உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w97 10/1 பக். 25-29
  • உலக ஆவி உங்களை விஷப்படுத்துகிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலக ஆவி உங்களை விஷப்படுத்துகிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ராஜ்யத்தை முதலாவது தேடுவது
  • பொழுதுபோக்கை அதற்குரிய இடத்தில் வைக்கவும்
  • ஆவிக்குரிய அழகு யெகோவாவைப் பிரியப்படுத்துகிறது
  • உலகத்தின் ஆவியை நாம் எதிர்த்துப் போராட முடியும்!
  • ஓய்வு நேரத்துக்கும் ஓர் அளவு வேண்டும்
    நம் ராஜ்ய ஊழியம்—2001
  • உங்களுடைய கண் “தெளிவாயிருக்”கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • உங்களால் செய்ய முடிந்ததை நினைத்து சந்தோஷப்படுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • ஆன்மீக நபராக இருப்பதன் அர்த்தம் என்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
w97 10/1 பக். 25-29

உலக ஆவி உங்களை விஷப்படுத்துகிறதா?

செப்டம்பர் 12, 1990-ல் களக்ஸ்டான் தொழிற்சாலையில் திடீரென்று ஏதோ வெடித்தது. ஆபத்தான கதிரியக்கம் வளிமண்டலத்திற்குள் பாய்ந்தது; இது 1,20,000 உள்ளூர்வாசிகளின் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தியது, சாவுக்கேதுவான விஷத்துக்கு எதிராக போராடுவதற்காக அநேகர் தெருக்களுக்கு வந்தனர்.

கூடுதலான தகவல் வெளிவந்தபோது, பல பத்தாண்டுகளாக தாங்கள் விஷம் நிறைந்த ஒரு சூழலில் வாழ்ந்துகொண்டிருப்பதை அவர்கள் கண்டுப்பிடித்தார்கள். ஆண்டுகளினூடாக, 1,00,000 டன் கதிரியக்க கழிவுப்பொருட்கள் பாதுகாப்பு ஏற்பாடு ஏதுமின்றி திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ளன. ஆபத்து தங்கள் வாசற்படியில் இருந்தபோதிலும் யாருமே அதற்கு கவனம் செலுத்தவில்லை. ஏன் செலுத்தவில்லை?

ஒவ்வொரு நாளும் உள்ளூர் விளையாட்டு அரங்கத்தில், கதிரியக்கத்தின் அளவை அதிகாரிகள் அறிவிப்பு பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்; எந்த ஆபத்தும் இல்லை என்ற அபிப்பிராயத்தையே இது கொடுத்தது. இலக்கம் திருத்தமாக இருந்தது, ஆனால் அது காமா கதிரியக்கத்தின் அளவை மாத்திரமே காண்பித்தது. கணிக்கப்படாத ஆல்ஃபா கதிரியக்கமும் அதேபோன்ற ஆபத்தை விளைவிப்பதாக இருக்கலாம். தங்கள் பிள்ளைகள் ஏன் இந்தளவுக்கு நோய்வாய்ப்பட்டவர்களாக இருந்தனர் என்பதை அநேக தாய்மார்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

ஆவிக்குரிய விதமாக பேசுகையில், நாமும்கூட கண்ணுக்குப் புலப்படாத அசுத்தத்தினால் விஷப்படுத்தப்படலாம். களக்ஸ்டானிலுள்ள துர்பாக்கியசாலிகளான அந்த மனிதர்களைப் போலவே, பெரும்பாலானவர்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த ஆபத்தைக் குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர். பைபிள் இந்தத் தூய்மைக்கேட்டை, “உலகத்தின் ஆவி” என்பதாக அடையாளங்காட்டுகிறது; இதைத் தந்திரமாக கையாளுவது பிசாசாகிய சாத்தானே அன்றி வேறு எவரும் இல்லை. (1 கொரிந்தியர் 2:12) கடவுளுடைய எதிரி உலகின் இந்த ஆவியை—அல்லது எங்கும் வியாபித்திருக்கும் இந்த மனநிலையை—நம்முடைய தேவபக்தியை அழித்துப்போடுவதற்காக கெட்ட எண்ணத்தோடு பயன்படுத்திக்கொள்கிறான்.

