உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • jy அதி. 56 பக். 136-பக். 137 பாரா. 2
  • ஒருவரை எது தீட்டுப்படுத்தும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒருவரை எது தீட்டுப்படுத்தும்?
  • இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • இதே தகவல்
  • ஒரு மனுஷனைத் தீட்டுப்படுத்துவது எது?
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • ஒரு மனுஷனைத் தீட்டுப்படுத்துவது எது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • ஓய்வுநாளில் இயேசு குணமாக்குகிறார்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • பார்வை பெற்ற மனிதனைப் பரிசேயர்கள் விசாரிக்கிறார்கள்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
மேலும் பார்க்க
இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
jy அதி. 56 பக். 136-பக். 137 பாரா. 2
ஒரு பரிசேயர் முழங்கைவரை கழுவுகிறார்; சாப்பிட ஆரம்பித்துவிட்ட ஒருவரைக் கோபத்தோடு பார்க்கிறார்

அதிகாரம் 56

ஒருவரை எது தீட்டுப்படுத்தும்?

மத்தேயு 15:1-20 மாற்கு 7:1-23 யோவான் 7:1

  • மனித பாரம்பரியங்கள் கடவுளுடைய வார்த்தையை மதிப்பற்றதாக்குகின்றன

கி.பி. 32-ஆம் வருஷத்தின் பஸ்கா ஆரம்பிக்கப்போகிற சமயத்தில், இயேசு மும்முரமாக கலிலேயாவில் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார். பிறகு, திருச்சட்டம் சொல்கிறபடி பஸ்காவைக் கொண்டாடுவதற்காக எருசலேமுக்குப் போகிறார். ஆனால், யூதர்கள் அவரைக் கொலை செய்ய வழிதேடிக்கொண்டிருப்பதால், அவர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கிறார். (யோவான் 7:1) பண்டிகை முடிந்த பிறகு, கலிலேயாவுக்குத் திரும்பி வருகிறார்.

அவரைப் பார்ப்பதற்காக, பரிசேயர்களும் வேத அறிஞர்களும் எருசலேமிலிருந்து வருகிறார்கள். அநேகமாக, அந்தச் சமயத்தில் இயேசு கப்பர்நகூமில் இருந்திருக்கலாம். பரிசேயர்களும் வேத அறிஞர்களும் எதற்காக இயேசுவைப் பார்க்க வருகிறார்கள்? மத சம்பந்தமான விஷயத்தில் அவர்மேல் குற்றம் கண்டுபிடிப்பதற்காக அவரைத் தேடி வருகிறார்கள். அவர்கள் இயேசுவிடம், “உன்னுடைய சீஷர்கள் ஏன் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறுகிறார்கள்? சாப்பிடுவதற்கு முன்னால் அவர்கள் கை கழுவுவதில்லையே” என்று சொல்கிறார்கள். (மத்தேயு 15:2) இப்படிச் சம்பிரதாயத்துக்காக ‘முழங்கைவரை கழுவ வேண்டும்’ என்று கடவுள் தன்னுடைய மக்களிடம் சொல்லவே இல்லை. (மாற்கு 7:3) ஆனால், அப்படிக் கழுவவில்லை என்றால் அது மிகப் பெரிய குற்றம் என்று பரிசேயர்கள் சொல்கிறார்கள்.

இயேசு அவர்களுடைய கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், அவர்கள் எப்படியெல்லாம் கடவுளுடைய சட்டத்தை வேண்டுமென்றே மீறுகிறார்கள் என்று எடுத்துக்காட்டுகிறார். “உங்களுடைய பாரம்பரியத்தால் ஏன் கடவுளுடைய கட்டளையை மீறுகிறீர்கள்? உதாரணமாக, ‘உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்’ என்றும், ‘அப்பாவையோ அம்மாவையோ கேவலமாகப் பேசுகிற எவனும் கொல்லப்பட வேண்டும்’ என்றும் கடவுள் சொன்னார். ஆனால், ‘ஒருவன் தன் அப்பாவிடமோ அம்மாவிடமோ, “என்னிடம் இருப்பதையெல்லாம் ஏற்கெனவே கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டேன், அதனால் உங்களுக்கு என்னால் உதவி செய்ய முடியாது” என்று சொல்லிவிட்டால், அதன்பின் அவன் தன்னுடைய அப்பாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டியதே இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள்” என்கிறார்.—மத்தேயு 15:3-6; யாத்திராகமம் 20:12; 21:17.

ஒருவர் தன்னுடைய பணத்தையோ சொத்தையோ வேறு ஏதாவது ஒன்றையோ கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டால், அது ஆலயத்துக்குச் சொந்தம் என்றும், அதை வேறு எந்தக் காரியத்துக்கும் பயன்படுத்த முடியாது என்றும் பரிசேயர்கள் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில், அர்ப்பணிக்கப்பட்ட பொருளை அந்த நபரே வைத்துக்கொள்ள பரிசேயர்கள் அனுமதிக்கிறார்கள். உதாரணமாக, ஒருவர் தன்னுடைய சொத்தை கொர்பானாக, அதாவது கடவுளுக்கோ ஆலயத்துக்கோ காணிக்கையாக, கொடுத்துவிடுவதாகச் சொல்லலாம். இப்போது அந்தச் சொத்து ஆலயத்துக்குச் சொந்தமாகிவிட்டது போலத் தெரியும். ஆனால் உண்மையில், அந்தச் சொத்து அந்த நபரிடம்தான் இருக்கும். தன்னுடைய தேவைக்காக அதை அவர் பயன்படுத்திக்கொள்வார்; ஆனால், ஏழையாக இருக்கிற தன்னுடைய வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்ள அதைப் பயன்படுத்த முடியாது என்று சொல்வார். இப்படி, பெற்றோரைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடுவார்.—மாற்கு 7:11.

