இயேசு கிறிஸ்து உங்கள் மீது எந்தளவு செல்வாக்குச் செலுத்துகிறார்?
முந்தைய கட்டுரையில் நாம் கவனித்தபடி, இயேசுவின் போதனைகள் உண்மையில் உலக முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை சந்தேகிக்க முடியுமா? ஆனாலும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி: “இயேசுவின் போதனைகள் தனிப்பட்ட விதமாக என்னை எவ்வாறு பாதிக்கின்றன?”
இயேசுவின் போதனைகளில் பல்வேறு விஷயங்கள் அடங்கியிருந்தன. அவற்றின் மதிப்புமிக்க பாடங்கள் உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்க முடியும். வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க வேண்டியவற்றைத் தீர்மானிப்பது, கடவுளோடு நட்புறவை வளர்ப்பது, மற்றவர்களோடு நல்லுறவை அனுபவிப்பது, பிரச்சினைகளைச் சமாளிப்பது, வன்முறை செயல்களைத் தவிர்ப்பது ஆகியவை சம்பந்தமாக இயேசு போதித்த விஷயங்களை இப்போது சிந்திக்கலாம்.
வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க வேண்டியவற்றைத் தீர்மானியுங்கள்
அவசர கதியில் இயங்கும் இன்றைய உலகம் நம்முடைய பெரும்பான்மையான நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிவிடுகிறது. அதனால் ஆன்மீக காரியங்கள் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்படுகின்றன. ஜெர்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரைக் கவனியுங்கள். 20 வயதைத் தாண்டிவிட்ட அவருக்கு ஆன்மீக விஷயங்களைப் பற்றி பேசுவதென்றால் ரொம்ப பிடிக்கும்; இவ்வாறு கற்றுக்கொள்ளும் காரியங்களை உயர்வாகக் கருதுகிறார். ஆனாலும் அவர் புலம்புவதைக் கவனியுங்கள்: “ஆன்மீக காரியங்களுக்காக நேரத்தை ஒதுக்க எப்போதும் எனக்கு முடிவதில்லை. வாரத்தில் ஆறு நாள் வேலை செய்றேன். ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் லீவு. சொந்த வேலைகளை எல்லாம் செஞ்சு முடிப்பதற்குள் ரொம்பவே களைத்துப் போயிடுறேன்.” உங்கள் நிலைமையும் இதுதான் என்றால், மலைப்பிரசங்கத்தில் இயேசு போதித்தவை உங்களுக்குப் பெரிதும் உதவும்.
தம்முடைய போதனைகளைக் கேட்க கூடியிருந்தவர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: ‘ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள். . . . ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? . . . ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.’ (மத்தேயு 6:25-33) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
நம் சரீர தேவைகளுக்கோ நம் குடும்பத்தாரின் தேவைகளுக்கோ கவனம் செலுத்தக்கூடாது என்று இயேசு இங்கே சொல்லவில்லை. “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 5:8) என்றாலும், முதலிடம் கொடுக்க வேண்டியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆன்மீக காரியங்களுக்கு முன்னுரிமை அளித்தால், நம்முடைய மற்ற எல்லாத் தேவைகளையும் கடவுள் கவனித்துக் கொள்வார் என்று இயேசு உறுதியளித்தார். அவருடைய இந்த வார்த்தைகள் முக்கியமான காரியங்களுக்கு நாம் எவ்வாறு முதலிடம் தரவேண்டும் என்ற பாடத்தைப் புகட்டுகின்றன. இந்த ஆலோசனையைப் பின்பற்றுவது சந்தோஷத்தையே கொடுக்கும்; ஏனென்றால் “ஆன்மீக தேவையைப் பற்றிய உணர்வுடையவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.”—மத்தேயு 5:3, NW.
கடவுளோடு நட்புறவை வளர்த்துக்கொள்ளுங்கள்
ஆன்மீக தேவையைப் பற்றிய உணர்வுடையவர்கள், கடவுளோடு நட்புறவை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை உணருவார்கள். யாருடனாவது நாம் நண்பராக வேண்டுமானால் என்ன செய்வோம்? அந்த நபரைப் பற்றி இன்னும் நன்கு தெரிந்துகொள்ள முயற்சி எடுப்போம் அல்லவா? அவருடைய கருத்துகள், மனப்பான்மைகள், திறமைகள், சாதனைகள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முயற்சி எடுப்போம். அதைத்தான் கடவுளுடைய நண்பராக ஆவதற்கும் நாம் செய்ய வேண்டும். அவரைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டும். இயேசு தம்முடைய சீஷர்களுக்காகக் கடவுளிடம் ஜெபித்தபோது இவ்வாறு சொன்னார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3) கடவுளோடு நெருக்கமான உறவை வளர்ப்பதற்கு அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அவரைப் பற்றி தெரிந்துகொள்வதற்கான ஒரே வழி அவருடைய ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிளைப் படிப்பதாகும். (2 தீமோத்தேயு 3:16) அதைப் படிப்பதற்கு நாம் நேரத்தை ஒதுக்க வேண்டும்.
