கூட்டுறவுப் பொழுதுபோக்கு—நன்மைகளை அனுபவியுங்கள், கண்ணிகளைத் தவிருங்கள்
“மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப் பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை.”—பிரசங்கி 2:24.
1. என்ன வழிகளில் பொழுதுபோக்கு சம்பந்தமான கடவுளுடைய வழிநடத்துதல் அவருடைய ஜனத்துக்கு உதவிசெய்கிறது?
யெகோவாவின் வழிநடத்துதல் அவருடைய ஊழியர்களுக்குப் பல நன்மைகளைக் கொண்டுவருகிறது. இதை நாம் பொழுதுபோக்குத் துறையில் காணலாம். அவருடைய வழிநடத்துதல் நோக்குநிலைகளில் மீறிய அளவுக்குச் செல்வதைத் தவிர்க்க கிறிஸ்தவர்களுக்கு உதவிசெய்கிறது. உடையிலும் நடத்தையிலும் கடும் கண்டிப்பை வற்புறுத்தும் சில மதத்தினர், பெரும்பாலும் எவ்வகை இன்பத்தையும் பாவமாகக் கருதுகின்றனர். மறுபட்சத்தில், பெரும்பான்மையர், அத்தகைய இன்பங்கள் யெகோவாவின் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் முரண்பட்டாலுங்கூட அவற்றை விடாது பின்தொடருகின்றனர்.—ரோமர் 1:24-27; 13:13, 14; எபேசியர் 4:17-19.
2. பொழுதுபோக்கைக் கடவுள் கருதும் முறையைப்பற்றி எது முதன்முதல் குறிப்பாகத் தெரிவித்தது?
2 எனினும், கடவுளுடைய ஜனங்களைப் பற்றியதென்ன? பைபிளைப் படிக்கத் தொடங்குவோர் பலர், கடவுள் உண்மையில் மனிதரைத் தங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதற்கான திறமையுடன் படைத்தாரென்று அறிந்து ஆச்சரியப்படுகின்றனர். செய்வதற்கு வேலையை அவர் நம்முடைய முதல் பெற்றோருக்குக் கொடுத்தார்—ஆனால் அபூரண மனிதர் பெரும்பான்மையரின் வாழ்க்கையைக் குறித்துள்ள சோர்வுண்டாக்கும் சுவையற்ற வேலையை அல்ல. (ஆதியாகமம் 1:28-30) பூமிக்குரிய பரதீஸில் வாழும் எல்லாரும் மகிழ்ச்சியைக் கண்டடையவிருக்கிற ஆரோக்கியமான அந்த மிகப் பல வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள். பயப்படுவதற்கு ஏதுவாயிராதக் காட்டுமிருகங்களையும் நம்முடைய அனுதின வாழ்க்கையின் பாகமாக இருக்கக்கூடிய பல்வேறு வகை வீட்டுமிருகங்களையும் கூர்ந்து கவனிப்பதில் அவர்களுக்கு உண்டான மகிழ்ச்சியைக் கற்பனைசெய்து பாருங்கள்! “பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்க”ளிலிருந்து எத்தகைய உணவுகளை அவர்கள் உண்பர்!—ஆதியாகமம் 2:9; பிரசங்கி 2:24.
3-5. (எ) பொழுதுபோக்கு என்ன நோக்கத்தைச் சேவிக்க வேண்டும்? (பி) இஸ்ரவேலர் மகிழ்ச்சியைக் கண்டடைவதிலிருந்து கடவுள் அவர்களைத் தடைசெய்யவில்லையென நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
3 அந்த நடவடிக்கைகளை, உண்மையில், பொழுதுபோக்காகக் கருதலாம், பரதீஸில் அவற்றின் நோக்கம் இப்பொழுது இருப்பதைப்போலவே இருக்கும், அதாவது: பலன்தரும் மேலுமான நடவடிக்கைகளுக்காக (வேலைக்காக) ஒருவரின் உள்ளுரத் திறமையைப் புதுப்பித்து மீண்டும் இளமையூட்டுவதாகும். பொழுதுபோக்கு இதை நிறைவேற்றுகையில், அது நன்மை பயக்குகிறது. இது, உண்மையான வணக்கத்தார், பரதீஸில் இன்னும் வாழாவிடினும் பொழுதுபோக்குக்காகத் தங்கள் வாழ்க்கையில் ஓர் இடமுண்டாக்கலாமென பொருள்படுகிறதா? ஆம். வேதவார்த்தைகளின்பேரில் உட்பார்வை (Insight on the Scriptures) என்ற ஆங்கில புத்தகம் யெகோவாவின் பூர்வகால ஜனங்களுக்குள் இருந்த பொழுதுபோக்கைக் குறித்து பின்வருமாறு சொல்லுகிறது:
4 “இஸ்ரவேலரின் மகிழ்ச்சி பொழுதுபோக்குகள் மற்றும் விளையாட்டுப்போக்கு பைபிள் பதிவில் முனைப்பாய் வருணிக்கப்பட்டில்லை. இருப்பினும், அவை அந்த ஜனத்தின் மத நியமங்களுக்கு ஒத்திசைந்து இருக்கையில் சரியானவையும் விரும்பத்தக்கவையுமெனக் கருதப்படவேண்டுமென்று அது காட்டுகிறது. இசைக் கருவிகளை வாசித்தல், பாடுதல், நடனமாடுதல், உரையாடல், அதோடு சில விளையாட்டுகள் ஆகியவை பொழுதுபோக்கின் முக்கிய வகைகளாக இருந்தன. விடுகதைகளையும் கடினமான கேள்விகளையும் எடுத்துரைப்பது வெகுவாய் மதிக்கப்பட்டது.—நியா. 14:12.”—புத்தகம் 1, பக்கம் 102.
