வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஜூன் 4-10
பைபிளில் இருக்கும் புதையல்கள்|மாற்கு 15–16
“இயேசு—தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார்”
மாற் 15:24, 29-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
அவருடைய மேலங்கிகளில் யாருக்கு எது என்று . . . பங்குபோட்டுக்கொண்டார்கள்: மத்தேயுவும் மாற்குவும் லூக்காவும் குறிப்பிடாத இந்தக் கூடுதலான விவரங்களை யோவா 19:23, 24-ல் கொடுக்கப்பட்டுள்ளன: அநேகமாக மேலங்கி, உள்ளங்கி ஆகிய இரண்டுக்குமே ரோமப் படைவீரர்கள் குலுக்கல் போட்டார்கள்; அவருடைய மேலங்கிகளை “நான்கு பாகங்களாக்கி ஆளுக்கொரு பாகத்தை எடுத்துக்கொண்டார்கள்”; உள்ளங்கியைக் கிழிக்க அவர்கள் விரும்பாததால் அதற்காகக் குலுக்கல் போட்டார்கள்; மேசியாவின் உடைக்காக அவர்கள் குலுக்கல் போட்டது சங் 22:18-ன் நிறைவேற்றமாக இருந்தது. மரண தண்டனையை நிறைவேற்றியவர்கள், குற்றவாளிகளின் உடைகளை வைத்துக்கொள்வது வழக்கமாக இருந்ததாகத் தெரிகிறது. அதனால், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு குற்றவாளிகளின் உடையையும் மற்ற எல்லா பொருள்களையும் அவர்கள் உருவிக்கொண்டார்கள். இது குற்றவாளிகளுக்கு இன்னும் பெரிய அவமானமாக இருந்தது.
கேலியாகத் தலையை ஆட்டி: இந்தச் சைகை செய்யப்பட்டபோது பொதுவாக ஏதாவது வார்த்தைகளும் சொல்லப்பட்டன. இந்தச் சைகை அவமதிப்பையோ வெறுப்பையோ ஏளனத்தையோ காட்டியது. வழியில் போனவர்கள் தங்களுக்கே தெரியாமல் சங் 22:7-ஐ நிறைவேற்றினார்கள்.
மாற் 15:43-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
யோசேப்பு: சுவிசேஷ எழுத்தாளர்கள் யோசேப்பைப் பற்றி வித்தியாசப்பட்ட தகவல்களைப் பதிவு செய்திருப்பது, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருப்பதைக் காட்டுகிறது. யோசேப்பு ‘பணக்காரராக’ இருந்தார் என்று வரி வசூலிப்பவரான மத்தேயு எழுதினார். முக்கியமாக ரோமர்களுக்கு எழுதியபோது, யோசேப்பு ‘நியாயசங்கத்தின் மதிப்புக்குரிய உறுப்பினராக’ இருந்தார் என்றும், கடவுளுடைய அரசாங்கத்துக்காகக் காத்திருந்தார் என்றும் மாற்கு குறிப்பிட்டார். யோசேப்பு “நல்லவர், நீதிமான்” என்றும், இயேசுவுக்கு எதிராக நியாயசங்கம் தீட்டிய சதித்திட்டத்தை ஆதரிக்காதவர் என்றும் அனுதாப குணமுள்ள மருத்துவரான லூக்கா எழுதினார். யோசேப்பு “யூதர்களுக்குப் பயந்து,” இயேசுவின் சீஷராக இருந்ததை ‘வெளியே சொல்லாமல் இருந்தார்’ என்று யோவான் மட்டும்தான் எழுதினார்.—மத் 27:57-60; மாற் 15:43-46; லூ 23:50-53; யோவா 19:38-42.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மாற் 15:25-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
மூன்றாம் மணிநேரமாக: அதாவது, “காலை சுமார் 9 மணியாக.” இந்தப் பதிவு, யோவா 19:14-16-ல் உள்ள பதிவோடு முரண்படுவதுபோல் தெரிவதாகச் சிலர் சொல்கிறார்கள். ஏனென்றால், கொலை செய்யப்படுவதற்காக இயேசுவை பிலாத்து ஒப்படைத்தபோது, “சுமார் ஆறாம் மணிநேரமாக இருந்தது” என்று யோவானின் பதிவு சொல்கிறது. மணிநேரம் ஏன் வித்தியாசமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி வசனங்கள் முழுமையாக விளக்குவதில்லை. இருந்தாலும், பின்வரும் குறிப்புகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்: இயேசு இந்தப் பூமியிலிருந்த கடைசி நாளின் சம்பவங்கள் எந்தெந்த நேரத்தில் நடந்தன என்பதை சுவிசேஷப் பதிவுகள் பெரும்பாலும் ஒரேபோலத்தான் குறிப்பிடுகின்றன. உதாரணத்துக்கு, பொழுது விடிந்த பிறகு குருமார்களும் பெரியோர்களும் சந்தித்ததாகவும், இயேசுவை ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்துவிடம் கொண்டுபோனதாகவும் நான்கு சுவிசேஷப் பதிவுகளுமே சொல்கின்றன. (மத் 27:1, 2; மாற் 15:1; லூ 22:66–23:1; யோவா 18:28) இயேசு மரக் கம்பத்தில் அறையப்பட்டிருந்தபோது, “ஆறாம் மணிநேரத்திலிருந்து ஒன்பதாம் மணிநேரம்வரை” பூமி முழுவதும் இருள் சூழ்ந்திருந்ததாக மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று பேருமே