சகிப்புத்தன்மை—கிறிஸ்தவர்களுக்கு அத்தியாவசியமானது
‘உங்கள் விசுவாசத்தோடே சகிப்புத்தன்மையையும் கூட்டி வழங்குங்கள்.’—2 பேதுரு 1:5-7, NW.
1, 2. நாம் அனைவருமே ஏன் முடிவுவரை சகித்திருக்கவேண்டும்?
பயணக் கண்காணியும் அவருடைய மனைவியும், தன்னுடைய 90-களில் உள்ள ஓர் உடன் கிறிஸ்தவரைச் சந்தித்தனர். பல பத்தாண்டுகளாக அவர் முழுநேர ஊழியத்தில் பங்கெடுத்திருக்கிறார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த முதிர்வயதான சகோதரர் பல வருடங்களாக அனுபவித்த சிலாக்கியங்களைப் பற்றிய பழைய எண்ணங்களை நினைத்துப் பார்த்தார். “ஆனால்,” அவர் முகத்தில் கண்ணீர் வடிய ஆரம்பிக்க, “இப்போது என்னால் எதையும் அதிகமாகச் செய்ய முடிவதில்லை,” என்று அங்கலாய்த்துக்கொண்டார். பயணக் கண்காணி தன்னுடைய பைபிளைத் திறந்து, மத்தேயு 24:13-ஐ வாசித்தார்; அங்கு இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னதாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே [சகித்திருப்பவனே, NW] இரட்சிக்கப்படுவான்.” பின்பு கண்காணி இந்த அருமையான சகோதரரைப் பார்த்து சொன்னார்: “நாம் எவ்வளவு அதிகமாக அல்லது எவ்வளவு குறைவாகச் செய்ய முடிகிறது என்பதைவிட, நம் அனைவருக்கும் இருக்கும் கடைசி பொறுப்பு என்னவென்றால், முடிவு பரியந்தம் சகித்திருப்பதே ஆகும்.”
2 ஆம், கிறிஸ்தவர்களாக நாம் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு அல்லது நம் வாழ்க்கையின் முடிவுவரை சகிக்க வேண்டியதிருக்கிறது. இரட்சிப்பிற்கான யெகோவாவின் அங்கீகாரத்தை வேறு எந்த வழியிலும் பெற முடியாது. ஜீவனுக்கான ஓட்டப்பந்தயத்தில் நாம் இருக்கிறோம். இறுதிக் கோட்டை அடையும் வரை நாம் “சகிப்புத்தன்மையோடே ஓடக்கடவோம்.” (எபிரெயர் 12:1) “உங்கள் விசுவாசத்தோடே சகிப்புத்தன்மையையும் கூட்டி வழங்குங்கள்,” என்று அப்போஸ்தலன் பேதுரு உடன் கிறிஸ்தவர்களை உத்வேகப்படுத்தியபோது, இந்தப் பண்பின் முக்கியத்துவத்தை அழுத்திக்காண்பித்தார். (2 பேதுரு 1:5-7, NW) ஆனால் சகிப்புத்தன்மை என்பது உண்மையில் என்ன?
சகிப்புத்தன்மை —அது அர்த்தப்படுத்துவது என்ன
3, 4. சகித்துக்கொள்வது என்றால் என்ன?
3 சகித்துக்கொள்வது என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? “சகித்துக்கொள்தல்” (hy·po·meʹno) என்ற கிரேக்க வார்த்தை, “தொடர்ந்திரு அல்லது அடங்கியிரு” என்று சொல்லர்த்தமாக பொருள்படுகிறது. இது பைபிளில் 17 முறை வருகிறது. அகராதிவியலாளர்கள் W. பாவர், F. W. கிங்ரிச், F. டேன்க்கர் ஆகியோர் சொல்கிறப்பிரகாரம், இது “ஓடிவிடுவதைவிட தொடர்ந்து இருப்பதை . . . நிலைத்திருப்பதை . . . நீடித்திருப்பதை,” அர்த்தப்படுத்துகிறது. “சகித்துக்கொள்தல்” என்பதன் கிரேக்க பெயர்ச்சொல் (hy·po·mo·neʹ) 30 தடவைகளுக்கு மேல் வருகிறது. இதைப்பற்றி உவில்லியம் பார்க்லேயின் புதிய ஏற்பாடு சொற்களஞ்சியம் (A New Testament Wordbook) சொல்கிறது: சகிப்புத்தன்மை என்பது பொறுத்துக்கொள்ளும் மனநிலையைக் குறிக்கிறது, வெறுமனே பொறுமையுடன் பணிந்துவிடுவது அல்ல, ஆனால் ஆர்வமிக்க நம்பிக்கையை உட்படுத்துகிறது . . . ஒரு மனிதன் பிரச்னையை எதிர்ப்படும்போது தன்னுடைய சொந்த கால்களில் நிற்கச் செய்ய அந்தப் பண்பு உதவிசெய்கிறது. மிகக் கடினமான சோதனையை பேரின்பமாக மாற்றக்கூடிய ஒரு நற்பண்பு அது. ஏனென்றால் வேதனைக்கு அப்பால் இலக்கை நோக்கிப் பார்க்கிறது.”
