தேவ சமாதான தூதுவர்கள் சந்தோஷமுள்ளோராக அறிவிக்கப்படுகின்றனர்
“கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி,சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்.”—ஏசாயா 35:10.
1. இந்த உலகிற்கு மிகவும் தேவைப்படுவது எது?
இன்று முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு, மனிதவர்க்கத்திற்கு நற்செய்தியின் தூதுவர் தேவைப்படுகிறார். கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய சத்தியத்தை யாராவது ஒருவர் சொல்ல வேண்டும்; வரவிருக்கும் அழிவைக் குறித்து துன்மார்க்கரை எச்சரித்து தேவ சமாதானத்தைக் கண்டடைய நேர்மை இருதயமுள்ளோருக்கு உதவுகிற ஒரு பயமற்ற சாட்சிக்கான அவசரத் தேவை உள்ளது.
2, 3. இஸ்ரவேலின் விஷயத்தில், ஆமோஸ் 3:7-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள தம்முடைய வாக்குறுதியை யெகோவா எவ்வாறு நிறைவேற்றினார்?
2 இஸ்ரவேலின் நாளில், அந்த வகையான தூதுவர்களை அருளுவதாக யெகோவா வாக்குறுதியளித்தார். பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டின் முடிவில், ஆமோஸ் தீர்க்கதரிசி இவ்வாறு சொன்னார்: “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.” (ஆமோஸ் 3:7) இந்த அறிவிப்புக்குப் பின்வந்த நூற்றாண்டுகளில், யெகோவா வல்லமைமிக்க அநேக செயல்களைச் செய்தார். உதாரணமாக, பொ.ச.மு. 607-ல், தெரிந்துகொள்ளப்பட்ட தம்முடைய மக்களை கடுமையாக தண்டித்தார்; ஏனென்றால் அவர்கள் கலகம்செய்கிறவர்களாயும் இரத்தஞ்சிந்திய குற்றமுள்ளவர்களாயும் இருந்தார்கள். இஸ்ரவேலர் படுகிற துன்பத்தின் நிமித்தமாக கொக்கரித்துக்கொண்டிருந்த அண்டை தேசத்தாரையும்கூட அவர் தண்டித்தார். (எரேமியா, 46-49 அதிகாரங்கள்) அதன் பின்பு, பொ.ச.மு. 537-ல், வலிமைமிக்க பாபிலோனிய உலக வல்லரசுக்கு வீழ்ச்சியைக் கொண்டுவந்தார்; அதன் விளைவாக, பொ.ச.மு. 539-ல், இஸ்ரவேலின் மீதியானோர் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கு தங்களுடைய தேசத்திற்கு திரும்பிவந்தார்கள்.—2 நாளாகமம் 36:22, 23.
3 இவை பூமியை அதிரவைக்கும் சம்பவங்களாய் இருந்தன; ஆமோஸின் வார்த்தைகளுக்கு இசைவாக, தூதுவர்களாக சேவித்த தீர்க்கதரிசிகளுக்கு யெகோவா அவற்றை முன்னதாகவே வெளிப்படுத்தி, வரவிருந்ததைக் குறித்து இஸ்ரவேலுக்கு எச்சரித்தார். பொ.ச.மு. எட்டாவது நூற்றாண்டின் மத்திபத்தில், அவர் ஏசாயாவை எழுப்பினார். பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டின் மத்திபத்தில், எரேமியாவை எழுப்பினார். பின்பு, அந்த நூற்றாண்டின் முடிவில், எசேக்கியேலை எழுப்பினார். இவர்களும் உண்மையுள்ள மற்ற தீர்க்கதரிசிகளும் யெகோவாவின் நோக்கங்களைப் பற்றி முற்றுமுழுமையான சாட்சிகொடுத்தார்கள்.
இன்று கடவுளுடைய தூதுவர்களை அடையாளம் கண்டுகொள்ளுதல்
4. மனிதவர்க்கத்தினருக்கு சமாதான தூதுவர்கள் தேவை என்பதை எது வெளிப்படுத்திக் காட்டுகிறது?