திருச்சட்டத்தைத் தங்கள் இஷ்டத்துக்கு அவர்கள் மாற்றிக்கொள்வதைப் பார்த்து இயேசு கோபப்பட்டதில் தவறே இல்லை. அவர்களிடம், “உங்களுடைய பாரம்பரியத்தால் கடவுளுடைய வார்த்தையை மதிப்பற்றதாக்கிவிடுகிறீர்கள். வெளிவேஷக்காரர்களே, உங்களைப் பற்றி ஏசாயா சரியாகத்தான் இப்படித் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்: ‘இந்த ஜனங்கள் என்னை உதட்டளவில் புகழ்கிறார்கள். ஆனால், இவர்களுடைய இதயம் என்னைவிட்டுத் தூரமாக இருக்கிறது. இவர்கள் என்னை வணங்குவது வீண், ஏனென்றால் மனுஷர்களுடைய கோட்பாடுகளைத்தான் இவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்’” என்று சொல்கிறார். இயேசு இப்படிக் கடுமையாகக் கண்டித்ததைக் கேட்டு பரிசேயர்கள் வாயடைத்துப்போய் நிற்கிறார்கள். பிறகு, இயேசு கூட்டத்தாரைத் தன் பக்கத்தில் வரச் சொல்லி, “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு, அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு மனுஷனுடைய வாய்க்குள் போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது; அவனுடைய வாயிலிருந்து வெளியே வருவதுதான் அவனைத் தீட்டுப்படுத்தும்” என்கிறார்.—மத்தேயு 15:6-11; ஏசாயா 29:13.

பிறகு இயேசு ஒரு வீட்டில் இருக்கும்போது சீஷர்கள் அவரிடம் வந்து, “நீங்கள் சொன்னதைக் கேட்டு பரிசேயர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், “என் பரலோகத் தகப்பன் நடாத எந்தச் செடியும் வேரோடு பிடுங்கப்படும். அவர்களை விடுங்கள். அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இரண்டு பேருமே குழியில்தான் விழுவார்கள்” என்று சொல்கிறார்.—மத்தேயு 15:12-14.

ஒருவரை எது தீட்டுப்படுத்தும் என்று தெரிந்துகொள்ள சீஷர்கள் எல்லாருமே விரும்புகிறார்கள். அவர்கள் சார்பாக பேதுரு இயேசுவிடம் அதைப் பற்றிக் கேட்கிறார். சீஷர்கள் இப்படிக் கேட்பதைப் பார்த்து இயேசு ஆச்சரியப்படுகிறார். அதனால், “ஒருவனுடைய வாய்க்குள் போகிற எல்லாமே வயிற்றுக்குள் போய் பின்பு கழிப்பிடத்துக்குப் போய்விடுகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆனால், வாயிலிருந்து வருவதெல்லாம் இதயத்திலிருந்து வருகின்றன; அவைதான் ஒரு மனுஷனைத் தீட்டுப்படுத்துகின்றன. உதாரணமாக, பொல்லாத யோசனைகள், கொலை, மணத்துணைக்குத் துரோகம், பாலியல் முறைகேடு, திருட்டு, பொய் சாட்சி, நிந்தனை என எல்லா தீமைகளும் இதயத்திலிருந்தே வருகின்றன. இவைதான் ஒரு மனுஷனைத் தீட்டுப்படுத்துகின்றன; கை கழுவாமல் சாப்பிடுவது அவனைத் தீட்டுப்படுத்தாது” என்று சொல்கிறார்.—மத்தேயு 15:17-20.

சுத்தமாக இருப்பது தவறு என்று இயேசு சொல்லவில்லை. உணவு சமைப்பதற்கு முன்போ, சாப்பிடுவதற்கு முன்போ கைகளைக் கழுவத் தேவையில்லை என்றும் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, மனித பாரம்பரியங்களைக் கடைப்பிடித்துக்கொண்டு, கடவுளுடைய நீதியான சட்டங்களை ஒதுக்கித்தள்ளுகிற மதத் தலைவர்களின் வெளிவேஷத்தைத்தான் அவர் கண்டிக்கிறார். உண்மையில், இதயத்திலிருந்து வருகிற கெட்ட செயல்கள்தான் ஒருவரைத் தீட்டுப்படுத்துகின்றன.

  • பரிசேயர்களும் வேத அறிஞர்களும் எந்த விஷயத்தைப் பற்றிக் குறை சொல்கிறார்கள்?

  • பரிசேயர்கள் எப்படி வேண்டுமென்றே திருச்சட்டத்தை மீறுவதாக இயேசு சொல்கிறார்?

  • எந்த விஷயங்கள் ஒருவரை உண்மையில் தீட்டுப்படுத்துகின்றன?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்