4 எனவே, சகிப்புத்தன்மை இடையூறுகள் அல்லது கஷ்டங்கள் வரும்போது நாம் உறுதியாக நிற்பதற்கும், நம்பிக்கையை இழக்காமல் இருக்கவும் உதவிசெய்கிறது. (ரோமர் 5:3-5) அது தற்கால வேதனைக்கு அப்பால் இலக்கை நோக்கிப் பார்க்கிறது—பரலோகத்திலோ பூமியிலோ நித்திய ஜீவ பரிசு அல்லது வரம்.—யாக்கோபு 1:12.
சகிப்புத்தன்மை—ஏன்?
5. (அ) கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ‘சகிப்புத்தன்மை அவசியமாயிருப்பது’ ஏன்? (ஆ) நாம் எதிர்ப்படும் சோதனைகள் என்ன இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படலாம்?
5 கிறிஸ்தவர்களாகிய நம் அனைவருக்கும் “சகிப்புத்தன்மை அவசியமாயிருக்கிறது.” (எபிரெயர் 10:36, NW) ஏன்? முக்கியமாக ஏனென்றால் நாம் ‘பலவிதமான சோதனைகளுக்குள் அகப்படுகிறோம்.’ இங்கே, யாக்கோபு 1:2-ல் உள்ள வசனம் கிரேக்கில், ஒரு மனிதனை கொள்ளையடிப்பவர்கள் தாக்குவதுபோல, எதிர்பாராத அல்லது வரவேற்கப்படாத போராட்டத்தைக் குறிக்கிறது. (லூக்கா 10:30-ஐ ஒப்பிடுங்கள்.) நாம் எதிர்ப்படும் சோதனைகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படலாம்: சுதந்தரிக்கப்பட்ட பாவத்தினால் பொதுவாக மனிதர்களுக்கு வருபவை, நம்முடைய தேவபக்தியின் காரணமாக வைராக்கியத்தினால் வருபவை. (1 கொரிந்தியர் 10:13; 2 தீமோத்தேயு 3:12) இப்படிப்பட்ட சோதனைகளில் சில யாவை?
6. வேதனைமிக்க நோயால் ஒரு சாட்சி பாதிக்கப்பட்டபோது எப்படி அவர் அதைச் சகித்தார்?
6 கவலைக்கிடமான உடல்நலக் குறைவு. தீமோத்தேயுவைப்போல, சில கிறிஸ்தவர்கள் ‘அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களை’ சகித்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. (1 தீமோத்தேயு 5:23) விசேஷமாக நாட்பட்ட, ஒருவேளை அதிக வேதனைமிக்க நோயால் பாதிக்கப்படும்போது, நம் கிறிஸ்தவ நம்பிக்கையைக் கைவிட்டுவிடாமல் நாம் உறுதியாயிருந்து, கடவுளுடைய உதவியோடு சகித்துக்கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது. ஆரம்ப 50-களில் உள்ள ஒரு சாட்சியின் உதாரணத்தைக் கவனியுங்கள்; அவர் விரைவாக வளர்ந்துவரும் கடும்வேதனைதரும் ஒரு கட்டியோடு நீண்ட கடினமான போராட்டத்தைப் போராடினார். இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு இரத்தம் ஏற்ற மறுக்கும் அவருடைய தீர்மானத்தில் அவர் உறுதியாக நிலைத்திருந்தார். (அப்போஸ்தலர் 15:28, 29) ஆனால் கட்டி அவருடைய அடிவயிற்றில் மறுபடியும் வந்தது; அவருடைய முதுகெலும்புக்கு அருகில் வரை தொடர்ந்து வளர்ந்தது. அவ்வாறு வளர்ந்தபோது, எந்தளவுக்கு மருந்துகொடுக்கப்பட்டாலும் தணியாத, கற்பனைச் செய்யமுடியாத உடல் வலி அவருக்கு இருந்தது. ஆனாலும், தற்போதைய வலிக்கு அப்பால் அந்தப் புதிய உலகத்தில் வாழ்க்கை பரிசு என்பதை எதிர்நோக்கி இருந்தார். அவருடைய பிரகாசமான நம்பிக்கையை மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் பார்க்க வந்தவர்களிடமும் தொடர்ந்து பகிர்ந்துகொண்டார். அவர் இறுதிவரை—அவருடைய வாழ்க்கை முடிவுவரை—சகித்தார். உங்கள் உடல்நலப் பிரச்னை ஒருவேளை உயிருக்கு ஆபத்தாக இருக்காது அல்லது அந்த அருமையான சகோதரர் எதிர்ப்பட்ட அளவிற்கு வேதனைமிக்கதாக ஒருவேளை இருக்காது, ஆனால் அது இன்னும் சகிப்புத்தன்மைக்குச் சோதனையாய் இருக்கலாம்.