5 தாவீது வெற்றிப்பெற்றுத் திரும்புகையில், எபிரெயப் பெண்கள் அதைக் கொண்டாடுகையில் (எபிரெயு, சா-வோஹக்) மேளங்களையும் கீதவாக்கியங்களையும் பயன்படுத்தினார்கள். (1 சாமுவேல் 18:6, 7) இந்த எபிரெயச் சொல் அடிப்படையாய் “சிரிப்பு” எனப் பொருள்படுகிறது, மேலும் சில மொழிபெயர்ப்புகள் “மகிழ்ச்சிக் கொண்டாடும் பெண்கள்” என பேசுகின்றன. (பையிங்டன், ராதர்ஹாம், தி நியு இங்கிலிஷ் பைபிள்) உடன்படிக்கை பெட்டியை எடுத்துச் செல்கையில், “தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் . . . சகலவித கீதவாக்கியங்களோடும் . . . யெகோவாவுக்கு முன்பாக ஆடிப் பாடிக்கொண்டு (கொண்டாடிக்கொண்டு, NW) போனார்கள்.” தாவீதின் மனைவி, மீகாள், சமநிலையற்ற நோக்கைக் கொண்டிருந்தாள், எப்படியெனில் அந்த மகிழ்விக்கும் நடவடிக்கைகளில் தாவீது பங்குகொண்டதை அவள் வெறுப்பாகப் பேசினாள். (2 சாமுவேல் 6:5, 14-20, தி.மொ.) நாடுகடத்தப்பட்டவர்கள் பாபிலோனிலிருந்து திரும்பிவருகையில் இதைப்போன்ற மகிழ்ச்சியுள்ள நடவடிக்கைகளில் பங்குகொள்வார்களென்று கடவுள் முன்னறிவித்தார்.—எரேமியா 30:18, 19; 31:4; சங்கீதம் 126:2-ஐ ஒத்துப்பாருங்கள்.
6. பொழுதுபோக்கை நாம் கருதும் முறையில் கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்கள் எவ்வாறு நமக்கு உதவிசெய்கிறது?
6 நாமுங்கூட பொழுதுபோக்கைப்பற்றி சமநிலையுள்ளோராக இருக்கும்படி நாடவேண்டும். உதாரணமாக, இயேசு ஒரு துறவியாக இல்லை என்பதை நாம் மதித்துணருகிறோமா? லேவி அளித்த அந்தப் “பெரிய விருந்து” போன்ற புதுக்கிளர்ச்சியூட்டும் சாப்பாடுகளுக்கு அவர் நேரம் செலவிட்டார். அவர் புசித்துக் குடித்ததற்காக சுயநீதிக்காரர்கள் அவரைக் குற்றப்படுத்திப் பேசினபோது, இயேசு அவர்களுடைய நோக்குகளையும் வழிகளையும் வெறுத்துத் தள்ளினார். (லூக்கா 5:29-31; 7:33-36) மேலும், அவர் ஒரு கலியாணத்துக்குச் சென்று அதன் விருந்து நடவடிக்கைகளுக்குத் தாம் உதவியும் செய்தார் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். (யோவான் 2:1-10) கிறிஸ்தவர்கள் “அன்பின் விருந்துகளை” வைத்தார்களென இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரன் யூதா குறிப்பிடுகிறார், இவை தேவையிலிருந்த கிறிஸ்தவர்கள் உணவையும் இன்பமான, பொழுதுபோக்கு ஓய்வு கூட்டுறவையும் அனுபவிக்கக்கூடிய சாப்பாடுகளாக இருந்ததெனத் தெரிகிறது.—யூதா 12.
கூட்டுறவுப் பொழுதுபோக்குக்கு அதன் நேரமும் இடமும்
7. பொழுதுபோக்கைக் குறித்ததில் கடவுளுடைய வார்த்தை எவ்வாறு சமநிலையை ஊக்குவிக்கிறது?
7 ‘விருந்தெனப்படுவது களிப்புக்காமே, மதுபானம் உயிர் களித்திடச் செய்யும்’ என பிரசங்கி 10:19 (தி.மொ.) ஆதரவாய்ப் பேசுகிறது. இது பொழுதுபோக்கு இயல்பாய்த் தவறு அல்லது கெட்டதென்பதைப்போல் தொனிக்கிறதில்லை அல்லவா? எனினும், அதே புத்தகம் பின்வருமாறு சொல்லுகிறது: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; . . . அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு.” (பிரசங்கி 3:1, 4) ஆம், பொருத்தமான பொழுதுபோக்கை பைபிள் கண்டனஞ் செய்கிறதில்லை, ஆனால் அதேசமயத்தில் அது நமக்கு எச்சரிக்கைகளையும் கொடுக்கிறது. நேரத்தையும் அளவையும் குறித்ததில் கூட்டுப் பொழுதுபோக்கை அதனிடத்தில் வைக்கும்படியான அறிவுரையும் இவற்றில் அடங்கியுள்ளது. மேலும் பெரிய அளவான கூட்டுக் கூட்டங்களில் அடிக்கடி ஏற்படும் இடறுகுழிகளைப்பற்றியும் அது நம்மை எச்சரிக்கிறது.—2 தீமோத்தேயு 3:4.
