மீட்புவிலை தகப்பனிடமிருந்து கிடைத்த “மிகச் சிறந்த அன்பளிப்பு”
“நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும் . . . தகப்பனிடமிருந்து வருகின்றன.”—யாக். 1:17.
1. மீட்புவிலையால் என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கு இயேசுவின் மீட்புப் பலி வழிசெய்கிறது. உதாரணத்துக்கு, நீதியை நேசிக்கும் ஆதாமுடைய பிள்ளைகள் எல்லாரும், மீட்புவிலையின் அடிப்படையில், கடைசியில் கடவுளுடைய குடும்பத்தின் பாகமாக ஆகும் வாய்ப்பு இருக்கிறது. அதோடு, நாம் எல்லாரும் என்றென்றும் சந்தோஷமாக வாழும் வாய்ப்பும் இருக்கிறது. எல்லாவற்றையும்விட, பரலோகத்திலும் பூமியிலும் உள்ள எல்லாருக்கும் மிக முக்கியமாக இருக்கிற விஷயங்களோடு மீட்புவிலை சம்பந்தப்பட்டிருக்கிறது.—எபி. 1:8, 9.
2. (அ) இயேசு என்ன முக்கியமான விஷயங்களுக்காக ஜெபம் செய்யும்படி சொல்லிக்கொடுத்தார்? (ஆரம்பப் படம்) (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
2 தான் இறப்பதற்கு சுமார் 2 வருஷங்களுக்கு முன்பு, எப்படி ஜெபம் செய்வதென்று இயேசு தன்னுடைய சீஷர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்” என்று ஜெபம் செய்யும்படி சொல்லிக்கொடுத்தார். (மத். 6:9, 10) யெகோவாவுடைய பெயர் பரிசுத்தப்படுவதோடும், கடவுளுடைய அரசாங்கத்தில் கிடைக்கும் ஆசீர்வாதங்களோடும், கடவுளுடைய விருப்பம் நிறைவேறுவதோடும் மீட்புவிலை எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.
“உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்”
3. யெகோவாவுடைய பெயர் எதை எடுத்துக்காட்டுகிறது? சாத்தான் எப்படி யெகோவாவுடைய பெயரைக் கெடுத்தான்?
3 முதலாவதாக, “உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று இயேசு தன்னுடைய மாதிரி ஜெபத்தில் சொல்லிக்கொடுத்தார். யெகோவா யார், அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய பெயரே எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பிரபஞ்சத்திலேயே, அவர் ஒருவருக்குத்தான் அதிக சக்தி இருக்கிறது. அதுமட்டுமல்ல, அவரைவிட நீதியுள்ளவர் வேறு யாரும் இல்லை. இயேசு அவரை “பரிசுத்த தகப்பனே” என்றும் அழைத்தார். (யோவா. 17:11) யெகோவா பரிசுத்தமாக இருப்பதால், அவர் செய்யும் எல்லா விஷயங்களும், அவர் கொடுத்திருக்கிற எல்லா சட்டங்களும் பரிசுத்தமானதாக இருக்கிறது. ஆனால், ஏதேன் தோட்டத்தில் சாத்தான் தந்திரமாக ஒரு கேள்வியை எழுப்பினான்; அதாவது, மனிதர்களுக்குச் சட்டங்களைக் கொடுக்கும் உரிமை கடவுளுக்கு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினான். யெகோவாவைப் பற்றி பொய் சொல்லி, அவருடைய பரிசுத்த பெயரைக் கெடுத்தான்.—ஆதி. 3:1-5.
4. இயேசு எப்படிக் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தினார்?
4 இயேசு யெகோவாவுடைய பெயரை உண்மையிலேயே நேசித்தார். அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்குத் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார். (யோவா. 17:25, 26) தன்னுடைய நடத்தையின் மூலமும் போதனைகளின் மூலமும் யெகோவாவுடைய சட்டங்கள் சரியானவை, நியாயமானவை என்பதை மற்றவர்களுக்குப் புரிய வைத்தார். (சங்கீதம் 40:8-10-ஐ வாசியுங்கள்.) இயேசு மிகவும் கஷ்டப்பட்டு, வேதனைப்பட்டு சாகும்படி சாத்தான் செய்தாலும், அவர் யெகோவாவுக்குக் கடைசிவரை உண்மையோடு இருந்தார். ஒரு பரிபூரண மனிதனால் யெகோவாவுக்கு முழுமையான கீழ்ப்படிதலைக் காட்ட முடியும் என்பதை இயேசு நிரூபித்துக்காட்டினார்.
