கடவுளுடைய அரசாங்கமே மேம்பட்டது
இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றினவர்களுக்கு பின்வருமாறு ஜெபம் செய்ய கற்றுத்தந்தார்: “நீங்கள் ஜெபம்பண்ண வேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் [அதாவது, அரசாங்கம்] வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9, 10) பரமண்டல ஜெபம் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த ஜெபம், கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் செய்யப் போகிறது என்பதை விளக்குகிறது.
முதலாவதாக, இந்த அரசாங்கம் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தும். சாத்தானும் மனிதனும் செய்த கலகத்தினால் அப்பெயருக்கு ஏற்பட்டிருக்கும் எல்லா களங்கத்தையும் நீக்கிவிடும். அப்படி நீக்குவது மிகமிக முக்கியம். ஏனென்றால், புத்தியுள்ள எல்லா ஜீவன்களின் சந்தோஷமும், கடவுளுடைய பெயரை பரிசுத்தமாகக் கருதுவதிலும் அவர் ஒருவரே தங்களை அரசாள தகுந்தவர் என்பதை மனமார ஏற்பதிலுமே அடங்கியிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 4:11.
அதோடுகூட, ‘கடவுளுடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதற்காகவும்’ அந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கடவுளுடைய சித்தமென்ன? ஆரம்பத்தில் கடவுளிடம் ஆதாமிற்கிருந்த அதே நெருக்கமான உறவை மீண்டும் மனிதகுலம் அனுபவிப்பதற்கு அந்த அரசாங்கம் வழிசெய்யும். பூங்காவன பரதீஸ் பூமியில் நல்ல ஜனங்கள் சதா காலம் வாழவேண்டும் என்ற சர்வலோக பேரரசரான யெகோவாவின் நோக்கத்தையும் அது நிறைவேற்றும். முதல் பாவத்தால் விளைந்த எல்லா துன்பங்களையும் நீக்கி, பூமி சம்பந்தமாக கடவுளுடைய அன்பான நோக்கத்தை அது நிறைவேற்றும். (1 யோவான் 3:8) அந்த அரசாங்கத்தைப் பற்றியும் அது செய்யப்போகும் மாற்றங்களைப் பற்றியுமே பைபிள் முக்கியமாகக் குறிப்பிடுகிறது.
எவ்விதங்களில் மேம்பட்டது?
கடவுளுடைய அரசாங்கம் என்பது உண்மையான ஓர் ஆட்சி முறையை அர்த்தப்படுத்துகிறது. அது அபார வல்லமை படைத்தது. அதன் வல்லமையைப் புரிந்துகொள்ள தானியேல் தீர்க்கதரிசி அதைப் பற்றிய சுருக்கமான கண்ணோட்டத்தை அளித்தார். பல வருடங்களுக்கு முன் அவர் இவ்வாறு முன்னுரைத்தார்: ‘பரலோகத்தின் தேவன் . . . ஒரு ராஜ்யத்தை [அரசாங்கத்தை] எழும்பப் பண்ணுவார் . . . அது . . . [மனித] ராஜ்யங்களையெல்லாம் [அரசாங்கங்களையெல்லாம்] நொறுக்கி நிர்மூலமாக்கும்.’ சரித்திரத்தில் மனித அரசாங்கங்கள் பல வந்து போயிருக்கின்றன. ஆனால், கடவுளுடைய அரசாங்கம், “என்றென்றைக்கும் அழியாத” ஓர் அரசாங்கம். (தானியேல் 2:44) இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல எல்லா அம்சங்களிலுமே கடவுளுடைய அரசாங்கம் மனித அரசாங்கங்களைவிட மேம்பட்டது.
கடவுளுடைய அரசாங்கத்தின் அரசர் மேம்பட்டவர்.
