கேள்விப் பெட்டி
● இரண்டாவது புத்தகம் முடிப்பதற்கு முன்பே புதிய சீஷர்கள் முழுக்காட்டுதல் எடுத்துவிட்டாலும், அவர்களோடு இரண்டு புத்தகங்களை முழுமையாகப் படித்து முடிக்க வேண்டியது ஏன் முக்கியமாயிருக்கிறது?
சபைகளுக்குள் திரளாய் புதியவர்கள் வரும்படிச் செய்து யெகோவா தம்முடைய அமைப்பை ஆசீர்வதிக்கிறார். இந்தப் பெரிய கூட்டிச்சேர்த்தலை காண நாம் மகிழ்ச்சியடைகிறோம். என்றபோதிலும், இந்தச் செம்மறியாட்டைப் போன்ற ஆட்களுக்கு யெகோவாவை சேவிக்க கற்பதற்கு தொடர்ந்து உதவியும், வழிநடத்துதலும் தேவைப்படுகிறது என்பதை நாம் மதித்துணருகிறோம்.
சத்தியத்தைப் பற்றி திருத்தமான அறிவை அடைவதற்கு புதியவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. (கொலோ. 1:9, 10) பைபிளின் அடிப்படைக் கோட்பாடுகளையும், ஒழுக்கத் தராதரங்கள், கிறிஸ்தவ வாழ்க்கை மற்றும் அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் குறித்து பைபிள் என்ன போதிக்கிறது என்பதையும் பற்றி நன்கு புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவி செய்யும் சிலாக்கியம் நமக்கிருக்கிறது. இது அவர்கள் சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருக்கவும், எதிர்காலத்தில் வரும் பரீட்சைகளை மேற்கொள்ளவும் உதவி செய்யும்.
மாணாக்கர்கள் தங்கள் புரிந்துகொள்ளும் சக்திகளில் முழுமையான வளர்ச்சியும் அடையவேண்டும். (1 கொரி. 14:20) ஆவிக்குரிய விதத்தில் முழு வளர்ச்சியடைந்த மனிதனாவதற்குரிய நிலையை முயன்று அடைவதற்கு, ஓர் ஆசிரியரோடு தனிப்பட்ட பைபிள் படிப்பு உதவிசெய்யும் என்று அனுபவம் காட்டுகிறது. ஆக, ஓர் ஆள் இரண்டு புத்தகங்களைப் படித்து முடிப்பதற்கு முன்பே முழுக்காட்டுதல் பெற்றுவிட்டாலும், அவருடைய வீட்டு பைபிள் படிப்பு அவர் இரண்டு புத்தகங்களை படித்து முடிக்கும் வரைக்கும் தொடர வேண்டும் என்று ஞானம் கட்டளையிடுகிறது.
முழுக்காட்டுதலுக்குப் பிறகு
நாம் சீஷர்களை உண்டுபண்ண வேண்டும்—முழுக்காட்டி அவர்களுக்கு கற்பிக்கவேண்டும்—என்று இயேசு சொன்னார். (மத். 28:19, 20) சீஷர்களுக்கு அதிகமான போதனை முழுக்காட்டுதலை தொடர்ந்து செய்யப்படுகிறது. ஒரு நபர் வெறும் ஒரு புத்தகத்திலிருந்து பெறும் அறிவே அவருடைய ஆவிக்குரிய பயிற்சியை முழுமையாக்கப் பொதுவாகப் போதுமானதாயிராது. ஊழிய வேலைக்கு அவரைத் தகுதியாக்கவும் இந்தக் கடைசிநாட்களில் யெகோவாவை சேவிப்பவர்கள் மீது வரும் அழுத்தங்களை எதிர்ப்பதற்கும் அவரைத் தகுதியாக்கவும் கூடுதலான போதனை தேவை. போதுமான பயிற்சி கொடுக்கத் தவறுவது, தன் சொந்தத்தில் நிற்பதற்கு ஆவிக்குரிய விதத்தில் தயாரற்றவராக மாணாக்கரை விட்டு வைக்கும். புதிதான ஒருவர் முழுக்காட்டுதல் பெற்ற பின்பு, அவர் இரண்டு புத்தகங்களைப் படித்து முடித்துவிட்டாரோ அல்லது இல்லையோ அவர் இன்னும் முன்னேற்றமடைய நாம் தொடர்ந்து உதவிசெய்ய வேண்டும். அடிப்படையானவைகளின் பேரில் புரிந்துகொள்ளுதலை படிக்கப்பட்ட முதல் பிரசுரம் அளிக்கிறது. இரண்டாவது கிறிஸ்தவ குணாதிசயங்களைப் பற்றி சொல்லுகிறது. இந்தப் பிரசுரங்கள் என்றும் வாழலாம் புத்தகம் பிறகு வணக்கத்தில் ஐக்கியப்பட்டிருத்தல் அல்லது உண்மையான சமாதானம் புத்தகங்களாக இருக்கலாம். இந்தப் புத்தகங்கள் கிடைக்கவில்லையென்றால், இதேப் போன்ற தகவல்கள் அடங்கிய மற்றப் புத்தகங்களை உபயோகிக்கலாம். இரண்டாவது புத்தகம் முடிக்கும்வரை பைபிள் படிப்பைத் தொடருவது, யெகோவாவின் நோக்கங்களையும், அவருடைய உயர்ந்த கிறிஸ்தவ தராதரங்களையும், தேவைகளையும் பற்றி முழுமையானக் கல்வியை அளிக்கிறது. கிறிஸ்தவ நியமங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும், விசுவாசத்தில் உறுதியாக வேரூன்றியவர்களாகவும் இது புதியவர்களுக்கு உதவுகிறது. (கொலோ. 2:7) இப்பேர்ப்பட்ட படிப்புகளை அறிக்கையிடுவது பற்றி இன்னுமதிக விவரங்களுக்கும், தகவல்களுக்கும் டிசம்பர் 1987 நம் ராஜ்ய ஊழியம் இதழிலுள்ள கேள்விப் பெட்டியைப் பாருங்கள்.
முழுக்காட்டுதலுக்குப் பிறகு புதியவர்கள் ஆவிக்குரிய முன்னேற்றமடைய எதிர்பார்க்கப்படுகின்றனர் என்பது உண்மையே. (எபி. 6:1–3) அநேகருடைய விஷயங்களில், இரண்டாவது புத்தகத்தை முடிப்பதற்கு அதிக நேரம் எடுப்பதில்லை. இவ்விதமாக புதிய நபருக்கு ஓர் உறுதிவாய்ந்த அஸ்திபாரம் அளிக்கப்படுகிறது.