ஏன் யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து விழிப்புடனிருக்கிறார்கள்
“தொடர்ந்து விழிப்புடனிருங்கள், ஏனெனில் எந்த நாளிலே உங்கள் கர்த்தர் வருவாரென்று நீங்கள் அறியீர்களே.”—மத்தேயு 24:42, NW.
1. “தொடர்ந்து விழிப்புடனிருங்கள்” என்ற அறிவுரை யாருக்குப் பொருந்துகிறது?
இளைஞராயிருந்தாலும்சரி முதியவராயிருந்தாலும்சரி, புதிதாக ஒப்புக்கொடுத்தவராக இருந்தாலும்சரி நீண்டகால ஊழிய பதிவையுடையவராக இருந்தாலும்சரி, பைபிளின் பின்வரும் அறிவுரை கடவுளுடைய ஊழியக்காரர் அனைவருக்கும் பொருந்துகிறது: “தொடர்ந்து விழிப்புடனிருங்கள்”! (மத்தேயு 24:42, NW) இது ஏன் இன்றியமையாததாக இருக்கிறது?
2, 3. (அ) என்ன அடையாளத்தை இயேசு தெளிவாக விவரித்துக்கூறினார், தீர்க்கதரிசன நிறைவேற்றம் எதைக் காண்பித்திருக்கிறது? (ஆ) நம்முடைய விசுவாசத்தின் உண்மைத்தன்மையை பரிசோதிக்கும் என்ன சூழ்நிலைமையை மத்தேயு 24:42 குறிப்பிட்டது, எவ்வாறு?
2 இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின் முடிவிலே, ராஜ்ய வல்லமையில் தம்முடைய காணக்கூடாத வந்திருத்தலைப்பற்றிய அடையாளத்தை முன்னறிவித்தார். (மத்தேயு, அதிகாரங்கள் 24 மற்றும் 25) தம்முடைய ராஜரீக வந்திருத்தலின் சமயத்தை அவர் தெளிவாக விவரித்துக்கூறினார். 1914-ல் பரலோகத்தில் ராஜாவாக சிங்காசனத்திலேற்றப்பட்டார் என்பதை தீர்க்கதரிசன நிறைவேற்றமாக நடந்தேறிய சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. நம்முடைய விசுவாசத்தின் உண்மைத்தன்மையை அப்போது பரிசோதிக்கும் ஒரு சூழ்நிலைமையையும் அவர் சுட்டிக்காண்பித்தார். இது, மகா உபத்திரவத்தின்போது தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையை அழிப்பதற்கான தண்டனைத்தீர்ப்பை நிறைவேற்றுபவராக அவர் செயலில் இறங்குகிற காலத்தோடு சம்பந்தப்பட்டதாக இருந்தது. அதை இயேசு இவ்வாறாகச் சொன்னார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனுங்கூட அறியார்.” (திருத்திய மொழிபெயர்ப்பு) அதை மனதில் கொண்டவராய் அவர் சொன்னதாவது: “ஆகையால் தொடர்ந்து விழிப்புடனிருங்கள், ஏனெனில் எந்த நாளிலே உங்கள் கர்த்தர் வருவாரென்று நீங்கள் அறியீர்களே.”—மத்தேயு 24:36, 42, NW.
3 மகா உபத்திரவம் தொடங்குகிற அந்த நாளும் மணிநேரமும் நமக்குத் தெரியாது. ஆகவே கிறிஸ்தவர்களாக நாம் உரிமைபாராட்டினால், ஒவ்வொரு நாளும் உண்மை கிறிஸ்தவர்களாக வாழவேண்டும். மகா உபத்திரவம் வரும்போது, உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் பயன்படுத்துகிற முறையானது கர்த்தருடைய அங்கீகாரத்தில் விளைவடையுமா? அல்லது மரணம் முதலாவதாக வந்தால், உங்களுடைய தற்போதைய வாழ்க்கையின் முடிவுவரையாக யெகோவாவை பற்றுறுதியுடன் சேவைசெய்த ஒருவராக உங்களை அவர் நினைவுகூருவாரா?—மத்தேயு 24:13; வெளிப்படுத்துதல் 2:10.