7. நம்முடைய சில ஆவிக்குரிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் சகிப்புத்தன்மை எப்படிப்பட்ட வேதனையை உட்படுத்துகிறது?
7 உணர்ச்சிப்பூர்வமான வேதனை. யெகோவாவின் மக்களில் சிலர் அவ்வப்போது ‘மனதுக்கத்தை’ எதிர்ப்படுகின்றனர்; அது ‘முறிந்த ஆவியில்’ முடிவடைகிறது. (நீதிமொழிகள் 15:13) “கையாளுவதற்கு கடினமான கடைசி காலத்தில்” கடுமையான மனச்சோர்வு சாதாரணமாக நிகழ்வதுதான். (2 தீமோத்தேயு 3:1, NW) டிசம்பர் 5, 1992-ன் அறிவியல் செய்திகள் (Science News) இவ்வாறு அறிக்கை செய்தது: “கட்டுப்படுத்தமுடியாத மனச்சோர்வு, 1915-லிருந்து பிறக்கும் ஒவ்வொரு அடுத்தடுத்த சந்ததிக்கும் அதிகமாகியிருக்கிறது.” இப்படிப்பட்ட மனச்சோர்வுக்குக் காரணங்கள் வித்தியாசப்படுகின்றன, உடல் சம்பந்தமான விஷயங்களிலிருந்து, வேதனைமிக்க சகிக்கமுடியாத கஷ்டங்கள் வரையாக வேறுபடலாம். சில கிறிஸ்தவர்களுக்கு, சகிப்புத்தன்மை உணர்ச்சிப்பூர்வமான வேதனையை எதிர்ப்படுவதில் அவர்கள் உறுதியாக நிலைத்திருப்பதற்கு தினந்தோறும் போராடுவதை உட்படுத்துகிறது. ஆனாலும், அவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை. அவர்கள் கண்ணீர்களுக்கு மத்தியிலும் யெகோவாவிற்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள்.—சங்கீதம் 126:5, 6-ஐ ஒப்பிடுங்கள்.
8. என்ன பொருளாதார சோதனையை நாம் எதிர்ப்படக்கூடும்?
8 நாம் எதிர்ப்படும் பல்வேறுபட்ட சோதனைகள் வினைமையான பொருளாதார கஷ்டத்தை உள்ளடக்கக்கூடும். அ.ஐ.மா., நியூ ஜெர்சியிலுள்ள ஒரு சகோதரர் திடீரென்று வேலையிழந்த நிலையில் தன்னைக் கண்டபோது, அவருடைய குடும்பத்தைக் கவனிப்பது, மேலும் அவருடைய வீட்டை இழந்துவிடாதிருப்பதைப் பற்றி கவலையுற்றிருந்தார் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. என்றபோதிலும், அவர் ராஜ்ய நம்பிக்கையில் தளர்ந்துவிடவில்லை. அவர் மற்றொரு வேலைக்காகத் தேடிக்கொண்டிருக்கும்போதே, ஒரு துணைப் பயனியர் சேவை செய்யும் வாய்ப்பை அவர் நழுவ விடவில்லை. இறுதியில் ஒரு வேலை அவருக்குக் கிடைத்தது.—மத்தேயு 6:25-34.
9. (அ) ஓர் அன்பானவரை மரணத்தில் இழப்பது எவ்வாறு சகிப்புத்தன்மையைத் தேவைப்படுத்தக்கூடும்? (ஆ) சோகக் கண்ணீர் விடுவது தவறல்ல என்பதை என்ன வசனங்கள் காண்பிக்கின்றன?
