கடவுள் நடவடிக்கை எடுக்கையில் நீங்கள் தப்புவிக்கப்படுவீர்களா?
“அந்நாட்கள் குறுக்கப்படாதிருந்தால் மாம்சமான எதுவும் தப்பிப்போவதில்லை. தெரிந்தெடுக்கப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறுக்கப்படும்.”—மத்தேயு 24:22, தி.மொ.
1, 2. (அ) நம்முடைய எதிர்காலத்தில் அக்கறையுடையோராக இருப்பது ஏன் இயல்பானதே? (ஆ) எந்த முக்கியமான கேள்விகளில் இயல்பான அக்கறை உட்பட்டிருந்திருக்கலாம்?
நீங்கள் உங்களில் எவ்வளவு அக்கறையுடையவர்களாக இருக்கிறீர்கள்? இன்று பலர், தன்னல அக்கறையை மட்டுக்குமீறிய அளவுக்குக் கொண்டுசெல்கின்றனர், தன்னலமே கருதுவோராக இருக்கின்றனர். எனினும், நம்மைப் பாதிப்பதில், தகுந்த அக்கறை செலுத்துவதை பைபிள் கண்டனம் செய்கிறதில்லை. (எபேசியர் 5:33) நம்முடைய எதிர்காலத்தில் அக்கறையுடையோராக இருப்பதையும் அது உட்படுத்துகிறது. ஆகையால் உங்கள் எதிர்காலம் உங்களுக்கு வைத்திருப்பதை அறிய நீங்கள் அக்கறையுடையோராக இருப்பது இயல்பானதாகவே இருக்கும். நீங்கள் அக்கறையுடையவராக இருக்கிறீர்களா?
2 இயேசுவின் அப்போஸ்தலர் தங்கள் எதிர்காலத்தில் அத்தகைய அக்கறையுடையோராக இருந்தனர் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். (மத்தேயு 19:27) அவர்களில் நான்கு பேர் இயேசுவுடன் ஒலிவ மலையின்மேல் இருந்தபோது, அவர்கள் கேட்ட கேள்விக்கு அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இவ்வாறு அவர்கள் கேட்டனர்: “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன?” (மாற்கு 13:4) எதிர்காலத்தில் இயல்பான அக்கறையை—அவர்களுடைய அக்கறையையும் நம்முடையதையும்—இயேசு கவனியாமல் விடவில்லை. தம்மைப் பின்பற்றுவோர் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள், இறுதியான முடிவு என்னவாயிருக்கும் என்பதை அவர் மறுபடியும் மறுபடியுமாக விளக்கமாகத் தெரியப்படுத்தினார்.
3. இயேசுவின் பதிலை நம்முடைய காலத்தோடு நாம் ஏன் இணைக்கிறோம்?
3 இயேசுவின் பதில், நம்முடைய காலத்தில் பெரிய நிறைவேற்றத்தை உடைய ஒரு தீர்க்கதரிசனத்தை அளித்தது. நம் நூற்றாண்டில் நடந்த உலகப் போர்களிலிருந்தும் மற்ற சண்டை சச்சரவுகளிலிருந்தும் எண்ணற்ற உயிர்களை காவுகொள்ளும் பூமியதிர்ச்சிகளிலிருந்தும் நோய் மற்றும் மரணத்தை கொண்டுவரும் உணவு குறைபாடுகளிலிருந்தும் 1918-ன் பெரும் பரவலான ஸ்பானிஷ் சளிக்காய்ச்சலிலிருந்து தற்போதுள்ள எய்ட்ஸ் தொல்லை வரையான கொள்ளைநோய்களிலிருந்தும் இதை நாம் காணமுடிகிறது. எனினும், இயேசுவினுடைய பதிலின் பெரும்பான்மையானவை, பொ.ச. 70-ல் ரோமரால் எருசலேம் அழிக்கப்பட்டதற்கு வழிநடத்தின காலத்தின்போதும் அதன் அழிவின்போதும் ஒரு நிறைவேற்றமடைந்தன. இயேசு தம்முடைய சீஷர்களை இவ்வாறு எச்சரித்தார்: “நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்குமுன்பாக நிறுத்தப்படுவீர்கள்.”—மாற்கு 13:9.
இயேசு முன்னறிவித்ததும் நிறைவேறினதும்
4. இயேசுவின் பதிலில் உள்ளடக்கப்பட்ட சில எச்சரிக்கைகள் யாவை?
4 தம்முடைய சீஷர்களை மற்றவர்கள் எவ்வாறு நடத்துவார்கள் என்பதை இயேசு முன்னறிவித்ததுமட்டுமல்லாமல் மேலுமதிகமானவற்றையும் கூறினார். அவர்கள்தாமே எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் குறித்தும் அவர்களை எச்சரித்தார். உதாரணமாக: “பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து . . . (வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்); அது நிற்கத்தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.” (மாற்கு 13:14) லூக்கா 21:20-ல் உள்ள இதற்கு இணையான விவரம், “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது,” என்பதாக சொல்கிறது. முதல் நிறைவேற்றத்தில் அது எவ்வாறு திருத்தமானதாக நிரூபித்தது?