உலகத்தின் ஆவி எவ்விதமாக நம்முடைய ஆவிக்குரிய பலத்தை பிழிந்தெடுத்துவிட முடியும்? கண்களின் இச்சையைத் தூண்டிவிடுவதன் மூலமாகவும் நம்முடைய உடன்பிறந்த குணமாகிய தன்னலத்தை அனுகூலப்படுத்திக் கொள்வதன் மூலமாகவுமே. (எபேசியர் 2:1-3; 1 யோவான் 2:16) உதாரணத்துக்கு, உலகப்பிரகாரமான சிந்தனை நம்முடைய ஆவிக்குரியத்தன்மையைப் படிப்படியாக விஷப்படுத்தும் மூன்று வித்தியாசமான பகுதிகளை நாம் சிந்திப்போம்.

ராஜ்யத்தை முதலாவது தேடுவது

இயேசு, ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும்படியாக’ கிறிஸ்தவர்களைத் துரிதப்படுத்தினார். (மத்தேயு 6:33) மறுபட்சத்தில் உலகத்தின் ஆவியானது நம்முடைய சொந்த அக்கறைகளுக்கும் செளகரியங்களுக்குமே அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்குமாறு நம்மை வழிநடத்தக்கூடும். ஒட்டுமொத்தமாக ஆவிக்குரிய அக்கறைகளை அசட்டை செய்வதாக இல்லாமல், அவற்றுக்கு இரண்டாவது இடத்தைக் கொடுப்பதுதானே ஆபத்தின் ஆரம்பமாயிருக்கிறது. பொய்யான ஒரு பாதுகாப்புணர்வின் காரணமாக நாம் களக்ஸ்டான் மக்களைப் போலவே, ஆபத்தை அசட்டைசெய்துவிடக்கூடும். நம்முடைய பல ஆண்டு கால உண்மையுள்ள சேவையும், நம்முடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுக்கான போற்றுதலும் நாம் ஒருபோதும் சத்தியத்தின் வழியைப் புறக்கணித்துவிடமாட்டோம் என்பதாக நினைக்கும்படியாக நம்மைச் செய்விக்கக்கூடும். ஒருவேளை எபேசு சபையிலிருந்த அநேகர் அவ்விதமாக உணர்ந்திருக்கலாம்.

ஏறக்குறைய பொ.ச. 96-ல் இயேசு அவர்களுக்கு பின்வரும் இந்தப் புத்திமதியைக் கொடுத்தார்: “நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.” (வெளிப்படுத்துதல் 2:4) நீண்ட காலமாக ஊழியஞ்செய்து வந்த இந்தக் கிறிஸ்தவர்கள் அநேக கஷ்டங்களை சகித்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 2:2, 3) அப்போஸ்தலன் பவுல் உட்பட உண்மையுள்ள மூப்பர்களால் அவர்கள் போதிக்கப்பட்டிருந்தார்கள். (அப்போஸ்தலர் 20:17-21, 27) இருந்தபோதிலும், ஆண்டுகளினூடாக, யெகோவாவுக்கான அவர்களுடைய அன்பு குறைந்துவிட்டது, அவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய உந்துவிக்கும் சக்தியின் வேகத்தை இழந்துவிட்டார்கள்.—வெளிப்படுத்துதல் 2:5.

எபேசியர்களில் சிலரை அந்த நகரின் வியாபாரமும் செழிப்பும் பாதித்தது என்பது தெரிகிறது. இன்றைய சமுதாயத்தின் பொருள்பற்றுள்ள நடைமுறை போக்கு சில கிறிஸ்தவர்களை திசைதிருப்பிவிட்டிருப்பது வருத்தத்திற்குரியதாகும். சொகுசான ஒரு வாழ்க்கையைக் கொண்டிருப்பதற்காக பாடுபடுவது ஆவிக்குரிய இலக்குகளிலிருந்து நம்மை திசைதிருப்பிவிடுவது நிச்சயம்.—மத்தேயு 6:24-ஐ ஒப்பிடுக.

