“வாசிக்கிறவன் பகுத்தறிவைப் பயன்படுத்தக்கடவன்”
‘பாழாக்குகிற அருவருப்பை . . . நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.’—மத்தேயு 24:15, 16.
1. லூக்கா 19:43, 44-ல் இயேசு கொடுத்த எச்சரிக்கையின்படி என்ன நடந்தது?
ஆபத்து வருகிறது, ஜாக்கிரதை! என்று யாராவது நம்மை எச்சரிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்; நிச்சயமாகவே, நாம் ஆபத்தை தவிர்க்கவே பார்ப்போம். (நீதிமொழிகள் 22:3) ஆகவே, பொ.ச. 66-ல் ரோமர்கள் தாக்கியதற்கு பின்பு எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்களின் நிலைமையை சற்று கற்பனைசெய்து பாருங்கள். அந்த நகரம் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்படும் என இயேசு எச்சரித்திருந்தார். (லூக்கா 19:43, 44) யூதர்களில் பெரும்பான்மையருக்கோ இயேசுவின் இந்த எச்சரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்குபோலத்தான் இருந்தது. ஆனால் இயேசுவின் சீஷர்கள் அவருடைய எச்சரிக்கைக்கு செவிசாய்த்தனர். இதன் பலனாக, பொ.ச. 70-ல் ஏற்பட்ட அவலத்திலிருந்து அவர்கள் தப்பிப்பிழைத்தனர்.
2, 3. மத்தேயு 24:15-21-ல் உள்ள இயேசுவின் தீர்க்கதரிசனத்தில் நாம் ஏன் அக்கறைகொள்ள வேண்டும்?
2 இன்று, நம்மை பாதிக்கும் ஒரு தீர்க்கதரிசனத்தில், இயேசு ஒரு கூட்டு அடையாளத்தைக் குறிப்பிட்டார். அதன்படி, போர்கள் மூளும்; உணவுக் குறைபாடுகளும் பூமியதிர்ச்சிகளும் கொள்ளைநோய்களும் உண்டாகும்; அத்துடன், கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவர். (மத்தேயு 24:4-14; லூக்கா 21:10-19) முடிவு சமீபித்திருப்பதை அறிந்துகொள்ள தம்முடைய சீஷர்களுக்கு ஒரு குறிப்பையும் இயேசு கொடுத்தார். அதுவே, ‘பாழாக்குகிற அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காண்பதாகும்.’ (மத்தேயு 24:15) அந்த வார்த்தைகள் அர்த்தம் நிறைந்தவையாக இருப்பதால், அவற்றை மறுபடியும் ஆராய்ந்து பார்ப்போம். இன்றும் என்றும் நம்முடைய வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கும் என்பதையும் பார்ப்போமா?
3 அந்த அடையாளத்தை சுருக்கமாக குறிப்பிட்ட பின்பு இயேசு இவ்வாறு சொன்னார்: “பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் [“பகுத்தறிவைப் பயன்படுத்தக்கடவன்,” NW]. நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.”—மத்தேயு 24:15-21.
4. மத்தேயு 24:15 முதல் நூற்றாண்டில் நிறைவேறியது என்று எது காட்டுகிறது?
4 மாற்கும் லூக்காவும் கொடுத்துள்ள விவரங்கள் கூடுதலான நுட்பவிவரங்களை தருகின்றன. ‘பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கிறது’ என்று மத்தேயு சொல்கிறது; ஆனால் மாற்கு 13:14 “அது நிற்கத்தகாத இடத்திலே” என்பதாக சொல்கிறது. லூக்கா 21:20, இயேசுவின் இந்த வார்த்தைகளைச் சேர்க்கிறது: “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.” இதன் முதல் நிறைவேற்றம்—யூதருக்கு பரிசுத்தமானதாக ஆனால் யெகோவாவுக்கோ இனிமேலும் அவ்வாறாக இல்லாத—எருசலேம் மற்றும் அதன் ஆலயத்தின்மீது பொ.ச. 66-ல் நடந்த ரோம தாக்குதலை குறித்தது என புரிந்துகொள்கிறோம். பொ.ச. 70-ல் ரோமர்கள் அந்த நகரத்தையும் ஆலயத்தையும் சேர்த்து அழித்தபோது, முழுமையான அழிவு ஏற்பட்டது. அப்போது ‘பாழாக்கும் அருவருப்பு’ எது? அது எவ்வாறு ‘பரிசுத்த ஸ்தலத்தில் நின்றது’? இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள், தற்கால நிறைவேற்றத்தை தெளிவாக காண உதவிசெய்யும்.
5, 6. (அ) தானியேல் 9-ம் அதிகாரத்தை வாசிப்பவர்களுக்கு, பகுத்தறிவு ஏன் தேவைப்பட்டது? (ஆ) அந்த ‘அருவருப்பைப்’ பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது?