9 ஓர் அன்பானவரை மரணத்தில் இழப்பதை நீங்கள் அனுபவித்திருந்தால், உங்கள் மத்தியில் வாழ்பவர்கள் சகஜமான வாழ்க்கைப்போக்குக்குத் திரும்பிய பின்பும் நீண்ட காலமாக நீடித்திருக்கும் சகிப்புத்தன்மை உங்களுக்குத் தேவைப்படும். ஒவ்வொரு வருடமும் உங்களுடைய அன்பானவர் மரித்த காலப்பகுதி வரும்போது, விசேஷமாகக் கடினமாக இருப்பதாகவுங்கூட நீங்கள் உணர்வீர்கள். அப்படிப்பட்ட இழப்பைச் சகித்துக்கொள்வது என்பது, சோகக் கண்ணீர் விடுவது தவறு என்பதைக் குறிப்பதில்லை. நம் அன்புக்குரிய ஒருவர் மரிக்கையில் துக்கப்படுவது இயற்கையானதே; இது உயிர்த்தெழுதல் நம்பிக்கையில் விசுவாசம் குறைவுபட்டிருக்கிறது என்பதை எந்தவகையிலும் குறிப்பதில்லை. (ஆதியாகமம் 23:2; ஒப்பிடுக: எபிரெயர் 11:19.) லாசரு மரித்த பின்பு, இயேசு மார்த்தாளிடம் “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்,” என்று நம்பிக்கையோடு சொல்லியிருந்தாலும், அவர் “கண்ணீர் விட்டார்.” லாசருவும் உயிர்த்தெழுந்தார்!—யோவான் 11:23, 32-35, 41-44.
10. யெகோவாவின் மக்களுக்குச் சகிப்புத்தன்மையின் ஒரு பிரத்யேகமான தேவை ஏன்?
10 எல்லா மனிதருக்கும் பொதுவாக நேரிடுகிற சோதனைகளைச் சகிப்பதோடு, யெகோவாவின் மக்களுக்குச் சகிப்புத்தன்மையின் ஒரு பிரத்யேகமான தேவையிருக்கிறது. “என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்,” என்று இயேசு எச்சரித்தார். (மத்தேயு 24:9) மேலும் அவர் சொன்னார்: “அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்.” (யோவான் 15:20) இந்த எல்லா பகையும் துன்புறுத்தலும் ஏன்? ஏனென்றால் நாம் யெகோவாவிடமுள்ள ஊழியர்களாக இந்தப் பூமியில் எங்கு வாழ்ந்தாலும், கடவுளிடமுள்ள நம்முடைய உத்தமத்தன்மையை தகர்த்தெறிந்து போடுவதற்கே சாத்தான் முயன்றுகொண்டிருக்கிறான். (1 பேதுரு 5:8; ஒப்பிடுக: வெளிப்படுத்துதல் 12:17.) இந்த நோக்கத்திற்காக, சாத்தான் துன்புறுத்தல் என்னும் தீப்பிழம்புகளை வீசி எறிகிறான்; இது நம்முடைய சகிப்புத்தன்மையை ஒரு கடுமையான சோதனைக்கு உட்படுத்துகிறது.
11, 12. (அ) யெகோவாவின் சாட்சிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் 1930-களில் மற்றும் 1940-களின் ஆரம்பத்தில் சகிப்புத்தன்மையின் என்ன சோதனையை எதிர்ப்பட்டார்கள்? (ஆ) யெகோவாவின் சாட்சிகள் தேசிய சின்னத்தை ஏன் வணங்க மறுக்கின்றனர்?
11 எடுத்துக்காட்டாக, 1930-களில் மற்றும் 1940-களின் ஆரம்பத்தில் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலும் கனடாவிலும் இருந்த யெகோவாவின் சாட்சிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் மனசாட்சியின் நிமித்தமாக தேசிய சின்னங்களுக்கு வணக்கம் செலுத்தாததால் கடும் துன்புறுத்தலுக்குக் குறியிலக்குகளாகி இருந்தனர். சாட்சிகள் தாங்கள் வாழும் தேசத்தின் சின்னங்களை மதிக்கிறார்கள். ஆனால் யாத்திராகமம் 20:4, 5-ல் உள்ள கடவுளுடைய நியாயப்பிரமாணத்தின் நியமத்திற்கு இசைவாக செயல்படுகிறார்கள்: ‘மேலே வானத்திலும் கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறேன்.’ சில சாட்சிகளின் பிள்ளைகள் தங்களுடைய வணக்கத்தை யெகோவாவிற்கு மட்டுமே கொடுக்க விரும்பியதால் அவர்கள் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, சாட்சிகள் தங்களுடைய பிள்ளைகளைப் போதிப்பதற்காக ராஜ்ய பள்ளிகளை ஆரம்பித்தனர். தற்போதைய ஆதரவளிக்கும் நாடுகள் செய்வதுபோல், ஐக்கிய மாகாணங்களின் உச்ச நீதிமன்றம் அவர்களுடைய மத நிலைநிற்கையை ஒத்துக்கொண்டபோது, இந்த மாணவர்கள் பொதுப் பள்ளிகளுக்கு மீண்டும் சென்றார்கள். ஆனாலும் அந்த இளம் நபர்களின் தைரியமிக்க சகிப்புத்தன்மை மதிப்புமிக்க உதாரணமாக சேவிக்கிறது; விசேஷமாக இப்போது கேலிசெய்யப்பட்டு, பழித்துரைக்கப்படுகிற கிறிஸ்தவ இளைஞருக்கு அவ்வாறு இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் பைபிள் தராதரங்களுக்கு இசைவாக வாழ முயற்சிசெய்கிறார்கள்.—1 யோவான் 5:21.
