நாளானது சமீபித்து வருகையில் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள்
“ஒருவரையொருவர் புத்திசொல்லக் [உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கக், NW] கடவோம். நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்.”—எபிரெயர் 10:25.
1, 2. எந்த நாள் சமீபித்துவருகிறது? யெகோவாவின் மக்களுடைய மனநிலை என்னவாக இருக்கவேண்டும்?
இன்று ‘வா, ஜீவத்தண்ணீரை வாங்கிக்கொள்,’ என்று சொல்வதில் பங்குபெறுவோர் தங்களைத் தனியே பிரித்து வைத்துக்கொள்வதில்லை. யெகோவாவின் வெற்றி மகா நாள் நெருங்கி வருகையில் அவர்கள் பைபிளின் புத்திமதியைப் பொருத்துகிறார்கள்: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவரையொருவர் புத்திசொல்லக் [உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கக், NW] கடவோம். நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்.”—எபிரெயர் 10:24, 25.
2 வேதாகமம் அந்த “நாளைக்” குறித்து “யெகோவாவின் நாள்” என்பதாகத் தீர்க்கதரிசனம் உரைக்கிறது. (2 பேதுரு 3:10) யெகோவா மகா உன்னதமானவராக, எல்லாம் வல்ல கடவுளாக இருக்கும் காரணத்தால், வேறு எந்த நாளும் அவருடைய நாளை விஞ்சிவிட முடியாது. (அப்போஸ்தலர் 2:20) இது சர்வலோகத்தின் மீதும் கடவுளாக அவருடைய அரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்படுவதை அர்த்தப்படுத்துகிறது. ஈடிணையற்ற முக்கியத்துவமுள்ள அந்த நாள் சமீபித்து வருகிறது.
3. முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு யெகோவாவின் நாள் எவ்விதமாக சமீபித்துக்கொண்டிருந்தது? இன்று நமக்கு அது எப்படி இருக்கிறது?
3 அப்போஸ்தலனாகிய பவுல் நம்முடைய பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டிலே யெகோவாவின் நாள் வருகிறது என்பதாகக் கிறிஸ்தவர்களுக்குச் சொன்னான். அந்த நாளின் வருகையை அவர்கள் எதிர்நோக்கியவர்களாக இருந்தனர். ஆனால் அப்போது அந்த நாள் 1,900-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு அப்பாலிருந்தது. (2 தெசலோனிக்கேயர் 2:1–3) இந்த உண்மையின் மத்தியிலும், அந்த நாள் நிச்சயமாக வர இருந்ததன் காரணமாகவும், கிறிஸ்தவர்கள் அந்த விசுவாசத்தில் சீராக முன்னேறிச் செல்வார்களேயானால் ஆசீர்வாதமான அந்த நாளிற்குள் பிரவேசிப்பார்கள் என்பதாலும் அவர்கள் உற்சாகப்படுத்தப்பட வேண்டும். (2 தீமோத்தேயு 4:8) அக்காலத்திலேயே, அந்த நாள் சமீபித்துவருவதாகக் காணப்பட்டது. நம்மைப் பொறுத்தவரை, இன்று யெகோவாவின் நாள் நிச்சயமாகவே சமீபித்துவிட்டிருக்கிறது. பைபிள் தீர்க்கதரிசனத்தின் மகத்தான நிறைவேற்றங்கள் அனைத்தும் சந்தோஷத்தை உண்டாக்கும் இந்த உண்மையை உறுதிசெய்கின்றன. வெகு சீக்கிரத்தில், நம்முடைய கடவுளின் பெயர், யெகோவா, எல்லா நித்தியத்துக்குமாக பரிசுத்தப்படுத்தப்படும்.—லூக்கா 11:2.
தெய்வீக நாமத்தினால் உற்சாகமூட்டப்படுதல்
4. வெளிப்படுத்துதல் 19:6-ன் படி, யார் ராஜாவாக ஆகவேண்டும்? அவருடைய பெயர் எவ்விதமாக அறிந்துகொள்ளப்படுகிறது?
