“யெகோவாவுடைய கரம் அவர்களோடே இருந்தது”
“இவ்வளவு பலமாய் யெகோவாவுடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டிருந்தது.”—அப்போஸ்தலர் 19:20.
1,900 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ செய்தியின் எதிரிகளும், மிஷனரியாயிருந்த பவுல் அப்போஸ்தலனை எதிர்த்தவர்களும் இப்படியாக முறையிட்டனர்: “உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். . . . இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை ராஜா என்று சொல்லி, இராயனுடைய கட்டளைக்கு விரோதமாகச் செய்கிறார்கள்.” (அப்போஸ்தலர் 17:6, 7) கிறிஸ்தவ மிஷனரியாகிய பவுல் யெகோவாவின் ராஜ்ய நற்செய்தியை எங்கெல்லாம் அறிவித்தானோ, அங்கெல்லாம் செயலும், எதிர்ச்செயலும், அடிக்கடி துன்புறுத்துதலும் இருந்தன. மற்ற ஆதி கிறிஸ்தவர்களும் துன்புறுத்துதலை அனுபவித்தனர். ஆனால் எல்லாச் சமயத்திலும் “யெகோவாவுடைய கரம் அவர்களோடே இருந்தது.”—அப்போஸ்தலர் 11:21.
2 இந்த முக்கியமான கிறிஸ்தவ மிஷனரி ஊழியத்தை ஆரம்பித்தது யார்? அவர்தான் கிளர்ச்சியூட்டும் ஒரு செய்தியையுடையவரும் அதைப் பிரச்சாரம் செய்வதில் ஓர் அசாதாரண முறையைப் பயன்படுத்தியவருமான தனித்தன்மைவாய்ந்த ஒரு மனிதன், இயேசு. கடவுளுடைய குமாரனாகிய இயேசு கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய ஒரு வியப்பதிர்ச்சியூட்டும் செய்தியுடன் யூத மக்களிடம் வந்தார். ஆனால் அவர்கள் நியாயப்பிரமாணத்துக்கடுத்த கிரியைகள் மூலமாக தங்களுடைய சொந்த இரட்சிப்பில் மட்டும் அக்கறையுடையவர்களாக இருந்தார்கள்.—மத்தேயு 4:17; லூக்கா 8:1; 11:45, 46.
“எல்லா தேசங்களுக்கும்”
3 இயேசு மரிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தம்முடைய யூத சீஷர்களிடம் பின்வருமாறு சொன்னபோது அவர்களுடைய ஆச்சரியத்தை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்: “ராஜ்யத்தின் இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் எல்லா தேசங்களுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும்; அப்பொழுது முடிவு வரும்.” தாங்கள் நற்செய்தியை எப்படி “எல்லா தேசங்களுக்கும்” பிரசங்கிக்க முடியும் என்பது குறித்து அவர்களுடைய சீஷர்கள் யோசனை செய்திருக்கக்கூடும். விசுவாசமுள்ள அவ்வளவு சிறிய தொகுதி அப்படிப்பட்ட ஒரு மகா வேலையை எப்படி நிறைவேற்றக்கூடும்?—மத்தேயு 24:14, NW; மாற்கு 13:10.
4 அதற்குப் பின்பு, உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு பின்வரும் ஒரு கட்டளையைக் கூட்டினார்: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் [தேசங்களின் ஜனங்களையும்] சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” இப்படியாக அவர்கள் தங்களுடைய எஜமானரின் செய்தியை “சகல தேசங்களின் ஜனங்களுக்கும்” எடுத்துச்செல்ல கட்டளையிடப்பட்டனர்.—மத்தேயு 28:18–20.
