உயிர்பிழைக்க தயார்நிலையில் இருக்கிறீர்களா?
“நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.”—ஆதியாகமம் 7:1.
1. நோவாவின் காலத்தில் உயிர்பிழைப்பதற்கான என்ன ஏற்பாட்டை யெகோவா செய்தார்?
நோவாவின் காலத்தில் யெகோவா, ‘அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணினார்.’ அதேசமயத்தில், நல்லவர்கள் உயிர்பிழைப்பதற்கான ஏற்பாட்டையும் செய்தார். (2 பேதுரு 2:5) அந்தப் பூகோள ஜலப்பிரளயத்தில் உயிர்பிழைப்பதற்கு ஒரு பேழையைக் கட்டும்படி நீதிமானாகிய நோவாவுக்குக் கட்டளையிட்டார்; அதற்குத் தேவையான விவரங்களை எல்லாம் தெளிவாகக் கொடுத்தார். (ஆதியாகமம் 6:14-16) நோவா, உண்மைக் கடவுளாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து ‘தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்து முடித்தார்.’ ஆம், நோவா ‘அப்படியே செய்தார்.’ அன்று அவர் காட்டிய கீழ்ப்படிதல்தான் இன்று நாம் உயிரோடு இருப்பதற்கு ஒருவிதத்தில் காரணம்.—ஆதியாகமம் 6:22.
2, 3. (அ) நோவா செய்த வேலையைப் பார்த்த அநேகர் எப்படிப் பிரதிபலித்தார்கள்? (ஆ) நோவா எதன்மீது விசுவாசம் வைத்து பேழைக்குள் பிரவேசித்தார்?
2 பேழையைக் கட்டுவது நோவாவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் சுலபமானதாக இருக்கவில்லை. அவர்கள் அந்தப் பிரமாண்டமான பேழையைக் கட்டுவதைப் பார்த்த அநேகர் நிச்சயம் அதிசயித்துப் போயிருப்பார்கள். ஆனாலும், தாங்கள் உயிர்பிழைக்க அந்தப் பேழைக்குள் செல்ல வேண்டுமென்பதை உணராதிருந்தார்கள். அந்தப் பொல்லாத உலகத்தாரிடம் யெகோவா காட்டிய பொறுமை இறுதியில் எல்லையை எட்டியது.—ஆதியாகமம் 6:3; 1 பேதுரு 3:20.
3 நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு அந்தப் பேழையை கட்டி முடித்தார்கள்; அதன்பின் நோவாவிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.” யெகோவாவின் வார்த்தைகள்மீது விசுவாசம் வைத்து, ‘நோவாவும் அவருடனேகூட அவர் குமாரரும், அவர் மனைவியும், அவர் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள்.’ யெகோவா, தம் வணக்கத்தாரைப் பாதுகாக்க அப்பேழையின் கதவை அடைத்தார். அதன்பின் ஜலப்பிரளயம் வந்தபோது, உயிர்காப்பதற்கு கடவுள் செய்த நம்பகமான ஏற்பாடே அப்பேழை என்பது நிரூபணமானது.—ஆதியாகமம் 7:1, 7, 10, 16.
நோவாவின் காலமும் நம் காலமும்
4, 5. (அ) இயேசு தம்முடைய வந்திருத்தலின் காலத்தை யாருடைய காலத்துக்கு ஒப்பிட்டார்? (ஆ) நோவாவின் காலமும் நம் காலமும் எவ்வாறு ஒத்திருக்கின்றன?
4 “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் [அதாவது, வந்திருத்தலின் காலத்திலும்] நடக்கும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:37) இவ்வாறு, கண்ணுக்குப் புலப்படாத தம்முடைய வந்திருத்தலின் காலம் நோவாவின் காலத்தோடு ஒத்திருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினார்; அவர் சொன்னது உண்மை என்பது நிரூபணமாகி இருக்கிறது. முக்கியமாக 1919 முதற்கொண்டு, நோவா அறிவித்ததைப் போன்ற ஓர் எச்சரிப்பு செய்தி எல்லா தேசத்தாருக்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது. பொதுப்படையில், நோவாவின் காலத்தில் வாழ்ந்தவர்களைப் போலத்தான் இன்றுள்ளவர்களும் பிரதிபலிக்கிறார்கள்.