5. பொ.ச. 66-ல் யூதேயாவிலிருந்த யூதருக்குள் என்ன நடந்தது?
5 தி இன்டர்நாஷனல் ஸ்டாண்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா (1982) நமக்கு இவ்வாறு சொல்கிறது: “ரோம ஆட்சியின்கீழ் யூதர்கள் மேலும் மேலும் அதிகமாகக் கட்டுப்பாட்டை எதிர்ப்பவர்களாக ஆகிக்கொண்டிருந்தனர், அவர்களுடைய ரோம மாகாண அதிகாரிகளும், மேலுமதிகக் கொடுமையானோராயும், கொடூரமுள்ளோராயும், நேர்மையற்றோராயும் ஆகிக்கொண்டிருந்தனர். கி.பி. 66-ல் வெளிப்படையான கலகம் தொடங்கினது. . . . யூத வெறியர் குழுவினர் மசாடாவைக் கைப்பற்றி, பின்பு, மெனாஹெம்மின் தலைமையின்கீழ் எருசலேமுக்குள் அணிவகுத்துச் சென்றபோது, போர் தொடங்கினது. ஆளுநருக்குரிய நகரமான செசரியாவிலிருந்த யூதர்கள் அதேசமயத்தில் படுகொலை செய்யப்பட்டனர்; இந்தக் கொடூரச் செயலைப்பற்றிய செய்தி நாடு முழுவதிலும் பரவினது. புதிதாக அச்சடிக்கப்பட்ட நாணயங்களின்மீது அந்தக் கலகத்தின் ஆண்டு 1 என்பதாக, ஆண்டு 5 வரையாக அவை குறிப்பிடப்பட்டன.”
6. யூதக் கலகம் ரோமரிடமிருந்து என்ன எதிர்த்தாக்குதலை உண்டாக்கியது?
6 செஸ்டியஸ் கல்லெஸின் தலைமையின்கீழ், பன்னிரண்டாவது ரோம படை சிரியாவிலிருந்து அணிவகுத்து வந்து, கலிலேயாவையும் யூதேயாவையும் பாழ்ப்படுத்தி, பின்பு தலைநகரைத் தாக்கி, ‘எருசலேமென்னும் பரிசுத்த நகரத்தின்’ மேற்பகுதியைக் கைப்பற்றவும் செய்தது. (நெகேமியா 11:1; மத்தேயு 4:5; 5:35; 27:53) படிப்படியாக ஏற்பட்டவற்றைச் சுருக்கிக் கூறுவதாய், எருசலேமின் ரோம முற்றுகை (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “மதில்களின்மீது ஏறுவதற்கு ரோமர் ஐந்து நாட்களாக முயற்சி செய்து, மறுபடியும் மறுபடியுமாகத் தோல்வியடைந்தனர். தாக்குதலை எதிர்த்துப் போராடினவர்கள், கடைசியாக, ஏராளமான எறிபடைகளால் மேற்கொள்ளப்பட்டவர்களாய் எதிர்ப்பை நிறுத்திவிட்டனர். ரோம போர்வீரர்கள் டெஸ்டுடோ முறைமைப்படி—தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, தங்கள் கேடகங்களைத் தங்கள் தலைகள்மீது மாட்டிக்கொள்ளும் முறைமைப்படி—அணிவகுத்து, அந்த மதிலின் அடிப்பகுதியை அரித்தெடுத்து, கோட்டை வாசலுக்கு தீ வைக்க முயற்சி செய்தனர். எதிர்த்துப் போராடினவர்களுக்குப் பயங்கர திகில் உண்டாயிற்று.” அந்த நகரத்துக்குள் இருந்த கிறிஸ்தவர்கள் இயேசுவின் வார்த்தைகளை நினைவுபடுத்தி, பாழாக்கும் ஓர் அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பதை கண்டுணர்ந்துகொள்ள முடிந்தது.a ஆனால் பட்டணம் சூழப்பட்டிருந்ததால், இயேசு அறிவுரை கொடுத்திருந்தபடி, அத்தகைய கிறிஸ்தவர்கள் எவ்வாறு ஓடிப்போக முடியும்?
7. பொ.ச. 66-ல் வெற்றி எளிதில் அடையக்கூடிய நிலையில் இருந்தபோது, ரோமர் என்ன செய்தனர்?
7 சரித்திராசிரியர் ஃப்ளேவியஸ் ஜொஸிபஸ் இவ்வாறு கூறுகிறார்: “முற்றுகையிடப்பட்டவர்களின் மனமுறிவையோ, அந்த ஜனங்களின் உணர்ச்சிகளையோ அறியாமல், செஸ்டியஸ் [கல்லெஸ்], தாக்குதலை நிறுத்தும்படி திடீரென்று தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டு, தான் தோல்வியடைந்திராதபோதிலும், நம்பிக்கையை இழந்து, காரணமில்லாமல் அந்நகரத்தைவிட்டு விலகி விரைந்து சென்றுவிட்டார்.” (யூதப் போர், II, (ஆங்கிலம்), 540 [xix, 7]) கல்லெஸ் ஏன் பின்வாங்கிச் சென்றுவிட்டார்? நோக்கம் என்னவாக இருந்தாலும், அவர் பின்வாங்கிச் சென்றது, கிறிஸ்தவர்கள் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, மலைகளுக்கும் பாதுகாப்புக்கும் ஓடிப்போவதற்கு வழிவகுத்தது.