யார் அந்த அரசர்? தானியேல் தான் கண்ட ‘சொப்பனத்திலும் தரிசனங்களிலும்’ “மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர்” சர்வவல்லமையுள்ள கடவுளிடம் அழைத்துவரப்பட்டதையும் அவருக்கு “கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும்” கொடுக்கப்பட்டதையும் பார்த்தார். (தானியேல் 7:1, 13, 14) அந்த மனுஷகுமாரன் மேசியா எனப்படும் இயேசு கிறிஸ்துவே. (மத்தேயு 16:13-17) யெகோவா தம்முடைய சொந்த மகனான இயேசுவையே தம் அரசாங்கத்தின் அரசராக நியமித்திருக்கிறார். இயேசு பூமியில் இருந்தபோது பொல்லாதவர்களான பரிசேயர்களிடம், ‘தேவனுடைய ராஜ்யம் [அரசாங்கம்] உங்களுக்குள் இருக்கிறது’ என்றார். அந்த அரசாங்கத்தின் வருங்கால அரசர் அவர்கள் மத்தியில் இருப்பதை உணர்த்தவே இயேசு அப்படிச் சொன்னார்.—லூக்கா 17:21.
எந்த மனிதனாவது இயேசுவுக்கு இணையான ஓர் அரசராக ஆக முடியுமா? இயேசு பூமியில் இருந்தபோது நீதியான, நம்பகமான, இரக்கம் மிகுந்த தலைவராக தம்மை நிரூபித்தார். சுவிசேஷ பதிவுகளில், செயல் வீரராகவும் மிகுந்த கனிவும் ஆழமான உணர்ச்சிகளும் உடைய மனிதராகவும் அவர் சித்தரிக்கப்படுகிறார். (மத்தேயு 4:23; மாற்கு 1:40, 41; 6:31-34; லூக்கா 7:11-17) அதுமட்டுமல்ல உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு மனிதர்களைப் போல் இனி மரணத்திற்கு கீழ்ப்பட்டவருமல்ல, மற்ற வரம்புகளுக்கு உட்பட்டவருமல்ல.—ஏசாயா 9:6, 7.
இயேசுவும் அவருடன் ஆட்சி செய்பவர்களும் மேம்பட்ட இடத்திலிருந்து அரசாளுகிறார்கள்.
தானியேல் கண்ட சொப்பனத்திலும் தரிசனத்திலும் ‘ராஜரிகமும் ஆளுகையும் . . . பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டதை’ அவர் பார்த்தார். (தானியேல் 7:27) ஆம், இயேசு தனியாக ஆட்சி செய்வதில்லை. மற்ற அரசர்களுடனும் ஆசாரியர்களுடனும் சேர்ந்து ஆட்சி செய்கிறார். (வெளிப்படுத்துதல் 5:9, 10; 20:6) அவர்களைக் குறித்து அப்போஸ்தலன் யோவான் பின்வருமாறு எழுதினார்: ‘நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட . . . இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக் கண்டேன் . . . இவர்கள் பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.’—வெளிப்படுத்துதல் 14:1-3.
அரசராகியிருக்கும் இயேசு கிறிஸ்துவே அந்த ஆட்டுக்குட்டியானவர். (யோவான் 1:29; வெளிப்படுத்துதல் 22:3) இங்கு குறிப்பிடப்படும் சீயோன் மலை என்பது பரலோகத்தைக் குறிக்கிறது.a (எபிரெயர் 12:22) இயேசுவும் அவருடைய உடன் அரசர்களான 1,44,000 பேரும் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வார்கள். அது உண்மையிலேயே மேம்பட்ட ஓர் இடம்தான்! பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வதால் எல்லாவற்றையும் அவர்களால் பார்க்க முடியும். ‘தேவனுடைய ராஜ்யம்’ பரலோகத்திலிருந்து ஆளுவதால் அது ‘பரலோக ராஜ்யம்’ என்றும் அழைக்கப்படுகிறது. (லூக்கா 8:10; மத்தேயு 13:11) சொல்லப்போனால், எந்தப் போர் ஆயுதங்களாலும், அணு ஆயுதங்களாலும்கூட அந்தப் பரலோக அரசாங்கத்தை அண்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது. அதை எதிர்த்து வெற்றிகொள்ளவும் முடியாது. அது யெகோவாவின் நோக்கத்தை நிச்சயம் நிறைவேற்றும்.—எபிரெயர் 12:28.