4 தெய்வீக நாமம் முழு மனித குடும்பத்துக்கும் அக்கறைக்குரிய ஒரு விஷயமாக இருக்கவேண்டும். இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு சொல்வதாவது: “கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள்! சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜா!” (வெளிப்படுத்துதல் 19:6) அந்த 20-ம் நூற்றாண்டு பைபிள் மொழிபெயர்ப்பாளன் பிரகாரம், அவர் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர். அந்த மொழிபெயர்ப்பும் மற்ற அநேக நவீன மொழிபெயர்ப்புகளும் ராஜாவாக ஆளுகைச் செய்ய ஆரம்பிக்கும் கடவுளுடைய பெயரைக் கொடுப்பதில்லை. என்றபோதிலும் தெய்வீக நாமம் வெளிப்படுத்துதல் 19:6-ல் ரிவைஸ்ட் ஸ்டான்டர்டு வெர்ஷன், தி நியு இன்டர்நேஷனல் வெர்ஷன் மற்றும் மோஃபட் மொழிபெயர்ப்பில் “அல்லேலூயா!” (“யாவைத் துதி” அல்லது “யெகோவாவைத் துதி”) என்ற ஆர்ப்புரையில் உள்ளே இணைந்து இருக்கிறது. பெரும்பாலும் நம்முடைய பொது சகாப்தத்தில் தெய்வீக நாமம் அடிப்படையில் பைபிள் மொழிபெயர்ப்புகளில் மறைக்கப்பட்டிருக்கிறது. என்றபோதிலும் நாம் பார்க்கப் போகும் வண்ணமாக, அந்தப் பெயர் பூர்வ காலங்களிலும் நவீன காலங்களிலும் கடவுளுடைய மக்களுக்குப் பெரும் உற்சாகமூட்டுதலாக இருந்திருக்கிறது.
5, 6. (எ) மோசே தான் பிரதிநிதித்துவம் செய்த கடவுளின் பெயரை அறிந்திருப்பது ஏன் அவசியமாக இருந்தது? (பி) மோசே தெய்வீக நாமத்தை அழுத்திக்கூறியபோது, இஸ்ரவேலர் மீது என்ன பாதிப்பு இருந்திருக்க வேண்டும்?
5 மோசே எகிப்து தேசத்தில் அடிமைப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனத்தினிடமாக மகா உன்னதமான கடவுளால் அனுப்பப்பட்டபோது, மோசே சென்று சந்தித்த ஆட்களின் மனங்களில் யார் அவனை அனுப்பினார் என்ற கேள்வி எழும்பிற்று. மோசே, துன்பமனுபவித்துக் கொண்டிருந்த யூத மக்கள், அவன் பிரதிநிதித்துவம் செய்த கடவுளின் பெயரை அறிந்துகொள்ள விரும்புவார்கள் என்பதாக எதிர்பார்த்தான். இதன் சம்பந்தமாக நாம் யாத்திராகமம் 3:15-ல் இவ்விதமாக வாசிக்கிறோம்: “மேலும் தேவன் மோசேயை நோக்கி: ‘ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய யெகோவா (NW) என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக.’ என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.”
6 இந்தத் தகவல் அவர்களிடமாக அழுத்திக்கூறப்பட்ட போது, இஸ்ரவேலர் மிகவும் உற்சாகமூட்டப்பட்டவர்களாக உணர்ந்திருக்க வேண்டும். அவர்களுடைய மீட்பு ஒரே மெய்த் தேவனாகிய யெகோவாவினால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. மேலும் கடவுள் இறுமாப்பாகத் தம்மைத் தனிப்படுத்தி வைத்துக்கொள்ளாமல் தம்முடைய தனிப்பட்ட பெயரின் பொருளை கண்கூடாகக் காண்பிக்கையில், அவரை அறிந்துகொள்ளும் எதிர்ப்பார்பைக் கொண்டிருப்பது எத்தனை உற்சாகமளிப்பதாக இருந்திருக்க வேண்டும்!—யாத்திராகமம் 3:13; 4:29–31.
7. (எ) இயேசுவின் சீஷர்கள் தெய்வீக நாமத்தை அறிந்திருந்தார்கள் என்பது நமக்கு எப்படித் தெரியும்? (பி) கடவுளுடைய பெயர் எவ்விதமாக பின்னிடத்துக்குத் தள்ளப்பட்டது?