விழிப்புடனிருக்க ஆரம்பகால கிறிஸ்தவர்கள் முயற்சிசெய்தனர்
4. ஆவிக்குரிய விழிப்புணர்வைப்பற்றிய இயேசுவின் முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
4 இயேசு கிறிஸ்துதாமே ஆவிக்குரிய விழிப்புணர்வைக் குறித்ததில் மிகச் சிறந்த முன்மாதிரியை வைத்தார். தம்முடைய பிதாவிடம் அவர் அடிக்கடியும் ஊக்கமாயும் ஜெபம்செய்தார். (லூக்கா 6:12; 22:42-44) சோதனைகளை எதிர்ப்பட்டபோது, வேதாகமங்களில் அடங்கியிருந்த வழிநடத்துதலின்பேரில் பலமாகச் சார்ந்திருந்தார். (மத்தேயு 4:3-10; 26:52-54) யெகோவா தமக்கு நியமித்திருந்த வேலையிலிருந்து திசைதிருப்பப்படுவதற்கு தம்மை அவர் அனுமதிக்கவில்லை. (லூக்கா 4:40-44; யோவான் 6:15) இயேசுவைப் பின்பற்றுவோராக தங்களைக் கருதியவர்கள் அதேபோல விழிப்புடன் இருப்பார்களா?
5. (அ) ஆவிக்குரிய சமநிலையைக் காத்துக்கொள்வதில் இயேசுவினுடைய அப்போஸ்தலர் ஏன் பிரச்னைகளை உடையவர்களாயிருந்தனர்? (ஆ) இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு அப்போஸ்தலருக்கு என்ன உதவியளித்தார்?
5 சிலசமயங்களில், இயேசுவின் அப்போஸ்தலரும்கூட தடுமாற்றமடைந்தார்கள். அதிகமான ஆவல், தவறான கருத்துக்கள் ஆகியவற்றின் விளைவாக, ஏமாற்றங்களை எதிர்ப்பட்டு சமாளிக்கவேண்டியதாயிற்று. (லூக்கா 19:11; அப்போஸ்தலர் 1:6) யெகோவாவின்மீது முழுமையாகச் சார்ந்திருக்கக் கற்றுக்கொள்வதற்கு முன்பாக, திடீரென்று வந்த சோதனைகள் அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தின. இதனால், இயேசு கைதுசெய்யப்பட்டபோது, அவருடைய அப்போஸ்தலர் ஓடிவிட்டனர். அந்த நாள் இரவின் பிற்பகுதியில், பேதுரு பயத்தின் காரணமாக, கிறிஸ்துவை அறிந்திருப்பதையும்கூட திரும்பத் திரும்ப மறுதலித்தார். இயேசுவினுடைய பின்வரும் அறிவுரையை அப்போஸ்தலர் இன்னும் இருதயத்தில் ஏற்காதவர்களாக இருந்தனர்: “தொடர்ந்து விழிப்புடனிருந்து விடாமல் ஜெபம்செய்யுங்கள்.” (மத்தேயு 26:41, 55, 56, 69-75, NW) இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு வேதவசனங்களைப் பயன்படுத்தினார். (லூக்கா 24:44-48) என்றாலும், அவர்களில் சிலர் தங்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டிருந்த ஊழியத்தை இரண்டாவது இடத்தில் வைத்துவிடக்கூடும் என்பதாக தோன்றியது. ஆகவே அதிமுக்கியமான வேலையின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்காக, இயேசு அவர்களுடைய உள்ளெண்ணத்தைப் பலப்படுத்தினார்.—யோவான் 21:15-17.
6. இயேசு தம்முடைய சீஷர்களை எந்த இரண்டு கண்ணிகளுக்கு எதிராக முன்பாகவே எச்சரித்திருந்தார்?
6 இயேசு, தம்முடைய சீஷர்கள் உலகத்தின் பாகமாயிருக்கக்கூடாது என்று முன்பாகவே எச்சரித்திருந்தார். (யோவான் 15:19) ஒருவரையொருவர் ஆளுகிறவர்களாயிராமல் சகோதரர்களாக ஒன்றுசேர்ந்து சேவிக்கும்படியும் அவர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார். (மத்தேயு 20:25-27; 23:8-12) அவருடைய அறிவுரைக்கு அவர்கள் செவிசாய்த்தார்களா? அவர்களுக்குக் கொடுத்திருந்த வேலையை அவர்கள் முதலிடத்தில் வைத்தார்களா?
7, 8. (அ) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் உண்டாக்கிய பதிவு, இயேசுவினுடைய அறிவுரையை அவர்கள் இருதயத்தில் எடுத்துக்கொண்டார்கள் என்பதை எவ்வாறு காண்பிக்கிறது? (ஆ) தொடர்ச்சியான ஆவிக்குரிய விழிப்புணர்வு ஏன் முக்கியமானது?
