‘பிழைக்கும்படிக்கு ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள்’
‘நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உங்களுக்குமுன் வைத்தேன் . . . ஆகையால், நீங்கள் பிழைக்கும்படிக்கு ஜீவனைத் தெரிந்துகொள்வீர்களாக.’—உபாகமம் 30:19.
1, 2. மனிதன் எவ்விதங்களில் தேவ சாயலாகப் படைக்கப்பட்டான்?
“நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக.” கடவுள் சொன்ன இவ்வார்த்தைகள் பைபிளின் முதல் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதன்படி, “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவ சாயலாகவே சிருஷ்டித்தார்” என்று ஆதியாகமம் 1:26, 27-ல் வாசிக்கிறோம். இதன் காரணமாகத்தான் முதல் மனிதன் பூமியிலுள்ள மற்ற எல்லாப் படைப்புகளிலிருந்தும் வித்தியாசப்பட்டவனாய் இருந்தான். தன்னுடைய படைப்பாளரைப் போலவே பகுத்தறியவும் அன்பு, நீதி, ஞானம், வல்லமை ஆகிய பண்புகளை வெளிக்காட்டவும் அவனால் முடிந்தது. தன் பரலோகத் தந்தையைப் பிரியப்படுத்துகிறதும், அதேசமயத்தில் அவனுக்குப் பிரயோஜனமாயிருக்கிறதுமான தீர்மானங்களை எடுக்க உதவும் மனசாட்சி அவனுக்கு இருந்தது. (ரோமர் 2:15) சுருங்கச்சொன்னால், சுயமாகத் தெரிவுசெய்யும் சுதந்திரம் ஆதாமுக்கு இருந்தது. இவ்வாறு, தமது பூமிக்குரிய மகன் உருவாக்கப்பட்டிருந்த விதத்தைக் கவனித்த யெகோவா தமது கைவண்ணத்தைக் குறித்து இவ்வாறு கூறினார்: ‘மிகவும் நன்றாயிருக்கிறது.’—ஆதியாகமம் 1:31; சங்கீதம் 95:6.
2 ஆதாமின் சந்ததியரான நாமும்கூட தேவ சாயலாகவும் அவரது ரூபத்தின்படியும் படைக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே, தெரிவுசெய்கிற சுதந்திரம் நமக்கு உண்மையிலேயே இருக்கிறதா? ஆம், இருக்கிறது. நடக்கப்போவதை யெகோவாவால் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமென்றாலும், நம்முடைய ஒவ்வொரு செயலையும் அதன் பின்விளைவுகளையும் அவர் முன்கூட்டியே தீர்மானிப்பதில்லை. அவ்வாறு தீர்மானிப்பதன் மூலம், சுயமாகத் தெரிவுசெய்யும் நம்முடைய சுதந்திரத்தில் அவர் ஒருபோதும் குறுக்கிட விரும்புவதில்லை. சரியான தெரிவுகளைச் செய்வதற்கு இந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு முதலாவது இஸ்ரவேல் தேசத்தாரிடமிருந்து இப்போது நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்.—ரோமர் 15:4.
இஸ்ரவேலருக்குத் தெரிவுசெய்யும் சுதந்திரம்
3. பத்து கட்டளைகளில் முதல் கட்டளை எது, அதற்குக் கீழ்ப்படிவதை விசுவாசமிக்க இஸ்ரவேலர் ஏன் தெரிவுசெய்தார்கள்?
3 இஸ்ரவேலரிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.” (உபாகமம் 5:6) இந்த வார்த்தைகளைச் சந்தேகிக்க இஸ்ரவேலர்களுக்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை; ஏனெனில் பொ.ச.மு. 1513-ல், எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து அவர்கள் அற்புதகரமாக விடுவிக்கப்பட்டிருந்தார்கள். பத்து கட்டளைகளில் முதல் கட்டளையில், “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்” என்று மோசேயின் மூலம் யெகோவா தெரிவித்தார். (யாத்திராகமம் 20:1, 3) அப்போது, இஸ்ரவேலர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதையே தெரிவுசெய்தார்கள். யெகோவாவை மட்டுமே மனப்பூர்வமாய் வணங்கினார்கள்.—யாத்திராகமம் 20:5; எண்ணாகமம் 25:11.