8. எருசலேமுக்கு எதிராக ரோமர் எடுத்த இரண்டாவது படி என்ன, தப்பிப்பிழைத்தவர்கள் என்ன அனுபவித்தனர்?
8 கீழ்ப்படிதல் உயிரைப் பாதுகாத்தது. சீக்கிரத்தில், அந்தக் கலகத்தை அடக்குவதற்கு ரோமர் நடவடிக்கை எடுத்தனர். தளபதி டைட்டஸினுடைய தலைமையின்கீழ் எடுக்கப்பட்ட போர் நடவடிக்கை, பொ.ச. 70-ன் ஏப்ரலிலிருந்து ஆகஸ்ட் வரையில் எருசலேம் முற்றுகையிடப்படுவதில் உச்சநிலையை அடைந்தது. யூதர்கள் பட்ட பாடுகளைப் பற்றிய ஜொஸிபஸின் விவரிப்பை வாசிப்பது ஒருவரைத் திடுக்கிடச் செய்கிறது. ரோமரோடு போரிடுவதில் கொல்லப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், யூதரின் எதிர்க்கட்சிகளாலும் மற்ற யூதர்கள் கொல்லப்பட்டனர்; மேலும், பட்டினியாக இருந்தது மனிதனை மனிதன் உண்பதற்கு வழிநடத்தினது. ரோமர் வெற்றிபெற்ற சமயத்துக்குள்ளாக, 11,00,000 யூதர்கள் மாண்டிருந்தனர்.b தப்பிப்பிழைத்த 97,000 பேரில், சிலர் உடனடியாகக் கொல்லப்பட்டனர்; மற்றவர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். ஜொஸிபஸ் இவ்வாறு சொல்கிறார்: “பதினேழு வயதுக்கு மேற்பட்டவர்கள் விலங்கிடப்பட்டு, எகிப்தில் கடும் உழைப்புக்கு அனுப்பப்பட்டனர்; அதே சமயத்தில் பெரும் எண்ணிக்கையானவர்கள், வாளால் அல்லது மூர்க்க மிருகங்களால் விளையாட்டரங்கங்களில் சாகும்படி, டைட்டஸ் அவர்களை மாகாணங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.” இந்த வகைப்படுத்துதல் நடந்துகொண்டிருக்கையிலேயே, 11,000 கைதிகள் பட்டினியால் சாகும்படி விடப்பட்டனர்.
9. யூதர் அனுபவித்த விளைவை கிறிஸ்தவர்கள் ஏன் அனுபவிக்கவில்லை, ஆனால் என்ன கேள்விகள் இன்னுமுள்ளன?
9 கர்த்தரின் எச்சரிக்கைக்குக் கீழ்ப்படிந்து, அந்த ரோம சேனை திரும்பிவருவதற்குமுன் நகரத்திலிருந்து ஓடிவிட்டதற்காக, கிறிஸ்தவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். இவ்வாறு எருசலேமில், ‘உலகமுண்டானதுமுதல் அதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவிக்கப்போகாததுமான மிகுந்த உபத்திரவம் [“மகா உபத்திரவம்,” NW]’ என்று இயேசு குறிப்பிட்டு சொன்னதன் பாகத்திலிருந்து அவர்கள் தப்புவிக்கப்பட்டார்கள். (மத்தேயு 24:21) இயேசு மேலும் கூறினார்: “உண்மையில், அந்நாட்கள் குறுக்கப்படாதிருந்தால் மாம்சமான எதுவும் தப்பிப்போவதில்லை. தெரிந்தெடுக்கப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறுக்கப்படும்.” (மத்தேயு 24:22, தி.மொ.) அது அப்போது எதைக் குறித்தது, இப்போது எதைக் குறிக்கிறது?
10. மத்தேயு 24:22-ஐ முன்பு நாம் எவ்வாறு விளக்கினோம்?
10 ‘தப்புவிக்கப்படவிருந்த மாம்சம்,’ பொ.ச. 70-ல் எருசலேமின்மீது வந்த அந்த மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைத்த யூதரைக் குறிப்பிட்டதென்று கடந்த காலத்தில் விளக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் ஓடிப்போய்விட்டிருந்தனர், ஆகையால் ரோமர் விரைவான அழிவைக் கொண்டுவரும்படி கடவுள் விடலாம். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், “தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” ஆபத்துக்கு விலகியவர்களாக இருந்ததினிமித்தம், அந்த மிகுந்த உபத்திரவத்தின் நாட்கள் குறுக்கப்பட்டு, சில யூத “மாம்சம்” தப்புவிக்கப்பட இடமளிக்க முடியும். தப்பிப்பிழைத்த அந்த யூதர்கள், நம்முடைய நாளில் வரவிருக்கிற அந்த மகா உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்க இருப்போருக்கு முன்நிழலாக இருந்தனரென்று உணரப்பட்டது.—வெளிப்படுத்துதல் 7:14.