5 இது புறஜாதியாருக்குப் பிரசங்கிப்பதையும் உட்படுத்தியது, இது ஒரு சவாலாக நிரூபித்தது. மூன்று வருடங்களுக்குப் பின்னர் பேதுரு கொண்டிருந்த மனநிலை இதற்கு அத்தாட்சியளிக்கிறது. ஒரு தரிசனத்தில் பேதுரு அசுத்தமான பிராணிகளைப் புசிக்கும்படியாகச் சொல்லப்பட்டான். முன்னதாக அசுத்தமாகக் கருதப்பட்ட காரியங்கள் இப்பொழுது சுத்தமாகக் கருதப்படவேண்டும் என்று கடவுள் குறிப்பிட்டதானது பேதுருவுக்குக் குழப்பமாயிருந்தது. பின்பு பேதுரு கடவுளுடைய ஆவியினால் வழிநடத்தப்பட்டு, புறஜாதியானும் ரோமரின் நூற்றுக்கதிபதியாயுமிருந்த கொர்நேலியுவின் வீட்டுக்குச் செல்ல வழிநடத்தப்பட்டான். மற்ற இனத்தவரோடு தொடர்புகொள்வது நியாயப்பிரமாணத்துக்கு விரோதமானது என்று கருதிய போதிலும், தான் கொர்நேலியுவுக்குப் பிரசங்கிக்கவேண்டியது கடவுளுடைய சித்தம் என்பதை உணர்ந்துகொண்டான். பேதுரு பேசிக்கொண்டிருக்கையில், புறஜாதியாராயிருந்த அந்தக் குடும்பத்தின்மீது பரிசுத்த ஆவி பொழியப்பட்டது. கிறிஸ்தவ மிஷனரி சேவை யூதரல்லாத உலகையும் உட்படுத்தும்படியாக இப்பொழுது விஸ்தரிக்கப்படவேண்டும் என்பதையே இது குறித்தது.—அப்போஸ்தலர் 10:9–16, 28, 34, 35, 44.
6 இந்த விஸ்தரிப்பு குறித்து பேதுரு எருசலேமிலுள்ள மூப்பர்களிடம் விளக்கிய போது, “அவர்கள் . . . அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.” (அப்போஸ்தலர் 11:18) இப்பொழுது புறஜாதியார் கிறிஸ்துவைப் பற்றியதும் அவருடைய ராஜ்யத்தைப் பற்றியதுமான நற்செய்தியைத் தாராளமாகப் பெற்றுக்கொள்ளக்கூடும்!
தேசங்களுக்கு மிஷனரிகள்
7 ஸ்தேவான் இரத்த சாட்சியாக மரித்த பின்பு வேகம் பெற்றிட ஆரம்பித்த பிரசங்க வேலை இப்பொழுது வித்தியாசமான ஒரு நிலையை ஏற்றது. அப்போஸ்தலர்களைத் தவிர, எருசலேமிலுள்ள சபை சிதறியது. முதலில் துன்புறுத்தப்பட்ட அந்த யூத விசுவாசிகள் பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா ஆகிய இடங்களில் மட்டும் பிரசங்கித்தார்கள். “அவர்களில் சீப்புரு தீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் . . . கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக் குறித்துப் பிரசங்கித்தார்கள்.” மற்ற தேசத்தாரிடம் செய்யப்படும் மிஷனரி ஊழியத்தை யெகோவா எப்படி நோக்கினார்? “யெகோவாவுடைய கரம் அவர்களோடே இருந்தது; விசுவாசிகளான பெரும் எண்ணிக்கையினர் கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.” அந்த ஆதி கிறிஸ்தவர்களுடைய தைரியத்தின் காரணமாக மத்தியதரைப் பிரதேசங்களைச் சுற்றியுள்ள நாடுகளில் மிஷனரி ஊழியம் திறம்பட்டவிதத்தில் பரவிட ஆரம்பித்தது. ஆனால் இன்னும் அதிகம் வரவேண்டியதாயிருந்தது.—அப்போஸ்தலர் 4:31; 8:1; 11:19–21.
8 ஏறக்குறைய பொ.ச. 47, 48 போல் கடவுளுடைய ஆவி, மிஷனரி ஊழியத்தின் விஸ்தரிப்புக்கான ஒரு தீர்வான நடவடிக்கையைச் சுட்டிக்காண்பித்தது. அப்போஸ்தலர் 13:2–4-லுள்ள பதிவு பின்வருமாறு கூறுகிறது: “பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவி சொன்னது. . . . அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியா (சிரியாவில் அந்தியோகியா பட்டணத்து துறைமுகம்) பட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புரு தீவுக்குப் போனார்கள்.” அது பவுலுக்கும் பர்னபாவுக்கும் எப்பேர்ப்பட்ட கிளர்ச்சியூட்டும் ஓர் அனுபவமாக இருந்திருக்கும்—அவர்களுடைய முதல் வெளிநாட்டு ஊழிய நியமனம்! அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவ மிஷனரி சேவைக்குப் புது வேகம் கொடுத்துக்கொண்டிருந்தான். மற்றும் நம்முடைய 20-வது நூற்றாண்டில் முற்றுப்பெறக்கூடிய ஒரு வேலைக்கு அஸ்திபாரம் போட்டுக்கொண்டிருந்தான்.
