யார் யெகோவா அங்கீகரித்தவராவர்?
“உங்கள் இரட்சிப்பு நிறைவேற உழையுங்கள். நீங்கள் சித்தங்கொள்ளவும் உழைக்கவும் செய்கிறவர் கடவுளே; தமது தயவுள்ள சித்தம் நிறைவேறவே இப்படிச் செய்கிறார்.”—பிலிப்பியர் 2:12, 13, தி.மொ.
அது சரித்திரத்தில் ஒரு திரும்புகட்டம். முழுக்காட்டுபவன் யோவான் கடவுளுடைய செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டும் மனந்திரும்பினவர்களை முழுக்காட்டிக்கொண்டுமிருந்தான். அப்பொழுது, நீதியுள்ளவரென யோவான் அறிந்திருந்த ஒரு மனிதர் அவனை அணுகினார்; அவரே இயேசு. அவர் மனந்திரும்பத் தேவைப்பட அவருக்குப் பாவம் எதுவும் இல்லை, எனினும் ‘நீதியான எல்லாவற்றையும் நிறைவேற்றுவதற்குத்’ தம்மை முழுக்காட்டும்படி அவர் கேட்டார்.—மத்தேயு 3:1-15.
2 யோவான் பணிவுடன் உடன்பட்டு அவரை முழுக்காட்டி, இயேசு தண்ணீரிலிருந்து வெளிவந்தபோது, “வானங்கள் திறக்கப்பட்டன, கடவுளுடைய ஆவி புறாவைப்போல் இறங்கிவருவதை அவர் கண்டார்.” அதிலும் மேலாக, “வானங்களிலிருந்து ஒரு குரல்: ‘இவர் என் குமாரன், மிக நேசமானவர், இவரை நான் அங்கீகரித்தேன்,’ என்றுரைத்தது.” (மத்தேயு 3:16, 17, NW; மாற்கு 1:11) எத்தகைய ஓர் அறிவிப்பு! நாம் மரியாதையுடன் மதிக்கும் ஒருவரைப் பிரியப்படுத்துவதில் நாம் எல்லாரும் மகிழ்ச்சிகொள்கிறோம். (அப்போஸ்தலர் 6:3-6; 16:1, 2; பிலிப்பியர் 2:19-22; மத்தேயு 25:21) ‘நான் உன்னை அங்கீகரித்தேன்!’ என்று சர்வவல்லமையுள்ள கடவுள் உங்களுக்கு அறிவித்தாரானால் நீங்கள் எவ்வாறு உணருவீர்களென்பதைக் கற்பனைசெய்து பாருங்கள்.
3 இன்று ஒருவர் கடவுள் அங்கீகரித்தவராக முடியுமா? உதாரணமாக, ‘கடவுளின் ஜீவனுக்கு அந்நியனாகி’யிருப்பதால் ‘நன்னம்பிக்கையில்லாதவனும் இவ்வுலகத்திலே கடவுளற்றவனுமாயிருக்கும்’ ஒரு மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 2:12; 4:18, தி.மொ.) அந்நிலைமையிலிருந்து அவன் விலகி யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றவனாகும் ஆசீர்வாதமான நிலைமைக்குள் அவன் வர முடியுமா? முடியுமென்றால் எவ்வாறு? நாம் பார்க்கலாம்.
அவருடைய வார்த்தைகளின் பொருளென்ன?
4 “நான் [இயேசுவை] அங்கீகரித்தேன்,” என்ற கடவுளுடைய வார்த்தைகளின் சுவிசேஷ பதிவுகளில் கிரேக்க வினைச்சொல் யுடொகீயோ (eu·do·keʹo) பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (மத்தேயு 3:17; மாற்கு 1:11; லூக்கா 3:22) இது “நன்றாய்ப் பிரியப்பட்டிருப்பது, தயவுடன் கருதுவது, மகிழ்ச்சிகொள்வது,” என பொருள்கொள்கிறது. மேலும் அதன் பெயர்ச்சொல், “நற்பிரியம், நல்மனமகிழ்ச்சி, தயவு, விருப்பம், ஆசை,” என்ற கருத்தைக் கொண்டிருக்கிறது. யுடொகீயோ (Eu·do·keʹo) தெய்வீக அங்கீகாரத்துக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டில்லை. உதாரணமாக, மக்கெதோனியாவிலிருந்தக் கிறிஸ்தவர்கள் மற்றவர்களுடன் பணத்தைப் பகிர்ந்துகொள்ள “பிரியம்” கொண்டார்கள். (ரோமர் 10:1; 15:26; 2 கொரிந்தியர் 5:8; 1 தெசலோனிக்கேயர் 2:8; 3:1, தி.மொ.) ஆயினும், இயேசு பெற்ற அங்கீகாரம் மனிதரால் அல்ல கடவுளால் வெளிப்படுத்திக் கூறப்பட்டது. இந்தப் பதம், இயேசு முழுக்காட்டப்பட்ட பின்பே அவருக்குப் பயன்படுத்தப்பட்டது. (மத்தேயு 17:5; 2 பேதுரு 1:17) கவனத்தைக் கவருவதாய், லூக்கா 2:52-ல் இயேசு, முழுக்காட்டப்படாத இளைஞனாகக் கடவுளிடமிருந்தும் மனிதரிடமிருந்தும் “தயவைப்” பெறுவதைப் பற்றிப் பேசியிருப்பதில்—காரிஸ் (khaʹris)—என்ற வேறு சொல் பயன்படுத்தியிருக்கிறது.