கடவுளுடைய அரசாங்கத்திற்குப் பூமியில் நம்பகமான பிரதிநிதிகள் இருக்கிறார்கள்.
இது நமக்கு எப்படித் தெரியும்? சங்கீதம் 45:16-ல் ‘[நீர்] பூமியெங்கும் பிரபுக்களை வைப்பீர்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்க்கதரிசனத்தில் ‘நீர்’ என்ற வார்த்தை கடவுளுடைய குமாரனைக் குறிக்கிறது. (சங்கீதம் 45:6, 7; எபிரெயர் 1:7, 8) எனவே, இயேசு தாமே பிரபுக்களைப் பிரதிநிதிகளாக நியமிப்பார். இவர்கள் இயேசுவின் கட்டளைகளுக்கு நிச்சயம் கீழ்ப்படிவார்கள் என்பதில் உறுதியாக இருக்கலாம். இன்றும்கூட கிறிஸ்தவ சபையில் மூப்பர்களாகச் சேவிக்கும் தகுதிவாய்ந்த ஆண்கள், உடன் விசுவாசிகளை ‘இறுமாய்ப்பாய் ஆளுகிறவர்களாக’ இராமல் அவர்களைப் பாதுகாத்து, புத்துணர்ச்சி அளித்து, ஆறுதல்படுத்துபவர்களாக இருக்கும்படி கற்பிக்கப்படுகிறார்கள்.—மத்தேயு 20:25-28; ஏசாயா 32:2.
அரசாங்கத்தின் குடிமக்கள் உத்தமர்கள்.
கடவுளைப் பொறுத்தவரை அவர்கள் உத்தமர்கள், செவ்வையானவர்கள். (நீதிமொழிகள் 2:21, 22) “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 37:11) கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் சாந்தகுணமுள்ளவர்கள். அதாவது, செவிகொடுத்து கேட்பவர்கள், மனத்தாழ்மையுள்ளவர்கள், எளிமையானவர்கள், கனிவானவர்கள். ஆன்மீக விஷயங்களுக்கே அவர்கள் முக்கிய கவனம் செலுத்துகிறார்கள். (மத்தேயு 5:3, NW) சரியானதையே செய்ய விரும்புகிற அவர்கள் கடவுளுடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
கடவுளுடைய அரசாங்கத்தின் சட்டங்கள் மேம்பட்டவை.
இந்த அரசாங்கத்தின் சட்டங்களையும் நியமங்களையும் யெகோவா தேவனே கொடுத்திருக்கிறார். அவை நம்மை அநாவசியமாக கட்டுப்படுத்துவதில்லை. மாறாக, பயன் அளிப்பவையாகவே இருக்கின்றன. (சங்கீதம் 19:7-11) கடவுளுடைய நீதியான தராதரங்களின்படி வாழ்கிற அநேகர் இன்றே அவற்றின் பலன்களை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் என எல்லாரும் பைபிள் தரும் அறிவுரைகளுக்குக் கீழ்ப்படியும்போது சந்தோஷம் பெருகும். (எபேசியர் 5:33–6:3) “அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்ற கட்டளைக்குக் கீழ்ப்படியும்போது மற்றவர்களிடம் நமக்குள்ள உறவு பலப்படும். (கொலோசெயர் 3:13, 14) பைபிள் நியமங்களின்படி வாழும்போது, நாம் வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவோம். அதோடு, பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்க மாட்டோம். (நீதிமொழிகள் 13:4; 1 தீமோத்தேயு 6:9, 10) அதுமட்டுமல்ல, மிதமிஞ்சி குடிப்பதிலிருந்தும் பாலியல் ஒழுக்கக்கேட்டிலிருந்தும் புகையிலையைப் பயன்படுத்துவதிலிருந்தும் போதைப் பொருளுக்கு அடிமையாவதிலிருந்தும் விலகியிருப்பதால் நம் உடல் நலத்தைப் பாதுகாத்துக்கொள்கிறோம்.—நீதிமொழிகள் 7:21-23; 23:29, 30; 2 கொரிந்தியர் 7:1.