7 யெகோவா என்ற தெய்வீக நாமத்தினாலும் அது பிரதிநிதித்துவம் செய்த காரியத்தினாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களும்கூட வெகுவாக உற்சாகமூட்டப்பட்டார்கள். (யோவான் 17:6, 26) இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின் போது, அவர் நிச்சயமாகவே தெய்வீக நாமத்தைப் பின்னிடத்துக்குத் தள்ளிவிடவில்லை. இயேசு என்ற தம்முடைய சொந்த பெயர் முன்னிடத்துக்குக் கொண்டுவருவதும் அவருடைய நோக்கமாக இருக்கவில்லை. மெய்யான கிறிஸ்தவ விசுவாசத்திலிருந்து முன்னறிவிக்கப்பட்ட விசுவாச துரோகம், ஆரம்பமான பின்புதானே தெய்வீக நாமம் பின்னிடத்துக்குத் தள்ளப்பட்டது, ஆம், கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் கொண்டிருந்த சம்பாஷணையில் துடைத்தழிக்கப்பட்டுவிட்டது. (அப்போஸ்தலர் 20:29, 30) பிதாவினுடையதை மறைத்துக் கடவுளுடைய குமாரனின் பெயருக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட ஆரம்பிக்கையில், கிறிஸ்தவர்களென உரிமைப் பாராட்டுகிறவர்கள் தங்களுடைய பிதாவின் வணக்கம் அதிகமதிகமாகப் பொதுமுறையாக இருப்பதையும் குடும்ப நெருக்கம் குறைவுபடுவதையும், ஆகவே அதிக உற்சாகமூட்டுவதாக இல்லாதிருப்பதையும் காண்பார்கள்.
8 இதன் காரணமாக, காவற்கோபுர சங்கத்துடன் சம்பந்தப்பட்டிருந்த சர்வதேசீய பைபிள் மாணாக்கர்கள் 1931-ல் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரைத் தங்களுடையதாக ஏற்றுக்கொண்டபோது அது சொல்லமுடியாத சந்தோஷத்துக்குக் காரணமாயிருந்தது. அது சந்தோஷத்தை உண்டுபண்ணுவதாக மட்டுமல்லாமல், அது வெகுவாக உற்சாகமூட்டுவதாக இருந்தது. இதன் காரணமாகப் புதிதாகப் பெயரிடப்பட்ட பைபிள் மாணாக்கர்கள், ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொள்ளமுடியும்.—ஏசாயா 43:12-ஐ ஒப்பிடவும்.
9. மெய்க்கிறிஸ்தவர்கள் தாங்கள் யாருடைய சாட்சிகளாக இருக்கிறார்களோ அவரைக் குறித்து எவ்விதமாக உணருகிறார்கள்?
9 இதன் விளைவாக இன்று மெய்க்கிறிஸ்தவர்கள், பூமியின் மீது இங்கே இருந்தபோது அவர்களுடைய தலைவராகிய இயேசு கிறிஸ்து செய்தவிதமாகவே, தாங்கள் யாருக்கு முன்னுரைக்கப்பட்ட சாட்சிகளாக இருக்கிறார்களோ அவரை அடையாளங்கண்டுகொள்வதைப் பொருத்தமானதாகக் காண்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 1:1, 2) ஆம், அவர்கள் யெகோவா என்ற பெயரையுடைய ஒருவராக, அவரை மாத்திரமே அடையாளங் காண்பிக்கிறார்கள்.—சங்கீதம் 83:17.
சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்படுதல்
10–12. (எ) இயேசுவை பின்பற்றுகிறவர்கள் மீது கிரியை நடப்பிக்கும் சக்தியின் பாதிப்பு என்னவாக இருக்கும்? (பி) சந்தோஷத்தினால் ஏவப்பட்ட யெகோவாவின் சாட்சிகள், எவ்விதமாக ஒருவரையொருவர் நடத்த விரும்புகின்றனர்?
10 இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களிடம் விடைபெற்றுக் கொள்ளும்போது அவர்களிடம் சொன்னதாவது: “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.”—மத்தேயு 28:19, 20.