5 பகுத்தறிவைப் பயன்படுத்தும்படி வாசிக்கிறவர்களை இயேசு உற்சாகப்படுத்தினார். எதை வாசிக்கிறவர்களை? ஒருவேளை தானியேல் 9-ம் அதிகாரத்தை இயேசு குறிப்பிட்டிருக்கலாம். அந்த அதிகாரத்தில் ஒரு தீர்க்கதரிசனத்தை நாம் காண்கிறோம். அது, மேசியா எப்போது தோன்றுவார் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது; மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் அவர் “சங்கரிக்கப்படுவார்” என்பதையும் முன்னறிவிக்கிறது. அது சொல்கிறது: ‘அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும்.’—தானியேல் 9:26, 27; இதையும் காண்க: தானியேல் 11:31; 12:11.
6 இது, ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பே நான்காம் அன்டியாக்கஸ் ஆலயத்தை தீட்டுப்படுத்தியதற்குப் பொருந்தியது என யூதர்கள் நினைத்தார்கள். ஆனால் இயேசு, வேறுவகையில் சுட்டிக்காட்டி பகுத்தறிவைப் பயன்படுத்தும்படி ஊக்குவித்தார். ஏனெனில் அந்தப் “பாழாக்கும் அருவருப்பு” இனிமேல் தோன்றி “பரிசுத்த ஸ்தலத்தில்” நிற்கப்போவதாக இருந்தது. வேறுபடுத்திக் காட்டும் சின்னங்களுடன் பொ.ச. 66-ல் வரவிருந்த ரோம படையை இயேசு அவ்வாறு குறிப்பிட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. அத்தகைய சின்னங்கள் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்தன. உண்மையில் அவை வழிபாட்டு உருவங்கள்; யூதர்களுக்கு அருவருப்பானவையாக இருந்தன.a ஆனால் எப்போது அந்தப் படையினர் ‘பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பார்கள்’? ரோம படையினர் சின்னங்களுடன் வந்து, யூதர் பரிசுத்தமாய் கருதிய எருசலேமையும் ஆலயத்தையும் தாக்கியபோது அது நடந்தது. ஆலய பகுதியின் மதில்களையும் ரோமர்கள் தகர்க்கத் தொடங்கினார்கள். மெய்யாகவே, நீண்டகாலம் அருவருப்பாய் இருந்தது இப்போது பரிசுத்த ஸ்தலத்தில் நின்றது!—ஏசாயா 52:1; மத்தேயு 4:5; 27:53; அப்போஸ்தலர் 6:13.
நவீனகால ‘அருவருப்பு’
7. இயேசுவின் எந்தத் தீர்க்கதரிசனம் நம் நாளில் நிறைவேறுகிறது?
7 முதல் உலகப் போர் முதற்கொண்டு, மத்தேயு 24-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசு சொன்ன அடையாளங்கள் நம் நாளில் பெரியளவில் நிறைவேறி வருகின்றன. என்றபோதிலும், அவருடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்: “பாழாக்குகிற அருவருப்பை . . . பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.” (மத்தேயு 24:15, 16) அந்தத் தீர்க்கதரிசனத்தின் இந்த அம்சம், நம் காலத்திலும் கண்டிப்பாக நிறைவேற வேண்டும்.
8. பல ஆண்டுகளாக யெகோவாவின் சாட்சிகள் இந்தத் தற்கால ‘அருவருப்பை’ எவ்வாறு வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்?
8 இத்தீர்க்கதரிசனம் நிறைவேறும் என்ற யெகோவாவின் ஊழியர்களுடைய நம்பிக்கையை ஜனவரி 1, 1921 தேதியிடப்பட்ட த உவாட்ச்டவர், மத்திய கிழக்கில் ஏற்பட்ட சம்பவங்கள் சம்பந்தமாக கவனத்தை ஊன்ற வைத்தது. அதன்பின், டிசம்பர் 15, 1929 இதழில், 374-ம் பக்கத்தில் த உவாட்ச்டவர் திட்டவட்டமாக இவ்வாறு சொன்னது: “ஜனங்களை கடவுளிடமிருந்தும் கிறிஸ்துவிடமிருந்தும் திருப்புவதே சர்வதேச சங்கத்தின் குறிக்கோள். ஆகவே, அது பாழாக்கும் சாதனமாகவும் சாத்தானின் படைப்பாகவும் கடவுளுடைய பார்வையில் ஓர் அருவருப்பாகவும் இருக்கிறது.” ஆகவே, 1919-ல் அந்த “அருவருப்பு” தோன்றியது. காலப்போக்கில், சர்வதேச சங்கத்தின் இடத்தை ஐக்கிய நாட்டு சங்கம் ஏற்றது. மனிதர் ஏற்படுத்திய இந்தச் சமாதான அமைப்புகள் கடவுளுடைய பார்வையில் அருவருப்பானவை என்பதை யெகோவாவின் சாட்சிகள் நெடுங்காலமாகவே வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.