12 நாம் எதிர்ப்படும் பல்வேறு சோதனைகள்—மனிதருக்கு நேரிடும் பொதுவானவை, நம்முடைய கிறிஸ்தவ விசுவாசத்தினால் நாம் எதிர்ப்படுபவை ஆகிய இரண்டு வகைகளும்—நமக்கு ஏன் சகிப்புத்தன்மை தேவை என்பதைக் குறிக்கிறது. ஆனால் நாம் எப்படிச் சகிக்கலாம்?
முடிவுவரை சகித்திருத்தல்—எப்படி?
13. யெகோவா எப்படிச் சகிப்புத்தன்மையைக் கொடுக்கிறார்?
13 யெகோவாவை வணங்காதவர்களைவிட ஓர் உறுதியான மேன்மையை உடையவர்களாகக் கடவுளுடைய மக்கள் இருக்கிறார்கள். ‘சகிப்புத்தன்மையைக் கொடுக்கும் கடவுளிடம்’ நாம் உதவிக்காக வேண்டிக்கொள்ளலாம். (ரோமர் 15:5) அப்படியென்றால், யெகோவா எப்படிச் சகிப்புத்தன்மையைக் கொடுக்கிறார்? அவர் அவ்வாறு செய்யும் ஒரு வழியானது, அவருடைய வார்த்தையாகிய பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள சகிப்புத்தன்மைக்கான உதாரணங்களின்மூலமாகும். (ரோமர் 15:4) நாம் இவற்றை ஆழமாகச் சிந்திக்கையில், நாம் சகித்திருப்பதற்கு உற்சாகப்படுத்தப்படுவதோடு, எப்படிச் சகிக்கலாம் என்பதைப் பற்றியும் அதிகத்தைக் கற்றுக்கொள்கிறோம். இரண்டு சிறந்த உதாரணங்களைச் சிந்தியுங்கள்.—யோபுவின் தைரியமான சகிப்புத்தன்மை, இயேசு கிறிஸ்துவின் பழுதற்ற சகிப்புத்தன்மை.—எபிரெயர் 12:1-3; யாக்கோபு 5:11.
14, 15. (அ) என்ன சோதனைகளை யோபு சகித்தார்? (ஆ) யோபு தான் எதிர்ப்பட்ட சோதனைகளை எப்படிச் சகிக்க முடிந்தது?
14 யோபுவின் சகிப்புத்தன்மை என்னென்ன சூழல்களில் சோதனைக்குட்பட்டது? அவர் அவருடைய உடைமைகளையெல்லாம் இழந்தபோது, பொருளாதார கஷ்டங்களினால் அவதியுற்றார். (யோபு 1:14-17; ஒப்பிடுக: யோபு 1:3.) யோபு தன்னுடைய பத்து குமாரர்கள் அனைவரும் காட்டுப்புயலினால் இறந்தபோது, இழப்பின் வேதனையை உணர்ந்தார். (யோபு 1:18-21) அவர் கவலைக்கிடமான, அதிக வேதனைமிக்க வியாதியால் தாக்கப்பட்டார். (யோபு 2:7, 8; 7:4, 5) அவருடைய சொந்த மனைவியும், கடவுளைக் கைவிடும்படி அவரை வற்புறுத்தினாள். (யோபு 2:9) நெருங்கிய தோழர்கள் புண்படுத்தும் இரக்கமற்ற மற்றும் உண்மையற்ற விஷயங்களைக் கூறினர். (யோபு 16:1-3-ஐயும் யோபு 42:7-ஐயும் ஒப்பிடுக.) எனினும், இவையெல்லாவற்றின் மத்தியிலும் யோபு உத்தமத்தைக் காத்துக்கொண்டு திட உறுதியோடு இருந்தார். (யோபு 27:5) அவர் சகித்த சோதனைகள், இன்று யெகோவாவின் மக்கள் எதிர்ப்படுபவையாக இருக்கின்றன.