11 புதிதாகக் கற்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியின் நாமத்திலே முழுக்காட்டப்பட வேண்டியதாக இருந்தது. இந்தப் பரிசுத்த ஆவி ஓர் ஆள் அல்ல, ஆனால், யெகோவா தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாகப் பயன்படுத்தும் அவருடைய கிரியை நடப்பிக்கும் சக்தியாகும். பெந்தெகொஸ்தேவின் போது, யெகோவா தேவன் இயேசுவின் மூலமாக, இயேசு கிறிஸ்துவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட சீஷர்கள் மீது இந்தக் கிரியை நடப்பிக்கும் சக்தியை ஊற்றினார். (அப்போஸ்தலர் 2:33) அவர்கள் இந்தப் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள், பரிசுத்த ஆவியின் வெளிகாட்டுகள் அல்லது கனிகளில் ஒன்று சந்தோஷமாகும். (கலாத்தியர் 5:22, 23; எபேசியர் 5:18–20) சந்தோஷம் உற்சாகமூட்டும் ஒரு குணாதிசயமாகும். சீஷர்கள் பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தினால் நிரப்பப்பட வேண்டியவர்களாக இருந்தனர். அப்போஸ்தலனாகிய பவுலினுடைய ஜெபத்தின் வார்த்தைகள் வெகு பொருத்தமானவையாகும்: “பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.”—ரோமர் 15:13.
12 சந்தோஷத்தை உண்டுபண்ணும் இந்த ஆவியினால் நிறைந்தவர்களாய்த், “திரள் கூட்டத்தார்” உட்பட, இன்று யெகோவாவின் சாட்சிகள் இந்த நட்பற்ற காரிய ஒழுங்கின் மத்தியில் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த விரும்புவர், ஆம், தூண்டப்படுவர். ஆதலால் அப்போஸ்தலனாகிய பவுல் “உற்சாகப் பரிமாற்றத்தைப்” பற்றி பேசினான்.—வெளிப்படுத்துதல் 7:9, 10; ரோமர் 1:12,NW; 14:17.
உற்சாகமூட்டப்பட எல்லாக் காரணமும் இருக்கிறது
13. உற்சாகமூட்டப்படுவதற்கும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்கும் நமக்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
13 நீதியான எல்லாவற்றிற்கும் விரோதியானவனை அரசனாகவும் கடவுளாகவும் கொண்ட இந்தக் காரிய ஒழுங்கு முறையின் மத்தியில் கிறிஸ்தவர்கள் தங்களைக் காண்பவர்களாய், யெகோவாவின் பரிசுத்த ஆவி பரவியிருக்கும் உலகளாவிய கிறிஸ்தவ சபையினுள்ளே ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். (எபிரெயர் 10:24, 25; அப்போஸ்தலர் 20:28) உற்சாகமூட்டப்பட நமக்கு எல்லாக் காரணமுமுண்டு. ஆம், யெகோவாவையும் அவருடைய குமாரனையும் பற்றியும் அவர்கள் உபயோகிக்கும் கிரியை நடப்பிக்கும் சக்தியாகிய பரிசுத்த ஆவியைப் பற்றியும் திருத்தமான அறிவை கொண்டிருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! அவர்கள் கொடுக்கும் நம்பிக்கைக்காக நாம் எத்தனை நன்றியறிதலுள்ளவர்களாக இருக்கிறோம்! நம்முடைய வணக்கம் இவ்விதமாக சந்தோஷத்தினால் நிறைந்திருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல், தன் கடிதத்தை முகவரியிட்டிருந்த கிறிஸ்தவர்களிடம், அவர்களுடைய பரிசுத்த விசுவாசத்தில் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, ஒருவரையொருவர் கட்டியெழுப்பிக்கொண்டிருக்கவும் வேண்டும் என்று எழுதினான். ‘அடையாள அர்த்தத்தில் நாளானது சமீபித்து வருகிறதை அவர்கள் எவ்வளவாய்க் கண்டார்களோ அவ்வளவு அதிகமாய்’ இதைச் செய்யவேண்டியவர்களாக இருந்தனர். மேலுமாக இந்தப் பூமியின் அரசியல் அதிகாரங்கள், மற்ற எல்லாப் பொய் மதங்களோடும்கூட, பேர் கிறிஸ்தவத்தைப் பூமியிலிருந்து துடைத்தழிக்கும் போது, நிலைமை, நாம் ஒருவரையொருவர் இன்னுமதிகமாக உற்சாகப்படுத்துவதைத் தேவைப்படுத்தும்.