9, 10. மிகுந்த உபத்திரவத்தைப் பற்றி ஆரம்பத்தில் புரிந்துகொண்ட விதம், இந்த “அருவருப்பு” பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கப்போகும் காலத்தைப் பற்றிய நம் கருத்தை எவ்வாறு பாதித்தது?
9 மத்தேயு 24, 25 அதிகாரங்களின் தெளிவாக்கப்பட்ட கருத்தை முந்தைய கட்டுரை தொகுத்துக் கூறியது. அப்படியானால், ‘பாழாக்கும் அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பது’ பற்றிய விளக்கமும் பொருத்தமாக இருக்கிறதா? ஆம், அப்படி இருப்பதாக தெரிகிறது. ‘பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பதை,’ முன்னறிவிக்கப்பட்ட ‘உபத்திரவம்’ ஆரம்பிப்பதோடு இயேசுவின் தீர்க்கதரிசனம் இணைத்துக் கூறுகிறது. ஆகவே, இந்த “அருவருப்பு” நீண்டகாலம் இருந்தபோதிலும், ‘பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பதற்கும்’ மிகுந்த உபத்திரவத்திற்கும் இடையேயுள்ள இணைப்பு நம்முடைய சிந்தனையை பாதிக்க வேண்டும். எவ்வாறு?
10 மிகுந்த உபத்திரவத்தின் முதல் கட்டம் 1914-ல் தொடங்கியது என்றும் முடிவான கட்டம் அர்மகெதோன் யுத்தத்தின்போது வரும் என்றும் கடவுளுடைய ஜனங்கள் ஆரம்பத்தில் புரிந்துகொண்டார்கள். (வெளிப்படுத்துதல் 16:14, 16; ஒப்பிடுக: த உவாட்ச்டவர், ஏப்ரல் 1, 1939, பக்கம் 110.) ஆகவே, பிற்பட்ட நாளைய “அருவருப்பு” முதல் உலக யுத்தத்திற்குப் பின் சீக்கிரத்திலேயே பரிசுத்த ஸ்தலத்தில் நின்றிருக்க வேண்டும் என்று ஒரு சமயம் ஏன் நினைக்கப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
11, 12. மிகுந்த உபத்திரவத்தைப் பற்றி, திருத்தப்பட்ட என்ன கருத்து 1969-ல் தெரிவிக்கப்பட்டது?
11 என்றபோதிலும், பிற்பட்ட ஆண்டுகளில் காரியங்களை வித்தியாசமான கோணத்தில் நாம் கண்டிருக்கிறோம். வியாழக்கிழமை, ஜூலை 10, 1969 அன்று, நியூ யார்க் நகரத்தில் நடந்த “பூமியில் சமாதானம்” என்ற சர்வதேச மாநாட்டில், அப்போது உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் துணை பிரெஸிடென்ட்டாக இருந்த எஃப். டபிள்யு. ஃபிரான்ஸ், மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு பேச்சைக் கொடுத்தார். இயேசுவின் தீர்க்கதரிசனத்தைப் பற்றி முன்பு என்ன புரிந்துகொண்டோம் என்பதை எடுத்துக் கூறி, சகோதரர் ஃபிரான்ஸ் இவ்வாறு சொன்னார்: “அந்த ‘மிகுந்த உபத்திரவம்’ பொ.ச. 1914-ல் தொடங்கிவிட்டது. ஆனால் அதன் முழு போக்கையும் தொடர அப்போது அது அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் 1918 நவம்பரில் முதல் உலக போரை கடவுள் நிறுத்தும்படி செய்தார் என்பதாக விளக்கமளிக்கப்பட்டது. அப்போது முதற்கொண்டு, ‘மிகுந்த உபத்திரவத்தின்’ கடைசி பாகம் அர்மகெதோன் யுத்தத்தில் தொடங்க அனுமதிப்பதற்கு முன்பு, தெரிந்துகொள்ளப்பட்ட மீதிபேரான அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் நடவடிக்கைக்காக ஓர் இடைக்காலத்தை கடவுள் அனுமதித்தார் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டது.”
12 பின்பு குறிப்பிடத்தக்க விதத்தில் மாற்றம் செய்யப்பட்ட ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது: “முதல் நூற்றாண்டில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு இசைவாக, . . . ‘மிகுந்த உபத்திரவம்’ பொ.ச. 1914-ல் ஆரம்பிக்கவில்லை. அதற்கு மாறாக, 1914-1918-ல் எருசலேமின் தற்கால மாதிரிப்படிவத்தின் விஷயத்தில் நடந்தேறிய சம்பவம், ‘வேதனைகளுக்கு ஆரம்பமாக’ மாத்திரமே இருந்தது. . . . இனி ஒருபோதும் சம்பவிக்காத அந்த ‘மிகுந்த உபத்திரவம்’ இன்னும் எதிர்காலத்தில் வரவிருக்கிறது. ஏனெனில், அது, (கிறிஸ்தவமண்டலம் உட்பட) பொய்மத உலகப் பேரரசின் அழிவையும் அதைப் பின்தொடர்ந்து அர்மகெதோனில் ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்தையும்’ குறிக்கிறது.” முழு அளவிலான மிகுந்த உபத்திரவம் இனி வருங்காலத்தில் நடக்கும் என்பதை இது அர்த்தப்படுத்தியது.