8, 9. நாம் வாழும் இந்தக் காலமும் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வேலை நியமிப்பும் ஏன் பொழுதுபோக்கின்பேரில் ஒரு பாதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்?
8 பாபிலோனிலிருந்து திரும்பிவரும் யூதர்கள்—செய்வதற்கு மிகக் கடினமான வேலையைக் கொண்டிருந்தவர்கள்—மகிழ்ச்சிதரும் பொழுதுபோக்கு ஓய்வில் பங்குகொள்வார்களென நாம் கவனித்தோம். எனினும், தான் ‘பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூரப்போவதில்லையென’ எரேமியா முன்னால் கூறினார். (எரேமியா 15:17) வரவிருந்த தண்டனைக்குரிய செய்தியைக் கொடுப்பதற்கு அவர் கடவுளால் நியமிக்கப்பட்டிருந்தார், ஆகவே மகிழ்ந்து களிகூருவதற்கு அது அவருக்குக் குறிக்கப்பட்ட காலமாக இல்லை.
9 இன்று கிறிஸ்தவர்கள் நம்பிக்கைக்குரிய கடவுளுடைய செய்தியைப் பலரறிய அறிவிக்கவும் அதோடுகூட சாத்தானின் பொல்லாத ஒழுங்குமுறைக்கு எதிராகக் கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளைத் தெரிவிக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். (ஏசாயா 61:1-3; அப்போஸ்தலர் 17:30, 31) ஆகவே, பொழுதுபோக்கை நம்முடைய வாழ்க்கையில் முதன்மையானதாகும்படி நாம் அனுமதிக்கக்கூடாதென்பது தெளிவாயிருக்க வேண்டும். இந்தக் குறிப்பை நாம், உணவின் சுவையைப் பெருக்குவதற்குச் சேர்க்கும் ஒரு சிட்டிகையளவு உப்பை அல்லது விசேஷித்த சுவையூட்டுப்பொருளைக் கொண்டு சித்தரித்துக் காட்டலாம். அந்தச் சுவையூட்டுப்பொருளை உணவுக்கும் மேலாகத் திகட்டிநிற்கும் அத்தகைய பெரும் அளவுகளில் கொட்டுவீர்களா? நிச்சயமாகவே, இல்லை. யோவான் 4:34-லும் மத்தேயு 6:33-லும் உள்ள இயேசுவின் வார்த்தைகளுக்குப் பொருந்த, நம்முடைய முக்கிய அக்கறை—நம்முடைய உணவு—கடவுளுடைய சித்தத்தைச் செய்வதாக இருக்கவேண்டும். ஆகையால் பொழுதுபோக்கு, சுவையூட்டுப்பொருளைப்போல் ஆகிறது. அது புதுக்கிளர்ச்சியூட்டி மேம்படுத்த வேண்டும், முழு ஆற்றலையும் வெறுமையாக்கிவிட அல்லது மூழ்க்கடித்துவிடக் கூடாது.
10. பொழுதுபோக்கில் செலவிடும் அளவான நேரத்தை நாம் எல்லாரும் ஏன் திரும்ப பரிசீலித்துப் பார்க்க வேண்டும்?
10 எனினும், சற்றுநின்று சிந்தித்துப்பாருங்கள்: பொழுதுபோக்குக்குத் தாங்கள் கொடுக்கும் நேரமும் கவனமும் மிதமானதே என பெரும்பான்மையர் சொல்வார்களல்லவா? அவர்கள் வேறுமுறையில் உணர்ந்தால், சரிப்படுத்தலைச் செய்திருப்பார்கள். இது நாம் ஒவ்வொருவரும் சற்று நின்று, நம் வாழ்க்கையில் பொழுதுபோக்கு உண்மையில் என்ன இடத்தை வகிக்கிறதென்பதைக் கருத்தார்ந்த முறையில், நேர்மையாய் பகுத்தாராய்ந்து பார்க்க வேண்டுமென குறிப்பாகத் தெரிவிக்கிறதல்லவா? அது ஒருவேளை இரகசியமாய் நம்முடைய வாழ்க்கையின் பெரும் பாகமாகிவிட்டிருக்கலாமா? உதாரணமாக, நாம் வீட்டுக்குத் திரும்பிவரும்போதெல்லாம் பழக்கமாகத் தொலைக்காட்சி பெட்டியைத் திருகிவிடுகிறோமா? ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை இரவு போன்று, ஒவ்வொரு வாரமும் நம்முடைய நேரத்தின் பெரும்பாகத்தைப் பொழுதுபோக்குக்காக ஒதுக்கி வைக்கும் ஒரு மாதிரிப்போக்கை உண்டாக்கியிருக்கிறோமா? அந்த நேரம் வந்துவிடுகையில், பொழுதுபோக்கு எதுவும் திட்டமிடப்படாமல் நாம் வீட்டில் இருந்தால் மனக்கசப்படைவோமா? கூடுதலான இன்னும் இரண்டு கேள்விகள்: கூட்டுப் பொழுதுபோக்கின்போது நாம் அவ்வளவு பிந்தின நேரம் வரை தங்கிவிட்டதால் அல்லது அவ்வளவு தூரம் பயணப்பட்டதால் அதற்கு அடுத்த நாள் நாம் முழுச் சோர்வுற்று, கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்ள அல்லது நம் எஜமானருக்கு நல்ல முழுநாள் வேலையைச் செய்ய முடியாதபடி மீறியவண்ணம் களைத்துப்போயிருக்கிறோமா? நம் பொழுதுபோக்கு எப்போதாவது, அல்லது அடிக்கடி, இந்தப் பாதிப்பை உடையதாயிருந்தால், அது உண்மையில் சரியான மற்றும் சமநிலையான மகிழ்ச்சிக்குரிய காரியமாக இருக்கிறதா?—நீதிமொழிகள் 26:17-19-ஐ ஒத்துப்பாருங்கள்.