11. ஏன், மத்தேயு 24:22-ன் அந்த விளக்கம் திரும்பவும் சிந்திக்கப்பட வேண்டியதாக இருப்பதாய்த் தோன்றுகிறது?
11 ஆனால் அந்த விளக்கம் பொ.ச. 70-ல் நடந்தவற்றோடு ஒத்திருக்கிறதா? அந்த உபத்திரவத்திலிருந்து அந்த மனித “மாம்சம்,” ‘தப்புவிக்கப்பட’ இருந்ததென்று இயேசு சொன்னார். தப்பிப்பிழைத்த 97,000 பேரில் ஆயிரக்கணக்கானோர் பட்டினியினால் சீக்கிரத்தில் மரித்த அல்லது ஒரு காட்சியரங்கத்தில் கொல்லப்பட்ட இந்த உண்மையைக் கருதுகையில், அவர்களை விவரிக்க, ‘தப்புவிக்கப்பட்டவர்கள்’ என்ற சொல்லை நீங்கள் பயன்படுத்துவீர்களா? செசரியாவிலிருந்த ஒரு காட்சியரங்கத்தைப் பற்றி ஜொஸிபஸ் இவ்வாறு சொல்கிறார்: “மூர்க்க மிருகங்களோடு போரிடுவதில் அல்லது ஒருவரோடொருவர் சண்டையிடுவதில் அல்லது உயிரோடு எரிக்கப்படுவதால் மாண்டவர்களின் எண்ணிக்கை 2,500-க்கு மேற்பட்டிருந்தது.” முற்றுகையில் அவர்கள் சாகாவிடினும், அவர்கள் ‘தப்புவிக்கப்பட்டவர்களாக’ நிச்சயமாகவே இல்லை. வரவிருக்கிற ‘மகா உபத்திரவத்தை’ மகிழ்ச்சியுடன் தப்பிப் பிழைத்திருக்கவிருப்போருக்கு ஒப்பாயிருப்பவர்களாக அவர்களை இயேசு கருதுவாரா?
மாம்சம் தப்புவிக்கப்பட்டது—எவ்வாறு?
12. முதல் நூற்றாண்டில், கடவுள் அக்கறைகொண்டிருந்த ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ யார்?
12 பொ.ச. 70-க்குள், இயல்பான யூதரைத் தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாக அதற்கு மேலும் கடவுள் கருதவில்லை. கடவுள் அந்த ஜனத்தைத் தள்ளிவிட்டாரென்றும், அதன் தலைநகரும், ஆலயமும், வணக்க ஒழுங்குமுறையும் முடிவுக்கு வர அனுமதித்தாரென்றும் இயேசு காட்டினார். (மத்தேயு 23:37–24:2) ஒரு புதிய ஜனமாகிய ஆவிக்குரிய இஸ்ரவேலை கடவுள் தெரிந்துகொண்டார். (அப்போஸ்தலர் 15:14; ரோமர் 2:28, 29; கலாத்தியர் 6:16) அது, எல்லா தேச ஜனங்களிலிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட ஆண்களும் பெண்களும் அடங்கியதாக இருந்தது. (மத்தேயு 22:14; யோவான் 15:19; அப்போஸ்தலர் 10:1, 2, 34, 35, 44-46) செஸ்டியஸ் கல்லெஸின் தாக்குதலுக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பாக, பேதுரு, ‘ஆவியின் பரிசுத்தமாக்குதலினால் . . . பிதாவாகிய கடவுளுடைய முன்னறிவின்படி தெரிந்தெடுக்கப்பட்டவர்களுக்கு’ எழுதினார். ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட அத்தகையோர், ‘தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும்’ இருந்தார்கள். (1 பேதுரு 1:1, 2, தி.மொ.; 2:9) தெரிந்துகொள்ளப்பட்ட இத்தகையோர், இயேசுவுடன் ஆளுகை செய்யும்படி, கடவுள் அவர்களைப் பரலோகத்திற்குக் கொண்டுசெல்வார்.—கொலோசெயர் 1:1, 2; 3:12; தீத்து 1:1; வெளிப்படுத்துதல் 17:14.
13. மத்தேயு 24:22-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் என்ன கருத்தை உடையனவாக இருந்திருக்கலாம்?
13 “தெரிந்தெடுக்கப்பட்டவர்களினிமித்தமோ,” அந்த உபத்திரவத்தின் நாட்கள் குறுக்கப்படும் என்று இயேசு முன்னறிவித்ததனால், தெரிந்துகொள்ளப்பட்டவர்களை இவ்வாறு அடையாளம் கண்டுகொண்டது உதவியாக உள்ளது. ‘நிமித்தம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கச் சொல் ‘ஆக’ அல்லது “பொருட்டாக” எனவும் மொழிபெயர்க்கப்படலாம். (மாற்கு 2:27; யோவான் 12:30, தி.மொ.; 1 கொரிந்தியர் 8:11; 9:10, 23; 11:9; 2 தீமோத்தேயு 2:10, தி.மொ.; வெளிப்படுத்துதல் 2:3) ஆகையால், “அந்நாட்கள் குறுக்கப்படாவிடில் மாம்சமான எதுவும் தப்பிப்போகாது. தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் பொருட்டாக அந்த நாட்கள் குறுக்கப்படும்,’ என்று இயேசு சொல்லியிருக்கலாம்.c (மத்தேயு 24:22) எருசலேமில் சிக்கிய நிலையிலிருந்த தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்தவர்களின் நன்மைக்கேதுவாக அல்லது அவர்களின் “பொருட்டாக” ஏதாவது நடந்ததா?