5 நம்மைப்போன்ற அபூரண மனிதருங்கூட கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற முடியுமா? மகிழ்ச்சியுண்டாக, இதற்குப் பதில் ஆம் என்பதே. இயேசு பிறந்தபோது தூதர்கள் பின்வருமாறு அறிவித்தார்கள்: “மேலே உன்னதங்களில் கடவுளுக்கு மகிமை, பூமியின்மேல் நற்பிரிய [eu·do·kiʹas] மனிதருக்குள் சமாதானம்,” (லூக்கா 2:14, NW) சொல்லர்த்தமான கிரேக்கில், அந்தத் தூதர்கள், “நன்றாய் எண்ணப்படும் மனிதருக்கு” அல்லது “கடவுள் அங்கீகரிக்கும் மனிதருக்கு” வரவிருந்த ஆசீர்வாதத்தைப் பற்றிப் பாடினார்கள்.a என் அன்த்ரோபாய்ஸ் யுடொகீயாஸ் [en anthroʹpois eu·do·kiʹas] என்பதன் இந்த உபயோகத்தைப் பற்றிப் பேராசிரியர் ஹான்ஸ் பியட்டென்ஹார்ட் பின்வருமாறு எழுதுகிறார்: “இந்தச் சொற்றொடர் கடவுளுடைய நல் மனமகிழ்ச்சிக்குரிய மனிதரைக் குறிப்பிடுகிறது . . . ஆகையால், நாம் இங்கே மனிதரின் நற்பிரியத்தைப் பற்றிக் கருதுவதில்லை . . . கடவுளுடைய உன்னத மற்றும் கருணை நிறைந்த சித்தத்தைப் பற்றியே கருதுகிறோம், இது இரட்சிப்புக்காக ஒரு ஜனத்தைத் தனக்குத் தெரிந்துகொள்ளுகிறது.” இவ்வாறு, யெகோவாவின் சாட்சிகள் வெகு காலம் விளக்கிவந்ததுபோல், லூக்கா 2:14, ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படுவதன்மூலமே, அபூரண மனிதர் நற்பிரிய மனிதராக, கடவுள் அங்கீகரித்த மனிதராக முடியுமென காட்டுகிறது!b
6 எனினும், ‘துர்க் கிரியைகளின்பேரில் மனதை வைத்து கடவுளின் சத்துருக்களாக’ இருப்பதற்கும், நீதியும் ஞானமுமுள்ள நம் கடவுளின் அங்கீகரிக்கப்பட்ட உடனுழைப்பாளராக இருப்பதற்கும் உள்ள வேறுபாடு எத்தகையதென்பதை நீங்கள் தெளிவாய் உணரலாம். (கொலோசெயர் 1:21, NW; சங்கீதம் 15:1-5) ஆகையால், மனிதர் அங்கீகரிக்கப்பட்டவர்களாக முடியுமென்பதை அறிந்ததால் நீங்கள் மன அமைதியடைந்தபோதிலும், அதில் உட்பட்டிருப்பதென்னவென்பதை அறிய நீங்கள் விரும்பலாம். கடவுளுடைய கடந்தகால செயல்களிலிருந்து இதைப் பற்றி நாம் அதிகம் கற்றுக்கொள்ளலாம்.
அவர் ஜனங்களை வரவேற்றினார்
7 லூக்கா 2:14-ல் உள்ள அறிவிப்பு கொடுப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், ஜனங்கள் வந்து தம்மை வணங்கும்படி யெகோவா அவர்களுக்கு வரவேற்பளித்தார். நிச்சயமாகவே, கடவுள் தனியே இஸ்ரவேல் ஜனத்துடன் தொடர்புகொண்டிருந்தார், அந்த ஜனம் அவருக்கு ஒப்புக்கொடுத்திருந்தது. (யாத்திராகமம் 19:5-8; 31:16, 17) எனினும், இஸ்ரவேலர் எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து வெளிவந்தபோது, “அவர்களோடுகூடப் பல ஜாதியாரான திரள் ஜனங்கள் போன”தை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். (யாத்திராகமம் 12:38) கடவுளுடைய ஜனங்களோடு ஒருவேளை தொடர்புகொண்டிருந்து எகிப்தின்மேல் வந்த வாதைகளைக் கண்கூடாகக் கண்டிருந்த இஸ்ரவேலரல்லாத இவர்கள் இப்பொழுது இஸ்ரவேலரோடுகூட செல்லத் தெரிந்துகொண்டார்கள். சிலர் முழுமையாய் யூத மதத்துக்கு மாறியவர்களாகியிருக்கலாம்.