15 இந்தச் சோதனைகளையெல்லாம் யோபு எப்படிச் சகிக்க முடிந்தது? யோபுக்கு உறுதுணையாக இருந்த விசேஷமான ஒன்று நம்பிக்கையாகும். அவர் அறிவித்தார்: “ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்.” (யோபு 14:7) யோபு கொண்டிருந்த நம்பிக்கை என்ன? சில வசனங்களுக்குப் பிறகு குறிக்கப்பட்டுள்ள பிரகாரம், அவர் சொன்னார்: “மனுஷன் செத்தப்பின் பிழைப்பானோ? . . . என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.” (யோபு 14:14, 15) ஆம், யோபு அப்போதைய வேதனைக்கும் அப்பால் அவர் கண்டார். அவருடைய சோதனைகள் என்றென்றுமாகத் தொடராது என்று அவருக்குத் தெரியும். அதிகப்பட்சமாக, மரணம்வரை அவர் சகித்திருக்கவேண்டியதிருக்கும். அவருடைய நம்பிக்கையான எதிர்பார்ப்பு, இறந்தவர்களை உயிர்த்தெழுப்ப அன்போடு பிரியப்படும் யெகோவா, அவரை மறுபடியும் உயிருக்குக் கொண்டுவருவார் என்பதே.—அப்போஸ்தலர் 24:15.
16. (அ) யோபுவின் முன்மாதிரியிலிருந்து சகிப்புத்தன்மையைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) இராஜ்ய நம்பிக்கை நமக்கு எவ்வளவு நிஜமானதாக இருக்கவேண்டும், ஏன்?
16 யோபுவின் சகிப்புத்தன்மையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? முடிவுவரை சகித்திருக்க, நம் நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்துவிடாதிருக்கவேண்டும். இராஜ்ய நம்பிக்கையின் நிச்சயத்தன்மை, நாம் எதிர்ப்படும் எந்தவித துன்பமும் ஒப்பிடுகையில் “அதிசீக்கிரத்தில் நீங்கும்,” என்பதை அர்த்தப்படுத்தும். (2 கொரிந்தியர் 4:16-18) நம்முடைய அருமையான நம்பிக்கையானது, சமீப எதிர்காலத்தில் “[நம்முடைய] கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை,” என்று இருக்கப்போகிற காலத்தைப் பற்றிய யெகோவாவின் வாக்குறுதியில் நம் அருமையான நம்பிக்கை உறுதியான ஆதாரங்கொண்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:3, 4) ‘நம்மை வெட்கப்படுத்தாத’ அந்த நம்பிக்கை நம் சிந்தனையைக் காக்கவேண்டும். (ரோமர் 5:4, 5; 1 தெசலோனிக்கேயர் 5:8) நமக்கு இது நிஜமானதாக இருக்கவேண்டும்—அது அவ்வளவு நிஜமானதாக இருப்பதால், நம்முடைய விசுவாசக் கண்களில் நாம்தாமே புதிய உலகத்தில் இருப்பதுபோல் காட்சிகாணலாம்—வியாதியை, மனச் சோர்வை எதிர்த்துப்போராட வேண்டிய அவசியம் இனியிருக்காது, ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் தெளிவான மனதோடும் எழுந்திருப்போம்; வினைமையான பொருளாதார அழுத்தங்களைக்குறித்து இனிமேலும் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் பாதுகாப்பில் வாழ்வோம்; பிரியமானவர்களின் இறப்பிற்காக இனிமேலும் துக்கங்கொள்ள வேண்டியதில்லை, ஆனால் அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவதைப் பார்க்கும் கிளர்ச்சியை அடைவோம். (எபிரெயர் 11:1) அப்படிப்பட்ட நம்பிக்கைமட்டும் இல்லையென்றால், நாம் தற்போதிருக்கும் சோதனைகளால் விட்டுக்கொடுத்திருக்கும் அளவிற்கு ஆட்கொள்ளப்பட்டிருப்போம். தொடர்ந்து போராடுவதற்கும், முடிவுவரை தொடர்ந்து சகித்திருப்பதற்கும் என்னே ஒரு பிரமாதமான தூண்டுதலை நம்முடைய நம்பிக்கையினால் நாம் பெற்றிருக்கிறோம்!
17. (அ) இயேசு என்ன சோதனைகளைச் சகித்தார்? (ஆ) இயேசு சகித்த கடும்வேதனையை எந்த உண்மையிலிருந்து ஒருவேளை காணலாம்? (அடிக்குறிப்பைப் பார்க்கவும்.)
17 பைபிள் இயேசுவை ‘உற்று நோக்கி,’ ‘அவரையே நெருக்கமாக நினைத்துக்கொள்ளுங்கள்’ என்று துரிதப்படுத்துகிறது. அவர் என்ன சோதனைகளைச் சகித்தார்? அவற்றில் சில மற்றவர்களின் பாவத்தினாலும் அபூரணத்தினாலும் வந்தவை. இயேசு, ‘பாவிகளால் செய்யப்பட்ட விபரீதங்களை’ மட்டுமல்ல, அவருடைய சீஷர்களுக்கு மத்தியில் வந்த, யார் பெரியவன் என்று அவர்கள் திரும்பத்திரும்ப வாதாடினதையும் உட்படுத்திய, பிரச்னைகளையும் சகித்தார். இதற்கும் மேலாக, அவர் விசுவாசத்தின் ஈடற்ற சோதனைக்குட்படுத்தப்பட்டார். அவர் “வேதனையின் கழுமரத்தைச் சகித்தார்.” (எபிரெயர் 12:1-3, NW; லூக்கா 9:46; 22:24) ஒரு குற்றவாளியாகச் சாகடிக்கப்படுவதால் வரும் அவமானம், மற்றும் கழுமரத்தில் அறையப்படுவதினால் வரும் மனதின் மற்றும் சரீரப்பிரகாரமான துன்பத்தை எண்ணிப்பார்ப்பதேயுங்கூட அதிக கடினமாயிருக்கிறது.a
18. அப்போஸ்தலன் பவுலின் பிரகாரம் என்ன இரண்டு காரியங்கள் இயேசுவுக்கு ஊக்கமளித்து ஆதரவளித்தன?