7 அப்போஸ்தலர் உயிரோடிருந்ததது வரையாக, சபையை அவர்கள் பாதுகாத்துவந்தனர். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் ரோம சாம்ராஜ்யத்தின் அரசியல் விவகாரங்களில் ஈடுபடவுமில்லை, உயர்த்தப்பட்ட மதகுரு வகுப்பாரும் அவர்களுக்கு இல்லை என்பதை சரித்திரம் சான்றுபகருகிறது. மறுபட்சத்தில், கடவுளுடைய ராஜ்யத்தின் தீவிர பற்றார்வமிக்க பிரசங்கிகளாக அவர்கள் இருந்தார்கள். முதல் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக, ரோம சாம்ராஜ்யம் முழுவதுமாக சாட்சிகொடுத்திருந்தார்கள். ஆசியா, ஐரோப்பா, மற்றும் வட ஆப்பிரிக்காவில் சீஷர்களை உண்டுபண்ணினார்கள்.—கொலோசெயர் 1:22, 23.
8 என்றபோதிலும், ஆவிக்குரிய விதத்தில் இனிமேலும் தொடர்ந்து விழிப்புடனிருக்க வேண்டிய எந்த அவசியமுமில்லை என்பதை பிரசங்கித்தலில் செய்த அந்தச் சாதனைகள் அர்த்தப்படுத்தவில்லை. இயேசுவின் முன்னறிவிக்கப்பட்ட வருகை வெகுகாலத்திற்குப் பின்பு சம்பவிக்கவேண்டியதாயிருந்தது. சபையானது பொ.ச. இரண்டாவது நூற்றாண்டுக்குள் அடியெடுத்து வைத்தபோது, கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய தன்மையை ஆபத்திற்குள்ளாக்கிய சூழ்நிலைமைகள் எழும்பின. எவ்வாறு?
விழிப்புடனிருப்பதை நிறுத்திவிட்டவர்கள்
9, 10. (அ) அப்போஸ்தலருடைய மரணத்தைத் தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டின அநேகர் தொடர்ந்து விழிப்புடனிருக்கவில்லை என்பதை என்ன முன்னேற்றங்கள் காட்டுகின்றன? (ஆ) கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டியவர்கள் ஆவிக்குரிய விதமாக பலமுடனிருக்க, இந்தப் பாராவில் இடக்குறிப்பு செய்யப்பட்ட என்ன வேதவசனங்கள் உதவியிருக்கக்கூடும்?
9 சபைக்குள் வந்த சிலர், தங்களுடைய நம்பிக்கைகளை கிரேக்க தத்துவத்தின் வடிவில் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். உலக மக்களுக்கு தாங்கள் பிரசங்கித்ததை அதிக ஏற்றுக்கொள்ளத்தக்கதாகச் செய்யும்படிக்கு அவ்வாறு செய்தார்கள். படிப்படியாக, திரித்துவம், உள்ளார்ந்த ஆத்துமாவின் அழியாமை போன்ற புறமதக் கோட்பாடுகள் கிறிஸ்தவத்தின் கறைபட்ட உருவின் பாகமாயின. இது, ஆயிரவருட ஆட்சியின் நம்பிக்கையைக் கைவிடுவதற்கு வழிநடத்தியது. ஏன்? ஆத்துமா அழியாமையில் நம்பிக்கையை ஏற்றுக்கொண்டவர்கள், கிறிஸ்துவினுடைய ஆட்சியின் ஆசீர்வாதங்கள் மனித உடலைவிட்டு தொடர்ந்து உயிர்வாழ்கிற ஓர் ஆத்துமாவினால் ஆவிக்குரிய பிரதேசத்தில் அடையப்பெறும் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆகவே ராஜ்ய வல்லமையில் கிறிஸ்துவின் வந்திருத்தலுக்காக விழிப்புடனிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதாக அவர்கள் கண்டனர்.—ஒப்பிடவும்: கலாத்தியர் 5:7-9; கொலோசெயர் 2:8; 1 தெசலோனிக்கேயர் 5:21.
10 இந்தச் சூழ்நிலைமை மற்ற முன்னேற்றங்களால் தூண்டுவிக்கப்பட்டது. கிறிஸ்தவ கண்காணிகளாக உரிமைபாராட்டின சிலர், தாங்கள் முதன்மைநிலையை அடைவதற்கான ஒரு கருவியாக சபைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களுக்கும் போதனைகளுக்கும், வேதவசனங்களுக்கு நிகரான அல்லது அவற்றிற்கு உயர்வான மதிப்பை தந்திரமாக கொடுத்தார்கள். வாய்ப்பு கிடைத்தபோது, இந்த விசுவாசத்துரோக சர்ச்சானது அரசியலின் அக்கறைகளைச் சேவிப்பதற்கு தன்னைத்தானே அளிக்க முன்வந்தது.—அப்போஸ்தலர் 20:30; 2 பேதுரு 2:1, 3.
அதிகமான விழிப்புணர்வின் பலன்கள்
11, 12. ஏன் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் உண்மை வணக்கத்திற்குத் திரும்பிவருவதை அடையாளப்படுத்தவில்லை?