8 கடவுளின் மற்றும் அவருடைய ஜனத்தின் சம்பந்தமாக இஸ்ரவேலரல்லாத இவர்களின் அமர்வுநிலையை நியாயப்பிரமாண உடன்படிக்கை ஒப்புக்கொண்டது. அந்நியர்களில் சிலர், இஸ்ரவேலரின் தேசத்தில் வெறுமென தங்கியிருந்த குடியிருப்பாளராயிருந்தார்கள், இவர்கள் அங்கே அடிப்படைச் சட்டங்களுக்குக், கொலைசெய்வதற்கெதிரான சட்டம், ஓய்வுநாளைக் கைக்கொள்வதற்குத் தேவைப்பட்ட சட்டங்கள் போன்றவற்றிற்குக் கீழ்ப்படியவேண்டியிருந்தது. (நேகேமியா 13:16-21) இந்தக் குடியிருப்பாளர்களைச் சகோதரராக ஏற்பதைப் பார்க்கிலும், இஸ்ரவேலர் அவர்களோடு பேசுகையில் அல்லது தொடர்புகொள்கையில் தகுதியான எச்சரிக்கையுடனிருந்தார்கள், ஏனெனில் அவர்கள் இன்னும் கடவுளுடைய ஜனத்தின் பாகமாயில்லை. உதாரணமாக, தானே செத்த ஒரு மிருகத்தின் இரத்தம்-வடிக்கப்படாத உடலை இஸ்ரவேலன் ஒருவன் வாங்கிச் சாப்பிட அனுமதிக்கப்படாதபோது, யூத மதத்துக்கு மாறாத அத்தகைய அந்நியர்கள் அவ்வாறு செய்யலாம். (உபாகமம் 14:21; எசேக்கியேல் 4:14) காலப் போக்கில் இந்த அந்நிய குடியிருப்பாளரில் சிலர், யூத மதத்தை ஏற்று விருத்தசேதனஞ்செய்யப்பட்ட மற்ற அந்நியரின் போக்கைப் பின்தொடரலாம். அப்பொழுதே அவர்கள் உண்மையான வணக்கத்தில் சகோதரராக நடத்தப்பட்டார்கள், நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொள்ளவேண்டிய பொறுப்புள்ளவர்களானார்கள். (லேவியராகமம் 16:29; 17:10; 19:33, 34; 24:22) மோவாபியப் பெண் ரூத்தும், சீரியனான குஷ்டரோகி நாகமானும், கடவுள் ஏற்றுக்கொண்ட இஸ்ரவேலரல்லாதவர்கள்.—மத்தேயு 1:5; லூக்கா 4:27.
9 அரசன் சாலொமோனின் நாட்களிலும், இஸ்ரவேலரல்லாதவர்களிடம் கடவுளின் வரவேற்பு மனப்பான்மையை நாம் காண்கிறோம். ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தபோது, சாலொமோன் பின்வருமாறு ஜெபித்தான்: “உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் . . . உமது நாமத்தினிமித்தம் தூர தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால், . . . பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கு . . . செய்வீராக.” (1 இராஜாக்கள் 8:41-43) ஆம், தம்மை நாடித்தேடின உண்மை மனமுள்ள அந்நியரின் ஜெபங்களை யெகோவா வரவேற்றினார். ஒருவேளை இவர்களும் அவருடைய சட்டங்களைக் கற்று, விருத்தசேதன செயலுக்கு உடன்பட்டு, அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட ஜனத்தின் ஏற்கப்பட்ட உறுப்பினராகலாம்.