11. நம்முடைய பொழுதுபோக்கின் இயல்பைத் திரும்ப பகுத்தாராய்வது ஏன் நலமாயிருக்கும்?
11 நம் பொழுதுபோக்கின் இயல்பையும் திரும்ப பகுத்தாராய்வது நமக்கு நலமாயிருக்கலாம். நாம் கடவுளுடைய ஊழியர்களாக இருப்பது நம்முடைய பொழுதுபோக்குப் பொருத்தமானதென்பதற்கு எந்த உறுதியுமில்லை. அப்போஸ்தலன் பேதுரு அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எழுதினதைக் கவனியுங்கள்: “சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர் இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.” (1 பேதுரு 4:3) உலகத்திலிருப்போர் செய்வதைப் பின்பற்றுவதாகத் தன் சகோதரரைக் குற்றப்படுத்தும் விதத்தில் விரலை ஆட்டுவதைப்போல் அவர் செய்யவில்லை. எனினும், (அப்பொழுதும் இப்பொழுதும்) விழிப்புடன் எச்சரிக்கையாயிருப்பது கிறிஸ்தவர்களுக்கு இன்றியமையாதது, ஏனெனில் ஒருவர் எளிதில் தீங்கான பொழுதுபோக்குக்கு இரையாகக்கூடும்.—1 பேதுரு 1:2; 2:1; 4:7; 2 பேதுரு 2:13.
கண்ணிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்
12. என்ன வகையான கண்ணியை 1 பேதுரு 4:3 முனைப்பாய் எடுத்துக் காட்டுகிறது?
12 என்ன வகையான கண்ணிக்கு நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்? ‘திராட்ச மதுபான மீறல்கள், களியாட்டங்கள், குடி போட்டிகள்’ (NW) என பேதுரு குறிப்பிட்டார். இதில் பயன்படுத்தப்பட்ட கிரேக்கச் சொற்கள் “பெருவிருந்தில் பலர்கூடி மதுபானம் குடிப்பதற்கு முக்கியமாய்ப் பொருந்தினது” என்று ஜெர்மன் கருத்துரையாளர் ஒருவர் விளக்கினார். இந்தப் பழக்கங்கள் அக்காலத்தில் சாதாரணமானதாக இருந்தனவென்று ஸ்விட்ஸர்லாந்து நாட்டவரான பேராசிரியர் ஒருவர் பின்வருமாறு எழுதினார்: “இந்த விவரிப்பு ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டங்களுக்கு அல்லது விவரிக்கப்பட்ட இந்த வெட்கக்கேடான செயல்கள் நடப்பிக்கப்பட்டுவந்த நிலையான கூட்டுக்குழுக்களுக்குங்கூட பொருத்தமாயிருக்க வேண்டும்.”
13. கூட்டுறவுக் கூட்டங்களில் மதுபானத்தைப் பயன்படுத்துவது எவ்வாறு கண்ணியாக இருந்திருக்கிறது? (ஏசாயா 5:11, 12)
13 பெரும் கூட்டுறவுக் கூட்டங்களில் மதுபானங்களை வைத்திருப்பது பலரைக் கண்ணியில் அகப்பட செய்திருக்கிறது. இத்தகைய மதுபானங்கள் மிதமாகப் பயன்படுத்தப்படுவதை பைபிள் தடையுத்தரவிடுகிறதென்பதல்ல, ஏனெனில் அது அவ்வாறு செய்கிறதில்லை. இதன் ஓர் அத்தாட்சியாக, இயேசு கானா ஊரில் நடந்த ஒரு கலியாண விருந்தில் திராட்ச மதுபானத்தை உண்டாக்கினார். அங்கே மிதமீறிய குடி இருந்திராது, ஏனெனில் இயேசு, கடும் குடிவெறியர்களுக்குள் இருப்பதைத் தவிர்க்க வேண்டுமென்ற கடவுளுடைய அறிவுரையை கடைப்பிடித்திருப்பார். (நீதிமொழிகள் 23:20, 21) ஆனால் இந்த நுட்பவிவரத்தைக் கவனியுங்கள்: அந்த விருந்தின் மேற்பார்வையாளர் சொன்னதாவது, மற்ற விருந்துகளில் நல்ல திராட்ச மதுபானம் முதலாவது பரிமாறப்பட்டது ‘ஜனங்கள் குடிமயக்கமடைந்தபின், கீழ்த்தரமான திராட்ச மதுபானம்’ பரிமாறப்பட்டது. (யோவான் 2:10, NW) ஆகவே எல்லாருக்கும் ஏராளமான திராட்ச மதுபானம் கிடைக்கக்கூடியதாயிருந்த கலியாணங்களில் யூதர்கள் குடிமயக்கவெறி அடைவது சாதாரணமாயிருந்தது.