11 ரோமன் கத்தோலிக்கச் சர்ச்சினுடைய பங்கில் செய்யப்பட்டுவந்த நூற்றாண்டுக்கணக்கான துர்ப்பிரயோகங்களுக்குப் பிற்பாடு, 16-ம் நூற்றாண்டில் சில சீர்திருத்தவாதிகள் குரலெழுப்ப ஆரம்பித்தார்கள். ஆனால் இது, உண்மை வணக்கத்துக்கு திரும்பிவருவதை அடையாளப்படுத்தவில்லை. ஏன்?
12 பல்வேறு புராட்டஸ்டன்ட் தொகுதியினர் ரோம அதிகாரத்திலிருந்து விடுபட்டுவந்தபோதிலும், அவர்கள் விசுவாசத்துரோகத்தின் அநேக அடிப்படை போதகங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை—குருமார்-பாமரர் கொள்கை, அதோடு திரித்துவம், ஆத்துமா அழியாமை, மரணத்திற்குப்பின் நித்திய வாதனை ஆகிய நம்பிக்கையை தங்களுடன் எடுத்துச்சென்றார்கள். மேலும் ரோமன் கத்தோலிக்கச் சர்ச்சைப்போல, அவர்கள் இந்த உலகத்தின் பாகமாக தொடர்ந்து இருந்தார்கள்; அவர்கள் அரசியல் வர்க்கத்தினருடன் நெருங்கி உறவாடினார்கள். ஆதலால் அரசராக கிறிஸ்து வருவதைப்பற்றிய எந்த எதிர்பார்ப்புகளையும் உதறித்தள்ளும் மனச்சாய்வை அவர்கள் கொண்டிருந்தார்கள்.
13. (அ) சில மனிதர்கள் கடவுளுடைய வார்த்தையை உண்மையிலேயே பொக்கிஷமாகக் கருதினர் என்பதை எது காட்டுகிறது? (ஆ) 19-வது நூற்றாண்டின்போது, கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டிய சிலருக்கு என்ன சம்பவம் விசேஷித்த அக்கறைக்குரியதாக இருந்தது? (இ) ஏன் அநேகர் ஏமாற்றத்தை அனுபவித்தனர்?
13 எனினும், அப்போஸ்தலருடைய மரணத்திற்கு பிறகு ராஜ்யத்தினுடைய உண்மையான சுதந்தரவாளிகள் (அவர்களை கோதுமைக்கு அவர் ஒப்பிட்டுப்பேசினார்) அறுப்புக்காலம் வரையாக போலி கிறிஸ்தவர்களோடே (அல்லது, களைகள்) தொடர்ந்து வளருவார்கள் என்று இயேசு முன்னுரைத்திருந்தார். (மத்தேயு 13:29, 30) எஜமானருடைய பார்வையில் கோதுமையாக இருந்தவர்கள் அனைவரும் யாரென இன்று நம்மால் எந்த நிச்சயத்தோடும் சொல்ல முடியாது. ஆனால், 14, 15, 16-வது நூற்றாண்டுகளின்போது, தங்களுடைய சொந்த உயிரையும் சுதந்திரத்தையும் ஆபத்திற்குள்ளாக்கி, பொதுவாக அறியப்பட்ட மொழியில் பைபிளை மொழிபெயர்க்க தங்களையே அர்ப்பணித்த ஆட்கள் இருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும். வேறுசிலர் பைபிளைக் கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், திரித்துவத்தை வேதப்பூர்வமற்றதாக புறக்கணித்தார்கள். ஆத்துமா அழியாமை, எரிநரகத்தில் சித்திரவதை ஆகியவற்றில் நம்பிக்கை வைப்பதை கடவுளுடைய வார்த்தைக்கு முற்றிலும் முரணாக இருப்பதாய் புறக்கணித்துவிட்டார்கள். மேலும், 19-வது நூற்றாண்டின்போது, அதிகமான பைபிள் ஆராய்ச்சியின் விளைவாக, ஐக்கிய மாகாணங்கள், ஜெர்மனி, இங்கிலாந்து, மற்றும் ரஷ்யாவிலுள்ள தொகுதியினர் கிறிஸ்து திரும்பிவருவதற்கான காலம் சமீபமாயிருந்தது என்ற நம்பிக்கையை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்புகளில் பெரும்பாலானவை ஏமாற்றத்திற்கு வழிநடத்தியது. ஏன்? ஏனென்றால் கணிசமான அளவுக்கு, அவர்கள் மனிதர்கள்மீது அதிக நம்பிக்கை வைத்து, போதுமான அளவுக்கு வேதாகமங்களின்மீது நம்பிக்கை வைக்கவில்லை.
