கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு நீங்கள் ஆஜராவது ஏன் அவசியம்
தென் அமெரிக்காவில் வாழும் ரோஸாரீயோ, பல மாதங்களாக எலிசபெத்திடம் பைபிள் படிப்பதை அனுபவித்துவந்தாள். கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி கற்றுக்கொள்வதும், அது எப்படிப் பரதீஸிய நிலைமைகளைப் பூமியில் கொண்டுவரும் என்பதும் ரோஸாரீயோவுக்கு கிளர்ச்சியூட்டியது. ஆனாலும், ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு ஆஜராயிருக்க வரும்படி எலிசபெத் அழைத்தபோதெல்லாம், அவள் வரமறுத்தாள். சபைக் கூட்டங்களுக்கு ஆஜராகாமல், பைபிளை வீட்டிலேயே படித்து, அது சொல்வதை வீட்டிலேயே அப்பியாசிக்க முடியும் என்று அவள் நினைத்தாள். கிறிஸ்தவக் கூட்டங்கள் உண்மையில் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா என்று நீங்களும் யோசித்ததுண்டா? கடவுள் தம்முடைய மக்கள் ஒன்றுகூடி வர ஏன் ஏற்பாடுசெய்கிறார்?
முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்கள், அவர்களைச் சுற்றி இருந்த மக்களைவிட அவ்வளவு வித்தியாசப்பட்டு இருந்ததால், அவர்களுடைய வாழ்விற்கு சரியான கூட்டுறவு அத்தியாவசியமாயிருந்தது. ஆரம்பகால கிறிஸ்தவர்களின் ஒரு சபைக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமானீர்கள்.’ (பிலிப்பியர் 2:14, 15) யூதேயாவில் முக்கியமாகக் கிறிஸ்தவர்கள் பிரச்னைக்குட்பட்டிருந்தனர், அவர்களுக்குத்தான் பவுல் எழுதினார்: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.” (எபிரெயர் 10:24, 25) ஒன்றுகூடி வருவதன்மூலம் நாம் எவ்வாறு ஒருவரையொருவர் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவுகிறோம்?
கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் “கூர்மைப்படுத்துவது” எப்படி
‘ஏவப்பட’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சொல்லிற்கு பவுல் பயன்படுத்தின கிரேக்க வார்த்தை, சொல்லர்த்தமாக “கூர்மைப்படுத்துதல்” என்று பொருள்படுகிறது. கிறிஸ்தவர்கள் எவ்வாறு ஒருவரையொருவர் “கூர்மைப்படுத்துவது” என்பதைப்பற்றி ஒரு பைபிள் பழமொழி விளக்கம்தரும்போது இவ்வாறு சொல்கிறது: “இரும்பை இரும்பு கூர்மையாக்கிவிடும், அப்படியே மனிதனை மனிதன் கூர்மையாக்குவான்.” (நீதிமொழிகள் 27:17, NW; பிரசங்கி 10:10) நாமெல்லாம், வழக்கமாகக் கூர்மைப்படுத்தப்பட வேண்டிய கருவிகளைப் போன்றவர்கள். நாம் யெகோவாவிற்கான அன்பைச் செலுத்தி, நம் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை எடுப்பது உலகத்திலிருந்து வித்தியாசப்பட்டிருப்பதை அர்த்தப்படுத்துவதால், நாம் தொடர்ந்து, பெரும்பான்மையினரிடமிருந்து வித்தியாசப்படுவதுபோல், வித்தியாசமான பாதையைத் தெரிந்தெடுப்பது அவசியமாயிருக்கிறது.
வித்தியாசமாக இருப்பதற்கு எடுக்கப்படும் இடைவிடாத முயற்சி, நற்கிரியைகளைச் செய்வதற்கான நம்முடைய ஆர்வத்தை மழுங்கவைக்கக்கூடும். ஆனால் நாம் யெகோவாவை நேசிக்கிறவர்கள் மத்தியில் இருந்தால், நாம் ஒருவரையொருவர் கூர்மைப்படுத்திக்கொள்கிறோம்—அன்பிற்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் நாம் ஏவிவிடுகிறோம். இதற்கு மாறாக, நாம் தனிமையில் இருக்கும்போது, நாம் நம்மைப்பற்றியே அதிகமாக நினைக்க ஆரம்பித்துவிடுகிறோம். ஒழுக்கக்கேடு, தன்னலம், முட்டாள்தனமான கற்பனைகள் நம் மனதிற்குள் நுழையலாம். “பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.” (நீதிமொழிகள் 18:1) இதனால்தான், பவுல் தெசலோனிக்கேயா நகரிலிருந்த சபைக்கு இவ்வாறு எழுதினார்: “ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:11.
