உங்கள் உத்தமத்தை காத்துக்கொள்வீர்களா?
நேற்றைக்கு எத்தனை அடைக்கலான் குருவிகள் செத்தன? யாருக்கும் தெரியாது, அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதுமில்லை—எத்தனையோ குருவிகள் இருக்கின்றனவே. ஆனால் யெகோவா கவலைப்படுகிறார். அற்பமானவை போல தோன்றும் இந்தப் பறவைகளைக் குறிப்பிட்டு, இயேசு தமது சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.” மேலும், “பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” என்றும் சொன்னார்.—மத்தேயு 10:29, 31.
யெகோவா தங்களை எவ்வளவு உயர்வாக கருதுகிறார் என்பதை பிற்பாடு அந்த சீஷர்கள் மிகவும் தெளிவாக புரிந்துகொண்டார்கள். அவர்களில் ஒருவரான அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.” (1 யோவான் 4:9) யெகோவா மீட்கும்பொருளை மாத்திரமல்ல, “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்ற உறுதியையும் தமது ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கிறார்.—எபிரெயர் 13:5.
ஆகவே, தம்முடைய ஜனங்கள் மீது யெகோவா கொண்டுள்ள அன்பு அசைக்க முடியாதது என்பது தெளிவாகிறது. ஆனால், ‘நாம் ஒருபோதும் யெகோவாவை விட்டுவிலகாதபடி அவரை மிகவும் உறுதியாக பற்றிக்கொண்டிருக்கிறோமா?’ என்ற கேள்வி எழுகிறது.
நமது உத்தமத்தை முறிக்க சாத்தானுடைய முயற்சிகள்
யோபுவின் உத்தமத்தன்மையை கவனிக்கும்படி சாத்தானிடம் யெகோவா சொன்னபோது, ‘ஒன்றுமில்லாமலா யோபு உமக்கு அஞ்சி நடக்கிறான்?’ என அவன் பதிலளித்தான். (யோபு 1:9, பொது மொழிபெயர்ப்பு) மனிதர்கள் கடவுளுக்கு விசுவாசமாக இருப்பது ‘அவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்திற்காகத்தான்’ என அவன் மறைமுகமாக சுட்டிக்காட்டினான். இது உண்மையாக இருந்தால், எந்த கிறிஸ்தவருடைய உத்தமத்தன்மையும் பலவீனப்படுத்தப்படலாம்—கிடைக்கும் ஆதாயம் சுண்டி இழுப்பதாக இருந்தால்.
யோபுவின் விஷயத்தில், அவன் நெஞ்சார நேசித்த சொத்து சுகங்களை இழந்துவிட்டால் அதன் பிறகு கடவுளுக்கு உத்தமத்தைக் காட்டமாட்டான் என சாத்தான் முதலில் வாதாடினான். (யோபு 1:10, 11) இந்தப் பழிதூற்றுதல் பொய் என நிரூபணமானபோது, “எவரும் தம் உயிருக்காகத் தமக்கு உள்ளதெல்லாம் கொடுப்பார்” என்று சாத்தான் குற்றம் சாட்டினான். (யோபு 2:4, பொ.மொ.) சிலருடைய விஷயத்தில் சாத்தானுடைய வாதம் உண்மையாக இருக்கலாம்; ஆனால் யோபு தன் உத்தமத்தை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டார். சரித்திர பதிவு இதை நிரூபிக்கிறது. (யோபு 27:5; 42:10-17) உங்களுக்கு இதுபோன்ற உண்மைப் பற்றுறுதி இருக்கிறதா? அல்லது உங்களுடைய உத்தமத்தை சாத்தான் முறிக்க அனுமதித்து விடுவீர்களா? ஒவ்வொரு கிறிஸ்தவரையும் உட்படுத்தும் உண்மைகள் சிலவற்றை நாம் ஆராய்கையில் உங்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள்.
மெய் கிறிஸ்தவருடைய உண்மைப் பற்றுறுதி மிகவும் பலமானதாக இருக்கும் என அப்போஸ்தலன் பவுல் நம்பினார். அதனால்தான், “மரணமானாலும், ஜீவனானாலும், . . . நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், . . . வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” என அவர் எழுதினார். (ரோமர் 8:38, 39) யெகோவா மீது நாம் வைத்திருக்கும் அன்பு பலமாக இருந்தால், இதுபோன்ற நிச்சயத்தை நாமும் கொண்டிருக்கலாம். இத்தகைய அன்பு அழிக்க முடியாத பந்தமாகும், இதை மரணத்தாலும் வெல்ல முடியாது.