9 பதிவு செய்யப்பட்டிருக்கும் மூன்று மிஷனரி பயணத்தையும் பவுல் தொடர்ந்தான். அத்துடன் ஒரு கைதியாக அவன் ரோமுக்குப் பயணம் செய்தான். இந்தச் சமயத்தில் அவன் ஐரோப்பாவில் பல பட்டணங்களில் இந்த வேலையைத் துவக்கினதோடு, இன்று சிரியா, சீப்புரு, கிரேத்தா, துருக்கி, கிரீஸ், மெலித்தா, சிசிலி போன்ற நாடுகளிலும் தீவுகளிலும் பிரசங்கித்தான். அநேக பட்டணங்களில் சபைகள் நிறுவிட உதவினான். அவனுடைய மிஷனரி ஊழியம் திறம்பட்டதாக இருந்ததன் இரகசியம் என்ன?
திறம்பட்டவிதத்தில் கற்பித்தல்
10 பவுல் கிறிஸ்துவின் கற்பிக்கும் முறையைப் பின்பற்றினான். எனவே ஜனங்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை அவன் அறிந்திருந்தான். எப்படி கற்பிப்பது, கற்பிப்பதற்கு மற்றவர்களை எப்படி பயிற்றுவிப்பது என்பதையும் அவன் அறிந்திருந்தான். அவனுடைய போதனைகள் வேதவசனங்களின் அடிப்படையில் இருந்தது. மற்றவர்களைத் தன்னுடைய சொந்த ஞானத்தால் கவர்ந்திட முற்படவில்லை, மாறாக, அவன் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்துக்காண்பித்தான். (அப்போஸ்தலர் 17:2, 3) தனக்குச் செவிகொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கேற்ப தன் பிரசங்கத்தை எவ்விதம் அமைப்பது என்பதையும், அந்தப் பிராந்திய சூழ்நிலை அமைப்பை எவ்விதம் தன்னுடைய செய்திக்கு விசைமூலமாகக் கொள்ளலாம் என்பதையும் அறிந்திருந்தான். அவன் சொன்னான்: “நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். . . . யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். . . . பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன். எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.”—1 கொரிந்தியர் 9:19–23; அப்போஸ்தலர் 17:22, 23.
11 பவுலும் அவனுடைய தோழர்களும் திறம்பட்ட மிஷனரிகளாக இருந்தனர். விடாமுயற்சியும் சகிப்புத்தன்மையும் உடையவர்களாய், அவர்கள் போன இடமெல்லாம் கிறிஸ்தவ சபைகளை நிறுவினார்கள். (அப்போஸ்தலர் 13:14, 43, 48, 49; 14:19–28) ஆரம்பத்தில் செய்யப்பட்ட கிறிஸ்தவ ஊழியம் அவ்வளவு விரிவாய்ப் பரவியிருந்ததால், “சத்தியவசனமாகிய . . . நற்செய்தி உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து . . . உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது. . . . அது வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டது” என்பதாக பவுலால் கடைசியாக எழுதமுடிந்தது. உண்மையிலேயே, ஆதி கிறிஸ்தவ மிஷனரி ஊழியம் மக்களைப் பாதித்தது.—கொலோசெயர் 1:5, 6, 23, NW.
12 என்றபோதிலும், இயேசுவும் அப்போஸ்தலர்களும் முன்னறிவித்தபடியே பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்தவ சபைக்குள் விசுவாச துரோகம் நுழைந்துகொண்டிருந்தது. (மத்தேயு 7:15, 21–23; அப்போஸ்தலர் 20:29, 30; 1 யோவான் 2:18, 19) பின்தொடர்ந்த நூற்றாண்டுகளில், இறைமையியலும் புறமத கோட்பாடுகளும் ராஜ்ய செய்தியை அமிழ்த்திவிட்டது. கிறிஸ்தவமண்டலம் மிஷனரிகளை அனுப்பியது, கடவுளுடைய உண்மையான ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிப்பதற்கு அல்ல, ஆனால் தற்காப்பற்ற ஐரோப்பியரல்லாதவரிடையே தங்களுடைய அரசியல் தலைவரின் ராஜ்யத்தை—அநேக சமயங்களில் பட்டயத்தால்—வலுக்கட்டாயமாய் ஏற்படுத்தவே அனுப்பினது. உண்மையான கிறிஸ்தவ ஊழியம் இல்லாமற்போய்விட்டது, ஆனால் என்றுமாக அல்ல.
