இயேசுவின் வருகையா அல்லது இயேசுவின் வந்திருத்தலா—எது?
“உம்முடைய வந்திருத்தலுக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்?”—மத்தேயு 24:3, NW.
1. இயேசுவின் ஊழியத்தில் கேள்விகள் என்ன பாகத்தை வகித்தன?
இயேசு கேள்விகளைத் திறமையோடு பயன்படுத்தினது, அவருக்குச் செவிகொடுப்போரைச் சிந்திக்கும்படி செய்வித்தது, காரியங்களைப் புதிய நோக்குநிலைகளிலிருந்து கவனிக்கும்படியும் செய்வித்தது. (மாற்கு 12:35-37; லூக்கா 6:9; 9:20; 20:3, 4) கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததற்காகவும்கூட நாம் நன்றியுள்ளோராக இருக்கலாம். நாம் மற்றபடி அறிந்திருக்க அல்லது புரிந்திருக்க முடியாத சத்தியங்களை அவருடைய பதில்கள் தெளிவாக்குகின்றன.—மாற்கு 7:17-23; 9:11-13; 10:10-12; 12:18-27.
2. நாம் என்ன கேள்விக்கு இப்போது நம்முடைய கவனத்தைச் செலுத்த வேண்டும்?
2 இயேசு என்றாவது பதிலளித்த எவற்றிற்கும் மேலாக, மிக அதிக முக்கியமான கேள்விகளில் ஒன்றை மத்தேயு 24:3-ல் நாம் காண்கிறோம். பூமிக்குரிய தம்முடைய வாழ்க்கையின் முடிவு நெருங்கியிருக்க, இயேசு, யூத ஒழுங்குமுறையின் முடிவைக் குறிப்பதாய், எருசலேமின் ஆலயம் அழிக்கப்படும் என்று அப்போதுதான் எச்சரித்திருந்தார். மத்தேயுவின் விவரப்பதிவு இவ்வாறு மேலும் கூட்டுகிறது: “அவர் ஒலிவ மலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரைத் தனியே அணுகி: ‘இந்தக் காரியங்கள் எப்போது சம்பவிக்கும், உம்முடைய வந்திருத்தலுக்கும் [“வருகைக்கும்,” தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு] இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்?’ என்று கேட்டார்கள்.”—மத்தேயு 24:3, NW.
3, 4. மத்தேயு 24:3-ல் ஒரு முக்கிய சொல்லை பைபிள்கள் மொழிபெயர்த்திருப்பதில் கவனிக்கத்தக்க என்ன வேறுபாடுள்ளது?
3 ‘சீஷர்கள் ஏன் அந்தக் கேள்வியைக் கேட்டார்கள், இயேசுவின் பதில் என்னை எவ்வாறு பாதிக்க வேண்டும்?’ என்று பைபிள் வாசகரான கோடிக்கணக்கானோர் வியந்து சிந்தித்திருக்கின்றனர். தம்முடைய பதிலில் இயேசு, இலைகள் துளிர்த்து வசந்தகாலம் “சமீபமாயிற்று” என்று காட்டுவதைப் பற்றி பேசினார். (மத்தேயு 24:32, 33) ஆகையால், இயேசுவினுடைய “வருகையின்” ஓர் அடையாளத்தை, அவருடைய திரும்பிவருதல் அண்மையில் நிகழவிருந்ததென்று நிரூபிக்கும் அடையாளத்தை அப்போஸ்தலர் கேட்டனரென்று பல சர்ச்சுகள் போதிக்கின்றன. அவருடைய “வருகையானது,” கிறிஸ்தவர்களைப் பரலோகத்துக்கு அவர் கூட்டிச் சென்று, பின்பு இந்த உலகத்தின் முடிவைக் கொண்டுவருகிற அதே கணநேரமாக இருக்குமென்று அவர்கள் நம்புகிறார்கள். இது திருத்தமானதென்று நீங்கள் நம்புகிறீர்களா?
4 பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) உட்பட, பைபிள் மொழிபெயர்ப்புகள் சில, “வருகை” என்று மொழிபெயர்ப்பதற்குப் பதிலாக, “வந்திருத்தல்” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன. சீஷர்கள் எதைப் பற்றிக் கேட்டார்கள் என்பதும், இயேசு பதிலாகச் சொன்னதும் சர்ச்சுகளில் போதிக்கப்படுவதிலிருந்து வேறுபடக்கூடுமா? உண்மையில் என்ன கேட்கப்பட்டது? என்ன பதிலை இயேசு அளித்தார்?
அவர்கள் எதைப்பற்றி கேட்டார்கள்?
5, 6. மத்தேயு 24:3-ல் நாம் வாசிக்கிற அந்தக் கேள்வியை அப்போஸ்தலர் கேட்டபோது, அவர்களுடைய சிந்தனையைப் பற்றி நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
5 ஆலயத்தைப் பற்றி இயேசு சொன்னதைக் கவனிக்கையில், சீஷர்கள், ‘அவருடைய வந்திருத்தலையும் [அல்லது, “வருகையையும்”] இந்தக் காரிய ஒழுங்குமுறையின் [சொல்லர்த்தமாய், “சகாப்தத்தின்”] முடிவையும் குறிக்கும் ஓர் அடையாளத்தைக்’ கேட்டபோது, யூத ஏற்பாட்டைப் பற்றி அவர்கள் பெரும்பாலும் சிந்தித்திருக்கலாம்.—1 கொரிந்தியர் 10:11-லும் கலாத்தியர் 1:4-லும், கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில் (ஆங்கிலம்) “உலகம்” என்பதை ஒப்பிட்டுக் காண்க.