10 பிற்காலங்களில் இதைச் செய்த ஒரு மனிதன், தூர தேசமான எத்தியோப்பியாவில் அரசி கந்தாகேக்குப் பொக்கிஷதாரியாயிருந்தவனே. பெரும்பாலும், அவன், யூதரையும் அவர்களுடைய வணக்கத்தையும் பற்றி முதன்முதல் கேள்விப்பட்டபோது, அவனுடைய வாழ்க்கைப்பாங்கு அல்லது மதப்போக்குகள் யெகோவாவுக்கு ஏற்கத்தகாதவையாக இருந்திருக்கலாம். ஆகவே யூதர்கள், இந்த அந்நிய மனிதன் கடவுள் கேட்கும் தகுதிகளைக் கற்றறிய தங்களுக்குள்ளிருந்து நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொண்டிருந்தபோது ஓரளவு சகிப்புத்தன்மையைக் காட்டவேண்டியிருந்திருக்கும். அவன் படிப்படியாய் முன்னேற்றமடைந்து விருத்தசேதனஞ்செய்யப்படுவதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்தானெனத் தெரிகிறது. அவன் “பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்”தான் என்று அப்போஸ்தலர் 8:27-ல் நமக்குச் சொல்லியிருக்கிறது. (யாத்திராகமம் 12:48, 49) இது, அவன் அப்பொழுது முழுமையாய் யூத மதத்துக்கு மாறியிருந்தானென காட்டுகிறது. இவ்வாறு அவன் மேசியாவை ஏற்று அவருடைய ஒப்புக்கொடுத்த சீஷனாகி, இதனால் கடவுளுடைய படிப்படியாய் வெளிப்படும் சித்தத்துக்கிசைய வரும் நிலையில் இருந்தான்.
அவிசுவாசிகளும் கிறிஸ்தவ சபையும்
11 இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்குப் பின்வருமாறு சொன்னார்: ஆகையால் போய்ச் சகல ஜாதிகளின் ஜனங்களையும் சீஷராக்கி, பிதாவின் குமாரனின் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரில் அவர்களை முழுக்காட்டி, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள்.” (மத்தேயு 28:19, 20) இப்போதுதான் குறிப்பிட்ட யூத மதம்மாறிய அந்த எத்தியோப்பியன் யெகோவாவையும் பரிசுத்த ஆவியையும் பற்றிய அறிவை ஏற்கெனவே கொண்டிருந்தான். ஆகையால் இயேசுவே கடவுளுடைய மேசியானிய குமாரன் என விளங்கிக்கொள்ளவும் ஏற்கவும் ஒருமுறை பிலிப்பு அவனுக்கு உதவிசெய்தப் பின்பு, அவன் முழுக்காட்டப்படக் கூடியவனாயிருந்தான். இவ்வாறு அவன் கிறிஸ்துவைப் பின்பற்றின யெகோவாவின் ஜனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உறுப்பினனாவான். இயல்பாகவே, அவன் கடவுளுக்குப் பதில் சொல்லும் பொறுப்புடையவனாயிருப்பான், ‘கிறிஸ்தவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாக் காரியங்களையும் கைக்கொள்ளும்படி’ எதிர்பார்க்கப்படுவான். ஆனால் இந்தப் பொறுப்புடன் ஓர் அதிசயமான எதிர்பார்ப்பு வந்தது: இரட்சிப்பு!
12 பின்னால், பவுல் கிறிஸ்தவர்கள் யாவரும் ‘அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் தங்கள் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள்’ என்று எழுதினான். அப்படிச் செய்வது கூடிய காரியமாக இருக்கிறது, “ஏனெனில், தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி [eu·do·kiʹas] விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.”—பிலிப்பியர் 2:12, 13.
13 உண்மையான கிறிஸ்தவர்களிடம் தொடர்பு கொண்ட எல்லாருமே அந்த எத்தியோப்பியனைப்போல் விரைவில் முழுக்காட்டுதலுக்கு உட்பட அவ்வளவு ஆயத்தமாயும் தகுதிபெற்றும் இல்லை. சிலர், யூதராகவோ யூத மதம்மாறிவர்களாகவோ இராததனால், யெகோவாவையும் அவருடைய வழிகளையும் பற்றிய அறிவு அவர்களுக்குச் சிறிதே இருந்தது அல்லது ஒன்றுமே இல்லை; அவர்களுடைய ஒழுக்கநெறிகளும் அவருடைய தராதரங்களால் வழிநடத்தப்படவில்லை. இவர்கள் எவ்வாறு கையாளப்படுவார்கள்? கிறிஸ்தவர்கள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றவேண்டும். அவர் நிச்சயமாகவே பாவத்தைத் துணிவூட்டவுமில்லை, கண்டும் காணாமல் இருந்துவிடவுமில்லை. (யோவான் 5:14) இருப்பினும், தம்மிடம் அணுகி, தங்கள் வழிகளைக் கடவுளுடைய வழிகளுக்கு ஒத்திசைவாய்க் கொண்டுவர விரும்பின பாவிகளிடம் அவர் சகிப்புத் தன்மையைக் காட்டினார்.—லூக்கா 15:1-7.