குறிப்பிட்டிருக்கிறார்கள். (மத் 27:45, 46; மாற் 15:33, 34; லூ 23:44) இயேசு கொலை செய்யப்பட்ட நேரம் வித்தியாசமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு ஒரு காரணம், சாட்டையடியை மரண தண்டனையின் ஒரு பாகமாகச் சிலர் கருதியதாக இருக்கலாம். சிலசமயங்களில் சாட்டையடி மிகப் பயங்கரமாக இருந்ததால் தண்டிக்கப்பட்டவர் இறந்தேபோனார். இயேசுவின் விஷயத்தில், சாட்டையடி பயங்கரமாக இருந்ததால்தான், சித்திரவதைக் கம்பத்தை அவர் கொஞ்சத் தூரம் சுமந்துகொண்டு போன பிறகு இன்னொருவர் அதைச் சுமக்க வேண்டியதாகிவிட்டது. (லூ 23:26; யோவா 19:17) சாட்டையடி மரண தண்டனையின் முதல் கட்டமாகக் கருதப்பட்டிருந்தால், கொஞ்ச நேரம் கழித்துதான் இயேசு சித்திரவதைக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்பட்டிருப்பார். மத் 27:26, மாற் 15:15 ஆகிய வசனங்கள் இதை ஆதரிக்கின்றன; ஏனென்றால், சாட்டையால் அடிப்பதையும் மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்படுவதையும் அவை சேர்த்துக் குறிப்பிடுகின்றன. இப்படி, மரண தண்டனை ஆரம்பமான நேரம் அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்து வித்தியாசமாக இருந்திருக்கலாம். இயேசு மரக் கம்பத்தில் அறையப்பட்டபோது மரண தண்டனை ஆரம்பமானதாக பிலாத்து ஒருவேளை நினைத்திருக்கலாம்; அதனால்தான் இயேசு அதற்குள் இறந்துவிட்டதைக் குறித்து அவர் ஆச்சரியப்பட்டதாகத் தெரிகிறது. (மாற் 15:44) அதோடு, இரவு நேரத்தைப் போல பகல் நேரத்தையும் மும்மூன்று மணிநேரங்கள் கொண்ட நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் வழக்கம் அன்று இருந்தது; அதன்படியே பைபிள் எழுத்தாளர்கள் சம்பவங்களை அடிக்கடி பதிவு செய்தார்கள். பகல் நேரம் அப்படிப் பிரிக்கப்பட்டதால்தான் மூன்றாம், ஆறாம், அல்லது ஒன்பதாம் மணிநேரம் என்று அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறது; சூரிய உதயத்திலிருந்து, அதாவது காலை சுமார் 6 மணியிலிருந்து, அந்த நேரங்கள் கணக்கிடப்பட்டன. (மத் 20:1-5; யோவா 4:6; அப் 2:15; 3:1; 10:3, 9, 30) அதுமட்டுமல்ல, மக்களிடம் துல்லியமான கடிகாரங்கள் பொதுவாக இல்லை; அதனால்தான், யோவா 19:14 போன்ற வசனங்களில் “சுமார்” என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. (மத் 27:46; லூ 23:44; யோவா 4:6; அப் 10:3, 9) சுருக்கமாகச் சொன்னால், சாட்டையடி கொடுக்கப்பட்டதையும் மரக் கம்பத்தில் அறையப்பட்டதையும் சேர்த்து மாற்கு குறிப்பிட்டிருக்கலாம், ஆனால் மரக் கம்பத்தில் அறையப்பட்டதைப் பற்றி மட்டும் யோவான் குறிப்பிட்டிருக்கலாம். இரண்டு எழுத்தாளர்களுமே, தங்களுடைய கண்ணோட்டத்தின்படி தோராயமாக ஒரு நேரத்தை, அதாவது மூன்று மணிநேரப் பிரிவை, குறிப்பிட்டிருக்கலாம். அதோடு யோவான், “சுமார்” என்ற வார்த்தையைச் சேர்த்துக் குறிப்பிட்டார். இந்த எல்லா காரணங்களாலும்தான், வித்தியாசமான நேரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். மாற்குவின் பதிவு எழுதப்பட்டு நிறைய வருஷங்களுக்குப் பிறகு யோவான் தன்னுடைய பதிவில் வேறொரு நேரத்தைக் குறிப்பிட்டிருப்பது, அவர் வெறுமனே மாற்குவின் பதிவைப் பார்த்து எழுதவில்லை என்பதைக் காட்டுகிறது.
மாற் 16:8-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
யாரிடமும் எதையும் சொல்லவில்லை: மாற்குவின் பதிவுடைய கடைசி பாகத்தின் மிகப் பழமையான கையெழுத்துப் பிரதிகளை வைத்துப் பார்க்கும்போது, வசனம் 8-ல் உள்ள வார்த்தைகளுடன் மாற்குவின் சுவிசேஷம் முடிவடைகிறது. அந்த சுவிசேஷம் இப்படிச் சட்டென்று முடிவடைந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், மாற்குவின் எழுத்துப் பாணியைப் பார்த்தால் அவர்கள் சொல்வது சரியாக இருக்குமென்று தோன்றவில்லை; ஏனென்றால், மாற்கு பொதுவாக எல்லாவற்றையும் சுருக்கமாக எழுதினார். அதோடு, “பயத்தில் அவர்கள் யாரிடமும் எதையும் சொல்லவில்லை” என்ற வார்த்தைகளோடுதான் மாற்கு தன் பதிவை முடித்ததாக நான்காம் நூற்றாண்டு அறிஞர்களான ஜெரோமும் யூசிபியசும் சொல்கிறார்கள்.