4 இந்நாட்களைப் பற்றியென்ன? உலகிலுள்ள அநேகர் மனித சமுதாயத்தின் சீர்கேட்டை கவனிக்கையில் ஏதோ பயங்கரமானது சம்பவிக்கப்போகிறது என்பதை உணருகிறார்கள். நீதியை நேசிப்போர் கிறிஸ்தவமண்டலத்தின் மாய்மாலத்தையும் படுமோசமான துன்மார்க்கத்தையும் காண்கையில் இருதயத்தில் வேதனைப்படுகிறார்கள். எசேக்கியேலின் மூலம் யெகோவா முன்னறிவித்த விதமாகவே, ‘அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தம் அவர்கள் பெருமூச்சுவிட்டழுகிறார்கள்.’ (எசேக்கியேல் 9:4) இருப்பினும், யெகோவாவின் நோக்கங்கள் என்ன என்பதை அநேகர் உணருவதில்லை. அவர்களுக்கு அது கட்டாயமாகவே சொல்லப்பட வேண்டும்.
5. நம்முடைய நாளில் தூதுவர்கள் இருப்பார்கள் என்பதை இயேசு எவ்வாறு காண்பித்தார்?
5 ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகியோரை போன்று இன்றைக்கு யாராவது தைரியமாய் பேசுகிறார்களா? யாராவது பேசுவார்கள் என இயேசு சுட்டிக்காட்டினார். நம்முடைய நாளுக்கான சம்பவங்களை முன்னறிவிக்கையில், அவர் இவ்வாறு சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும்; அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) ஒரு தூதுவராகவும் நற்செய்தியின் பிரசங்கிப்பாளராகவும் சேவிப்பதன்மூலம் அந்தத் தீர்க்கதரிசனத்தை யார் இன்றைக்கு நிறைவேற்றிவருகிறார்கள்? நம்முடைய நாளுக்கும் பூர்வ இஸ்ரவேலின் நாளுக்கும் இடையே உள்ள ஒத்த அம்சங்கள் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க நமக்கு உதவிசெய்கின்றன.
6. (அ) முதல் உலகப் போரில் ‘தேவனுடைய இஸ்ரவேலருக்கு’ ஏற்பட்ட அனுபவங்களை விவரியுங்கள். (ஆ) எசேக்கியேல் 11:17 எவ்வாறு பூர்வ இஸ்ரவேலின்மீது நிறைவேற்றமடைந்தது?
6 முதல் உலகப் போரின் இருண்ட நாட்களின்போது, யெகோவாவின் நவீன நாளைய மக்களாகிய அபிஷேகம் செய்யப்பட்ட ‘தேவனுடைய இஸ்ரவேலரின்’ மீதியானோர், பாபிலோனில் இருந்த இஸ்ரவேலரைப் போல சிறைப்படுத்தப்பட்டார்கள். (கலாத்தியர் 6:16) கிறிஸ்தவமண்டலம் மிக முக்கிய பாகம் வகிக்கிற பொய் மதங்களின் உலகத் தொகுதியாகிய மகா பாபிலோனுக்குள் அவர்கள் ஆவிக்குரியப் பிரகாரமாய் நாடுகடத்தப்பட்ட நிலையில் துன்பம் அனுபவித்தார்கள். இருந்தபோதிலும், அவர்கள் கைவிடப்படவில்லை என்பதை எசேக்கியேலுக்கு யெகோவா அருளிய வார்த்தைகள் காண்பித்தன. அவர் சொன்னார்: “நான் உங்களை ஜனங்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.” (எசேக்கியேல் 11:17) பூர்வ இஸ்ரவேலருக்கான அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, பெர்சியனாகிய கோரேசுவை யெகோவா எழுப்பினார்; அவர் பாபிலோனிய உலக வல்லரசை கவிழ்த்து, இஸ்ரவேலின் மீதியானோர் தங்களுடைய தேசத்திற்குத் திரும்பி வரும்படியான வழியைத் திறந்துவைத்தார். ஆனால் இந்நாளைப் பற்றியென்ன?