இந்த ஆபத்தைக் குறித்து எச்சரிப்பவராக இயேசு இவ்வாறு சொன்னார்: “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், [“பொல்லாததாயிருந்தால்,” NW] [“பொறாமையுள்ளதாய்,” NW அடிக்குறிப்பு], உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.” (மத்தேயு 6:22, 23) “தெளிவான” ஒரு கண் என்பது ஆவிக்குரிய விதத்தில் ஒருமுகப்படுத்தப்பட்ட கண்ணாக, கடவுளுடைய ராஜ்யத்தில் பார்வையை பதிய வைத்த கண்ணாக இருக்கிறது. மறுபட்சத்தில், ஒரு “பொல்லாத” அல்லது “பொறாமையுள்ள” கண், குறுகிய பார்வையுடையதாக, உடனடியாக கிடைக்கும் மாம்ச இச்சைகளின்மீது மாத்திரமே ஒருமுகப்படுத்த முடிவதாக உள்ளது. ஆவிக்குரிய இலக்குகளும் எதிர்கால வெகுமதிகளும் அதனுடைய பார்வைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது.

இயேசு அதற்கு முந்தின வசனத்தில் இவ்வாறு சொன்னார்: “உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.” (மத்தேயு 6:21) நம்முடைய இருதயம் ஆவிக்குரிய காரியங்களிலா அல்லது பொருள் சம்பந்தமான காரியங்களிலா எதில் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் எவ்வாறு தெரிந்துகொள்ளலாம்? ஒருவேளை இதை அறிந்துகொள்ள மிகச் சிறந்த வழி நம்முடைய சம்பாஷணையாகும், ஏனென்றால், ‘இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.’ (லூக்கா 6:45) நாம் எப்போது பார்த்தாலும் பொருளாதார காரியங்களைப் பற்றி அல்லது உலகப்பிரகாரமான சாதனைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை காண்போமானால், நம்முடைய இருதயம் பிரிவுற்றிருப்பதற்கும் நம்முடைய ஆவிக்குரிய பார்வை குறையுள்ளதாய் இருப்பதற்கும் அது அத்தாட்சி அளிக்கிறது.

கார்மன் என்ற ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த ஒரு சகோதரி இந்தப் பிரச்சினையோடு போராடினார்.a “நான் சத்தியத்தில் வளர்க்கப்பட்டேன்” என்று கார்மன் விளக்குகிறார். “ஆனால் 18-வது வயதில் நான் என்னுடைய சொந்த நர்சரி பள்ளி ஒன்றை ஆரம்பித்தேன். மூன்று வருடங்களுக்குப் பிறகு, நான்கு பேரை வேலைக்கு அமர்த்தினேன், தொழில் பெருகியது, நிறைய பணம் சம்பாதித்துக்கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு கிடைத்த பொருளாதார சுதந்திரமும் ‘வெற்றிகரமாக’ நான் அதை நடத்திவந்ததுமே ஒருவேளை எனக்கு அதிக திருப்தியை அளித்தன. உண்மையை சொல்லவேண்டுமானால் என்னுடைய இருதயம் என் தொழிலில் இருந்தது—அதுவே என்னுடைய மிகப் பெரிய விருப்பமாக இருந்தது.

“பெரும்பாலான என்னுடைய நேரத்தை தொழில்சார்ந்த அக்கறைகளுக்காக அர்ப்பணித்து வந்தபோதிலும் நான் இன்னும் ஒரு சாட்சியாக இருக்க முடியும் என்பதாக நினைத்துக்கொண்டிருந்தேன். மறுபட்சத்தில், யெகோவாவை சேவிப்பதற்கு நான் அதிகத்தை செய்யமுடியும் என்ற உணர்வும் என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. கடைசியாக ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைக்கும்படியாக என்னைத் தூண்டியது பயனியர்களாக இருந்த இரண்டு சிநேகிதிகளின் முன்மாதிரியாகும். அவர்களில் ஒருத்தியான ஜூலியானா என்னுடைய சபையில் இருந்தாள். பயனியர் செய்யும்படியாக அவள் என்னை வற்புறுத்தவில்லை, ஆனால் அவளுடைய சம்பாஷணைகளும் அவள் தன்னுடைய ஊழியத்திலிருந்து தெளிவாக பெற்றுக்கொண்ட சந்தோஷமும் என்னுடைய சொந்த ஆவிக்குரிய மதிப்பீடுகளை மறுபரிசீலனைச் செய்துபார்ப்பதற்கு எனக்கு உதவியது.