6 இந்தச் சமயத்தில் அப்போஸ்தலர், இயேசுவின் போதகத்தை மட்டுப்பட்ட அளவிலேயே புரிந்துகொண்டிருந்தார்கள். “தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று” அவர்கள் இதற்கு முன்னால் கற்பனைசெய்திருந்தார்கள். (லூக்கா 19:11; மத்தேயு 16:21-23; மாற்கு 10:35-40) ஒலிவமலையின்மேல் இந்த உரையாடலுக்குப் பின்புங்கூட, ஆனால் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்படுவதற்கு முன்பாக, இஸ்ரவேல் ராஜ்யத்தை இயேசு அப்போது திரும்ப நிலைநாட்டவிருந்தாராவென அவர்கள் அவரைக் கேட்டார்கள்.—அப்போஸ்தலர் 1:6.
7. இயேசுவின் எதிர்கால பொறுப்பைப் பற்றி அப்போஸ்தலர் ஏன் அவரைக் கேட்க வேண்டும்?
7 எனினும், அவர் சென்றுவிடுவார் என்று அவர்கள் அறியவில்லை, ஏனெனில், “இன்னும் கொஞ்சக் காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்: . . . ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்,” என்று சமீபத்தில்தானே அவர் சொல்லியிருந்தார். (யோவான் 12:35; லூக்கா 19:12-27) ஆகையால், ‘இயேசு சென்றுவிடவிருக்கிறார் என்றால், அவர் திரும்பிவருவதை நாம் எவ்வாறு தெரிந்துகொள்வோம்?’ என்று அவர்கள் நிச்சயமாகவே சிந்தித்திருக்கலாம். மேசியாவாக அவர் தோன்றினபோது, பெரும்பான்மையர் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. மேசியா செய்யவேண்டிய எல்லாவற்றையும் அவர் நிறைவேற்றுவாரா என்பதைப் பற்றி, ஓர் ஆண்டுக்குப் பின்னும், சந்தேகங்கள் இருந்துவந்தன. (மத்தேயு 11:2, 3) ஆகையால் எதிர்காலத்தைப் பற்றி கேட்க அப்போஸ்தலருக்குக் காரணம் இருந்தது. ஆனால், மறுபடியுமாக, அவர்கள் அடையாளத்தைக் கேட்டுக்கொண்டிருந்தது அவர் சீக்கிரத்தில் வருவார் என்பதற்காகவா அல்லது வேறு ஏதாவதற்காகவா?
8. அப்போஸ்தலர் பெரும்பாலும் என்ன மொழியை இயேசுவுடன் பேசியிருக்கலாம்?
8 ஒலிவமலையில் இந்த உரையாடலுக்குச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பறவையாக நீங்கள் இருந்தீர்களென்று கற்பனை செய்துகொள்ளுங்கள். (பிரசங்கி 10:20-ஐ ஒப்பிடுக.) இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் எபிரெயுவில் பேசியதை ஒருவேளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். அவர்கள் பெரும்பாலும் எபிரெயுவில் கலிலேய அசையழுத்த உச்சரிப்புடன் பேசியிருக்கலாம். (மாற்கு 14:70; யோவான் 5:2; 19:17, 20; அப்போஸ்தலர் 21:40) எனினும், கிரேக்க மொழியையும் அவர்கள் அநேகமாய் அறிந்திருந்திருக்கலாம்.
கிரேக்கில்—மத்தேயு எழுதினது
9. மத்தேயு சுவிசேஷத்தின் தற்கால மொழிபெயர்ப்புகள் பெரும்பான்மையானவை எவற்றின்பேரில் ஆதாரங்கொள்ள செய்யப்பட்டிருக்கின்றன?
9 மத்தேயு தன் சுவிசேஷத்தை முதலாவதாக எபிரெயுவில் எழுதினாரென, பொ.ச. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூலப்பதிவுகள் காட்டுகின்றன. பிற்பாடு அவர் அதைக் கிரேக்கில் எழுதினாரெனத் தெரிகிறது. கிரேக்கிலுள்ள பல கையெழுத்துப் பிரதிகள் நம்முடைய காலம் வரையில் அழியாதிருந்து, அவருடைய சுவிசேஷத்தை இன்றைய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு ஆதாரங்களாகச் சேவித்திருக்கின்றன. ஒலிவ மலையின்மேல் நடைபெற்ற அந்த உரையாடலைப் பற்றி கிரேக்கில் மத்தேயு என்ன எழுதினார்? சீஷர்கள் கேட்டதும் இயேசு அதன்பேரில் விளக்கமளித்ததுமான ‘வருகையை’ அல்லது ‘வந்திருத்தலைப்’ பற்றி அவர் என்ன எழுதினார்?