5 நோவாவின் காலத்தில் யெகோவா ஜலப்பிரளயத்தைக் கொண்டுவந்தார்; ஏனென்றால், அந்த உலகம் ‘கொடுமையால் [அதாவது, வன்முறையால்] நிறைந்திருந்தது.’ (ஆதியாகமம் 6:13) நோவாவும் அவருடைய குடும்பத்தாருமோ எந்த வன்முறையிலும் ஈடுபடாமல், அமைதியாகப் பேழையைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். இதை அன்றிருந்த எல்லாருமே கண்கூடாகப் பார்த்தார்கள். இன்றிருப்பவர்களும் அதே போன்ற ஒன்றைக் கண்கூடாகப் பார்க்கிறார்கள்; அதாவது, ‘நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைக் காண்கிறார்கள்.’ (மல்கியா 3:18) யெகோவாவின் சாட்சிகளுடைய நேர்மையும் அன்பும் சமாதானமும் கடின உழைப்பும், நடுநிலையான கண்ணோட்டம் உள்ளவர்களைக் கவருகின்றன. மேலும், கடவுளுடைய மக்களை மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன. யெகோவாவின் சாட்சிகள் எல்லா வகையான வன்முறையையும் வெறுத்து ஒதுக்குகிறார்கள்; யெகோவாவின் பரிசுத்த ஆவி தங்களை வழிநடத்த அனுமதிக்கிறார்கள். இதனால்தான், சமாதானத்தை அனுபவிக்கிறார்கள், நீதியையும் நாடுகிறார்கள்.—ஏசாயா 60:17.
6, 7. (அ) நோவாவின் காலத்தில் இருந்தவர்கள் எதைப் புரிந்துகொள்ளத் தவறினார்கள், இன்றுள்ளவர்கள் எவ்விதத்தில் அவர்களைப் போலவே இருக்கிறார்கள்? (ஆ) யெகோவாவின் சாட்சிகள் வித்தியாசப்பட்டவர்கள் என்பதை மற்றவர்கள் எவ்வாறு கவனித்திருக்கிறார்கள்?
6 கடவுளுடைய ஆதரவுடனும், அவருடைய அறிவுரைப்படியுமே நோவா நடந்தார்; இதை அன்று வாழ்ந்தவர்கள் புரிந்துகொள்ளத் தவறினார்கள். ஆகவே நோவா அறிவித்த செய்தியை அசட்டை செய்தார்கள், அவர் கொடுத்த எச்சரிப்பைக் கேட்டு நடக்கவில்லை. இன்றுள்ளவர்கள் எப்படி? யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையையும் நடத்தையையும் பார்த்து அநேகர் கவரப்படுவது உண்மைதான்; ஆனால் பைபிளிலிருந்து அவர்கள் சொல்லும் நல்ல செய்தியையும் எச்சரிப்பு செய்தியையும் பெரும்பாலோர் காதில் போட்டுக்கொள்வதே இல்லை. உண்மைக் கிறிஸ்தவர்கள் காட்டும் தங்கமான குணங்களை அக்கம்பக்கத்தாரும் உறவினர்களும் முதலாளிகளும் மெச்சிப் பேசலாம்; ஆனால் “அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக மட்டும் இல்லாவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று அங்கலாய்க்கலாம். இவர்கள் எல்லாரும் ஓர் உண்மையை உணருவதில்லை; அதாவது, கடவுளுடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவதால்தான் யெகோவாவின் சாட்சிகள் அன்பு, சமாதானம், தயவு, நற்குணம், சாந்தம், இச்சையடக்கம் போன்ற குணங்களைக் காட்டுகிறார்கள் என்ற உண்மையை உணருவதில்லை. (கலாத்தியர் 5:22-25) இந்த உண்மை, சாட்சிகளுடைய செய்தியை மனமார நம்புவதற்கு அவர்களைத் தூண்ட வேண்டும்.
