‘சாலொமோன் அவற்றில் ஒன்றைப் போல் உடுத்தியிருந்ததில்லை’
இங்கே நீங்கள் பார்ப்பதைப் போன்ற காட்டுப் புஷ்பங்கள் தென் ஆப்பிரிக்க சாலையோரங்களை அலங்கரிக்கின்றன. சர்வ சாதாரணமாய் காணப்படும் இந்தப் புஷ்பங்கள் காஸ்மாஸ் என அழைக்கப்படுகின்றன; அவற்றின் பிறப்பிடம் வெப்பமண்டல அமெரிக்கா. இந்தக் கண்கவர் பூக்களை பார்க்கும்போது இயேசு புகட்டிய பாடம் ஒன்று உங்களுடைய மனத்திரையில் ஓடலாம். இயேசுவின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த பலர் ஏழை எளியவர்களே, ஆகவே சரீர தேவைகளைப் பற்றிய, அதாவது உணவையும் உடையையும் பற்றிய கவலை அவர்களை கவ்வியிருந்தது.
‘உடைக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?’ என்று இயேசு கேட்டார். “காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை” என்றார்.—மத்தேயு 6:28, 29.
இயேசு எந்த விதமான காட்டுப் புஷ்பத்தைப் பற்றி பேசினார் என்பதைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் அதை சாதாரண தாவரத்தோடு இயேசு ஒப்பிட்டுப் பேசினார்; “அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” என்றார்.—மத்தேயு 6:30.
காஸ்மாஸின் பூர்வீகம் இஸ்ரவேல் அல்ல என்றாலும், அவை நிச்சயமாக இயேசு கற்பித்த பாடத்தை உறுதிப்படுத்துகின்றன. எட்ட இருந்து பார்த்தாலும்சரி கிட்ட இருந்து பார்த்தாலும்சரி, அவை கண்களுக்கு விருந்தளிக்கின்றன. புகைப்பட பிரியர்களுக்கும் ஓவியக் கலைஞர்களுக்கும் பிடித்தமானவை அவை. ஆகவே, “சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை” என்று இயேசு சொன்னது மிகையல்ல.
இன்று நமக்கு என்ன பாடம்? தம்மை சேவிப்போருக்கு தேவையானவற்றை கஷ்ட காலங்களிலும்கூட கடவுள் தருவார் என்பதில் உறுதியுடன் இருக்கலாம். “தேவனுடைய ராஜ்யத்தையே [“தொடர்ந்து,” NW] தேடுங்கள், அப்பொழுது [தேவையான உணவு, உடை போன்ற] இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” என்று இயேசு விளக்கினார். (லூக்கா 12:31) ஆம், கடவுளுடைய ராஜ்யத்தைத் தேடுவதிலேயே சிறந்த நன்மைகள் கிடைக்கும். ஆனால் கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன, அது மனிதகுலத்திற்கு என்ன செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தக் கேள்விகளுக்குரிய பதில்களை பைபிளிலிருந்து கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கு உதவி செய்ய யெகோவாவின் சாட்சிகள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.