ரோஸாரீயோ பைபிளின் அடிப்படைப் போதனைகளை முடித்தப்பின்பும், சபையோடு கூட்டுறவுகொள்ளாமல் இருந்தாள். எனவே, கூடுதலான உதவியைத் தர முடியாதவளாக, எலிசபெத் அவளைச் சந்திப்பதை நிறுத்திவிட்டாள். சில மாதங்கள் கழித்து, ஒரு வட்டாரக் கண்காணி ரோஸாரீயோவைச் சந்தித்துக் கேட்டார்: “குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் ஓர் உணவுவிடுதியில் நல்ல சாப்பாடைச் சாப்பிடமுடிந்தாலும், ஆனால் எல்லா அங்கத்தினர்களும் வீட்டில் சாப்பிடாததால், எதை அவர்கள் இழந்திருப்பார்கள்?” ரோஸாரீயோ சொன்னாள்: “குடும்பக் கூட்டுறவை அவர்கள் இழப்பர்.” அவள் குறிப்பைப் புரிந்துகொண்டு, கூட்டங்களுக்கு ஒழுங்காக வருவதற்கு ஆரம்பித்தாள். அதை அவ்வளவு பயனுள்ளதாகக் கண்டதால், அப்போதிருந்து பெரும்பாலும் எல்லாக் கூட்டங்களுக்கும் அவள் வந்துவிடுகிறாள்.
நீங்கள் நம்புகிற ஒரேமாதிரியான காரியங்களில் வைத்திருக்கும் விசுவாசத்தைப்பற்றி வெளிப்படையாக மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதும், அதைப்போலவே விசுவாசம் எப்படி அவர்களுடைய வாழ்க்கைகளை மாற்றியிருக்கிறது என்பதைக் காண்பதும் உற்சாகமளிப்பதாய் இருக்கிறது. பவுல் தனிப்பட்ட அனுபவத்தின்மூலம் இதை உணர்ந்தார், அவர் ரோமிலுள்ள சபைக்கு இதை எழுதினார்: ‘நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும், உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறேன்.’ (ரோமர் 1:10, 11) உண்மையில், அவர் இதை எழுதியது, பவுல் ரோமிற்கு விஜயம்செய்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தது; அவர் விஜயம்செய்தபோது ரோமர்களின் கைகளில் கைதியாக இருந்தார். ஆனால் அவரைச் சந்திக்க ரோம் நகரத்திலிருந்து 60-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் நடந்துவந்த சகோதரர்களை அவர் சந்தித்தபோது, ‘பவுல், தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்.’—அப்போஸ்தலர் 28:15.
கடினமான காலங்களில் ஆவிக்குரிய உணவைக் காணுதல்
ரோமில் வீட்டில் சிறைப்பட்டிருந்தபோது எபிரெயர்களுக்கு, அவர்கள் கூடிவருவதை விட்டுவிடக்கூடாது என்று பவுல் எழுதினார். அவர் இந்த வார்த்தைகளைக் கூடுதலாகச் சொன்னது நமக்கு முக்கியவத்துவமுடையதாய் இருக்கிறது: “நாளானது சமீபத்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.” (எபிரெயர் 10:25) இந்த உலகத்தின் முடிவு காலத்தை 1914-ம் வருடம் குறிப்பிட்டுக்காட்டியது என்றும், “தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்” சமீபித்திருக்கிறது என்றும் யெகோவாவின் சாட்சிகள் வேதாகமத்திலிருந்து திடநம்பிக்கையோடு எடுத்துக் காண்பித்து வந்திருக்கின்றனர். (2 பேதுரு 3:7) பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலின்படி, முடிவு காலத்தின் ஆரம்பத்தில் பிசாசானவன் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது, அவன் அதிக கோபமடைந்து, ‘கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போனான்.’ (வெளிப்படுத்துதல் 12:7-17) எனவே, கடவுளுடைய கட்டளைகளைப் பின்பற்றுவது விசேஷமாக இப்பொழுது கடினமாயிருக்கிறது; எனவே அவ்வளவிற்கு உடன் விசுவாசிகளோடு கூடி வருவது நமக்குத் தேவையாயிருக்கிறது. பிசாசின் தாக்குதல்களைச் சமாளிப்பதற்காக நம்முடைய விசுவாசத்தையும் கடவுள்மீது கொண்டுள்ள நம்முடைய அன்பையும் பலப்படுத்துவதற்குக் கூட்டங்கள் நமக்கு உதவிசெய்யும்.