இவர்கள் எவ்வாறு விழிப்புள்ளவர்களாய் நிரூபித்தார்கள்
14. C. T. ரஸலும் அவரோடு கூட்டுறவுகொண்டிருந்தவர்களும் பயன்படுத்திய பைபிள் படிப்பு அணுகுமுறையை விவரியுங்கள்.
14 பின்பு, 1870-ல் சார்ல்ஸ் டேஸ் ரஸலும் அவரோடு கூட்டுறவுகொண்டிருந்த சிலரும் பென்ஸில்வேனியாவிலுள்ள அல்லெகெனியில் பைபிள் படிப்புக் குழு ஒன்றை உருவாக்கினார்கள். ஏற்றுக்கொண்ட அநேக பைபிள் சத்தியங்களைப் பகுத்துணருவதில் அவர்களே முதல் நபர்களாக இல்லை. ஆனால் படிக்கும்போது, கொடுக்கப்பட்ட கேள்விக்கான வேதவசனங்கள் அனைத்தையும் கவனமாக சரிபார்ப்பதை அவர்கள் ஒரு பழக்கமாக ஆக்கிக்கொண்டார்கள்.a அவர்களுடைய நோக்கமானது, ஏற்கெனவே புரிந்துகொண்ட ஒரு கருத்துக்கு சான்றளிக்கும் வேதவசனங்களைக் கண்டுபிடிப்பதாக இல்லாமல், அந்த விஷயத்தைக் குறித்து அவர்கள் எடுத்த முடிவுகள் பைபிள் சொன்ன எல்லாவற்றிற்கும் இசைவாக இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதாகவே இருந்தது.
15. (அ) சகோதரர் ரஸலைத் தவிர, வேறுசிலர் எதை அறிந்திருந்தார்கள்? (ஆ) பைபிள் மாணாக்கர்களை இவற்றிலிருந்து வித்தியாசப்பட்டவர்களாக அடையாளப்படுத்தியது எது?
15 அவர்களுக்கு முன்பிருந்த வேறுசிலர் கிறிஸ்து ஓர் ஆவியாளாக காணக்கூடாதவராய் திரும்ப வருவார் என்பதை அறிந்திருந்தார்கள். கிறிஸ்து திரும்பவருவதன் நோக்கம், பூமியை எரித்துப்போட்டு சகல மனித உயிர்களையும் முற்றிலும் அழித்துவிடுவதற்காக அல்ல, ஆனால் பூமியிலுள்ள சகல குடும்பங்களையும் ஆசீர்வதிப்பதற்கே என்பதாக சிலர் புரிந்துகொண்டிருந்தார்கள். 1914-ம் வருடம் புறஜாதியாருடைய காலங்களின் முடிவைக் குறிக்கும் என்பதை அறிந்திருந்த சிலரும்கூட இருந்தார்கள். ஆனால் சகோதரர் ரஸலோடு கூட்டுறவுகொண்டிருந்த பைபிள் மாணாக்கர்களுக்கு, இவை இறைமையியல் சர்ச்சைக்கான குறிப்புகளைவிட மேலானவையாக இருந்தன. அவர்கள் இந்தச் சத்தியங்களைத் தங்களுடைய வாழ்க்கையின் முக்கிய ஆதாரமாக ஆக்கினார்கள்; மேலும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அவற்றை அந்தச் சகாப்தத்தில் சர்வதேச அளவில் பிரஸ்தாபப்படுத்தினார்கள்.
16. “நாம் சோதிக்கப்படும் ஒரு காலத்தில் வாழ்ந்துவருகிறோம்” என்று 1914-ம் ஆண்டில் ஏன் சகோதரர் ரஸல் எழுதினார்?
16 இருந்தாலும், அவர்கள் தொடர்ந்து விழிப்புடனிருக்கவேண்டியது அவசியமாயிருந்தது. ஏன்? உதாரணமாக, 1914 பைபிள் தீர்க்கதரிசனத்தில் குறிக்கப்பட்ட வருடமாக இருந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தபோதிலும், அந்த வருடத்தில் உண்மையில் என்ன நடக்கும் என்பதைக் குறித்து அவர்கள் நிச்சயமில்லாமல் இருந்தார்கள். இது அவர்களுக்கு ஒரு சோதனையாக இருந்தது. நவம்பர் 1, 1914 ஆங்கில காவற்கோபுரத்தில் சகோதரர் ரஸல் இவ்வாறு எழுதினார்: “நாம் சோதிக்கப்படும் ஒரு காலத்தில் வாழ்ந்துவருகிறோம் என்பதை நினைவுபடுத்திக்கொள்வோமாக. . . . கர்த்தரிலும் அவருடைய சத்தியத்திலும் நம்பிக்கை வைத்திருப்பதை கைவிட்டுவிடுவதற்கும் கர்த்தரின் நிமித்தம் தியாகம்செய்வதை நிறுத்திவிடுவதற்கும் எவரையேனும் வழிநடத்துகிற காரணம் ஏதாவது இருந்தால், அது கர்த்தர்பேரில் அக்கறையைத் தூண்டுவித்திருக்கிற இருதயத்திலுள்ள கடவுளுடைய அன்பாக இல்லை, ஆனால் வேறு ஏதோவொன்றாக இருக்கிறது; ஒருவேளை காலம் குறுகியது, ஒப்புக்கொடுத்தல் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கே என்ற நம்பிக்கையாக இருக்கலாம்.”