13 பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், காவற்கோபுர சங்கத்தின் முதல் தலைவர் சார்ல்ஸ் T. ரஸல், மிஷனரி ஊழியத்துக்கான தேவையைக் கண்டார். இப்படியாக அவர் ஒரு பரந்த சாட்சி வேலையை ஒழுங்குபடுத்தினது மட்டுமல்லாமல், அவர் தாமே ஐக்கிய மாகாணங்களில் பல நகரங்களையும், கூடுமானவரை அநேக நாடுகளுக்கும் கடல் மார்க்கமாய் விஜயம் செய்தார். பைபிள் அடிப்படையிலிருந்த அவருடைய புத்தகங்கள் 35 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டன. அவர் 1916-ல் மரிப்பதற்கு முன்பு ஒரு பொது சொற்பொழிவாளராக 10 இலட்சத்திற்கும் அதிகமான மைல்கள் பயணம் செய்தார் என்றும், 30,000 பிரசங்கங்களைக் கொடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
14 அவருக்குப் பின்வந்த ஜோசப் F. ரதர்ஃபோர்டு என்பவரும் மிஷனரி ஊழியத்துக்கான தேவையை உணர்ந்தார். 1920-களின் ஆரம்பத்தில் பிரசங்க வேலையை நிறுவுவதற்கு உதவியாக அவர் திறமைவாய்ந்த மனிதரை பல்வேறு தேசங்களுக்கு அனுப்பினார். மிஷனரிகள் ஸ்பேய்ன், தென் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய தேசங்களில் இந்த ராஜ்ய வேலையைத் துவக்குவதில் முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர். ஸ்பேய்ன் தேசத்தில் இந்த வேலைக்கு மீண்டும் வலுவூட்டிட ஊழியர்கள் முன்வருமாறு 1931-ல் ஓர் அழைப்பு விடுக்கப்பட்டது. இங்கிலாந்திலிருந்து மூன்று இளம் மனிதர் பிரதிபலித்தனர். அவர்கள் அங்கு மிகக் கடினமான சூழ்நிலைமைகளின் கீழ் ஸ்பேய்ன் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த 1936 வரையாக நான்கு வருடங்கள் சேவை செய்தனர். பின்பு அவர்கள் தங்களுடைய உயிருக்காக அங்கிருந்து வெளியேற வேண்டியதாயிருந்தது.
15 1940-களின் மிஷனரி ஊழியத்தில் மேன்மையான காரியங்கள் வருவதாயிருந்தன. காவற்கோபுர சங்கத்தின் மூன்றாவது தலைவர் நேதன் H. நார், தன்னுடன் வேலை செய்வதற்கு வைராக்கியமுள்ள மனிதர்களடங்கிய ஒரு தொகுதியைக் கொண்டிருந்தார். தெளிவாகவே, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்கீழ், இரண்டாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்த காலங்களிலிருந்த சவாலுக்கு ஆயத்தமாக 1942-ல் ஒரு மிஷனரி பள்ளியைத் துவங்குவதற்கான அவசியத்தைக் கண்டார். அந்த உலக மகா யுத்தத்தின் மத்தியில், அவர் முன்முயற்சி செய்ய, பிப்ரவரி 1943-ல் வட நியு யார்க் மாநிலத்தில் உவாட்ச்டவர் கிலியட் பள்ளி துவங்கி வைக்கப்பட்டது. நான்கு ஆசிரியர்களைக் கொண்டு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஆண்களும் பெண்களுமடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட வைராக்கியமுள்ள பயனியர் ஊழியர்களுக்கு பைபிள் ஆதார பயிற்றுவிப்பை அது கொடுத்தது. இதை அடுத்து அவர்கள் செய்த ஊழியம் திறம்பட்டதாக இருந்திருக்கிறதா?
