அவரவர் தங்கள் தங்கள் அத்திமரத்தின் கீழ் உட்காருவார்கள்
மத்திய கிழக்கு நாடுகளில் கோடையில் நிழலுக்கு ரொம்ப கிராக்கி. கதிரவனின் கோரப் பார்வையிலிருந்து தப்பிக்க ஏதேனும் மரம் இருந்தால் அதற்கு தனி வரவேற்புதான். அதுவும் வீட்டருகே இருந்தால் சொல்லவே வேண்டாம். அகன்ற பெரிய இலைகளும், பரந்து விரிந்த கிளைகளும் இருப்பதால் அத்திமரம் அருமையாக நிழல் தருகிறது; சொல்லப்போனால், இதுபோல் நிழல் தரும் மரங்கள் மத்திய கிழக்கில் வேறேதுமில்லை.
பிளான்ட்ஸ் ஆஃப் த பைபிள் என்ற புத்தகம் குறிப்பிடுகிறபடி, அத்திமரத்தின் “நிழல் அதிக புத்துணர்ச்சி அளிக்கிறதாம், கூரையைவிட குளுமையானதாம்.” பூர்வ இஸ்ரவேலில் திராட்சை தோட்டங்களின் ஓரங்களில் அத்திமரங்கள் இருந்தன; வயலில் வேலை செய்பவர்கள் சற்றே இளைப்பாறுவதற்கு ஏற்ற இடங்களாக அவை இருந்தன.
நீண்ட, உஷ்ணமான பகல் பொழுது சாய்ந்தவுடன் வீட்டிலுள்ள அனைவரும் அத்திமரத்தின் கீழ் ஒன்றாக கூடியிருந்து இனிமையாக பேசி மகிழ முடியும். அதுமட்டுமல்ல, அத்திமரம் அதன் சொந்தக்காரருக்கு கைமேல் பலனாக ஏராளமான சத்துள்ள பழங்களைக் கொடுக்கிறது. ஆகவே, சாலொமோன் ராஜாவின் காலம் முதற்கொண்டே ஒருவன் தனக்கு சொந்தமான அத்திமரத்தின் கீழ் உட்காருவது சமாதானத்தையும் செழுமையையும் நிறைவையும் அர்த்தப்படுத்தியது.—1 இராஜாக்கள் 4:24, 25.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தீர்க்கதரிசியாகிய மோசே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை ‘அத்திமரங்களுள்ள தேசம்’ என வருணித்தார். (உபாகமம் 8:8) அதன் செழுமைக்கு அத்தாட்சியாக, பன்னிரண்டு வேவுகாரர்களும் இஸ்ரவேலின் பாளயத்துக்கு திரும்பி வந்தபோது அத்திப் பழங்களையும் மற்ற பழங்களையும் கொண்டு வந்தனர். (எண்ணாகமம் 13:21-23) 19-ம் நூற்றாண்டில், பைபிள் தேசங்களுக்குச் சென்ற ஒரு பிரயாணி, அங்கு அதிகம் காணப்பட்ட மரங்களில் ஒன்று அத்திமரம் என குறிப்பிட்டார். அப்படியானால் அத்திப் பழங்களையும் அத்திமரங்களையும் பற்றி பைபிள் குறிப்பிடுவதில் ஆச்சரியமேதுமில்லை!
இருமுறை மகசூல் தரும் மரம்
அத்திமரம் அநேகமாக எந்த மண்ணிலும் வளரக்கூடியது; பரந்து விரிந்து செல்லும் அதன் வேர் அமைப்பு, மத்திய கிழக்குப் பகுதியின் நீடித்த, வறட்சியான கோடைக்காலத்தைத் தாக்குப்பிடிக்க உதவுகிறது. இது ஓர் அசாதாரண மரமாக இருப்பதற்குக் காரணம், அதன் முதல் பழங்கள் ஜூன் மாதத்தில் அறுவடை செய்யப்படுகின்றன. அதன் முக்கியமான அறுவடை பொதுவாக ஆகஸ்ட் முதற்கொண்டு ஆரம்பமாகிறது. (ஏசாயா 28:4) இஸ்ரவேலர், முதலில் அறுவடை செய்தவற்றை அப்படியே பழங்களாக சாப்பிட்டனர். பிந்திய மகசூலை உலர வைத்து வருடம் பூராவும் பயன்படுத்தினர். உலர்ந்த அத்திப் பழங்களை தட்டி வட்டமான அடைகளாகவும் செய்தனர்; சில சமயங்களில் அவற்றில் பாதாம் பருப்புகளை சேர்த்தனர். அத்திப் பழ அடைகள் எடுத்துச் செல்ல எளிதானவை, போஷாக்கானவை, சுவையானவை.
புத்திசாலியான அபிகாயில் 200 அத்திப் பழ அடைகளை தாவீதுக்குக் கொடுத்தாள்; நாடோடிகளுக்கு இது சிறந்த உணவாக இருக்கும் என அவள் கண்டிப்பாக நினைத்திருப்பாள். (1 சாமுவேல் 25:18, 27) உலர்ந்த அத்திப் பழங்களுக்கு மருத்துவ குணமும் உண்டு. எசேக்கியா ராஜாவின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த கட்டியின்மீது அத்திப் பழ அடையை வைத்து பற்றுப் போடப்பட்டது.a இருந்தாலும், பிற்பாடு அவர் குணமடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது கடவுளுடைய தலையிடுதலே.—2 இராஜாக்கள் 20:4-7.
பூர்வ காலங்களில், மத்தியத்தரைக் கடல் பிரதேசம் முழுவதிலுமே உலர்ந்த அத்திப் பழங்கள் மிக உயர்வாக மதிக்கப்பட்டன. கார்த்தேஜ் நகருக்கு எதிராக மூன்றாம் பியூனிக் போரைத் தொடுக்கும்படி ரோம ஆலோசனை சபையை சம்மதிக்க வைப்பதற்கு அரசியல் மேதை கேட்டோ ஓர் அத்திப் பழத்தை சுழற்றிக் காட்டினார். மிகச் சிறந்த உலர் அத்திப் பழங்களை ஆசியா மைனரிலுள்ள காரியாவிலிருந்தே ரோம் பெற்றது. ஆகவே, உலர்ந்த அத்திப் பழங்களின் பெயர் லத்தீன் மொழியில் காரிகா ஆயிற்று. இன்றைய துருக்கியிலுள்ள அந்தப் பகுதியில் இப்போதும் உலர்ந்த உயர்தர அத்திப் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இஸ்ரவேல் விவசாயிகள் திராட்சைத் தோட்டங்களில் அத்தி மரங்களை நடுவது வழக்கமாக இருந்தது, ஆனால் பலன்தராத மரங்களை அவர்கள் வெட்டி விடுவர். வளமான நிலம் கிடைப்பதே அரிதாக இருந்ததால் பலன்தராத மரங்களுக்காக அதை அவர்கள் வீணாக்கவில்லை. பலன்தராத ஒரு அத்திமரத்தைப் பற்றிய உதாரணத்தில், திராட்சை தோட்டக்காரனிடம் விவசாயி இவ்வாறு கூறினார்: “இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது.” (லூக்கா 13:6, 7) இயேசுவின் காலத்தில் கனிதரும் மரங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டதால், பலன்தராத மரம் தேவையற்ற பண சுமையைத்தான் ஏற்படுத்தியது.
இஸ்ரவேலரின் உணவில் அத்திப் பழங்கள் முக்கிய பங்கு வகித்தன. ஆகவே, அத்திப் பழங்களின் விளைச்சல் குறைவாக இருந்தது—ஒருவேளை யெகோவாவின் ஆக்கினைத் தீர்ப்பின் காரணமாக குறைவாக இருந்தது—கஷ்டகாலத்தை குறித்தது. (ஓசியா 2:12; ஆமோஸ் 4:9) “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், . . . நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” என ஆபகூக் தீர்க்கதரிசி சொன்னார்.—ஆபகூக் 3:17, 18.
விசுவாசமற்ற ஜனத்துக்கு அடையாளம்
சில சமயங்களில் அத்திப் பழங்களை அல்லது அத்திமரங்களை அடையாள அர்த்தத்தில் பைபிள் பயன்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, சிறைப்பிடிக்கப்பட்ட உண்மையுள்ள யூதர்களை நல்ல அத்திப் பழங்களுள்ள ஒரு கூடைக்கு எரேமியா ஒப்பிட்டார். அந்த நல்ல அத்திப் பழங்கள், பொதுவாக அப்படியே சாப்பிடப்பட்ட முதற்கனியாகிய அத்திப் பழங்களை குறித்தன. ஆனால், சிறைபிடிக்கப்பட்டவர்களில் உண்மையற்றவர்களோ சாப்பிட முடியாத கெட்ட அத்திப் பழங்களைப் போல் இருந்தனர்; அவற்றை தூக்கியெறியத்தான் வேண்டியிருந்தது.—எரேமியா 24:2, 5, 8, 10.
பலன்தராத அத்திமரத்தைப் பற்றிய உவமையில், யூதா தேசத்திடம் கடவுள் பொறுமையாக இருந்ததை இயேசு காட்டினார். மேலே குறிப்பிட்ட விதமாக, தன் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரத்தை வைத்திருந்த ஒரு மனிதனைப் பற்றி அவர் சொன்னார். அந்த மரம் மூன்று வருடங்களுக்கு பலன் தராமல் போனதால் அதன் எஜமான் அதை வெட்டிப்போட இருந்தார். ஆனால், அந்தத் தோட்டக்காரனோ, “ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப் போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப் போடலாம்” என்று சொன்னான்.—லூக்கா 13:8, 9.
இயேசு இந்த உவமையைச் சொன்ன சமயத்தில், அவர் ஏற்கெனவே மூன்று வருடங்களாக யூதா தேசத்தாருக்கு பிரசங்கித்து, அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்த அயராது உழைத்து வந்தார். அடையாள அர்த்தமுள்ள அத்திமரமாகிய யூதா தேசம் பலன் தருவதற்கு வாய்ப்பளிக்க அதற்கு ‘எருப் போடுவதில்’ இயேசு மும்முரமானார். ஆனால், அந்த தேசம் மேசியாவைப் புறக்கணித்து விட்டது என்பது அவர் மரிப்பதற்கு முந்தின வாரம் தெளிவாயிற்று.—மத்தேயு 23:37, 38.
ஆன்மீக ரீதியில் அந்தத் தேசத்தின் மோசமான நிலையை விளக்குவதற்கு மறுபடியுமாக அத்திமரத்தை இயேசு பயன்படுத்தினார். தம்முடைய மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்கு வரும் வழியில் நிறைய இலைகளோடிருந்த ஒரு அத்திமரத்தை அவர் பார்த்தார்; ஆனால் அதில் பழங்களே இல்லை. பொதுவாக இலைகள் இருந்தால் அவற்றுடன் முதல் அத்திப் பழங்களும் சேர்ந்து காணப்படும், சில சமயங்களில் இலைகள் வருவதற்கு முன்பாகவே அத்திப் பழங்கள் உண்டாகிவிடும். ஆனால் அந்த மரத்தில் பழங்கள் இல்லாதிருந்தது, அது பயனற்ற மரம் என்பதைக் காட்டியது.—மாற்கு 11:13, 14.b
பலன்தராத அந்த அத்திமரம் செழிப்பாக காட்சியளித்தது போல் யூதா தேசமும் ஒரு மாய தோற்றத்தை அளித்தது. ஆனால் அது கடவுளுக்கேற்ற கனியை கொடுக்கவில்லை, கடைசியாக யெகோவாவின் சொந்த குமாரனையே புறக்கணித்து விட்டது. கனியற்ற அத்திமரத்தை இயேசு சபித்தார், அடுத்த நாள் அந்த மரம் பட்டுப்போய் இருப்பதை சீஷர்கள் கவனித்தார்கள். தாம் தேர்ந்தெடுத்த யூதர்களை கடவுள் நிராகரித்து விடுவார் என்பதற்கு பட்டுப்போன அந்த மரம் பொருத்தமான அடையாளமாக இருந்தது.—மாற்கு 11:20, 21.
‘அத்திமரத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்’
தம்முடைய வந்திருத்தலைப் பற்றிய முக்கியமான பாடத்தைக் கற்பிப்பதற்கும் அத்திமரத்தை இயேசு பயன்படுத்தினார். “அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 24:32, 33) அத்திமரத்தின் பச்சைப்பசேலென்ற இலைகள் கோடைக்காலத்திற்கு தெள்ளத் தெளிவான ஓர் அடையாளமாகும். மத்தேயு 24-ம் அதிகாரத்திலும், மாற்கு 13-ம் அதிகாரத்திலும் லூக்கா 21-ம் அதிகாரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் முக்கிய தீர்க்கதரிசனம், அவர் பரலோகத்தில் ராஜ்ய வல்லமையில் வந்திருப்பதற்கு தெளிவான அத்தாட்சியை அளிக்கிறது.—லூக்கா 21:29-31.
சரித்திரத்திலேயே மிகவும் இக்கட்டான காலத்தில் நாம் வாழ்வதால், நாம் நிச்சயமாகவே அத்திமரத்திலிருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். அவ்வாறு கற்றுக்கொண்டு ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருந்தால், பின்வரும் இந்த மகத்தான வாக்குறுதியின் நிறைவேற்றத்தை அனுபவிப்போம்: “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.”—மீகா 4:4.
[அடிக்குறிப்புகள்]
a 19-ம் நூற்றாண்டின் மத்திபத்தில் பைபிள் தேசங்களுக்கு விஜயம் செய்த இயற்கைவாதி எச். பி. ட்ரிஸ்ட்ராம், அங்கிருந்த மக்கள் கட்டிகளை குணப்படுத்த அத்திப் பழங்களால் பற்றுப் போடுவதை பார்த்தார்.
b இந்த சம்பவம் பெத்பகே என்ற கிராமத்துக்கு அருகே நடந்தது. அதன் அர்த்தம் “முதல் அத்திப் பழங்களின் வீடு” என்பதாகும். முதல் அத்திப் பழங்களின் அமோக விளைச்சலுக்கு அந்த இடம் பெயர் போனது என்பதை இது குறிக்கலாம்.