10. (அ) “வா” என்பதற்கான எந்தக் கிரேக்கச் சொல்லை மத்தேயு அடிக்கடி பயன்படுத்தினார், அது என்ன அர்த்தங்களை உடையதாக இருக்கலாம்? (ஆ) வேறு எந்தக் கிரேக்கச் சொல் அக்கறைக்குரியதாக உள்ளது?
10 மத்தேயுவின் முதல் 23 அதிகாரங்களில், ‘வருதல்’ என்பதற்கான பொது கிரேக்க வினைச்சொல்லாகிய எர்கோமாய் (erʹkho·mai) என்பதை 80 தடவைக்குமேல் நாம் காண்கிறோம். இது, ‘இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு,’ என்று யோவான் 1:47-ல் இருப்பதுபோல், அணுகுதல் அல்லது நெருங்கி வருதல் என்ற எண்ணத்தை அடிக்கடி அளிக்கிறது. பயன்படுத்தும் முறையைச் சார்ந்து, இந்த வினைச்சொல்லாகிய எர்கோமாய்-ஐ, “வந்துசேர்,” “போ,” “அடை,” “போய்ச்சேர்,” அல்லது “தன் வழியே செல்,” என்று அர்த்தங்கொள்ளலாம். (மத்தேயு 2:8, 11; 8:28; யோவான் 4:25, 27, 45; 20:4, 8; அப்போஸ்தலர் 8:40; 13:51) ஆனால் மத்தேயு 24:3, 27, 37, 39-ல், மத்தேயு வேறு ஒரு சொல்லைப் பயன்படுத்தினார், அது சுவிசேஷங்களில் வேறு எங்கும் காணப்படாத ஒரு பெயர்ச்சொல்லாகிய பரோசீயா (pa·rou·siʹa) என்பதே. பைபிள் எழுதப்படுவதை கடவுள் ஏவினதால், மத்தேயு தன் சுவிசேஷத்தைக் கிரேக்கில் எழுதினபோது, இவ்வசனங்களிலுள்ள இந்தக் கிரேக்கச் சொல்லைத் தெரிந்துகொள்ளும்படி அவர் ஏன் செய்வித்தார்? இதன் அர்த்தமென்ன, நாம் ஏன் அதைத் தெரிந்துகொள்ள விரும்ப வேண்டும்?
11. (அ) பரோசீயா-வின் கருத்தென்ன? (ஆ) ஜொஸிபஸின் எழுத்துக்களிலிருந்து கொடுக்கப்படும் உதாரணங்கள் பரோசீயா-வைப் பற்றிய நம் புரிந்துகொள்ளுதலை எவ்வாறு உறுதிப்படுத்துகின்றன? (அடிக்குறிப்பைக் காண்க.)
11 முக்கியமாய் பரோசீயா ஆனது “வந்திருத்தல்” என அர்த்தப்படுகிறது. வைன் என்பவருடைய புதிய ஏற்பாடு சொற்களின் விளக்கவிவர அகராதி (ஆங்கிலம்) இவ்வாறு சொல்கிறது: “பரோசீயா, . . . சொல்லர்த்தமாக, வந்திருத்தல், பாரா, உடன், மற்றும் ஓசியா, இருத்தல் (யீமி, இருப்பது), ஒரு வந்துசேருதலையும் அதனியல்பாக அங்கிருப்பதையும் குறிக்கிறது. உதாரணமாக, ஒரு நாணற்புல் தாள் கடிதத்தில் ஓர் அம்மாள், தன் சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களைக் கவனிப்பதற்காக ஓர் இடத்தில் தன் பரோசீயாவின் அவசியத்தைப் பற்றி பேசுகிறாள்.” ‘ஓர் அரசர் வந்திருப்பதை’ பரோசீயா குறித்துக்காட்டுகிறதென்று மற்ற அகராதிகள் விளக்குகின்றன. ஆகையால் அது, வந்துசேரும் அந்த விநாடிதானே அல்ல, ஆனால் வந்துசேர்ந்ததிலிருந்து நீடித்து இருப்பதாக உள்ளது. அவ்வாறே யூத சரித்திராசிரியராகிய ஜொஸிபஸ், பரோசீயா-வைப் பயன்படுத்தியிருப்பது, கவனத்தைக் கவருவதாக உள்ளது. இவர் அப்போஸ்தலரின் காலத்தில் வாழ்ந்தவர்.a
12. பைபிள்தாமே எவ்வாறு பரோசீயா-வின் அர்த்தத்தை உறுதிப்படுத்திக்கொள்ள நமக்கு உதவிசெய்கிறது?