16 பிப்ரவரி 1943-ல் 54 நாடுகளில் 1,26,329 சாட்சிகள் மட்டுமே பிரசங்கித்துவந்தனர். இன்றைய நிலை என்ன? இப்பொழுது 45 ஆண்டுகளுக்குப் பின்னர், 28 மடங்கு அதிகமாக இருக்கிறது, 212 நாடுகளிலும் தீவுகளிலும் முப்பத்தைந்து இலட்சத்துக்கு அதிகமான சுறுசுறுப்பான ஊழியர்கள் இருக்கின்றனர். இந்த அதிகரிப்பின் குறிப்பிடத்தக்க பகுதிக்குக் காரணம், கிலியட் பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற 6,000-ற்கும் அதிகமான மிஷனரிகளால் போடப்பட்ட அருமையான அஸ்திபாரமாகும். இவர்கள் 59 நாடுகளிலிருந்து வந்தவர்களும், கடந்து ஐம்பது ஆண்டுகளில் 148 வித்தியாசமான தேசங்களுக்கு அனுப்பப்பட்டுமிருக்கின்றனர். 45 ஆண்டுகளுக்கு முன்னால் உலக முழுவதும் இருந்த இலட்சம் சாட்சிகளுக்குப் பதிலாக, அவர்களுடைய உதவியால் இப்பொழுது பத்து நாடுகளில், அவை ஒவ்வொன்றிலும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் நற்செய்தியை பிரசங்கித்தும் கற்பித்தும் வருகிறார்கள். இந்த நாடுகளில் பலவற்றில், கிலியட் மிஷனரிகள் சுவிசேஷ ஊழியத்தின் முன்னணியில் இருந்தனர்.
17 நாம் ஆரம்பக் கால ஊழியத்தைக் குறிப்பிடுகிறவர்களாயிருந்தாலும் நவீன கால கிறிஸ்தவ மிஷனரி ஊழியத்தைக் குறிப்பிடுகிறவர்களாயிருந்தாலும், அதைப் பலன் மிகுந்ததாய் ஆக்கியிருக்கும் அடிப்படை அம்சங்கள் உண்டு. அதில் ஒன்று, வீட்டுக்கு வீடு ஊழியத்தின் மூலமும் சந்தர்ப்ப சாட்சியத்தின் மூலமும் வீட்டு பைபிள் படிப்பு மூலமும் ஜனங்களுடன் கொள்ளும் நேரடியான தொடர்பாகும். (யோவான் 4:7–26; அப்போஸ்தலர் 20:20) மற்றொரு அம்சம், மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்குக் கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே ஒரே நிரந்தர பரிகாரம் என்ற பைபிள் அடிப்படையிலான நேரடியான, எளிமையான செய்தியாகும். (அப்போஸ்தலர் 19:8; 28:16, 23, 30, 31) நம்முடைய மிஷனரிகளில் பலர் வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளில் சேவிக்கின்றனர், இங்கு கடவுளுடைய நீதியான ஆட்சிக்கான அவசியம் தெளிவாகக் காணப்படுகிறது. மூன்றாவது அம்சம், கிறிஸ்து கற்பித்த அன்பாகும், அனைத்து இனங்களையும் மரபுகளையும் சேர்ந்த மக்களுடன் கொண்டிருக்கும் அனுதின தொடர்புகளில் வெளிக்காட்டும் அந்த ன்பாகும். கடந்த 45 ஆண்டுகளில் யெகோவாவின் அமைப்பு உலகமுழுவதும் விஸ்தரித்திருப்பதற்குக் காவற்கோபுர மிஷனரிகள் ஒரு பெரிய பங்கை வகித்திருக்கின்றனர்.—ரோமர் 1:14–17; 1 கொரிந்தியர் 3:5, 6.
பயனியர் ஆவி மேற்கொள்கிறது
18 கிலியட் பட்டதாரிகளின் வைராக்கியமான முன்மாதிரி முழுநேர ஊழியர்களாக இருக்கும் ஓர் ஆசையை மற்றவர்களில் ஊக்குவித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதே வைராக்கியமான மிஷனரி ஆவியை தங்கள் பாகமாக்கியிருக்கும் இலட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். இவர்களுங்கூட உண்மையான கருத்தில் பயனியர்கள், “அவர்களுடைய இரட்சிப்பின் பயனியராகிய” இயேசுவின் அடிச்சுவடிகளில் நடப்பவர்கள்.—எபிரெயர் 2:10; 12:2, Moffatt.
