‘எதிர் காற்று வீசும்போது’
கலிலேய கடலை கடப்பதற்கு இயேசுவின் சீஷர்கள் போராடியதை விவரிக்கையில், சுவிசேஷ எழுத்தாளராகிய மாற்கு இவ்வாறு சொல்கிறார்: ‘எதிர் காற்று வீசியதால், தண்டு வலிப்பதில் அவர்கள் கஷ்டப்பட்டார்கள்.’ இயேசு இன்னும் கடற்கரையிலேயே இருக்கையில், அவர்களுடைய கஷ்டத்தைப் பார்த்து, அவர்களை நோக்கி அற்புதகரமாக கடலில் நடந்து சென்றார். ‘அவர்கள் இருந்த படகில் [இயேசு] ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது.’—மாற்கு 6:48-51.
இதே பைபிள் எழுத்தாளர் இதற்கு முன்பு நடந்த சம்பவத்தை விவரிக்கையில், ‘பலத்த சுழல்காற்று உண்டானது’ என்று சொன்னார். உடனே இயேசு, ‘காற்றை அதட்டினார், . . . அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.’—மாற்கு 4:37-39.
இப்பேர்ப்பட்ட அற்புதகரமான நிகழ்ச்சிகளை பார்க்கும் பாக்கியம் இன்று நமக்கு இல்லாதபோதிலும், அந்தப் பதிவிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். மிகவும் ஆபத்தான காலத்தில் வாழ்ந்துவருகிற அபூரண மானிடர்களாகிய நாம் துன்பப் புயலுக்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. (2 தீமோத்தேயு 3:1-5) சொல்லப்போனால், சிலசமயங்களில் நாம் எதிர்ப்படும் சோதனைகள் புயல்போல தோன்றலாம். ஆனால், நிவாரணம் உண்டு! பின்வரும் அழைப்பை இயேசு விடுக்கிறார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”—மத்தேயு 11:28.
‘எதிர் காற்று வீசுவது போல’ தோன்றும்போது, நாம் ‘மிகுந்த அமைதலடையலாம்.’ எப்படி? யெகோவா தேவனுடைய தவறிப்போகாத வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதாலேயே.—ஒப்பிடுக: ஏசாயா 55:9-11; பிலிப்பியர் 4:5-7.