப் பிரியமில்லாததைச் செய்யாதிருக்க பயபக்தியும் நமக்கு இருக்கும். நிச்சயமாகவே, “யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்.” மேலும் அவருடைய கட்டளைகளின்படி செய்கிறவர்களுக்கு “நல் விவேகமுண்டு.” (சங்கீதம் 111:10; நீதிமொழிகள் 1:7; தி.மொ.) ஆகையால், நாம் ஞானமாய் நடந்து எல்லாவற்றிலும் யெகோவாவுக்கு கீழ்ப்படிவோமாக. இப்போது இது மிக முக்கியம், ஏனெனில் அரசராகிய இயேசு கிறிஸ்து வந்திருக்கிறார், கடவுளுடைய நியமிக்கப்பட்ட நியாயாதிபதியாக அவர் நியாயத்தீர்ப்பு செய்யும் நாள் சமீபித்திருக்கிறது.—மத்தேயு 24:3; 25:31, 32.
18. யெகோவா தேவனிடமாக நமக்கிருக்கும் முழு கடமையையும் நிறைவேற்றினால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன?
18 இப்போது நம் ஒவ்வொருவரையும் கடவுள் கூர்ந்து கவனிக்கிறார். நாம் ஆவிக்குரிய மனச்சாய்வு உடையோராக இருக்கிறோமா, அல்லது உலக செல்வாக்குகள் கடவுளிடம் நம் உறவை தளர்வுறச் செய்ய அனுமதிக்கிறோமா? (1 கொரிந்தியர் 2:10-16; 1 யோவான் 2:15-17) இளைஞராக இருந்தாலும்சரி முதியோராக இருந்தாலும்சரி, நம் மகத்தான சிருஷ்டிகரைப் பிரியப்படுத்துவதற்கு நம்மால் இயன்ற எல்லாவற்றையும் செய்வோமாக. நாம் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டால் அழியப்போகும் இந்தப் பழைய உலகத்திற்குரிய வீணான காரியங்களை வேண்டாமென ஒதுக்கிவிடுவோம். கடவுளுடைய புதிய காரிய ஒழுங்கு முறையில் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கை உடையோராக இருக்கலாம். (2 பேதுரு 3:13) கடவுளிடம் தங்கள் முழு கடமையை நிறைவேற்றுபவர்களுக்கு இவை எப்பேர்ப்பட்ட மகத்தான ஆசீர்வாதங்கள்!
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ எல்லாம் மாயை அல்ல என்று ஏன் சொல்வீர்கள்?
◻ கிறிஸ்தவ இளைஞன் தன்னுடைய பரிசுத்த சேவைக்கு ஏன் ஜெபசிந்தையுடன் கவனம் செலுத்த வேண்டும்?
◻ என்ன வகையான புத்தகங்களை ‘அதிகம் படிப்பது’ நன்மை பயக்காது?
◻ ‘மனிதனின் முழு கடமை’ என்ன?
[பக்கம் 20-ன் படம்]
யெகோவாவை சேவிப்போருக்கு எல்லாமே மாயை அல்ல
[பக்கம் 23-ன் படம்]
பெரும்பாலான இவ்வுலக புத்தகங்களைப் போலின்றி, கடவுளுடைய வார்த்தை புத்துயிரளிப்பதாயும் நன்மையளிப்பதாயும் உள்ளது