13. இந்த ‘அருவருப்பு,’ ‘பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பது’ எதிர்காலத்தில் நடக்கவிருக்கிறதென்று சொல்வது ஏன் நியாயமாக இருக்கிறது?
13 அந்த “அருவருப்பு” எப்போது பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கிறது என்பதை பகுத்தறிவதற்கு இது உதவுகிறது. முதல் நூற்றாண்டில் நடந்ததை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். பொ.ச. 66-ல் ரோமர்கள் எருசலேமை தாக்கினார்கள். ஆனால் அவர்கள் திடீரென பின்வாங்கியதால் கிறிஸ்தவ “மாம்சம்” காக்கப்படுவதற்கு இடமளித்தது. (மத்தேயு 24:22) அதுபோலவே, இந்த “மிகுந்த உபத்திரவம்” விரைவில் தொடங்கும்படி நாம் எதிர்பார்க்கிறோம். கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம் அது குறுக்கப்படும். இந்த முக்கியமான குறிப்பை கவனியுங்கள்: அந்தப் பூர்வ மாதிரியில், இந்தப் ‘பாழாக்கும் அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பது,’ பொ.ச. 66-ல் தளபதி கேலஸின் தலைமையில் ரோமர்கள் தாக்கியதோடு இணைக்கப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு தற்கால இணைசம்பவமாகிய, மிகுந்த உபத்திரவத்தின் திடீர் தொடக்கம், எதிர்காலத்தில் நடக்கவிருக்கிறது. ஆகவே, 1919-லிருந்து இருக்கும் அந்தப் ‘பாழாக்குகிற அருவருப்பு’ பரிசுத்த ஸ்தலத்தில் இனிமேல் நிற்கப்போகிறது என அத்தாட்சி காட்டுகிறது. b இது எவ்வாறு நடக்கும்? நாம் எவ்வாறு பாதிக்கப்படுகிறோம்?
ஓர் எதிர்கால தாக்குதல்
14, 15. அர்மகெதோனுக்கு வழிநடத்துகிற சம்பவங்களைப் புரிந்துகொள்ள, வெளிப்படுத்துதல் 17-ஆம் அதிகாரம் எவ்வாறு நமக்கு உதவிசெய்கிறது?
14 பொய் மதத்தின்மீது அழிவை உண்டாக்கும் ஓர் எதிர்கால தாக்குதலை வெளிப்படுத்துதல் புத்தகம் விவரிக்கிறது. ‘வேசிகளுக்குத் தாயாகிய மகா பாபிலோன்’ எனப்படும் பொய்மத உலகப் பேரரசுக்கு விரோதமான கடவுளுடைய நியாயத்தீர்ப்பை 17-ஆம் அதிகாரம் குறிப்பிடுகிறது. கிறிஸ்தவமண்டலம் மிக முக்கியமான பாகத்தை வகித்து, தனக்கு கடவுளுடன் ஓர் உடன்படிக்கை உறவு இருப்பதாக உரிமை பாராட்டுகிறது. (எரேமியா 7:4-ஐ ஒப்பிடுக.) கிறிஸ்தவமண்டலம் உட்பட, பொய் மதங்கள், ‘பூமியின் ராஜாக்களோடு’ நீண்ட காலமாக ‘கள்ளக் காதல்’ புரிகின்றன. ஆனால் இதற்குத் தண்டனையாக, அந்த மதங்கள் அடியோடு ஒழிக்கப்படும். (வெளிப்படுத்துதல் 17:2, 5) யாருடைய கைகளால்?
15 சிலகாலம் இருப்பதும் இல்லாமற்போவதும் பின்பு திரும்ப வருவதுமான ஒரு ‘சிவப்புநிறமுள்ள மிருகத்தை’ வெளிப்படுத்துதல் வர்ணிக்கிறது. (வெளிப்படுத்துதல் 17:3, 8) இந்த மிருகம் உலக ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்படுகிறது. அடையாளப்பூர்வமான இந்த மிருகம் 1919-ல் சர்வதேச சங்கமாகவும் (ஓர் ‘அருவருப்பு’ ) இப்போது ஐக்கிய நாட்டு சங்கமாகவும் இருக்கிறது. இதை ஓர் சமாதான அமைப்பாக அடையாளம் கண்டுகொள்ள, இத்தீர்க்கதரிசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள நுட்பவிவரங்கள் நமக்கு உதவுகின்றன. பொய்மத உலகப் பேரரசைப் பாழ்ப்படுத்தும் யோசனையை இந்த ‘மிருகத்தில்’ முதன்மையாக இருக்கும் மனித ஆட்சியாளர்கள் சிலருடைய இருதயங்களில் கடவுள் வைப்பார் என்று வெளிப்படுத்துதல் 17:16, 17 காட்டுகிறது. அந்தத் தாக்குதல் மிகுந்த உபத்திரவம் தொடங்கிவிட்டது என்பதைக் குறிக்கும்.