கடவுளுடைய அரசாங்கம் என்பது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஆட்சிமுறையாகும். மேசியாவாக இருக்கும் அதன் அரசரான இயேசு கிறிஸ்துவும் அவருடைய உடன் அரசர்கள் அனைவரும், கடவுளுடைய நீதியான சட்டங்களையும், அன்பின் அடிப்படையில் அவர் கொடுத்திருக்கும் நியமங்களையும் ஆதரிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். அந்த அரசாங்கத்தின் குடிமக்களும் பூமியிலுள்ள அதன் பிரதிநிதிகளும்கூட கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆக, அந்த அரசாங்கத்தின் அரசர்களும் சரி குடிமக்களும் சரி கடவுளைப் பிரியப்படுத்துவதையே முக்கியமென நினைக்கிறார்கள். எனவே, இந்த அரசாங்கத்தை உண்மையிலேயே கடவுளால் ஆளப்படும் அரசாங்கம் எனலாம். இது எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கத்தை நிச்சயம் நிறைவேற்றும். ஆனால், மேசியானிய அரசாங்கம் என்றும் அழைக்கப்படும் கடவுளுடைய அரசாங்கம் எப்போது ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறது?
ஆட்சி ஆரம்பமாகிறது
இந்த அரசாங்கத்தின் ஆட்சி எப்போது ஆரம்பிக்கிறது என்பதை இயேசுவின் வார்த்தைகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. “புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்” என்று அவர் சொன்னார். (லூக்கா 21:24) பூமியிலிருந்த நகரங்களிலேயே எருசலேம் நகரம் மட்டும்தான் கடவுளுடைய பெயருடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தது. (1 இராஜாக்கள் 11:36; மத்தேயு 5:35) கடவுள் அங்கீகரித்த பூமிக்குரிய அரசாங்கத்தின் தலைநகரமாக அது இருந்தது. அந்நகரத்தைப் புறஜாதிகள் மிதிக்கவிருந்தார்கள், அதாவது, கடவுள் தம் மக்களை ஆட்சி செய்வதை மனித அரசாங்கங்கள் தடைசெய்யவிருந்தன. இது எப்போது ஆரம்பிக்கவிருந்தது?
எருசலேமிலிருந்த யெகோவாவின் சிங்காசனத்தில் அமர்ந்த கடைசி அரசருக்கு இவ்வாறு சொல்லப்பட்டது: “பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு . . . உரிமைக்காரனானவர் வருமட்டும் அது இல்லாதிருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன்.” (எசேக்கியேல் 21:25-27) அந்தக் கடைசி அரசரின் கிரீடம் எடுத்துப்போடப்பட்டு, கடவுள் தம் மக்களை ஆட்சி செய்வது முடிவுக்கு வரவிருந்தது. இது பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர்கள் எருசலேமை அழித்தபோது நிறைவேறியது. எருசலேமின் அழிவிற்குப் பிறகு தொடங்கிய ‘புறஜாதியாரின் காலத்தின்’ போது தம்முடைய அரசாட்சியைப் பிரதிநிதித்துவம் செய்ய பூமியில் கடவுளுக்கு எந்த அரசாங்கமும் இருக்கவில்லை. அந்தக் காலப்பகுதி முடியும் சமயத்தில்தான் யெகோவா ‘உரிமைக்காரனான’ இயேசு கிறிஸ்துவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பார். அப்படியானால், புறஜாதியாரின் காலம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்?
பைபிளிலுள்ள தானியேல் புத்தகத்தில் காணப்படும் ஒரு தீர்க்கதரிசனம் அதைக் குறித்து இவ்வாறு சொல்கிறது: ‘இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு . . . ஏழு காலங்கள் அதன்மேல் கடந்துபோகட்டும்.’ (தானியேல் 4:23) இங்கு சொல்லப்பட்டிருக்கும் ‘ஏழு காலங்களும்’ ‘புறஜாதியாரின் காலமும்’ சமமான காலப்பகுதியைக் குறிக்கின்றன என்பதைப் பின்வரும் பாராக்களில் பார்ப்போம்.