4. (அ) இஸ்ரவேலருக்கு முன் வைக்கப்பட்டிருந்த என்ன தெரிவைப் பற்றி மோசே நினைப்பூட்டினார்? (ஆ) இன்று நமக்கு முன் என்ன தெரிவு இருக்கிறது?
4 சுமார் 40 வருடங்கள் கழித்து, இஸ்ரவேலரின் அடுத்த சந்ததியினருக்கு முன் இருக்கிற ஒரு தெரிவைப் பற்றி மோசே அழுத்தம்திருத்தமாக நினைப்பூட்டினார். ‘நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உங்களுக்குமுன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால், நீங்களும் உங்கள் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீங்கள் ஜீவனைத் தெரிந்துகொள்வீர்களாக’ என்று அவர் அறிவித்தார். (உபாகமம் 30:19) அதேபோல் இன்றும் நமக்கு முன்பாக ஒரு தெரிவு இருக்கிறது. யெகோவாவுக்கு நாம் உண்மையோடு சேவை செய்து நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமல்போய் அதன் மோசமான விளைவுகளை அனுபவிக்கலாம். வெவ்வேறு தெரிவுகளைச் செய்த இருவருடைய உதாரணங்களை இப்போது கவனியுங்கள்.
5, 6. யோசுவா என்ன தெரிவைச் செய்தார், அதனால் என்ன பலன் கிடைத்தது?
5 பொ.ச.மு. 1473-ல், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலரை யோசுவா வழிநடத்தினார். தான் மரிப்பதற்கு முன், அந்தத் தேசத்தார் அனைவரையும் நோக்கி வலிமைமிக்க விதத்தில் இவ்வாறு அறிவுறுத்தினார்: ‘யெகோவாவைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ?’ பின்னர், ‘நானும் என் வீட்டாருமோவென்றால், யெகோவாவையே சேவிப்போம்’ என தன் குடும்பத்தாரின் தீர்மானத்தைப் பற்றி கூறினார்.—யோசுவா 24:15.
6 சில காலத்திற்கு முன்பு, யோசுவாவைப் பலங்கொண்டு திடமனதாயிருக்குமாறு யெகோவா ஊக்கப்படுத்தினார், அதோடு தம்முடைய நியாயப்பிரமாணத்தைவிட்டு விலகாதிருக்குமாறும் அறிவுறுத்தினார். நியாயப்பிரமாணப் புத்தகத்தை இரவும் பகலும் வாசித்தால் யோசுவா தன் வழியை வாய்க்கப்பண்ணுவார் என்று அவர் கூறினார். (யோசுவா 1:7, 8) யோசுவாவும் அதையே செய்து வெற்றிகண்டார். யோசுவா செய்த தெரிவு அபரிமிதமான ஆசீர்வாதங்களை அவருக்கு அள்ளித்தந்தது. ‘யெகோவா இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று’ என அவர் அறிவித்தார்.—யோசுவா 21:45.
7. ஏசாயாவின் நாளில், சில இஸ்ரவேலர் என்ன தெரிவைச் செய்தார்கள், அதன் விளைவு என்ன?