12 “வந்திருத்தல்” என்ற அர்த்தம் பூர்வ இலக்கியங்களில் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் பரோசீயா-வை, கடவுளுடைய வார்த்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதில் கிறிஸ்தவர்கள் முக்கியமாய் அக்கறையுடையோராக இருக்கின்றனர். அவ்விதமாகவே—வந்திருத்தல்—என்பதாகப் பயன்படுத்தப்படுவதே இதற்குப் பதில். பவுலின் நிருபங்களிலுள்ள உதாரணங்களிலிருந்து இதை நாம் காண்கிறோம். உதாரணமாக, பிலிப்பியருக்கு அவர் இவ்வாறு எழுதினார்: ‘நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும் [“வந்திராதபோதும்,” NW] அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.’ அவர்கள் மகிழ்ச்சியடைவதற்காக அவர்களோடு இருக்கப்போவதைப் பற்றி பேசி, “உங்கள் அனைவரோடுங்கூடத் தங்கியிருப்பேன் [பரோசீயா],” என்கிறார். (பிலிப்பியர் 1:25, 26, தி.மொ.; 2:12) மற்ற மொழிபெயர்ப்புகளில் பின்வருமாறு உள்ளது: “நான் மறுபடியும் உங்களோடிருப்பதால்” (வேமௌத்; நியூ இன்டர்நாஷனல் வர்ஷன்); “நான் உங்களோடு மறுபடியும் இருக்கையில்” (ஜெரூசலம் பைபிள்; நியூ இங்லிஷ் பைபிள்); மேலும், “மறுபடியும் ஒருமுறையாக என்னை உங்கள் மத்தியில் நீங்கள் கொண்டிருக்கையில்.” (இருபதாம் நூற்றாண்டு புதிய ஏற்பாடு [ஆங்கிலம்]) 2 கொரிந்தியர் 10:10, 11-ல் (NW) ‘தான் நேரில் இருப்பதை,’ ‘வந்திராததோடு’ வேறுபடுத்திக் காட்டினார். இந்த உதாரணங்களில் அவர் தாம் சமீபித்து வருவதையோ வந்துசேருவதையோ பற்றி பேசவில்லை என்பது தெளிவாயிருக்கிறது; வந்திருக்கும் கருத்திலேயே பரோசீயா-வை அவர் பயன்படுத்தினார்.b (1 கொரிந்தியர் 16:17-ஐ ஒப்பிட்டுக் காண்க.) எனினும், இயேசுவின் பரோசீயா-வைக் குறிக்கும் குறிப்புரைகளைப் பற்றியதென்ன? அவை அவருடைய ‘வருகையைப்’ பற்றிய கருத்தில் உள்ளனவா, அல்லது நீடித்த வந்திருத்தலைக் குறிக்கின்றனவா?
13, 14. (அ) பரோசீயா ஓரளவு காலத்துக்கு நீடிக்கிறதென்ற முடிவுக்கு நாம் ஏன் வரவேண்டும்? (ஆ) இயேசுவின் பரோசீயா-வினுடைய நீட்சியைப் பற்றி என்ன சொல்லப்பட வேண்டும்?
13 பவுலின் நாளில், ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், இயேசுவின் பரோசீயா-வில் அக்கறையுடையோராக இருந்தனர். ஆனால் ‘மோசம்போகிவிடாமல்’ இருக்கும்படி பவுல் அவர்களை எச்சரித்தார். முதலாவதாக ‘அக்கிரமக்காரன்’ வரவேண்டும், கிறிஸ்தவமண்டல குருமாரே அவ்வாறு இருப்போராக நிரூபித்தனர். ‘அந்த அக்கிரமக்காரன் வருகை சாத்தானுடைய சக்திக்கிசையப் பொய்யான சகல வல்லமையோடும் அடையாளங்களோடும்’ இருக்குமென பவுல் எழுதினார். (2 தெசலோனிக்கேயர் 2:2, 3, 9, தி.மொ.) ‘அந்த அக்கிரமக்காரனின்’ வந்திருத்தல் அல்லது பரோசீயா, கணநேர வந்துசேருகையாக இருக்கவில்லை; அது ஒரு காலமளவாக நீடிக்கும், அக்காலத்தின்போது பொய்யான அடையாளங்கள் நடப்பிக்கப்படும். இது ஏன் கவனிக்கத்தக்கது?
14 இதற்கு நேரடியாக மேலுள்ள வசனத்தைக் கவனியுங்கள்: ‘அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனை ஆண்டவராகிய இயேசு தமது வாயின் சுவாசத்தினால் அழித்துத் தமது வருகையின் பிரசன்னத்தினாலே [“வந்திருத்தலினாலே,” NW] நாசம்பண்ணுவார்.’ ‘அந்த அக்கிரமக்காரனின்’ வந்திருத்தல் ஒரு காலப்பகுதியளவாக இருப்பதுபோல், இயேசுவின் வந்திருத்தலும் ஓரளவு காலம் நீடித்திருந்து, அந்த அக்கிரம ‘அழிவின் மகன்’ அழிக்கப்படுவதில் உச்சக்கட்டத்தை அடையும்.—2 தெசலோனிக்கேயர் 2:8, தி.மொ.
எபிரெயு மொழியின் அம்சங்கள்
15, 16. (அ) மத்தேயு சுவிசேஷம் எபிரெயுவில் மொழிபெயர்க்கப்பட்ட பல மொழிபெயர்ப்புகளில், குறிப்பிட்ட என்ன சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? (ஆ) வேதாகமத்தில் போஹ் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது?