5. நாம் எப்படி யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தலாம்?
5 யெகோவாவுடைய பெயரை நேசிக்கிறோம் என்பதை நாமும் நம்முடைய நடத்தையின் மூலம் காட்டலாம். நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். (1 பேதுரு 1:15, 16-ஐ வாசியுங்கள்.) அதாவது, நாம் அவரை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், முழு இதயத்தோடு அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். நாம் துன்புறுத்தப்பட்டாலும், யெகோவாவுடைய சட்டங்களின்படி வாழ நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம்; இதன் மூலம், யெகோவாவுடைய பெயருக்குப் புகழ் சேர்க்கிறோம். (மத். 5:14-16) அவர் கொடுத்திருக்கும் சட்டங்கள் நம்முடைய நன்மைக்குத்தான் என்பதையும், சாத்தான் ஒரு பொய்யன் என்பதையும் நிரூபிக்கிறோம். ஆனால், சில சமயங்களில் நாம் தவறு செய்துவிடுகிறோம். பிறகு, உண்மையிலேயே மனம் திருந்துகிறோம், யெகோவாவுடைய பெயரைக் கெடுக்கும் விஷயங்களைச் செய்யாமல் இருக்கிறோம்.—சங். 79:9.
6. நாம் பாவிகளாக இருந்தாலும், யெகோவாவால் நம்மை ஏன் நீதிமான்களாகக் கருத முடிகிறது?
6 மீட்புவிலையில் விசுவாசம் வைப்பவர்களின் பாவங்களை யெகோவா மன்னிக்கிறார். இன்று, தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணிக்கும் எல்லாரையும் அவர் தன்னுடைய வணக்கத்தாராக ஏற்றுக்கொள்கிறார். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களையும் சரி, வேறே ஆடுகளையும் சரி, யெகோவா நீதிமான்களாகக் கருதுகிறார். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைத் தன்னுடைய மகன்களாகவும், ‘வேறே ஆடுகளை’ தன்னுடைய நண்பர்களாகவும் ஏற்றுக்கொள்கிறார். (யோவா. 10:16; ரோ. 5:1, 2; யாக். 2:21-25) அதனால், நாம் பாவிகளாக இருந்தாலும், மீட்புவிலையின் அடிப்படையில் நம்மால் இப்போதே யெகோவாவோடு நல்ல பந்தத்தை அனுபவிக்க முடிகிறது, அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தவும் முடிகிறது.
“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”
7. மீட்புவிலையால் என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
7 இரண்டாவதாக, “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” என்று இயேசு தன்னுடைய மாதிரி ஜெபத்தில் சொல்லிக்கொடுத்தார். கடவுளுடைய அரசாங்கத்தோடு மீட்புவிலை எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது? மீட்புவிலையின் அடிப்படையில்தான் 1,44,000 பேர் பூமியிலிருந்து பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். (வெளி. 5:9, 10; 14:1) இவர்கள் இயேசுவோடு சேர்ந்து ராஜாக்களாகவும் குருமார்களாகவும் பூமியில் இருப்பவர்களை 1,000 வருஷங்களுக்கு ஆட்சி செய்வார்கள். அந்தச் சமயத்தில், இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறுவதற்கும், எல்லா மனிதர்களும் பரிபூரணத்தை அடைவதற்கும் இவர்கள் உதவுவார்கள். பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற யெகோவாவுடைய ஊழியர்கள் ஒரே குடும்பமாக ஆவார்கள். (வெளி. 5:13; 20:6) பிறகு, இயேசு சாத்தானை அழித்துவிடுவார், அவனால் வந்த எல்லா பிரச்சினைகளையும் ஒழித்துக்கட்டுவார்.—ஆதி. 3:15.
8. (அ) கடவுளுடைய அரசாங்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள இயேசு எப்படித் தன்னுடைய சீஷர்களுக்கு உதவினார்? (ஆ) நாம் கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக இருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டுகிறோம்?
8 கடவுளுடைய அரசாங்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள இயேசு எப்படித் தன் சீஷர்களுக்கு உதவினார்? இயேசு ஞானஸ்நானம் எடுத்த உடனே, “கடவுளுடைய அரசாங்கத்தை பற்றிய நல்ல செய்தியை” எல்லா இடங்களிலும் பிரசங்கிக்க ஆரம்பித்தார். (லூக். 4:43) அதோடு, “பூமியின் எல்லைகள் வரையிலும்” தனக்குச் சாட்சிகளாக இருக்கும்படி தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். (அப். 1:6-8) பிரசங்க வேலையின் மூலம் மீட்புவிலையைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும், கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக ஆவதற்கும் இன்று எல்லா மக்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. நாம் கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக இருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டுகிறோம்? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை உலகம் முழுவதும் பிரசங்கிக்க, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு உதவுவதன் மூலம் இதைக் காட்டுகிறோம்.—மத். 24:14; 25:40.