நிறைய கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகளிலும் மொழிபெயர்ப்புகளிலும், 8-ஆம் வசனத்துக்குப் பிறகு விரிவான அல்லது சுருக்கமான ஒரு முடிவுரை சேர்க்கப்பட்டுள்ளது. (12 கூடுதலான வசனங்கள் அடங்கிய) விரிவான முடிவுரை, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோடெக்ஸ் அலெக்ஸாந்திரினஸ், கோடெக்ஸ் எஃபிரேமி சிரி ரெஸ்க்ரிப்டஸ், கோடெக்ஸ் பிஸே கான்ட்டாப்ரிகீன்ஸிஸ் ஆகிய கையெழுத்துப் பிரதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, லத்தீன் வல்கேட், கியுரிடோனியன் சிரியக், சிரியக் பெஷிட்டா ஆகியவற்றிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த கோடெக்ஸ் சைனாட்டிக்கஸ், கோடெக்ஸ் வாட்டிகானஸ் ஆகிய இரண்டு கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகள், நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோடெக்ஸ் சைனாட்டிக்கஸ் சிரியாக்கஸ், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சாஹிடிக் காப்டிக் கையெழுத்துப் பிரதி ஆகியவற்றில் அது இல்லை. அதேபோல், அர்மீனியன், ஜார்ஜியன் மொழிகளில் உள்ள மிகப் பழமையான கையெழுத்துப் பிரதிகளும், 8-ஆம் வசனத்தோடு முடிவடைகின்றன.
பிற்கால கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகள் சிலவற்றிலும் மொழிபெயர்ப்புகள் சிலவற்றிலும் (ஒருசில வரிகள்கொண்ட) சுருக்கமான முடிவுரை கொடுக்கப்பட்டுள்ளது. கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோடெக்ஸ் ரீஜியஸ், முதலில் சுருக்கமான முடிவுரையையும் பிறகு விரிவான முடிவுரையையும் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு முடிவுரையின் ஆரம்பத்திலும், அதை அன்றைய அறிஞர்கள் ஏற்றுக்கொண்டதாக ஒரு குறிப்பைச் சேர்த்திருக்கிறது. ஆனால், அந்த இரண்டு முடிவுரைகளில் எதையுமே நம்பகமானதென அது ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை.
சுருக்கமான முடிவுரை
மாற் 16:8-க்குப் பிறகு சேர்க்கப்பட்டுள்ள இந்தச் சுருக்கமான முடிவுரை, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட வேதாகமத்தின் பாகம் அல்ல:
ஆனால், தங்களுக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாவற்றையும் பேதுருவோடு இருந்தவர்களிடம் சுருக்கமாகச் சொன்னார்கள். இவற்றுக்குப்பின், இயேசுவே அவர்களை அனுப்பி, மீட்பையும் முடிவில்லா வாழ்வையும் பற்றிய பரிசுத்தமான, அழிவில்லாத செய்தியை கிழக்கிலிருந்து மேற்குவரை அறிவிக்கச் செய்தார்.
விரிவான முடிவுரை
மாற் 16:8-க்குப் பிறகு சேர்க்கப்பட்டுள்ள இந்த விரிவான முடிவுரை, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட வேதாகமத்தின் பாகம் அல்ல:
9 அந்த வாரத்தின் முதலாம் நாள் விடியற்காலையில் அவர் உயிர்த்தெழுந்த பின்பு, ஏழு பேய்கள் விரட்டப்பட்டிருந்த மகதலேனா மரியாளுக்கு முதலில் காட்சி அளித்தார்; 10 அவள் போய், முன்பு அவரோடு இருந்தவர்களுக்கு அதை அறிவித்தாள்; அவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருந்தார்கள். 11 அவர் உயிரடைந்துவிட்டதாகவும், அவரைப் பார்த்ததாகவும் அவள் சொன்னபோது அவர்கள் நம்பவில்லை. 12 அதன்பின், அவர்களில் இருவருக்கு வேறொரு ரூபத்தில் காட்சி அளித்தார்; அவர்கள் அப்போது நாட்டுப்புறத்திற்கு நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். 13 அவ்விருவரும் திரும்பிச் சென்று மற்ற அப்போஸ்தலர்களுக்கு அதை அறிவித்தார்கள். அதையும்கூட அவர்கள் நம்பவில்லை. 14 பிற்பாடு பதினோரு பேரும் சாப்பிட உட்கார்ந்திருந்தபோது, அவர்களுக்கு முன்பாக அவர் தோன்றினார். தாம் உயிரடைந்திருப்பதைப் பார்த்தவர்கள் சொன்னதை அவர்கள் நம்பாததால், அவர்களுக்கு விசுவாசம் இல்லாததையும் அவர்களுடைய பிடிவாத குணத்தையும் குறித்து அவர்களைக் கண்டித்தார். 15 பின்பு அவர்களிடம், “நீங்கள் உலகெங்கும் போய் எல்லா மக்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். 16 அதில் நம்பிக்கை வைத்து ஞானஸ்நானம் பெறுபவர்கள் மீட்புப் பெறுவார்கள், நம்பிக்கை வைக்காதவர்களோ தண்டிக்கப்படுவார்கள். 17 நம்பிக்கை வைப்பவர்கள் இந்த அடையாளங்களைச் செய்வார்கள்: என் பெயரில் பேய்களை விரட்டுவார்கள், வெவ்வேறு மொழிகளைப் பேசுவார்கள், 18 பாம்புகளைக் கையில் பிடிப்பார்கள், கொடிய விஷமுள்ள எந்தப் பானத்தைக் குடித்தாலும் அவர்களுக்கு ஒன்றுமே ஆகாது. நோயாளிகள்மீது கைகளை வைத்து அவர்களைக் குணமாக்குவார்கள்” என்றார்.