18 முடிவுவரை சகித்திருப்பதற்கு இயேசுவுக்கு உதவிசெய்தது என்ன? இயேசுவுக்கு ஊக்கமளித்து ஆதரவளித்த இரண்டு காரியங்களை அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார்: ‘விண்ணப்பங்களும் வேண்டுதல்களும்,’ மேலும், ‘அவருக்கு முன் வைக்கப்பட்டிருந்த சந்தோஷம்.’ கடவுளுடைய பரிபூரண குமாரன் இயேசு, உதவிக்காகக் கேட்பதற்கு வெட்கப்படவில்லை. அவர் “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும்” ஜெபம்செய்தார். (எபிரெயர் 5:7; 12:2) விசேஷமாக அவருடைய உச்சக்கட்ட சோதனை நெருங்கிக்கொண்டிருந்தபோது, அவர் பலத்திற்காகத் திரும்பத்திரும்பவும் உள்ளப்பூர்வமாகவும் ஜெபிக்கவேண்டிய தேவையை உணர்ந்தார். (லூக்கா 22:39-44) இயேசுவின் வேண்டுதல்களுக்குப் பிரதியுத்தரமாக, யெகோவா சோதனையை நீக்கிப்போடவில்லை, ஆனால் அவர் இயேசுவுக்கு நிச்சயமாகவே அதைச் சகிப்பதற்கான பலத்தைக் கொடுத்தார். இயேசுவும் சகித்துக்கொண்டார், ஏனென்றால் அவர் வாதனையின் கழுமரத்திற்கும் அப்பால் இருந்த அவருடைய வெகுமதியை—யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதில் பங்குகொள்வதிலும், மனித குடும்பத்தை மரணத்திலிருந்து மீட்பதிலும் பெறும் சந்தோஷத்தை—கருத்தில் கொண்டிருந்தார்.—மத்தேயு 6:9; 20:28.
19, 20. சகிப்புத்தன்மை எதை உட்படுத்துகிறது என்பதை உண்மையில் புரிந்துகொள்வதற்கு இயேசுவின் முன்மாதிரி எப்படி நமக்கு உதவிசெய்கிறது?
19 இயேசுவின் முன்மாதிரியிலிருந்து, சகிப்புத்தன்மை எதை உட்படுத்துகிறது என்பதை உண்மையில் புரிந்துகொள்வதற்கு நமக்கு உதவிசெய்யும் அநேக காரியங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிப்பது எளிதான ஒன்றல்ல. நாம் ஒரு குறிப்பிட்ட சோதனையைச் சகிப்பதற்கு கடினமாக உணர்ந்தால், இது இயேசுவுக்கே அப்படியிருந்தது என்று தெரிந்துகொள்வது ஆறுதல் கொடுப்பதாக இருக்கும். முடிவுவரை சகித்திருப்பதற்கு, நாம் திரும்பத்திரும்ப பலத்திற்காக ஜெபிக்கவேண்டும். சோதனையின்கீழ் இருக்கையில், ஜெபம்செய்வதற்கு தகுதியற்றவராகச் சில சமயங்களில் நாம் உணரக்கூடும். ஆனால் யெகோவா, நாம் நம்முடைய இருதயங்களை அவரிடம் ஊற்றிவிடும்படியாக நம்மை அழைக்கிறார், ‘ஏனென்றால் அவர் நம்மீது அக்கறையுடையவராக இருக்கிறார்.’ (1 பேதுரு 5:7, NW) யெகோவா தம்மை விசுவாசத்தோடு கூப்பிடுகிறவர்களுக்கு “இயல்பிற்கு மேலான வல்லமையை” கொடுப்பதாக தம்முடைய வார்த்தையில் வாக்குக் கொடுத்திருப்பதினால், அவர்தாமே அவ்வாறு செய்ய கடமைப்பட்டிருக்கிறார்.—2 கொரிந்தியர் 4:7-9, NW.