7 மறுபட்சத்தில், சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிற்பாடு இஸ்ரவேலில் இருந்த சூழ்நிலையைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அந்தச் சமயத்திற்குள், அநேக இஸ்ரவேலர் புறமதப் பழக்கவழக்கங்களில் ஈடுபட ஆரம்பித்திருந்தார்கள். உதாரணமாக, வருடத்தின் கடைசி தினத்தன்று, ஜனங்கள் ஒன்றுகூடி விருந்துகொண்டாடினார்கள்; அறுசுவை உணவையும் இனிப்பான திராட்சரசத்தையும் அருந்தினார்கள். ஆனால் அது குடும்பங்களில் செய்யப்பட்ட விருந்தாக மட்டுமே இருக்கவில்லை, இரண்டு புறமத தெய்வங்களைக் கெளரவித்த மதச் சடங்காகவும் இருந்தது. அந்த அவிசுவாச செயலைக் கடவுள் எப்படிக் கருதினார் என்பதை ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு பதிவுசெய்தார்: நீங்கள், ‘யெகோவாவை விட்டுவிலகிச் செல்கிற ஆட்கள், என் பரிசுத்த மலையை மறக்கிறவர்கள், அதிர்ஷ்ட தெய்வத்துக்கு விருந்துபடைத்து, விதியின் தெய்வத்துக்குத் திராட்சரசத்தை வார்க்கிறவர்கள்.’ அந்த வருடத்தின் அறுவடை, யெகோவாவுடைய ஆசீர்வாதத்தின் பேரில் அல்லாமல் ‘அதிர்ஷ்ட தெய்வத்தையும்’ ‘விதியின் தெய்வத்தையும்’ திருப்திப்படுத்துவதிலேயே சார்ந்திருக்கிறதென அந்த ஜனங்கள் நம்பினார்கள். ஆனால் உண்மையில், அவர்களுடைய கலகப் போக்கும், தவறான தெரிவும் சோகமான முடிவுக்கே வித்திட்டன. “உங்களை நான் பட்டயத்துக்கு எண்ணிக்கொடுப்பேன்; நீங்கள் அனைவரும் கொலை செய்யப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் மறு உத்தரவு கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள்” என்று யெகோவா அறிவித்தார். (ஏசாயா 65:11, 12; NW) அவர்களுடைய ஞானமற்ற தெரிவு அவர்களை அழிவுக்கு வழிநடத்தியது, விதியின் தெய்வத்தாலும் அதிர்ஷ்ட தெய்வத்தாலும் அதைத் தடுத்துநிறுத்த முடியவில்லை.
சரியான தெரிவைச் செய்தல்
8. உபாகமம் 30:20-ன்படி, சரியான தெரிவைச் செய்வதில் என்ன உட்பட்டிருக்கிறது?
8 ஜீவனைத் தெரிந்துகொள்ளும்படி இஸ்ரவேலரை மோசே அறிவுறுத்தியபோது, அதற்காக அவர்கள் எடுக்க வேண்டிய மூன்று படிகளைச் சுட்டிக்காட்டினார். ‘உன் தேவனாகிய யெகோவாவில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக’ என்று அவர் கூறினார். (உபாகமம் 30:20) நாம் சரியான தெரிவைச் செய்வதற்காக அவை ஒவ்வொன்றையும் இப்போது ஆராய்ந்து பார்க்கலாம்.
9. யெகோவாமீது அன்புகூருவதை நாம் எப்படி வெளிக்காட்டலாம்?
9 நம் தேவனாகிய யெகோவாமீது அன்புகூருதல்: யெகோவாமீது நாம் அன்புகூர்ந்தால் அவருக்குச் சேவை செய்வதற்கான தெரிவைச் செய்வோம். இஸ்ரவேலருடைய நாளில் வாழ்ந்த சிலருடைய எச்சரிப்பூட்டும் உதாரணங்களைக் கவனிப்பதன் மூலம் ஒழுக்கக்கேடாக நடக்கத் தூண்டுகிற எல்லாவித சபலங்களையும் நாம் எதிர்ப்போம்; அதோடு, பொருளாசை எனும் புதைமணலில் நம்மைப் புதைத்துவிடக்கூடிய வாழ்க்கைப் பாணிகளையும் தவிர்ப்போம். (1 கொரிந்தியர் 10:11; 1 தீமோத்தேயு 6:6-10) அதோடு, யெகோவாவைப் பற்றிக்கொண்டு அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வோம். (யோசுவா 23:8; சங்கீதம் 119:5, 8) இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு முன் மோசே இவ்வாறு அவர்களை அறிவுறுத்தினார்: “நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன். ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்.” (உபாகமம் 4:5, 6) நம்முடைய வாழ்க்கையில் யெகோவாவுடைய சித்தத்தைச் செய்வதற்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் அவர்மீது அன்புகூருவதை நாம் வெளிக்காட்டலாம்; அதற்கு இதுவே தக்க சமயம். அந்தத் தெரிவைச் செய்தால் நிச்சயமாக நாம் ஆசீர்வதிக்கப்படுவோம்.—மத்தேயு 6:33.
