அந்த அடையாளம்—புதிய உலகம் சமீபமாயிருக்கிறது என்பதற்கு அத்தாட்சியா?
“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.”—மத்தேயு 24:7.
முதல் உலக மகா யுத்தம் மூர்க்கம் கொண்ட சமயத்தில் ஏப்ரல் 15, 1917 வெளியீடாகிய ஆங்கில காவற்கோபுரம் இந்த வார்த்தைகளை மேற்கோளாய்க் குறிப்பிட்டு இப்படியாகக் கூறியது: “இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளின் பகுதி நிறைவேற்றத்தை நாம் காண்கிறோம், எப்படியெனில் பூமியின் எல்லாத் தேசங்களுமே கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. உணவு இருப்பு எல்லா இடங்களிலும் குறைந்துகொண்டே போகிறது, வாழ்க்கைச் செலவோ உயர்ந்துகொண்டே போகிறது.”
இப்பொழுது, 73 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தப் பத்திரிகை இதன் வாசகரின் கவனத்தை இதே தீர்க்கதரிசனத்தினிடமாகத் திருப்புகிறது. இந்தத் தீர்க்கதரிசனத்தை மூன்று பூர்வீக சரித்திராசிரியர்கள் இயேசு கிறிஸ்து கொடுத்த “அடையாளத்தின்” பாகமாகப் பதிவுசெய்திருக்கின்றனர்.—மத்தேயு 24:3, 7; மாற்கு 13:4, 8; லூக்கா 21:7, 10, 11.
1914 முதல் கோடிக்கணக்கானோரின் உயிர்கள் போர்களிலும், பஞ்சங்களிலும், கொள்ளை நோய்களிலும், மற்ற பேரழிவுகளிலும் துச்சமென அழிக்கப்பட்டிருக்கின்றன. தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (1987) கடந்த 1,700 ஆண்டுகளில் 63 “சரித்திர முக்கியத்துவம் கொண்ட பெரிய பூமியதிர்ச்சிகளைப்” பட்டியலிட்டிருக்கிறது. இந்த மொத்த எண்ணிக்கையில் 27, அல்லது 43 சதவீத பூமியதிர்ச்சிகள் 1914 முதல் ஏற்பட்டிருக்கின்றன. பேராசிரியர்களாகிய கெரே என்பவரும் ஷா என்பவரும் எழுதிய டெரா நான் ஃபர்மாள என்ற புத்தகம் நீண்ட காலப்பகுதியின் பட்டியலைக் கொண்டிருக்கிறது. அந்தப் பட்டியலிலுள்ள “குறிப்பிடத்தக்க” மொத்த பூமியதிர்ச்சிகளில் 54 சதவீதம் 1914 முதல் ஏற்பட்டிருக்கிறது.a கடந்த நூற்றாண்டுகளின் பதிவுகள் முழுமையாக இல்லை என்றிருந்த போதிலும் பூமியதிர்ச்சியால் மனிதவர்க்கம் நம்முடைய காலத்தில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு நாம் வராமல் இருக்க முடியாது.
இதைவிட அதிக பயங்கரமான காரியம் மனிதரின் இருதயத்தைத் தாக்கினது. இது ஜப்பானிய நகரங்களாகிய ஹிரோஷிமா, நாகஸாக்கி மீது அணுகுண்டு வெடித்தபோது ஏற்பட்டது. அணு ஆயுத வல்லரசுகள் மொத்த அழிவை ஏற்படுத்தக்கூடிய அவ்வளவு அநேக போர்த் தளவாடங்களைக் கொண்டிருப்பதால் மனித குலம் முழுவதும் நிர்மூலமாகும் அச்சுறுத்தலின் கீழ் வாழ்கிறது. சரித்திராசிரியனான லூக்கா இயேசுவின் தீர்க்கதரிசனத்தை இப்படியாகப் பதிவு செய்தான்: “சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கனும் உண்டாகும். . . . பூமியின் மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதனால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.”—லூக்கா 21:11, 25, 26.
வல்லரசுகள் தங்களுடைய இருப்பிலிந்து சில போர்த் தளவாடங்களைக் குறைத்திட ஒப்புக்கொண்டாலும், அப்படிப்பட்ட ஒப்பந்தங்கள் வன்மையான குற்றச்செயல்கள், பொருளாதார வீழ்ச்சி மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றைக் குறித்த மனிதனின் பயத்தைக் குறைத்திடாது. “இன்று மக்களை அதிகக் கவலைப்படச்செய்வது எதுவென்றால், அவர்களுடைய சொந்த தனிப்பட்ட பாதுகாப்பு,” என்று கூறுகிறது ஓர் ஆப்பிரிக்க செய்தித்தாள். “குற்றச்செயல் பித்து நிலையை எட்டிவிட்டது. . . ; பயம் எங்கும் வியாபித்திருக்கிறது.” ஆம், அந்த அடையாளத்தின் மற்றொரு சரியான விவரமாக இயேசு “அக்கிரமம் மிகுதியாவது” குறித்து முன்னறிவித்தார்.—மத்தேயு 24:12.
“நற்செய்தி”
இங்கு குறிப்பிடப்பட்ட கவலைக்கிடமான பாதிப்புகளையுடைய காரியங்கள் “குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் நற்செய்தி பிரசங்கிக்கப்படும்” காரியத்தைப் பின்தொடரும் என்று முன்னறிவிக்கப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்படுவதில் ஆறுதல் கொள்வீர்கள். (மத்தேயு 24:14, NW) இந்த “நற்செய்தி” கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட அந்த உலக அரசாங்கம் ஏற்கனவே உண்மைத் தவறாத இலட்சக்கணக்கான பிரஜைகளைக் கூட்டிச்சேர்த்திருக்கிறது. அது வெகு சீக்கிரத்தில் மனித விவகாரங்களில் தலையிட்டு நீதியான ஒரு புதிய உலகத்திற்கான மனிதனின் தேவையைப் பூர்த்திசெய்யும்.—லூக்கா 21:28-32; 2 பேதுரு 3:13.
அநேகர் அவநம்பிக்கையினிமித்தம் இந்த “நற்செய்தியை” நிராகரித்து விடுகின்றனர். மற்றவர்கள் இதை நம்புவதாகச் சொல்லுகின்றனர், ஆனால் இதைக் குறித்து அவர்கள் ஒன்றும் செய்வது கிடையாது. இன்னும் சிலர் இதன்பேரில் சில காலத்துக்குச் செயல்படுகிறார்கள், பின்பு அவர்கள் சந்தேகிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். இப்படிப்பட்ட எதிர்மறையான பிரதிபலிப்புகளுங்கூட அந்த அடையாளத்தின் பாகமாக முன்னறிவிக்கப்பட்டதா? அதைவிட அதிக முக்கியமாக, இந்த அடையாளத்திலிருந்து நீங்கள் எவ்விதம் தனிப்பட்ட விதத்தில் பயன் பெறலாம்? (w88 10/15)
[அடிக்குறிப்புகள்]
a தி உவர்ல்டு புக் என்ஸைக்ளோபீடியா (1987) 37 “பெரிய பூமியதிர்ச்சிகளைப்” பட்டியலிட்டிருக்கிறது, பொ.ச. 526 முதல். இந்தப் பட்டியலில் 65 சதவீதம் பூமியதிர்ச்சிகள் 1914 முதல் ஏற்பட்டிருக்கின்றன.