பைபிளில், மரங்கள் சில சமயங்களில் நபர்களையும் ஆட்சியாளர்களையும் ஏன், ராஜ்யங்களையும்கூட அடையாளப்படுத்துகின்றன. (சங்கீதம் 1:3; எரேமியா 17:7, 8; எசேக்கியேல் 31-வது அதிகாரம்) அடையாள அர்த்தத்தில் பேசப்படும் இந்த மரத்தை ‘பூமியின் எந்த இடத்திலிருந்தும் பார்க்க முடியும்.’ (தானியேல் 4:11, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆகவே, வெட்டப்பட்டு விலங்கிடப்படவிருந்த அந்த மரம் பிரதிநிதித்துவம் செய்யும் ஆட்சி “தேசத்தின் [அதாவது, பூமியின்] எல்லைபரியந்தம்” எட்டியது; அது மனிதவர்க்கம் முழுவதையும் உட்படுத்தியது. (தானியேல் 4:17, 20, 22) எனவே, அந்த மரம் யெகோவாவின் உன்னத அரசாட்சியை முக்கியமாக, பூமியில் அவருடைய அரசாட்சியைப் பிரதிநிதித்துவம் செய்தது. இஸ்ரவேல் தேசத்திற்காக தாம் ஏற்படுத்திய அரசாங்கத்தின் மூலமாக சில காலத்துக்கு யெகோவா அரசாண்டார். அடையாள அர்த்தத்தில் பேசப்படும் அந்த மரம் வெட்டப்பட்டு அதன் வேர்களாகிய அடிமரம் வளராமல் இருப்பதற்காக இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டது. பொ.ச.மு. 607-ல் நடந்ததைப் போலவே, கடவுள் பூமியில் ஏற்படுத்திய அரசாங்கத்தின் ஆட்சி தடைப்பட்டதை அது அர்த்தப்படுத்தியது. ஆனால் அது நிரந்தரமாக தடைப்பட்டிருக்காது. அந்த மரம் ‘ஏழு காலங்கள்’ முடியும்வரை விலங்கிடப்பட்டிருக்கும். அந்தக் காலங்கள் முடிவடையும்போது உரிமைக்காரனான இயேசு கிறிஸ்துவிடம் யெகோவா ஆட்சி பொறுப்பை ஒப்படைப்பார். ஆக, இந்த ‘ஏழு காலங்களும்’ ‘புறஜாதியாரின் காலமும்’ ஒரே காலப் பகுதியைக் குறிப்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த “ஏழு காலங்கள்” எவ்வளவு நீண்ட காலப்பகுதி என்பதைப் புரிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவுகிறது. அது, காலம் [ஒரு காலம்], காலங்கள் [பன்மையில் சொல்லப்பட்டிருப்பதால் இரண்டு காலங்கள்], அரைக் காலம் என மொத்தம் மூன்றரை “காலங்கள்,” 1,260 நாட்களுக்கு சமம் என்று சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 12:6, 14) இந்த மூன்றரை காலங்களின் இரண்டு மடங்குதான் ஏழு காலங்கள் அதாவது, 2,520 நாட்கள்.