14 கடவுளைப்பற்றிக் கற்றுக்கொண்டிருந்தவர்களைக் கிறிஸ்தவர்கள் சகிப்புத் தன்மையுடன் நடத்தினார்களென்பது கொரிந்துவில் கூட்டங்களைப்பற்றிப் பவுல் சொன்ன குறிப்புகளிலிருந்து தெளிவாய்த் தெரிகிறது. தொடக்கத்தில் கிறிஸ்தவத்தைக் கடவுளுடைய ஆசீர்வாதத்தைக் கொண்டிருந்ததென குறிப்பிட்டுக் காட்டின ஆவியின் அற்புத வரங்களைப் பயன்படுத்துவதைப் பற்றித் தர்க்கித்துப் பேசுகையில், பவுல் “விசுவாசிகளை”யும் “அவிசுவாசிகளை”யும் குறிப்பிட்டான். (1 கொரிந்தியர் 14:22) கிறிஸ்துவை ஏற்று முழுக்காட்டப்பட்டவர்களே “விசுவாசிகள்” (அப்போஸ்தலர் 8:13; 16:31-34) “கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் [முழுக்காட்டுதல்] பெற்றார்கள்.”—அப்போஸ்தலர் 18:8.
15 1 கொரிந்தியர் 14:24-ன் (தி.மொ.) பிரகாரம், ‘அவிசுவாசிகள் அல்லது சாமானியமானவர்களும்’ கொரிந்துவில் கூட்டங்களுக்கு வந்தார்கள், அங்கே அவர்கள் வரவேற்றப்பட்டார்கள்.c அவர்கள் பெரும்பாலும், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதிலும் பொருத்திப் பயன்படுத்துவதிலும் தங்கள் முன்னேற்றத்தில் வேறுபட்டிருக்கலாம். சிலர் ஒருவேளை இன்னும் பாவம் செய்துகொண்டிருக்கலாம். மற்றவர்கள் ஓரளவு விசுவாசத்தை அடைந்து, ஏற்கெனவே தங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்திருப்பார்கள், மேலும், முழுக்காட்டப்படுவதற்கு முன்பே, தாங்கள் கற்றதை மற்றவர்களுக்குச் சொல்லத் தொடங்கியிருக்கலாம்.
16 நிச்சயமாகவே, முழுக்காட்டப்படாத இத்தகையோர் ஒருவரும் ‘கர்த்தருக்குட்பட்டவராக’ இல்லை. (1 கொரிந்தியர் 7:39) அவர்கள் கடந்தக் காலத்தில் வினைமையான ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய குற்றங்களில் ஈடுபட்டிருந்தால், கடவுளுடைய தராதரங்களுக்குப் பொருந்தத் தங்கள் வாழ்க்கையைக் கொண்டுவர அவர்களுக்குக் காலமெடுத்திருக்குமென்பது விளங்கத்தக்கதே. இதற்கிடையில், சபையின் விசுவாசத்தையும் சுத்தத்தையும் நிலைகுலைவிக்கக் கெடு நோக்கத்துடன் அவர்கள் முயற்சி செய்யவில்லையென்றால், அவர்கள் வரவேற்றப்பட்டார்கள். கூட்டங்களில் அவர்கள் கண்டவையும் கேட்டவையும் ‘அவர்களுடைய இருதயத்தின் அந்தரங்கங்கள் வெளியரங்கமா’கையில் ‘அவர்களை உணர்த்துவிக்க’ முடியும்.—1 கொரிந்தியர் 14:23-25; 2 கொரிந்தியர் 6:14.
இரட்சிப்படைய கடவுள் அங்கீகரித்தவராக நிலைத்திருத்தல்
17 முதல் நூற்றாண்டில் முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்கள் செய்த வெளிப்படையான பிரசங்க உழியத்தின்மூலம், ஆயிரக்கணக்கானோர் நற்செய்தியைக் கேட்டார்கள். தாங்கள் கேட்டவற்றில் அவர்கள் விசுவாசம் வைத்து, தங்கள் கடந்தக்கால போக்கைவிட்டு மனந்திரும்பி, “இரட்சிப்புண்டாக யாவரறிய அறிக்கை” செய்து, முழுக்காட்டப்பட்டார்கள். (ரோமர் 10:10-15, NW; அப்போஸ்தலர் 2:41-44; 5:14; கொலோசெயர் 1:23) அக்காலத்தில் முழுக்காட்டப்பட்டவர்கள் யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றார்கள் என்பதற்குச் சந்தேகம் எதுவுமில்லை, ஏனெனில் அவர் அவர்களைப் பரிசுத்த ஆவியால் அபிஷேகஞ்செய்து, ஆவிக்குரிய குமாரராக சுவிகாரம் செய்தார். அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினான்: “தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே [யுடொகீயன்], நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.” (எபேசியர் 1:6) இவ்வாறு, இயேசுவின் பிறப்பின்போது தூதர்கள்: “நற்பிரிய மனிதருக்குள் [அல்லது, கடவுளுடைய அங்கீகாரத்தைக்கொண்டுள்ள மனிதருக்குள்] சமாதானம்” என்று முன்னறிவித்தது, அதே நூற்றாண்டுக்குள் உண்மையாய் நிரூபிக்கத் தொடங்கினது.—லூக்கா 2:14, NW.
