இயற்கைச் சேதங்கள் காலங்களின் அடையாளமா?
“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.” இச்சொற்களுடன், 19 நூற்றாண்டுகளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து அக்கிரம அதிகரிப்புடனும் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய உலகளாவிய பிரசங்க வேலையுடனுங்கூட இத்தகைய நாசகரமான நிகழ்ச்சிகள், ‘இக்காரிய ஒழுங்குமுறையின் முடிவைக்’ குறித்துக்காட்டும் ஒரு கூட்டு அடையாளத்தை அறிமுகப்படுத்துமெனத் தம் சீஷர்களுக்கு விளக்கிக் காட்டினார்.—மத்தேயு 24:3-14.
அதன் காரணமாக, கடந்த தலைமுறைகளைவிட அதிக அழிவுண்டாக்கும் பூகம்பங்களையும், புயல்களையும், வெள்ளங்களையும், வறட்சிகளையும், பஞ்சங்களையும் நாம் பார்க்கிறோமா? விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் முன்னேற்றங்கள் இருப்பினும், அதற்கேற்ப அநேக மக்கள் அதன் விளைவாக கஷ்டப்படுகின்றனரா? என நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
அநேகர், ஆம் என்றே பதிலளிக்கின்றனர். எடுத்துக்காட்டாக, “கடந்த பத்தாண்டுகளைவிட 1990-களில் உலகம் அதிகமான சேதங்களை எதிர்பார்க்கலாம்” என புதிய விஞ்ஞானி (New Scientist) பத்திரிகை எச்சரிக்கிறது. அதேவிதமாக, ஜூன் 1991 ஐநா செய்திப்பட்டியலில் (UN Chronicle) உலக வானிலை ஆய்வமைப்பின் இயக்குநர் கூறினார்: “நிகழ்ச்சிகளின் பொதுப்போக்குத் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. 1960-களிலிருந்து 1980-கள் வரை . . . , பெரும் இயற்கைச் சேதங்கள் நிகழ்வதில் ஐந்துமடங்கு அதிகரிப்பும், கூட்டுமொத்தமான பொருளாதார நஷ்டங்களில் மும்மடங்கு அதிகரிப்பும் இருந்துவந்திருக்கிறது.” இப்பொருளின் பேரில் சிறிது கண்ணோட்டம் செலுத்துவதாய், ஐநா உலக சுகாதார அமைப்பின் உலக சுகாதாரம் (World Health) பத்திரிகை கருத்துரைத்தது: “இயற்கைச் சேதங்களுக்கான சான்றுகளையும் அவற்றின் நாசகரமான பாதிப்புகளுக்கான சான்றுகளையும் சரித்திரத்தினூடே காண முடியும். என்றாலும், 21-ம் நூற்றாண்டு கிட்டி வருகையில், மக்கள்தொகை இயல்பிலும் வாழ்க்கை சூழலிலும் தொழில்நுட்ப நிலைமைகளிலும் மாறிவரும் கலப்பை நாம் எதிர்ப்படுகிறோம். இவை இயற்கை அழிவு மற்றும் மனிதனால் உண்டாகும் அழிவின் பாதிப்புகளுக்குப் பெரும்பான்மையான மக்கள்தொகைகளை அதிகமாக பாதிக்கப்படச் செய்கின்றன.”
நடப்பு நிகழ்ச்சிகளைக் கவனித்துவருகிற ஒருவர், அத்தகைய கூற்றுகளினால் ஆச்சரியப்படுவதில்லை. பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பாக இருந்தாலுஞ்சரி, கலிபோர்னியாவில் ஏற்பட்ட பூகம்பமாக இருந்தாலுஞ்சரி, வங்காள தேசத்தில் ஏற்பட்ட வெள்ளமாக இருந்தாலுஞ்சரி, சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சமாக இருந்தாலுஞ்சரி, ஹவாயில் அடித்த புயலாக இருந்தாலுஞ்சரி, நிகரகுவாவில் ஏற்பட்ட பேரலையாக இருந்தாலுஞ்சரி, செய்தி துறைகளில் பரபரப்பான கதைகளுக்கு குறைவேயில்லை. உலகின் ஏதாவதொரு பகுதியில் சேதத்தைப் பற்றிய அறிக்கையில்லாமல் ஒரு மாதமாகிலும் செல்வதில்லை.