14. விருந்தளிப்போரான கிறிஸ்தவர்கள், மதுபானங்கள் அளிக்கக்கூடிய கண்ணியை என்ன வழிகளில் எதிர்த்துச் சமாளிக்கலாம்?
14 ஆதலால், விருந்தளிப்பவர்களான கிறிஸ்தவர்கள் சிலர், தங்கள் விருந்தாளிகளுக்குப் பரிமாறப்படுவது அல்லது அவர்கள் குடிப்பது என்னவென தாங்கள்தாமே நேரடியாக மேற்பார்வையிடக் கூடுமானால் மாத்திரமே திராட்ச மதுபானம், பியர், மற்றும் வேறு மதுபானங்கள் அளிக்கத் தீர்மானித்திருக்கின்றனர். குறிப்பிடப்பட்ட யூதக் கலியாணங்களில் இருந்ததைப்போல், விருந்தளிப்பவர் தாமே நேரில் மேற்பார்வையிட முடியாத அளவுக்குக் கூட்டம் பெரியதாயிருந்தால், மிகுதியான மதுபானம் ஆபத்தான ஒரு கண்ணியாக இருக்கக்கூடும். குடிவெறி சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னையைப் போராடி வென்ற ஒருவர் அங்கு வந்திருக்கலாம். ஒழுங்குபடுத்தப்பட்டிராது பொதுவில் மதுபானம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பது, மிதமீறி குடிக்கும்படி அவருக்கு சோதனை உண்டாக்கி, எல்லாருக்குமே அந்தச் சிறப்பு நிகழ்ச்சியைக் கெடுத்துப்போடும்படி செய்விக்கலாம் என்பதை நீங்கள் காணலாம். ஜெர்மனியில் கண்காணியாகவும் தகப்பனாகவும் இருந்த ஒருவர், தன் குடும்பம் உடன்-விசுவாசிகளுடன் கூட்டுறவுப் பொழுதுபோக்குக் கூட்டங்களில் இன்பமான கூட்டுறவிலிருந்து நன்மையடைகிறதெனக் குறிப்பிட்டார். எனினும் அவர் மேலுமாகத் தொடர்ந்து, பியர் எளிதாய்க் கிடைக்கக்கூடியதாயிருக்கையில் பிரச்னைகள் உண்டாவதற்கான வாய்ப்பு திட்டவட்டமாய் அதிகப்பட்டதாயிருந்ததெனக் கூறினார்.
15 கானா ஊரில் நடந்தக் கலியாணம் “பந்திவிசாரிப்புக்காரனை” உடையதாயிருந்தது. (யோவான் 2:8) இது, ஒரு குடும்பம் சிலரைச் சாப்பாட்டுக்காக அல்லது சிறிதுநேர கூட்டுறவுக்காக தங்கள் வீட்டுக்கு அழைத்திருந்தால் ஒரு பந்திவிசாரிப்புக்காரரை நியமிக்க வேண்டுமென பொருள்படுவதில்லை. அந்த வீட்டுக் கணவரே அந்த நிகழ்ச்சியை மேற்பார்வையிடுவதற்குப் பொறுப்புடையவர். அந்தத் தொகுதி வெறுமென இரண்டு குடும்பங்களேயாக அல்லது ஓரளவு பெரியதாக, எவ்வாறிருந்தாலும், என்ன நடக்கிறதென்பதற்கு எவராவது பொறுப்புடையவராக இருக்கிறாரென்பது தெளிவாயிருக்க வேண்டும். ஒரு கூட்டுறவுக் கூட்டத்துக்குத் தங்கள் மகன் அல்லது மகள் அழைக்கப்படுகையில் பெற்றோர் பலர் இதை விசாரித்து நிச்சயப்படுத்திக்கொள்கின்றனர். அதன் முடிவு வரையாக இருப்பது உட்பட, அந்த முழு நிகழ்ச்சியையும் மேற்பார்வையிடுபவர் யாரெனக் கேட்பதற்கு அவர்கள் அந்த விருந்தளிப்பவரிடம் தொடர்புகொள்கின்றனர். கிறிஸ்தவ பெற்றோர் முதியோரும் இளைஞரும் ஒருங்கிணைந்த கூட்டுறவை அனுபவித்து மகிழக்கூடும்படி அங்கிருக்கத் தங்கள் சொந்த காலத்திட்டத்தையுங்கூட சரிசெய்து அமைத்திருக்கின்றனர்.
16. கூட்டுறவுக் கூட்டங்களின் அளவைக் குறித்ததில் பொருத்தமாய்க் கவனிக்க வேண்டியவை எவை?