18 இந்தச் சமாதானத்தைத் தொடர்ந்து காத்துவர, அந்த “நற்பிரிய மனிதர்” “அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் [தங்கள்] இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்பட” வேண்டியிருந்தது. (பிலிப்பியர் 2:12) அது எளிதாயில்லை, ஏனெனில் அவர்கள் இன்னும் அபூரண மனிதராகவே இருந்தனர். தவறுசெய்ய தூண்டும் சோதனைகளையும் நெருக்கடிகளையும் அவர்கள் எதிர்ப்படுவார்கள். தவறுசெய்வதற்கு அவர்கள் இடங்கொடுத்தால், கடவுளுடைய அங்கீகாரத்தை இழந்துவிடுவார்கள். இதனால், சபைகளுக்கு உதவிசெய்யவும் அவற்றைப் பாதுகாக்கவும் ஆவிக்குரிய மேய்ப்பர்களை யெகோவா அன்புடன் ஏற்பாடு செய்தார்.—1 பேதுரு 5:2, 3.
19 இத்தகைய சபை மூப்பர்கள் பவுலின் பின்வரும் அறிவுரையை இருதயத்தில் ஏற்பர்: “ஒருவன் [தான் அதை உணருவதற்கு முன்] யாதொரு குற்றத்தில் அகப்பட்டபோதிலுங்கூட ஆவிக்குரிய [தகுதியுடைய]வர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; சீர்பொருந்தப்பண்ணும் நீயும் சோதிக்கப்படாதபடி பார்த்துக்கொள்.” (கலாத்தியர் 6:1, தி.மொ.) நாம் விளங்கிக்கொள்ள முடிகிற பிரகாரம், முக்கிய படியான முழுக்காட்டுதலை மேற்கொண்ட ஒருவன், இஸ்ரவேலில் யூதமதம் மாறி விருத்தசதனஞ்செய்யப்பட்டவனான ஓர் அந்நியன் காரியத்தில் உண்மையாயிருந்ததுபோலவே, பதில்சொல்லவேண்டிய அதிகப்பட்ட பொறுப்புடையவனாயிருப்பான். இருந்தபோதிலும், முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவன் தவறுசெய்துவிட்டால், சபைக்குள் அன்புள்ள உதவியை அவன் கண்டடையலாம்.
20 வினைமையான தவறுசெய்துவிட்ட ஒருவனுக்குச் சபையிலுள்ள மூப்பர் குழு உதவிசெய்ய முன்வரலாம். யூதா எழுதினதாவது: “சந்தேகத்திலிருக்கிற சிலருக்கு இரக்கம்பாராட்டி அக்கினியிலிருந்து பறித்திழுப்பதுபோல அவர்களைத் தப்புவித்து இரட்சியுங்கள். மற்றும் சிலருக்கோ பயத்தோடே இரக்கம்பாராட்டி மாமிசத்தால் கறைபட்ட [உள்] வஸ்திரத்தையும் வெறுத்துவிடுங்கள்.” (யூதா 22, 23, தி.மொ.) இம்முறையில் உதவிசெய்யப்பட்ட, சபையின் முழுக்காட்டப்பட்ட ஓர் உறுப்பினன் யெகோவாவின் அங்கீகாரத்தையும் இயேசுவின் பிறப்பின்போது தூதர்கள் குறிப்பிட்டுப் பேசின சமாதானத்தையும் தொடர்ந்து அனுபவிக்க முடியும்.
21 அரிதாக இருப்பினும், தவறுசெய்தவர் மனந்திரும்புதலைக் காட்டாதச் சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன. அப்பொழுது சுத்தமான சபையைத் தூய்மைக்கேடு செய்யாதபடி பாதுகாக்க மூப்பர்கள் அவனைச் சபைக்குப் புறம்பாக்கவேண்டும். இது, கொரிந்துவில், ஒழுக்கக்கேட்டு உறவில் விடாதுதொடர்ந்த முழுக்காட்டப்பட்ட ஒரு மனிதனுக்கு நடந்தது. பவுல் அந்தச் சபைக்குப் பின்வருமாறு அறிவுரை கொடுத்தான்: “விபசாரக்காரரோடு கலந்திருக்கக்கூடாதென்று . . . எழுதினேன். ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போக வேண்டியதாயிருக்குமே. நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.”—1 கொரிந்தியர் 5:9-11.
