பைபிளின் கருத்து
ஒரு பிசாசு உண்மையிலேயே இருக்கிறானா?
நீங்கள் சிறு பிள்ளையாயிருக்கும் போது உங்களுக்கு இருட்டு என்றால் பயமாக இருந்ததா? ஒருவேளை உங்களுடைய வீட்டு சன்னலுக்கு வெளியே கோர உருவம் ஒன்று உங்களைப் பெற்றோரிடமிருந்து பறித்துச்செல்வதற்காகக் காத்துக்கொண்டிருப்பதாக நீங்கள் கற்பனை செய்திருக்கக்கூடும். இப்பொழுது நீங்கள் பெரியவர்களாயிருக்க, உண்மையான தகவல்களை வாசிக்கவும் நியாயமாகச் சிந்திக்கவும் முடிகிறதால் உங்கள் சிறுபிராய அச்சங்கள் அர்த்தமற்றதாய்த் தோன்றுகிறது. “எனவே ஒரு படி மேலே சென்று பிசாசை நீங்கள் அதே வரிசையில்—ஒரு பிள்ளையின் கற்பனைக்கடுத்த கோர உருவைப் போன்ற உண்மையற்ற ஒன்றின் வரிசையில் ஏன் வைக்கக் கூடாது?” என்று சில திறனாய்வாளர்கள் சொல்லுகிறார்கள்.
உண்மையில் பிசாசு என்பவன் இல்லையா? ஒரு மதத் துண்டுப்பிரதி அதைத்தான் உங்களுக்கு உறுதிப்படுத்துகிறது: “அப்படிப்பட்ட தீய கோர உரு பைபிள் அறியாத ஒன்று.” மேலும் “பிசாசு மற்றும் சாத்தான் என்ற பதங்களில் நாம் . . . மனித இயல்பின் பாகமாக இருக்கும் பாவம் மற்றும் பொல்லாங்கின் நியமத்தைக் கொண்டிருக்கிறோம்.” அல்லது ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒரு ஞாயிறுப் பள்ளி ஆசிரியர் இப்படியாகச் சொல்லுகிறார்: “மனிதர்தான் அந்தப் பிசாசுகள்.” இவையனைத்துமே சாதாரணமாகக் காணப்படுகிறதா? ஒருவேளை மிகவும் சாதாரணமான ஒன்றாகக் காணப்படுகிறதா?
மனித நடக்கையை விளக்குதல்
மனிதராகிய நாம்தாமே பிசாசுகள் என்றால், அநேகமாய் நாம் எல்லாருமே ஏன் குடும்ப நலனில் அக்கறைக் காண்பிக்கிறவர்களாய் இருக்கிறோம்? உதாரணமாக, தனிப்பட்டவர்களாகப் பெரும்பான்மையினர் தங்கள் குடும்பத்துக்கு உணவளித்துவருகிறார்கள்; அவர்கள் அறிந்தும் விஷம் அருந்துவதில்லை மற்றும் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆபத்துகளிலிருந்து தங்களைத் தவிர்த்துக்கொள்கின்றனர். அதில் பேய்த்தன்மை ஒன்றுமில்லையே! என்றபோதிலும், இதே மக்கள் தேசங்களாக உடன்படும்போது, அவர்களுடைய பொது நலன் சார்ந்த நோக்குநிலையை ஏதோ தடைசெய்கிறது. தேசங்களாக, பசிபட்டினியிலிருக்கும் தங்களுடைய மக்கள்தொகையைப் போஷிப்பதற்குப் பதிலாக அவர்கள் ஏராளமான உணவு நாசமடைய விட்டுவிடுகிறார்கள். அவர்கள் பூமியின் சுற்றுப்புறச்சூழலை நச்சுப்படுத்துகிறார்கள், அவர்கள் பரஸ்பர அழிவுக்கு—அணுஆயுதப் போருக்கான ஆயுதங்களால் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்கள். விநோதமாயிருக்கிறது, தங்களையே அழித்துக்கொள்ளும் ஒரு நடக்கைப்பண்பு!