17. A. H. மேக்மில்லனும் அவரைப்போன்ற மற்றவர்களும் எவ்வாறு ஆவிக்குரிய சமநிலையைக் காத்துக்கொண்டார்கள்?
17 சிலர் யெகோவாவுடைய சேவையை அப்போது விட்டு விலகினார்கள். சகோதரர் A. H. மேக்மில்லனோ அப்படி விட்டுவிலகாத ஒரு நபராக இருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு, அவர் வெளிப்படையாக ஒத்துக்கொண்டார்: “சிலசமயங்களில் ஒரு குறிப்பிட்ட தேதியைக் குறித்து வேதாகமங்கள் உறுதியளிப்பதைவிட எங்களுடைய எதிர்பார்ப்புகள் அநேகமிருந்தன.” ஆவிக்குரிய சமநிலையைக் காத்துக்கொள்ள எது அவருக்கு உதவிசெய்தது? அவர் சொன்னதுபோல, “அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போனபோது, கடவுளுடைய நோக்கங்களை அது மாற்றிவிடவில்லை” என்பதை அவர் உணர்ந்தார். மேலுமாக அவர் சொன்னார்: “நம்முடைய தவறுகளை நாம் ஒத்துக்கொண்டு, அதிக அறிவொளிக்காகத் தொடர்ந்து கடவுளுடைய வார்த்தையை ஆராயவேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.”b அந்த ஆரம்பகால பைபிள் மாணாக்கர்கள் கடவுளுடைய வார்த்தை தங்களுடைய நோக்குநிலையை மறுசீரமைக்கும்படியாக மனத்தாழ்மையுடன் அனுமதித்தார்கள்.—2 தீமோத்தேயு 3:16, 17.
18. உலகத்தின் பாகமில்லாமல் இருக்கிற காரியத்தைக் குறித்ததில் கிறிஸ்தவ விழிப்புணர்வு எவ்வாறு படிப்படியான நன்மைகளை விளைவித்தது?
18 அதைப் பின்தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அவர்கள் தொடர்ந்து விழித்திருக்கவேண்டியதன் அவசியம் குறைந்துவிடவில்லை. சந்தேகமில்லாமல், கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தின் பாகமாக இருக்கக்கூடாது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். (யோவான் 17:14; யாக்கோபு 4:4) அதற்கு இசைவாக, சர்வதேச சங்கத்தை கடவுளுடைய ராஜ்யத்தின் அரசியல் வெளிப்பாடு என்பதாக ஆதரிப்பதில் கிறிஸ்தவமண்டலத்தோடு அவர்கள் சேர்ந்துகொள்ளவில்லை. ஆனாலும், 1939 வரையாக கிறிஸ்தவ நடுநிலைமை சம்பந்தப்பட்ட பிரச்னையை அவர்கள் தெளிவாகக் கண்டுணரவில்லை.—ஆங்கில காவற்கோபுரம், நவம்பர் 1, 1939-ஐப் பாருங்கள்.
19. அமைப்பு தொடர்ந்து விழிப்புடனிருந்ததால், சபை கண்காணிப்பில் என்ன நன்மைகள் விளைவடைந்திருக்கின்றன?
19 அவர்களுக்கு எந்தவொரு மதகுரு வகுப்பாரும் இல்லை. ஆனால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசில மூப்பர்கள், தங்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டதெல்லாம் சபையில் பிரசங்கிப்பது மட்டுமே என்பதாக நினைத்தார்கள். என்றபோதிலும், வேதாகமங்களுக்கு இணங்க நடக்கவேண்டும் என்ற பேராவலோடு, வேதாகமங்களைக் கருத்தில்கொண்டு மூப்பர்களின் பாகத்தை அமைப்பு மறுபார்வை செய்தது; இதை காவற்கோபுர பக்கங்களின் வாயிலாக திரும்பத் திரும்ப அவர்கள் செய்தனர். வேதாகமங்கள் குறிப்பிட்டு காட்டியதற்கு இசைவாக அமைப்புக்குரிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
20-22. முன்னறிவிக்கப்பட்ட உலகளாவிய ராஜ்ய அறிவிப்பு வேலையை நிறைவேற்றுவதற்கு எவ்வாறு முழு அமைப்பும் படிப்படியாக துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது?