10-12. நோவாவின் நாளில் சம்பவித்ததைப் பற்றிச் சிந்திக்கையில் என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்?
10 கடவுளுடைய சத்தத்திற்குச் செவிசாய்த்தல்: நோவா ‘நீதியைப் பிரசங்கித்தார்.’ (2 பேதுரு 2:5) ஜலப்பிரளயத்திற்கு முன் வாழ்ந்துகொண்டிருந்த கிட்டத்தட்ட எல்லா ஜனங்களுமே நோவா விடுத்த எச்சரிப்புகளுக்கு ‘செவிசாய்க்கவே’ இல்லை, அவர்களுடைய கவனம் சிதறடிக்கப்பட்டிருந்தது. விளைவு? ‘ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோனது.’ நம்முடைய நாளின்போது, அதாவது ‘மனுஷகுமாரனின் பிரசன்னத்தின்போது’ நிலைமை அதுபோலவே இருக்குமென இயேசு எச்சரித்தார். நோவாவின் நாளில் ஏற்பட்ட அழிவு, இன்று கடவுளுடைய செய்திக்குச் செவிசாய்க்க விரும்பாத ஜனங்களுக்குக் கடும் எச்சரிக்கையாய் இருக்கிறது.—மத்தேயு 24:39; NW.
11 கடவுளுடைய நவீன நாளைய ஊழியர்கள் விடுக்கும் தெய்வீக எச்சரிப்புக்குச் செவிசாய்க்காவிட்டால் என்ன நேரிடும் என்பதை, அந்த எச்சரிப்பைப் பரியாசம் செய்பவர்கள் உணர வேண்டும். அத்தகைய பரியாசக்காரர்களைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.”—2 பேதுரு 3:3-7.
12 இந்தப் பரியாசக்காரர்களது தெரிவையும், நோவா மற்றும் அவருடைய குடும்பத்தார் செய்த தெரிவையும் வேறுபடுத்திப் பாருங்கள். ‘விசுவாசத்தினால் நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்து தேவ எச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, . . . பேழையை உண்டுபண்ணினார்.’ அந்த எச்சரிப்புக்குச் செவிசாய்த்தது அவருடைய குடும்பத்தாரின் உயிரையே காப்பாற்றியது. (எபிரெயர் 11:7) ஆகையால், கடவுளுடைய செய்தியைத் தீவிரமாய்க் கேட்டு, அதற்கு முழுமையாய்க் கீழ்ப்படிவோமாக.—யாக்கோபு 1:19, 22-25.
13, 14. (அ) ‘யெகோவாவைப் பற்றிக்கொள்வது’ ஏன் அதிமுக்கியம்? (ஆ) ‘நம்முடைய குயவரான’ யெகோவா நம்மை வடிவமைப்பதற்கு நாம் எப்படி அனுமதிக்க வேண்டும்?
13 யெகோவாவைப் பற்றிக்கொண்டிருத்தல்: ‘ஜீவனைத் தெரிந்துகொண்டு பிழைப்பதற்கு,’ யெகோவாமீது அன்புகூர்ந்து, அவருடைய சத்தத்திற்குச் செவிசாய்ப்பது மட்டுமல்லாமல், ‘அவரைப் பற்றிக்கொள்ளவும்’ வேண்டும், அதாவது அவருடைய சித்தத்தை விடாதுசெய்யவும் வேண்டும். ‘உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்வீர்கள்’ என்று இயேசு சொன்னார். (லூக்கா 21:19) இதுசம்பந்தமாக நாம் செய்யும் தெரிவு, உண்மையில் நம் இருதயத்திலுள்ளதையே வெளிப்படுத்துகிறது. நீதிமொழிகள் 28:14 இவ்வாறு குறிப்பிடுகிறது: “எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.” இதற்கு ஓர் உதாரணம்தான் பார்வோன். பூர்வ எகிப்தின் மீது ஒவ்வொரு வாதையாக, பத்து வாதைகள் வந்தபோது, பார்வோன் தன் இருதயத்தைக் கடினப்படுத்தினானே ஒழிய, தேவபயத்தை வெளிக்காட்டவில்லை. கீழ்ப்படியாதிருக்கும்படி பார்வோனை யெகோவா கட்டாயப்படுத்தவில்லை, ஆனால் ஒரு தெரிவைச் செய்வதற்கே அந்த அகங்கார அரசனை அனுமதித்தார். எப்படியிருந்தாலும், யெகோவாவின் சித்தம் நிறைவேற்றப்பட்டது; பார்வோனைக் குறித்த யெகோவாவின் கண்ணோட்டத்தை அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு விளக்கினார்: “என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.”—ரோமர் 9:17.