‘உங்களுடைய விருப்பம் நிறைவேற வேண்டும்’
9. மனிதர்களுக்கான யெகோவாவுடைய நோக்கம் நிறைவேறும் என்று ஏன் உறுதியாகச் சொல்லலாம்?
9 மூன்றாவதாக, ‘உங்களுடைய விருப்பம் நிறைவேற வேண்டும்’ என்று இயேசு தன்னுடைய மாதிரி ஜெபத்தில் சொல்லிக்கொடுத்தார். அவர் அப்படிச் சொல்லிக்கொடுத்ததன் மூலம் எதை அர்த்தப்படுத்தினார்? யெகோவா ஒரு விஷயத்தைச் சொன்னால், அதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதை அவர் அர்த்தப்படுத்தினார். (ஏசா. 55:11) யெகோவாவுடைய விருப்பம் நிறைவேறுவதைச் சாத்தானால் தடுக்க முடியாது. மனிதர்களுக்கான யெகோவாவுடைய நோக்கம் என்னவாக இருந்தது? ஆதாம் ஏவாளுடைய பரிபூரண பிள்ளைகளால் இந்தப் பூமி நிரப்பப்பட வேண்டும் என்று யெகோவா விரும்பினார். (ஆதி. 1:28) ஒருவேளை ஆதாம் ஏவாள், பிள்ளைகள் இல்லாமல் செத்துப்போயிருந்தால், அவருடைய நோக்கம் ஒன்றுமே இல்லாமல் போயிருக்கும். அதனால், அவர்கள் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கு யெகோவா அனுமதித்தார். விசுவாசம் வைக்கிற எல்லாரும் பரிபூரணர்களாக ஆவதற்கும், என்றென்றும் வாழ்வதற்கும் மீட்புவிலை உதவுகிறது. யெகோவா மனிதர்களை நேசிக்கிறார்; தான் ஆரம்பத்தில் விரும்பியபடி அவர்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
10. இறந்தவர்களுக்கு மீட்புவிலையால் என்ன நன்மை கிடைக்கும்?
10 கோடிக்கணக்கான மக்கள் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்காமலேயே இறந்துபோயிருக்கிறார்கள். மீட்புவிலையின் அடிப்படையில் யெகோவா அவர்களை உயிர்த்தெழுப்புவார். அப்போது, தன்னைப் பற்றி தெரிந்துகொள்ளவும், என்றென்றும் வாழவும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார். (அப். 24:15) எல்லாரும் வாழ வேண்டும் என்றுதான் யெகோவா விரும்புகிறார், சாக வேண்டும் என்று விரும்புவதில்லை! யெகோவாதான் உயிரின் ஊற்று! இறந்தவர்களுக்கு அவர் மறுபடியும் உயிர் கொடுக்கும்போது, அவர் அவர்களுடைய தகப்பனாக ஆகிறார். (சங். 36:9) “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே” என்று இயேசு தன்னுடைய மாதிரி ஜெபத்தில் சொன்னது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! (மத். 6:9) இறந்தவர்களை உயிரோடு எழுப்பும் முக்கியமான வேலையை யெகோவா இயேசுவுக்குக் கொடுத்திருக்கிறார். (யோவா. 6:40, 44) அதனால்தான், “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்” என்று இயேசு சொன்னார்.—யோவா. 11:25.
11. ‘திரள் கூட்டமான மக்களுக்கு’ என்ன வாய்ப்பு இருக்கிறது?
11 “கடவுளுடைய விருப்பத்தின்படி நடக்கிறவர்தான் என் சகோதரர், என் சகோதரி, என் அம்மா” என்றும் இயேசு சொன்னார். (மாற். 3:35) எல்லா தேசங்களையும் கோத்திரங்களையும் மொழிகளையும் சேர்ந்த “எண்ண முடியாத திரள் கூட்டமான மக்கள்” தன்னுடைய வணக்கத்தாராக ஆக வேண்டும் என்பது யெகோவாவுடைய விருப்பம். இந்த “திரள் கூட்டமான மக்கள்” மீட்புவிலையில் விசுவாசம் வைக்கிறார்கள்; கடவுளுக்குக் கீழ்ப்படியவும் விரும்புகிறார்கள். “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற எங்கள் கடவுளாலும் ஆட்டுக்குட்டியானவராலும்தான் எங்களுக்கு மீட்பு கிடைக்கும்” என்று சொல்லி யெகோவாவைப் புகழ்கிறார்கள்.—வெளி. 7:9, 10.