20 நம்முடைய நாளுக்காக கடவுளுடைய வார்த்தையில் குறிப்பிடப்பட்டிருந்த வேலையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு முழு அமைப்புமே ஆயத்தமாகும்படி துரிதப்படுத்தப்பட்டது. (ஏசாயா 61:1, 2) எந்த அளவுக்கு நம்முடைய நாளில் இந்த நற்செய்தி பிரசங்கிக்கப்படவேண்டும்? இயேசு சொன்னார்: “சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.” (மாற்கு 13:10) மனிதனுடைய நோக்குநிலையில், அந்த வேலை எப்போதும் முடியாத ஒரு காரியமாகவே தோன்றியிருக்கிறது.
21 இருப்பினும், சபையின் தலைவராக இருக்கிற கிறிஸ்துவில் விசுவாசம்கொண்டு உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பு முன்னேறியிருக்கிறது. (மத்தேயு 24:45) செய்யப்படவேண்டிய வேலையை குறித்து உண்மையுடனும் உறுதியுடனும் யெகோவாவின் மக்களுக்கு அவர்கள் சுட்டிக்காண்பித்திருக்கிறார்கள். 1919 முதற்கொண்டு, வெளி ஊழியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அநேகருக்கு வீடு வீடாய் சென்று முன்-பின் அறியாதவர்களிடம் பேசுவது சுலபமான காரியமாக இல்லை. (அப்போஸ்தலர் 20:20) ஆனால், “பயமின்றியிருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” (1919-ல்) மேலும் “மிகுந்த தைரியத்தோடிருங்கள்” (1921-ல்) போன்ற படிப்புக் கட்டுரைகள், யெகோவாவின்பேரில் நம்பிக்கை வைத்து அந்த வேலையை ஆரம்பிக்கும்படி சிலருக்கு உதவிசெய்தது.
22 “ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்” என்று 1922-ல் விடுக்கப்பட்ட அழைப்பு, இந்த வேலைக்குத் தகுந்த முக்கியத்துவத்தைக் கொடுக்கத் தேவையான உந்துவிப்பை அளித்தது. 1927 முதற்கொண்டு, அந்த வேதப்பூர்வமான உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ளாத மூப்பர்கள் நீக்கப்பட்டனர். ஏறக்குறைய அந்தச் சமயத்தில்தான், பில்கிரிம்கள் (pilgrims) என்றழைக்கப்பட்ட சங்கத்தின் பயணப் பிரதிநிதிகள், பிராந்திய ஊழிய இயக்குநர்களாய் இருக்கும்படி நியமிக்கப்பட்டார்கள். வெளி ஊழியத்தில் பிரஸ்தாபிகளுக்குத் தனிப்பட்ட அறிவுரைகளை இவர்கள் வழங்கினார்கள். எல்லாராலும் பயனியர் செய்யமுடியவில்லை, ஆனால் வார இறுதி நாட்களில் அநேகர் ஊழியத்திற்கு முழு நாட்களையும் அர்ப்பணித்தார்கள்; அதிகாலமே ஆரம்பித்து, வெறும் சான்ட்விச் (sandwich) சாப்பிட சிறிது இடைவேளை விட்டு, பின்னர் மதியவேளையின் பிற்பகுதி வரையாக தொடர்ந்து ஊழியம் செய்தார்கள். அவை தேவராஜ்ய முன்னேற்றத்தின் முக்கியத்துவம்வாய்ந்த காலங்களாக இருந்தன, யெகோவா தம்முடைய மக்களை வழிநடத்திய முறையை மறுபார்வை செய்வதன் மூலம் நாம் மிகவும் பயனடைகிறோம். அவர் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார். அவருடைய ஆசீர்வாதத்தோடு, ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலை ஒரு வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டுவரப்படும்.
நீங்கள் தொடர்ந்து விழிப்புடனிருக்கிறீர்களா?
23. கிறிஸ்தவ அன்பு மற்றும் உலகத்திலிருந்து பிரிந்திருத்தல் சம்பந்தமாக, நாம் விழிப்புடனிருக்கிறோம் என்பதை தனிப்பட்டவர்களாக நாம் எவ்வாறு மெய்ப்பித்துக் காட்டமுடியும்?