7 ரஷ்யாவில் என்ன நடந்ததென கவனியுங்கள். அங்கு யெகோவாவின் சாட்சிகள் ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கமாக போனவர் ஒரு சகோதரரிடம் இவ்வாறு சொன்னார்: “இது கட்டட வேலை நடக்கிற இடம் மாதிரியே தெரியல. யாருமே சிகரெட் பிடிக்கல, யாருமே கெட்ட வார்த்தையில் திட்டிக்கிட்டு இல்ல, யாருமே போதையிலும் இல்ல! நீங்க யெகோவாவின் சாட்சிகளா?” அதற்கு அந்தச் சகோதரர், “இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா?” என கேட்டார். அதற்கு அவர், “நம்பமுடியாதுதான்” என்றார். ரஷ்யாவிலுள்ள மற்றொரு நகரத்தில், யெகோவாவின் சாட்சிகள் புதிய ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதைப் பார்த்து அந்த நகரத்தின் மேயர் அசந்துபோனார். அதுவரை, எல்லா மதத்தவரும் ஒன்றுதான் என நினைத்துக்கொண்டிருந்தாராம், ஆனால் யெகோவாவின் சாட்சிகள் சுயநலமின்றி வேலை செய்ததைப் பார்த்த பிறகு தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாராம். இதுபோன்ற உதாரணங்கள், பைபிள் தராதரங்களைப் பின்பற்றாதவர்களிலிருந்து யெகோவாவின் ஊழியர்கள் வித்தியாசப்பட்டவர்கள் என்பதைக் காட்டுகின்றன.
8. நாம் எதைச் செய்தால் மட்டுமே இந்தப் பொல்லாத உலகிற்கு வரும் அழிவில் உயிர்பிழைப்போம்?
8 ‘பூர்வ உலகத்திற்கு’ அழிவு நெருங்கியபோது, விசுவாசமுள்ளவராக இருந்த நோவா ‘நீதியைப் பிரசங்கித்தார்.’ (2 பேதுரு 2:5) இன்றைய உலகத்திற்கு அழிவு நெருங்கி வரும் இந்தக் கடைசி காலத்தில், யெகோவாவின் மக்கள் அவரது நீதியுள்ள தராதரங்களைப் பற்றி அறிவிக்கிறார்கள்; அழிவில் உயிர்பிழைத்து புதிய உலகில் வாழும் வாய்ப்பு இருப்பதைப் பற்றிய சந்தோஷமான செய்தியையும் பிரசங்கிக்கிறார்கள். (2 பேதுரு 3:9-13) அன்று, நோவாவும் தேவபயமுள்ள அவரது குடும்பத்தாரும் பேழையில் பாதுகாக்கப்பட்டார்கள்; இன்று, விசுவாசம் காண்பித்து, யெகோவாவின் சர்வலோக அமைப்பின் பூமிக்குரிய பாகத்துடன் கூட்டுறவு கொண்டு, அதை விட்டு விலகாமல் இருப்போர் மட்டுமே அழிவில் உயிர்பிழைப்பார்கள்.
உயிர்பிழைப்பதற்குத் தேவை விசுவாசம்
9, 10. சாத்தானுடைய உலகுக்கு வரப்போகும் அழிவில் நாம் உயிர்பிழைப்பதற்கு விசுவாசம் ஏன் தேவை?
9 சாத்தானுடைய அதிகாரத்தின் கீழிருக்கும் இவ்வுலகத்திற்கு சீக்கிரத்தில் வரவிருக்கும் அழிவில் உயிர்பிழைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? (1 யோவான் 5:19) முதலாவதாக, நமக்குப் பாதுகாப்பு தேவை என்பதை உணர வேண்டும். அதன்பின், பாதுகாப்புக்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாட்டை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நோவாவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் வழக்கம்போல அன்றாட வேலைகளில் மூழ்கியிருந்தார்கள்; வரவிருந்த அழிவில் தங்களுக்குப் பாதுகாப்பு தேவை என்பதை உணரவே இல்லை. அதுமட்டுமல்ல, கடவுள்மீது அவர்கள் விசுவாசமும் வைக்கவில்லை.