இந்த 2,520 நாட்களை பொ.ச.மு. 607-லிருந்து வெறும் நாட்களாகவே கணக்கிட்டால் பொ.ச.மு. 600-க்கு வந்து சேருவோம். ஆனால், அந்த ஏழு காலங்கள் அதைவிட நீண்ட காலப்பகுதியாக இருக்கிறது. இயேசு, ‘புறஜாதியாரின் காலத்தைப்’ பற்றி குறிப்பிட்டபோது அந்த “ஏழு காலங்கள்” முடிவடையவில்லை. அந்த ஏழு காலங்களுக்குத் தீர்க்கதரிசன அர்த்தம் இருப்பதால் வேதப்பூர்வ நியதியின்படி அந்த ‘ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு வருஷமாகக்’ கணக்கிட வேண்டும். (எண்ணாகமம் 14:34; எசேக்கியேல் 4:6) அப்படிப் பார்த்தால் உலக அரசாங்கங்கள் கடவுளுடைய தலையீடே இல்லாமல் பூமியை 2,520 வருடங்கள் ஆண்டன. எனவே, பொ.ச.மு. 607-லிருந்து 2,520 வருடங்களைக் கணக்கிட்டால் பொ.ச. 1914-ம் வருடத்தை அடைவோம். இந்த வருடத்தில்தான் “புறஜாதியாரின் காலம்,” அல்லது “ஏழு காலங்கள்” முடிவடைந்தன. அப்படியென்றால் இயேசு கிறிஸ்துவும் 1914-ல்தான் கடவுளுடைய அரசாங்கத்தின் அரசராக ஆட்சி செய்ய தொடங்கினார் என்பதை இது குறிக்கிறது.
‘உம்முடைய அரசாங்கம் வருவதாக’
‘உம்முடைய அரசாங்கம் வருவதாக’ என்று ஜெபிக்கும்படி மாதிரி ஜெபத்தில் இயேசு சொல்லிக்கொடுத்தார். ஆனால் மேசியானிய அரசாங்கம்தான் ஏற்கெனவே பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டதே, இப்போதும் அதற்காக ஜெபிக்க வேண்டுமா? (மத்தேயு 6:9, 10) ஆம், ஜெபிக்க வேண்டும். அந்த அரசாங்கம் வருவதற்காக கடவுளிடம் ஜெபிப்பது பொருத்தமானது மட்டுமல்ல நியாயமானதும்கூட. சீக்கிரத்தில் அவருடைய அரசாங்கம் இந்தப் பூமி முழுவதன் மீதும் ஆட்சிசெய்ய ஆரம்பிக்கும்.
அது நிறைவேறும்போது உத்தமமான மனிதகுலத்திற்கு கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்கள் பலகோடி! “தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து . . . அவர்களுடைய கண்ணீர் யாவையும் . . . துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது” என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 21:3, 4) அப்போது, “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24) கடவுளுக்குப் பிரியமாக நடந்துகொள்கிறவர்கள் நித்திய ஜீவனை பெறுவார்கள். (யோவான் 17:3) பைபிளிலுள்ள இந்த வாக்குறுதிகளும் மற்ற வாக்குறுதிகளும் நிறைவேறுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிற நாம் இந்தச் சமயத்தில் ‘முதலாவது தேவனுடைய, ராஜ்யத்தையும் [அரசாங்கத்தையும்] அவருடைய நீதியையும் தேடுவோமாக.’—மத்தேயு 6:33.
a பூமிக்குரிய சீயோன் மலை ஒருசமயம் எபூசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், இஸ்ரவேலை ஆண்ட தாவீது ராஜா அதை தன் தலைநகரமாக்குவதற்கு எபூசியர்களிடமிருந்து கைப்பற்றினார். (2 சாமுவேல் 5:6, 7, 9) அதுமட்டுமல்ல பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டியையும் இந்தத் தலைநகருக்கு கொண்டுவந்தார். (2 சாமுவேல் 6:17) அந்தப் பெட்டி யெகோவாவின் பிரசன்னத்தை அடையாளப்படுத்தியதால் சீயோன் மலை கடவுளுடைய இருப்பிடமென குறிப்பிடப்பட்டது. இவ்வாறு அது பரலோகத்திற்குப் பொருத்தமான அடையாளமாக இருந்தது.—யாத்திராகமம் 25:22; லேவியராகமம் 16:2; சங்கீதம் 9:11; வெளிப்படுத்துதல் 11:19.
யெகோவா தம்முடைய அரசாங்கத்திற்கு இயேசு கிறிஸ்துவை அரசராக நியமித்திருக்கிறார்