16 தி உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கானடா கிளை அலுவலகம் பின்வருமாறு எழுதுகிறது: “கூட்டுறவுக் கூட்டங்களின் அளவை மட்டுப்படுத்துவதன் சம்பந்தமாகக் கொடுக்கப்பட்ட அறிவுரை, கலியாண வரவேற்பு விருந்துகளில் பெரிய கூட்டங்கள் கூடுவது அந்த அறிவுரையை மீறுதலாகுமெனப் பொருள்படுவதாகச் சில மூப்பர்களால் விளங்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. நம்முடைய கூட்டுறவுக் கூட்டங்களைச் சிறிய, கட்டுப்படுத்திக் கையாளக்கூடிய அளவுக்கு வைக்கும்படி நாம் அறிவுரை கொடுக்கப்பட்டால், கலியாண விருந்தின்போது 200 அல்லது 300 ஆட்களைக் கொண்டிருப்பது தவறென அவர்கள் முடிவுசெய்திருக்கின்றனர்.”a தங்கள் சொந்த நோக்குநிலையின்பேரில் ஆதாரங்கொண்டு முன்னதாகவே அளவைத் தீர்மானித்து மட்டுக்குமீறி வற்புறுத்துவதைப் பார்க்கிலும், வந்திருப்போரின் எண்ணிக்கை என்னவாயினும் சரியான மேற்பார்வைக்கே முதன்மையான கவனம் செலுத்தவேண்டும். இயேசு அளித்த திராட்ச மதுபானத்தின் அளவு, ஒரு பெரிய அளவான கூட்டம் கானா ஊரில் நடந்த கலியாணத்துக்கு வந்திருந்தனரென குறிப்பாகக் காட்டுகிறது, ஆனால் சந்தேகமில்லாமல் அது தகுந்த முறையில் மேற்பார்வையிடப்பட்டது. அக்காலத்தில் மற்ற விருந்துகள் அவ்வாறு செய்யப்படவில்லை; அவற்றின் அளவு ஒருவேளை போதிய மேற்பார்வை இல்லாததற்கு வழிநடத்தும் காரணமாக இருந்திருக்கலாம். கூட்டம் எவ்வளவு பெரிதோ, சவாலும் அவ்வளவு பெரிதாயிருக்கும், ஏனெனில், மிதமீறி போகும் போக்கையுடைய பலவீனர்கள், துணிகரமாய்த் தங்களை அவ்வாறு ஈடுபடுத்துவது அவர்களுக்கு எளிதாயிருக்கும். மேற்பார்வையிடப்படாதக் கூட்டங்களில் அவர்கள் ஒருவேளை நேர்மையற்ற செயல்களைத் தூண்டுவிக்கலாம்.—1 கொரிந்தியர் 10:6-8.
17. கூட்டுறவுக் கூட்டங்கள் திட்டமிடப்படுகையில் கிறிஸ்தவ சமநிலையை எவ்வாறு காட்டலாம்?
17 கூட்டுறவுக் கூட்டத்தை நல்ல மேற்பார்வையிடுவதில் அதன் திட்டமிடுதலும் தயாரிப்பும் உட்பட்டுள்ளன. இது, அதைத் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அல்லது நினைவில் வைக்கத்தக்கதாக்கும்படி கவர்ச்சியுள்ள ஆனால் உலக பொழுதுபோக்குக் கூட்டங்களின் மாதிரியைப் பின்பற்றுதலான, வந்திருப்போர் விசித்திர உடை அணியும் குழுநடனத்தைப்போன்று அல்லது முகமூடிநடனத்தைப்போன்று, ஏதோ ஒரு நூதன காரியத்தைக் கற்பனைசெய்து அமைப்பதைத் தேவைப்படுத்துகிறதில்லை. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் உண்மையுள்ள இஸ்ரவேலர்கள், வந்திருப்போர் யாவரும் எகிப்தில் அல்லது மற்றொரு தேசத்திலிருந்த புறமதத்தினரைப்போல் உடை அணியும்படியான ஒரு விருந்தைத் திட்டமிடுவதை நீங்கள் கற்பனைசெய்ய முடியுமா? புறமதத்தினருக்குள் பெரிதும் விரும்பப்பட்ட உணர்ச்சியைத் தூண்டும் நடனத்தை அல்லது கொந்தளிப்பான இசையை அவர்கள் திட்டமிடுவார்களா? முன்னால் சீனாய் மலையில், அவர்கள் அக்காலத்தில் ஒருவேளை எகிப்தில் இருந்துவந்த மற்றும் பலரால் விரும்பப்பட்ட இசை மற்றும் நடன கண்ணிக்குள் வீழ்ந்தனர். கடவுளும் அவருடைய முதிர்ச்சிவாய்ந்த ஊழியன் மோசேயும் அந்தப் பொழுதுபோக்கை எவ்வாறு கருதினரென்பது நமக்குத் தெரியும். (யாத்திராகமம் 32:5, 6, 17-19) ஆகையால், ஒரு கூட்டுறவு நிகழ்ச்சியின் விருந்தளிப்பவர் அல்லது மேற்பார்வையாளர், அங்கே பாட்டு அல்லது நடனம் இருக்குமா என்பதைக் கவனிக்க வேண்டும்; அவ்வாறு இருந்தால், அது கிறிஸ்தவ நியமங்களுக்கு ஒத்திருக்கும்படி அவர் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.—2 கொரிந்தியர் 6:3.