19 எஜமானராகிய இயேசு அவர்களுடன் பேசிய பின்பு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தார். 20 அவர் சொன்னபடியே அவர்கள் புறப்பட்டுப் போய், எல்லா இடங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள்; எஜமானரும் அவர்களுக்குத் துணையாக இருந்து, அந்தச் செய்தி உண்மையென அடையாளங்கள் மூலம் உறுதிப்படுத்தினார்.
ஜூன் 11-17
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 1
“மரியாளைப் போலவே மனத்தாழ்மையாக நடந்துகொள்ளுங்கள்”
‘இதோ, நான் யெகோவாவுக்கு அடிமை!’
12 காபிரியேலிடம் அவள் சொல்கிற இந்த வார்த்தைகள்... மிகுந்த மனத்தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் காட்டுகிற இந்த வார்த்தைகள்... விசுவாசமுள்ள எல்லோருக்கும் எதிரொலிக்கின்றன: “இதோ! நான் யெகோவாவின் அடிமைப் பெண்! உங்கள் வார்த்தையின்படியே எனக்கு நடக்கட்டும்.” (லூக். 1:38) அடிமைப் பெண் என்றாலே வேலைக்காரர்களில் மிகவும் தாழ்வானவள்; அவளது முழு வாழ்க்கையும் அவளது எஜமானருடைய கையில் இருந்தது. மரியாளும் தன் எஜமானராகிய யெகோவாவுக்குத் தான் ஓர் அடிமையாக இருப்பதாகத்தான் உணர்ந்தாள். அவருடைய கரங்களில் தான் பாதுகாப்பாய் இருப்பதாக... அவருக்கு உண்மையாய் இருப்பவர்களை அவர் தற்காப்பதாக... உணர்ந்தாள். அதேசமயம், இந்தச் சவாலான பொறுப்பை நிறைவேற்ற முழு முயற்சி எடுக்கும்போது யெகோவா ஆசீர்வதிப்பார் என்றும் நம்பினாள்.—சங். 31:23.
‘இதோ, நான் யெகோவாவுக்கு அடிமை!’
15 இப்போது, மரியாள் பேசுகிறாள். அவளது வார்த்தைகள் பைபிளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. (லூக்கா 1:46-55-ஐ வாசியுங்கள்.) அவளைப் பற்றிய பைபிள் பதிவுகளில் இந்தப் பதிவில்தான் அதிகமாய்ப் பேசியிருக்கிறாள். இதிலிருந்து அவளைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ளலாம். முதலாவதாக, மேசியாவின் தாயாகும் பாக்கியத்திற்காக யெகோவாவைப் போற்றிப் புகழ்கிறாள்; அவளுடைய நன்றியுணர்வு இதிலிருந்து தெரிகிறது. இரண்டாவதாக, ஆணவமுள்ளவர்களையும் அதிகாரமுள்ளவர்களையும் யெகோவா தாழ்த்தி, அவருக்குச் சேவை செய்ய விரும்புகிற தாழ்மையானவர்களையும் ஏழ்மையானவர்களையும் உயர்த்துகிறார் என்று சொல்கிறாள்; அவளுடைய ஆழமான விசுவாசம் இதிலிருந்து தெரிகிறது. மூன்றாவதாக, ஒரு கணக்கின்படி, எபிரெய வேதாகமத்திலிருந்து 20-க்கும் அதிகமான மேற்கோள்களைப் பயன்படுத்தியிருக்கிறாள்; கடவுளுடைய வார்த்தையை நன்கு அறிந்திருந்தாள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
16 வேதவசனங்களை மரியாள் ஆழ்ந்து யோசித்திருக்கிறாள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. என்றாலும், அவள் எப்போதும் மனத்தாழ்மையாக இருக்கிறாள், வேதவசனங்களிலிருந்து தான் புரிந்துகொண்டதைச் சொந்த வார்த்தைகளில் கூறாமல் அந்த வசனங்களிலுள்ள வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துகிறாள். அவளுடைய வயிற்றில் வளர்ந்துவருகிற பிள்ளையும் பிற்காலத்தில் அப்படித்தான் பேசினார்; “என் போதனை என்னுடையதல்ல, என்னை அனுப்பியவருடையது” என்று சொன்னார். (யோவா. 7:16) அதனால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘இதேபோல் பைபிள்மீது ஆழ்ந்த மதிப்பும் மரியாதையும் எனக்கு இருக்கிறதா? அல்லது, என்னுடைய சொந்த கருத்துகளையும் போதனைகளையும் சொல்ல விரும்புகிறேனா?’ இந்த விஷயத்தில் மரியாள் சிறந்த முன்மாதிரி!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