19 1960 முதல் அநேக நாடுகளுக்கு மிஷனரிகளை அனுப்புவது அதிக கடினமாகியிருக்கிறது. அயல்நாடுகளிலுள்ள தேவைக்கேற்ப உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி வெளிநாடுகளுக்கு இயன்றளவுக்கு மிஷனரிகளை அனுப்பிவருகிறது. என்றபோதிலும் உண்மையான பயனியர் ஆவியுடைய சாட்சிகளுக்கு உலகமுழுவதும் மகத்தான செயற்களம் உண்டு. தேவை அதிகமாக இருக்கும் நாடுகளில் ஊழியம் செய்வதற்கு அநேகர் மனமுவந்து தங்களுடைய சொந்த ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். அவர்களைச் சேர்ந்துகொள்ளக்கூடியவர்களில் நீங்களும் ஒருவரா? அதில் இருக்கும் இன்னல்களும் தியாகங்களும் வளரும் நாடுகளிலுள்ள செம்மறியாடு போன்றவர்களுக்கு ராஜ்யத்தின் சத்தியங்களைப் போஷித்தலிலிருக்கும் மிகுந்த மகிழ்ச்சியால் ஈடு செய்யப்படுகிறது என்பதாக இப்படிப்பட்டவர்கள் குறிப்பிடுகிறார்கள். புதிய “சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும் பிள்ளைகளையும்” கண்டுபிடிப்பதிலும், இவர்களுடன் “வரும் ஒழுங்குமுறையில்” நித்திய ஜீவனைப் பெறும் ஆச்சரியமான நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளுவதிலும் நூறத்தனையாக பலனளிக்கப்படுகின்றனர்.—மாற்கு 10:28–30.
20 மேலும், ஒவ்வொரு மாதமும் ஒழுங்கான பயனியர்களாக, அல்லது துணைப் பயனியர்களாக சேவை செய்யும் இலட்சக்கணக்கான யெகோவாவின் ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களில் அநேகர் தங்களுடைய வீட்டு பிராந்தியங்களில் ஊக்கமாக சேவை செய்கின்றனர். அநேக நாடுகளில் இவர்கள்தானே பிரசங்கிப்பதில் பெரும்பாகத்தை நிறைவேற்றுகின்றனர், இவர்கள் வாரந்தோறும் அதே வீடுகளை சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வதிலும் தங்களுடைய பிராந்தியங்களில் அதிகமான அக்கறையை வளர்ப்பதிலும் ஈடுபடும்போது அவர்களுடைய பிரகாசமான தோற்றத்திலும் மகிழ்ச்சியான மனநிலையிலும் அவர்களுடைய ராஜ்ய நம்பிக்கை பிரதிபலிக்கப்படுகிறது. அதிகமான பயனியர்கள் என்றால், கடவுளைத் துதிப்பதில் அதிகமான மணி நேரத்தைச் செலவழிப்பதைக் குறிக்கிறது. ஒரு பத்தாண்டுக்கு மேலாக, ஏற்கெனவே புத்தர்களாயிருந்தவர்களும் அவர்களில் பெரும்பான்மையினர் யெகோவாவின் சாட்சிகளாக ஆகியிருப்பவர்களும் இருக்கும் ஜப்பான், ஐக்கிய மாகாணங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் நாடுகளில் ஆண்டுதோறும் மொத்தமாக அதிகமான மணிநேரங்களை அறிக்கைசெய்துவந்திருக்கிறது. அதற்குக் காரணம், அதன் ராஜ்ய பிரஸ்தாபிகளில் ஏறக்குறைய ஒரு பாதி பயனியர்களாக இருக்கின்றனர். இந்த மிகச் சிறந்த மகத்தான சிலக்கியத்தில், பயனியர் சேவையில் பங்கு கொள்வதற்கு நீங்களும் உங்கள் விவகாரங்களை சீரமைத்துக்கொள்ள முடியுமா?
21 “நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ள” மற்ற சாட்சிகளும் இருக்கிறார்கள். (தீத்து 2:14) அவர்களில் ஒழுங்கான பயனியர் செய்யமுடியாத நிலையிலுள்ள வயதுசென்றவர்களும், உடலாரோக்கியமற்றவர்களும், குடும்ப பொறுப்புடைய அநேகரும், பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் இளைஞரும் அடங்குவர். பயனியர்களுக்கு ஊக்கமான ஆதரவு கொடுப்பதன் மூலமும், கூடுமானவரை ஊழியத்தில் பங்குகொள்வதன் மூலமும், சாட்சி கொடுப்பதற்குத் தங்களுக்கிருக்கும் வாய்ப்புகளிடமாக அவர்களுடைய நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்வதன் மூலமும் இவர்கள் பயனியர் ஆவியை வெளிப்படுத்தலாம். இளைஞர்கள் முழு நேர ராஜ்ய சேவையைத் தங்களுடைய இலக்காகக் கொள்ளலாம். அவர்கள் முழுக்காட்டுதல் பெற்றதும், அவ்வப்பொழுது துணைப் பயனியர் சேவையில் பங்கு கொள்ளலாம். கடவுளுடைய அனைத்து மக்களோடு சேர்ந்து ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேற இளம் தீமோத்தேயுவைப் போன்று இந்தக் காரியங்களை சிந்தித்துக்கொண்டிருக்கலாம்.—1 தீமோத்தேயு 4:15, 16.