18, 19. இயேசு ஒரு கலியாணத்துக்கு அழைக்கப்பட்டதிலிருந்து என்ன உட்பார்வையை நாம் அடையலாம், இதை நாம் எவ்வாறு பொருத்திப் பயன்படுத்தலாம்?
18 முடிவாக, ‘இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்’ என்பதை நாம் நினைவுகூருகிறோம். (யோவான் 2:2) உண்மைதான், ஒரு கிறிஸ்தவர் அல்லது ஒரு குடும்பம், இன்பமான கட்டியெழுப்பும் நேரத்துக்காக வெறுமென மற்றவர்களைப் போய்ப் பார்க்கலாம். ஆனால் திட்டமிடப்பட்ட கூட்டுறவு நிகழ்ச்சிகளுக்கு, அங்கே யார் இருப்பார்கள் என்பதை முன்னரே தீர்மானிப்பது பிரச்னைகளைத் தவிர்க்க உதவிசெய்யுமென அனுபவம் காட்டுகிறது. அதன் முக்கியத்துவத்தை அ.ஐ.மா., டெனெசியில் இருக்கிற ஒரு மூப்பர் அறிவுறுத்தினார், இவர் குமாரர்களையும் குமாரத்திகளையும் வளர்த்தவர், அவர்கள் முழுநேர ஊழியத்தில் இருக்கின்றனர். இவரும் இவருடைய மனைவியும் ஓர் அழைப்பை ஏற்பதற்கு முன், அல்லது தன் பிள்ளைகள் செல்லும்படி அனுமதி கொடுப்பதற்கு முன், அங்கு வருவோர் முன்னரே தீர்மானிக்கப்பட்டனராவென நிச்சயப்படுத்திக்கொள்ள அந்த விருந்தளிப்பவருடன் தொடர்பு கொண்டார். சாப்பாட்டுக்காயினும், இன்பக்குழுப் பயணத்துக்காயினும், அல்லது பந்து விளையாடுவதைப்போன்ற உடற்பயிற்சிக்காயினும் எவரும் வரக்கூடிய கூட்டுறவுக் கூட்டங்களில் சிலர் வீழ்ந்த கண்ணிகளிலிருந்து இவருடைய குடும்பம் பாதுகாக்கப்பட்டது.
19 வெறுமென உறவினரை, பழைய நண்பர்களை, அல்லது ஒரே வயதினரை அல்லது பொருளாதார நிலையிலுள்ளோரை மாத்திரமே விருந்துக்கு அழைப்பதை இயேசு ஊக்கப்படுத்தவில்லை. (லூக்கா 14:12-14; யோபு 31:16-19; அப்போஸ்தலர் 20:7-9-ஐ ஒத்துப்பாருங்கள்.) நீங்கள் அழைப்போரைக் கவனமாய்த் தெரிந்தெடுத்தால், பல்வேறு வயதுகளிலும் சூழ்நிலைமைகளிலும் இருக்கும் கிறிஸ்தவர்களைச் சேர்த்துக்கொள்வது எளிதாயிருக்கும். (ரோமர் 12:13; எபிரெயர் 13:2) அவர்களில் சிலர் ஒருவேளை ஆவிக்குரியப் பிரகாரம் பலவீனராக அல்லது புதியோராக இருக்கலாம், இவர்கள் முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களோடுள்ள கூட்டுறவிலிருந்து நன்மையடையலாம்.—நீதிமொழிகள் 27:17.
பொழுதுபோக்கு அதனிடத்தில்
20, 21. நம் வாழ்க்கையில் பொழுதுபோக்கு ஏன் ஓர் இடத்தைப் பொருத்தமாய்க் கொண்டிருக்கலாம்?
20 கடவுள்பயமுள்ள ஜனங்களாக நம்முடைய பொழுதுபோக்கில் அக்கறையுடையோராக இருப்பதும், அத்தகையது சரியானதாயிருக்கும்படி கவனமுள்ளோராய் இருப்பதும், அதற்காக நாம் பயன்படுத்தும் அளவான நேரத்தில் நாம் சமநிலையுடனிருப்பதும் நமக்குத் தகுந்தது. (எபேசியர் 2:1-4; 5:15-20) பிரசங்கி புத்தகத்தை எழுதின தேவாவியால் ஏவப்பட்ட எழுத்தாளன் அம்முறையில் உணர்ந்தார்: “நான் களிப்பைப் புகழ்ந்தேன்; புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.” (பிரசங்கி 8:15) இத்தகைய சமநிலையான இன்பங்கள் உடலுக்குப் புதுக்கிளர்ச்சியூட்டி இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையில் பொதுவாயுள்ள பிரச்னைகளையும் ஏமாற்ற மனக்கசப்புகளையும் சரியீடு செய்ய உதவிசெய்யும்.