15 முன் கவனித்தபடி, மத்தேயு தன் சுவிசேஷத்தை முதலாவதாக எபிரெயு மொழியில் எழுதினதாகத் தெரிகிறது. ஆகையால், மத்தேயு 24:3, 27, 37, 39-ல் எந்த எபிரெயச் சொல்லை அவர் பயன்படுத்தினார்? தற்கால எபிரெயுவில் மொழிபெயர்க்கப்பட்ட மத்தேயுவின் மொழிபெயர்ப்புகள், அப்போஸ்தலரின் இந்தக் கேள்வியிலும் இயேசுவின் பதிலிலும் போஹ் (bohʼ) என்ற வினைச்சொல்லின் ஒரு வகையைக் கொண்டுள்ளன. இது, பின்வருபவற்றைப்போன்ற வாசிப்புகளுக்கு வழிநடத்தலாம்: “உம்முடையதன் [போஹ்-ன்] மற்றும் இந்தக் காரிய ஒழுங்குமுறையினுடைய முடிவின் அடையாளம் என்னவாயிருக்கும்?” மேலும், “நோவாவின் நாட்கள் இருந்ததுபோலவே, மனுஷகுமாரனுடைய [போஹ்-லும்] இருக்கும்.” போஹ் என்பதன் அர்த்தமென்ன?
16 பல்வேறு கருத்துக்களை உடையதாக இருக்கிறபோதிலும், இந்த எபிரெய வினைச்சொல்லாகிய போஹ் அடிப்படையாக “வா” என்று அர்த்தங்கொள்கிறது. தியோலாஜிக்கல் டிக்ஷனரி ஆஃப் தி ஓல்ட் டெஸ்டமென்ட் இவ்வாறு சொல்கிறது: ‘2,532 தடவை காணப்படுவதாய், போஹ், எபிரெய வேதவாக்கியங்களில் மிக அடிக்கடி பயன்படுத்தும் வினைச்சொற்களில் ஒன்றாகவும் இயக்கத்தைத் தெரிவிக்கும் வினைச்சொற்களில் முதன்மையானதாகவும் உள்ளது.’ (ஆதியாகமம் 7:1, 13; யாத்திராகமம் 12:25; 28:35; 2 சாமுவேல் 19:30; 2 இராஜாக்கள் 10:21; சங்கீதம் 65:2; ஏசாயா 1:23; எசேக்கியேல் 11:16; தானியேல் 9:13; ஆமோஸ் 8:11) இத்தகைய பல அர்த்தங்கள் அடங்கிய ஒரு சொல்லை இயேசுவும் அப்போஸ்தலரும் பயன்படுத்தியிருந்தால், அதன் கருத்து விவாதத்துக்குரியதாக இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்தினார்களா?
17. (அ) இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் உண்மையில் சொன்னதை, மத்தேயுவின் தற்கால மொழிபெயர்ப்புகள் ஏன் சரியாகக் குறிப்பிடாதிருக்கலாம்? (ஆ) இயேசுவும் அப்போஸ்தலரும் என்ன சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பதை நாம் தெரிந்துகொள்வதற்கு உதவும் குறிப்பை வேறு எங்கும் காணலாம், வேறு என்ன காரணத்தினிமித்தமாக இந்த மூலகாரணம் நமக்கு அக்கறைக்குரியதாக உள்ளது? (அடிக்குறிப்பைக் காண்க.)
17 தற்கால எபிரெய பதிப்புகள் மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன; மத்தேயு எபிரெயுவில் எழுதினதை அவை நுட்பமாக அவ்வாறே ஒருவேளை அளிக்காதிருந்திருக்கலாம் என்பதை மனதில் வையுங்கள். உண்மை என்னவென்றால், போஹ் அல்லாமல் வேறொரு சொல்லை, பரோசீயா-வின் கருத்துக்குப் பொருந்திய ஒன்றை, இயேசு பயன்படுத்தியிருக்கலாம். பேராசிரியர் ஜார்ஜ் ஹோவர்ட் எழுதிய, மத்தேயுவின் எபிரெய சுவிசேஷம் (ஆங்கிலம்) என்ற 1995-ன் புத்தகத்திலிருந்து இதை நாம் காண்கிறோம். யூத மருத்துவராகிய ஷெம்-டோப் பென் ஐசக் இப்ன் ஷாப்ரூட், கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடத்தின 14-வது நூற்றாண்டு விவாதத்தின்பேரில் இந்தப் புத்தகம் கவனத்தைச் செலுத்தினது. அந்த ஆவணம் மத்தேயு சுவிசேஷத்தின் ஓர் எபிரெய மூலவாக்கியத்தை அளித்தது. மத்தேயுவின் இந்த மூலவாக்கியம், ஷெம்-டோபின் காலத்தில் லத்தீனிலிருந்து அல்லது கிரேக்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாக இராமல், மிகப் பழமையானதாகவும் தொடக்கத்தில் எபிரெயுவில் எழுதப்பட்டதாகவும் இருந்தது என்பதற்கு அத்தாட்சியுள்ளது.c இவ்வாறு இது, ஒலிவ மலையின்மேல் சொல்லப்பட்டவற்றிற்கு மேலும் நெருங்க நம்மைக் கொண்டுவரலாம்.
18. அக்கறைக்குரியதாயுள்ள என்ன எபிரெயச் சொல்லை ஷெம்-டோப் பயன்படுத்துகிறார், அதன் கருத்தென்ன?