நமக்கு கடவுளுடன் இத்தகைய உறவு இருந்தால், ‘இன்னும் சில வருஷங்கள் போனால் நான் யெகோவாவை தொடர்ந்து சேவித்துக் கொண்டிருப்பேனா?’ என ஒருபோதும் கேட்க மாட்டோம். அப்படி நிச்சயமில்லாதிருப்பது, நம்முடைய வாழ்க்கையில் இனி என்ன நடக்கப்போகிறதோ அதைப் பொறுத்தே நம் உத்தமம் இருக்குமென நம்புவதை அர்த்தப்படுத்தும். மெய்யான உத்தமத்தன்மை வெளிப்புற சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதில்லை. நாம் உட்புறத்தில் எப்படிப்பட்டவராக இருக்கிறோமோ அதையே சார்ந்திருக்கிறது. (2 கொரிந்தியர் 4:16-18) யெகோவாவை முழு இருதயத்துடன் நேசித்தால், நாம் ஒருபோதும் அவரை ஏமாற்றமடைய செய்ய மாட்டோம்.—மத்தேயு 22:37; 1 கொரிந்தியர் 13:8.
என்றபோதிலும், நம்முடைய உத்தமத்தை முறிப்பதற்கு சாத்தான் சதா முயற்சி செய்கிறான் என்பதை நாம் மனதிற்கொள்ள வேண்டும். மாம்ச இச்சைகளுக்கும் சகாக்களின் அழுத்தத்திற்கும் இணங்கிப் போகும்படி அவன் நமக்கு ஆசையூட்டலாம், அல்லது ஏதாவது கஷ்டத்தைத் தந்து சத்தியத்தை கைவிட்டுவிடும்படி செய்யலாம். நம்முடைய சொந்த அபூரணங்கள் சாத்தான் தனது வேலையை சுலபமாக செய்துமுடிக்க துணைபுரிகிறபோதிலும், கடவுளிடமிருந்து பிரிந்திருக்கிற இவ்வுலகமே இந்தத் தாக்குதலில் அவனுக்கு “வலதுகையாக” இருக்கிறது. (ரோமர் 7:19, 20; 1 யோவான் 2:16) என்றாலும், இந்தப் போராட்டத்தில் நமக்கு அநேக அனுகூலங்கள் இருக்கின்றன; நாம் சாத்தானுடைய தந்திரங்களை அறிந்திருப்பதுதான் மிகப் பெரிய அனுகூலம்.—2 கொரிந்தியர் 2:11.
சாத்தானுடைய திட்டங்கள் யாவை? அவற்றை ‘தந்திரங்கள்’ என எபேசியருக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் விவரித்தார். (எபேசியர் 6:11) நம்முடைய உத்தமத்தை முறிப்பதற்கு சாத்தான் தந்திரமான செயல்களை கையாளுகிறான். ஆனால் இந்தத் தந்திரமான செயல்களை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும், ஏனென்றால் பிசாசு பயன்படுத்தும் வழிமுறைகள் கடவுளுடைய வார்த்தையில் நமக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. இயேசு மற்றும் யோபுவின் உத்தமத்தை முறிப்பதற்கு சாத்தான் செய்த முயற்சிகள், நம்முடைய உத்தமத்தை முறிப்பதற்கு அவன் பயன்படுத்தும் சில வழிகளை எடுத்துக் காட்டுகின்றன.
இயேசுவின் உத்தமத்தை முறிக்க முடியவில்லை
இயேசுவினுடைய ஊழியத்தின் ஆரம்பத்தில், கல்லை அப்பமாக மாற்றும்படி சவால்விடுவதன் மூலம் கடவுளுடைய குமாரனையே சோதிப்பதற்கு சாத்தான் துணிந்துவிட்டான். எப்பேர்ப்பட்ட சூழ்ச்சிக்காரன்! 40 நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால் இயேசு மிகவும் பசியாக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. (லூக்கா 4:2, 3) யெகோவாவின் சித்தத்திற்கு முரணான முறையில் தன் இயல்பான ஆசையை இயேசு உடனடியாக திருப்தி செய்துகொள்ளும்படி சாத்தான் மறைமுகமாக தெரிவித்தான். அது போலவே இன்றும், பின்விளைவுகளுக்கு துளிகூட கவனம் செலுத்தாமல், ஆசைகளை உடனடியாக திருப்தி செய்துகொள்ளும்படியே இவ்வுலகம் நம்மை தூண்டுகிறது. ‘அது இப்போதே உனக்குத் தேவை’ அல்லது ‘சும்மா செய்! அதற்கெல்லாம் கவலைப்படாதே!’ என்பதே அதன் செய்தி.
பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் இயேசு தம்மை வாட்டிய பசியை திருப்தி செய்திருந்தால், அவருடைய உத்தமத்தன்மையை விட்டுக்கொடுக்கும்படி செய்வதில் சாத்தான் வெற்றி பெற்றிருப்பான். இயேசு காரியங்களை ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் நோக்கினார், அதன் காரணமாகவே, ‘மனிதன் அப்பத்தினால் மாத்திரம் பிழைப்பதில்லை என்று எழுதியிருக்கிறதே’ என அவர் உறுதியாக பதிலளித்தார்.—லூக்கா 4:4; மத்தேயு 4:4, NW.
பின்பு சாத்தான் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொண்டான். இயேசு மேற்கோள் காட்டிய வேத எழுத்துக்களின் பதிவிலிருந்து வசனங்களை திரித்துக்கூறி, ஆலயத்தின் மதிலிலிருந்து கீழே குதிக்கும்படி இயேசுவை தூண்டினான். ‘ஒரு தேவதூதன் உம்மை பாதுகாக்க வேண்டும்’ என கூறினான். வெறுமனே தம்மீது கவனத்தை ஈர்ப்பதற்காக தமது பிதாவிடமிருந்து அற்புதகரமாக பாதுகாப்பைப் பெறும் எண்ணம் இயேசுவுக்கு இல்லை. “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக” என இயேசு கூறினார்.—மத்தேயு 4:5-7; லூக்கா 4:9-12.
கடைசியாக சாத்தான் பயன்படுத்திய சூழ்ச்சி மிகவும் நேரடியாக இருந்தது. ஒரேவொரு வணக்க செயலுக்காக உலகம் முழுவதையும் அதிலுள்ள எல்லா மகிமையையும் இயேசுவுக்கு தருவதாக சொல்லி அவரிடம் பேரம் பேச முயன்றான். இது, சாத்தான் தன்னிடமிருந்த கிட்டத்தட்ட அனைத்தையும் தருவதாய் இருந்தது. ஆனால் தமது பிதாவின் பிரதான விரோதிக்கு எவ்வாறு இயேசு வணக்க செயலை காண்பிக்க முடியும்? நினைத்துக்கூட பார்க்க முடியாதது! “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக” என இயேசு பதிலளித்தார்.—மத்தேயு 4:8-11; லூக்கா 4:5-8.
அந்த மூன்று முயற்சிகளும் தோல்வியை தழுவியபின், ‘மற்றொரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் வரை சாத்தான் அவரை விட்டு சென்றுவிட்டான்.’ (லூக்கா 4:13, NW) இயேசுவின் உத்தமத்தை பரீட்சிப்பதற்கு சாத்தான் தக்க தருணத்தை எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் என்பதையே இது காட்டுகிறது. சுமார் இரண்டரை வருடங்களுக்குப் பின்பு, இயேசு தமக்கு நேரிடும் மரணத்தைக் குறித்து சீஷர்கள் சரியான மனநிலையை வைத்திருக்க அவர்களை தயார்படுத்திக் கொண்டிருந்தபோது ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்தது. அப்போஸ்தலன் பேதுரு, “இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை” என்று சொன்னார்.—மத்தேயு 16:21, 22.
இந்த ஆலோசனை தவறென்றாலும், தமது சீஷர்களில் ஒருவர் நல்நோக்கத்துடன் சொன்னதால் அது இயேசுவுக்கு நல்லதாக தோன்றியிருக்குமா? அந்த வார்த்தைகள் யெகோவாவின் சிந்தையை அல்ல, சாத்தானின் சிந்தையையே வெளிப்படுத்துகின்றன என்பதை இயேசு உடனடியாக அறிந்து கொண்டார். ஆகவே கிறிஸ்து மனவுறுதியுடன், “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்” என கூறினார்.—மத்தேயு 16:23.