14. யார் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்? எவ்விதமாக?
14 தனிப்பட்ட சபைகளில் தங்களுடைய மந்தையை உற்சாகப்படுத்துவதில் மூப்பர்கள் முன்நின்று வழிநடத்திச் செல்கையில், எபிரெயர் 10:25 அறிவுறுத்துகிறபடியே எல்லாக் கிறிஸ்தவர்களும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவது அவசியமாயிருக்கிறது. உண்மையில் இது ஒரு கிறிஸ்தவ கட்டளையாகும். நீங்கள் ஒரு சபையின் அங்கத்தினராக இருந்தால், இந்த உற்சாகத்தை நீங்கள் கொடுக்கிறீர்களா? ‘நான் எவ்விதமாகச் செய்ய முடியும்? நான் என்ன செய்யலாம்?’ என்பதாக நீங்கள் யோசிக்கக்கூடும். மற்றவர்கள் உண்மையுடன் சபை கூட்டங்களில் ஆஜராயிருப்பதைப் பார்க்கையில் நீங்கள் தாமே உற்சாகமூட்டப்படுகிறவிதமாக உங்களுடைய உண்மையுள்ள சகிப்புத்தன்மையின் முன்மாதிரியாலும்கூட அவர்கள் உற்சாகப்படுத்தப்படலாம். வாழ்க்கையின் பிரச்னைகள் மற்றும் இன்னல்களின் மத்தியிலும் கிறிஸ்தவ வாழ்க்கைப் போக்கில் நீங்கள் தொடர்ந்திருந்து, ஒருபோதும் சோர்ந்துவிடாதிருந்தால், நீங்கள் உற்சாகமூட்டும் முன்மாதிரியை வைக்கலாம்.
பிசாசிடமிருந்து வரும் சோர்வை எதிர்த்துத் தடைசெய்யுங்கள்
15. பிசாசு ஏன் “மிகுந்த கோப”முடையவனாயிருக்கிறான்? யாருக்கு எதிராக?
15 யெகோவாவின் நாள் அருகாமையில் இருப்பதை அறிந்தவர்கள் நாம் மட்டுமே இல்லை. பிசாசாகிய சாத்தானும்கூட அறிந்திருக்கிறான். வெளிப்படுத்துதல் 12:12, “பிசாசானவன் தனக்குக் கொஞ்சக் காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால்” பூமிக்கு இப்பொழுது ஆபத்து என்று நமக்குச் சொல்லுகிறது. வெளிப்படுத்துதல் 12:17 குறிப்பிடுகிறபடியே அவனுடைய மிகுந்த கோபம், “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களு”மாயிருப்பவர்களுக்கு எதிராக திருப்பப்படுகிறது. பிசாசு நம்மைச் சோர்வடையச் செய்ய விரும்புகிறான் என்பதில் சந்தேகமில்லை! அதைச் செய்ய முயற்சி செய்வது எவ்வாறு என்பதை அவன் சரியாகவே அறிந்திருக்கிறான். அவன் நம்முடைய பலவீனங்களையும் பிரச்னைகளையும் அறிவான், இவைகளை அவன் பயன்படுத்திக்கொள்கிறான்.
16. சாத்தான் சோர்வை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்குக் காரணம் என்ன?