“கொஞ்ச காலத்துக்குப் பின்பு, ஐக்கிய மாகாணங்களுக்கு விடுமுறையில் சென்றிருந்தபோது, ஒரு பயனியர் சகோதரியாக இருந்த குளோரியாவுடன் நான் தங்கினேன். சமீபத்தில் அவள் விதவையாகிவிட்டிருந்தாள்; அவள் தன்னுடைய ஐந்து வயதான மகளையும் புற்றுநோயாளியாக இருந்த தன் அம்மாவையும் கவனித்துக்கொண்டிருந்தாள். இருந்தபோதிலும் அவள் பயனியர் செய்தாள். அவளுடைய முன்மாதிரியும் ஊழியத்திற்கு அவள் காண்பித்த இருதயப்பூர்வமான போற்றுதலும் என் இருதயத்தை நெகிழவைத்தன. நான் அவளுடைய வீட்டில் தங்கி கழித்த அந்த நான்கு நாட்கள், என்னுடைய மிகச் சிறந்ததை யெகோவாவுக்கு கொடுக்கும்படியாக முடிவு செய்ய என்னைத் தூண்டின. முதலாவதாக நான் ஒரு ஒழுங்கான பயனியராக ஆனேன், சில வருடங்களுக்குப் பிற்பாடு என்னுடைய கணவரும் நானும் பெத்தேலில் சேவை செய்வதற்காக அழைக்கப்பட்டோம். என்னுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்துக்கு இடையூறாக இருந்த என்னுடைய தொழிலை விட்டுவிட்டேன். இப்பொழுது என்னுடைய வாழ்க்கை யெகோவாவின் பார்வையில் வெற்றிகரமாக இருப்பதாக நான் உணருகிறேன், இதுவே உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.”—லூக்கா 14:33.

கார்மன் செய்தது போல, ‘அதிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ள’ கற்றுக்கொள்வது நம்முடைய வேலை, கல்வி, வீடு, வாழ்க்கை பாணி ஆகியவற்றைக் குறித்து ஞானமான தீர்மானங்களைச் செய்ய நமக்கு உதவிசெய்யும். (பிலிப்பியர் 1:10, NW) ஆனால் பொழுதுபோக்கு விஷயத்தில்கூட நாம் அதிக முக்கியமான காரியங்களைக் குறித்து நிச்சயப்படுத்திக் கொள்கிறோமா? உலகத்தின் ஆவி மிகப் பெரிய அளவில் செல்வாக்கு செலுத்திடும் மற்றொரு பகுதியாக இது இருக்கிறது.

பொழுதுபோக்கை அதற்குரிய இடத்தில் வைக்கவும்

களைப்பாற்றிக்கொள்ளவும் ஓய்வெடுத்துக்கொள்ளவும் மக்களுக்கிருக்கும் இயல்பான ஆசையை உலகத்தின் ஆவி தந்திரமாக பயன்படுத்திக்கொள்கிறது. பெரும்பாலான ஆட்களுக்கு எதிர்காலத்தைக் குறித்த எந்த உண்மையான நம்பிக்கையும் இல்லாத காரணத்தால், அவர்கள் தற்போதுள்ள சமயத்தைக் கேளிக்கையாலும் பொழுதுபோக்காலும் நிரப்பிக்கொள்ள நாடுவதை புரிந்துகொள்ள முடிகிறது. (ஒப்பிடுக: ஏசாயா 22:13; 1 கொரிந்தியர் 15:32.) ஓய்வுநேரத்துக்கு அதிகமதிகமான முக்கியத்துவத்தை கொடுத்துக்கொண்டிருப்பதாக நாம் நம்மைக் காண்கிறோமா? உலக மக்களின் சிந்தனைக்கேற்ப நம்முடைய நோக்குநிலை மாறிக்கொண்டுவருவதற்கு அது ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “சிற்றின்பப்பிரியன் [“பொழுதுபோக்கு,” லாம்சா] தரித்திரனாவான்.” (நீதிமொழிகள் 21:17) கேளிக்கையில் மகிழ்வது தவறல்ல, ஆனால் அதை நேசிப்பது அல்லது ஓய்வுநேரத்தை அதிமுக்கியமானதாக கருதுவது ஆவிக்குரிய பற்றாக்குறைக்கு வழிநடத்தும். நம்முடைய ஆவிக்குரிய பசியார்வம் மந்தப்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும், நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு நமக்கு மிகக் குறைவான சமயமே இருக்கும்.