லூ 1:70-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
பலம்படைத்த மீட்பர் ஒருவரை: நே.மொ., “மீட்கும் கொம்பு ஒன்றை.” பலம், வெற்றி, கைப்பற்றுதல் ஆகியவற்றைக் குறிப்பதற்காக மிருகங்களின் கொம்புகள் பைபிளில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளன. (1சா 2:1, அடிக்குறிப்பு) அதோடு, நல்ல அல்லது கெட்ட ராஜாக்களையும் ராஜ பரம்பரைகளையும் அடையாள அர்த்தத்தில் குறிப்பதற்காக கொம்புகள் என்ற வார்த்தையை பைபிள் பயன்படுத்துகிறது. அவர்களுக்கு வெற்றி கிடைத்ததைப் பற்றிச் சொல்லும்போது, அவர்கள் கொம்புகளால் முட்டி மோதியதாகக் குறிப்பிடுகிறது. (உபா 33:17; தானி 7:24; 8:2-10, 20-24) இந்த வசனத்தில், “மீட்கும் கொம்பு” என்பது பலம்படைத்த மீட்பராகிய, அதாவது காப்பாற்றும் சக்தியுள்ளவராகிய, மேசியாவைக் குறிக்கிறது.
லூ 1:76-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
யெகோவாவுக்கு முன்னே போய்: யெகோவாவின் பெயரில், அதாவது அவருடைய பிரதிநிதியாக, வரவிருந்த இயேசுவுக்கு யோவான் ஸ்நானகர் வழியைத் தயார்ப்படுத்தினார்; இந்த அர்த்தத்தில்தான் அவர் ‘யெகோவாவுக்கு முன்னே போனார்.’—யோவா 5:43; 8:29.
ஜூன் 18-24
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 2–3
“இளம் பிள்ளைகளே—ஆன்மீக ரீதியில் முன்னேறுகிறீர்களா?”
லூ 2:41-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
எருசலேமுக்குப் போவது வழக்கம்: திருச்சட்டத்தின்படி, பெண்கள் பஸ்கா பண்டிகையில் கலந்துகொள்வது கட்டாயமாக இருக்கவில்லை. ஆனாலும், அந்தப் பண்டிகைக்காக வருஷா வருஷம் யோசேப்புடன் சேர்ந்து எருசலேமுக்குப் போவது மரியாளின் வழக்கமாக இருந்தது. (யாத் 23:17; 34:23) அவர்களுடைய குடும்பம் பெரிதாகிக்கொண்டே போனபோதிலும், பண்டிகைக்குப் போய்வர ஒவ்வொரு வருஷமும் அவர்கள் கிட்டத்தட்ட 300 கி.மீ. (190 மைல்) பயணம் செய்தார்கள்.
லூ 2:46, 47-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
அவர்களிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டும்: இயேசுவின் கேள்விகளைக் கேட்டவர்கள் பிரமித்துப்போனார்கள்; அந்தக் கேள்விகள், வெறும் ஆர்வத்தினால் ஒரு சிறுவன் கேட்ட கேள்விகள்போல் இருக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. (லூ 2:47) “கேள்விகள் கேட்டுக்கொண்டும்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை சில வசனங்களில், நீதிவிசாரணையின்போது கேட்கப்பட்ட கேள்விகளையும் குறுக்குக் கேள்விகளையும் குறிக்கலாம். (மத் 27:11; மாற் 14:60, 61; 15:2, 4) முக்கியமான சில மதத் தலைவர்கள், பண்டிகைகளுக்குப் பிறகு ஆலயத்தில் தங்கி, அங்கிருந்த விசாலமான கூடங்கள் ஒன்றில் போதிப்பது வழக்கமாக இருந்ததென சரித்திராசிரியர்கள் சொல்கிறார்கள். மக்கள் அவர்களுடைய காலடியில் உட்கார்ந்து கேள்விகள் கேட்பதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
பிரமித்துப்போனார்கள்: இதற்கான கிரேக்க வார்த்தை, தொடர்ந்து அல்லது திரும்பத் திரும்ப வியந்துபோவதைக் குறிக்கலாம்.