23 யெகோவாவுடைய வழிநடத்துதலுக்குப் பிரதிபலித்து, இந்த உலகத்தின் பாகமாக நம்மை அடையாளப்படுத்துகிற பழக்கங்களுக்கும் மனப்பான்மைகளுக்கும் அவருடைய அமைப்பு தொடர்ந்து நமக்கு எச்சரிப்புக் கொடுத்துவருகிறது. ஏனென்றால் நாம் அதோடு அழிந்துசெல்லக்கூடிய அபாயம் இருக்கிறது. (1 யோவான் 2:17) யெகோவாவுடைய வழிநடத்துதலுக்குப் பிரதிபலிப்பதன்மூலம் தனிப்பட்டவர்களாக நாமும் விழிப்புடனிருக்கவேண்டும். ஒன்றுசேர்ந்து வாழவும் வேலைசெய்யவுங்கூட யெகோவா நமக்குப் புத்திமதி கொடுக்கிறார். கிறிஸ்தவ அன்பு உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதற்கான போற்றுதலில் வளர அவருடைய அமைப்பு நமக்கு உதவிசெய்திருக்கிறது. (1 பேதுரு 4:7, 8) நாம் விழிப்புடனிருப்பதானது, மனித அபூரணங்களின் மத்தியிலும் இந்த ஆலோசனையைப் பொருத்திப் பிரயோகிக்க ஊக்கமான முயற்சியெடுப்பதைத் தேவைப்படுத்துகிறது.
24, 25. எந்த அதிமுக்கியமான அம்சங்களில் நாம் தொடர்ந்து விழிப்புடனிருக்க வேண்டும், என்ன எதிர்பார்ப்பை கருத்தில்கொண்டு?
24 “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் [யெகோவாவில், NW] நம்பிக்கையாயிரு” என்று உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பு நமக்கு தவறாமல் நினைப்பூட்டியிருக்கிறது. (நீதிமொழிகள் 3:5) “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:17) நம்முடைய தீர்மானங்களைக் கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் ஆதாரமிடுவதற்கும், இந்த வார்த்தை ‘நம்முடைய கால்களுக்குத் தீபமும், நம்முடைய பாதைக்கு வெளிச்சமுமாயிருக்க’ அனுமதிப்பதற்கும் கற்றுக்கொள்ளும்படியாக நாம் ஆலோசனை கூறப்பட்டிருக்கிறோம். (சங்கீதம் 119:105) கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதை நம்முடைய வாழ்க்கையில் முதலிடத்தில் வைக்கும்படி நாம் அன்பாக உற்சாகப்படுத்தப்பட்டிருக்கிறோம். இதுவே நம்முடைய நாளுக்காக இயேசு முன்னறிவித்த வேலையாக இருக்கிறது.—மத்தேயு 24:14.
25 ஆம், உண்மையும் விவேகமுமுள்ள அடிமை நிச்சயமாகவே விழிப்புடனிருக்கிறது. தனிப்பட்டவர்களாக நாமும் தொடர்ந்து விழிப்புடனிருக்கவேண்டும். அவ்விதமாகச் செய்வதன் பலனாக, மனுஷகுமாரன் நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற வருகையில், அவருக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள் மத்தியில் நாம் காணப்படுவோமாக.—மத்தேயு 24:30; லூக்கா 21:34-36, NW.
[அடிக்குறிப்புகள்]
a A. H. மேக்மில்லன் எழுதிய விசுவாசம் வளருகிறது, (Faith on the March) ப்ரென்டைஸ்-ஹால், Inc., 1957, பக்கங்கள் 19-22.
b ஆங்கில காவற்கோபுரம், ஆகஸ்ட் 15, 1966, பக்கங்கள் 504-10-ஐப் பாருங்கள்.
மறுபார்வையாக
◻ மத்தேயு 24:42-ல் காட்டப்பட்டுள்ளபடி, நாம் ஏன் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டும்?
◻ இயேசுவும் முதல் நூற்றாண்டில் அவரைப் பின்பற்றியவர்களும் எவ்வாறு ஆவிக்குரிய விழிப்புணர்வைக் காத்துக்கொண்டார்கள்?
◻ 1870 முதற்கொண்டு, யெகோவாவின் ஊழியர்கள் தொடர்ந்து விழிப்புடனிருந்திருக்கிற காரணத்தால் என்ன முன்னேற்றங்கள் இருந்திருக்கின்றன?
◻ தனிப்பட்ட நபர்களாக நாம் தொடர்ந்து விழிப்புடனிருக்கிறோம் என்பதற்கு எது சான்றுபகரும்?
[பக்கம் 23-ன் படங்கள்]
இயேசு தம்முடைய பிதா நியமித்த வேலையில் சுறுசுறுப்பாய் இருந்தார். அவர் ஊக்கமாக ஜெபிக்கவும் செய்தார்
[பக்கம் 24-ன் படம்]
சார்ல்ஸ் டேஸ் ரஸல், அவருடைய பிற்பட்ட ஆண்டுகளில்
[பக்கம் 25-ன் படம்]
பூமி அனைத்திலும் 47,00,000-க்கும் அதிகமான ராஜ்ய பிரஸ்தாபிகள் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள்