வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
நற்செய்தியை அறிவிக்க தம்முடைய 12 சீடர்களை இயேசு கிறிஸ்து அனுப்பியபோது, தடிகளை எடுத்துக்கொண்டு, காலணிகளைப் போட்டுக்கொண்டு போகும்படி சொன்னாரா?
நற்செய்தியை அறிவிக்க தம்முடைய சீடர்களை இயேசு அனுப்பியதைப் பற்றிக் குறிப்பிடுகிற மூன்று சுவிசேஷப் பதிவுகளும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகச் சிலர் வாதாடுகிறார்கள். ஆனால், இந்தப் பதிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆர்வத்திற்குரிய ஒரு விஷயத்தை அறிந்துகொள்கிறோம். முதலாவதாக, மாற்குவும் லூக்காவும் எழுதியதை ஒப்பிட்டுப் பார்ப்போம். மாற்குவின் பதிவு இவ்வாறு சொல்கிறது: “பயணத்திற்காக ஒரு தடியைத் தவிர, ரொட்டி, பை, காசு என எதையுமே எடுத்துக்கொண்டு போகாதீர்கள்; காலணிகளைப் போட்டுக்கொள்ளுங்கள், ஆனால் இரண்டு உள்ளங்கிகளைக் கொண்டுபோகாதீர்கள்’ என்றெல்லாம் [இயேசு] கட்டளைகள் கொடுத்தார்.” (மாற். 6:7-9) லூக்காவின் பதிவு இவ்வாறு சொல்கிறது: “பயணத்திற்காகத் தடி, பை, ரொட்டி, வெள்ளிக்காசு என எதையுமே எடுத்துக்கொண்டு போகாதீர்கள்; இரண்டு உள்ளங்கிகளையும் கொண்டுபோகாதீர்கள்.” (லூக். 9:1-3) முரண்படுவதுபோல் தோன்றும் குறிப்பை இங்கே பார்க்கிறோம். ஒரு தடியை எடுத்துக்கொண்டு, காலணிகளைப் போட்டுக்கொண்டு போகும்படி சீடர்களிடம் இயேசு சொன்னதாக மாற்கு எழுதினார். ஆனால், எதையுமே எடுத்துக்கொண்டு போகாதிருக்கும்படி, சொல்லப்போனால் ஒரு தடியைக்கூட எடுத்துக்கொண்டு போகாதிருக்கும்படி, சீடர்களிடம் அவர் சொன்னதாக லூக்கா எழுதினார். காலணிகளைப் பற்றி மாற்கு குறிப்பிட்டார், ஆனால் லூக்கா அதைப் பற்றி குறிப்பிடவில்லை.
அந்தச் சமயத்தில் இயேசு சொன்னதன் கருத்தைப் புரிந்துகொள்ள, மூன்று சுவிசேஷப் பதிவுகளிலும் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் கவனியுங்கள். மேலே சொல்லப்பட்டுள்ள வசனங்களிலும் மத்தேயு 10:5-10-லும் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “இரண்டு உள்ளங்கிகளை” அணியவோ எடுத்துக்கொண்டு போகவோ வேண்டாமென சீடர்களிடம் சொல்லப்பட்டது. அந்தச் சீடர்கள் ஏற்கெனவே ஓர் உள்ளங்கியை அணிந்திருந்தார்கள். எனவே, பயணத்திற்காக மற்றொன்றை அவர்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டியதில்லை. அதேபோல, அவர்கள் ஏற்கெனவே காலணிகளை அணிந்திருந்தார்கள். மாற்குவும்கூட காலணிகளைப் ‘போட்டுக்கொள்ளும்படி,’ அதாவது அவர்களிடம் இருந்த காலணிகளையே ‘போட்டுக்கொள்ளும்படி’ சொன்னார். தடியைப் பற்றி என்ன சொல்லலாம்? த ஜூயிஷ் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “பொதுவாகவே தடியை எடுத்துக்கொண்டு போவது பூர்வ எபிரெயர்களுடைய பழக்கமாக இருந்ததாய்த் தெரிகிறது.” (ஆதி. 32:10) எனவேதான் சீடர்கள் தங்களிடம் ஏற்கெனவே இருந்த தடியைத் தவிர ‘பயணத்திற்காக . . . எதையுமே எடுத்துக்கொண்டு போகாதிருக்கும்படி’ இயேசு சொன்னதாக மாற்கு எழுதினார். ஆகவே, பயணத்திற்காக எதையும் கூடுதலாக எடுத்துக்கொண்டு போகாதிருக்கும்படி இயேசு கொடுத்த அறிவுரையைச் சுவிசேஷ எழுத்தாளர்கள் வலியுறுத்தினார்கள்.
இயேசு கொடுத்த இந்தக் கட்டளையை நேரில் கேட்ட மத்தேயு இதை மேலும் வலியுறுத்தும் விதத்தில் எழுதினார். “தங்கம், வெள்ளி, அல்லது செப்புக் காசுகளை [சம்பாதித்து] உங்களுடன் எடுத்துச் செல்லாதீர்கள். பயணத்திற்காக உணவுப் பையையோ உள்ளங்கிகளையோ காலணிகளையோ தடியையோ எடுத்துச் செல்லாதீர்கள்; ஏனென்றால், வேலை செய்கிறவன் தன் உணவைப் பெறத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்” என்று இயேசு சொன்னார். (மத். 10:9, 10) சீடர்கள் ஏற்கெனவே அணிந்திருந்த காலணிகளையும் வைத்திருந்த தடிகளையும் பற்றி என்ன சொல்லலாம்? அவற்றையெல்லாம் சம்பாதிக்க வேண்டாமென இயேசு சொன்னாரே தவிர அவர்களிடம் ஏற்கெனவே இருந்தவற்றை தூக்கியெறிந்துவிட்டுச் செல்லும்படி அவர் சொல்லவில்லை. அவர் ஏன் அத்தகைய கட்டளையைக் கொடுத்தார்? ஏனென்றால், “வேலை செய்கிறவன் தன் உணவைப் பெறத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.” இயேசு கொடுத்த கட்டளையின் முக்கியக் குறிப்பே இதுதான்; இது, மலைப் பிரசங்கத்தில் அவர் கொடுத்த அறிவுரைக்கு, அதாவது சாப்பிடுவது, குடிப்பது அல்லது உடுத்துவது சம்பந்தமாக கவலைப்பட வேண்டாமென சொன்னதற்கு, இசைவாக இருந்தது.—மத். 6:25-32.
மேலோட்டமாக வாசிக்கையில் இந்தச் சுவிசேஷப் பதிவுகள் முரண்படுவதுபோல் தோன்றினாலும் அவை எல்லாமே ஒரு குறிப்பையே வலியுறுத்தின. அதாவது, சீடர்கள் தங்களிடம் உள்ளதை மட்டுமே எடுத்துக்கொண்டு போக வேண்டும், கூடுதலாக எதையும் சம்பாதித்து எடுத்துக்கொண்டு போகக்கூடாது. ஏன்? ஏனென்றால் அவர்களுக்குத் தேவையானதை யெகோவா அளிப்பார்.