16. மத சம்பந்தப்பட்ட என்ன நிலைமை படிப்படியாக வளர்ந்துவருகிறது?
16 இந்த மிகுந்த உபத்திரவத்தின் தொடக்கம் இன்னும் எதிர்காலத்தில் இருப்பதால், ‘பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பது’ இன்னும் எதிர்காலத்தில்தான் இருக்கிறதா? அப்படித்தான் என அத்தாட்சி காட்டுகிறது. இந்த “அருவருப்பு” இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றி அவ்வாறு பல பத்தாண்டுகளாக இருந்துவருவதால், வெகுசீக்கிரத்தில் “பரிசுத்த ஸ்தலத்தில்” தனிப்பட்ட வகையில் அது தன் நிலையை ஏற்கும். ‘பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பது’ எவ்வாறு படிப்படியாய் ஏற்படும் என்பதைக் காண முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படி கூர்ந்து கவனித்திருப்பார்களோ அப்படியே இந்நாளைய கிறிஸ்தவர்களும் கவனிப்பார்கள். இவையெல்லாம் நிஜமாக நிறைவேறும்போதுதான் எல்லா நுட்பவிவரங்களையும் நாம் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்; எனவே அதுவரை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும், ஏற்கெனவே சில நாடுகளில், மதத்தின்மீது வெறுப்புணர்ச்சி இருப்பதும் அது பெருகுவதும் கவனிக்கத்தக்கது. சில அரசியல் கட்சிகள், உண்மையான விசுவாசத்தை விட்டு விலகிய முன்னாள் கிறிஸ்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு, பொதுப்படையாக மதத்திற்கும், முக்கியமாக உண்மை கிறிஸ்தவர்களுக்கும் விரோதமாக பகைமையை படிப்படியாக வளர்த்து வருகின்றன. (சங்கீதம் 94:20, 21; 1 தீமோத்தேயு 6:20, 21) இதனால், அரசியல் அதிகாரங்கள் இப்போதே ‘ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுகின்றன.’ வெளிப்படுத்துதல் 17:14 தெரிவிக்கிறபடி, இந்தச் சண்டை இன்னும் கடுமையாகும். தம்முடைய உன்னத பதவியில் மகிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவை இவர்களால் தாக்கமுடியாது. ஆகவே கடவுளுடைய மெய் வணக்கத்தாருக்கு விரோதமாக, முக்கியமாய் அவருடைய ‘பரிசுத்தவான்களுக்கு’ விரோதமாக தங்கள் எதிர்ப்பை காட்டுவார்கள். (தானியேல் 7:25; ஒப்பிடுக: ரோமர் 8:27; கொலோசெயர் 1:2; வெளிப்படுத்துதல் 12:17.) ஆனால், ஆட்டுக்குட்டியானவரும் அவருடன் இருப்போருமே வெற்றிசிறப்பர் என்று கடவுள் நமக்கு உறுதியளித்திருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 19:11-21.
17. எப்படியெல்லாம் அந்த ‘அருவருப்பு’ பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கப்போகிறது என நாம் அடித்துச் சொல்லாவிட்டாலும் எதைச் சொல்ல முடியும்?
17 பொய்மதத்திற்கு அழிவு காத்திருக்கிறது என்று நமக்குத் தெரியும். மகா பாபிலோன் ‘பரிசுத்தவான்களின் இரத்தத்தினால் வெறிகொண்டிருக்கிறாள்.’ மேலும் ராணியைப்போல் நடித்திருக்கிறாள், ஆனால் அவள் அழியத்தான் போகிறாள். இதில் துளியும் சந்தேகமில்லை. பூமியின் ராஜாக்கள்மீது அவள் செலுத்தியிருக்கும் அசுத்தமான வசீகரம், திடீரென்று மாறும்; எப்பொழுது? ‘பத்துக் கொம்புகளும் மிருகமுமானவை’ சல்லாப உணர்விலிருந்து வன்முறையான பகை உணர்வைக் காட்டுகையில் இது நடைபெறும். (வெளிப்படுத்துதல் 17:6, 16; 18:7, 8) ‘சிவப்புநிற மிருகம்’ மத வேசியை தாக்கும்போது, இந்த “அருவருப்பு” கிறிஸ்தவமண்டலத்தின் பரிசுத்த ஸ்தலம் என்றழைக்கப்படுவதில் அச்சுறுத்தும் வகையில் நின்றுகொண்டிருக்கும். c ஆகவே, தன்னை பரிசுத்தமானதுபோல் காட்டிக்கொள்கிற, விசுவாசமற்ற கிறிஸ்தவமண்டலத்தின்மீது பாழாக்குதல் தொடங்கும்.