7. மகா பாபிலோனுக்கு எதிராக இயேசு செயல்பட்டுவிட்டார் என்பதை 1919-ல் நடந்த எந்த சம்பவம் காண்பித்தது? விளக்கவும்.
7 இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, பெரிய கோரேசு செயல்படுகிறார் என்பதற்கு வலிமையான அத்தாட்சி இருந்தது. அவர் யார்? 1914 முதற்கொண்டு பரலோக ராஜ்யத்தில் ராஜாவாக அமர்த்தப்பட்ட இயேசு கிறிஸ்துவே தவிர வேறு யாருமல்ல. பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட தம்முடைய சகோதரர்களுக்கு இந்தப் பெரிய ராஜா நற்பிரியத்தைக் காட்டினார்; இது, 1919-ம் வருடத்தில், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, தங்களுடைய ‘தேசமாகிய’ ஆவிக்குரிய நிலைமைக்கு திரும்பிவந்த சமயத்திலாகும். (ஏசாயா 66:8; வெளிப்படுத்துதல் 18:4) இவ்வாறாக, எசேக்கியேல் 11:17 நவீன நாளைய நிறைவேற்றத்தை அடைந்தது. பூர்வ நாட்களில், இஸ்ரவேலர் தங்களுடைய தேசத்திற்குத் திரும்பிவருவதற்கான வழியைத் திறப்பதற்கு பாபிலோன் வீழ்ச்சியடைவது அவசியமாயிருந்தது. பெரிய கோரேசுவின் கைகளில் மகா பாபிலோன் வீழ்ந்ததானது, நவீன நாளில் தேவனுடைய இஸ்ரவேலர் திரும்ப நிலைநாட்டப்பட்டதற்கு அத்தாட்சியாய் இருந்துள்ளது. வெளிப்படுத்துதல் 14-ம் அதிகாரத்தின் இரண்டாவது தேவதூதன்: “பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே!” என்று உரத்த சத்தமிட்டபோது இந்த வீழ்ச்சி அறிவிக்கப்பட்டது. (வெளிப்படுத்துதல் 14:8) மகா பாபிலோனுக்கு, விசேஷமாக கிறிஸ்தவமண்டலத்திற்கு என்னே ஒரு வீழ்ச்சி! உண்மை கிறிஸ்தவர்களுக்கு என்னே ஓர் ஆசீர்வாதம்!
8. கடவுளுடைய மக்கள் 1919-ல் தங்களுடைய விடுதலைக்குப் பிறகு அனுபவித்த மகிழ்ச்சியை எசேக்கியேல் புத்தகம் எவ்வாறு வர்ணிக்கிறது?
8 எசேக்கியேல் 11:18-20-ல், கடவுளுடைய மக்கள் திரும்ப நிலைநாட்டப்பட்ட பிறகு அனுபவித்த மகிழ்ச்சியைப் பற்றிய தீர்க்கதரிசியின் விவரிப்பை நாம் வாசிக்கிறோம். எஸ்றா மற்றும் நெகேமியாவின் நாட்களில், அவருடைய வார்த்தைகளின் முதல் நிறைவேற்றமானது இஸ்ரவேல் சுத்திகரிக்கப்படுவதை அர்த்தப்படுத்தியது. நவீன நாளைய நிறைவேற்றமும் இதைப்போன்ற ஒன்றையே அர்த்தப்படுத்தியது. எவ்வாறு என்பதை நாம் பார்க்கலாம். யெகோவா சொல்லுகிறார்: ‘அவர்கள் [தங்களுடைய தேசத்திற்கு] வந்து, அதில் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்.’ தீர்க்கதரிசனம் உரைத்தபடியே, 1919-ல் தொடங்கி, யெகோவா தம்முடைய மக்களை சுத்திகரித்து அவரை சேவிப்பதற்கு அவர்களை மீண்டும் உயிர்ப்பூட்டினார். அவருடைய பார்வையில் தங்களை அசுத்தப்படுத்திய அனைத்து பாபிலோனிய பழக்கங்களையும் கோட்பாடுகளையும் அவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய சூழலிலிருந்து களைந்துபோட ஆரம்பித்தார்கள்.