22 வாழ்க்கையில் நம்முடைய நிலை என்னவாயிருந்தாலும், யெகோவாவின் ஊழியத்தில் முழுமையாகப் பங்குகொள்வதற்கு நாம் அவருடைய ஆவியால் தூண்டப்படுவோமாக. நம்முடைய மனத்தாழ்மையான முயற்சிகள் குறித்து, “இவ்வளவு பலமாய் யெகோவாவுடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது” என்று சொல்லத்தக்கதாக “யெகோவாவின் கரம்” தொடர்ந்து நம்மோடுகூட இருப்பதாக.—அப்போஸ்தலர் 11:21; 19:20, NW. (w89 1⁄1)
விமர்சனக் கேள்விகள்
◻ கிறிஸ்தவ மிஷனரி ஊழியம் எப்படி ஆரம்பித்தது? அது எவ்வளவாய் விஸ்தரித்திருக்கிறது?
◻ மிஷனரி ஊழியத்தை விஸ்தரிப்பதில் பவுல் அப்போஸ்தலன் என்ன பங்கை வகித்தான்?
◻ மிஷனரி ஊழியத்துக்கு நவீன காலங்களில் எவ்விதம் புத்துயிரளிக்கப்பட்டது?
◻ மிஷனரி ஊழியத்தையும் பயனியர் சேவையையும் எந்த அம்சங்கள் பலன் மிகுந்ததாக்கியிருக்கின்றன?
◻ பயனியர் ஆவியை இன்று நாம் எவ்விதம் நம் பாகமாக்கிக்கொள்ளலாம்?
மறுபார்வைக்கான கேள்விகள்
1. (எ) பொ.ச. முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தின் எதிரிகள் என்ன முறையீடு செய்தார்கள்? (பி) மிஷனரியாகிய பவுல் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்த இடமெல்லாம் பின்தொடர்ந்தது என்ன? ஆதி கிறிஸ்தவர்கள் மேல் எப்பொழுதுமே என்ன இருந்தது?
2. கிறிஸ்தவ மிஷனரி ஊழியத்தை துவக்கிவைத்தது யார்? எப்படி?
3. இயேசுவின் எந்த தீர்க்கதரிசனம் அவருடைய யூத சீஷர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்? ஏன்?
4. உயிர்த்தெழுந்த இயேசு தம்மடைய சீஷர்களுக்கு என்ன கட்டளையைக் கொடுத்தார்?
5, 6. (எ) கடவுளுடைய ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைப் பிரசங்கிப்பது புறஜாதியாரை எப்படி எட்டியது? என்ன விளைவோடு? (பி) புறஜாதியானான கொர்நேலியு சம்பந்தமாக தனக்கு இருந்த அனுபவத்தை பேதுரு விவரித்த போது, எருசலேமிலுள்ள மூப்பர்கள் எப்படி பிரதிபலித்தனர்?
7. கிறிஸ்தவ மிஷனரி ஊழியம் மத்தியதரைப் பிரதேசத்தில் எப்படி விஸ்தரிப்படைய ஆரம்பித்தது? யெகோவா இதை எவ்விதம் நோக்கினார்?
8. மிஷனரி ஊழியத்தின் விஸ்தரிப்புக்குக் கடவுள் எவ்விதம் ஒரு தீர்மானமான நடவடிக்கையைக் குறிப்பிடுகிறவராயிருந்தார்?
9. தன்னுடைய மிஷனரி பிரயாணங்களின் வாயிலாக அப்போஸ்தலனாகிய பவுல் எதைச் சாதித்தான்?
10. பவுல் தன்னுடைய மிஷனரி ஊழியத்தில் ஏன் அந்தளவுக்கு பலன் மிகுந்தவனாயிருந்தான்?
11. பவுலும் அவனுடைய தோழரும் திறம்பட்ட மிஷனரி ஊழியர்களாக இருந்தனர் என்பதை எது காண்பிக்கிறது? கிறிஸ்தவ ஊழியம் எந்தளவுக்கு பரவியிருந்தது?
