அந்த அடையாளம்—நீங்கள் அதைப் பார்த்துவிட்டீர்களா?
“சமுத்திரத்தின் ஆழத்தில் கீழே, ஒரு நீண்ட உருள்வடிவ துருத்து முனை கொண்ட நீர்மூழ்கி, சமுத்திரத்தின் கொந்தளிப்பான பரப்புக்கு மேலே பலமாக வந்து மோதும் பெரிய அலைகளால் அசைக்கப்படாமல் உறுதியாக பொருத்தி வைக்கப்பட்டுள்ளது. நீர்மூழ்கியின் தளத்திலுள்ள ஒரு புழைவாயில் திறந்து கொள்ள, 30 அடி நீளமும் 4 1⁄2 அடி பருமனுமான ஒரு ராக்கெட் வேகமாக மேற்பரப்பை நோக்கிப் பாய்கிறது. ராக்கெட், அழுத்தி வைக்கப்பட்ட காற்றினால் மேல்நோக்கிச் செலுத்தப்பட அதன் பயணத்தை அது துவங்குகிறது. ஆனால் சமுத்திரத்தின் மேற்பரப்பை அடைகையில், அதன் என்ஜின் தீப் பிடித்துக் கொள்ள ராக்கெட் தண்ணீரிலிருந்து ஒரு முழக்கத்தோடு வெடிக்கிறது.”
மார்டின் கீன் எழுதிய ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் விண்வெளிக்கலம் (Rockets, Missiles and Space–craft) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட, மூழ்கிச் சென்று தாக்கும் போர்க் கப்பல் அனுப்பி வைக்கும் உந்துவிசை ஏவுகணையைப் பற்றிய இந்த வருணனை, “சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருப்பதால்” ஏற்படும் உலகின் இக்கட்டான காலத்தை முன்னறிவிக்கும் ஒரு பூர்வ கால தீர்க்கதரிசனத்துக்கு விளக்கமளிப்பதாக இருக்கிறது. (லூக்கா 21:25) உந்துவிசை ஏவுகணை நீர்மூழ்கிகளின் அச்சுறுத்தல் எத்தனை பெரியதாக உள்ளது?
ஜேனின் போர்க் கப்பல்கள் 1986–87 (Jane’s Fighting Ships 1986–87) புத்தகத்தின்படி, பிரிட்டன், சீனா, ஃபிரான்ஸ், சோவியத் யூனியன் மற்றும் ஐக்கிய மாகாணங்கள் 131 உந்துவிசையினால் செல்லும் நீர்மூழ்கி ஏவுகணைகளை செயற் களப் பணியில் கொண்டிருக்கின்றன. எந்த நகரமும் அவைகளின் எட்டும் தொலைவுக்கு அப்பால் இல்லை. பொதுவாக நீர்மூழ்கி குண்டின் வெடிப்பு முனைப் பகுதி, குறியிலக்கின் ஒரு மைல் தொலைவுக்குள் வந்து இறங்குகிறது. பதிவுகளின் கின்னஸ் புத்தகம் (The Guinness Book of Records) பிரகாரம் சில நீர்மூழ்கிகள், “5,000 மைல்களுக்குள் இருக்கும் எந்தத் தேசத்தையும் துடைத்தழித்துவிடுவதற்குப்” போதிய குண்டு வெடிப்பு முனைப் பகுதிகளை எடுத்துச் செல்கின்றன. இன்னும் மோசமாக, ஒரே ஓர் உந்துவிசை ஏவுகணை நீர்மூழ்கியிலுள்ள வெடிப்பு முனைகள், பூமியிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்தாயிருக்கும் ஓர் அணு சக்திப் புயலை உருவாக்கக்கூடும் என்பதாக சிலர் தெரிவித்திருக்கிறார்கள்! தொலை தூரத்திலுள்ள நீர்மூழ்கிகளைக் கட்டுப்படுத்துவதுங்கூட ஒரு பிரச்னையாக இருக்கிறது. நீர்மூழ்கி ஒன்றில், கண்மூடித்தனமானச் செயல், உயிரைப் போக்கவல்ல அணுயுத்தமொன்றை கட்டவிழ்த்துவிடக்கூடும் என்று பயப்படப்படுகிறது..