20 சில சமயங்களில் நாம் கண்ணீரோடு சகித்திருக்கவேண்டும். இயேசுவுக்குக் கழுமர வேதனைதானே சந்தோஷத்திற்கு காரணமாக இருக்கவில்லை. மாறாக, அவருக்கு முன்னால் இருந்த வெகுமதியில் அவருடைய சந்தோஷம் இருந்தது. நம் விஷயத்திலும், நாம் சோதனையின்கீழ் இருக்கையில் எப்போதும் மகிழ்ச்சியாகவும் குதூகலத்தோடும் இருப்போம் என்று எதிர்பார்ப்பது உண்மைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. (எபிரெயர் 12:11-ஐ ஒப்பிடுங்கள்.) எனினும், முன்னிருக்கும் பரிசை நோக்கி செயல்பட்டால், கடினமான சோதனைமிக்க சூழ்நிலைகளிலும் ‘அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுமளவிற்கு’ நாம் திறமைபடைத்தவர்களாக இருக்கக்கூடும். (யாக்கோபு 1:2-4; அப்போஸ்தலர் 5:41) முக்கியமான காரியமானது, நாம் நிலைத்திருப்பவர்களாக இருக்கவேண்டும் என்பதே—அது ஒருவேளை கண்ணீரோடுங்கூட செய்யப்பட்டாலும் சரி. இருந்தபோதிலும், ‘அதிகக் குறைவான அளவு கண்ணீர் விடுகிறவன் ரட்சிக்கப்படுவான்’ என்று இயேசு சொல்லவில்லை. ஆனால் “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே [சகித்திருப்பவனே, NW] இரட்சிக்கப்படுவான்” என்று சொன்னார்.—மத்தேயு 24:13.
21. (அ) நம்முடைய சகிப்புத்தன்மையோடு எதைக் கூட்டி வழங்கும்படி நாம் 2 பேதுரு 1:5, 6-ல் உற்சாகப்படுத்தப்படுகிறோம்? (ஆ) என்ன கேள்விகள் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்?
21 எனவே, சகிப்புத்தன்மை ரட்சிப்பிற்கு அத்தியாவசியமானது. எனினும், 2 பேதுரு 1:5, 6-ல் நாம் நம்முடைய சகிப்புத்தன்மையோடே தேவபக்தியையும் கூட்டி வழங்கவேண்டும் என்று உற்சாகப்படுத்தப்படுகிறோம். தேவபக்தி என்றால் என்ன? இது எப்படிச் சகிப்புத்தன்மையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது, மேலும் இதை நீங்கள் எப்படிப் பெறலாம்? இந்தக் கேள்விகள் அடுத்தக் கட்டுரையில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a இயேசு சகித்த கடும் வேதனை, அவருடைய பரிபூரண உடம்பு வேதனையின் கழுமரத்தில் சில மணிநேரங்களிலேயே மரித்துப்போன உண்மையிலிருந்து ஒருவேளை காணமுடியும்; ஆனால் அவரோடு அறையப்பட்ட குற்றவாளிகளின் மரணத்தை விரைவாக்குவதற்காக அவர்களுடைய கால்கள் முறிக்கப்படவேண்டியதாயிருந்தது. (யோவான் 19:31-33) கழுமரத்தில் அறையப்படுவதற்கு முந்திய தூக்கமற்ற துயர்மிகுந்த முழு இரவில், இயேசுவின்மீது சுமத்தப்பட்ட மன மற்றும் உடல் சம்பந்தமான துன்பத்தை அவர்கள் அனுபவிக்கவில்லை; ஒருவேளை இயேசு தம்முடைய சொந்த கழுமரத்தைத் தூக்கி சுமக்க முடியாத அளவிற்கு வேதனைப்பட்டிருக்கக்கூடும்.—மாற்கு 15:15, 21.
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
◻ சகித்துக்கொள்தல் என்றால் என்ன?
◻ யெகோவாவின் மக்களுக்குச் சகிப்புத்தன்மையின் ஒரு பிரத்யேகமான தேவை ஏன்?
◻ யோபு சகித்திருப்பதற்கு என்ன உதவிசெய்தது?
◻ சகிப்புத்தன்மையைப் பற்றிய ஓர் உண்மையான கருத்துநிலையைக் கொண்டிருப்பதற்கு இயேசுவின் முன்மாதிரி எப்படி நமக்கு உதவிசெய்கிறது?
[பக்கம் 10-ன் படம்]
இராஜ்ய பள்ளிகள், கொடி வணக்கம்செய்ய மறுத்ததற்காக பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கிறிஸ்தவப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டன
[பக்கம் 12-ன் படம்]
இயேசு தம்முடைய பிதாவைக் கனப்படுத்தும் தீர்மானத்தோடு தாம் சகித்திருப்பதற்கான பலத்திற்காக ஜெபித்தார்