12. இயேசுவுடைய ஜெபத்திலிருந்து மனிதர்களுக்கான யெகோவாவுடைய நோக்கத்தைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 இயேசு சொல்லிக்கொடுத்த ஜெபத்திலிருந்து யெகோவாவைப் பற்றியும் மனிதர்களுக்கான அவருடைய நோக்கத்தைப் பற்றியும் நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். (1) யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தவும் அவரை மகிமைப்படுத்தவும் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். (ஏசா. 8:13) இயேசுவுடைய மீட்புப் பலியின் மூலம்தான் நம்மால் மீட்புப் பெற முடிகிறது. அதோடு, அவருடைய தியாக மரணம் கடவுளுடைய பெயரை மகிமைப்படுத்துகிறது. சொல்லப்போனால், “யெகோவாவே மீட்பு” என்பதுதான் இயேசுவுடைய பெயரின் அர்த்தம். (2) மீட்புவிலையின் நன்மைகள் கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக யெகோவா தன்னுடைய அரசாங்கத்தைப் பயன்படுத்துவார். (3) யெகோவாவுடைய விருப்பம் நிறைவேறுவதை எதுவுமே தடுத்து நிறுத்த முடியாது என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம்.—சங். 135:6; ஏசா. 46:9, 10.
மீட்புவிலைக்கு நன்றியோடு இருங்கள்
13. நாம் ஞானஸ்நானம் எடுப்பது எதைக் காட்டுகிறது?
13 நம் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுப்பது, மீட்புவிலைக்காக நாம் நன்றியோடு இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான ஒரு முக்கிய வழியாக இருக்கிறது. இப்படிச் செய்வதன் மூலம், மீட்புவிலைமீது நமக்கு விசுவாசம் இருக்கிறது என்பதையும், நாம் “யெகோவாவுக்கு சொந்தமானவர்களாக” இருக்கிறோம் என்பதையும் காட்டுகிறோம். (ரோ. 14:8) நாம் ஞானஸ்நானம் எடுக்கும்போது, ‘நல்ல மனசாட்சியை’ தரும்படி யெகோவாவிடம் கேட்கிறோம். (1 பே. 3:21) மீட்புவிலையின் அடிப்படையில் நம்மைச் சுத்தப்படுத்துவதன் மூலம் நம்முடைய ஜெபத்துக்கு அவர் பதிலளிக்கிறார். தன்னுடைய எல்லா வாக்குறுதிகளையும் அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.—ரோ. 8:32.
மீட்புவிலைக்கு நாம் என்னென்ன வழிகளில் நன்றி காட்டலாம்? (பாராக்கள் 13, 14)
14. மற்றவர்கள்மீது அன்பு காட்ட வேண்டும் என்று யெகோவா ஏன் கட்டளை கொடுத்திருக்கிறார்?
14 அன்பால் தூண்டப்பட்டுதான் யெகோவா எல்லாவற்றையும் செய்கிறார். தன்னை வணங்குகிறவர்களும் தன்னைப் போலவே நடந்துகொள்ள வேண்டும் என்றும், ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். (1 யோ. 4:8-11) நாம் மக்களை நேசிக்கும்போது, “பரலோகத் தகப்பனுக்குப் பிள்ளைகளாக” இருக்க விரும்புகிறோம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறோம். அதோடு, யெகோவாவுடைய குடும்பத்தின் பாகமாக இருக்க விரும்புகிறோம் என்பதையும் காட்டுகிறோம். (மத். 5:43-48) மிக முக்கியமான இரண்டு கட்டளைகளில், யெகோவாமீது அன்பு காட்ட வேண்டும் என்பது முதலாம் கட்டளை; மற்றவர்கள்மீது அன்பு காட்ட வேண்டும் என்பது இரண்டாம் கட்டளை. (மத். 22:37-40) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மக்களுக்குக் கற்றுக்கொடுப்பது, அவர்கள்மீது அன்பு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கான ஒரு வழியாக இருக்கிறது. மற்றவர்களை நேசிக்க வேண்டும், முக்கியமாக, நம்முடைய சகோதர சகோதரிகளை நேசிக்க வேண்டும் என்ற யெகோவாவின் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிந்தால், நாம் அவர்மீது வைத்திருக்கும் அன்பு ‘முழுமையாகும்.’—1 யோ. 4:12, 20.