இப்படிப்பட்ட பயங்கரமான எதிர்பார்ப்புகளை இயேசுவின் தீர்க்கதரிசன அடையாளத்தோடு அநேகர் தொடர்புபடுத்தியுள்ளனர். அந்த அடையாளத்தின் நிறைவேற்றத்தை நம்முடைய சந்ததி அனுபவித்துக் கொண்டிருப்பதாக இருக்குமா? உண்மைகள் ஆம் என்று பதிலளிக்கின்றன. அப்படியென்றால், அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலிலிருந்து மீட்பு சமீபமாயிருக்கிறதென்பதை இது அர்த்தப்படுத்துகிறது. (லூக்கா 21:28, 32) இப்படிப்பட்ட தளராத நம்பிக்கையுள்ள எதிர்பார்ப்போடு, இந்த அடையாள நிறைவேற்றத்தின் அத்தாட்சியை சிந்திக்கும்படியாக நாங்கள் உங்களை அழைக்கிறோம். அடையாளத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் சில அவற்றின் நவீன நாளைய நிறைவேற்றத்தோடு இங்கே எடுத்துக் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.
இன்று அநேகர், உந்துவிசையினால் செல்லும் ஏவுகணை நீர்மூழ்கிகளை வலிமையும் பேரளவுமுடைய முதல்தர போர்க் கப்பல்களாகக் கருதுகிறார்கள். கொடிய கருவிகள், வேவுகல ஏவுகணை நீர்மூழ்கிகளிலும் விமானம் தாங்கிய கப்பல்களிலும் மற்றப் போர்க் கப்பல்களிலும் கொண்டுச் செல்லப்படுகின்றன. ஜேனின் போர்க் கப்பல்கள் 1986–87 புத்தகத்தின் பிரகாரம், இப்பொழுது 52 தேசங்களின் செயற்களத்தில், 929 நீர்மூழ்கிகளும், 30 விமானம் தாங்கிய கப்பல்களும், 84 வேவுகலங்களும், 367 கப்பல்களை உடைக்கத்தக்க போர்க் கப்பல்களும், 675 நீர்மூழ்கி எதிர்ப்புக் கப்பல்களும், 276 வழித்துணைக் கப்பல்களும், 2,024 விரைவுதாக்குதல் கப்பல்களும் ஆயிரக்கணக்கில் மற்ற இராணுவக் கப்பல்களும் உபயோகத்தில் உள்ளன. இதோடுக்கூட சிறிய ஆனால் கொடிய கடற்கண்ணிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். முன்னொருபோதும் சமுத்திரத்தை மனிதன் இத்தனை ஆபத்தாக “கொந்தளிக்கச்” செய்ததில்லை.
மனிதன் “சூரியன், சந்திரன், நட்சத்திரங்களின்” பகுதிகளுக்குள்ளும்கூட எட்டிவிட்டிருக்கிறான். உந்துவிசையினால் செல்லும் ஏவுகணைகள் அவற்றின் குறியிலக்கின் மீது மோதுவதற்கு முன்பாக விண்வெளிக்குள் மின்னல் போல் விரைந்து செல்கின்றன. விண்வெளிக் கலங்கள் சூரிய மண்டலத்தினுள்ளும் அதற்கு அப்பாலும் ஊடுருவிச் சென்றுவிட்டிருக்கின்றன. மனிதனால் உண்டுபண்ணப்பட்ட பூமியைச் சுற்றி வரும் துணைக்கோள்களின் மீது தேசங்கள் வெகுவாகச் சார்ந்திருக்கின்றன. கடற்பயணம் மற்றும் வானிலை ஆய்வு துணைக் கோள்கள், போர்த்திற ஏவுகணைகளை மிகவும் துல்லிபமாக குறிவைக்க அவர்களுக்கு உதவி செய்கின்றன. செய்தித் தொடர்பு மற்றும் வேவு துணைக் கோள்களும் மிக விரிவாக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. “துணைக்கோள்கள் வல்லரசுகளின் படைக் கலம் பூண்ட படைப் பிரிவின் கண்களாகவும் காதுகளாகவும் குரல்களாகவும் மாறிவிட்டிருக்கின்றன,” என்பதாக மைக்கல் ஷீகன் ஆயுதப் போட்டி (The Arms Race) என்ற தன்னுடையப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
லிபியாவின் மீது வானிலிருந்து செய்யப்பட்ட தாக்குதல் அண்மையில் நடந்த ஓர் உதாரணமாகும். வான் பயண வாரமும் விண்வெளி தொழில்நுட்பமும் (Aviation Week & Space Technology) இவ்விதமாக அறிக்கை செய்கிறது: “அமெரிக்க . . . துணைக்கோள் நிழற்படங்கள் தாக்குதல் ஆயுதங்களிலும் தாக்கின பின்பு செய்யப்பட்ட மதிப்பீடுகளிலும் பயன்படுத்தப்பட்டன. தற்காப்பு வானிலை ஆய்வு துணைக்கோள் திட்டம், தாக்குதலுக்கு வானிலைக் குறிப்புகளைக் கொடுத்தன. ஆணை மற்றும் கட்டுப்பாட்டில் இராணுவ தகவல் தொடர்பு விமானங்கள் உட்படுத்தப்பட்டன.” இராணுவ துணைக் கோள்கள் புரியும் இன்றியமையாத பங்கின் காரணமாக இரு வல்லரசுகளும் துணைக்கோள் எதிர்ப்புக் கருவிகளை வைத்திருக்கின்றன. விண்வெளியில் கருவிகளுக்குத் தளத்தைக் கொண்டிருப்பதே ஒரு வல்லரசின் வெளிப்படையான நோக்கமாக இருக்கிறது. இத்திட்டம் பிரபலமாக நட்சத்திரப் போர்கள் என்றழைக்கப்படுகிறது. வல்லரசுகள் விண்வெளிப் போரில் உண்மையில் ஈடுபடுமா ஈடுபடாதா என்பதை காலமே சொல்ல வேண்டும்.
இதற்கிடையில் முன்னறிவிக்கப்பட்டபடியே, “பூமியின் மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்ப்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.” குற்றச் செயல், பயங்கரவாதம், பொருளாதார சீர்க்குலைவு, வேதியல் தூய்மைக்கேடு, அணுசக்தி தொழிற்சாலைகளிலிருந்து வரும் கதிர்வீச்சு விஷம், அணுஆயுதப் போரின் பயமுறுத்தலோடுகூட இவை அனைத்தும் “பயத்துக்குக்” காரணமாயிருக்கின்றன. பிரிட்டிஷ் பத்திரிகை நியு ஸ்டேட்ஸ்மென், அந்தத் தேசத்தில் “பாதிக்கும் மேற்பட்ட” பருவ வயதினர் “தங்களுடைய வாழ்நாள் காலத்தில் அணு ஆயுதப் போர் நடைபெறும் என்பதாகவும், 70 சதவிகிதத்தினர் அது ஒரு நாள் நிச்சயமாக நிகழவிருக்கிறது என்பதாக நம்புவதாகவும்” அறிக்கை செய்கிறது. (w88 10⁄1)
“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.” (லூக்கா 21:10)
1914 முதற்கொண்டு 10,00,00,000 ஆட்களுக்கும் அதிகமானவர்கள் போர்களில் மாண்டிருக்கிறார்கள். முதல் உலகப் போர் 1914-ல் ஆரம்பமானது. அந்நாளிலிருந்த பல ஐரோப்பிய குடியேற்ற நாடுகளைக் கணக்கில் சேர்க்காமல் இதில் 28 தேசங்கள் கலந்து கொண்டன. ஒரு சில தேசங்கள் நடுநிலைமை வகித்தன. இதற்கான விலை 1,30,00,000 உயிர்களும் 2,10,00,000-க்கும் மேற்பட்ட காயமுற்றப் போர் வீரர்களுமாவர். அடுத்து இதைவிட அதிக சேதத்தை உண்டுபண்ணின இரண்டாம் உலகப் போர் வந்தது. அப்போது முதற்கொண்டு என்ன? தி ஸ்டார் என்ற தென் ஆப்பிரிக்கச் செய்தித்தாளில் வெளியான “உலகின் போர்கள்” என்ற கட்டுரை, லண்டனில் வெளியாகும் ஞாயிற்றுக்கிழமை டைம்ஸ் இவ்விதமாகச் சொல்வதாக குறிப்பிட்டிருந்தது: “உலகிலுள்ள தேசங்களில் நான்கில் ஒரு பங்கு தற்போது சண்டைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.”
“மகா பூமியதிர்ச்சிகளும் உண்டாகும்.” (லூக்கா 21:11)
டெரா நான் ஃபிர்மா என்ற புத்தகத்தில், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் கிரியும், ஷாவும், கடந்த காலத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டக் காலத்தில் சம்பவித்திருக்கும் 164 “உலகின் குறிப்பிடத்தக்க பூமியதிர்ச்சிகளைப்” பற்றிய விவரங்களைப் பட்டியலாகத் தருகிறார்கள். இதில் 89 பூமியதிர்ச்சிகள், 1914 முதற்கொண்டு சம்பவித்தவையாகவும் இவற்றில் 10,47,944 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மதிப்பிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் பெரிய பூமியதிர்ச்சிகள் மாத்திரமே இடம் பெறுகின்றன. டெரா நான் ஃபிர்மா 1984-ல் வெளியிடப்பட்டது முதற்கொண்டு இன்னும் ஆயிரக்கணக்கான உயிரழப்புகளில் விளைவடைந்த அழிவுண்டாக்கும் பூமியதிர்ச்சிகள் சில்லியிலும் சோவியத் யூனியனிலும் மெக்ஸிக்கோவிலும் சம்பவித்திருக்கின்றன.
“கொள்ளை நோய்களும் உண்டாகும்.” (லூக்கா 21:11)
1918-ல் கொடிய ஒரு கொள்ளை நோய் மனிதவர்க்கத்தை தாக்கியது. ஸ்பானிஷ் ஃபுளூ என்றழைக்கப்பட்ட இது செய்ன்ட் ஹெலினா தீவைத் தவிர, குடியிருக்கப்பட்ட எல்லா இடங்களிலும் பரவி நான்கு ஆண்டு போரில் மரித்தவர்களைவிட அதிகமான ஆட்களை உயிரிழக்கச் செய்தது. அந்தச் சமயம் முதற்கொண்டு, மருத்துவ விஞ்ஞானம் வெகுவாக முன்னேறியிருக்கிறது. இருந்தபோதிலும் ஒரு புரியாப் புதிர் இன்னும் இருந்து வருகிறது. தி லான்செட் விளக்குவதாவது: “கவனிக்கப்பட வேண்டிய தொற்று நோய்களில் மிகப் பொதுவான பிரிவாக, பாலுறவுகளால் கடத்தப்படும் நோய்கள் ஒழிக்கப்படாமல் தொடர்ந்து இருந்து வருவது நவீன மருத்துவத்தின் புரியாப் புதிராக இருக்கின்றது. . . . பாலுறவினால் கடத்தப்படும் நோய்களின் கட்டுப்பாடு நமது கட்டுப்படுத்தும் சக்திக்குள்ளாக இருப்பதாக ஒரு சமயம் தோன்றியது. ஆனால் சமீப ஆண்டுகளில் அவை நமக்குப் பிடிகொடாமல் நம்மை ஏய்த்துக் கொண்டிருக்கின்றன.”
நவீன மருத்துவத்தால் கட்டுப்படுத்த இயலாத புற்று நோய், நெஞ்சுப்பை தமனி இருதய நோய் போன்ற மற்ற கொள்ளை நோய்களும் இருக்கின்றன. தென் ஆப்பிரிக்க குடும்ப பழக்கம் (S[outh] A[frica] Family Practice) பிரகாரம், பின்னானது, “மிகவும் அசாதாரணமான புதிய நோயாகும். . . . இது முதல் உலகப் போருக்குப் பின்னான சமுதாயத்தின் விளைவாக இருக்கிறது.” இதயத்துடிப்பு நாளம் பற்றிய புதுவிவரம்—இருதய நோயின் பேரில் உட்பார்வை (Cardiovascular Update—Insight Into Heart Disease) புத்தகத்தின்படி, பிரிட்டனில் இருதய நோயும் இரத்த அழுத்தமும் “சாவுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.” “ஆனாலும் இவைகளைக் கட்டுப்படுத்துவதில் மிகச் சிறிய முன்னேற்றமே செய்யப்பட்டிருக்கிறது,” என்பதாக மேலும் அது சொல்கிறது.
வளர்ந்துவரும் நாடுகளில் லட்சக்கணக்கானோர், மலேரியா, விஷ ஈ கடியினால் வரும் நோய், இரத்தத்தில் தட்டையான ஒட்டுயிர்ப் புழு வகையால் ஏற்படும் நாள்பட்ட நோய் இன்னும் மற்ற நோய்களினால் அவதியுறுகிறார்கள். உலகின் மிக மோசமான கொலையாளிகளில் ஒன்று வயிற்றுப்போக்கு நோயாகும். பன்னாடு சார்ந்த மருத்துவம் (Medicine International) பத்திரிகை விளக்குவதாவது: “ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலுள்ள பச்சிளங் குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளின் மத்தியில் ஆண்டுக்கு 50 கோடி பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் 50 இலட்சத்திலிருந்து 180 இலட்சம் பேருக்கு மரணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.”
“பஞ்சங்கள் . . . உண்டாகும்.” (லூக்கா 21:11)
பொதுவாகப் போரை அடுத்து பஞ்சம் ஏற்படுகிறது. முதல் உலகப் போர் விதிவிலக்காக இல்லை. அதைத் தொடர்ந்து பயங்கரமான பஞ்சங்கள் ஏற்பட்டன. அப்போது முதற்கொண்டு? பன்னாட்டுச் சவால்—ஐக்கிய நாடுகளின் 40 ஆண்டுகள் (1945–1985) (The Challenge of Internationalism—Forty years of the United Nations (1945–1985) என்ற தலைப்பில் ஒரு விசேஷித்த செய்தியிதழ் சொல்வதாவது: “1950-ல் சத்துணவுக் குறை 165 கோடி ஆட்களுக்கு இருந்தபோது, 1983-ல் அது 225 கோடி ஆட்களுக்கு என்று ஆகிவிட்டிருக்கிறது. வேறு வார்த்தையில் சொன்னால், இது 60 கோடி அதிகமாக அல்லது 36 சதவிகிதம் அதிகரிப்பாக இருக்கிறது. ஆப்பிரிக்காவில் அண்மையில் ஏற்பட்ட வறட்சியை அடுத்துப் பாழாக்கும் ஒரு பஞ்சம் ஏற்பட்டது. “ஒரே ஆண்டில் 10 இலட்சம் எத்தியோப்பிய விவசாயிகளும் 5 இலட்சம் சுடான் தேசத்துப் பிள்ளைகளும் உயிரிழந்திருக்கிறார்கள்,” என்பதாக நியூஸ்வீக் பத்திரிகை அறிவிப்பு செய்கிறது. மற்ற தேசங்களிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர்.
அந்த அடையாளம்—அது எதை அர்த்தப்படுத்துகிறது?
இலட்சக்கணக்கானோர், 20-ம் நூற்றாண்டு சரித்திரத்தின் வெளிச்சத்தில் அந்த அடையாளத்தை ஆராய்ந்த பின்பு, அதன் நிறைவேற்றத்தை உறுதியாக நம்புகிறார்கள். (மத்தேயு அதிகாரம் 24 மற்றும் மாற்கு அதிகாரம் 13 பார்க்கவும்.) 1914 சந்ததி நிச்சயமாகவே குறிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இது இயேசுவின் வார்த்தைகளின் இரண்டாம் நிறைவேற்றத்தில் உட்பட்டிருக்கும் ஒன்றாக இருக்கிறது: “இவை எல்லாம் சம்பவிக்கு முன் இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (லூக்கா 21:32) “எல்லாம்” என்பது மனிதவர்க்கத்தின் சிக்கலானப் பிரச்னையிலிருந்து மீட்கப்படுவதையும் உட்படுத்துகிறது.
இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு இந்த உறுதியைக் கொடுத்தார்: “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும் போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால் நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் . . . அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும் போது தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.” மீமானிட உலக அரசாங்கமாகிய கடவுளுடைய ராஜ்யம் இந்தப் பூமியை, பூகோள அளவிலான ஒரு பரதீஸாக மாற்ற இருக்கிறது. ஆகவே அடையாளம் நிச்சயமாகவே நிறைவேறியிருப்பது போலவே, மீட்பும்கூட நிச்சயமாக வரும்.—லூக்கா 21:28, 31; சங்கீதம் 72:1–8.
ஒருவேளை தீர்க்கதரிசன அடையாளத்தை இதற்கு முன் நீங்கள் சிந்தியாமலிருந்திருக்கலாம். கடவுளுடைய வார்த்தையைத் தொடர்ந்து ஆராய்ந்து வரும்படியாக நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். அவ்விதமாகச் செய்வது மனிதவர்க்கத்துக்கான கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி அதிகத்தைப் புரிந்து கொள்ள உங்களுக்கு உதவி செய்யும். இவ்விதமாக வர இருக்கும் பூமிக்குரிய பரதீஸினுள் யெகோவா தேவன் ‘மீட்டுக்’ கொள்ளப் போகிறவர்களிடமிருந்து என்ன கேட்கிறார் என்பதை நீங்கள் கற்றறிவீர்கள்.—சங்கீதம் 37:10, 11; செப்பனியா 2:2, 3; வெளிப்படுத்துதல் 21:3–5.
six pragraphs are in archives
[பக்கம் 7-ன் பெட்டி]
[பக்கம் 5-ன் படங்களுக்கான நன்றி]
Courtesy of German Railroads Information Office, New York
Eric Schwab/WHO
[பக்கம் 6-ன் படங்களுக்கான நன்றி]
Jerry Frank/United Nations
U.S. Air Force photo