லூ 2:51, 52-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
தொடர்ந்து . . . கட்டுப்பட்டு நடந்தார்: வே.வா., “தொடர்ந்து . . . கீழ்ப்படிந்து நடந்தார்.” இதற்கான கிரேக்க வினைச்சொல், தொடர்நிகழ்காலத்தில் இருக்கிறது. அப்படியென்றால், கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய அறிவினால் ஆலயத்தில் இருந்த போதகர்களைப் பிரமிக்க வைத்த பிறகு, இயேசு தன்னுடைய வீட்டுக்குப் போய், மனத்தாழ்மையோடு தன் பெற்றோருக்குத் தொடர்ந்து கட்டுப்பட்டு நடந்தார் என்பது தெரிகிறது. வேறெந்த பிள்ளை காட்டிய கீழ்ப்படிதலையும்விட இயேசுவின் கீழ்ப்படிதல் ரொம்ப விசேஷமானதாக இருந்தது; ஏனென்றால், அப்படிக் கீழ்ப்படிவது திருச்சட்டத்தை மிக நுணுக்கமாக நிறைவேற்றுவதன் ஒரு அம்சமாக இருந்தது.—யாத் 20:12; கலா 4:4.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
லூ 2:14-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
பூமியில் அவருடைய அனுக்கிரகம் பெற்ற மக்களுக்குச் சமாதானமும் உண்டாகட்டும்: சில கையெழுத்துப் பிரதிகளில், “பூமியில் சமாதானமும் மக்களுக்கு அவருடைய அனுக்கிரகமும் உண்டாகட்டும்” என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படிதான் சில பைபிள்கள் இந்த வார்த்தைகளை மொழிபெயர்த்திருக்கின்றன. ஆனால் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், மிகவும் பழமையான மற்றும் நம்பகமான கையெழுத்துப் பிரதிகளில் கொடுக்கப்பட்டுள்ளபடி இந்த வார்த்தைகளை மொழிபெயர்த்திருக்கிறது. மக்களுடைய மனப்பான்மையும் செயல்களும் எப்படிப்பட்டதாக இருந்தாலும் எல்லாருக்குமே கடவுளுடைய அனுக்கிரகம் கிடைக்கும் என்பதைத் தேவதூதர்களுடைய இந்த அறிவிப்பு குறிக்கவில்லை. மாறாக, கடவுள்மேல் உண்மையான விசுவாசத்தைக் காட்டி, அவருடைய மகனின் சீஷர்களாக ஆகிறவர்களுக்கு அவருடைய அனுக்கிரகம் கிடைக்கும் என்பதைத்தான் இது குறிக்கிறது.—அடுத்த ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
அவருடைய அனுக்கிரகம் பெற்ற மக்களுக்கு: “அனுக்கிரகம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை யூடோக்கையா. இதை, “தயவு; பிரியம்; அங்கீகாரம்” என்றெல்லாம்கூட மொழிபெயர்க்கலாம். இதனோடு சம்பந்தப்பட்ட வினைச்சொல்லாகிய யூடோக்கீயோ, மத் 3:17; மாற் 1:11; லூ 3:22 ஆகிய வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது; இயேசு ஞானஸ்நானம் எடுத்தவுடன் கடவுள் பேசியதைப் பற்றி அந்த வசனங்கள் சொல்கின்றன. அந்த வினைச்சொல்லின் அடிப்படை அர்த்தம், “அங்கீகரிப்பது; பிரியம் வைப்பது; தயவு காட்டுவது; சந்தோஷப்படுவது.” இதன்படி, ‘அனுக்கிரகம் பெற்ற மக்கள்’ (ஆன்த்ரோபோயிஸ் யூடோக்கையாஸ்) என்ற வார்த்தைகள் கடவுளுடைய அங்கீகாரத்தையும் அனுக்கிரகத்தையும் பெற்ற மக்களைக் குறிக்கின்றன; இந்த வார்த்தைகளை, “அவரால் அங்கீகரிக்கப்படுகிற மக்களுக்கு; அவருடைய பிரியத்தைப் பெற்ற மக்களுக்கு” என்றும் மொழிபெயர்க்கலாம். அதனால், தேவதூதர்கள் செய்த இந்த அறிவிப்பு, பொதுவாக எல்லா மனிதர்களையும் பற்றிச் சொல்லாமல், கடவுள்மேல் உண்மையான விசுவாசத்தைக் காட்டுவதன் மூலமாகவும், அவருடைய மகனின் சீஷர்களாக ஆவதன் மூலமாகவும் அவரைப் பிரியப்படுத்துகிறவர்களைப் பற்றியே சொல்கிறது. யூடோக்கையா என்ற வார்த்தை சில வசனங்களில் மனிதர்களுடைய அனுக்கிரகத்தைக் குறிக்கலாம். என்றாலும், அது கடவுளுடைய அனுக்கிரகத்தை அல்லது பிரியத்தை அல்லது அவர் அங்கீகரிக்கிற வழியைக் குறிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது (மத் 11:26; லூ 10:21; எபே 1:5, 9; பிலி 2:13; 2தெ 1:11). கடவுளுடைய ‘அனுக்கிரகத்தை’ பற்றிச் சொல்லும்போது சங் 51:18-ல் [50:20, LXX] செப்டுவஜன்ட் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறது.
wp16.3-E 9 ¶1-3
உங்களுக்குத் தெரியுமா?
யோசேப்பின் தந்தை யார்?
நாசரேத் ஊரில் தச்சனாக இருந்த யோசேப்புதான் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக இருந்தார். ஆனால், யோசேப்பின் தந்தை யார்? மத்தேயு சுவிசேஷத்திலுள்ள இயேசுவின் வம்சாவளிப் பட்டியலில், யோசேப்பின் தந்தையின் பெயர் யாக்கோபு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் லூக்காவிலுள்ள பட்டியலில், யோசேப்பை “ஹேலியின் மகன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவுகள் ஏன் முரண்படுவதுபோல் தெரிகின்றன?—லூக்கா 3:23; மத்தேயு 1:16.