16 பிசாசு ஏன் சோர்வை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறான்? ஏனென்றால் அது அநேகமாக வெற்றியடைகிறது. நேரடியாக எதிர்ப்பையும் துன்புறுத்தலையும் சகித்திருக்கும் ஒரு நபரும்கூட சோர்வுக்குப் பலியாகிவிடக்கூடும். சாத்தான் யெகோவா தேவனை நிந்திக்கவும் அவரைச் சேவிப்பதிலிருந்து ஆட்களைத் தன்னால் திருப்பிவிட முடியும் என்பதை நிரூபிக்கவும் முயற்சி செய்ய விரும்புகிறான். (நீதிமொழிகள் 27:11; யோபு 2:4, 5-ஐ ஒப்பிடவும்; வெளிப்படுத்துதல் 12:10) அவன் உங்களைச் சோர்வடையச் செய்தால், கடவுளுக்குச் செய்யும் உங்கள் சேவையில் உங்கள் ஆர்வம் குன்றிப்போகும்படி அவன் செய்யக்கூடும். ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் செயலற்றவராக ஆகிவிட, அதை நீங்கள் நிறுத்திவிடவும் கூட அவன் செய்வான்.—2 கொரிந்தியர் 2:10, 11; எபேசியர் 6:11; 1 பேதுரு 5:8.
17. சோர்வின் எதிர்மறையான பாதிப்புகள் எவ்விதமாக மோசேயின் நாளில் தெளிவாக தெரிந்தது?
17 சோர்வின் எதிர்மறையான பாதிப்புகள், பூர்வ எகிப்தில் இஸ்ரவேலருடைய விஷயத்தில் கவனிக்கப்படலாம். மோசே பார்வோனிடம் பேசிய பிறகு, அந்தக் கொடுங்கோலன், அவர்களுடைய சுமைகளையும் அவனுடைய ஒடுக்குதலையும் தீவிரமாக்கினான். கடவுள், அவர்களை நிச்சயமாகவே விடுவித்து, தம்முடைய ஜனமாக்கி, அவர்களைத் தப்புவித்து, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் கொண்டுவருவார் என்பதாக இஸ்ரவேலருக்கு உறுதியளிக்கும்படியாக மோசேயிடம் சொன்னார். மோசே இதை இஸ்ரவேல் புத்திரரிடம் சொன்னான். ஆனால் யாத்திராகமம் 6:9 அறிவிப்பதாவது: “அவர்களோ மனமடிவினாலும் (சோர்வினாலும், NW) கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற்போனார்கள்.” யெகோவா மோசேக்கு நம்பிக்கையூட்டி அவனை உற்சாகப்படுத்தும் வரையாக இந்தப் பிரதிபலிப்பு, அவன் கட்டளையிடப்பட்டபடியே பார்வோனிடம் பேச விரும்புவதிலிருந்து மோசேயையும்கூட பின்வாங்கச் செய்தது.—யாத்திராகமம் 6:10–13.
18. பிசாசினால் உண்டுபண்ணப்படும் சோர்வை எதிர்த்து தடைசெய்வது கடவுளுடைய மக்களுக்கு ஏன் அதிகமாக தேவைப்படுகிறது?
18 சோர்வு கடவுளுடைய ஓர் ஊழியன் மீது கொண்டிருக்கக்கூடிய எதிர்மறையான பாதிப்பைப் பிசாசாகிய சாத்தான் நன்கு அறிவான். நீதிமொழிகள் 24:10 சொல்கிறபடியே: “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது.” முடிவு காலத்தின் முடிவில் நாம் வாழ்ந்துவருவதன் காரணமாக, நாம் ஆவிக்குரிய வகையில் பலமுள்ளவர்களாகவும் உறுதியுள்ளவர்களாகவும் இருப்பது அவசியமாகும். நம்மைப் பின்வாங்கச் செய்யும் நம்முடைய சொந்த அபூரணங்களோடும் பலவீனங்களோடும், குறைபாடுகளோடும் போராட வேண்டியிருப்பதே போதிய அளவு மோசமாக இருக்கிறது; ஆனால் சாத்தான் இந்தக் குறைகளைச் சுயநலத்துக்கு அனு கூலப்படுத்திக்கொள்ளும்போது, நமக்கு உதவி தேவையாகும்.
கிறிஸ்துவின் பலியின் மீது உறுதியாகச் சார்ந்திருங்கள்
19. சோர்வை எதிர்த்து தடுத்திட நமக்கு எது உதவி செய்யும்? ஏன்?