9. 1919 முதற்கொண்டு, குறிப்பிடத்தக்க என்ன ஆசீர்வாதங்களை யெகோவா தம்முடைய மக்களுக்கு வழங்கினார்?
9 பின்பு, 19-ம் வசனத்தின்படி, யெகோவா தொடர்ந்து சொல்லுகிறார்: “நான் அவர்களுக்கு என் இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.” இந்த வார்த்தைகளுக்கு இசைவாக, 1919-ல், ‘தோளோடு தோளாக’ அவரை சேவிப்பதற்காக, அடையாளப்பூர்வமாய் சொல்லப்போனால், ‘ஒரே இருதயத்தைத்’ தந்து அபிஷேகம் செய்யப்பட்ட தம்முடைய ஊழியர்களை ஐக்கியப்படுத்தினார். (செப்பனியா 3:9, NW) மேலும், சாட்சிகொடுக்கும் வேலையில் தம்முடைய மக்களை உயிர்ப்பூட்டுவதற்கும், கலாத்தியர் 5:22, 23-ல் விவரிக்கப்பட்டுள்ள நற்கனிகளை அவர்களில் பிறப்பிப்பதற்கும் யெகோவா அவர்களுக்கு பரிசுத்த ஆவியைத் தந்தார். பிரதிபலிக்காத, கல்லான இருதயத்திற்குப் பதிலாக, தம்முடைய சித்தத்திற்கு பிரதிபலிக்கிற மிருதுவான, இளகுகிற, கீழ்ப்படிதலுள்ள ஓர் இருதயத்தை யெகோவா அவர்களுக்கு கொடுத்தார்.
10. திரும்ப நிலைநாட்டப்பட்ட தம்முடைய மக்களை 1919-லிருந்து யெகோவா ஏன் ஆசீர்வதித்திருக்கிறார்?
10 ஏன் அவர் இதைச் செய்தார்? யெகோவாதாமே விளக்குகிறார். எசேக்கியேல் 11:19, 20-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யும்படிக்கே; . . . அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.’ ‘தேவனுடைய இஸ்ரவேலர்’ தங்களுடைய சொந்த கருத்துக்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, யெகோவாவினுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிய கற்றுக்கொண்டார்கள். அவர்கள் மனித பயமின்றி கடவுளுடைய சித்தத்தைச் செய்ய கற்றுக்கொண்டார்கள். இவ்வாறாக, கிறிஸ்தவமண்டலத்தின் போலி கிறிஸ்தவர்களிலிருந்து முனைப்பாய் வித்தியாசப்பட்டிருந்தார்கள். அவர்கள் யெகோவாவின் மக்களாக இருந்தார்கள். இதனிமித்தமாக, யெகோவா அவர்களைத் தம்முடைய தூதுவராக, தம்முடைய ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக’ பயன்படுத்த தயாராக இருந்தார்.—மத்தேயு 24:45-47, NW.
கடவுளுடைய தூதுவர்களின் மகிழ்ச்சி
11. யெகோவாவின் மக்களுடைய மகிழ்ச்சியை ஏசாயா புத்தகம் எவ்வாறு வர்ணிக்கிறது?