18 மத்தேயு 24:3, 27, 39-ல் ஷெம்-டோபின் மத்தேயு மூலவாக்கியம், போஹ் என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்துகிறதில்லை. அதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட பெயர்ச்சொல்லாகிய பையா (bi·ʼahʹ) என்பதை அது பயன்படுத்துகிறது. அந்தப் பெயர்ச்சொல் எபிரெய வேதவாக்கியங்களில் எசேக்கியேல் 8:5-ல் மாத்திரமே தோன்றுகிறது, அங்கே அது ‘வாசலைக்’ குறிக்கிறது. அங்கே, பையா என்பது வருகையின் செயலைத் தெரிவிப்பதற்குப் பதிலாக, ஒரு கட்டடத்தின் வாசலைக் குறிப்பிடுகிறது; புகுவழியில் அல்லது வாசற்படியில் நீங்கள் இருக்கையில், அந்தக் கட்டடத்தில் இருக்கிறீர்கள். மேலும், சவக்கடல் சுருள்களுக்குள், பைபிள்பூர்வமில்லாத மத ஆவணங்கள், வந்துசேருதல் அல்லது குருத்துவ பணிகளைத் தொடங்குதல் சம்பந்தமாக பையா-வை அடிக்கடி பயன்படுத்துகின்றன. (1 நாளாகமம் 24:3-19; லூக்கா 1:5, 8, 23-ஐக் காண்க.) பூர்வ சிரியாக் (அல்லது, அரமேயிக்) பெஷீட்டாவின் 1986 ஆண்டு எபிரெய மொழிபெயர்ப்பும், மத்தேயு 24:3, 27, 37, 39-ல் பையா-வைப் பயன்படுத்துகிறது. ஆகையால் பூர்வ காலங்களில், இந்தப் பெயர்ச்சொல்லாகிய பையா, பைபிளில் பயன்படுத்தப்பட்ட அந்த வினைச்சொல்லாகிய போஹ்-யிலிருந்து ஒருவாறு வேறுபட்ட ஒரு கருத்தை உடையதாக இருந்திருக்கலாம் என்பதற்கு அத்தாட்சியுள்ளது. இது ஏன் அக்கறைக்குரியது?
19. பையா என்ற சொல்லை, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் பயன்படுத்தியிருந்தால், நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
19 அப்போஸ்தலர் தங்கள் கேள்வியிலும், இயேசு தம்முடைய பதிலிலும் இந்தப் பெயர்ச்சொல் பையா-வைப் பயன்படுத்தியிருந்திருக்கலாம். இயேசுவின் எதிர்கால வந்துசேருகை-யைப் பற்றிய எண்ணத்தைத்தானே அப்போஸ்தலர் உடையோராக இருந்திருந்தாலும், அவர்கள் சிந்தித்துக்கொண்டிருந்ததற்கு மேலாக அதிகத்தைச் சிந்திக்க அனுமதிப்பதற்கு கிறிஸ்து பையா-வைப் பயன்படுத்தியிருக்கலாம். இயேசு ஒரு புதிய வேலைப்பொறுப்பைத் தொடங்குவதற்குத் தாம் வந்துசேருவதை குறிப்பிட்டுக் காட்டியிருக்கலாம்; அவரின் வந்துசேருகை அவருடைய புதிய பொறுப்பின் தொடக்கமாயிருக்கும். மத்தேயு அடுத்து பயன்படுத்தின பரோசீயா-வின் கருத்துக்கு இது ஒத்திருக்கும். இயேசு கொடுத்த கூட்டு “அடையாளம்” அவர் வந்திருந்ததைப் பிரதிபலிப்பதற்கானது என்று யெகோவாவின் சாட்சிகள் நெடுங்காலமாகக் கற்பித்துவந்ததோடு, பையா-வின் இத்தகைய உபயோகத்தை ஆதரிக்க வேண்டும் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.
அவருடைய வந்திருத்தலின் உச்சக்கட்டத்திற்குக் காத்திருத்தல்
20, 21. இயேசுவின் குறிப்பிலிருந்து நோவாவின் நாட்களைப் பற்றி நாம் என்ன கற்றறிந்துகொள்ளலாம்?
20 இயேசுவின் வந்திருத்தலைப் பற்றிய நம்முடைய படிப்பு, நம் வாழ்க்கையின்பேரிலும், நம் எதிர்பார்ப்புகளின்பேரிலும் நேரடியான பாதிப்பை உடையதாக இருக்க வேண்டும். இடைவிடாத விழிப்புடன் நிலைத்திருக்க வேண்டும் என்று இயேசு தம்மைப் பின்பற்றினோரை ஊக்குவித்தார். பெரும்பான்மையர் கவனிக்கமாட்டார்கள் என்றாலும், தம்முடைய வந்திருத்தலைத் தெரிந்துணர்ந்துகொள்ளும்படியான ஓர் அடையாளத்தை அவர் அளித்தார்: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் [“வந்திருத்தலிலும்,” NW] நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் [“வந்திருத்தலிலும்,” NW] நடக்கும்.”—மத்தேயு 24:37-39.