14. பொ.ச. 66-ல் எருசலேமிலிருந்து ரோம சேனை எதிர்பாராமல் பின்வாங்கிச் சென்றபோது, ‘மாம்சம்’ எவ்வாறு காக்கப்பட்டது?
14 பொ.ச. 66-ல் ரோமர் நாட்டின் வழியே சென்று எருசலேமின் மேற்பகுதியைக் கைப்பற்றி, அதன் மதிலைத் தகர்க்கத் தொடங்கினதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். ஜொஸிபஸ் இவ்வாறு கூறுகிறார்: “அந்த முற்றுகையை அவர் கைவிடாமல் இன்னும் சிறிது காலம் நீடித்திருந்தால், அந்த நகரத்தை அவர் உடனடியாக கைப்பற்றியிருந்திருக்கலாம்.” உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள், ‘வல்லமைவாய்ந்த அந்த ரோம சேனை ஏன், படையெடுப்பை திடீரென்று கைவிட்டு, “காரணமில்லாமல் விரைந்தோடி” பின்வாங்க வேண்டும்?’ இராணுவ சரித்திரத்தை விளக்கிக்கூறுவதில் நிபுணரான ரூபர்ட் ஃபர்னோ இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கல்லெஸின் அசாதாரணமான மற்றும் பேரிழப்பான தீர்மானத்திற்கு, சரித்திராசிரியர் ஒருவரும் போதிய காரணம் எதையும் அளிக்க முடியவில்லை.” காரணம் என்னவாக இருந்தாலும், அந்த உபத்திரவம் குறுக்கப்பட்டதே அதன் பலனாக இருந்தது. ரோமர் பின்வாங்கினார்கள், அவர்கள் திரும்பிச்செல்கையில் யூதர் அவர்களை முரட்டுத்தனமாய்த் தாக்கினர். ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்களான,’ சிக்கியநிலையிலிருந்த அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைப் பற்றியதென்ன? முற்றுகை முடிவுக்கு வந்ததானது, உபத்திரவத்தின்போது கொல்லப்படும் எந்தப் பயமுறுத்தலிலிருந்தும் அவர்கள் தப்புவிக்கப்பட்டதைக் குறித்தது. ஆகவே, பொ.ச. 66-ல் அந்த உபத்திரவம் குறுக்கப்பட்டதிலிருந்து பயனடைந்த அந்தக் கிறிஸ்தவர்களே, மத்தேயு 24:22-ல் குறிப்பிடப்பட்டுள்ள தப்புவிக்கப்பட்ட அந்த ‘மாம்சமாக’ இருந்தனர்.
உங்கள் எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது?
15. மத்தேயு 24-ம் அதிகாரம் நம்முடைய நாளில் முக்கியமாய் அக்கறைக்குரியதாக இருக்க வேண்டுமென்று நீங்கள் ஏன் சொல்வீர்கள்?
15 எவராவது இவ்வாறு கேட்கலாம், ‘இயேசுவின் வார்த்தைகளைப் பற்றிய இந்தத் தெளிவாக்கப்பட்ட புரிந்துகொள்ளுதலில் நான் ஏன் முக்கியமாய் அக்கறைகொள்ள வேண்டும்?’ பொ.ச. 70 வரையிலும் அது உட்படவும் நடந்தவற்றிற்கு அப்பால், இயேசுவின் தீர்க்கதரிசனம் மேலும் பெரிய ஒரு நிறைவேற்றமடைய வேண்டியதாக இருந்தது என்பதற்குப் போதிய காரணம் உள்ளது.d (ஒப்பிடுக: மத்தேயு 24:7; லூக்கா 21:10, 11; வெளிப்படுத்துதல் 6:2-8.) நம்முடைய காலத்தில் நடைபெறும் பெரிய நிறைவேற்றமானது, சமீப எதிர்காலத்தில் பெரிய அளவான ‘மகா உபத்திரவத்தை’ நாம் எதிர்பார்க்கலாமென்று நிரூபிக்கிறதென, யெகோவாவின் சாட்சிகள் பல ஆண்டுகளாகப் பிரசங்கித்து வந்திருக்கின்றனர். அதன்போது, மத்தேயு 24:22-ல் உள்ள தீர்க்கதரிசன வார்த்தைகள் எவ்வாறு நிறைவேறும்?
16. மகா உபத்திரவம் நெருங்கிவருவதைப்பற்றி ஊக்கமூட்டும் என்ன உண்மையை வெளிப்படுத்துதல் அளிக்கிறது?