மனித நடக்கையில் புரிந்துகொள்ளமுடியாத இந்த நிலைக்கு எதன் செல்வாக்கு காரணமாயிருக்கிறது? கூட்டத்தின் மனப்பான்மையா? பகுத்தறியாத ஒரு சில தலைவர்களா? அதிகம் உட்பட்டிருக்கிறது என்பது நிச்சயம். அவிசுவாச உலகளாவிய “காரிய ஒழுங்குமுறையின்” “மனதைக் குருடாக்கியிருக்கும்” ஒருவனை பைபிள் மட்டுமே அடையாளங்காண்பிக்கிறது. அவன் யார்? “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்டவன்.” இந்த உலக ஒழுங்குமுறையின் “தேவன்” என்று பைபிள் அவனைக் குறிப்பிடுமளவுக்குத் தன் சூழ்ச்சியினால் ஒழுங்கமைக்கப்பட்ட மனிதகுலத்தை வெற்றிகரமாகக் கையாண்டுவருகிறான்.—2 கொரிந்தியர் 4:4; வெளிப்படுத்துதல் 12:9.
இந்தத் “தேவன்” உங்கள் வீட்டு சன்னலுக்கு வெளியே மறைந்துகொண்டிருக்கும் கோர உருகொண்ட ஒரு பூச்சாண்டி அல்ல. ஆனால் அவன் வல்லமைவாய்ந்த ஓர் அரசியல்தந்திரி, காணக்கூடாத ஓர் ஆவி சிருஷ்டி. அவன் இயேசுவுக்கு உலகின் சகல ராஜ்யங்களையும் அளிக்க முன்வரக்கூடியவனும், இயேசுவின் ஆதரவு கோரி வெற்றிக்காணாதவனுமாயிருந்தான். (லூக்கா 4:6, 7) சாத்தான் அப்படிப்பட்ட அதிகாரத்தை இயேசுவுக்கு அளிக்க முன்வந்ததற்கு முன்பு மற்றவர்களுக்கு அளித்திருந்தான் என்பது தெளிவாக இருக்கிறது, ஏனென்றால் பைபிள் புத்தகமாகிய தானியேல் வெளிப்படுத்துவது போல், கலகம் செய்த தேவதூதர்கள் உலக சாம்ராஜ்யங்கள் மீது அதிகாரத்தை ஏற்றனர்—“பெர்சியாவின் பிரபு,” மற்றும் “கிரேக்கு தேசத்தின் அதிபதி” போன்ற அதிகாரப்பூர்வ பட்டங்களைக் கொண்டிருந்தனர்.—தானியேல் 10:20, 21.
இப்படியாக, சாத்தான் “[காணக்கூடிய] உலகத்தின் அதிபதி”யாகவும் “[காணக்கூடாத] பிசாசுகளின் தலைவ”னாகவும் ஒரு பிரமாண்டமான அமைப்பைக் கட்டியிருக்கிறான். (யோவான் 14:30; 16:11; மத்தேயு 12:24) பிசாசு ஓர் உலகளாவிய அமைப்புக்குத் தலைவனாக இருந்து செயல்படுகிறான் என்ற இந்த உட்பார்வை நிறைய காரியங்களை விளக்குவதாயிருக்கிறது.
அவன் ஏன் ஓர் அமைப்புக்குத் தலைவனாயிருக்கிறான்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயலின் ஒரு தலைவன் சட்டத்துக்கு விரோதமான பல செயல்களை—போதை மருந்துகள், விபசாரம், திருட்டு, சூதாட்டம், கள்ளக்கடத்தல் போன்றவற்றை—கண்காணித்துக் கொண்டும், அச்செயல்களில் ஈடுபாடுடையவர்களுக்குத் தன்னைத் தனிப்பட்ட விதத்தில் தெரியப்படுத்திக்கொள்ளாமலும் இருப்பதுபோல, சாத்தான் தனிப்பட்டவிதத்தில் தன் கட்டுப்பாட்டிற்குள் கொள்ளக்கூடிய மக்களைவிட அதிகமானவர்களைக் கொண்டிருக்க ஓர் அமைப்பைப் பயன்படுத்துகிறான். அவனுடைய செயல்தந்திரம் யாது? தனிப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்துவதோடுகூட, அவனும் பேய்களும் மக்கள் தொகுதிகளை ஒரு விலங்கின மந்தையைப் போல நடத்துகிறார்கள். ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் வழிநடத்தவேண்டிய அவசியம் இல்லை. மந்தையின் முன்னே ஒருசிலவற்றை மட்டுமே திசைத் திருப்பினால், பெரும்பான்மையானவை பின்தொடரும். அதற்குப் பின்பு கலைந்துபோன மற்றவை மீது கவனம் செலுத்தப்படுகிறது.