14 இஸ்ரவேலர் பார்வோனின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு சொன்னார்: ‘யெகோவாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர் [“நீரே எங்கள் குயவர்,” NW], நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.’ (ஏசாயா 64:8) தனிப்பட்ட படிப்பின் மூலமும், யெகோவாவுடைய வார்த்தையைப் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலமும் யெகோவா நம்மை வடிவமைப்பதற்கு அனுமதிக்கும்போது, புதிய சுபாவத்தைப் படிப்படியாக நாம் தரித்துக்கொள்வோம். அப்போது அதிக சாந்தமுள்ளவர்களாயும், நன்கு வளைந்துகொடுப்பவர்களாயும் ஆவோம்; அதோடு, யெகோவாவைப் பிரியப்படுத்த நாம் உண்மையிலேயே விரும்புவதால், அவரை உண்மையோடு பற்றிக்கொள்வது நமக்கு இன்னும் எளிதாக இருக்கும்.—எபேசியர் 4:23, 24; கொலோசெயர் 3:8-10.
‘அவர்களுக்கு அறிவிக்கக்கடவீர்கள்’
15. உபாகமம் 4:10-ன்படி, என்ன இரண்டு பொறுப்புகளை நிறைவேற்றும்படி இஸ்ரவேலருக்கு மோசே நினைப்பூட்டினார்?
15 வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் காலடி வைப்பதற்குத் தயாராக நின்றுகொண்டிருந்த இஸ்ரவேலரிடம் மோசே இவ்வாறு கூறினார்: ‘உங்கள் கண்கள் கண்ட காரியங்களை நீங்கள் மறவாதபடிக்கும், உங்கள் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உங்கள் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீங்கள் எச்சரிக்கையாயிருந்து, உங்கள் ஆத்துமாவை ஜாக்கிரதையாய்க் காத்துக்கொள்ளுங்கள்; அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவீர்கள்.’ (உபாகமம் 4:10) யெகோவாவுடைய ஆசீர்வாதத்துடன் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலே செழிப்பாக வாழ வேண்டுமானால், இரண்டு பொறுப்புகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டியிருந்தது. ஒன்று, அவர்கள் கண்ணாரக் கண்ட யெகோவாவின் அற்புதச் செயல்களை மறவாமல் நினைக்க வேண்டும்; மற்றொன்று, அவற்றைப் பற்றி வருங்கால சந்ததியினருக்குப் போதிக்க வேண்டும். கடவுளுடைய ஜனங்களாகிய நாம், ‘ஜீவனைத் தெரிந்துகொண்டு பிழைக்க’ வேண்டுமானால் அவ்விரண்டு காரியங்களையும் செய்வது அவசியம். அப்படியானால், யெகோவா நம் சார்பில் செய்திருக்கும் என்ன செயல்களை நாம் கண்ணாரக் கண்டிருக்கிறோம்?
16, 17. (அ) கிலியட் பட்டதாரிகள் ராஜ்ய பிரசங்க வேலையில் எதை நிறைவேற்றியிருக்கிறார்கள்? (ஆ) ஊழியத்தில் பக்திவைராக்கியம் காட்டியிருக்கிற யாருடைய உதாரணங்கள் உங்களுடைய மனதிற்கு வருகின்றன?