11 அவர்கள் எப்படிப்பட்ட ஒரு சிறப்பான ஸ்தானத்தை அனுபவித்து மகிழ்ந்தார்கள் என்பதை உணர்ந்துகொண்டபோது அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? ஒரு தொகுதியாக, ஏசாயா 61:10-ல் (திருத்திய மொழிபெயர்ப்பு) உள்ள வார்த்தைகளை அவர்கள் எதிரொலித்தார்கள்: “யெகோவாவுக்குள் மிகவும் மகிழுகிறேன், என் கடவுளுக்குள் என் ஆத்துமா களிகூருகிறது.” ஏசாயா 35:10-ன் வாக்குறுதி அவர்களில் நிறைவேற்றமடைந்தது: “கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.” 1919-ல் யெகோவாவின் தேவ சமாதான தூதுவர்கள் சகல தேசத்தாருக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆரம்பித்தபோது அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இப்படிப்பட்டதாகவே இருந்தது. அப்போதிருந்து இன்று வரையாக, இந்த வேலையைச் செய்வதை அவர்கள் நிறுத்திவிடவில்லை, அவர்களுடைய மகிழ்ச்சியும் அதிகரித்திருக்கிறது. இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் இவ்வாறு சொன்னார்: “சமாதானம் பண்ணுகிறவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள், ஏனென்றால் அவர்கள் ‘கடவுளுடைய குமாரர்கள்’ என்றழைக்கப்படுவார்கள்.” (மத்தேயு 5:9, NW அடிக்குறிப்பு) 1919 முதற்கொண்டு இன்று வரையாக அந்த அறிவிப்பின் உண்மைத்தன்மையை அபிஷேகம் செய்யப்பட்ட ‘கடவுளுடைய குமாரர்களின்’ மீதியானோர் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.
12, 13. (அ) யெகோவாவை சேவிப்பதில் தேவனுடைய இஸ்ரவேலை சேர்ந்துகொண்டது யார், அவர்கள் என்ன வேலை செய்தார்கள்? (ஆ) யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களால் என்ன மிகப் பெரிய சந்தோஷம் அனுபவிக்கப்பட்டிருக்கிறது?
12 வருடங்கள் கடந்து சென்றபோது, தேவனுடைய இஸ்ரவேலரின் எண்ணிக்கை 1930-களில் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரின் கூட்டிச்சேர்த்தல் முடிவை நெருங்கிய வரையிலுமாக அதிகரித்து வந்தது. நற்செய்தியைப் பிரசங்கிப்போரின் எண்ணிக்கையில் இருந்த அதிகரிப்பு அப்போது நின்றுவிட்டதா? நிச்சயமாகவே இல்லை. பூமிக்குரிய நம்பிக்கையையுடைய கிறிஸ்தவர்களின் ஒரு திரளான கூட்டத்தினர் தோன்ற ஆரம்பித்தார்கள், இவர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட தங்களுடைய சகோதரர்களோடு பிரசங்க வேலையில் சேர்ந்துகொண்டிருந்தார்கள். இந்தத் திரளான கூட்டத்தினரை அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் பார்த்தார், அவர்களை அவர் வர்ணிக்கும் முறை குறிப்பிடத்தக்கது: “இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்.” (வெளிப்படுத்துதல் 7:15) ஆம், திரள் கூட்டத்தினர் சுறுசுறுப்பாய் கடவுளை சேவிக்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவாக, 1935-ஐ தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்டவர்களுடைய எண்ணிக்கை குறைய ஆரம்பித்தபோது, உண்மையுள்ள இந்தத் தோழர்களால் அதிகரிக்கப்பட்ட உந்துவிப்புடன் சாட்சிகொடுக்கும் வேலை முன்னோக்கி செயல்படுத்தப்பட்டது.
13 இந்த முறையில் ஏசாயா 60:3, 4 நிறைவேற்றமடைந்தது: “உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள். சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.” தேவனுடைய இஸ்ரவேலருக்கு இந்தச் சம்பவங்கள் கொண்டுவந்த மகிழ்ச்சி, ஏசாயா 60:5-ல் (தி.மொ.) அழகாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது, நாம் அங்கு வாசிக்கிறோம்: “அப்பொழுது நீ அதைக் கண்டு முகமலர்வாய்; உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்; சமுத்திரத்தின் ஐஸ்வரியம் உன் வசம் திரும்பும். ஜாதியாரின் செல்வம் உன்னிடம் வரும்.”
யெகோவாவின் அமைப்பு முன்னேறி வருகிறது
14. (அ) பரலோக காரியங்களின் என்ன தரிசனத்தை எசேக்கியேல் கண்டார், என்ன கட்டளையை அவர் பெற்றார்? (ஆ) நவீன காலங்களில் யெகோவாவின் மக்கள் எதைப் பகுத்துணர்ந்தார்கள், என்ன கடமையை அவர்கள் உணர்ந்தார்கள்?
14 பொ.ச.மு. 613-ல், யெகோவாவின் பரலோக, இரதம்போன்ற அமைப்பு இயங்கிக்கொண்டிருப்பதை ஒரு தரிசனத்தில் எசேக்கியேல் கண்டார். (எசேக்கியேல் 1:4-28) அதன்பிறகு, யெகோவா அவரிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு.” (எசேக்கியேல் 3:4) இந்த 1997-ம் வருடத்தில், கடவுளுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு யெகோவாவின் பரலோக அமைப்பு விடாமல் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் பகுத்துணருகிறோம். ஆகவே, அந்த நோக்கங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லுவதற்கு நாம் இன்னும் தூண்டப்பட்டவர்களாக உணருகிறோம். அவருடைய நாளில், யெகோவாவால் நேரடியாக ஏவப்பட்ட வார்த்தைகளையே எசேக்கியேல் பேசினார். இன்று, யெகோவாவின் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளிலுள்ள வார்த்தைகளை நாம் பேசுகிறோம். அந்தப் புத்தகம் மனிதவர்க்கத்தினருக்காக எப்பேர்ப்பட்ட ஒரு செய்தியை வைத்திருக்கிறது! எதிர்காலத்தைக் குறித்து அநேகர் கவலைப்பட்டுக்கொண்டிருக்கையில், அவர்கள் கற்பனை செய்வதையும்விட காரியங்கள் படு மோசமாக இருக்கின்றன—அதேசமயத்தில், மிக மேம்பட்ட காரியங்கள் வரவிருக்கின்றன—என்பதை பைபிள் காண்பிக்கிறது.
15. இன்று பலர் நினைப்பதையும்விட ஏன் நிலைமைகள் மோசமாக இருக்கின்றன?
15 காரியங்கள் மோசமாகவே இருக்கின்றன, ஏனெனில் முந்தைய கட்டுரைகளில் நாம் கற்றுக்கொண்டபடி, கிறிஸ்தவ மண்டலமும் மற்ற அனைத்து பொய் மதங்களும், பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டது போல விரைவில் முற்றிலும் அழிக்கப்படும். மேலும், ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் கொண்ட ஒரு மூர்க்க மிருகமாக வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள முழு உலகளாவிய அரசியலும், எருசலேமை சுற்றிலுமிருந்த அநேக புறமத அண்டை தேசங்களைப் போலவே மிக விரைவில் அழிக்கப்படவிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 13:1, 2; 19:19-21) எசேக்கியேலின் நாளில், எருசலேமுக்கு வரவிருந்த அழிவின் கொடுங்கனவை யெகோவா தத்ரூபமாக வர்ணித்தார். ஆனால், இந்த உலகிற்கு நெருங்கிவரும் அழிவை மக்கள் பகுத்துணருகையில் அவருடைய வார்த்தைகள் மிகவும் அர்த்தமுள்ளவையாய் இருக்கும். எசேக்கியேலிடம் யெகோவா சொன்னார்: “மனுபுத்திரனே, உன் இடுப்பு நொறுங்கும்படி பெருமூச்சுவிடு; அவர்கள் கண்களுக்கு முன்பாக மனங்கசந்து பெருமூச்சுவிடு. நீ எதினிமித்தம் பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதினிமித்தமே; அதினால், இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலைவுண்ணும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.” (எசேக்கியேல் 21:6, 7; மத்தேயு 24:30) திகிலூட்டும் சம்பவங்கள் வெகு விரைவில் வரவிருக்கின்றன. உடன் மானிடருக்கான ஆழ்ந்த அக்கறையானது, நாம் எச்சரிப்பை ஒலிக்கும்படியும் வரவிருக்கும் யெகோவாவின் உக்கிரகோபத்தைப் பற்றிய ‘அறிக்கையை’ சொல்லும்படியும் நம்மைத் தூண்டுகிறது.
16. சாந்தகுணமுள்ளவர்களுக்கு, பலர் நினைப்பதையும்விட ஏன் நிலைமைகள் அதிக மேம்பட்டவையாக இருக்கின்றன?
16 அதே சமயத்தில், சாந்தகுணமுள்ளோருக்கு அவர்கள் கற்பனை செய்வதைக் காட்டிலும் காரியங்கள் மிகவும் மேம்பட்டவையாக இருக்கின்றன. எந்த விதத்தில்? இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார், இப்பொழுது கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக ஆட்சிசெய்கிறார். (1 தீமோத்தேயு 1:15; வெளிப்படுத்துதல் 11:15) தீர்க்கவே முடியாததாக தோன்றும் மனிதவர்க்கத்தின் பிரச்சினைகள் அந்தப் பரலோக ராஜ்யத்தின் மூலம் விரைவில் மேற்கொள்ளப்படும். மரணம், வியாதி, ஊழல், பசி, குற்றச்செயல் ஆகியவை கடந்தகால சம்பவங்களாக ஆகிவிடும், எந்த எதிர்ப்பும் இல்லாமல் கடவுளுடைய ராஜ்யம் ஒரு பரதீஸிய பூமியின்மீது ஆட்சிசெய்யும். (வெளிப்படுத்துதல் 21:3, 4) மனிதவர்க்கம் தேவ சமாதானத்தை—யெகோவா தேவனுடனும் ஒருவருக்கொருவருடனும் சமாதானமான உறவை—அனுபவித்து மகிழும்.—சங்கீதம் 72:7.
17. என்ன அதிகரிப்புகள் தேவ சமாதான தூதுவர்களின் இருதயங்களுக்கு சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது?
17 உலகத்தின் சில பாகங்களில், சாந்தகுணமுள்ள திரளான கூட்டத்தார் கவனத்தைக் கவரும் விதத்தில் தேவ சமாதானத்தின் இந்தச் செய்திக்குப் பிரதிபலித்து வருகிறார்கள். ஒருசில உதாரணங்களை மட்டும் குறிப்பிட, கடந்த வருடத்தில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 17-சதவீத அதிகரிப்பை உக்ரேன் அறிக்கை செய்தது. மொஸாம்பிக் 17-சதவீத அதிகரிப்பையும் லித்துவேனியா 29 சதவீத அதிகரிப்பையும் அறிக்கை செய்தது. ரஷ்யா 31-சதவீத அதிகரிப்பை பெற்றது, அல்பேனியா பிரஸ்தாபிகளில் 52-சதவீத அதிகரிப்பை அனுபவித்தது. தேவ சமாதானத்தை விரும்பி நீதியினிடமாக தங்களுடைய நிலைநிற்கையை எடுத்திருக்கிற நேர்மை இருதயமுள்ள நூறாயிரக்கணக்கான ஆட்களை இந்த அதிகரிப்புகள் பிரதிநிதித்துவம் செய்கின்றன. இத்தகைய வேகமான வளர்ச்சி முழு கிறிஸ்தவ சகோதரத்துவத்திற்கும் சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது.
18. மக்கள் செவிகொடுத்துக் கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி, நம்முடைய மனப்பான்மை என்னவாக இருக்கும்?
18 உங்களுடைய பிராந்தியத்தில் உள்ள மக்கள் உடனடியாக பிரதிபலிக்கிறார்களா? அப்படியானால், நாங்கள் உங்களுடன் சந்தோஷப்படுகிறோம். என்றபோதிலும், சில பிராந்தியங்களில், அக்கறையுள்ள நபர் ஒருவரை கண்டுபிடிப்பதற்கு முன்பு பல மணிநேர கடின வேலை தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட பிராந்தியங்களில் ஊழியம் செய்கிறவர்கள் தங்கள் கைகளை நெகிழவிட்டு விடுகிறார்களா அல்லது நம்பிக்கையிழந்து விடுகிறார்களா? இல்லை. அந்த இளம் தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் தன்னுடைய யூத சகவாசிகளுக்கு பிரசங்கிப்பதற்கு கடவுள் அவரை முதலாவதாக நியமித்தபோது அவர் சொன்ன பின்வரும் வார்த்தைகளை யெகோவாவின் சாட்சிகள் நினைவுகூருகிறார்கள்: “கலகவீட்டாராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறிய வேண்டும்.” (எசேக்கியேல் 2:5) எசேக்கியேலைப் போலவே, நாம் மக்களுக்கு, அவர்கள் கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி, தேவ சமாதானத்தைப் பற்றி தொடர்ந்து சொல்லுகிறோம். அவர்கள் செவிகொடுத்துக் கேட்டால், நாம் கிளர்ச்சியடைகிறோம். அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ளாதபோதும் நம்மை பரிகாசம் செய்யும்போதும், நம்மைத் துன்புறுத்தும்போதும்கூட, நாம் விடாமுயற்சியுடன் செய்கிறோம். நாம் யெகோவாவை நேசிக்கிறோம், பைபிள் சொல்லுகிறது: “அன்பு . . . சகலத்தையும் தாங்கும்.” (1 கொரிந்தியர் 13:4, 7) நாம் சகிப்புத்தன்மையுடன் பிரசங்கிப்பதால், யெகோவாவின் சாட்சிகள் யார் என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் நம்முடைய செய்தியை அறிந்திருக்கிறார்கள். முடிவு வரும்போது, தேவ சமாதானத்தை அனுபவிக்க யெகோவாவின் சாட்சிகள் தங்களுக்கு உதவ முயற்சி செய்தனர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
19. உண்மையான கடவுளுடைய ஊழியர்களாக, நாம் பெரிய சிலாக்கியமாக கருதும் பொக்கிஷம் என்ன?
19 யெகோவாவை சேவிப்பதைவிட வேறு பெரிய சிலாக்கியம் ஏதாகிலும் உண்டா? இல்லை! நம்முடைய மிகப் பெரிய மகிழ்ச்சி, கடவுளுடன் கொள்ளும் நம்முடைய உறவிலிருந்தும் அவருடைய சித்தத்தை செய்கிறோம் என்பதை அறிவதிலிருந்தும் வருகிறது. “கெம்பீர சத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.” (சங்கீதம் 89:15) மனிதவர்க்கத்தினருக்கு சமாதானத்தின் கடவுளுடைய தூதுவர்களாக இருப்பதன் சந்தோஷத்தை நாம் எப்பொழுதும் பொக்கிஷமாக கருதுவோமாக. வேலை முடிந்துவிட்டது என்று யெகோவா சொல்லும்வரை இந்த வேலையில் நம்முடைய பங்கை நாம் ஊக்கமாக செய்வோமாக.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ இன்று கடவுளுடைய சமாதான தூதுவர்கள் யார்?
◻ 1919-ல் மகா பாபிலோன் வீழ்ச்சியடைந்தது என நமக்கு எப்படித் தெரியும்?
◻ ‘திரள் கூட்டத்தாரின்’ முக்கிய அக்கறை என்ன?
◻ இன்று பெரும்பாலான மக்கள் நினைப்பதையும்விட ஏன் எதிர்காலம் அதிக இருண்டதாய் இருக்கிறது?
◻ நேர்மை இருதயமுள்ளோருக்கு, அவர்கள் கற்பனைசெய்து பார்ப்பதையும்விட எதிர்காலம் ஏன் அதிக மேம்பட்டதாக இருக்கக்கூடும்?
[பக்கம் 21-ன் படங்கள்]
மனித சமுதாயத்தின் சீர்கேட்டை அவர்கள் கவனிக்கையில், பயங்கரமானது சம்பவிக்கப்போகிறது என பலர் உணருகிறார்கள்
[பக்கம் 23-ன் படங்கள்]
இன்று பூமியில் இருப்பவர்களிலேயே தேவ சமாதான தூதுவர்களே மகிழ்ச்சியுள்ளவர்கள்