ஆம், பிசாசு உண்மையிலேயே இருக்கிறான், ஆனால் அவன் உண்மையில் எப்படி இருக்கிறான் என்பதற்கும் நாம் பார்க்கும் கேலிச்சித்திரங்கள் அல்லது இறைமையியலரின் தெளிவற்ற கோட்பாடுகளுக்கும் அரிய சம்பந்தத்தைத்தான் காண்கிறோம். தெளிவற்றதா? ஆம், சாத்தான், ஒரு விளக்கச்சித்திரம் என்ற புத்தகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: 19-வது நூற்றாண்டில் “சாத்தானைப் பற்றிய நம்பிக்கை தெளிவில் குறைந்துவிட்டது,” மற்றும் இறைமையியலர் “சாத்தானை ஒரு தனிப்பட்ட ஆவி நபர் என்பதைத்தவிர வேறு விளக்கமளிக்க முனைந்திருக்கின்றனர்.”
பிசாசைப் பற்றிய உண்மையைச் சொல்வது யார்?
நவீன மதங்கள் பிசாசைப் பற்றி பைபிள் சொல்வதை ஏற்க மறுக்கத் தயாராயிருப்பது கடவுள் இருக்கிறார் என்பதைக் குறித்து நிச்சயமாயில்லாத ஒரு பொருளாசை மிகுந்த சமுதாயத்தின் தேவையைப் பூர்த்திசெய்வதாயிருக்கிறது. “இன்று பிசாசு மறைந்துவிட்டான் . . . கடவுள்தாமே புற எல்லைக்குப் பின்வாங்கிவிட்டார்,” என்று ரூத் ஆன்ஷெர் பிசாசைப் பற்றிய உண்மை என்ற தன்னுடைய புத்தகத்தில் கூறுகிறார்.
பைபிள் கருத்தைச் சந்தேகிக்கும்படிச் செய்வதன் மூலம் நவீன மத “நிபுணர்கள்” சரித்திரத்தை அதன் உரிய நிலையில் வைத்திடும் ஓர் உண்மையை மதியாதிருக்கிறார்கள். ரோமானிய நாடக ஆசிரியர் யூஜீன் இயானெஸ்கோ ஒரு ஜெர்மன் செய்தித்தாளிடம் பின்வருமாறு ஒப்புக்கொண்டார்: “பேய்த்தன அம்சத்தை நாம் விட்டுவிடுவோமானால் சரித்திரம் நம் அறிவுக்கு எட்டாததாகிவிடும்.”—வெல்ட் ஆம் சான்டாக், செப்டம்பர் 2, 1979.
இன்றைய உலக நெருக்கடியில் பிசாசு வகிக்கும் பங்கைக் குறித்த உண்மையை நிலைநாட்டிடும் தைரியம் யாருக்காவது இருக்கிறதா? தெளிவாகவே, ஆம்! 1928-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் ஒருமனதாய் நிறைவேற்றப்பட்ட “சாத்தானுக்கு எதிராகவும் யெகோவாவின் சார்பாகவும் அறிக்கை”யைக் கவனியுங்கள். வருகின்ற அர்மகெதோன் மகா யுத்தம் சாத்தானையும் அவனுடைய பொல்லாத அமைப்பையும் நிறுத்திவிடும் என்று மனிதனின் எதிராளியாகிய சாத்தானுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் ஒரு போர் முழக்கம்போல அறிவிக்க உறுதிபூண்டனர்.
பிசாசாகிய சாத்தான் நம் ஒவ்வொருவருக்கும் உண்மையிலேயே எதிராளி என்பதற்கு சரித்திரம் சாட்சிபகருகிறது. ஆனால், யெகோவா தேவன் நம்மை உதவியற்ற நிலையில் விட்டுவிடவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. ஏன் இன்னும் கூடுதலாகக் கற்றுக்கொள்ளக்கூடது? நம்முடைய எதிராளியைப் பற்றித் தெரிந்துகொள்வதில் பயன் உண்டு, ஏனென்றால் “சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு . . . அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.”—2 கொரிந்தியர் 2:11. (g90 1/8)
[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]
உண்மையிலேயே இருக்கும் சாத்தானுக்கும் மதச் சித்திரங்களுக்கு அல்லது இறைமையியலரின் தெளிவற்ற கோட்பாடுகளுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை
[பக்கம் 22-ன் படம்]
“இன்று பிசாசு மறைந்துவிட்டான் . . . கடவுள்தாமே புற எல்லைக்குப் பின்வாங்கிவிட்டார்.”