இந்தக் காரணத்துக்காகவே, கடவுளுடைய வார்த்தை, “பரிபூரண தன்னடக்கத்தோடு, மனம் செயலாற்ற ஆயத்தமாயிருக்கட்டும்” என்பதாக நமக்கு ஆலோசனை கொடுக்கிறது. (1 பேதுரு 1:13, தி நியூ இங்லிஷ் பைபிள்) நியாயமாக இருப்பதோடு நம்முடைய ஓய்வுநேரத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வதற்கு தன்னடக்கம் தேவையாக இருக்கிறது. செயலாற்ற ஆயத்தமாயிருப்பது என்பது அது படிப்போ, கூட்டங்களோ அல்லது வெளி ஊழியமோ அது எதுவாயிருப்பினும் ஆவிக்குரிய வேலைகளுக்கு ஆயத்தமாயிருப்பதை அர்த்தப்படுத்துகிறது.

தேவைப்படும் ஓய்வைப் பற்றி என்ன? களைப்பாற்றிக்கொள்ள கொஞ்சம் நேரத்தை நாம் செலவிடுகையில் நாம் குற்றமுள்ளவர்களாக உணரவேண்டுமா? நிச்சயமாக இல்லை. அழுத்தங்கள் நிறைந்த இன்றைய உலகில் ஓய்வு இன்றியமையாததாகும். இருந்தபோதிலும், ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாக, நம்முடைய வாழ்க்கை ஓய்வுநேரத்தை மையமாக கொண்டிருப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அளவுக்கு அதிகமான ஓய்வுநேரம் மிகக் குறைவான அளவில் அர்த்தமுள்ள வேலைகளைச் செய்வதற்கு நம்மை வழிநடத்தும். அது நம்முடைய அவசர உணர்வைக் குறைத்து தன்னல ஆசைகளைப் பூர்த்தி செய்வதில் மூழ்கிவிடவும்கூட நம்மை உற்சாகப்படுத்தலாம். அப்படியென்றால் ஓய்வெடுப்பதன் சம்பந்தமாக நாம் எவ்வாறு சமநிலையான ஒரு நோக்கை உடையவர்களாய் இருக்கமுடியும்?

விசேஷமாக உலகப்பிரகாரமான வேலை அவசியமற்றதாக இருக்குமானால் வருத்தத்தோடு அளவுக்கு அதிகமாக பாடுபடுவதைக் காட்டிலும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்வதையே பைபிள் சிபாரிசு செய்கிறது. (பிரசங்கி 4:6) ஓய்வெடுப்பது மறுபடியுமாக பலத்தைப் பெற்றுக்கொள்ள நம்முடைய சரீரங்களுக்கு உதவிசெய்வதாக இருந்தாலும், கடவுளுடைய கிரியை நடப்பிக்கும் சக்தியே ஆவிக்குரிய சக்தியின் ஊற்றுமூலமாகும். (ஏசாயா 40:29-31) நாம் இந்தப் பரிசுத்த ஆவியை நம்முடைய கிறிஸ்தவ வேலைகளின் சம்பந்தமாக பெற்றுக்கொள்கிறோம். தனிப்பட்ட படிப்பு நம்முடைய இருதயங்களுக்கு போஷாக்கை அளித்து சரியான ஆசைகளைத் தூண்டுகிறது. கூட்டங்களில் ஆஜராயிருப்பது நம்முடைய படைப்பாளரிடமாக போற்றுதலை வளர்க்கிறது. கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்வது மற்றவர்களிடமாக இரக்க உணர்ச்சிகொள்வதை உற்சாகப்படுத்துகிறது. (1 கொரிந்தியர் 9:22, 23) பவுல் மிகவும் யதார்த்தமாக விளக்கியவிதமாகவே, “எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.”—2 கொரிந்தியர் 4:16.

எலினா ஆறு பிள்ளைகளின் தாயாகவும், அவிசுவாசியான கணவரின் மனைவியாகவும் மிகவும் சுறுசுறுப்பான ஒரு வாழ்க்கையை நடத்திவருகிறாள். அவளுடைய சொந்தக் குடும்பத்தாருக்கும் மற்ற பல உறவினர்களுக்கும் செய்ய கடமைப்பட்ட பொறுப்புகள் அவளுக்கு இருக்கின்றன; இது எப்பொழுதும் பரபரப்போடு வேலைசெய்துகொண்டிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. இருந்தபோதிலும், அவள் பிரசங்க வேலையிலும் கூட்டத்துக்கு தயார் செய்வதிலும்கூட கவனிக்கத்தக்க ஒரு முன்மாதிரியை வைக்கிறாள். இத்தனை வேலைகளை அவளால் எப்படிச் செய்ய முடிகிறது?