கடவுளின்மீதான அன்பும், விசுவாசமும் ஒரு தடவைக் கட்டப்பட்டுவிட்டால் நிரந்தரமாயிருக்கும் கட்டடங்கள்போல் இல்லை. பதிலாக, அவை தொடர்ந்து உணவளிக்கப்படுவதால் சிறிதுசிறிதாக வளரும் உயிருள்ள பிராணிகளைப்போன்றவை, ஆனால் பட்டினிப் போடப்பட்டால் அவை ஆற்றலிழந்து மரிக்கின்றன. இதனால்தான் யெகோவா தம்முடைய மக்களைப் பலப்படுத்துவதற்குத் தொடர்ச்சியான ஆவிக்குரிய உணவைத் தந்துவருகிறார். நம் அனைவருக்குமே அப்படிப்பட்ட உணவு தேவை; ஆனால் கடவுளுடைய அமைப்பையும் அதன் கூட்டங்களையும் தவிர வேறெங்கிருந்து நாம் இதைப் பெறமுடியும்? வேறெங்குமில்லையே.—உபாகமம் 32:2; மத்தேயு 4:4; 5:3.
இயேசு தாமே கிறிஸ்தவச் சபைக்கு எப்படி உணவளிக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள உதவிசெய்யும் ஒரு கேள்வியை முன்வைத்தார். அவர் கேட்டார்: “ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.” (மத்தேயு 24:45, 46) இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு போஜனங்கொடுக்கும்படி முதல் நூற்றாண்டில் யாரை நியமித்தார், மேலும் தாம் ராஜ்ய அதிகாரத்தில் வந்திருக்கும்போது அவ்வாறு உண்மையாகப் போஜனம் கொடுத்துவந்தவர்களாக அவர் யாரைக் கண்டார்? தெளிவாகவே, எந்த மனிதனும் இந்த எல்லா நூற்றாண்டுகள்தோறும் உயிரோடு வாழ்ந்ததில்லை. கிறிஸ்துவுக்கு முந்திய காலங்களில் எப்படி இஸ்ரவேலர் கடவுளின் ஊழியக்காரராக இருந்தனரோ அதேப்போல் ஆவியினால்-அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையாக இருக்கும் அடிமையை சான்று குறிக்கிறது. (ஏசாயா 43:10) ஆம், ஆவியினால்-அபிஷேகஞ்செய்யப்பட்ட அந்தக் கிறிஸ்தவர்களடங்கிய உலகளாவிய குழுவின்மூலம் நம்முடைய ஆவிக்குரிய உணவை இயேசு கொடுக்கிறார். இது இன்று, யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபைகளின்மூலம் ஆவிக்குரிய உணவைக் கொடுக்கிறது.
ஆவிக்குரிய உணவைக் கொடுக்கும் இயேசுவினுடைய வழியின் ஏற்பாடு இன்னுமதிகமாக அப்போஸ்தலனாகிய பவுலால் விளக்கப்பட்டது: “அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் . . . நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் (திருத்தமான அறிவிலும், NW) ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.”—எபேசியர் 4:8, 11-13.
இந்த ‘வரங்களையுடைய மனுஷர்கள்’ முக்கியமாக உள்ளூர் சபைகளுக்குள்—கூட்டங்களில்—சகோதரர்களைக் கட்டியெழுப்பினர். உதாரணமாக, அந்தியோகியாவில், ‘யூதாவும் சீலாவும் தீர்க்கதரிசிகளாய் இருந்தபடியினாலே, அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்திசொல்லி, அவர்களைத் திடப்படுத்தினர்.’ (அப்போஸ்தலர் 15:32) இதைப்போலவே, ஆவிக்குரிய வகையில் தகுதியுடைய ஆண்களின் பேச்சுக்கள், நம் விசுவாசம் தளராதபடி அல்லது செயலற்றுப்போகாதபடி பேணிக்காக்கும்.