“ஓடிப்போவது”—எவ்வாறு?
18, 19. ‘மலைகளுக்கு ஓடிப்போதல்’ மதமாற்றத்தைக் குறிக்காது என்பதைக் காட்டுவதற்கு என்ன காரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?
18 இந்த ‘அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பதைப்’ பற்றி முன்னறிவித்த பின்பு, பகுத்தறிந்துகொள்வோர் செயல்படும்படி இயேசு எச்சரித்தார். அந்த “அருவருப்பு” ‘பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கும்’ அவ்வளவு பிந்திய சமயத்தில், அநேகர் பொய்மதத்திலிருந்து விலகியோடி உண்மையான வணக்கத்தை ஏற்பார்கள் என்று அவர் அர்த்தங்கொண்டாரா? அப்படியிருக்க முடியாது. முதல் நிறைவேற்றத்தை கவனியுங்கள். இயேசு சொன்னார்: ‘யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன். அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ! நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.’—மாற்கு 13:14-18.
19 யூத வழிபாட்டு மையத்திலிருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்பதுபோல், எருசலேமில் இருந்தவர்கள் மாத்திரமே வெளியேற வேண்டும் என்று அவர் சொல்லவில்லை; மதத்தை மாற்றுவதையும்—அதாவது, பொய் மதத்திலிருந்து விலகி மெய் மதத்தை ஏற்றுக்கொள்வதையும்—அவருடைய எச்சரிக்கை அர்த்தப்படுத்தவில்லை. ஒரு மதத்திலிருந்து மற்றொன்றுக்கு ஓடுவதைப் பற்றிய எச்சரிக்கை நிச்சயமாகவே இயேசுவின் சீஷர்களுக்குத் தேவைப்படவில்லை; அவர்கள் ஏற்கெனவே மெய் கிறிஸ்தவர்களாக ஆகியிருந்தார்கள். மேலும், பொ.ச. 66-ல் நடந்த அந்தத் தாக்குதல், எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் யூதேய மதத்தை பின்பற்றியவர்கள் அந்த மதத்தை விட்டு விலகி கிறிஸ்தவத்தை ஏற்கும்படியும் தூண்டவில்லை. தப்பியோடிய ரோமர்களை துரத்திச் சென்றவர்கள், நகரத்திற்குத் திரும்பி வந்ததைப் பற்றி ஹைன்ரிச் கிரெட்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “அந்த யூத மதவெறியர்கள், மகிழ்ச்சி ஆரவார யுத்தப் பாடல்களை உரத்த குரலில் முழக்கமாய்ப் பாடிக்கொண்டு (அக்டோபர் 8-ல்) எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள். சுதந்திரமும் சுயாதீனமும் இருக்குமென்ற மகிழ்ச்சியுள்ள நம்பிக்கையால், அவர்களுடைய இருதயங்கள் துடித்துக்கொண்டிருந்தன. . . . கடவுள் தங்கள் முற்பிதாக்களுக்கு உதவி செய்திருந்ததைப்போல், தங்களுக்கும் இரக்கமாய் உதவிசெய்தார் அல்லவா? எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி அவர்களது நெஞ்சங்களில் கொஞ்சமும் பயம் இல்லை.”
20. மலைகளுக்கு ஓடிப்போகும்படியான இயேசுவின் அறிவுரையின்பேரில் அந்தப் பூர்வ கிறிஸ்தவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள்?
20 மற்றவர்களோடு ஒப்பிட, சிறிய எண்ணிக்கையில் இருந்த தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், இயேசுவின் அறிவுரையின்பேரில் எவ்வாறு செயல்பட்டார்கள்? யூதேயாவை விட்டு, யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த மலைகளுக்கு ஓடிப்போனார்கள். இதன்மூலம், அரசியல் சம்பந்தமாகவோ மத சம்பந்தமாகவோ தாங்கள் அந்த யூத ஒழுங்குமுறையின் பாகமாக இல்லை என்பதைக் காட்டினார்கள். தங்கள் வீடுகளிலிருந்து உடைமைகளையுங்கூட எடுக்காமல், வயல்களையும் வீடுகளையும் விட்டுச் சென்றார்கள். அவர்களுக்கு யெகோவாவின் பாதுகாப்பிலும் ஆதரவிலும் திடநம்பிக்கை இருந்தது. முக்கியமாய்த் தோன்றின மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் கடவுளுடைய வழிபாட்டையே முதலாவதாக வைத்தார்கள்.—மாற்கு 10:29, 30; லூக்கா 9:57-62.