ஆனாலும், அறிவைப் பெறுவது மட்டுமே போதாது. அதே ஜெபத்தில் இயேசு மேலுமாக சொன்னார்: “அவர்கள் [அவருடைய சீஷர்கள்] உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.” (யோவான் 17:6) நாம் கடவுளைப் பற்றிய அறிவைப் பெறுவதோடு, அதற்கேற்ப நடக்கவும் வேண்டும். கடவுளுடைய நண்பராவதற்கு இதைவிட சிறந்த வழி வேறேது இருக்க முடியும்? வேண்டுமென்றே ஒருவருடைய கருத்துகளையும் மதிப்பீடுகளையும் மதிக்காமல் நடந்துகொண்டால், அவருடனான நம் நட்புறவு வளருமென எதிர்பார்க்க முடியுமா? எனவே, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கடவுளுடைய கருத்துகளும் மதிப்பீடுகளும் வழிநடத்த அனுமதிக்க வேண்டும். மற்றவர்களுடனான நம் நட்புறவை அவருடைய மதிப்பீடுகளில் இரண்டு எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.
மற்றவர்களோடு நல்லுறவை வளர்த்துக்கொள்ளுங்கள்
ஒரு சந்தர்ப்பத்தில், மனித உறவுகளின் பேரில் மதிப்புவாய்ந்த பாடத்தைக் கற்பிப்பதற்கு இயேசு ஒரு சின்ன கதையைச் சொன்னார். தன் ஊழியக்காரர்களுடைய கணக்கைத் தீர்க்க விரும்பிய ஒரு ராஜாவைப் பற்றி அவர் பேசினார். அவர்களில் ஒருவன் ராஜாவுக்கு மிகப் பெரிய தொகை கடன்பட்டிருந்தான்; கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையில் இருந்தான். அவனையும், அவன் மனைவியையும், பிள்ளைகளையும் விற்று கடனை அடைக்கும்படி ராஜா கட்டளையிட்டார். அப்பொழுது, அந்த அடிமை “ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன்” என்று அவருடைய காலில் விழுந்து கெஞ்சினான். அந்த ராஜாவும் மனமிரங்கி, கடனைத் திருப்பித் தர வேண்டாமென சொல்லி மன்னித்து விட்டார். அங்கிருந்து சென்ற இந்த அடிமை வெகு சிறிய தொகையைத் தன்னிடமிருந்து கடனாக வாங்கியிருந்த இன்னொரு அடிமையைக் கண்டு தன் கடனைத் திருப்பித் தரும்படி கேட்டான். ஆனால் அவனோ கொஞ்சம் கருணை காட்டும்படி கெஞ்சினான்; இவனோ மறுத்து கடனைத் திருப்பித் தரும் வரையில் அவனை சிறைச்சாலையில் அடைத்தான். இதைப் பற்றி கேள்விப்பட்ட ராஜா கோபமடைந்தார். “நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமோ”? என்று கேட்டார். இரக்கங்காட்டாத அந்த அடிமை தன் கடனை அடைக்கும் வரையில் அவனை சிறையில் அடைத்தார். இந்தக் கதையிலிருந்து இயேசு ஒரு பாடத்தைக் கற்பித்தார்; அவர் இவ்வாறு சொன்னார்: “நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.”—மத்தேயு 18:23-35.
அபூரண மனிதர்களாக நம்மிடமும் அநேக குறைகள் உண்டு. கடவுளுக்கு விரோதமாக தவறுகள் செய்வதால் அவருக்கு அதிக கடன்பட்டிருக்கிறோம்; அதை நம்மால் ஒருபோதும் அடைத்துத் தீர்க்க முடியாது. அவருடைய மன்னிப்புக்காக மன்றாடுவதைத் தவிர நமக்கு வேறு வழி கிடையாது. சகோதரர்கள் நமக்கு எதிராக செய்யும் தவறுகளை நாம் மன்னித்தால், யெகோவா தேவன் நம் குற்றங்குறைகள் அனைத்தையும் மன்னிக்கத் தயாராயிருப்பார். எப்பேர்ப்பட்ட ஒரு சிறந்த படிப்பினை! இயேசு தம்முடைய சீஷர்களுக்கு இவ்வாறு ஜெபிக்க கற்றுக் கொடுத்தார்: “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.”—மத்தேயு 6:12.
வேரோடு கிள்ளி எறியுங்கள்
மனித இயல்பைப் புரிந்து கொள்வதில் இயேசு தலைசிறந்த வல்லுநராக இருந்தார். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர் அளித்த ஆலோசனைகள், அவற்றை வேரோடு கிள்ளி எறிய உதவின. பின்வரும் இரண்டு உதாரணங்களை கவனியுங்கள்.
“கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலை செய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:21, 22) கொலை என்ற பிரச்சினை ஒருவரது இருதயத்தில், அதாவது மனதில் வளரும் எண்ணங்களில் ஆரம்பிக்கிறது என அவர் சுட்டிக்காட்டினார். மனக்கசப்புக்கும் கோபதாபத்துக்கும் மக்கள் இடங்கொடுக்காதிருந்தால் திட்டமிடப்பட்ட வன்முறை அறவே ஒழிக்கப்படும். இந்தப் போதனையின்படி செயல்பட்டால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்!
அநேக வேதனைகளுக்கு வழிவகுக்கும் மற்றொரு பிரச்சினைக்கான அடிப்படை காரணத்தை இயேசு குறிப்பிட்டதைக் கவனியுங்கள். அவர் ஜனக்கூட்டத்தாரிடம் இவ்வாறு சொல்கிறார்: “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு.” (மத்தேயு 5:27-29) ஆக, ஒழுக்கங்கெட்ட நடத்தை என்ற பிரச்சினை ஒருவரது இருதயத்தில் ஆரம்பிக்கிறது என்று இயேசு போதித்தார். அந்த நடத்தைக்கான மூல காரணம் ஒழுக்கங்கெட்ட ஆசைகளே. அத்தகைய ஆசைகள் துளிர்ப்பதற்கு ஒருவர் இடங்கொடுக்காமல் அதை மனதிலிருந்து “பிடுங்கி” போட்டால், மோசமான காரியங்களில் ஈடுபடாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.
“உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு”
இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட அந்த இரவில், அவரைக் காப்பாற்ற அவருடைய சீஷர்களில் ஒருவர் வாளைப் பயன்படுத்தினார். அப்போது இயேசு அவரிடம் இவ்வாறு கட்டளையிட்டார்: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.” (மத்தேயு 26:52) அடுத்த நாள் காலையில் இயேசு பொந்தியு பிலாத்துவிடம் இவ்வாறு சொன்னார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.” (யோவான் 18:36) இந்தப் போதனை நடைமுறைக்கு ஒத்துவராததா?
வன்முறையில் ஈடுபடாதிருக்கும்படி இயேசு போதித்த விஷயங்களை ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எவ்வாறு கருதினார்கள்? போரைப் பற்றிய ஆரம்பகால கிறிஸ்தவர்களின் மனப்பான்மை என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “வன்முறையைக் கையாளுவதையும் மற்றவர்களைத் தாக்குவதையும் அவை [இயேசுவின் போதனைகள்] எந்தளவு கண்டனம் செய்தனவோ, அந்தளவு போரில் ஈடுபடுவதையும் கண்டனம் செய்தன என்பது தெளிவாகத் தெரிந்தது . . . இயேசு சொன்னவற்றை ஆரம்பகால கிறிஸ்தவர்கள் அப்படியே பின்பற்றினார்கள்; சாந்தமாயிருப்பதையும் வன்முறையில் ஈடுபடாதிருப்பதையும் பற்றிய இயேசுவின் போதனைகளை அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமென புரிந்துகொண்டார்கள். தங்களுடைய மதத்தைப் பொறுத்தவரை சமாதானத்தைக் கைக்கொள்வது அவசியமென உணர்ந்தார்கள்; போரில் இரத்தம் சிந்துவதை வன்மையாகக் கண்டித்தார்கள்.” கிறிஸ்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டவர்கள் எல்லோருமே இப்போதனையைப் பின்பற்றியிருந்தால் சரித்திரம் தலைகீழாக மாறியிருக்குமே!
இயேசுவின் எல்லா போதனைகளிலிருந்தும் நீங்கள் நன்மையடையலாம்
நாம் சிந்தித்த இயேசுவின் இந்தப் போதனைகள் மிக அருமையானவை, எளிமையானவை, வலிமை வாய்ந்தவை. அவருடைய போதனைகளைக் கற்றுக்கொண்டு அவற்றைப் பின்பற்றினால் மனிதர்கள் நிச்சயம் பயனடைவார்கள்.a
இதுவரை யாருமே போதித்திராத மிக ஞானமான போதனைகளிலிருந்து நீங்கள் பயனடைய விரும்பினால் உங்களுக்கு உதவுவதில் உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷப்படுவார்கள். அவர்களில் ஒருவரை அணுகும்படி அல்லது இந்தப் பத்திரிகையின் 2-ம் பக்கத்திலுள்ள விலாசத்தில் தொடர்புகொள்ளும்படி உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
[அடிக்குறிப்பு]
a இயேசுவின் போதனைகளைக் கிரமமாக ஆராய்வதற்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தைக் காண்க.
[பக்கம் 5-ன் படம்]
“அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்”
[பக்கம் 7-ன் படம்]
இயேசுவின் போதனைகள் உங்கள் வாழ்க்கையிலும் அதிக செல்வாக்கு செலுத்த முடியும்