22 அந்தக் கொரிந்திய மனிதன் முக்கிய படியாகிய முழுக்காட்டுதலுக்கு உட்பட்டு, கடவுளின் அங்கீகாரத்தைப் பெற்று, சபையின் ஓர் உறுப்பினனாகியிருந்ததால், அவன் சபைக்குப் புறம்பாக்கப்பட்டது வினைமையான காரியம். அவன், கடவுளுடன் தான் கொண்டிருந்த அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையை வேண்டாமென தள்ளிவிட்டதால், கிறிஸ்தவர்கள் அவனோடு கூட்டுறவு வைத்துக்கொள்ளக்கூடாதென பவுல் குறிப்பிட்டுக் காட்டினான். (2 யோவான் 10, 11-ஐ ஒத்துப் பாருங்கள்.) சபைக்குப் புறம்பாக்கப்பட்ட இத்தகையோரைப் பற்றி பேதுரு எழுதினதாவது: “அவர்கள் நீதியின் மார்க்கத்தை [திருத்தமாய், NW] அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப் பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். நாய் தான் கக்கினதைத் தின்னவும், . . . திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.”—2 பேதுரு 2:21, 22.
23 இத்தகைய ஆட்கள் தவறுசெய்து மனந்திரும்பாமற்போனதனிமித்தம் சபைக்குப் புறம்பாக்கப்பட்டதால், யெகோவா அவர்களை அங்கீகரிக்கப்பட்டவர்களாகக் கருத முடியாதென்பது தெளிவாயிருக்கிறது. (எபிரெயர் 10:38; 1 கொரிந்தியர் 10:5-ஐ ஒத்துப் பாருங்கள்.) தெளிவாகவே, ஒரு சிறுபான்மையோரே சபைக்குப் புறம்பாக்கப்பட்டனர். ‘கடவுளிடமிருந்து தகுதியற்றத் தயவையும் சமாதானத்தையும்’ பெற்று, ‘அவருடைய சித்தத்தின் நற்பிரியத்தின்படி குமாரராக சுவிகரிக்கப்பட்டவர்களில்’ பெரும்பான்மையோர் உண்மையாய் நிலைத்திருந்தனர்.—எபேசியர் 1:2, 5, [6, யூனியன் மொழிபெயர்ப்பு] 8-10, NW.
24 நம்முடைய காலத்திலும் அடிப்படையாய் இவ்வாறே இருக்கிறது. எனினும், ‘அவிசுவாசிகள் அல்லது சாமானியமானவர்கள்’ இன்று கடவுள் அங்கீகரித்தவர்களாவதற்கு எவ்வாறு உதவிசெய்யலாம் மேலும் காலப்போக்கில் அவர்கள் தவறுசெய்தால் அவர்களுக்கு உதவி செய்ய என்ன செய்யலாமென நாம் கவனிக்கலாம். பின்வரும் கட்டுரையில் இந்தக் காரியங்கள் ஆலோசிக்கப்படும். (w88 11⁄15)
[அடிக்குறிப்புகள்]
a ஒத்துப் பாருங்கள்: “அவர்-அங்கீகரிக்கிற-மனிதர்,” ஜார்ஜ் ஸ்வான் இயற்றிய நியு டெஸ்டமென்ட்; “அவர் பிரியங்கொண்டுள்ள மனிதர்,” தி ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வெர்ஷன்.
b ஆங்கில காவற்கோபுரம் அக்டோபர் 15, 1964, பக்கங்கள் 629-33 பார்க்கவும்.
c ‘கிரேக்கச் சொல் ἄπιστος (அப்பிஸ்டாஸ், அவிசுவாசி) என்பதும், ιδιώτης (இடியாடீஸ், தெளிந்தறிவில்லாதவன், விவரம் கேட்பவன்) என்பதும், கிறிஸ்தவ சபையின் இரட்சிக்கப்பட்டவர்களுக்கு மாறாக அவிசுவாசியின் வகுப்பில் இருக்கின்றன.’—தி எக்ஸ்பொஸிட்டர்ஸ் பைபிள் கமன்டரி, புத்தகத் தொகுதி 10, பக்கம் 275.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ வேத எழுத்துக்களின்படி, எப்பொழுதிருந்து மேலும் எம்முறையில் மனிதர் கடவுள் அங்கீகரித்தவராக முடியும்?
◻ தம்முடைய ஜனத்தின் மத்தியிலிருந்த அந்நியரைக் கடவுள் எவ்வாறு கருதினார்? ஆனால் இஸ்ரவேலர் ஏன் சகிப்புத்தன்மையோடு எச்சரிக்கையாயிருப்பதைச் சமநிலைப்படுத்த வேண்டியிருந்தது?