19 யெகோவா இயேசு கிறிஸ்துவின் மூலமாகச் சாத்தியமாக்கிய மீட்பின் ஏற்பாடே இந்த விஷயத்தில் பெரும் உதவியாக இருக்கிறது. மீட்பின் மீது உறுதியாகச் சார்ந்திருப்பதன் மூலம் நாம் மேற்கொள்கிறவர்களாக இருக்கமுடியும். இந்த ஏற்பாட்டை மட்டுப்படுத்துவது ஆபத்தானதாகும். ஆம், நாம் அபூரணராயிருக்கும் வரை இன்னும் தவறுகிறவர்களாக அல்லது பாவஞ்செய்கிறவர்களாகவே இருப்போம். ஆனால் நம்பிக்கை இல்லை என்பதாக நினைத்து நாம் சோர்வடைந்து, பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டு இவ்விதமாகச் சாத்தானுடைய கண்ணிக்குள் வீழ்ந்துபோக வேண்டிய அவசியமில்லை. பாவத்துக்கு ஒரு முழுமையான பலி நமக்கிருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். மீட்பின் கிரயத்தால் பாவங்களை நீக்கமுடியும். நாம் “திரள் கூட்டத்தாரைச்” சேர்ந்தவர்களாக இருந்தால், நாம் நம்முடைய வஸ்திரங்களை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெண்மையாக்க முடியும் என்ற முழு விசுவாசமும் நம்பிக்கையும் நமக்கிருக்க வேண்டும்.—வெளிப்படுத்துதல் 7:9, 14.
20. தேர்ச்சிமிக்க சோர்வூட்டுகிறனாகிய பிசாசை ஜெயிக்க முடியும் என்பதாக வெளிப்படுத்துதல் 12:11 எவ்விதமாக குறிப்பிடுகிறது?
20 வெளிப்படுத்துதல் 12:10-ல் சாத்தான் “இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்து”பவன் என்பதாக விவரிக்கப்பட்டிருக்கிறான். இப்பேர்ப்பட்ட பொல்லாத குற்றஞ்சாட்டுபவனையும் சோர்வுண்டாக்கும் கொடியவனையும் நாம் எவ்விதமாக ஜெயிக்க முடியும்? அந்த அதிகாரத்தின் 11-ம் வசனம் பதிலளிக்கிறது: “மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும், அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.” ஆகவே யெகோவாவின் மக்கள் மீட்பின் பலியில், ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் முழு நம்பிக்கை வைப்பது அவசியமாகும். சாட்சிக்கொடுத்தலினால் வரும் உற்சாகத்தைப் பலமாக வைத்துக்கொண்டு, உங்களால் கூடியவரை அனைவரோடும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை ஒழுங்காகப் பகிர்ந்துகொண்டிருங்கள்.
21. நாம் எவ்விதமாக கவனக்குறைவினால் நம்முடைய சகோதரர்களுக்கு சோர்வூட்டும் பிசாசினுடைய வேலையில் பங்குகொள்ளக்கூடும்?
21 சில சமயங்களில் கவனக்குறைவிலும்கூட, நம்முடைய சகோதரர்களுக்குச் சோர்வூட்டும் பிசாசினுடைய வேலையில் நாம் பங்குகொள்ளக்கூடும். எவ்விதமாக? அளவுக்கு அதிகமாகக் குற்றங்காண்கிறவர்களாக, அளவுக்கு அதிகமாக வற்புறுத்துகிறவர்களாக அல்லது அளவுக்கு மிஞ்சின நீதிமானாக இருப்பதன் மூலம். (பிரசங்கி 7:16) நம் அனைவருக்கும் குறைபாடுகளும் பலவீனங்களும் உண்டு. பிசாசு செய்வதைப் போல அவைகளை நாம் பயன்படுத்திக் கொள்ளாதிருப்போமாக. மாறாக, நம்முடைய சகோதரர்களைப் பற்றியும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தொகுதியாக யெகோவாவின் மக்களைப் பற்றியும் உற்சாகத்துடன் பேசுவோமாக. நாம் ஒருவரையொருவர் ஊக்குவித்துக்கொண்டிருக்க விரும்புகிறோம். ஆகவே ஒருவரையொருவர் ஊக்கங்கெடுத்துக் கொண்டில்லாமல் இருப்போமாக.