21. அந்த “அருவருப்பு” தாக்குகையில் என்ன நடக்கும்படி நாம் எதிர்பார்க்க முடியாது?
21 அதைப்போலவே, பெரிய நிறைவேற்றத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். பொய்மதத்தை விட்டு வெளியேறி உண்மையான வணக்கத்தை ஏற்கும்படி, பல பத்தாண்டுகளாக நாம் ஜனங்களை உற்சாகப்படுத்தி வருகிறோம். (வெளிப்படுத்துதல் 18:4, 5) லட்சக்கணக்கானோர் அவ்வாறே உண்மை வணக்கத்தை ஏற்றிருக்கிறார்கள். மிகுந்த உபத்திரவம் தொடங்கினவுடன் திரளான பேர், தூய்மையான வணக்கத்திற்குத் திரும்புவார்கள் என்று இயேசுவின் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறதில்லை. நிச்சயமாகவே, பொ.ச. 66-ல் யூதர்கள் திரளாக மதம் மாறவில்லை. எனினும், இயேசுவின் எச்சரிக்கைக்குச் செவிகொடுத்து ஓடும்படியான பெரும் தூண்டுதல் உண்மையான கிறிஸ்தவர்களுக்கு இருக்கும்.
22. மலைகளுக்கு ஓடிப்போவதைப்பற்றிய இயேசுவின் அறிவுரையை நாம் பொருத்துவது எதை உட்படுத்தலாம்?
22 மிகுந்த உபத்திரவத்தைப் பற்றிய முழு நுட்பவிவரங்களும் தற்போது நமக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், இயேசு குறிப்பிட்டுப் பேசின ஓடிப்போதல், பூகோள ரீதியில் இடம்விட்டு இடம் செல்வதைக் குறிக்காது என்று நாம் நியாயமாகவே முடிவுசெய்யலாம். கடவுளுடைய ஜனங்கள் ஏற்கெனவே பூகோளம் முழுவதிலும் மூலைக்கு மூலை இருக்கிறார்கள். எனினும், ஓடிப்போவதற்கான சந்தர்ப்பம் வருகையில், கிறிஸ்தவர்கள் தங்களுக்கும் பொய்மத அமைப்புகளுக்கும் இடையேயுள்ள தெளிவான வேறுபாட்டைத் தொடர்ந்து காத்துவரவேண்டும் என்பதைப் பற்றி நாம் நிச்சயமாக இருக்கலாம். வஸ்திரங்களையோ மற்ற பொருட்களையோ எடுத்து வருவதற்கு ஒருவர் தன் வீட்டுக்குத் திரும்பிச் செல்லாதிருக்கும்படி இயேசு எச்சரித்ததும் கவனிக்கத்தக்கது. (மத்தேயு 24:17, 18) ஆகையால், பொருள் சம்பந்தமானவற்றை நாம் எவ்வாறு கருதுகிறோம் என்பதன்பேரில் எதிர்காலத்தில் சோதனைகள் வரலாம். அவை உண்மையில் அவ்வளவு முக்கியமானவையா, அல்லது கடவுளுடைய சார்பில் இருப்போர் எல்லாருக்கும் வரவிருக்கிற இரட்சிப்பு அதிக முக்கியமானதா? ஆம், நாம் ஓடிப்போவது சில கஷ்டங்களையும் நஷ்டங்களையும் உட்படுத்தலாம். நமக்கு இணையானோரான, யூதேயாவிலிருந்து யோர்தானுக்கு அக்கறையில் பெரேயாவுக்குத் தப்பியோடின நம் முதல் நூற்றாண்டினர் செய்ததைப்போல், தேவைப்படுகிற எதையும் செய்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
23, 24. (அ) எங்கு மாத்திரமே நாம் பாதுகாப்பைக் கண்டடைவோம்? (ஆ) ‘பாழாக்கும் அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பதைப்’ பற்றிய இயேசுவின் எச்சரிக்கை, நம்மைப் பயமுறுத்த வேண்டுமா?
23 யெகோவாவும் அவருடைய மலை போன்ற அமைப்புமே தொடர்ந்து நம்முடைய அடைக்கலம் என்பதில் நாம் நிச்சயமாக இருக்க வேண்டும். (2 சாமுவேல் 22:2, 3; சங்கீதம் 18:2; தானியேல் 2:35, 44) அங்குதான் நாம் பாதுகாப்பைக் கண்டடைவோம்! மனிதவர்க்கத்தின் திரளானோர் “பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும்” ஓடி ஒளிவதைப்போல் நாம் செய்யமாட்டோம். அவர்களுடைய அடைக்கலங்களாகிய மனித அமைப்புகளும் நிறுவனங்களும் மகா பாபிலோன் பாழாக்கப்பட்ட பின்பு, மிகக் குறுகிய காலமே நீடித்திருக்கலாம். (வெளிப்படுத்துதல் 6:15; 18:9-11) உண்மைதான், பொ.ச. 66-ல் நிலவிய நிலைமையைப்போல், காலங்கள் மிகவும் கடினமாகலாம். யூதேயாவைவிட்டு ஓடுகையில் கர்ப்பவதிகளுக்கு, அல்லது குளிர்ந்த மழை பருவத்தில் அப்போது பயணம் செய்யவிருந்த எவருக்கும் ஏற்பட்ட நிலைமையை போல் ஆகலாம். ஆனால், கடவுள் எப்படியாவது நாம் தப்பும் வழியைக் காட்டுவார் என்பதில் சந்தேகமே இல்லை. யெகோவாவிலும் ராஜ்யத்தின் அரசராக இப்போது ஆளுகிற அவருடைய குமாரனிலும் நம்முடைய நம்பிக்கையை இப்போதே நாம் மேலும் பலப்படுத்துவோமாக.