யெகோவா மீது இயேசு வைத்திருந்த மாறாத அன்பின் காரணமாக அவரது உத்தமத்தை முறித்துப்போட சாத்தானால் முடியவில்லை. பிசாசால் கொடுக்க முடிந்த எதுவும், அவன் கொண்டுவந்த எந்த சோதனையும், அது எவ்வளவு பயங்கரமானதாக இருந்தபோதிலும் பரலோக தகப்பன் மீது இயேசு வைத்திருந்த உண்மைப் பற்றுறுதியை பலவீனப்படுத்த முடியவில்லை. உத்தமத்தை காத்துக்கொள்வதை கடினமாக்கும் சூழ்நிலைகள் நமக்கு ஏற்படுகையில் இதேபோன்ற உறுதி நமக்கும் இருக்குமா? நாம் எப்படிப்பட்ட பயங்கரமான சவால்களை எதிர்ப்படலாம் என்பதைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள யோபுவின் உதாரணம் நமக்கு உதவும்.
துன்பத்திலும் உண்மைப் பற்றுறுதி
யோபு கண்டறிந்த விதமாக துன்பங்கள் வருவதற்கு நேரம், காலம் என்ற வரம்பில்லை. அவர் பத்து பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்துவந்த ஒரு குடும்பஸ்தர். ஆவிக்குரிய காரியங்களில் அதிக ஈடுபாடு உடையவர். (யோபு 1:5) ஆனால் பரலோக அவையில் யோபுவின் உத்தமத்தன்மையைக் குறித்து விவாதம் ஏற்பட்டது, எப்படியாவது அவருடைய உத்தமத்தை முறித்துப்போட சாத்தான் உறுதிபூண்டான், யோபுவோ அதை அறியவில்லை.
சீக்கிரத்தில் யோபு தன்னுடைய சொத்துபத்துக்களை எல்லாம் இழந்தார். (யோபு 1:14-17) இருந்தாலும், யோபுவால் அந்தச் சோதனையை தாங்கிக்கொள்ள முடிந்தது; ஏனென்றால் அவர் ஒருபோதும் பணத்தின் மீது தன் நம்பிக்கையை வைக்கவில்லை. செல்வச்செழிப்புடன் வாழ்ந்த காலத்தை எண்ணி யோபு இவ்வாறு குறிப்பிட்டார்: “தங்கத்தில் நான் நம்பிக்கை வைத்திருந்தேனாகில், . . . செல்வப் பெருக்கினால், . . . நான் மகிழ்ந்திருப்பேனாகில், . . . அதுவும் . . . பழியாய் இருக்கும்; ஏனெனில், அது உன்னத இறைவனை நான் மறுப்பதாகும்.”—யோபு 31: 24, 25, 28, பொ.மொ.
இன்றும், நம் உடைமைகளில் கிட்டத்தட்ட அனைத்தையும் நொடிப்பொழுதில் இழந்துவிடும் சூழ்நிலை வரலாம். யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒரு பிஸினஸ்மேன் மோசடி செய்யப்பட்டதால் பெருந்தொகையை இழந்தார்; கிட்டத்தட்ட திவாலாகிவிடும் நிலைக்கு வந்துவிட்டார். அவர் இவ்வாறு மனந்திறந்து சொல்கிறார்: “எனக்கு மாரடைப்பே வந்துவிடும்போல் இருந்தது. சொல்லப்போனால், கடவுளுடன் எனக்கு உறவு இல்லாதிருந்தால் கண்டிப்பாக மாரடைப்பு வந்திருக்கும் என நினைக்கிறேன். இருந்தாலும் ஆவிக்குரிய காரியங்களுக்கு வாழ்க்கையில் நான் முதலிடம் கொடுக்காததை அந்த அனுபவம் உணர்த்தியது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற த்ரில்-தான் எல்லாவற்றையும் என் கண்ணிலிருந்து மறைத்துவிட்டது.” அப்போதிருந்து இந்த சாட்சி தன் பிஸினஸை மிகக் குறைவாக வைத்துக்கொண்டு ஓர் ஒழுங்கான துணை பயனியராக மாதத்திற்கு 50 மணிநேரங்களோ அதற்கு மேலாகவோ ஊழியத்தில் செலவழிக்கிறார். என்றபோதிலும், மற்ற பிரச்சினைகளோ ஒருவர் தன் சொத்து சுகங்களை இழப்பதைக் காட்டிலும் அதிக மோசமானதாக இருக்கலாம்.