“கூட்டங்களும் வெளி ஊழியமும் என்னுடைய மற்ற பொறுப்புக்களைச் சமாளிப்பதற்கு உண்மையில் எனக்கு உதவிசெய்கின்றன” என்பதாக எலினா விளக்குகிறாள். “உதாரணமாக, பிரசங்க வேலை செய்துவிட்டு வந்தபிறகு, என்னுடைய வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருக்கையில் எனக்கு யோசித்துப் பார்ப்பதற்கு அநேக காரியங்கள் இருக்கின்றன. அநேகமாக நான் பாடிக்கொண்டே வேலைசெய்வேன். மறுபட்சத்தில், நான் ஒரு கூட்டத்தை தவறவிட்டிருந்தாலோ அல்லது வெளி ஊழியத்தில் அதிகம் செய்யாதிருந்தாலோ வீட்டு வேலைகள் எனக்கு உண்மையில் கடினமாக இருக்கின்றன.”

பொழுதுபோக்கிற்கு கொடுக்கப்படும் அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்திலிருந்து என்னே ஒரு வேறுபாடு!

ஆவிக்குரிய அழகு யெகோவாவைப் பிரியப்படுத்துகிறது

உடல் தோற்றத்தைக் குறித்து அதிகமதிகமாக கவலைப்படுகிற உலகில் நாம் வாழ்ந்துவருகிறோம். தங்கள் தோற்றத்தை மேம்படுத்தி வயோதிபத்தின் விளைவுகளைக் குறைப்பதற்காக திட்டமிடப்பட்ட சிகிச்சைகளுக்காக மக்கள் ஏராளமான பணத்தைச் செலவழிக்கிறார்கள். தலைமுடியை மாற்றி பொருத்துதல், சாயம் பூசுதல், செயற்கை முறையில் மார்பழகை மேம்படுத்துதல், முகத்தின் சுருக்கத்தை நீக்கி இளமைப் பொலிவுப் பெறச்செய்தல் ஆகியவை இதில் அடங்கும். கோடிக்கணக்கானோர் எடை குறைப்பு மையங்களுக்கும், உடற்பயிற்சி நிலையங்களுக்கும், உடற்பயிற்சி வகுப்புகளுக்கும் செல்கின்றனர் அல்லது அவர்கள் உடற்பயிற்சியைக் கற்றுக்கொடுக்கும் வீடியோக்களையும் எடை குறைப்பதற்கு வழிகளைச் சொல்லும் புத்தகங்களையும் வாங்குகிறார்கள். உலகம், மகிழ்ச்சிக்கு முக்கியமாயிருப்பது நம்முடைய சரீர தோற்றமே என்றும் மற்றவர்களுக்கு முன்பாக நம்முடைய “இமேஜ்”தானே மிகவும் முக்கியமானது என்றும் நம்பும்படியாகச் செய்யும்.

ஐக்கிய மாகாணங்களில், நியூஸ்வீக் பத்திரிகை மேற்கோள் காட்டியிருந்த ஒரு சுற்றாய்வில், வெள்ளை அமெரிக்க பருவ வயதினரில் 90 சதவீதத்தினர், “தங்களுடைய உடல் தோற்றத்தைக்” குறித்து அதிருப்தியாக இருந்தனர் என்பதைக் காட்டியது. கட்டான உடலமைப்பை பெற அளவுக்கு அதிகமாக பாடுபடுவது நம்முடைய ஆவிக்குரியத் தன்மையைப் பாதிக்கக்கூடும். டோரா ஓரளவு பருமனாக இருந்த காரணத்தால் தன்னுடைய உடல் தோற்றத்தைக் குறித்து வெட்கப்பட்ட யெகோவாவின் ஒரு இளம் சாட்சியாக இருந்தாள். “நான் கடைக்குச் சென்றபோது, எனக்குப் பொருந்தும் உடைகளைக் கண்டுப்பிடிப்பது கடினமாக இருந்தது” என்று அவள் விளக்குகிறாள். “அதிக நேர்த்தியான உடைகள் ஒல்லியான பருவ வயதினருக்காகவே தயாரிக்கப்பட்டவை போல தோன்றியது. இன்னும் மோசமான காரியம், என்னுடைய பருமனைக் குறித்து மற்றவர்கள் கேலியாக பேசும்போது, விசேஷமாக இப்படி பேசுபவர்கள் என்னுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளாக இருக்கும்போது அது என்னை மிகவும் நிலைகுலைந்துபோகச் செய்தது.