16 நம்முடைய பிரசங்க வேலையையும் சீஷராக்கும் வேலையையும் யெகோவா எப்படி ஆசீர்வதித்திருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது நாம் மெய்சிலிர்த்துப் போகிறோம். 1943-ல் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளி ஆரம்பிக்கப்பட்ட சமயத்திலிருந்து, மிஷனரிகள் அநேக நாடுகளில் சீஷராக்கும் வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள். அந்தப் பள்ளியிலிருந்து பட்டம்பெற்ற ஆரம்பகால மிஷனரிகளுக்கு இப்போது மிகவும் வயதாகிவிட்டபோதிலும், அவர்களில் சிலருக்கு உடல்நலம் குன்றியிருக்கிறபோதிலும் இன்றுவரையாக ராஜ்ய பிரசங்க வேலையில் பக்திவைராக்கியத்தைக் காட்டிவருகிறார்கள். அதற்கு ஓர் அருமையான உதாரணம் மேரி ஓல்ஸன்; இவர் 1944-ல் கிலியட் பள்ளியிலிருந்து பட்டம்பெற்றவர். முதலில் உருகுவேயிலும், பிறகு கொலம்பியாவிலும் மிஷனரியாக இவர் சேவை செய்திருக்கிறார்; இப்போது பியூர்டோ ரிகோவில் சேவை செய்து வருகிறார். வயோதிகத்தின் காரணமாக இவரது உடல்நிலை ஓரளவு பாதிக்கப்பட்டுள்ள போதிலும், பிரசங்க வேலையில் இன்னமும் உற்சாகமாக ஈடுபடுகிறார். ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக்கொண்ட இவர், ஒவ்வொரு வாரமும் சபை பிரஸ்தாபிகளோடு சேர்ந்து வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள நேரம் ஒதுக்குகிறார்.
17 மற்றொரு உதாரணம், நான்ஸி போர்ட்டர்; இப்போது இவர் ஒரு விதவை. 1947-ல் கிலியட் பள்ளியிலிருந்து பட்டம்பெற்று மிஷனரியாக சேவை செய்பவர்; இன்னமும் பஹாமாஸில் மும்முரமாய் பிரசங்க வேலையில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய வாழ்க்கைச் சரிதையில் இவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘பைபிள் சத்தியத்தைப் போதிப்பதால் கிடைக்கும் சந்தோஷமே அலாதிதான். இது, ஆவிக்குரிய காரியங்களில் தவறாமல் ஈடுபடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள உதவிசெய்து, என் வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.’a கடந்த காலத்தை நினைத்துப்பார்க்கும் இவரும் விசுவாசமிக்க மற்ற ஊழியர்களும் யெகோவா செய்துள்ள காரியங்களை ஒருபோதும் மறக்கவில்லை. நம்மைப் பற்றி என்ன? நாம் வசிக்கும் இடத்தில் ராஜ்ய வேலையை யெகோவா ஆசீர்வதித்துள்ள விதத்தைப் பார்த்து நம் மனம் நன்றியால் நிரம்பவில்லையா?—சங்கீதம் 68:11.
18. மிஷனரிகளின் வாழ்க்கைச் சரிதையை வாசிப்பதன் மூலம் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
18 பல்லாண்டு காலமாக யெகோவாவின் சேவையில் ஈடுபட்டுவரும் இவர்கள் நிறைவேற்றிய, இன்னமும் நிறைவேற்றி வருகிற காரியங்களைப் பார்த்து நாம் பூரிப்படைகிறோம். இவர்களுடைய வாழ்க்கைச் சரிதையை வாசிப்பது நமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது, காரணம், உண்மையுள்ள இவர்களுக்கு யெகோவா என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற நம் தீர்மானம் பலப்படுகிறது. காவற்கோபுர பத்திரிகையில் வெளிவருகிற மெய்சிலிர்க்க வைக்கும் இத்தகைய அனுபவங்களை நீங்கள் தவறாமல் வாசிக்கிறீர்களா? இவற்றைக் குறித்து தியானிக்கிறீர்களா?