10 மறுபட்சத்தில், நோவாவும் அவரது குடும்பத்தாரும் தங்களுக்குப் பாதுகாப்பும் இரட்சிப்பும் தேவை என்பதை உணர்ந்தார்கள். அதோடு, சர்வலோகப் பேரரசரான யெகோவா தேவன்மீது விசுவாசம் வைத்தார்கள். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்து தேவ எச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.”—எபிரெயர் 11:6, 7.
11. முற்காலங்களில் யெகோவா பாதுகாப்பு அளித்த விதங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
11 இந்தப் பொல்லாத உலகுக்கு வரப்போகும் அழிவில் உயிர்பிழைக்க வேண்டுமென்றால் இது அழியப்போகிறதென நம்பினால் மட்டும் போதாது. நாம் கடவுள்மீது விசுவாசம் வைத்து, உயிர்பிழைப்பதற்காக அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும். உண்மைதான், கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து செலுத்திய பலியில்கூட நாம் விசுவாசம் வைக்க வேண்டும். (யோவான் 3:16, 36) ஆனால் நோவாவின் பேழைக்குள் இருந்தவர்கள் மட்டுமே ஜலப்பிரளயத்தில் உயிர்பிழைத்தார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும். அதேபோல், பூர்வ இஸ்ரவேலில் தவறுதலாக கொலை செய்தவர்கள் முதலில் ஓர் அடைக்கலப் பட்டணத்திற்கு ஓடிப்போய், பிரதான ஆசாரியர் இறக்கும்வரை அதற்குள்ளேயே தங்க வேண்டியிருந்தது; அப்போதுதான் பாதுகாப்பு கிடைத்தது. (எண்ணாகமம் 35:11-32) மோசேயின் காலத்தில் எகிப்தின்மீது பத்தாவது வாதை வந்தபோது எகிப்தியர்களின் தலைப்பிள்ளைகள் இறந்துபோனார்கள், ஆனால் இஸ்ரவேலருடைய தலைப்பிள்ளைகள் காப்பாற்றப்பட்டார்கள். ஏன்? மோசேயின் மூலம் யெகோவா இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்: “அதின் [பஸ்கா ஆட்டுக்குட்டியின்] இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, . . . வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம்வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்பட வேண்டாம்.” (யாத்திராகமம் 12:7, 22) இஸ்ரவேலரின் எந்தத் தலைப்பிள்ளையாவது கடவுள் கொடுத்த இந்தக் கட்டளையை மீறத் துணிந்திருப்பானா? இரத்தம் தெளிக்கப்பட்ட வீட்டின் வாசலைத் தாண்ட ஒருவனாகிலும் துணிந்திருப்பானா?
12. நாம் ஒவ்வொருவரும் என்ன கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும், ஏன்?
12 ஆகவே நம்முடைய நிலையை நாம் கவனமாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஆன்மீக பாதுகாப்புக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டிற்குள்தான் நாம் இருக்கிறோமா? மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்போது, அப்படிப்பட்ட ஏற்பாட்டை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நன்றிப் பெருக்கால் ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்கள். மற்றவர்களுக்கோ ஆதங்கமும் சோகக் கண்ணீருமே மிஞ்சும்.
படிப்படியான சீரமைப்புகள் நம்மை தயார்படுத்துகின்றன
13. (அ) அமைப்பில் செய்யப்பட்டிருக்கும் சீரமைப்புகளின் பயன் என்ன? (ஆ) படிப்படியாக செய்யப்பட்ட சில சீரமைப்புகளை விளக்குங்கள்.