யோபு தன் செல்வங்களையெல்லாம் இழந்ததைப் பற்றிய செய்தியை ஜீரணிக்கும் முன்பே தன்னுடைய பத்து பிள்ளைகளும் இறந்துவிட்ட செய்தியும் அவருடைய காதை எட்டியது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும், “கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்று அவர் சொன்னார். (யோபு 1:18-21) திடீரென நம் குடும்பத்தில் பலரை மரணத்தில் இழந்தால் நாம் உத்தமத்தை காத்துக்கொள்வோமா? ஸ்பெய்னைச் சேர்ந்த ஃபிரான்திஸ்கோ என்ற கிறிஸ்தவ கண்காணி, பஸ் விபத்தில் தன் இரண்டு பிள்ளைகளையும் இழந்தார். யெகோவாவிடத்தில் நெருங்கி வருவதன் மூலமும் ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதன் மூலமும் அவர் ஆறுதலைக் கண்டடைந்தார்.
தன் பிள்ளைகளை இழந்ததைப் பற்றிய திடுக்கிட வைக்கும் செய்தியை கேட்டதோடு யோபுவின் சோதனைகள் ஓய்ந்துவிடவில்லை. அருவருப்பான கொடிய நோயினால் சாத்தான் அவரை தாக்கினான். அந்த சமயத்தில், அவருடைய மனைவி தவறான ஆலோசனையை கூறினாள். “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” என அவள் அவரை தூண்டினாள். ஆனால் யோபு அதை கண்டுகொள்ளவில்லை, அவர் ‘தன் உதடுகளினால் பாவம் செய்யவுமில்லை.’ (யோபு 2:9, 10) அவருடைய உத்தமத்தன்மை, குடும்பத்தார் தரும் ஆதரவின் மீது அல்ல, ஆனால் யெகோவாவுடன் இருந்த தனிப்பட்ட உறவின் மீதே சார்ந்திருந்தது.
யோபுவுக்கு இருந்திருக்கும் உணர்ச்சிகளை ஃப்ளோரா புரிந்துகொள்கிறார், ஏனென்றால் இவருடைய கணவரும் மூத்த மகனும் கிறிஸ்தவ வழியை விட்டுவிலகி பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. “நீங்கள் திடீரென குடும்பத்தாரின் ஆதரவை இழந்துவிடும்போது அது ஒரு பேரிடியாக இருக்கலாம்” என அவர் கூறுகிறார். “ஆனால் யெகோவாவின் அமைப்பைத் தவிர வேறெங்குமே மகிழ்ச்சியை கண்டடைய முடியாது என்பதை நான் அறிந்திருந்தேன். ஆகவே நான் உறுதியோடிருந்து யெகோவாவை முதலிடத்தில் வைத்தேன்; அதேசமயத்தில் சிறந்த மனைவியாகவும் தாயாகவும் இருக்க தொடர்ந்து முயன்றேன். நான் விடாது ஜெபம் செய்தேன், யெகோவாவும் என்னை பலப்படுத்தினார். கணவர் விடாப்பிடியாக எதிர்த்து வருகிறபோதிலும், யெகோவாவை முழுமையாக சார்ந்திருக்க கற்றுக்கொண்டதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.”
யோபுவின் உத்தமத்தை முறிக்க சாத்தான் பயன்படுத்திய மற்றொரு கருவி அவருடைய மூன்று நண்பர்கள். (யோபு 2:11-13) மூன்று பேரும் சேர்ந்து மாறிமாறி அவரை குறைசொல்ல ஆரம்பித்தபோது அது அவருக்கு எவ்வளவு வேதனையாய் இருந்திருக்கும்! அவர்களுடைய வாதங்களை எல்லாம் நம்பியிருந்தால் யெகோவா தேவன் மீதிருந்த நம்பிக்கையை அவர் இழந்திருப்பார். உற்சாகத்தை பறித்த அவர்களுடைய ஆலோசனைகள் யோபுவை மனமுடைந்துபோகச் செய்து அவரது உத்தமத்தை முறித்திருக்கலாம்; இப்படியாக சாத்தானின் திட்டமும் வெற்றியடைந்திருக்கும்.
ஆனால், “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்” என யோபு உறுதியாக கூறினார். (யோபு 27:5) ‘என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்க நான் உங்களை அனுமதிக்க மாட்டேன்!’ என அவர் கூறவில்லை. தன்னுடைய உத்தமத்தன்மை தன்னையும் யெகோவா மீதுள்ள தன் அன்பையும் சார்ந்தது என்பதை யோபு அறிந்திருந்தார்.