16 எருசலேமின்மீது வந்த அந்த உபத்திரவத்திற்கு ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பின், அப்போஸ்தலன் யோவான் வெளிப்படுத்துதல் புத்தகத்தை எழுதினார். மகா உபத்திரவம் இன்னும் முன்னாக இருப்பதை அது உறுதிசெய்தது. நம்மைத்தானே பாதிக்கிற காரியத்தில் நாம் அக்கறையுடையோராக இருப்பதால், வரவிருக்கும் இந்த மகா உபத்திரவத்தில் மனித மாம்சமானோர் உயிரோடு தப்பிப்பிழைப்பர் என்று வெளிப்படுத்துதல் தீர்க்கதரிசனமாய் நமக்கு உறுதியளிப்பதை அறிவதில் நாம் மனசாந்தியடையலாம். ‘சகல தேசத்தாரிலிருந்தும் கோத்திரங்களிலிருந்தும் ஜனங்களிலிருந்தும் பாஷைக்காரரிலிருந்தும் வந்த . . . ஒரு திரள் கூட்டத்தை’ யோவான் முன்னறிவித்தார். இவர்கள் யார்? பரலோகத்திலிருந்து ஒரு குரல் பதிலளிக்கிறது: “இவர்களே மகா உபத்திரவத்திலிருந்து வெளிவருபவர்கள்.” (வெளிப்படுத்துதல் 7:9, 14, NW) ஆம், அவர்கள் தப்பிப்பிழைப்போராக இருப்பார்கள்! வரவிருக்கிற மகா உபத்திரவத்தில் காரியங்கள் எவ்வாறு படிப்படியாகத் தோன்றும் மற்றும் மத்தேயு 24:22 எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பவற்றின்பேரிலும் வெளிப்படுத்துதல் உட்பார்வையை அளிக்கிறது.
17. மகா உபத்திரவத்தின் தொடக்கப் பாகம் எதையும் உட்படுத்தும்?
17 இந்த உபத்திரவத்தின் தொடக்கப் பாகம், “மகா பாபிலோன்” என்று அழைக்கப்படுகிற அடையாள அர்த்தமுள்ள வேசியின்பேரில் ஒரு தாக்குதலாக இருக்கும். (வெளிப்படுத்துதல் 14:8; 17:1, 2) உலகளாவிய பொய்மத பேரரசை அவள் பிரதிநிதித்துவம் செய்கிறாள், அதில் கிறிஸ்தவமண்டலமே மிக அதிக கண்டனத்துக்குரியதாக உள்ளது. வெளிப்படுத்துதல் 17:16-18-லுள்ள வார்த்தைகளின்படி, இந்த அடையாள அர்த்தமுள்ள வேசியைத் தாக்கும்படி அரசியல் அம்சத்தின் இருதயத்தைக் கடவுள் ஏவுவார்.e கடவுளுடைய அபிஷேகஞ்செய்யப்பட்டோரான ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கும்’ அவர்களுடைய கூட்டாளிகளான, ‘திரள் கூட்டத்தாருக்கும்’ இந்தத் தாக்குதல் எவ்வாறு தோன்றக்கூடும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மதத்தின்பேரில் இந்தப் பாழாக்கும் தாக்குதல் முன்னேறுகையில், யெகோவாவின் ஜனங்களும் உட்பட, மத அமைப்புகள் எல்லாவற்றையும் அது முற்றிலுமாகத் துடைத்தொழிக்கும் என்பதுபோல் தோன்றலாம்.
18. மகா உபத்திரவத்தின் தொடக்கப் பகுதியில் ‘மாம்சமான’ எதுவும் தப்பிப்போவதில்லை என்பதுபோல் ஏன் தோன்றலாம்?
18 இந்தச் சமயத்தில்தான் மத்தேயு 24:22-ல் காணப்படுகிற இயேசுவின் வார்த்தைகள் பெரிய அளவில் நிறைவேறும். எருசலேமிலிருந்த தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் ஆபத்தில் இருந்ததாகத் தோன்றினதுபோல், மதம் தாக்கப்படும்போது, அந்தத் தாக்குதல் கடவுளுடைய ஜனங்களாகிய “மாம்சமான” எல்லாரையும் முற்றிலும் அழித்துப்போடும் என்பதுபோல், யெகோவாவின் ஊழியர் ஆபத்தில் இருப்பதாகத் தோன்றலாம். எனினும், முன்னே பொ.ச. 66-ல் நடந்ததை நாம் மனதில் வைப்போமாக. ரோமரால் உண்டுபண்ணப்பட்ட அந்த உபத்திரவம் குறுக்கப்பட்டு, கடவுளுடைய அபிஷேகஞ்செய்யப்பட்ட தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தப்பியோடி, தொடர்ந்து உயிரோடிருப்பதற்கு போதிய வாய்ப்பை அளித்தது. இவ்வாறு மதத்தின்மீது அழிவுக்கேதுவான தாக்குதல், உண்மையான வணக்கத்தாரின் உலகளாவிய சபையை அழித்துப்போட அனுமதிக்கப்படாதென்று நாம் திடநம்பிக்கையோடு இருக்கலாம். “ஒரே நாளிலே” என்பதுபோல், அது விரைவில் நடைபெறும். கடவுளுடைய ஜனங்கள் ‘தப்பும்படி’ அது எவ்வாறாவது குறுக்கப்படும், அதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற அனுமதிக்கப்படாது.—வெளிப்படுத்துதல் 18:8.
19. (அ) மகா உபத்திரவத்தின் முதல் பாகத்துக்குப் பின், எது தெளிவுபடும்? (ஆ) இது எதற்கு வழிநடத்தும்?