நாளானது சமீபித்துவருகையில் உற்சாகமூட்டுதல்
22, 23. (எ) உற்சாகத்தின் ஊற்றுமூலமாக இருப்பதை ஏன் வெறுமென சபை மூப்பர்களிடமே விட்டுவிடக்கூடாது? (பி) கிறிஸ்தவ சபையிலுள்ள கண்காணிகள் எவ்விதமாக உற்சாகப்படுத்தப்படலாம்?
22 நாளானது சமீபித்து வருகையில் எப்போதும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதை நம்முடைய உறுதியான தீர்மானமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். உங்கள் உண்மையுள்ள முன்மாதிரியினாலும் ஆறுதலான வார்த்தைகளினாலும் மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள். இந்த விஷயத்தில் யெகோவாவையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் பின்பற்றுங்கள். உற்சாகத்தின் ஊற்றுமூலமாக இருப்பதை வெறுமென சபை மூப்பர்களிடமே விட்டுவிடாதீர்கள். ஏன், மூப்பர்களுக்குந்தானே உற்சாகம் அவசியமாக இருக்கிறது. மந்தையிலுள்ள மற்றெல்லாரையும் போலவே அவர்களுக்கும் பலவீனங்களும் தவறிழைக்கும் இயல்புகளும் இருக்கின்றன, சீரழிந்துகொண்டிருக்கும் உலகில் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவதில் அதேப் பிரச்னைகள் அவர்களுக்கும் உண்டு. அதோடுகூட, அவர்கள் சபைகளைக் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்பதாக பவுல் விவரிக்கும் காரியத்தையும் கொண்டிருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 11:28, 29) அவர்களுடையது கடினமான வேலை—அவர்களுக்கு உற்சாகம் தேவை.
23 அப்பொழுது நீங்கள் எபிரெயர் 13:17-லுள்ள புத்திமதியைப் பின்பற்றுகிறவர்களாக இருப்பீர்கள்: “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.”
24. சோர்வான இந்நாட்களில், நாம் என்ன செய்துகொண்டிருக்க வேண்டும்? ஏன்?
24 சோர்வான நாட்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இயேசு முன்னறிவித்த வண்ணமாகவே, குடியிருக்கப்பட்ட பூமியின் மீது வர இருக்கும் காரியங்களை எதிர்பார்த்து பயந்து மனிதர்களின் இருதயங்கள் சோர்ந்து போயிருக்கின்றன. (லூக்கா 21:25, 26) சோர்வூட்டவும் ஊக்கங்கெடுக்கவும் இத்தனை அநேகப் பிரச்னைகள் இருப்பதால், “ஒருவரையொருவர் புத்திசொல்லக் [உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கக், NW] கடவோம். நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்.” 1 தெசலோனிக்கேயர் 5:11-லுள்ள அப்போஸ்தலனாகிய பவுலின் நல்ல ஆலோசனையைப் பின்பற்றுங்கள்: “நீங்கள் செய்து வருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்தி விருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.” (w90 12/15)
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ கிறிஸ்தவர்கள் முற்காலங்களைவிட அதிகமாக ஏன் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்?
◻ தெய்வீக நாமத்தைப் பற்றிய அறிவு யெகோவாவின் மக்களுக்கு எவ்விதமாக உற்சாகமூட்டுதலாக இருந்திருக்கிறது?
◻ என்னவிதங்களில், தனிப்பட்டவர்களாக நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த முடியும்?
◻ நம்முடைய சகோதரர்களுக்குச் சோர்வூட்டும் பிசாசின் வேலையில் பங்குகொள்வதை நாம் ஏன் தவிர்க்கவேண்டும்?
8. யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை கடவுளுடைய மக்கள் ஏற்றுக்கொண்டதன் பேரில் தொடர்ச்சியான பாதிப்பு என்னவாக இருந்திருக்கிறது?
[பக்கம் 17-ன் படம்]
மூப்பர்கள் தங்கள் சபைகளிலுள்ள மந்தையை உற்சாகப்படுத்துவதில் முன்நின்று வழிநடத்துகிறார்கள்