“யாக்கோபின் மகன் யோசேப்பு” என்று மத்தேயுவின் பதிவு சொல்கிறது. மகன் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைக்கான கிரேக்க வார்த்தை, யாக்கோபுதான் யோசேப்பின் தந்தை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மத்தேயு, யோசேப்பின் வம்சாவளியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். யோசேப்பின் வளர்ப்பு மகனான இயேசு, தாவீதின் அரச பரம்பரையில் வந்த சட்டப்பூர்வ வாரிசு என்பதை அதில் காட்டியிருக்கிறார்.
ஆனால் லூக்காவின் பதிவு, “ஹேலியின் மகன் யோசேப்பு” என்று சொல்கிறது. இங்கே “மகன்” என்ற வார்த்தையை “மருமகன்” என்றும் புரிந்துகொள்ளலாம். இதேபோன்ற உதாரணத்தை லூக்கா 3:27-ல் பார்க்கலாம். அங்கே, சலாத்தியேலை “நேரியின் மகன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சலாத்தியேலின் உண்மையான தந்தை எகொனியா. (1 நாளாகமம் 3:17; மத்தேயு 1:12) சலாத்தியேல், நேரியின் மகளை (இவளுடைய பெயர் பைபிளில் இல்லை) கல்யாணம் செய்திருக்கலாம்; அதனால் இவர் நேரியின் மருமகனாக இருந்தார்; ஆனாலும் மகன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். இதேபோன்ற கருத்தில்தான் யோசேப்பும், ஹேலியின் மகளைக் கல்யாணம் செய்ததால் அவருடைய “மகன்” என்று அழைக்கப்படுகிறார். லூக்கா, மரியாளின் வம்சாவளியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இயேசு ‘தாவீதின் சந்ததியில் மனிதனாகப் பிறந்ததால்’ அவரை தாவீதின் அரச பரம்பரையில் வந்த இயற்கை வாரிசு என்பதாக அதில் காட்டியிருக்கிறார். (ரோமர் 1:4) இப்படி, இயேசுவின் இரண்டு வித்தியாசமான வம்சாவளிப் பட்டியல்களை பைபிள் தருகிறது; இந்தத் தகவல்கள் நமக்குப் பயனுள்ளதாக இருக்கின்றன.
ஜூன் 25–ஜூலை 1
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 4–5
“இயேசுவைப் போலவே சோதனைகளை எதிர்த்து நில்லுங்கள்”
நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டுமென சிந்தித்துப் பாருங்கள்
8 வனாந்தரத்தில் இயேசுவின் மனதைக் கவர சாத்தான் இந்தச் சூழ்ச்சியையே பயன்படுத்தினான். இயேசு, 40 நாட்கள் இரவும் பகலும் விரதமிருந்த பிறகு, சாப்பிடுவதற்கான ஆசையைப் பயன்படுத்தி அவரைக் கவர்ந்திழுக்கப் பார்த்தான். “நீர் கடவுளுடைய மகன் என்றால், இந்தக் கல்லை ரொட்டியாகும்படி கட்டளையிடும்” என்று சொன்னான். (லூக். 4:1-3) இயேசுவுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் இருந்தன: சாப்பிட வேண்டுமென்ற இயல்பான ஆசையைத் திருப்திசெய்ய தம்மிடமிருந்த வல்லமையைப் பயன்படுத்தாதிருக்கலாம் அல்லது அதைப் பயன்படுத்தலாம். அந்த வல்லமையைச் சுயநல காரியங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்பதை இயேசு அறிந்திருந்தார். என்னதான் பசியாக இருந்தாலும், உணவைவிட கடவுளோடிருந்த நட்புறவே அவருக்கு முக்கியமாக இருந்தது. அதனால்தான், “மனிதன் ஆகாரத்தினால் மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் உயிர்வாழ்வான்” என்று இயேசு பதிலளித்தார்.—மத். 4:4.
நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டுமென சிந்தித்துப் பாருங்கள்
10 இயேசுவின் விஷயத்தில் என்ன நடந்தது? “ஒரு நொடிப்பொழுதில் இந்த உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவருக்குக் காண்பித்து, ‘இவை எல்லாவற்றின் மீதுள்ள அதிகாரத்தையும் இவற்றின் மகத்துவங்களையும் நான் உமக்குத் தருவேன்’” என்று சாத்தான் சொன்னான். (லூக். 4:5, 6) ஒரு நொடிப்பொழுதில் உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் இயேசு பார்த்திருக்க மாட்டார்; ஆனால், ஒரு தரிசனத்தில் அந்த ராஜ்யங்களின் மகத்துவங்களையே பார்த்திருப்பார். இது அவரைக் கவர்ந்திழுக்குமென சாத்தான் நினைத்திருக்கலாம். “ஒரேவொரு முறை நீர் என்னை வணங்கினால் இதெல்லாம் உம்முடையதாகும்” என்று துணிகரமாகச் சொன்னான். (லூக். 4:7) சாத்தானுடைய ஆசைக்கு இணங்கிவிடுவதைப் பற்றி இயேசு ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. சற்றும் தாமதிக்காமல், “‘உன் கடவுளாகிய யெகோவாவை வணங்கி, அவர் ஒருவருக்கே பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று இயேசு பதிலளித்தார்.—லூக். 4:8.