13 யெகோவா தம்முடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தை அநேக விதங்களில் படிப்படியாக சீரமைத்திருக்கிறார். இதனால், ஆன்மீக பாதுகாப்பு அளிக்கும் அவரது ஏற்பாட்டின் மெருகும், ஸ்திரமும், பலமும் கூடியிருக்கின்றன. 1870-கள் முதல் 1932 வரை மூப்பர்களும் உதவி ஊழியர்களும் சபை அங்கத்தினர்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1932-ல், மூப்பர்களைத் தனித்தனியாகத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக ஓர் ஊழியக் குழுவைத் தேர்ந்தெடுக்கும்படி சபைகளுக்கு சொல்லப்பட்டது; இக்குழு, ஊழிய இயக்குநராக நியமிக்கப்பட்டவருக்குக் கைகொடுக்க வேண்டியிருந்தது. 1938-ல், சபை ஊழியர்கள் அனைவரும் தேவராஜ்ய முறைப்படி நியமிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 1972 முதற்கொண்டு, யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் வழிநடத்துதலுக்கு ஏற்ப, சகோதரர்கள் கண்காணிகளாகவும் உதவி ஊழியர்களாகவும் நியமிக்கப்படுவதற்கு முதலில் சிபாரிசுகள் செய்யப்படுகின்றன; அவை ஏற்றுக்கொள்ளப்பட்டால், தேவராஜ்ய முறைப்படி அவர்கள் நியமிக்கப்படுவது கடிதங்கள் வாயிலாக சபைகளுக்குத் தெரிவிக்கப்படுகின்றன. காலம் செல்லச் செல்ல ஆளும் குழுவினரின் பணிகள் அதிகரித்துக்கொண்டே வந்திருக்கின்றன; அப்பணிகளை எளிதாக்குவதற்கு அநேக சீரமைப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.
14. என்ன பயிற்சித் திட்டம் 1959-ல் ஆரம்பமானது?
14 சங்கீதம் 45:16-க்கு அதிக கவனம் செலுத்தப்பட்டதன் விளைவாக, 1950-ல் தொடர்ச்சியான ஒரு பயிற்சித் திட்டம் ஆரம்பமானது. அவ்வசனம் இவ்வாறு சொல்கிறது: “உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.” இன்று சபையை முன்நின்று வழிநடத்தும் மூப்பர்கள், அர்மகெதோனுக்கு முன்பும் பின்பும் தேவராஜ்ய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 16:14, 16) 1959-ல் ராஜ்ய ஊழியப் பள்ளி துவங்கப்பட்டது. அச்சமயத்தில், நடத்தும் கண்காணிகளுக்கு மட்டுமே ஒரு மாதத்திற்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இன்றோ அப்பள்ளியில் எல்லா கண்காணிகளுக்கும் உதவி ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பின் இந்தச் சகோதரர்கள் அவரவர் சபைகளில் உள்ள மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். இவ்வாறு, எல்லாருக்குமே ஆன்மீக உதவி கிடைக்கிறது; ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிக்கும் வேலையில் அவர்களுடைய திறமையும் வளர்கிறது.—மாற்கு 13:10.
15. கிறிஸ்தவ சபையின் சுத்தம் எந்த இரு வழிகளில் பாதுகாக்கப்படுகிறது?
15 கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களாய் ஆக விரும்புகிறவர்களிடம் சில தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. நோவாவின் காலத்தில், பரிகாசம் செய்தவர்களுக்குப் பேழையில் இடம் அளிக்கப்படவில்லை. இன்றும் அப்படிப்பட்டவர்கள் சபையில் சேர்க்கப்படுவதில்லை. (2 பேதுரு 3:3-7) முக்கியமாக 1952 முதற்கொண்டு, மனந்திரும்பாத பாவிகளை சபை நீக்கம் செய்யும் ஏற்பாட்டை யெகோவாவின் சாட்சிகள் பெருமளவு ஆதரித்திருக்கிறார்கள்; இந்த ஏற்பாடு சபையைப் பாதுகாக்க உதவுகிறது. ஆனால், பாவம் செய்தவர்கள் உண்மையிலேயே மனந்திரும்புகையில், தங்கள் ‘பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்த’ அன்போடு உதவி பெறுகிறார்கள்.—எபிரெயர் 12:12, 13; நீதிமொழிகள் 28:13; கலாத்தியர் 6:1.
16. யெகோவாவின் மக்களுடைய ஆன்மீக நிலை என்ன?