19 பிசாசாகிய சாத்தானின் பூமிக்குரிய அமைப்பினுடைய மற்ற அம்சங்கள் அதன்பின் சிறிது காலம் இருந்து, தங்கள் பழைய மத வேசியுடன் தங்களுக்கிருந்த தொடர்புகளை இழந்ததைக் குறித்து துக்கிக்கும். (வெளிப்படுத்துதல் 18:9-19) ஏதோவொரு கட்டத்தில், கடவுளுடைய உண்மையான ஊழியர் ‘நிர்விசாரமாய்ச் சுகத்தோடு குடியிருக்கிறதை . . . அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறதை’ மற்றும் எளிதாகக் கைப்பற்றக்கூடியோராகத் தோன்றுவதை அவை கவனிக்கும். தாக்குவோருக்கு எத்தகைய எதிர்பாரா அதிர்ச்சி காத்திருக்கிறது! தம்முடைய ஊழியருக்கு விரோதமாக மெய்யான அல்லது பயமுறுத்தலான தாக்குதலுக்கு எதிர்ச்செயல்படுபவராக, கடவுள், அந்த மகா உபத்திரவத்தின் முடிவு பாகத்தில் தம்முடைய சத்துருக்களின்மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்படி எழும்புவார்.—எசேக்கியேல் 38:10-12, 14, 18-23.
20. மகா உபத்திரவத்தின் இரண்டாவது பாகம், கடவுளுடைய ஜனங்களை ஏன் ஆபத்துக்கு உட்படுத்தாது?
20 மகா உபத்திரவத்தின் இந்த இரண்டாவது பாகம், பொ.ச. 70-ல் ரோமரின் இரண்டாவது தாக்கலில் எருசலேமுக்கும் அதன் குடிமக்களுக்கும் சம்பவித்ததற்கு ஒத்ததாயிருக்கும். ‘உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த [“மகா,” NW] உபத்திரவமாக’ அது இருக்கும். (மத்தேயு 24:21) எனினும் கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் அவர்களுடைய கூட்டாளிகளும் கொல்லப்படும் ஆபத்தில், அபாய பகுதியில் இருக்கமாட்டார்கள் என்ற உறுதியுடையோராய் மனசமாதானத்துடன் நாம் இருக்கலாம். ஓ, ஏதோவொரு நிலயியல் சார்ந்த பகுதிக்கு அவர்கள் ஓடிப்போயிருப்பதில்லை. எருசலேமில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், அந்த நகரத்தைவிட்டு, யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த பெல்லா போன்ற, மலைப்பாங்கான பகுதிக்கு ஓடிப்போக முடிந்தது. எனினும் எதிர்காலத்தில், கடவுளுடைய உண்மையுள்ள சாட்சிகள் பூகோளம் முழுவதிலும் இருப்பார்கள், ஆகையால் பத்திரமாயும் பாதுகாப்பாயும் இருப்பது, இடத்தினுடைய இயல்பின்பேரில் சார்ந்திராது.
21. இறுதிப் போரில் யார் போர் செய்வர், அதன் முடிவு என்னவாயிருக்கும்?
21 அழிவு, ரோம சேனைகளால் அல்லது வேறு ஏதாவது மனித மூலங்களால் நிறைவேற்றப்படாது. மாறாக, மரணாக்கினைத் தீர்ப்பை நிறைவேற்றும் சேனைகள் பரலோகத்திலிருந்து வருவதாக வெளிப்படுத்துதல் புத்தகம் விவரிக்கிறது. ஆம், அந்த மகா உபத்திரவத்தின் இறுதியான பகுதி, எந்த மனித சேனையாலும் அல்ல, “தேவனுடைய வார்த்தை” ஆனவராகிய அரசர் இயேசு கிறிஸ்துவால் நிறைவேற்றப்படும், உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கும் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் உட்பட, “பரலோகத்திலுள்ள சேனைகள்” துணைசெய்வர். பொ.ச. 70-ல் ரோமர் செய்ததைப் பார்க்கிலும் மிக முழுமையான அழிவை “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா” நிறைவேற்றுவார். கடவுளை எதிர்க்கும் மனித எதிரிகள்—ராஜாக்கள், சேனைத்தலைவர்கள், சுயாதீனர், அடிமைகள், சிறியோர் மற்றும் பெரியோர்—எல்லாரையும் அது அழித்தொழிக்கும். சாத்தானுடைய உலகத்தின் மனித அமைப்புகளுங்கூட தங்கள் முடிவை எதிர்ப்படும்.—வெளிப்படுத்துதல் 2:26, 27; 17:14; 19:11-21; 1 யோவான் 5:19.
22. மேலுமான என்ன கருத்தில் ‘மாம்சம்’ தப்புவிக்கப்படும்?