21 நோவாவின் நாட்களின்போது, அந்தச் சந்ததியாரில் பெரும்பான்மையர், வழக்கம்போல் தங்கள் இயல்பான காரியங்களை நடத்திக்கொண்டிருந்தனர். “மனுஷகுமாரனின் வந்திருத்தலிலும்” அப்படியே இருக்குமென்று இயேசு முன்னறிவித்தார். ஒன்றும் நடக்காதென்று நோவாவைச் சுற்றியிருந்த ஜனங்கள் உணர்ந்திருக்கலாம். உண்மையில் என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியும். நீண்ட காலத்திற்குத் தொடர்ந்த அந்நாட்கள், ‘ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோனதான,’ ஓர் உச்சக்கட்டத்திற்கு வழிநடத்தின. லூக்கா இதைப் போன்ற ஒரு விவரத்தை அளிக்கிறார்; அதில் இயேசு, ‘நோவாவின் காலத்தை,’ ‘மனுஷகுமாரனின் காலத்துக்கு’ ஒப்பிட்டார். இயேசு இவ்வாறு அறிவுரை கூறினார்: “மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.”—லூக்கா 17:26-30.
22. மத்தேயு 24-ம் அதிகாரத்திலுள்ள இயேசுவின் தீர்க்கதரிசனத்தில் நாம் ஏன் முக்கியமாய் அக்கறையுடையோராக இருக்க வேண்டும்?
22 இவை யாவும் நமக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை உடையனவாக இருக்கின்றன. எப்படியெனில், இயேசு முன்னறிவித்த சம்பவங்களை—போர்கள், பூமியதிர்ச்சிகள், கொள்ளைநோய்கள், உணவு குறைபாடுகள், மற்றும் அவருடைய சீஷர்களைத் துன்புறுத்துதல் ஆகியவற்றை—நாம் கண்டறிகிற காலத்தில் வாழ்கிறோம். (மத்தேயு 24:7-9; லூக்கா 21:10-12) பெரும்பான்மையர் இவற்றை சரித்திரத்தின் இயல்பான அம்சங்களாகக் கருதுகிறபோதிலும், இத்தகைய நிலைமைகள், முக்கியமாய், சரித்திரத்தையே மாற்றின சச்சரவாகிய முதல் உலகப் போர் முதற்கொண்டு தெளிவாகக் காணப்பட்டு வருகின்றன. எனினும், அத்திமரத்தின் இலைகள் துளிர்ப்பதிலிருந்து வசந்தகாலம் சமீபமாயிற்றென்று விழிப்புள்ள ஆட்கள் புரிந்துகொள்வதைப்போல், உண்மையான கிறிஸ்தவர்கள், முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சம்பவங்களின் அர்த்தத்தை உணர்ந்துகொள்கிறார்கள். இயேசு இவ்வாறு அறிவுரை கூறினார்: “அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.”—லூக்கா 21:31.
23. மத்தேயு 24-ம் அதிகாரத்திலுள்ள இயேசுவின் வார்த்தைகள் யாருக்கு முக்கியமாய்த் தனிப்பட்ட அர்த்தத்தை உடையனவாக இருக்கின்றன, ஏன்?
23 ஒலிவ மலையின்மேல் தாம் கொடுத்த பதிலின் பெரும்பாகத்தை இயேசு, தம்மைப் பின்பற்றினோரின் கவனத்துக்குரியதாக அளித்தார். முடிவு வருவதற்கு முன்பாக பூமி முழுவதிலும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதான, உயிரைக் காக்கும் இந்த வேலையில் பங்குகொள்ளவிருந்தவர்கள் அவர்களே. ‘பாழாக்குகிற அருவருப்பு . . . பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பதை’ உற்றறிந்துகொள்ளக் கூடியோராக இருக்கப்போகிறவர்களும் அவர்களே. மிகுந்த உபத்திரவத்திற்கு முன்பாக ‘ஓடிப்போவதால்’ செவிகொடுத்து செயல்படுவோராக இருக்கப்போகிறவர்களும் அவர்களே. மேலுமான இந்த வார்த்தைகளால் முக்கியமாய்ப் பாதிக்கப்படவிருந்தவர்களும் அவர்களே: “அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.” (மத்தேயு 24:9, 14-22) ஆனால் அந்த ஆழ்ந்த நிதானமான வார்த்தைகள் எதைத்தான் குறிக்கின்றன, அதிகமான சந்தோஷத்தையும், நம்பிக்கையையும், ஆர்வத்தையும் உடையோராக நாம் இப்போது இருப்பதற்கு ஓர் ஆதாரத்தை அவை நமக்கு அளிக்கின்றனவென்று ஏன் சொல்லலாம்? மத்தேயு 24:22-ன்பேரில் பின்வரும் படிப்பு நமக்குப் பதில்களை அளிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a ஜொஸிபஸ் எழுதினதிலிருந்து உதாரணங்கள்: சீனாய் மலையில் மின்னலும் இடியும் “கடவுள் அங்கே வந்திருப்பதாக [பரோசீயா] அறிவித்தன.” ஆசரிப்புக் கூடாரத்தில் அற்புதமானத் தோற்றம் “கடவுளின் வந்திருத்தலைக் [பரோசீயா] காட்டினது.” சுற்றிலுமிருந்த இரதங்களை எலிசாவின் ஊழியக்காரனுக்கு காட்டுவதன்மூலம், கடவுள் “தம்முடைய ஊழியனுக்குத் தம் வல்லமையையும் வந்திருத்தலையும் [பரோசீயா] வெளிப்படுத்தினார்.” ரோம அதிபதி பெட்ரோனியஸ் யூதர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தபோது, மழையை அனுப்புவதன்மூலம், ‘கடவுள் தம்முடைய வந்திருத்தலை [பரோசீயா] பெட்ரோனியஸுக்குக் காட்டினார்’ என்று ஜொஸிபஸ் கூறினார். வெறுமனே அணுகுவதற்கு அல்லது கணநேர வந்துசேருதலுக்கு பரோசீயா ஆனதை ஜொஸிபஸ் பயன்படுத்தவில்லை. அது தொடர்ந்துகொண்டிருந்த, காணக்கூடாததாகவும் இருந்த, வந்திருத்தலைக் குறித்தது. (யாத்திராகமம் 20:18-21; 25:22; லேவியராகமம் 16:2; 2 இராஜாக்கள் 6:15-17)—ஒப்பிட்டுக் காண்க: யூதர்களின் தொன்மை நிகழ்ச்சிகள் (ஆங்கிலம்), புத்தகம் 3, அதிகாரம் 5, பாரா 2 [80]; அதிகாரம் 8, பாரா 5 [202]; புத்தகம் 9, அதிகாரம் 4, பாரா 3 [55]; புத்தகம் 18, அதிகாரம் 8, பாரா 6 [284].