16 யெகோவாவின் மக்கள் அனுபவிக்கும் ஆன்மீக செழுமை எதிர்பாராததும் அல்ல, எதேச்சையானதும் அல்ல. ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள். இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.” (ஏசாயா 65:13, 14) யெகோவா ஏற்ற காலத்தில் ஆன்மீக உணவை அபரிமிதமாக அளித்து நம்மை போஷித்துப் பலப்படுத்தி வருகிறார்.—மத்தேயு 24:45.
உயிர்பிழைக்க தயார்நிலையில் இருங்கள்
17. உயிர்பிழைப்பதற்குத் தயார்நிலையில் இருக்க எது நமக்கு உதவும்?
17 என்றுமில்லாத அளவுக்கு இன்று, “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல” வேண்டும். (எபிரெயர் 10:23-25) யெகோவாவின் சாட்சிகளுக்கு உலகெங்கும் 98,000-க்கும் அதிகமான சபைகள் உள்ளன; அவற்றில் ஒன்றுடன் நெருங்கிய கூட்டுறவு வைத்திருந்து, ஊக்கமாய் அதை ஆதரிப்பது, உயிர்பிழைப்பதற்குத் தயார்நிலையில் இருக்க நமக்கு உதவும். ‘புதிய மனிதனை,’ அதாவது புதிய ஆளுமையை, பெறுவதற்கும் இரட்சிப்புக்கான யெகோவாவின் ஏற்பாட்டைப் பற்றி கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுவதற்கும் நாம் மனப்பூர்வமாய் முயற்சி எடுக்கையில், உடன் விசுவாசிகளின் ஆதரவு நமக்கு இருக்கும்.—எபேசியர் 4:22-24; கொலோசெயர் 3:9, 10; 1 தீமோத்தேயு 4:16.
18. கிறிஸ்தவ சபையோடு தொடர்ந்து நெருங்கிய கூட்டுறவு வைத்திருக்க நீங்கள் ஏன் தீர்மானமாக இருக்கிறீர்கள்?
18 கிறிஸ்தவ சபையிலிருந்து வேறு பக்கமாக நம்மை கவர்ந்திழுக்க சாத்தானும் அவனுடைய பொல்லாத உலகத்தாரும் துடிக்கிறார்கள். ஆனாலும், நாம் தொடர்ந்து கிறிஸ்தவ சபையின் பாகமாக இருக்க முடியும், இந்தப் பொல்லாத உலகுக்கு வரும் அழிவில் உயிர்பிழைக்கவும் முடியும். யெகோவாவின் மீதுள்ள பாசத்தாலும் அவரது அன்பான ஏற்பாடுகளுக்கான நன்றியுணர்வாலும் நாம் தூண்டப்பட்டவர்களாய், சாத்தானுடைய முயற்சிகளை முறியடிக்க இன்னுமதிகமாய் உறுதிபூண்டிருப்போமாக. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஆசீர்வாதங்களைக் குறித்து தியானிப்பது நம்முடைய தீர்மானத்தை வலுப்படுத்தும். இந்த ஆசீர்வாதங்களில் சிலவற்றை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
உங்கள் பதில்கள் என்ன?
• நம் காலம் எவ்வாறு நோவாவின் காலத்தோடு ஒத்திருக்கிறது?
• உயிர்பிழைப்பதற்குத் தேவையான குணம் எது?
• என்ன படிப்படியான சீரமைப்புகள், நம்மை பாதுகாக்க யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டை ஸ்திரப்படுத்தி இருக்கின்றன?
• உயிர்பிழைக்க நம்மை நாமே எவ்வாறு தயார்நிலையில் வைத்துக்கொள்ளலாம்?
[பக்கம் 22-ன் படம்]
நோவா சொன்ன செய்தியை அக்காலத்து மக்கள் அசட்டை செய்தார்கள்
[பக்கம் 23-ன் படம்]
கடவுளுடைய எச்சரிப்புகளை காதுகொடுத்துக் கேட்பது நமக்குத்தான் நல்லது
[பக்கம் 24-ன் படம்]
ராஜ்ய ஊழியப் பள்ளியின் பயன் என்ன?
[பக்கம் 25-ன் படம்]
கிறிஸ்தவ சபையோடு நெருங்கியிருப்பதற்குக் காலம் இதுவே