புதிய இரையை பிடிக்க பழைய கண்ணி
நண்பர்களின் மூலமாகவும் சக விசுவாசிகளின் மூலமாகவும் தவறான ஆலோசனையை அல்லது யோசனையற்ற சொற்களை சாத்தான் இன்றும் பயன்படுத்தி வருகிறான். சபைக்கு வெளியேயிருந்து வரும் துன்புறுத்துதலைவிட சபையிலிருந்து வரும் சோதனைகள் நம் நம்பிக்கையை எளிதில் இழந்துவிடும்படி செய்துவிடலாம். ஒரு கிறிஸ்தவ மூப்பர் இராணுவத்தில் இருந்தபோது அனுபவித்த போராட்டத்தைவிட சக கிறிஸ்தவர்கள் சிலரின் யோசனையற்ற பேச்சுகளாலும் செயல்களாலும் அனுபவிக்கும் வேதனை அதிகமென சொல்கிறார். “என் வாழ்க்கையிலேயே இதுதான் மிகவும் வேதனையான அனுபவம்” என்கிறார்.
மறுபுறத்தில், சக விசுவாசிகளின் அபூரணங்களால் நாம் மிகவும் புண்படுத்தப்பட்டு, சிலரிடம் பேசாமல் இருந்து விடலாம் அல்லது கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வருவதையும் நிறுத்திவிடலாம். புண்பட்ட உணர்விலிருந்து விடுபடுவதே மிக முக்கியமானதாக தோன்றலாம். ஆனால் அப்படிப்பட்ட குறுகிய எண்ணம் உடையவராய் இருந்து, மற்றவர்களுடைய சொல்லும் செயலும் மிகவும் மதிப்புமிக்க நம் சொத்துக்கு—யெகோவாவோடு உள்ள உறவுக்கு—பங்கம் விளைவிக்க அனுமதிப்பது எவ்வளவு வருந்தத்தக்கது! அதற்கு இடமளித்தால் பல்லாண்டுகளாக சாத்தான் பயன்படுத்தி வரும் கண்ணிகள் ஒன்றில் நாம் சிக்கி விடுவோம்.
கிறிஸ்தவ சபையில் உயர்ந்த தராதரங்களை எதிர்பார்ப்பது சரியானதே. ஆனால் அபூரணராக இருக்கும் சக வணக்கத்தாரிடத்தில் அளவுக்கு அதிகமாக எதிர்பார்த்தால் நாம் ஏமாற்றமடைந்துவிடுவது நிச்சயம். யெகோவாவோ தமது ஊழியர்களிடம் நியாயமாகவே எதிர்பார்க்கிறார். நாம் அவருடைய மாதிரியை பின்பற்றினால், சக வணக்கத்தாரின் அபூரணங்களை பொறுத்துக் கொள்வோம். (எபேசியர் 4:2, 32) “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ் செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” என அப்போஸ்தலன் பவுல் ஆலோசனை கொடுத்தார்.—எபேசியர் 4:26, 27.
பைபிள் தெளிவாக காட்டுகிறபடி, கிறிஸ்தவருடைய உத்தமத்தை முறிப்பதற்குரிய வழியை கண்டுபிடிக்க சாத்தான் பல்வேறு வகை தந்திரமான உபாயங்களைப் பயன்படுத்துகிறான். அவன் பயன்படுத்தும் சூழ்ச்சிகரமான வழிகளில் சில அபூரண மனிதருக்கு கவர்ச்சிகரமாக இருக்கின்றன, மற்றவையோ வேதனைக்கு காரணமாக இருக்கின்றன. மேற்கண்ட கலந்தாலோசிப்பிலிருந்து, நீங்கள் ஏன் ஒருபோதும் அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது என்பதை உணர்ந்து கொள்ளலாம். கடவுள் மீதுள்ள அன்பை உங்களுடைய இருதயத்தில் உறுதியாக வைத்திருந்து, பிசாசை பொய்யன் என நிரூபிக்க திடதீர்மானமாயிருங்கள்; யெகோவாவின் இருதயத்தையும் சந்தோஷப்படுத்துங்கள். (நீதிமொழிகள் 27:11; யோவான் 8:44) நமக்கு என்ன சோதனைகள் வந்தாலும், உண்மையான கிறிஸ்தவ உத்தமத்தை ஒருபோதும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதை மறந்துவிடாதீர்கள்.