“இதன் விளைவாக, ஆவிக்குரிய மதிப்பீடுகள் என்னுடைய வாழ்க்கையில் இரண்டாவது இடத்தைப் பெறும் அளவுக்கு நான் என்னுடைய தோற்றத்தைக் குறித்து அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறவளானேன். என்னுடைய இடை அளவே என்னுடைய மகிழ்ச்சியின் அளவை தீர்மானிப்பது போல இருந்தது. பல வருடங்கள் கடந்துவிட்டன, இப்பொழுது ஒரு வளர்ந்த பெண்ணாகவும் ஒரு கிறிஸ்தவளாகவும் நான் முதிர்ச்சியுள்ளவளாகவும் இருக்கிறேன்; நான் காரியங்களை வித்தியாசமான நோக்கில் காண்கிறேன். என்னுடைய தோற்றத்துக்கு நான் கவனம் செலுத்தினாலும், அதிக முக்கியத்துவமுடையது ஆவிக்குரிய அழகே என்பதை உணருகிறேன், அதுதானே எனக்கு மிகப்பெரிய மனதிருப்தியைக் கொடுக்கிறது. அதை நான் புரிந்துகொண்ட பிறகு, என்னால் ராஜ்ய அக்கறைகளை அதற்குரிய சரியான இடத்தில் வைக்க முடிந்தது.”

சாராள் இந்த சமநிலையான நோக்கை உடைய பண்டைய காலத்தைச் சேர்ந்த ஒரு உண்மையுள்ள பெண்ணாக இருந்தாள். அவளுக்கு 60 வயதுக்கும் மேலாக இருந்தபோது அவளுடைய உடல் அழகைப் பற்றி பைபிள் பேசியபோதிலும், அது அவளுடைய நேர்த்தியான குணங்களுக்கே—இருதயத்தில் மறைந்திருக்கிற குணங்களுக்கே—முக்கியமாக கவனத்தை இழுக்கிறது. (ஆதியாகமம் 12:11; 1 பேதுரு 3:4-6) அவள் மென்மையான, சாந்தமான மனநிலையைக் காண்பித்து, தன் கணவருக்கு அடங்கி கீழ்ப்படிந்திருந்தாள். சாராள் தன்னை மற்றவர்கள் எவ்விதமாக நோக்கினார்கள் என்பதைக் குறித்து அனாவசியமாக கவலைப்பட்டுக்கொண்டில்லை. செல்வம் மிகுந்திருந்த ஒரு பின்னணியிலிருந்து வந்தபோதிலும், அவள் 60-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கூடாரங்களில் மனமுவந்து வாழ்ந்துவந்தாள். அவள் சாந்தமாயும் தன்னலம் பாராமலும் தன் கணவனுக்கு ஆதரவாக இருந்தாள்; அவள் விசுவாசமுள்ள ஒரு பெண்ணாக இருந்தாள். அதுதானே அவளை உண்மையில் ஒரு அழகான பெண்ணாக ஆக்கியது.—நீதிமொழிகள் 31:30; எபிரெயர் 11:11.

கிறிஸ்தவர்களாக, நாம் நம்முடைய ஆவிக்குரிய அழகை மேம்படுத்திக் கொள்வதில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம்; அது ஒழுங்காக வளர்க்கப்பட்டால் வளர்ந்து நிலைத்திருக்கக்கூடிய ஒரு அழகாக இருக்கும். (கொலோசெயர் 1:9, 10) நம்முடைய ஆவிக்குரிய தோற்றத்தை இரண்டு முக்கிய வழிகளில் நாம் காத்துவரலாம்.

நம்முடைய உயிர் காக்கும் ஊழியத்தில் பங்குகொள்ளும்போது நாம் யெகோவாவின் பார்வையில் அதிக அழகுள்ளவர்களாகிறோம். (ஏசாயா 52:7; 2 கொரிந்தியர் 3:18–4:2) மேலுமாக, நாம் கிறிஸ்தவ குணங்களைக் காண்பிக்கக் கற்றுக்கொள்ளும்போது நம்முடைய அழகு இன்னும் கூடுகிறது. நம்முடைய ஆவிக்குரிய அழகை மேம்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன: “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள். கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். . . . ஆவியிலே அனலாயிருங்கள்; . . . உபசரிக்க நாடுங்கள். . . . சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள். . . . ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; . . . எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” (ரோமர் 12:10-18) இப்படிப்பட்ட மனநிலைகளை வளர்த்துக்கொள்கையில் அது கடவுளும் உடன் மனிதர்களும் நம்மீது பிரியமாயிருக்கும்படியாகச் செய்யும், சுதந்தரிக்கப்பட்ட நம்முடைய பாவமுள்ள மனச்சாய்வுகளின் அருவருப்பான தோற்றத்தை அது இயன்ற அளவு குறைத்துவிடும்.—கலாத்தியர் 5:22, 23; 2 பேதுரு 1:5-8.