நாம் கூட்டங்களுக்குப் போக ஆரம்பிப்பதற்கு முன்பே, சபையினுடைய ஓர் அங்கத்தினரின் தனிப்பட்ட உதவியால் நாம் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பது ஒருவேளை உண்மையாக இருக்கலாம். ‘உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டிய’ காலம் இருக்கிறது, அப்போது ‘பலமான ஆகாரம் அல்ல, பாலே உங்களுக்குத் தேவை,’ என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 5:12) ஆனால் ஒருவர் பால் குடிக்கும் நிலையிலேயே எப்போதும் இருக்கமுடியாது. கடவுள்மீது உள்ள அன்பையும் விசுவாசத்தையும் அவரில் உயிருள்ளதாக வைத்திருப்பதற்கும், ‘கடவுளுடைய எல்லா ஆலோசனைகளையும்’ பொருத்திப் பிரயோகிப்பதில் நடைமுறையான உதவியைக் கொடுப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான பைபிள் போதனைத் திட்டத்தைக் கிறிஸ்தவக் கூட்டங்கள் கொடுக்கின்றன. (அப்போஸ்தலர் 20:26) இது ‘பாலை’ விட அதிக பலமானது. பைபிள் தொடர்ந்து சொல்கிறது: “பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.” (எபிரெயர் 5:14) கூட்டங்களில் கலந்தாராயப்படும் அநேகக் காரியங்கள், உதாரணமாக பைபிள் தீர்க்கதரிசனங்களின் வசனவாரியான விளக்கம், நாம் நம்முடைய சொந்த வாழ்க்கைகளில் எப்படிக் கடவுளைப் பின்பற்றுவது பற்றிய ஆழமான கலந்தாலோசிப்புகள் போன்றவை வீட்டுப் பைபிள் போதனையினுடைய அடிப்படை பயிற்றுவிப்பின் பாகமாக ஒருவேளை இருக்காது.
யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் —உங்களுக்குப் பின்பாக ஒலிக்கும் ஒரு குரல் போல்
இப்படிப்பட்ட சபை படிப்புகளின்மூலம் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று யெகோவா நம்மைத் தொடர்ந்து நினைப்பூட்டுகிறார். இப்படிப்பட்ட நினைப்பூட்டுதல்கள் அத்தியாவசியமானவை. அவையன்றி, நாம் தன்னலம், பெருமை, பேராசை போன்ற போக்கில் செல்ல சுலபமாக மனஞ்சாய்ந்துவிடுகிறோம். வேதாகமத்திலிருந்து வரும் நினைப்பூட்டுதல்கள், மற்ற மனிதர்களோடும், கடவுளோடுதாமேயும் வெற்றிகரமான கூட்டுறவை அனுபவிப்பதற்கு உதவிசெய்கின்றன. “என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு (நினைப்பூட்டுதல்களுக்கு, NW) நேராகத் திருப்பினேன்,” என்று சங்கீதம் 119:59-ஐ எழுதியவர் ஒத்துக்கொண்டார்.
நாம் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஒழுங்காக ஆஜராகி வரும்போது, ஏசாயாவின்மூலம் சொல்லப்பட்ட யெகோவாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதை நாம் உணரமுடியும். அது இவ்வாறு சொல்கிறது: “உங்களுடைய மகத்தான போதகர் இனி ஒருபோதும் தன்னைத்தானே மறைத்துக்கொள்ளமாட்டார். உங்கள் கண்கள் முன்னாலேயே உங்களுடைய மகத்தான போதகர் இருப்பார். ‘இதுதான் வழி. ஜனங்களே, இதிலேயே நடந்துபோங்கள்,’ என்ற வார்த்தைகளை உங்கள் சொந்த காதுகள்தாமே கேட்கும்.” யெகோவா நம் முன்னேற்றத்தைக் கூர்ந்துகவனிக்கிறார்; நாம் தவறான படியெடுக்கையில் அன்போடு நம்மைச் சரிசெய்கிறார். (ஏசாயா 30:20, 21, NW; கலாத்தியர் 6:1) இதைவிட அதிகமான உதவியையும் அவர் கொடுக்கிறார்.