12. உரிய அதிகாரம் பெற்ற கிறிஸ்தவ ஊழியம் ஒரு காலத்துக்கு இல்லாமல் போகச் செய்தது எது?
13. நவீன காலங்களில் மிஷனரி ஊழியம் எவ்விதம் துவக்கம் பெற்றது? 1916-ன் முடிவின் சாதனை என்னவாயிருந்தது?
14. ஜோசப் F. ரதர்ஃபோர்டு மிஷனரி ஊழியத்தை விரிவுபடுத்த என்ன செய்தார்?
15. மிஷனரி ஊழியத்தைக் குறிப்பிடத்தக்க விதத்தில் முன்னேற்றுவிக்க 1940-களில் என்ன நடந்தது?
16. (எ) 1943-ல் எத்தனை சாட்சிகள் பிரசங்கித்துவந்தனர்? இதை இன்று ஒப்பிட்டுப் பார்க்கும் போது எப்படி இருக்கிறது? (பி) இந்த அதிகரிப்பில் மிஷனரிகள் என்ன பாகத்தைக் கொண்டிருந்தனர்? விளக்குங்கள்.
17. ஆரம்ப கிறிஸ்தவ மிஷனரி ஊழியத்தையும் நவீன கிறிஸ்தவ மிஷனரி ஊழியத்தையும் பலன் மிகுந்ததாக்கியிருக்கும் மூன்று அம்சங்கள் என்ன?
18. கிலியட் பட்டதாரிகளின் அதே மிஷனரி ஆவியை வேறு யாரும் தங்கள் பாகமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்?
19. பயனியர் ஆவியையுடைய அநேக சாட்சிகள் என்ன செய்ய முன்வந்திருக்கின்றனர்? அவர்கள் எவ்விதம் பலனளிக்கப்பட்டதாக உணருகின்றனர்?
20. (எ) அநேக நாடுகளில் பிரசங்கிப்பதில் பெரும் பங்கைக் கொண்டிருப்பது யார்? (பி) மற்ற எந்த நாட்டையும்விட ஜப்பான் ஆண்டுதோறும் எப்படி மொத்தத்தில் அதிக மணிநேரங்களை அறிக்கை செய்ய முடிகிறது? (சி) நாம் எந்த ஒரு கேள்வியைச் சிந்திப்பது நல்லது?
21. (எ) ஒழுங்கான பயனியர் சேவைச் செய்வதற்குத் தங்களுடைய சூழ்நிலை இடங்கொடுக்காத நிலையிலிருக்கும் மற்ற சாட்சிகளுங்கூட எவ்விதம் அதே பயனியர் ஆவியைக் காண்பிக்கலாம்? (பி) இளைஞர் எவ்விதம் பயனியர் ஆவியைக் காண்பிக்கலாம்?
22. வாழ்க்கையில் நம்முடைய நிலை என்னவாயிருந்தாலும், எது நம்முடைய தீர்மானமாக இருக்க வேண்டும்? அது என்ன அருமையான பலனை உடையதாயிருக்கிறது?
[பக்கம் 13-ன் அட்டவணை]
பத்து நாடுகளில் ராஜ்ய வேலை—1988
(இவை அனைத்தும் 1,00,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகளை அறிக்கைச் செய்திருக்கின்றன)
தேசம் பிரஸ்தாபி பயனியர் பிரசங்க ஞாகார்த்ததுக்கு
உச்சநிலை சராசரி மணிநேரம் வந்தவர்கள்
ஐ. மா. 7,97,104 96,947 16,14,78,732 18,22,607
மெக்ஸிக்கோ 2,48,822 32,117 5,80,61,457 10,04,062
பிரேஸில் 2,45,610 22,725 4,42,18,022 7,18,414
இத்தாலி 1,60,584 25,477 4,33,54,687 3,30,461
நைஜீரியா 1,34,543 14,022 2,78,00,623 3,98,555
ஜப்பான் 1,28,817 52,183 6,06,26,840 2,97,171
ஜெர்மனி 1,25,068 8,416 2,20,29,942 2,15,385
பிரிட்டன் 1,13,412 11,927 2,21,03,713 2,11,060
பிலிப்பைன்ஸ் 1,07,679 21,320 2,63,37,621 3,05,087
ஃபிரான்ஸ் 1,03,734 9,189 2,15,98,308 2,05,256
[பக்கம் 10-ன் படம்]
பவுலும் பர்னபாவும் பயனியர் மிஷனரி ஊழியத்துக்குப் புறப்படுகிறார்கள்