b பரோசீயா என்பது, ‘வந்திருப்பது அல்லது வந்திருப்பவராவது, ஆகவே, அங்கிருப்பதை, வந்துசேருவதைக் குறிக்கிறது; அந்த வருகை முதற்கொண்டு நிலையாகத் தங்கியிருப்பதன் எண்ணம் உள்ளடங்கிய ஒரு வருகை,’ என்று இ. டபிள்யூ. புல்லிங்கர், ஆங்கில மற்றும் கிரேக்க புதிய ஏற்பாடுக்கு திறனாய்வு சார்ந்த அகராதியும் சொல் ஒப்பீட்டாராய்ச்சியும் (ஆங்கிலம்) என்பதில் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
c ஓர் அத்தாட்சியானது, “அந்தப் பெயர்” என்ற எபிரெய சொற்றொடர் அடங்கியதாக அது உள்ளது; முழுமையாக அல்லது சுருக்கப்பட்டதாக, 19 தடவை குறிப்பிட்டுள்ளது. பேராசிரியர் ஹோவர்ட் இவ்வாறு எழுதுகிறார்: “யூத விவாத உரைஞரால் மேற்கோளாகக் காட்டப்பட்ட ஒரு கிறிஸ்தவ ஆவணத்தில் கடவுளுடைய பெயரை வாசிப்பது குறிப்பிடத்தக்கது. கிரேக்க அல்லது லத்தீன் கிறிஸ்தவ ஆவணத்தின் ஓர் எபிரெய மொழிபெயர்ப்பாக இது இருந்தால், சொற்களால் விவரிக்கமுடியாத கடவுளுடைய பெயராகிய ய்ஹ்வ்ஹ் என்பதற்கான ஓர் அடையாளத்தை அல்ல, அடோனாய் [கர்த்தர்] என்பதை இந்த மூலவாக்கியத்தில் காண்பதற்கு ஒருவர் எதிர்பார்ப்பார். . . . சொற்களால் விவரிக்கமுடியாத இந்தப் பெயரை அவர் சேர்த்தது விளக்க முடியாதது. கடவுளுடைய பெயர் ஏற்கெனவே மூலவாக்கியத்தில் அடங்கியிருந்த மத்தேயுவின் பிரதியை ஷெம்-டோப் பெற்றார் என்றும், அதை விலக்குவதன்மூலம் குற்றப்பழிக்கு ஆளாவதைப் பார்க்கிலும் அதைப் பாதுகாத்து வைக்கத் தெரிந்துகொண்டாரென்றும் அத்தாட்சி உறுதியாய் உணர்த்துகிறது.” பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் (ஆங்கிலம்), கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதற்கு ஆதாரமாக ஷெம்-டோபின் மத்தேயுவை (J2) பயன்படுத்துகிறது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ மத்தேயு 24:3-ஐ பைபிள்கள் மொழிபெயர்த் திருப்பதன் வேறுபாட்டைக் காண்பது ஏன் முக்கியம்?
◻ பரோசீயா-வின் அர்த்தமென்ன, இது ஏன் அக்கறைக்குரியதாக உள்ளது?
◻ கிரேக்கிலும் எபிரெயுவிலும் மத்தேயு 24:3-ல் என்ன இணைப்பொருத்தம் இருந்து வரக்கூடும்?
◻ மத்தேயு 24-ம் அதிகாரத்தைப் புரிந்துகொள்வதில், காலம் சம்பந்தமாக என்ன முக்கிய அம்சத்தை நாம் தெரிந்துகொள்வது அவசியம்?
[பக்கம் 10-ன் படம்]
ஒலிவ மலை, எருசலேம் காணக்கூடியதாயுள்ளது