22 இந்த உபத்திரவத்தின் முதல் பாகத்தில் மகா பாபிலோன் விரைவாயும் முழுமையாயும் விழும்போது, அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேரும் ‘திரள் கூட்டத்தாருமாகிய’ அந்த ‘மாம்சம்’ ஏற்கெனவே தப்புவிக்கப்பட்டிருக்கும் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவ்வாறே இந்த உபத்திரவத்தின் இறுதி பாகத்திலும், யெகோவாவின் பக்கத்துக்கு ஓடியிருக்கிற ‘மாம்சம்’ தப்புவிக்கப்படும். பொ.ச. 70-ல் அந்தக் கலகக்காரரான யூதருக்கு உண்டான விளைவுக்கு எவ்வளவு எதிர்மாறாக இது இருக்கும்!
23. தப்பிப்பிழைத்திருக்கும் ‘மாம்சம்’ எதை எதிர்பார்க்கலாம்?
23 உங்கள் சொந்த மற்றும் உங்களுக்கு அருமையானோரின் எதிர்காலத்துக்கான சாத்தியங்களைப் பற்றி சிந்திப்போராக, வெளிப்படுத்துதல் 7:16, 17-ல் வாக்குக்கொடுக்கப்பட்டதைக் கவனியுங்கள்: “இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.” நிச்சயமாகவே, அது வியப்புக்குரிய, நிலையான கருத்தில் மெய்யாகத் ‘தப்புவிக்கப்பட்டிருப்பதாயுள்ளது.’
[அடிக்குறிப்புகள்]
a ஜூன் 1, 1996-ன் காவற்கோபுரம், பக்கங்கள் 14-19-ஐக் காண்க.
b ஜொஸிபஸ் இவ்வாறு சொல்கிறார்: “டைட்டஸ் உள்ளே நுழைந்தபோது அந்த நகரத்தின் பாதுகாப்பு பலத்தைக்கண்டு ஆச்சரியமடைந்தார் . . . அவர் வியப்படைந்து சத்தமாக இவ்வாறு சொன்னார்: ‘கடவுள் நம்முடைய பக்கம் இருந்திருக்கிறார்; கடவுளே இந்த யூதரை இந்த அரண்காப்புகளிலிருந்து வெளியே கொண்டுவந்திருக்கிறார்; ஏனெனில் இத்தகைய கோபுரங்களுக்கு எதிராக மனித கைகள் அல்லது கருவிகள் என்ன செய்ய முடியும்?’”
c கவனத்தைக் கவருவதாய், மத்தேயு 24:22-க்குரிய ஷெம்-டோபின் மூலவாக்கியம், ஆவுர் (ʽa·vurʹ) என்ற எபிரெயச் சொல்லைப் பயன்படுத்துகிறது, இது, “பொருட்டாக, நிமித்தமாக, படியாக” என பொருள்படுகிறது.—முந்தின கட்டுரை, பக்கம் 13-ஐக் காண்க.
d பிப்ரவரி 15, 1994-ன் காவற்கோபுரம், பக்கங்கள் 11, 12-ஐயும், 14-ம் 15-ம் பக்கங்களிலுள்ள அட்டவணையையும் பாருங்கள். இந்த அட்டவணை, மத்தேயு 24-ம் அதிகாரத்திலும், மாற்கு 13-ம் அதிகாரத்திலும், லூக்கா 21-ம் அதிகாரத்திலும் காணப்படுகிற இயேசுவின் தீர்க்கதரிசன பதிலை, இணையாக அருகருகேயுள்ள நேர் பத்திகளில் குறிப்பிடுகிறது.
e 1994-ல் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!, பக்கங்கள் 235-58-ஐக் காண்க.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ எருசலேமின்மீது ரோம சேனையின் தாக்குதலுக்கு என்ன இரண்டு பாகங்கள் இருந்தன?
◻ மத்தேயு 24:22-ல் குறிப்பிடப்பட்ட அந்த ‘மாம்சம்,’ பொ.ச. 70-ல் தப்பிப்பிழைத்திருந்த 97,000 யூதர்களாக ஏன் இருக்க முடியாது?
◻ எருசலேமின் உபத்திரவ நாட்கள் எவ்வாறு குறுக்கப்பட்டன, அதன் காரணமாக ‘மாம்சம்’ எவ்வாறு தப்புவிக்கப்பட்டது?
◻ நெருங்கிவந்துகொண்டிருக்கும் மகா உபத்திரவத்தில், நாட்கள் எவ்வாறு குறுக்கப்பட்டு, ‘மாம்சம்’ தப்புவிக்கப்படும்?
[பக்கம் 16-ன் படம்]
அந்தக் கலகத்துக்குப் பின் அச்சடிக்கப்பட்ட யூத நாணயம். அவர்களுடைய சுயாட்சியின் இரண்டாம் ஆண்டாகிய பொ.ச. 67-ஐக் குறிப்பதாய், “ஆண்டு இரண்டு” என்று அந்த எபிரெய எழுத்துக்கள் சொல்கின்றன
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 17-ன் படம்]
பொ.ச. 71-ல் அச்சடிக்கப்பட்ட ரோம நாணயம். இடதுபுறத்தில் ஆயுதமணிந்த ஒரு ரோமன் இருக்கிறான்; வலதுபுறத்தில் ஒரு யூதப் பெண் துக்கிக்கிறாள். “யூடியா காப்டா” என்ற சொற்கள் “கைப்பற்றப்பட்ட யூதேயா” என்பதை அர்த்தப்படுத்துகின்றன
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.