nwtsty மீடியா
ஆலயத்தின் உயரமான இடம்
சாத்தான் “ஆலயத்தின் உயரமான இடத்தில்” இயேசுவை உண்மையிலேயே நிற்க வைத்திருக்கலாம்; அங்கிருந்து குதிக்கும்படிதான் அவன் இயேசுவிடம் சொன்னதாகத் தெரிகிறது. ஆனால், சரியாக எந்த இடத்தில் இயேசு நின்றிருப்பார் என்று தெரியவில்லை. இங்கே ‘ஆலயம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை அந்த முழு வளாகத்தையும் குறித்திருக்கலாம். அதனால், இயேசு ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் (1) நின்றிருக்கலாம். அல்லது, ஆலய வளாகத்தின் வேறொரு மூலையில் நின்றிருக்கலாம். யெகோவா மட்டும் காப்பாற்றாமல் இருந்திருந்தால், இதில் எந்த இடத்திலிருந்து குதித்திருந்தாலும் கண்டிப்பாக உயிர் போயிருக்கும்.
நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டுமென சிந்தித்துப் பாருங்கள்
12 ஏவாளுக்கு நேர்மாறாக இயேசு மனத்தாழ்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். மற்றொரு வழியில் இயேசுவைச் சிக்க வைக்க சாத்தான் முயன்றான். மற்றவர்களின் கவனத்தைச் சுண்டியிழுக்கும் ஒரு காரியத்தைச் செய்யவும் அதன்மூலம் கடவுளைச் சோதித்துப் பார்க்கவும் சாத்தான் அவரைத் தூண்டினான். இயேசு அப்படிச் செய்திருந்தால் அது தற்பெருமைக்குரிய செயலாக இருந்திருக்கும். அதற்குப் பதிலாக, அவர் தெள்ளத்தெளிவாகவும் நேரடியாகவும் இப்படிச் சொன்னார்: “‘உன் கடவுளாகிய யெகோவாவைச் சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனச் சொல்லப்பட்டிருக்கிறதே.”—லூக்கா 4:9-12-ஐ வாசியுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
லூ 4:17-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
ஏசாயா தீர்க்கதரிசியின் சுருள்: ஏசாயா புத்தகத்தின் சவக் கடல் சுருள், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட 17 துண்டுகளால் ஆனது; அந்தச் சுருளில் 54 பத்திகள் இருந்தன. அதன் மொத்த நீளம் 7.3 மீ. (24 அடி); நாசரேத்தில் இருந்த ஜெபக்கூடத்தில் பயன்படுத்தப்பட்ட சுருள் இதேபோன்ற நீளத்தில் இருந்திருக்கலாம். முதல் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சுருள்களில், அதிகாரங்களின் எண்களோ வசனங்களின் எண்களோ கொடுக்கப்படவில்லை; அதனால், வாசிக்க நினைத்த வார்த்தைகளை இயேசு அந்தச் சுருளில் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அவர் அந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் ‘எழுதப்பட்டிருந்த பகுதியை எடுத்து’ வாசித்தது (வச. 19), கடவுளுடைய வார்த்தையை எந்தளவுக்கு நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார் என்பதைக் காட்டியது.
லூ 4:25-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
மூன்றரை வருஷங்களுக்கு: 1ரா 18:1-ன்படி “மூன்றாம் வருஷத்தில்” வறட்சி முடிவுக்கு வருமென்று எலியா அறிவித்தார். அந்தப் பதிவோடு இயேசுவின் வார்த்தைகள் முரண்படுவதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனாலும், அந்த வறட்சி மூன்று வருஷங்களுக்கும் குறைவான காலப்பகுதிக்கு நீடித்ததென்று எபிரெய வேதாகமம் சொல்வதில்லை. “மூன்றாம் வருஷத்தில்” என்ற வார்த்தைகள், அந்த வறட்சியைப் பற்றி முதன்முதலாக ஆகாபிடம் எலியா அறிவித்த சமயத்தில் ஆரம்பமான காலப்பகுதியைக் குறிப்பதாகத் தெரிகிறது. (1ரா 17:1) வறண்ட காலம் ஏற்கெனவே ஆரம்பமாகியிருந்த சமயத்தில்தான் அவர் அதை அறிவித்ததாகத் தெரிகிறது. வறண்ட காலம் பொதுவாக ஆறு மாதங்கள்வரை நீடித்தது, ஆனால் அந்தச் சமயத்தில் அது வழக்கத்தைவிட அதிக காலம் நீடித்திருக்கலாம். அதுமட்டுமல்ல, “மூன்றாம் வருஷத்தில்” எலியா மறுபடியும் ஆகாபைச் சந்தித்துப் பேசியவுடனே வறட்சி முடிவுக்கு வரவில்லை. அதன்பின் கர்மேல் மலையில் நடந்த நெருப்புப் பரீட்சைக்குப் பிறகுதான் அது முடிவுக்கு வந்தது. (1ரா 18:18-45) அதனால், இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிற இயேசுவின் வார்த்தைகளும் சரி, (அவருடைய தாயான மரியாளுக்கும் யோசேப்புக்கும் பிறந்த) யாக்கோபு தன் கடிதத்தில் (யாக் 5:17) பதிவு செய்திருக்கிற வார்த்தைகளும் சரி, 1ரா 18:1 சொல்லும் காலப்பகுதியோடு நன்றாக ஒத்துப்போகின்றன.