21 உதாரணமாக, ஓர் ஆஸ்திரியா நாட்டு பயனியர் பெண் பழைய சிநேகிதி ஒருவருக்குப் பின்வருமாறு எழுதினாள்: “அன்று நாங்கள் வெகு நல்ல இன்பப் பயணம் சென்றோம். ஃபெர்லாக்குக்கு அருகிலிருக்கும் ஒரு சிறிய ஏரிக்கு ஏறக்குறைய நாங்கள் 50 பேர் பயணப்பட்டோம் சகோதரர் B—— தன்னுடைய சரக்கு வண்டியில், மூன்று சமையலுக்குப் பயன்படுத்தும் இருப்புத்தட்டங்களையும், மடக்கும் நாற்காலிகள், மேசைகள், மேசை வரிப்பந்தாட்டத்துக்குரிய மேசையையுங்கூட ஏற்றிக்கொண்டு பவனியில் முன்சென்று வழிநடத்தினார். நாங்கள் அதை மிக நன்றாய் அனுபவித்து மகிழ்ந்தோம். ஒரு சகோதரி தன்னுடன் ஓர் அக்கார்டியன் இசைக்கருவியை வைத்திருந்தாள், ஆகையால் ஏராளமான ராஜ்ய பாட்டுகளும் இருந்தன. சகோதரர்கள், இளைஞரும் முதியோரும், அந்தக் கூட்டுறவை அனுபவித்து மகிழ்ந்தோம்.” மிதமீறிய குடி அல்லது ஒழுக்கக்கேடான நடத்தை போன்ற கண்ணிகளிலிருந்து பாதுகாப்பாய் வைக்கப்பட்ட நன்றாய் மேற்பார்வையிடப்பட்ட அந்தப் பொழுதுபோக்கைப் பற்றிய மகிழ்ச்சியான நினைவுகள் அவளுக்கு இருந்தன.—யாக்கோபு 3:17, 18.
22. கூட்டுப் பொழுதுப்போக்கை அனுபவித்து மகிழ்கையில், என்ன எச்சரிக்கையை நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சிந்தனையில் முதல் வைக்கவேண்டும்?
22 அபூரண மாம்ச இச்சைகளுக்கு விட்டுக்கொடாமல், சோதனைகளுக்குப் பாதுகாப்பற்று வைக்கும் திட்டங்களையும் போடாமல் கவனமாயிருக்கும்படி பவுல் நமக்கு வற்புறுத்திக் கூறினார். (ரோமர் 13:11-14) இதில் கூட்டுறவுப் பொழுதுபோக்கும் அடங்கியுள்ளது. இத்தகையவற்றிற்கு அவருடைய அறிவுரையை நாம் பொருத்திப் பயன்படுத்துகையில், சிலரை ஆவிக்குரிய கப்பற்சேதத்துக்கு வழிநடத்தின சூழ்நிலைமைகளை நாம் தவிர்க்க முடியும். (லூக்கா 21:34-36; 1 தீமோத்தேயு 1:19) மாறாக, கடவுளுடன் நம் உறவைக் காத்துவர நமக்கு உதவிசெய்யும் ஆரோக்கியமான பொழுதுபோக்கை நாம் ஞானமாய்த் தெரிந்துகொள்வோம். இவ்வாறு கடவுளுடைய நல்ல வரங்களில் ஒன்றென கருதக்கூடிய கூட்டுப் பொழுதுபோக்கிலிருந்து நாம் நன்மையடைவோம்.—பிரசங்கி 5:18.
[அடிக்குறிப்புகள்]
a தி உவாட்ச்டவர் ஏப்ரல் 15, 1984-ல் (ஆங்கில காவற்கோபுரம்) கலியாணங்கள் மற்றும் கலியாண விருந்துகளின்பேரில் சமநிலையான அறிவுரை அடங்கியுள்ளது. வருங்கால மணமகனாகப்போகிறவரும் அவருடைய மணப்பெண்ணும், அவர்களுக்கு உதவிசெய்யவிருக்கிற மற்றவர்களும், தங்கள் கலியாண திட்டங்களைச் செய்வதற்கு முன்னால், நற்பயனுண்டாக இந்தக் கட்டுரைக்குத் திரும்பப் பார்வை செலுத்தலாம்.
நாம் என்ன கற்றுக்கொண்டோம்?
◻ கூட்டுப் பொழுதுபோக்கை அனுபவித்து மகிழ்வதைப்பற்றி என்ன சமநிலையான கருத்தை நாம் பைபிளில் காண்கிறோம்?
◻ அந்தப் பொழுதுபோக்கின் நேரம் மற்றும் இயல்புக்கு ஏன் கவனம் செலுத்தப்படவேண்டும்?
◻ கண்ணிகளுக்கு எதிராகப் பாதுகாவல் செய்ய விருந்தளிக்கும் கிறிஸ்தவர் செய்யக்கூடிய சில காரியங்கள் யாவை?
◻ பொழுதுபோக்கு தகுதியானதாகவும் சமநிலையானதாகவும் இருந்தால், அது கிறிஸ்தவர்களுக்கு எதை நிறைவேற்றலாம்?
15. கூட்டுறவுக் கூட்டங்களில் சரியான வழிநடத்துதலை எவ்வாறு பெறமுடியும்?
[பக்கம் 18-ன் படம்]
ஒரு கூட்டுறவுக் கூட்டத்தில் விருந்தாளிகள் கண்ணிக்குட்படாதபடி கவனித்துக்கொள்வது விருந்தளிப்பவரின் அல்லது மேற்பார்வையாளரின் பொறுப்பு