சபையின்மூலம் பரிசுத்த ஆவியைப் பெறுதல்
யெகோவாவின் சாட்சிகளோடு கிறிஸ்தவக் கூட்டங்களில் ஒழுங்காக ஆஜராயிருப்பதன்மூலம், கடவுளுடைய மக்கள்மீது தங்கியிருக்கும் அவருடைய பரிசுத்த ஆவியினால் நாம் பலப்படுத்தப்படுகிறோம். (1 பேதுரு 4:14) மேலுமாக, சபையில் உள்ள கிறிஸ்தவக் கண்காணிகள், பரிசுத்த ஆவியினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 20:28) கடவுளிடமிருந்து வரும் இந்தக் கிரியை நடப்பிக்கும் சக்தி, ஒரு கிறிஸ்தவனின்மீது வல்லமைமிக்க செல்வாக்கை உடையதாக இருக்கிறது. பைபிள் சொல்கிறது: “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.” (கலாத்தியர் 5:22, 23) கடவுளுடைய அமைப்பின்மூலம் செயல்படும் பரிசுத்த ஆவி, தம்மை நேசிப்பவர்களுக்கு யெகோவா என்ன செய்யப்போகிறார் என்பதைப் பற்றிய ஒரு தெளிவான புரிந்துகொள்ளுதலைப் பெறுவதற்கும் நமக்கு உதவிசெய்யும். இந்தக் காரிய ஒழுங்குமுறையின் பிரபலமான மக்கள் கடவுளுடைய நோக்கத்தைப் புரிந்துகொள்ளப்போவதில்லை என்பதை விளக்கிய பிறகு, பவுல் எழுதினார்: “நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்.”—1 கொரிந்தியர் 2:8-10.
விசுவாசத்தைப் பலப்படுத்தும் ஆவிக்குரிய உணவோடு, சபையின் முக்கிய நடவடிக்கையில் ஈடுபட விரும்புகிறவர்களுக்குச் சபை பயிற்சி கொடுக்கிறது. அது என்ன?
சபையால் கொடுக்கப்படும் பயிற்சி
வெறும் பொழுதுபோக்குகளை அனுபவிக்க, மேலும் மேம்பட்ட வாழ்க்கை வாழ்வதற்கு ஒருவரையொருவர் ஒருவேளை உற்சாகப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு சமூக பொழுதுபோக்கு மையம் (சோஷியல் கிளப்) அல்ல கிறிஸ்தவச் சபை. ஆவிக்குரிய இருளில் உள்ளவர்களுக்கு ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை எடுத்துக்கொண்டு செல்லும்படி இயேசு சபைக்குப் பொறுப்பளித்தார். (அப்போஸ்தலர் 1:8; 1 பேதுரு 2:9) அது ஆரம்பிக்கப்பட்ட நாளாகிய பொ.ச. 33 பெந்தெகொஸ்தே தினத்திலிருந்து, அது பிரசங்கிகளின் ஓர் அமைப்பாக இருந்தது. (அப்போஸ்தலர் 2:4) யெகோவாவின் நோக்கங்களைப் பற்றி யாருக்காவது சொல்ல முயற்சிசெய்து, ஆனால் அவரை நம்பவைக்கத் தவறிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? சபை கூட்டங்கள், கற்பிக்கும் கலையில் தனிப்பட்ட பயிற்சியைக் கொடுக்கின்றன. பைபிள் எடுத்துக்காட்டுகளைப்பற்றி படிப்பதன்மூலம், நியாயங்காட்டிப் பேசுவதற்கு எப்படிப் பொதுக் கருத்தை ஸ்தாபிப்பது, நியாயமான விவாதத்திற்கு அடிப்படையாக வேதாகமத்தை எப்படிப் பயன்படுத்துவது, கேள்விகளையும் உதாரணங்களையும் பயன்படுத்துவதன்மூலம் மற்றவர்களுக்கு நியாயங்காட்டிப் பேச எப்படி உதவிசெய்வது போன்றவற்றை நாம் கற்றுக்கொள்கிறோம். பைபிளை மற்றொருவர் புரிந்துகொள்ள உதவிசெய்யும் அளவற்ற சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு இப்படிப்பட்ட திறமைகள் உங்களுக்கு உதவிசெய்யும்.
துன்பம்நிறைந்த, ஒழுக்கங்கெட்ட இந்த உலகத்தில், கிறிஸ்தவச் சபை உண்மையான ஓர் ஆவிக்குரிய கோட்டை ஆகும். அது ஆபூரண மக்களால் உண்டாக்கப்பட்டிருந்தாலும், சமாதானம் மற்றும் அன்பின் புகலிடமாக இருக்கிறது. எனவே, அதன் எல்லா கூட்டங்களுக்கும் ஒழுங்காக ஆஜராகியிருப்பவர்களாக இருந்து, சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை நீங்களே அனுபவியுங்கள்: “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? . . . அங்கே கர்த்தர் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.”—சங்கீதம் 133:1, 3.