‘உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறார்’
“உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.” —லூக்கா 6:36.
1, 2. இரக்கம் என்பது மதிப்புமிக்க பண்பு என்பதை வேதபாரகரிடமும் பரிசேயர்களிடமும் தம்முடைய சீஷர்களிடமும் இயேசு கூறிய வார்த்தைகள் எவ்வாறு காண்பிக்கின்றன?
மோ சேயின் மூலமாகக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில் சுமார் 600 சட்டதிட்டங்கள் இருந்தன. இவற்றைக் கடைப்பிடிப்பது அவசியமானாலும், இரக்கம் காட்டுவதும் மிக முக்கியமானதாய் இருந்தது. மற்றவர்களிடம் இரக்கம் காட்டாதிருந்த பரிசேயர்களிடம் இயேசு கூறியதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். இரக்கம் காட்டாததற்காக இரண்டு சந்தர்ப்பங்களில் அவர்களைக் கண்டித்து, “பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்” என்று கடவுள் சொன்னதை அவர் சுட்டிக்காட்டினார். (மத்தேயு 9:10-13; 12:1-7; ஓசியா 6:6) தம்முடைய ஊழிய காலத்தின் முடிவில் இயேசு இவ்வாறு கூறினார்: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்.”—மத்தேயு 23:23.
2 இரக்கத்தை மிக முக்கியமான பண்பாக இயேசு கருதினார் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. “உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்” என்று தம்மைப் பின்பற்றியவர்களிடம் இயேசு கூறினார். (லூக்கா 6:36) என்றாலும், இவ்விஷயத்தில் ‘தேவனைப் பின்பற்ற’ விரும்பினால், இரக்கம் காட்டுவது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். (எபேசியர் 5:1) அதோடு, இரக்கம் காட்டுவதால் வரும் நன்மைகளைப் புரிந்துகொள்கையில், நம்முடைய வாழ்க்கையில் இந்தப் பண்பை அதிகமாக வெளிக்காட்ட நாம் தூண்டப்படுவோம்.
உதவி தேவைப்படுவோருக்கு இரக்கம்
3. இரக்கம் உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை நாம் ஏன் யெகோவாவிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டும்?
3 “கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். கர்த்தர் எல்லார் மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலுமுள்ளது” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 145:8, 9) யெகோவா ‘இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறார்.’ (2 கொரிந்தியர் 1:3) மற்றவர்களைப் பரிவுடன் நடத்துவதன் மூலம் இரக்கம் வெளிக்காட்டப்படுகிறது. இது கடவுளுடைய ஆளுமையில் முக்கிய இடத்தை வகிக்கிறது. இரக்கம் என்பது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை அவருடைய முன்மாதிரியிலிருந்தும் போதனைகளிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம்.
4. இரக்கத்தைப்பற்றி ஏசாயா 49:15 நமக்கு என்ன சொல்கிறது?
4 “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?” என்ற யெகோவாவின் வார்த்தைகளை ஏசாயா 49:15-ல் காணலாம். இவ்வசனத்தில் ‘இரங்குதல்’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தையோடு நெருங்கிய தொடர்புடைய வார்த்தைகள் மேற்குறிப்பிடப்பட்ட சங்கீதம் 145:8, 9-ல் இரக்கம் என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இரக்கம் காட்ட யெகோவாவைத் தூண்டுவது, பாலூட்டும் தாய் தன் குழந்தையிடம் காட்டும் கனிவான பாசத்திற்கு ஒப்பான ஓர் உணர்ச்சியே. ஒருவேளை அந்தக் குழந்தை பசியோடிருக்கலாம் அல்லது அதற்கு வேறெதாவது தேவைப்படலாம். இதை உணர்ந்ததும் அந்தத் தாய்க்குள்ளே பரிவும் கருணையும் சுரக்கின்றன. இதனால், தன் குழந்தையின் தேவையை அவள் பூர்த்திசெய்கிறாள். தாம் இரக்கம் காட்டும் நபரிடம் இத்தகைய கனிவான உணர்ச்சிகளையே யெகோவா வெளிக்காட்டுகிறார்.
5. தாம் “இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்” இருப்பதை இஸ்ரவேலரிடம் யெகோவா எவ்வாறு காண்பித்தார்?
5 உதவி தேவைப்படுவோரைப் பார்த்து மனதிற்குள் இரக்கப்படுவது பாராட்டுக்குரியதே. அதைவிட, அவர்களுக்கு நடைமுறை உதவி அளிப்பது அதிமுக்கியமாகும். கடவுளுடைய உண்மை வணக்கத்தார் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னால் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது யெகோவா என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, . . . பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்” என்று மோசேயிடம் கூறினார். (யாத்திராகமம் 3:7, 8) இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாகி சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு, “நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்களை எகிப்தியர் கைக்கும், உங்களை இறுகப்பிடித்த எல்லா ராஜ்யத்தாரின் கைக்கும் நீங்கலாக்கிவிட்டேன்” என்று யெகோவா அவர்களுக்கு நினைப்பூட்டினார். (1 சாமுவேல் 10:18) கடவுளின் நீதியான தராதரங்களைப் பின்பற்றாமல் வழிவிலகி போனதால், இஸ்ரவேலர் அடிக்கடி இக்கட்டுகளில் சிக்கிக்கொண்டார்கள். இருப்பினும், யெகோவா அவர்கள்மீது இரக்கப்பட்டு, திரும்பத் திரும்ப அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். (நியாயாதிபதிகள் 2:11-16; 2 நாளாகமம் 36:15) உதவி தேவைப்படுவோருக்கும் ஆபத்தில் அல்லது கஷ்டத்தில் சிக்கியிருப்போருக்கும் அன்பான கடவுள் எப்படி உதவுகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. யெகோவா “இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்” இருக்கிறார்.—எபேசியர் 2:4.
6. இரக்கம் காட்டுவதில் இயேசு எவ்வாறு தம் தகப்பனைப் பின்பற்றினார்?
6 இயேசு பூமியில் இருந்தபோது இரக்கம் காட்டுவதில் தம் தகப்பனை அப்படியே பின்பற்றினார். கண்பார்வையற்ற இருவர் அற்புதத்தின்மூலம் தங்களுக்குப் பார்வையளிக்கும்படி இயேசுவிடம் மன்றாடினார்கள். “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்” என்று அவர்கள் கெஞ்சியபோது இயேசு என்ன செய்தார்? அவர்கள் வேண்டுகோளை நிறைவேற்றினார், ஆனால் அதை அவர் இயந்திரத்தனமாகச் செய்யவில்லை. மாறாக, ‘இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்தார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 20:30-34) கண்பார்வையற்றோருக்கும் பிசாசு பிடித்தவர்களுக்கும் குஷ்டரோகிகளுக்கும் பிசாசினால் வாதிக்கப்பட்ட பிள்ளைகளுடைய பெற்றோருக்கும் இயேசுவின் அற்புதங்கள் விடுதலையைக் கொண்டுவந்தன; இத்தனை அநேக அற்புதங்களைச் செய்ய அவரைத் தூண்டியது இரக்கமே.—மத்தேயு 9:27; 15:22; 17:15; மாற்கு 5:18, 19; லூக்கா 17:12, 13.
7. யெகோவா தேவனும் அவருடைய குமாரனும் வைத்த முன்மாதிரியிலிருந்து இரக்கத்தைக் குறித்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
7 யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் வைத்த முன்மாதிரியிலிருந்து, இரக்கம் என்பது இரண்டு அம்சங்களை உட்படுத்துவது தெரிகிறது. உதவி தேவைப்படும் நிலையில் இருப்போரைப் பார்க்கையில் உள்ளத்தில் பரிவும் கருணையும் ஏற்படுவதும், அவர்களுக்குத் தக்க உதவி அளிப்பதும் அந்த இரண்டு அம்சங்கள் ஆகும். இரக்கமுள்ளவர்களாய் இருக்க இவ்விரண்டு அம்சங்களையும் வெளிக்காட்ட வேண்டியது அவசியம். இரக்கம் காட்டுவது என்பது உதவி தேவைப்படுவோருக்குத் தயவுகாட்டுவதைக் குறிக்கவே பெரும்பாலும் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நீதி வழங்கும் விஷயத்தில் எவ்வாறு இரக்கம் காட்டப்படுகிறது? தகுந்த தண்டனை கொடுக்காமல் விட்டுவிடுவதை அது உட்படுத்துகிறதா?
பாவிகளிடம் இரக்கம்
8, 9. பத்சேபாளுடன் தாவீது பாவம் செய்த பிறகு, அவருக்குக் காட்டப்பட்ட இரக்கம் எதை உட்படுத்தியது?
8 பூர்வ இஸ்ரவேலை ஆண்ட தாவீது ராஜா, பத்சேபாளுடன் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டதைக் குறித்து நாத்தான் தீர்க்கதரிசி அவரிடம் பேசிய பிறகு என்ன நடந்தது? தாவீது மனந்திரும்பி பின்வருமாறு ஜெபித்தார்: “தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பித்தேன்.”—சங்கீதம் 51:1-4.
9 தன் தவறுக்காக தாவீது உள்ளப்பூர்வமாக வருந்தினார். அவருடைய பாவத்தை யெகோவா மன்னித்து, அவரும் பத்சேபாளும் பெற வேண்டியதைவிட குறைவான தண்டனையையே அளித்தார். நியாயப்பிரமாணத்தின்படி அவர்கள் இருவரும் கொல்லப்பட்டிருக்க வேண்டும். (உபாகமம் 22:22) தாங்கள் செய்த பாவத்தின் விளைவுகளிலிருந்து அவர்கள் முற்றிலும் தப்பிவிடாதபோதிலும் அவர்களுடைய உயிர் பாதுகாக்கப்பட்டது. (2 சாமுவேல் 12:13) கடவுள் காட்டும் இரக்கத்தில் பாவத்தை மன்னிப்பதும் அடங்கும். எனினும், தகுந்த தண்டனையை அளிக்காமல் அவர் விட்டுவிடுவதில்லை.
10. நியாயந்தீர்க்கையில் யெகோவா இரக்கம் காட்டினாலும், நாம் ஏன் அதை சாக்காகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது?
10 மனிதர்கள் அனைவருமே மரணத்திற்குத் தகுந்தவர்கள். ஏனெனில், ‘ஒரே மனுஷனாலே [ஆதாமினாலே] பாவம் . . . உலகத்திலே பிரவேசித்தது,’ அந்த “பாவத்தின் சம்பளம் மரணம்.” (ரோமர் 5:12; 6:23) நம்மை நியாயந்தீர்க்கையில் யெகோவா இரக்கம் காட்டுவதற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம். என்றாலும், கடவுளுடைய இரக்கத்தை தவறு செய்வதற்கான சாக்காகப் பயன்படுத்திக்கொள்ளாதபடி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். “அவர் [யெகோவாவின்] வழிகளெல்லாம் நியாயம்” என்று உபாகமம் 32:4 கூறுகிறது. இரக்கம் காட்ட தீர்மானிக்கையில், நீதி சம்பந்தமான தம்முடைய பரிபூரண நெறிமுறைகளை யெகோவா மீறுவதில்லை.
11. பத்சேபாளுடன் தாவீது செய்த பாவத்தைப் பொறுத்ததில், யெகோவா எவ்வாறு நியாயத்திற்கு உரிய மதிப்பைக் காட்டினார்?
11 தாவீது, பத்சேபாளின் விஷயத்தில், அவர்களுடைய மரண தண்டனை குறைக்கப்படுவதற்கு முன் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டியிருந்தது. இவ்வாறு மன்னிக்க இஸ்ரவேலிலிருந்த நியாயாதிபதிகளுக்கு யெகோவா அதிகாரம் அளிக்கவில்லை. அவர்கள் இந்த வழக்கை விசாரித்திருந்தால், மரண தண்டனை விதிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இருந்திருக்காது. ஏனெனில், நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டிருந்த தண்டனை அதுதான். என்றாலும், தாவீதோடு யெகோவா உடன்படிக்கை செய்திருந்ததால், அவருடைய பாவத்தை மன்னிப்பதற்கு வழி இருக்கிறதா என்று பார்த்தார். (2 சாமுவேல் 7:12-16) எனவே, ‘சர்வலோக நியாயாதிபதியும்,’ ‘இருதயத்தைச் சோதிப்பவருமான’ யெகோவா தேவனே இவ்விஷயத்தில் நீதி வழங்கினார். (ஆதியாகமம் 18:25; 1 நாளாகமம் 29:17) கடவுளால் தாவீதின் இருதயத்தில் இருந்ததைத் துல்லியமாகப் பார்க்கவும், அவருடைய மனந்திரும்புதல் எந்தளவு உண்மையானது என்பதை எடைபோடவும், மன்னிக்கவும் முடிந்தது.
12. பாவமுள்ள மனிதர் எவ்வாறு கடவுளுடைய இரக்கத்திலிருந்து பயன் அடைய முடியும்?
12 வழிவழியாக நாம் பெற்றிருக்கிற பாவத்தின் சம்பளம் மரணமே; இதிலிருந்து விடுதலை பெற வழி செய்வதன்மூலம் யெகோவா இரக்கத்தைக் காட்டுகிறார்; இது அவருடைய நீதிக்கு இசைவானதே. தம்முடைய நீதியான நெறிமுறைகளை மீறாமல் பாவ மன்னிப்பிற்கு வழிசெய்வதற்காக தம்முடைய மகனான இயேசு கிறிஸ்துவை மீட்கும் பலியாக யெகோவா அளித்தார். இதுபோன்ற மகத்தான விதத்தில் இதுவரை யாருமே இரக்கத்தை வெளிக்காட்டியதில்லை. (மத்தேயு 20:28; ரோமர் 6:22, 23) கடவுளுடைய இரக்கத்திலிருந்து பயன் அடைய நாம் ‘குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்க’ வேண்டும். அப்போதுதான் வழிவழியாக நாம் பெற்ற பாவத்தின் தண்டனையான மரணத்திலிருந்து பாதுகாக்கப்பட முடியும்.—யோவான் 3:16, 36.
இரக்கமும் நீதியுமுள்ள கடவுள்
13, 14. கடவுளுடைய இரக்கம் அவருடைய நீதியின் வலிமையை குறைத்துவிடுகிறதா? விளக்கவும்.
13 யெகோவாவின் இரக்கம் அவருடைய நீதியான நெறிமுறைகளை மீறாதபோதிலும், ஏதாவதொரு விதத்தில் அவருடைய நீதிக்குப் பங்கம் விளைவிக்கிறதா? கடவுளுடைய நீதியின் வலிமையை அவருடைய இரக்கம் குறைத்துவிடுகிறதா? நிச்சயம் இல்லை.
14 ஓசியா தீர்க்கதரிசி மூலமாக இஸ்ரவேலரிடம் யெகோவா பின்வருமாறு கூறினார்: “நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்.” (ஓசியா 2:19) யெகோவாவின் இரக்கம், எப்போதும் நீதி உட்பட அவருடைய எல்லா பண்புகளுக்கும் இசையவே இருக்கிறது என்பதை இந்த வார்த்தைகள் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. யெகோவா, ‘இரக்கமும், கிருபையுமுள்ள . . . தேவன். . . . அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாதவர்.’ (யாத்திராகமம் 34:6, 7) யெகோவா இரக்கமும் நீதியுமுள்ள கடவுள். அவரைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம்.” (உபாகமம் 32:4) கடவுளுடைய இரக்கம் பூரணமானது; அதேபோல, அவருடைய நீதியும் பூரணமானது. இவற்றில் ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் உயர்ந்ததல்ல. ஒன்று மற்றொன்றின் வலிமையைக் குறைப்பதுமல்ல. மாறாக, இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்திசைவாகவே இருக்கின்றன.
15, 16. (அ) கடவுளுடைய நீதி கொடூரமானதல்ல என்பதை எது காட்டுகிறது? (ஆ) யெகோவா இந்தப் பொல்லாத உலகை நியாயந்தீர்க்கையில், அவருடைய வணக்கத்தார் எதில் நிச்சயமாய் இருக்கலாம்?
15 யெகோவாவின் நீதி கொடூரமானதல்ல. நீதி பெரும்பாலும் சட்டத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது; நியாயந்தீர்க்கும்போது பொதுவாக தவறு செய்தவருக்குத் தகுந்த தண்டனை அளிக்கப்படுகிறது. ஆனால், கடவுள் நீதி வழங்கும்போது, அது தகுதியானவர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதிலும் விளைவடையலாம். உதாரணமாக, சோதோம் கொமோரா பட்டணங்களில் இருந்த பொல்லாதவர்கள் அழிக்கப்பட்டபோது, முற்பிதாவாகிய லோத்தும் அவருடைய இரண்டு மகள்களும் காப்பாற்றப்பட்டார்கள்.—ஆதியாகமம் 19:12-26.
16 யெகோவா தற்போதைய பொல்லாத உலகை நியாயந்தீர்க்கையில், “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்த” உண்மை வணக்கத்தாரான ‘திரள் கூட்டத்தாரை’ பாதுகாப்பார் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம். இவ்வாறு, அவர்கள் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிப்பிழைப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9-14.
ஏன் இரக்கம் காட்ட வேண்டும்?
17. இரக்கம் காட்டுவதற்கான ஒரு முக்கிய காரணம் எது?
17 யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் வைத்த முன்மாதிரியிலிருந்து உண்மையான இரக்கம் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொள்கிறோம். இரக்கம் காட்டுவதற்கான முக்கிய காரணம் ஒன்றை நீதிமொழிகள் 19:17 குறிப்பிடுகிறது. அது சொல்வதாவது: “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.” மற்றவர்களிடம் இரக்கம் காட்டுவதன்மூலம் அவரையும் அவருடைய மகனையும் நாம் பின்பற்றுகையில், அதைக் கண்டு யெகோவா மகிழ்கிறார். (1 கொரிந்தியர் 11:1) அதோடு, மற்றவர்களும் இரக்கம் காட்ட தூண்டுதல் பெறுகிறார்கள். ஏனெனில், நாம் இரக்கம் காட்டும்போது, பெரும்பாலும் மற்றவர்களும் நம்மிடம் இரக்கம் காட்டுவார்கள்.—லூக்கா 6:38.
18. இரக்கம் காட்ட நாம் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?
18 இரக்கம் என்பது பல நற்பண்புகளின் கலவையாகும். தயவு, அன்பு, கருணை ஆகியவற்றை அது உட்படுத்துகிறது. பரிவு, அனுதாபம் ஆகிய கனிவான உணர்ச்சிகளே இரக்கம் காட்ட ஒருவரைத் தூண்டுகின்றன. கடவுள் காட்டும் இரக்கம் அவருடைய நீதியின் வலிமையைக் குறைத்துவிடுவதில்லை. என்றாலும், யெகோவா கோபிக்க தாமதிக்கிறார், தவறுசெய்தவர்கள் மனந்திரும்புவதற்காகப் பொறுமையுடன் போதுமான கால அவகாசம் அளிக்கிறார். (2 பேதுரு 3:9, 10) இவ்விதமாக, இரக்கம் என்பது பொறுமையோடும், நீடிய பொறுமையோடும் தொடர்புடையதாக இருக்கிறது. இரக்கம் காட்டுவதில் அநேக நற்பண்புகள் அடங்கியுள்ளன. அதில் பரிசுத்த ஆவியின் கனியும் அடங்கும். எனவே, இத்தகைய குணங்களை வளர்த்துக்கொள்ள இரக்கமுள்ள செயல்கள் வாய்ப்பளிக்கின்றன. (கலாத்தியர் 5:22, 23) மற்றவர்களிடம் இரக்கம் காட்ட முயற்சி செய்வது மிக முக்கியம், அல்லவா?
“இரக்கமுள்ளோர் பாக்கியவான்கள்”
19, 20. எவ்விதத்தில் நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்?
19 நாம் ஏன் மற்றவர்களை எப்போதும் இரக்கத்துடன் நடத்த வேண்டும் என்பதற்கான காரணத்தை சீஷனாகிய யாக்கோபு சொல்கிறார். அவர் இவ்வாறு எழுதினார்: “நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.” (யாக்கோபு 2:13ஆ) யெகோவாவை வணங்குபவர் பிறரிடம் காட்டும் இரக்கத்தையே யாக்கோபு இங்கே குறிப்பிட்டார். ஒருவர், ‘தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிக்க’ வேண்டிய தருணம் வருகையில், அவர் இரக்கம் காட்டிய சந்தர்ப்பங்களை யெகோவா கணக்கில் எடுத்துக்கொள்கிறார்; தம்முடைய குமாரனின் கிரய பலியின் அடிப்படையில் அவரை மன்னிக்கிறார்; இவ்வாறு, நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும். (ரோமர் 14:12) பத்சேபாளுடன் தாவீது பாவம் செய்த விஷயத்தில், அவருக்கு இரக்கம் காட்டப்பட்டதற்கு ஒரு காரணம், அவர் மற்றவர்களிடம் இரக்கமுள்ளவராய் நடந்துகொண்டதே என்பதில் சந்தேகமில்லை. (1 சாமுவேல் 24:4-7) மறுபட்சத்தில், “இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்.” (யாக்கோபு 2:13அ) ‘மரணத்திற்குப் பாத்திரமானவர்களாய்’ கடவுள் கருதுபவர்களில் ‘இரக்கமில்லாதவர்களும்’ உட்படுவதில் எந்த ஆச்சரியமுமில்லை!—ரோமர் 1:31, 32.
20 தம்முடைய மலைப்பிரசங்கத்தில் இயேசு இவ்வாறு கூறினார்: “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.” (மத்தேயு 5:7) கடவுளின் இரக்கத்தைப் பெற விரும்புவோர் தாங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதை இந்த வசனம் ஆணித்தரமாகக் காட்டுகிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எப்படித் தொடர்ந்து இரக்கத்தைக் காட்டுவது என்பதை அடுத்த கட்டுரையில் காணலாம்.
நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• இரக்கம் என்றால் என்ன?
• எவ்விதங்களில் இரக்கம் வெளிக்காட்டப்படுகிறது?
• எவ்விதத்தில் யெகோவா இரக்கமும் நீதியுமுள்ள கடவுளாய் இருக்கிறார்?
• நாம் ஏன் இரக்கம் காட்ட வேண்டும்?
[பக்கம் 21-ன் படம்]
குழந்தையிடம் தாய் காட்டும் கனிவான பாசத்திற்கு ஒப்பான உணர்ச்சியை உதவி தேவைப்படுவோரிடம் யெகோவா காட்டுகிறார்
[பக்கம் 23-ன் படம்]
இயேசுவின் அற்புதங்களிலிருந்து இரக்கத்தைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
[பக்கம் 24-ன் படம்]
தாவீதுக்கு இரக்கம் காட்டியதன்மூலம் தம் நீதியான நெறிமுறைகளை யெகோவா மீறினாரா?
[பக்கம் 25-ன் படம்]
பாவமுள்ள மனிதரிடம் யெகோவா காட்டும் இரக்கம் அவருடைய நீதிக்கு இசைவாகவே இருக்கிறது