இது ஒரு பெரிய விஷயமல்லவென ஒருசிலர் தட்டிச்சொல்கின்றனர். நம்முடைய காலத்தில் வெறுமனே சரியாக அறிக்கையிடுவதன் காரணமாகவோ சரியான பதிவை வைத்திருப்பதன் காரணமாகவோ ஒருவேளை அதிக சேதங்கள் ஏற்படுகிறதென்று அவர்கள் வாதிடுகின்றனர். இன்று நிறைய மக்கள் இருப்பதால்தான் அநேகர் சேதங்களினால் அவதிப்படுகின்றனரென அவர்கள் மேலுமாக வாதிடுகின்றனர். இவ்வாதங்கள்தான் முழுக் கதையுமேயா?
மேற்கோள் காட்டப்பட்ட புதிய விஞ்ஞானி கட்டுரையில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். “1960-களில் 523-ம் 1970-களில் 767 சேதங்களும் அறிக்கை செய்யப்பட்டன. 1980-களில், எண்ணிக்கை 1387-ஐ எட்டிவிட்டிருந்தது.” அது மேலுமாக, “கடந்த பத்தாண்டின்போது ஏற்பட்ட பாதி அதிகரிப்பு ஒருவேளை சீனாவிலும் சோவியத் யூனியனிலும் ஏற்பட்ட சேதங்களை மிகவும் வெளிப்படையாக அறிக்கை செய்ததனாலாகும்” என விளக்கம் தருகிறது. பின்னர் அது கூடுதலாக சொல்கிறது: “அவ்வாறிருந்தும், எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.” சேத எண்ணிக்கையில் இந்தத் திடீர் அதிகரிப்பு, சரியாக அறிக்கையிடுவதாலும் அல்லது சரியான பதிவை வைத்திருப்பதாலுமே என விளக்கம் தந்து விட்டுவிடமுடியாது.
மேலும், மார்ச் 1992 ஐநா செய்திப்பட்டியல் அறிக்கையிடுகிறது: “கடந்த இருபதாண்டுகளாக, சுமார் 30 லட்சம் பேர் உயிரிழந்தனர். இன்னும் கூடுதலாக 80 கோடி ஆட்கள் இயற்கைச் சேதத்தினால் உண்டாகும் ‘பெருஞ்சேதம், அவஸ்தை, துன்பம்’ ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.” பூமியிலிருக்கும் 7 நபர்களில் சுமார் ஒரு நபர், ஏதோவொரு வகையான சேதத்தினாலோ அவல நிகழ்ச்சியினாலோ பாதிக்கப்பட்டிருக்கிறாரென இது பொருட்படுகிறது. அது நிஜமாக திகைப்பூட்டுவதாயிருக்கிறது, நாம் வாழ்வது கொந்தளிப்பான, பதற்றமான காலமென்பதைச் சந்தேகிப்பதற்குச் சற்றும் இடமில்லை.
இப்படிப்பட்ட ஒரு பெரும் அல்லற்படும் காலத்தைக் குறித்துப் பைபிள் முன்கூட்டியே கூறுவதால், அவற்றினால் உண்டாகும் சேதங்களுக்கும் துன்பத்துக்கும் கடவுள்தான் பொறுப்பாளியென இது பொருட்படுகிறதா? அநேகர் அவ்வாறு நினைக்கின்றனர். ஆனால் உண்மைகள் என்ன காட்டுகின்றன? மேலும் அதிமுக்கியமாக, பைபிள் என்ன காட்டுகிறது?