19. காவற்கோபுர பத்திரிகையில் வெளிவந்துள்ள வாழ்க்கைச் சரிதைகளை கிறிஸ்தவப் பெற்றோர்கள் எப்படி நல்ல விதத்தில் பயன்படுத்தலாம்?
19 யெகோவா தங்களுக்காகச் செய்துள்ள காரியங்களை இஸ்ரவேலர் மறக்கக் கூடாதென்றும் ஜீவனுள்ள நாளெல்லாம் அவை அவர்களுடைய இருதயத்தைவிட்டு நீங்கக் கூடாதென்றும் அவர்களுக்கு மோசே நினைப்பூட்டினார். அதன்பின் மற்றொன்றையும் அவர்கள் செய்ய வேண்டுமென சொன்னார்: ‘அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவீர்கள்.’ (உபாகமம் 4:10) வாழ்க்கைச் சரிதைகள் மனதை மிகவும் கவர்ந்துவிடுகின்றன. வளரும் பிள்ளைகளுக்கு இதுபோன்ற நல்ல முன்மாதிரிகள் அவசியம். மணமாகாத சகோதரிகள் காவற்கோபுர பத்திரிகையில் வெளிவந்துள்ள வயதான சகோதரிகளின் விசுவாசமிக்க உதாரணங்களிலிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். சகோதரர்களும் சரி, சகோதரிகளும் சரி, தங்கள் சொந்த நாட்டிலுள்ள வேற்றுமொழி பிராந்தியங்களில் மும்முரமாய் ஊழியத்தில் ஈடுபடலாம். கிறிஸ்தவப் பெற்றோர்களே, முழுநேர ஊழியத்தைத் தேர்ந்தெடுக்கும் ஆசையை உங்கள் பிள்ளைகளின் மனதில் வளர்ப்பதற்காக, விசுவாசமிக்க கிலியட் மிஷனரிகளின் அனுபவங்களையும் மற்றவர்களுடைய அனுபவங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம், அல்லவா?
20. ‘ஜீவனைத் தெரிந்துகொள்ள’ நாம் என்ன செய்ய வேண்டும்?
20 அப்படியானால், ‘ஜீவனைத் தெரிந்துகொள்ள’ நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்? சுயமாகத் தெரிவுசெய்யும் சுதந்திரமெனும் அருமையான பரிசைப் பயன்படுத்தி, யெகோவா மீதுள்ள அன்பை வெளிக்காட்டி, அவர் அனுமதிக்கும்வரை மிகச் சிறந்த விதத்தில் அவருடைய சேவையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். ஏனெனில், மோசே இவ்வாறு அறிவித்தார்: ‘யெகோவாவே உங்களுக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர்.’—உபாகமம் 30:19, 20.
[அடிக்குறிப்பு]
a ஜூன் 1, 2001 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில், பக்கங்கள் 23-7-ல், “இதயத்தைப் பிளக்கும் இழப்பிலும் மகிழ்ச்சியோடும் நன்றியோடும்” என்ற கட்டுரையைக் காண்க.
நினைவிருக்கிறதா?
• இக்கட்டுரையில் சிந்தித்தபடி, வெவ்வேறு தெரிவுகளைச் செய்தவர்களுடைய உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• ‘ஜீவனைத் தெரிந்துகொள்வதற்காக’ நாம் என்னென்ன படிகளை எடுக்க வேண்டும்?
• என்ன இரண்டு பொறுப்புகளை நிறைவேற்றும்படி நாம் உந்துவிக்கப்படுகிறோம்?
[பக்கம் 26-ன் படம்]
‘நான் ஜீவனையும் மரணத்தையும் உங்களுக்குமுன் வைத்தேன்’
[பக்கம் 29-ன் படம்]
நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் கடவுளுடைய சத்தத்திற்குச் செவிசாய்த்ததால் உயிர் பிழைத்தார்கள்
[பக்கம் 30-ன் படம்]
மேரி ஓல்ஸன்
[பக்கம் 30-ன் படம்]
நான்ஸி போர்ட்டர்