மீட்புவிலையால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
15. (அ) யெகோவா நமக்கு இன்று என்ன ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார்? (ஆ) எதிர்காலத்தில் என்ன ஆசீர்வாதங்களைக் கொடுப்பார்?
15 மீட்புவிலையில் விசுவாசம் வைக்கும்போது, நம் பாவங்களை ‘துடைத்தழிப்பதாக’ யெகோவா வாக்குக் கொடுக்கிறார். நம்முடைய பாவங்களை அவரால் முழுமையாக மன்னிக்க முடியும். (அப்போஸ்தலர் 3:19-21-ஐ வாசியுங்கள்.) நாம் ஏற்கெனவே பார்த்தபடி, மீட்புவிலையின் அடிப்படையில் சில மனிதர்களை யெகோவா தன்னுடைய மகன்களாகத் தத்தெடுக்கிறார். இவர்கள்தான் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள். (ரோ. 8:15-17) பூமியில் தன்னுடைய குடும்பத்தின் பாகமாக இருப்பதற்கு ‘வேறே ஆடுகளை’ யெகோவா அழைக்கிறார். இவர்கள் பரிபூரணத்தை அடைந்த பிறகு, கடைசியாக ஒரு முறை சோதிக்கப்படுவார்கள். அந்தச் சோதனையில் இவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால், யெகோவா இவர்களையும் தன்னுடைய பிள்ளைகளாகத் தத்தெடுப்பார். (ரோ. 8:20, 21; வெளி. 20:7-9) தன்னுடைய எல்லா பிள்ளைகள்மீதும் யெகோவா எப்போதும் அன்பு காட்டுவார். மீட்புவிலையால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும். (எபி. 9:12) மீட்புவிலை என்ற விலைமதிக்க முடியாத பரிசை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார்; இந்தப் பரிசை யாராலும் நம்மிடமிருந்து பறித்துவிட முடியாது.
16. நாம் விடுதலை ஆவதற்கு மீட்புவிலை எப்படி உதவுகிறது?
16 நாம் செய்யும் பாவங்களுக்காக மனம் திருந்தும்போது, கடைசியில், நாம் யெகோவாவுடைய குடும்பத்தின் பாகமாக ஆகிறோம்; இதைச் சாத்தானால் தடுத்து நிறுத்த முடியாது. நம்முடைய பாவங்களுக்காக இயேசு “ஒரே தடவை” இறந்தார். அதனால், மீட்புவிலை நிரந்தரமாகச் செலுத்தப்பட்டிருக்கிறது. (எபி. 9:24-26) ஆதாம் செய்த பாவத்தால் நமக்கு மரணம் வந்தது. ஆனால், இயேசுவின் மீட்புப் பலியால் நமக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கப்போகிறது. சாத்தானுடைய உலகத்திலிருந்தும் மரண பயத்திலிருந்தும் மீட்புவிலை நம்மை விடுதலை செய்கிறது.—எபி. 2:14, 15.
17. யெகோவா உங்கள்மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
17 கடவுளுடைய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும். யெகோவா ஏற்படுத்தியிருக்கும் இயற்கை சட்டங்கள் மாறுவதில்லை. அதே போல, யெகோவாவும் மாறவே மாட்டார். அவர்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை எப்போதும் வீண்போகாது. (மல். 3:6) உயிர் என்ற பரிசை யெகோவா நமக்காகக் கொடுத்திருக்கிறார். அதைவிட முக்கியமாக, அவருடைய அன்பை நம்மீது பொழிந்திருக்கிறார். “கடவுள் எங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம், அதை நம்பவும் செய்கிறோம். கடவுள் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோ. 4:16) யெகோவாவுடைய வாக்குறுதிகள் ஒருபோதும் பொய்யாகாது. சீக்கிரத்தில், இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறும். அங்கே வாழும் எல்லாரும் யெகோவாவைப் போல நடந்துகொள்வார்கள், ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுவார்கள். அப்போது, பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற யெகோவாவின் ஊழியர்கள் எல்லாரும் இப்படிச் சொல்வார்கள்: “புகழும் மகிமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் பலமும் என்றென்றும் எங்கள் கடவுளுக்கே சொந்தம். ஆமென்.”—வெளி. 7:12.