உலகத்தின் ஆவியை நாம் எதிர்த்துப் போராட முடியும்!

தந்திரமான மிகப் பல வழிகளில், உலகத்தின் விஷமுள்ள ஆவி நம்முடைய உத்தமத்தை பலவீனப்படுத்திட முடியும். நமக்கிருப்பதில் அதிருப்தியுள்ளவர்களாகி, கடவுளுக்கு மேலாக நம்முடைய சொந்த தேவைகளையும் அக்கறைகளையும் வைப்பதற்கு அது நம்மை ஆவலுள்ளவர்களாக செய்திட முடியும். அல்லது ஓய்வு நேரத்துக்கும் உடல் தோற்றத்துக்கும் அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுத்து கடவுளுடைய சிந்தனைகளுக்குப் பதிலாக மனிதரின் சிந்தனைகளையே எண்ணிப்பார்க்கும்படியாக அது நம்மைச் செய்விக்கலாம்.—மத்தேயு 16:21-23-ஐ ஒப்பிடுக.

சாத்தான் நம்முடைய ஆவிக்குரியத்தன்மையை அழித்துப்போடுவதில் குறியாய் இருக்கிறான், உலகத்தின் ஆவி அவனுடைய முக்கிய ஆயுதங்களில் ஒன்றாகும். பிசாசானவனால், கெர்ச்சிக்கிற ஒரு சிங்கத்தினுடையதிலிருந்து தந்திரமுள்ள சர்ப்பத்தினுடையது வரையாக தன்னுடைய வியூகங்களை மாற்றிக்கொள்ளமுடியும் என்பது நினைவிலிருக்கட்டும். (ஆதியாகமம் 3:1; 1 பேதுரு 5:8) எப்போதாவது உலகம் ஒரு கிறிஸ்தவனை கொடூரமான துன்புறுத்தலின் மூலமாக ஜெயங்கொள்ளுகிறது, ஆனால் அடிக்கடி அது அவனை படிப்படியாகவே விஷப்படுத்துகிறது. இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட ஆபத்தைக் குறித்து பவுல் அதிக கவலையுள்ளவராக இருந்தார்: “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.”—2 கொரிந்தியர் 11:3.

சர்ப்பத்தின் தந்திரத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு, “உலகத்தினாலுண்டான” பிரச்சாரங்களை நாம் அடையாளம் கண்டுகொள்வதும் பின்னர் அதை உறுதியாக நிராகரித்துவிடுவதும் அவசியமாகும். (1 யோவான் 2:16) உலகப்பிரகாரமாக சிந்திப்பது தீங்கற்றது என்பதாக நினைத்து நாம் ஏமாந்துபோகக்கூடாது. சாத்தானுடைய ஒழுங்குமுறையின் விஷத்தன்மையுள்ள காற்று அபாய அளவுகளை எட்டிவிட்டது.—எபேசியர் 2:2.

உலகப்பிரகாரமான சிந்தனையை நாம் அடையாளம் கண்டுகொண்டுவிட்டால், நம்முடைய மனங்களையும் இருதயங்களையும் யெகோவாவின் தூய்மையான போதனைகளால் நிரப்புவதன் மூலமாக அதை சமாளித்துவிடலாம். தாவீது ராஜாவைப் போல நாம் பின்வருமாறு சொல்லுவோமாக: “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும், நீரே என் இரட்சிப்பின் தேவன்.”—சங்கீதம் 25:4, 5.

[அடிக்குறிப்புகள்]

a மாற்றுப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

[பக்கம் 26-ன் படம்]

சொகுசான வாழ்க்கைக்காக பாடுபடுவது ஆவிக்குரிய இலக்குகளிலிருந்து நம்மை திசைத்திருப்பிவிடக்கூடும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்