24 ஆகவே, என்ன நடக்கப்போகிறதோ என்று நாம் கதிகலங்க வேண்டிய அவசியமேயில்லை. அக்காலத்தில் இருந்த தம்முடைய சீஷர்கள் பயப்படும்படியும் இயேசு விரும்பவில்லை. இப்போது அல்லது வரவிருக்கிற நாட்களில் நாம் பயப்படும்படியும் அவர் விரும்புகிறதில்லை. நம்முடைய இருதயத்தையும் மனதையும் நாம் தயாராக வைத்திருக்கும்படியே அவர் நமக்கு விழிப்பூட்டியிருக்கிறார். பொய்மதத்தின்மீதும் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் மீதிபாகத்தின்மீதும் அழிவு வருகையில், கீழ்ப்படிதலுள்ள கிறிஸ்தவர்கள் தண்டிக்கப்படப் போவதில்லை. அவர்கள் பகுத்தறிந்து, அந்த ‘அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பதைப்’ பற்றிய எச்சரிக்கைக்கு செவிகொடுப்பார்கள். அசைக்க முடியாத தங்கள் விசுவாசத்துக்கு ஏற்றவாறு மன உறுதியுடன் அவர்கள் செயல்படுவார்கள். இயேசுவின் இந்த வாக்குறுதியை நாம் ஒருபோதும் மறவாமல் இருப்போமாக: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.”—மாற்கு 13:13.
[அடிக்குறிப்புகள்]
a இயேசு சொன்ன வார்த்தைகள் பொ.ச. 66-70-ல் நிறைவேறிய விதம், மிகுந்த உபத்திரவத்தின்போது எவ்வாறு நிறைவேறும் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவலாம். என்றாலும், இந்த இரண்டு நிறைவேற்றங்களும் முற்றிலும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. ஏனெனில், அவை வேறுபட்ட சூழ்நிலைகளில் நிறைவேறுகின்றன.
b ஆங்கில காவற்கோபுரம், டிசம்பர் 15, 1975, பக்கங்கள் 741-4-ஐக் காண்க.
c “அந்த ரோம சின்னங்கள், ரோமில் இருந்த கோவில்களில் மதபக்தியுடன் கவனமாய் காக்கப்பட்டன; இந்த ஜனங்கள் மற்ற தேசங்களின்மீது பெறும் வெற்றியைப் பொருத்து, இவர்களது சின்னங்களின்மீது வைத்திருந்த மதபக்தியும் பெருகியது. . . . [போர்வீரர்களுக்கு] பெரும்பாலும், இதுதான் இந்த உலகத்திலேயே மிக அதிக பரிசுத்தமான பொருளாக தெரிந்தது. ரோம போர்வீரன் தன் சின்னத்தை சாட்சியாக வைத்து ஆணையிட்டான்.”—தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா, 11-வது பதிப்பு.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ “பாழாக்கும் அருவருப்பு,” முதல் நூற்றாண்டில் எவ்வாறு தன்னை வெளிப்படுத்தியது?
◻ தற்கால “அருவருப்பு,” எதிர்காலத்தில் ஒரு சமயம் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கும் என்று நினைப்பது ஏன் நியாயமாக இருக்கிறது?
◻ இந்த “அருவருப்பு” செய்யப்போகிற என்ன தாக்குதல் வெளிப்படுத்துதலில் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது?
◻ எந்த வகையில் நாம் ‘ஓடிப்போக’ வேண்டியிருக்கலாம்?
[பக்கம் 16-ன் படம்]
மகா பாபிலோன், ‘வேசிகளுக்குத் தாய்’ என்று அழைக்கப்படுகிறது
[பக்கம் 17-ன் படம்]
வெளிப்படுத்துதல் 17-ம் அதிகாரத்தின் சிவப்புநிற மிருகமே இயேசு குறிப்பிட்ட ‘அருவருப்பு’
[பக்கம் 18-ன் படம்]
மதத்தின்மீது பாழாக்கும் தாக்குதலை சிவப்புநிற மிருகம் தலைமைதாங்கி நடத்தும்