◻ கொரிந்துவில் “அவிசுவாசிகள்” கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வந்த உண்மையிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
◻ முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு, தம்முடைய அங்கீகரிக்கப்பட்ட ஊழியராக நிலைத்திருக்கும்படி உதவிசெய்ய கடவுள் என்ன ஏற்பாடு செய்திருக்கிறார்?
[கேள்விகள்]
1, 2. எந்தச் சந்தர்ப்பத்தில் இயேசு தெய்வீக அங்கீகார அறிவிப்பைப் பெற்றார்? இது ஏன் நம் அக்கறைக்குரியதாக இருக்கவேண்டும்?
3. கடவுளுடைய அங்கீகாரத்தைக் குறித்ததில், எதைப் பற்றி நாம் அக்கறை கொண்டிருக்கவேண்டும்?
4. (எ) கடவுளுடைய அறிவிப்பில் “அங்கீகரித்தேன்” என்ற கிரேக்கச் சொல்லின் கருத்தென்ன? (பி) இந்தக் காரியத்தில் இது பயன்படுத்தியிருப்பது ஏன் தனிப்பட்ட அக்கறைக்குரியது?
5. (எ) அபூரண மனிதர் கடவுள் அங்கீகரித்தவராக முடியுமென எவ்வாறு தெரிகிறது? (பி) “நற்பிரிய மனிதர்” யார்?
6. கடவுளுடைய அங்கீகாரத்தைப்பற்றி நாம் இன்னும் என்ன கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது?
7. கடவுளுடைய மனப்பான்மையைக் குறித்து யாத்திராகமம் 12:38 குறிப்பாக என்ன தெரிவிக்கிறது?
8. இஸ்ரவேலில் என்ன இரு வகையாரான அந்நியர்கள் தங்கியிருந்தனர்? இஸ்ரவேலர் அவர்களோடு தொடர்புகொண்ட முறையில் ஏன் வேறுபாடு இருந்தது?
9. அந்நியரிடம் கடவுள் கொண்டிருந்த மனப்பான்மையை சாலொமோன் எவ்வாறு உறுதிப்படுத்தினான்?
10. எத்தியோப்பிய மந்திரியை யூதர்கள் எவ்வாறு நடத்தியிருக்கலாம்? விருத்தசேதனம் அவனுக்கு ஏன் நன்மையாக இருந்தது?
11, 12. (எ) அந்த எத்தியோப்பியன் முழுக்காட்டப்பட்டபோது மேலும் என்ன மாற்றம் ஏற்பட்டது? (பி) இது எவ்வாறு பிலிப்பியர் 2:12, 13 உடன் பொருந்தியிருக்கிறது?
13. அந்த எத்தியோப்பிய மந்திரியைப்போல் அவ்வளவு சீக்கிரத்தில் முழுக்காட்டப்படாதவர்களைக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு கையாண்டிருப்பார்கள்?
14, 15. அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைத் தவிர வேறு எவ்வகையாரான ஆட்களும் கொரிந்துவில் கூட்டங்களுக்கு வந்தனர்? ஆவிக்குரிய முன்னேற்றத்தைக் குறித்ததில் அவர்கள் எவ்வாறு வேறுபட்டிருக்கலாம்?
16. சபைக் கூட்டங்களில் கிறிஸ்தவர்களுக்குள்ளிருப்பதிலிருந்து அத்தகைய ஆட்கள் எவ்வாறு பயனடைய முடிவும்?
17. லூக்கா 2:14 முதல் நூற்றாண்டில் என்ன நிறைவேற்றத்தைக் கொண்டிருந்தது?
18. அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் கடவுளுடன் தங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலையை ஏன் வெறுமென ஏற்று அதற்குக் கவனஞ்செலுத்தாதிருக்க முடியாது?
19, 20. முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்கள் தம்முடைய அங்கீகரிக்கப்பட்ட ஊழியராகத் தொடர்ந்திருக்கக் கூடியதற்கு என்ன ஏற்பாடுகளைக் கடவுள் செய்தார்?
21, 22. எவராவது மனந்திரும்பாத பாவியாகிவிட்டால் அதன் விளைவு என்னவாகும்? சபையின் உண்மைத்தவறாத உறுப்பினர் எவ்வாறு பிரதிபலிப்பார்கள்?
23. முதல் நூற்றாண்டில், கடவுளுடைய அங்கீகாரத்தைத் தொடர்ந்து காத்துக்கொள்வதைக் குறித்ததில் கிறிஸ்தவர்களுக்குள்ளிருந்த பொதுவான நிலைமை என்ன?
24. இந்தப் பொருளின் எந்த அம்சம் நாம் மேலும் கவனிக்கத்தக்கது?